Skip to content
Post Views: 353
அடுத்த நாள் காலை மெதுவாக புலர்ந்தது.
மீனாட்சி அதிகாலையிலேயே எழுந்து,ஒட்டுமொத்த வீட்டையுமே தன் குரலால் எழுப்பி விட்டிருந்தார்.
Advertisement
அனைவரும் ஒரு வித சலிப்புடனே எழுந்து தயாராக ஆரம்பித்தனர்.
வாசந்தியோ ‘கோவிலுக்கு போறதா இருந்தால் இவங்க மட்டும் போறது தானே…எதுக்கு எல்லாரையும் எழுப்பறாங்க’ என கடுப்புடன் திட்டிக்கொண்டே தயாராகினாள்.
Advertisement
Advertisement
அவர் குளித்து தயாராகி சிறிய மகனறைக்கு வந்தவர்
“சேரா… இன்னும் என்ன தூக்கம் வேண்டிக்கிடக்கு? சீக்கிரம் கிளம்பு… கோவிலுக்கு போக நேரமாச்சு” என
கம்பளிப் போர்வைக்குள் சுருண்டுப்படுத்திருந்த சேரனை தட்டி எழுப்பினார்.
Advertisement
சேரனோ கண்களைக் கூட திறக்காமல் “ப்ச் அம்மா...கடவுள் ஒண்ணும் கோவிலை விட்டு ஓடிட மாட்டாரும்மா…எதுக்கு இவ்வளவு காலையிலே எழுப்பறீங்க” என்று தூக்கக் கலக்கத்தில் முணுமுணுத்தான்.
ஆனால் மீனாட்சி விடுவதாய் இல்லை.
“சேரா இப்போ எழுந்திரிக்கறீயா இல்லையா?இரு தண்ணீய எடுத்திட்டு வந்து ஊத்தறேன்” என பல வகையில் மகனை மிரட்டி எழுப்ப முயற்சித்தார்.
அவரின் மிரட்டலுக்கு அடிப்பணிய அவன் ஐந்து வயது சிறுவனா என்ன?
ஒரு பொறுப்பான பணியில் இருக்கும் முப்பத்தைந்து வயது ஆடவனாயிற்றே…
அதனால் தாயின் மிரட்டலை கிஞ்சித்தும் மதியாமல் போர்வையை இழுத்துப்போர்த்தி தன் நித்திரையைத் தொடர்ந்தான்.
அவனது தாயும் அதற்குள் எல்லாம் சோர்ந்துப்போகவில்லை.
மகனை வீழ்த்த மீனாட்சியோ அடுத்த ஆயுதத்தை கையில் எடுத்தார்.
அவனை மிகவும் பலவீனப்படுத்தும் அந்தவொரு ஆயுதம்..
பெண்களின் சக்தி வாய்ந்த ஆயுதமான கண்ணீர் தான் அது!
அதனை இப்போது அவர் கையிலெடுக்க “என் பேச்சை நீ கேட்க மாட்டயில்லைடா…நீ ஏன் கேட்கப்போறே?அம்மானு நீ என்ன மதிச்சா தானே கேட்கப்போறே…உன்னை பொறுத்தவரை நான் தான் உனக்கு அம்மாவே இல்லையே…உனக்கு உன் எண்ணம் மட்டும் தான் பெருசு…மத்தவங்களோட மனசு எல்லாம் தூசு தான்” என முந்தானையை மூடிக்கொண்டு அழ ஆரம்பிக்க,
‘ஊப்’ என இதழை குவித்து ஊதிய சேரன் ‘காலையிலே நாடகத்தை ஆரம்பிச்சிட்டாங்க’ என உள்ளுக்குள் சலித்தாலும் அவரின் கண்ணீர் அவன் மனதைச் சுட்டன.
அதனால் போர்வையை விலக்கி “சரி சரி கிளம்பறேன்” என வேண்டாவெறுப்பாக சொல்லிக்கொண்டே எழுந்துப் புறப்பட ஆயுத்தமானான்.
“எல்லா நேரமும் அழுதே காரியத்தை சாதிக்கலாம்னு நினைக்காதீங்கம்மா…இட்ஸ் இரிட்டேட்டிங்” என கடுகடுவென முகத்தை வைத்தப்படியே தயாராகினான்.
அவரோ புதல்வனது பேச்சையெல்லாம் கண்டுக் கொள்ளவில்லை.
அவர் எண்ணியது ஈடேறி இருக்க ‘ஆண்டவா என் பையனை உன் சன்னதிக்கு கூட்டிட்டு வர்றேன்…மீதி வேலைய நீ தான் பார்க்கணும்’ என அவனது திருமண பொறுப்பை இறைவனின் தலையில் சுமத்தியிருந்தார்.
அதனால் அவரின் மனமும் முகமும் தெளிவாக இருந்தது.
அவரது தொடர் போராட்டத்திற்குப் பிறகு,ஒரு வழியாக கோவிலிற்கு செல்ல ஆயத்தமாகி கீழே இறங்கி வந்தான் சேரன்.
வழக்கமான வெண்ணிறச் சட்டை மற்றும் சாம்பல் நிற கால்சராய் அணிந்திருந்தான் அவன்.
அவனது கையில் விலையுயர்ந்த பாசில் கடிகாரம்.
எப்போதும் இருக்கும் நேர்த்தியான, ஒழுங்கான தோற்றம் அவனிடம்!
ஆனால் அவனது முகத்திலோ
‘என்னை ஏன்டா இம்சைப்பண்ணறீங்க?’ என்ற எரிச்சல் அப்பட்டமாக மிளிர்ந்தது.
அதைப்பற்றியெல்லாம் ஒருவரும் பொருட்படுத்தவில்லை.
ரகுபதி மட்டும் “சேரா இப்போவே உன் முகத்திலே மாப்பிள்ளை களை வந்திடுச்சு” என நக்கல் செய்ய,
சடாரென்று திரும்பி சேரன் அவனை முறைத்த முறைப்பில் அவன் கப்பென்று வாயை மூடிக்கொண்டான்.
அதைப்பார்த்து “இதெல்லாம் உங்களுக்கு தேவையா?” என குந்தவை வாய் பொத்தி சிரிக்க,
அதில் கடுப்பானவன் ‘இவ எனக்கு பொண்டாட்டியா இல்லை அவனுக்கு தங்கச்சியானு தெரியலை…எனக்கு ஒரு வார்த்தை சப்போர்ட் பண்ணாமல் சிரிக்கறதை பாரு’ என உள்ளுக்குள் மனைவியை கரித்துக்கொட்டினான்.
அவளை மனதிற்குள் திட்டிக்கொண்டாலும் “முடிய நல்லா காய் வைச்சியா இல்லையா?பாரு…இன்னும் ஈரமா இருக்கு…காரிலே ஏறினதும் தலைய பிரிச்சு காய வைடி…சளிப்பிடிச்சுக்கப் போகுது” என அக்கறையாக மொழிய,
அவனை காதலோடு நோக்கிய குந்தவை “சரிங்க” என மென்னகையுடன் தலையாட்டினாள்.
அவளின் விழிகளில் தெரிந்த காதலில் உருகிய ரகுபதியோ தன்னை மீறி அவளின் நெற்றியில் முத்தமிட செல்ல “ம்க்கும்” என பின்னாலிருந்து சேரன் தொண்டை செருமும் சத்தம் கேட்டதும் சட்டென விலகிக்கொண்டான்.
தமையன் கணவனது அன்பு சேட்டையைக் கண்டுக்கொண்டான் என்று தெரிந்ததும்,குந்தவையின் முகம் செந்நிறமாய் மாறியது.
“இவன் ஒருத்தன் இவனும் கல்யாணம் பண்ணமாட்டான்…மத்தவங்களையும் ரொமென்ஸ் பண்ண விடமாட்டான்” என முணுமுணுத்தவன் பின்னால் திரும்பி “ஹிஹிஹி மச்சான்” என இளித்து சமாளித்தான்.
சேரனோ அவனை மேலிருந்து கீழாக ஒரு மார்க்கமாக நோக்கிவிட்டு அவனை தாண்டி சென்றுவிட்டான்.
உடனே அவன் முகம் மாற “உன் அண்ணனுக்கு என்ன தான்டி பிரச்சனை?” என கடுப்பாக வினவ,
“போய் அவர்கிட்டயே கேளுங்க” என குந்தவையும் வேகமாக முன்னேறி நடந்துச்சென்றிருந்தாள்.
‘இந்த வீட்டுலே ஒரு பையனும் என்னை மதிக்கிறதே இல்லை…ஊப்’ என இதழை குவித்து ஊதியவன்,
அவனை விட்டு அனைவரும் வாகனத்தில் ஏறியதை கண்டதும் “ஏய் இருங்க…என்னை விட்டுட்டு எல்லாரும் போறீங்க?இருங்க நானும் வர்றேன்” என அவனும் விரைவாக ஓடிச்சென்று மகிழுந்தில் ஏறினான்.
காஞ்சிபுரத்திலுள்ள உள்ள ஒரு பிரபலமான கோவில்,
அப்போது தான் மணி ஏழை தொட்டிருந்தது.
காலை இளங்காற்றில் மல்லிகைப் பூக்களின் நறுமணம் குளிர்ந்த காற்றில் கலந்து வீசியது.
தூரத்து சந்நிதிகளில் இருந்து ஒலித்த கோவில் மணிகளின் ஓசை காதுகளை வருடிச் சென்றது.
விடியற்காலை வேளை என்றாலும் மக்கள் கூட்டம் ஆலயத்தில் அலைமோதிக் கொண்டிருந்தது.
மீனாட்சி மிகுந்த பக்திப் பெருக்குடன் மூலவரைத் தரிசிப்பதற்காகக் கூட்டத்திற்குள் சென்றார்.
சேரன் மட்டும் சன்னதிக்கு வெளியே இருந்த ஒரு பெரிய கருங்கல் தூணில் சாய்ந்து கொண்டு, சுற்றியிருப்பவர்களைக் கவனிப்பதைத் தவிர்த்து, தன் அலைப்பேசியை பார்த்திருந்தான்.
அவனிற்கு ஆன்மீகத்தின் மீதோ, கோவிலின் மீதோ எந்த எதிர்ப்பும் இல்லை. ஆனால், இன்று அவன் இங்கே அழைத்து வரப்பட்டதற்கான அந்த ‘காரணம்’ தான் அவனுக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை.
யாருக்கு வந்த விருந்தோ என்பது போல் அவன் தூணில் சாய்ந்து நிற்க “டேய் வாடா” என மீனாட்சி அவனை வம்படியாக இழுத்துச்சென்றார்.
“ப்ச்” என அவன் சலித்துக்கொண்டே அலைப்பேசியை கால்சட்டை பையினுள் போட்டுவிட்டு அன்னையுடன் நடந்தான்.
தனது மகனை நோக்கி திரும்பிய மீனாட்சி “இது தான் கல்யாண பிள்ளையார் சேரா…சீக்கிரமே கல்யாணமாகணும்னு மனமாற கும்பிட்டுக்கோ” என பயபக்தியுடன் கூற,
“கல்யாண பிள்ளையாரா?” என்று கேட்டு புருவம் சுருக்கினான் சேரன்.
அவன் மனதிற்குள்ளே ‘பிள்ளையாரே கல்யாணம் செய்யாதவரு…அவர் எப்படி கல்யாணத்தை நடத்தி வைப்பாரு…நல்ல கதையா இருக்கே’ என கேலியாக எண்ணி சிரித்துக்கொள்ள,அதை வெளிப்படையாக கேட்டு வாங்கி கட்டியிருந்தான் ரகுபதி.
‘என்னைய மட்டும் ஈஸியா அடிச்சுப்புடுங்கடா’ என அவன் முகத்தை தூக்கி வைத்துக்கொண்டான்.
“ஏங்க உங்க தம்பி கல்யாணத்துக்கு வேண்டிக்கிறதுக்கு நம்பளை எதுக்குங்க உங்க அம்மா கூட்டிட்டு வந்திருக்காங்க?அவங்க மட்டும் போனால் ஆகாதா?” என வாசந்தி தனது கணவனிடம் முணுமுணுக்க,
பாரிவேந்தனோ அவளை ஆழ்ந்து நோக்கி “ஏன் என் தம்பி உன் கொளுந்தனில்லையா?அவனுக்காக நீ வேண்டிக்கிட்டால் குறைஞ்சாப்போயிடுவே” என சிடுசிடுப்புடன் கேட்கவும் ‘இவர்கிட்ட வாய் கொடுத்தேன் பார்த்தியா?எனக்கு இது தேவை தான்’ என நொந்துக்கொண்டு வாயை மூடிக்கொண்டாள் அவள்.
அவளை உற்று நோக்கிய பாரி “கல்யாணமாகி இத்தனை வருஷமாகிடுச்சு…இன்னமும் உன் மனசுலே இது உன் குடும்பம்னு எண்ணம் வர மாட்டிக்குது…உன்னை யெல்லாம் என்ன செய்யறது?” என திட்டிக்கொண்டே கண்ணாடியை சரிச்செய்து முன்னால் திரும்பிக்கொண்டான்.
வாசந்தியோ அவனை வெறித்துப்பார்த்தாள்.
அவனை எதிர்த்து அவள் எதுவும் பேசவில்லை.
அவள் திருமணமாகிய புதிதில் இவ்வாறெல்லாம் கிடையாது.
தனது புகுந்த வீட்டு ஆட்களுடன் அன்பாக அனுசரித்து நடந்துப்போகும் நல்லப்பெண்ணாக தான் இருந்தாள்.
ஆனால் நாட்கள் செல்ல செல்ல,அவளது தாய் மகளின் மனதில் நஞ்சை கலக்க ஆரம்பித்திருந்தார்.
பாரிவேந்தன் அவர்களது வீட்டிலுள்ள மற்றைய ஆட்களை காட்டிலும் சிறிது பொறுப்பானவன்.
தேவையின்றி பணத்தை செலவு செய்யமாட்டான்.
அன்றாட தேவைகளுக்கு மட்டும் காசை செலவு செய்துவிட்டு மீதமுள்ள பணத்தைச் சேமித்து வைக்கும் மனோபாவம் கொண்டவன்.
சுருங்கக்கூறினால் ‘மினி பட்ஜெட் பத்மநாபன்’.
ஒரு அட்டவணை தயாரித்து அதற்குள் செலவை அடக்கவேண்டும் என்று நினைப்பவன்.
தன் மனைவியிடமும் அதையே வலியுறுத்தினான்.
அத்தோடு அவளின் சம்பளத்தை அப்படியே வாங்கி அவளின் பெயரில் வங்கிக் கணக்கை ஆரம்பித்து அதில் போட்டு வைத்திருந்தான்.
ஆரம்பத்தில் அவளிற்கும் அவை ஏற்புடையதாக இருந்தது.
ஆனால் அவளின் தாயோ
“வாசந்தி ஏன்டி உன் புருஷன் இப்படி கஞ்சத்தனமா இருக்கான்?அவனும் நல்ல சட்டை வாங்கி போடறது இல்லை…உனக்கும் நாலு காசு செலவு பண்ணி நகைநட்டு வாங்கி தர்றது இல்லை…இப்படி பணத்தை சேமிச்சு வைச்சு என்ன செய்யப்போறானாம்?எனக்கு என்னவோ காசை சேமிச்சு வைச்சு நாளைக்கு உன் மாமனாரு மாமியார்கிட்ட பல்கா கொடுத்திட்டு உன்னையும் உன் பிள்ளையையும் நடுத்தெருவிலே நிறுத்தப்போறான்னு நினைக்கிறேன்…இப்போவே புத்தியா பொழைச்சுக்கோடி” என்று விஷமத்தனமாக கூறி,மகளின் மனதில் நஞ்சை கலக்கியிருந்தார்.
அவர் கூறியதற்கு தகுந்தாற் போன்று அவர்கள் புதிதாக வீடு கட்டும் நேரம் பணம் போதவில்லை என்று அவளின் வங்கிக்கணக்கிலிருந்த பணத்தை எல்லாம் சுரண்டி அவனது தகப்பனிடம் கொடுத்திருந்தான் பாரிவேந்தன்.
அப்போதும் “உன்கிட்டயிருந்தால் கொடுப்பா…மருமக பணமெல்லாம் வேணாம் பாரி” என குசேலன் சங்கடத்துடன் மறுப்புத் தெரிவிக்க,
“அட என்னப்பா…வாசந்தி என் பொண்டாட்டி…அவ காசும் என் காசும் ஒண்ணு தான்ப்பா…இதுக்கு எதுக்கு தயங்கறீங்க?வாங்கிக்கோங்க” என தந்தையைக் கட்டாயப்படுத்தி பணத்தை கொடுத்திருந்தான்.
அதன்பிறகு ஒரு வருடத்திலே மகனிடமிருந்து பெற்ற பணத்தை திருப்பிக்கொடுத்திருந்தார் குசேலன்.
ஆயினும்,தாயின் வேதவாக்கும் கணவனது செயலும் அவளின் மனதில் தவறான விம்பத்தை கொடுத்திருந்தன.
அவை நாளடைவில் அவளது புகுந்த வீட்டு ஆட்களிடமிருந்து அவளை ஒதுங்கிப்போக வைத்திருந்தது.
அதே சமயம் ஒரு நாள் தனிமையில் “ஏங்க இனி என் சம்பள பணத்தை பேங்கிலே எல்லாம் போட வேணாம்…ஒவ்வொரு தடவையும் உங்ககிட்ட வந்து என்னாலே கெஞ்சிட்டு இருக்க முடியாது…அதனாலே என் சம்பள காசை என் செலவுக்கு வைச்சுக்கிறேன்” என்று கணவனிடம் தெனாவெட்டாக தெரிவிக்க,
அவளை அழுத்தமாக ஏறிட்டான் பாரிவேந்தன்.
அவளின் முகத்தில் தெரிந்த அந்த திமிரும் அலட்சியமும் அவனிற்கு நன்றாகவே புரிந்தது.
அதனால் “சரி உன்னிஷ்டம்” என உணர்ச்சியற்ற குரலில் கூறி முடித்துவிட்டான்.
அவனது முகத்தில் தெரிந்த பாவனை அவளை உறுத்தினாலும் மனதிற்குள் ‘உன்னை மாறி ஆளை வைச்சுக்கிட்டு நான் சுயநலமா இல்லைனா…நீ எல்லாத்தையும் உன் குடும்பத்துக்கிட்ட தூக்கி கொடுத்திட்டு போயிட்டே இரு…நான் கஷ்டப்பட்டு சம்பாதிப்பேனாம்…இவங்க நோகாமல் அனுபவிப்பாங்களாம்…நல்லாயிருக்கே நியாயம்’ என இகழ்ச்சியாக எண்ணி,கணவனின் உணர்வுகளை மதிக்காமல் குப்பையில் வீசியெறிந்தாள்.
அன்றிலிருந்து இன்று வரை அவளின் காசை அவன் கையால் கூட தொட்டதில்லை.
அதேசமயம் மனைவி பிள்ளைகளுக்கான செலவை அவனே முழுமையாக ஏற்கவும் செய்தான்.
அப்போதும் ஆடம்பரமான வீண் செலவுகளைச் செய்யமாட்டான் பாரிவேந்தன்.
கணவனக்கான கடமையை அவன் நிறைவேற்றினாலும் அவளின் செயல் அவனது மனதில் மிக ஆழமான காயத்தை ஏற்படுத்தியிருப்பதை அவள் இன்று வரை அறியவே இல்லை என்பது தான் கொடுமையே!
பாரிவேந்தன் அதை எண்ணி பெருமூச்சுடன் கூட்டத்தில் முன்னேற,அவனை வேறுவழியின்றி பின்தொடர்ந்தாள் வாசந்தி.
அன்னை கூறியது போல் அனைத்து பரிகாரங்களையும் செய்துவிட்டு ‘ஹப்பாடி’ என கூட்டத்தை விட்டு சேரன் வெளியில் வந்த நேரம் அவனது உடைமெல்லாம் கசங்கிப்போயிருந்தது.
‘ப்ச் எல்லாம் இந்த அம்மாவாலே’ என கீழே குனிந்து தனது சட்டையை உதறியப்படியே புலம்பிக் கொண்டே நடந்தவனின் கால்களை ஏதோ ஒரு மென்பொருள் தட்டி நின்றது.
‘என்னடா அது?’ என புருவத்தைச் சுருக்கியபடி அவன் தன் பார்வையைத் தரையை நோக்கி செலுத்தினான்.
அங்கே ஒரு சின்னஞ்சிறு பெண் குழந்தை ஒன்று நின்றுகொண்டிருந்தது.
அதிகப்பட்சம் அந்த குழந்தைக்கு நான்கு வயது இருக்கலாம்.
அழகான இளஞ்சிவப்பு நிற பட்டுச் சட்டையும் கீழே ஊதா நிறத்தில் பாவாடையும் அணிந்திருந்தாள் அவள்.
அவளது தலையின் இருபுறமும் இரண்டு குட்டி ஜடை தொங்கிக்கொண்டிருக்க,அவளது சுருள் முடிக் கற்றைகள் காற்றில் ஊசலாடின.
அவளின் நெற்றியில் துலங்கிய சந்தனப் பொட்டும், ஓடி வந்ததில் கன்னம் முழுக்க அரும்பியிருந்த வியர்வைத் துளிகளும் அவளை ஒரு தேவதையைப் போல் காட்டின.
அவள் தன் பெரிய விழிகளை உருட்டி அவனை அண்ணாந்து பார்த்தாள்.
சேரனும் அதேநேரம் அவளின் விழிகளை உற்றுப் பார்த்தான்.
ஏனோ அந்த அஞ்சனம் தீட்டிய குண்டு விழிகள் அவனை அப்படியே வசீகரித்தன.
அந்த கண்கள் ஒரு ஆழியை போல் அப்படியே அவனை புதைக்குழிக்குள் இழுக்க,அந்த சிறாரின் கண்களை இமைக்காமல் பார்த்திருந்தான் ஆடவன்.
ஒரு நொடி…இரு நொடிகள் அல்ல…கிட்டத்தட்ட ஒரு நிமிடம் முழுமையாக அந்த குழந்தையின் விழி வீச்சில் கட்டுண்டு அவன் நின்றிருந்தான்.
ஆனால் முதலில் அவனது சிந்தையைக் களைக்கும் விதமாய் அந்த மழலையின் குரல் ஒலித்தது.
“சாரி” என இருகரம் குவித்து அந்த குழந்தை அவனிடம் மன்னிப்பை யாசித்திட,சேரனின் ஒற்றை புருவம் ஆச்சரியத்தில் உயர்ந்தது.
குழந்தையின் தோற்றத்தை விட அதன் பணிவு அவனை இன்னும் அதிகமாய் ஈர்த்தன.
அதனால் அவனுள் ஒரு சுவாரசியமும் பிறந்திட “எதுக்கு சாரி?” என கைகளை மார்ப்பிற்கு குறுக்கே கட்டி கேட்க,
அந்த குழந்தையோ மிகவும் தீவரமான முகப்பாவனையுடன் அவனது கால்களை சுட்டிக்காட்டி “நான் ஸ்பீதா ஓடி வந்து உங்க மேலே ஆக்சிதென்த் பண்ணித்தனே…அதுக்கு பாப்பா சாரி அங்கிள்” என இருகரம் குவித்து தலையாட்டி மன்னிப்பு வேண்டிய மழலையின் பாவனை அவனை அப்படியே கவர்ந்தது.
அவ்வளவு எளிதில் சிரிப்பையே சிந்தியிராத அவனது முரட்டு இதழ்கள் முதன்முறையாய் ஒரு குழந்தையின் பேச்சிலும் பாவனையிலும் மெல்லியதாய் விரிந்தது.
அதனால் “ஆக்சிடென்ட்டா?அப்படினு யாரு சொன்னாங்க?” என புருவம் உயர்த்தி அவன் குறும்பாக கேட்க,
அவளோ “ம்ம்ம்…” என கன்னத்தை தட்டி சிந்தித்தவள்,சட்டென விழி விரித்து ”பாப்பாவோட அம்மா சொல்லுவாங்க…வேகமா ஓதிப் போய் யார் மேலயாவது மோதுனா அதுக்குப்பேரு ஆக்சிதென்த்…அப்போ நான் உங்க மேலே ஆக்சிதென்த் பண்ணித்தேன் தானே” என பாவமாக உரைத்தாள்.
அதுவரை அவனது உதடுகளுக்குள் மறைந்திருந்த சிரிப்பு இப்போது தாராளமாக வெளிப்பட்டது.
அவனது விழிகளிலும் ரசனை கூடியது.
அத்துணை நேரமாக நின்றவாக்கிலே பேசிக்கொண்டிருந்த சேரன் தன் அகந்தையை தூக்கி தூர வைத்துவிட்டு குழந்தைக்கு இணையாக தரையில் மண்டியிட்டான்.
உடனே அந்த குழந்தையோ “ஹை அங்கிள் இப்போ பாப்பா ஹைத்துக்கு நீங்க வந்திட்டாங்க” என கைதட்டி ஆர்ப்பரிக்க,
அதில் இன்னும் பெரிதாக புன்னகைத்தவன் “சரி சரி…பாப்பா இங்க தனியா என்ன பண்ணிட்டு இருக்கீங்க?அம்மா எங்கே?” என காரியத்தில் கண்ணாய் அவளை பற்றிய அறிய வினவினான்.
சட்டென தனது விழிகளை பெரிதாக்கியவளோ “நீங்க என்ன போலீஸா?” என இடுப்பில் கைவைத்து அழுத்தமாக வினவினாள்.
அவனோ குழப்பமாக “இல்லையே” என்றான்.
“அப்புதம் எதுக்கு பாப்பாவை கேள்வி கேட்குதீங்க?” என அவனை முறைத்துக்கொண்டே கேட்க,அவளது புத்திசாலித்தனமான பேச்சை கேட்டு அவன் சத்தமாகவே சிரித்துவிட்டான்.
அவன் இவ்வாறெல்லாம் வாய்விட்டு சிரிக்கும் பழக்கமுடையவனெல்லாம் இல்லை.
அவன் இதழ்பிரித்து சிரித்தே வருடங்கள் கடந்திருந்தது.
அதனால் வெகு சில வருடங்களுக்கு பிறகு மனம்விட்டு சிரித்த தன்னை நினைத்தே அவனிற்கு வியப்பாக இருந்தது.
அவளை கண்ட சில நிமிடங்களில் அந்த சிறியவள் அவனை மயக்கியிருந்தாள்.
‘சரியான மயக்கியா இருக்காள் இந்த பொண்ணு’ என தனக்குள்ளே எண்ணிய சேரன் “சரி பாப்பா அம்மா எங்கன்னு சொல்ல வேணாம்…ஆனால் பாப்பா பேரு என்ன?” என குழந்தைக்கு ஏற்பது போல் தன்மையாக வினவினான்.
குழந்தையோ ‘சொல்ல மாட்டேன்’ என்பது போல் தலையை சிலுப்பிக்கொள்ள,
‘சேட்டைக்காரியா இருப்பா போலே குழந்தை’ என சிரித்த சேரன் “சரி ஓகே…நாம்ப ஒரு டீல் போட்டுக்கலாமா?” என கேட்க,
குழந்தையோ ‘என்ன’ என்பது போல் அவனை ஏறிட,
“முதல்ல அங்கிள் நான் என் பேரை சொல்லுவேணாம்…அப்புறம் பாப்பா உங்க பெயரை சொல்லுவீங்களாம்…டீல்” என கட்டை விரலை மடக்கி காட்டி குழந்தையிடம் ஒப்பந்தம் போட,
ஒரு கணம் அவன் மடக்கி நீட்டிய கரத்தை இமைச்சுருக்கி பார்த்தவள்,பின்பு ‘என்ன நினைத்தாளோ?’ “பாப்பா தில்” என அவனை போலவே சைகை காட்டி அவனது கரத்தை இடித்தாள்.
“குட் கேர்ள்” என குழந்தையின் புரிந்துணர்வை எண்ணி மெச்சியவன் “என் பேரு சேரன் செங்குட்டுவன்…உங்க பேரு என்ன?” என கேள்வியாய் அவள் முகம் காண,
அவளோ சுற்றும் முற்றும் ஒரு பார்வை பார்த்துவிட்டு அவன் காதருகே குனிந்தவள் “என் பேரு ஸ்(ரு)தி” என்றாள் ரகசியம் பேசும் குரலில்…
குழந்தையின் அந்த மெல்லியக்குரல் அவனது மேனியைச் சிலிர்க்க வைத்திட,ஒரு முறை தன் விழியை மூடி திறந்தவனின் முகத்தில் அப்படியொரு மென்மை!
தன் முன்னே வெள்ளந்தியாய் சிரித்துக்கொண்டு நின்ற குழந்தையைப் பரிவுடன் நோக்கிய சேரன் “உன் பேரு உன்னை போலவே ரொம்ப அழகா இருக்கு பேபி” என்று மிக மென்மையாய் உரைத்தான்.
அவனிடம் இத்தனை மென்மை இருப்பதை அவனே இன்று தான் முதல் முறையாய் அறிந்தான்.
அவன் கூறியதைக் கேட்டு வெட்கம் கொண்ட குழந்தையோ “தேங்க்ஸ் அங்கிள்” என நெளிந்தவள் “உங்க பேது…சே..சேத…” என அதற்கு மேல் சொல்ல முடியாமல் தடுமாறினாள்.
அவனோ “சேரன் செங்குட்டுவன்” என சிரித்துக்கொண்டே அவளை திருத்த,
“சே…சே…சேர…” என மீண்டும் சரியாக கூற முடியாமல் தடுமாறி, பின்பு முகத்தை சுருக்கி “ம்ஹும்…உங்க பேது கஷ்தமா இதுக்கு…அது சொல்ல வதலை அங்கிள்” என பரிதாபமாக விழித்தாள் சிறியவள்.
அவனோ “அப்படியா?” என குறும்பாக புருவம் உயர்த்த,
ஸ்ருதியோ “ம்ம்ம்” என வேகமாக தலையை மேலும் கீழுமாய் ஆட்டினாள்.
அவளது தலையுடன் சேர்த்து அவளது இரட்டை ஜடையும் சேர்ந்து ஆடிட,பார்க்கவே கவித்துவமாய் இருந்தது சேரனிற்கு!
‘அச்சோ செல்லம்’ என மனதிற்குள் கொஞ்சிக்கொண்ட சேரனோ அவளை சின்னச் சிரிப்புடன் பார்த்திருக்க,
குழந்தையோ “உங்க பேது எனக்கு வதிலை…அதனாலே உங்களை ‘ஹீரோ அங்கிள்’னு கூப்பிதறேன்” என்றாள் கண்கள் மின்ன…
அவனோ “ஹீரோ அங்கிளா?” என திகைப்புடன் பதில் கேள்வி எழுப்ப,
“ம்…நீங்க சூப்பர் ஹீரோ மாறி இருக்கீங்க…அதனாலே ஹீரோ அங்கிள்” என அவனை பார்த்து சிரித்தப்படி கூறினாள்.
அவனது ஆறடி உயரம்,கம்பீரமான முகம்,கட்டக்கோப்பான உடற்கட்டு இவையனைத்தையும் கவனித்தவளிற்குள் அவன் நாயகன் என்னும் தோற்றத்தை கொடுத்திருந்தது.
அதன் பொருட்டே அவனிற்கு அப்பெயரை சூட்டியிருந்தது,அந்த சின்னஞ்சிறிய சிட்டு.
“ஹீரோ அங்கிள்” என மீண்டும் ஒரு முறை அவனை அவ்வாறு அழைத்து அவள் வெள்ளையாய் புன்னகைக்க,அவளது சிரிப்பில் அவன் இதயம் நழுவியது.
வழக்கமாக நீதிமன்றத்தில் கருப்பு நிற மேலங்கி அணிந்து கம்பீரமாக வலம் வரும் அவனிற்கு, இந்த சாதாரண உடையில் இருக்கும்போது கி
டைத்த அந்தப் பட்டப்பெயர், அவனுள் ஏதோ ஒரு இனிய ராகத்தை மீட்டியது.
‘ஸ்ருதி’ என்னும் பெயர் கொண்டவள் அவளையும் அறியாமல் அவன் இதயத்தில் ஒரு இனிய இசையை மீட்டியிருந்தாள்.
அவனையறியாமல் மீண்டும் ஒரு புன்னகை அவன் உதட்டில் பூத்தது.
அதேநேரம் தன் மகளை காணாமல் கோவில் முழுவதும் தேடிக்கொண்டிருந்தாள் தேவி.
error: Content is protected !!