Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

57.கார்த்திகா கார்த்திகேயன்-தேவனுக்கேற்ற தேவியோ

அத்தியாயம் 1_தேவனுக்கேற்ற தேவியோ_கார்த்திகா கார்த்திகேயன்

 

அத்தியாயம் 1

 

சித்தனாக இருந்த நான் உன்



Advertisement

ஒற்றைக் கண் பார்வை பட்ட

பின் பித்தன் தானோ?!!!

 

Advertisement

தென்றல் மெல்ல தவழ்ந்து வரும் அழகான காலைப் பொழுது. தன்னுடைய அறையில் அலுவலகம் கிளம்பிக் கொண்டிருந்தாள் ரதி தேவி. அறைக்கு வெளியே அவளது அம்மா மஞ்சு காச்மூச் என்று கத்தும் சத்தம் மற்ற நாளை விட இன்று சற்று அதிகமாகவே கேட்டது.

Advertisement

 

முன்பென்றால் “எதுக்கு மா இப்படி கத்துற?”, என்று உரிமையாக கேட்டிருப்பாள். ஆனால் இப்போது அவள் எதுவுமே சொல்வதில்லை.

 

Advertisement

“காலைலே எதுக்கு அம்மா இப்படி சத்தம் போடுறாங்க? எதுவும் பிரச்சனையா? ஆனா என்ன பிரச்சனையா இருந்தாலும் அந்த காத்து என் பக்கம் மட்டும் வீசக் கூடாது. ஓம் நமசிவாயா, வீட்டை விட்டு போற வரைக்கும் என்னைக் காப்பாத்தி விட்டுரு சாமி”, என்று மனதில் வேண்டிக் கொண்டாள்.

 

ஏனென்றால் அன்னையின் வாயில் விழுந்து விட்டால் நிச்சயம் இன்றைய நாள் அதிலே மூழ்கி விடும் என்று அவளுக்கு தெரியுமே? ரதிக்கு வயது இருபத்தி ஐந்து தான். ஆனால் கடந்த ஐந்து வருடங்கள் அவள் வாழ்க்கை அவளுக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் அவ்வளவு அதிகம்.

 

அன்னை தந்தையின் சிறகுக்குள் அவ்வளவு பாதுகாப்பாக இருந்தவள் தான் ரதி. ஆனால் இப்போது அவர்களின் மற்றொரு முகத்தையும் முற்றிலும் மாறுபாடாக இருந்த உலகத்தையும் கண்ணால் கண்டவளும் அவள் தான். வாழ்க்கை கற்று தந்த பாடத்தால் உறவாலும் சரி நண்பர்கள் ஆனாலும் சரி. அனைவரிடமுமே உஷாராகவே இருந்து கொள்வாள்.

 

இடையை தாண்டிய கூந்தலை பின்னிப் போட எல்லாம் விருப்பம் இல்லாமல் ஒரு கிளிப்பில் அடக்கினாள். ஷாலை ஏனோ தானோவென்று போட்டாலும் இரண்டு பக்கமும் நீட்டாக இருக்கிறதா என்று பார்த்து விட்டு வெளியே இருந்த லேப்டாப்பை எடுத்து அதற்கான பேகில் வைத்தாள்.

 

சார்ஜ் ஏறிக் கொண்டிருந்த அலைபேசியையும் கையில் எடுத்தவள் பேகை தோளில் போட்டுக் கொண்டு வெளியே வந்தாள்.

 

அப்போதும் அவள் அன்னையின் குரல் கேட்டுக் கொண்டு தான் இருந்தது. அவளது அன்னையின் அத்தனை கோபத்துக்கும் காரணம் அன்னைக்கு எதிரே பாவமாக அமர்ந்திருந்த அவளது தந்தை தாமோதரன் தான் என்று கண்டதும் ரதிக்கு லேசாக சிரிப்பு வந்தது. ஆனால் அவளால் வெளிப்படையாக சிரித்து விட முடியாது. பின் அதற்கு பாட்டு கேட்க வேண்டுமே?

 

“அம்மா எதுக்கு அப்பாவை இப்படி வறுத்தெடுக்குதுன்னு தெரியலையே? இந்த அப்பா என்ன செஞ்சி வச்சாங்களோ? ஆனாலும் இந்த அப்பா பாவம் தான்”, என்று எண்ணிக் கொண்டு அவர்களை அமைதியாக வேடிக்கை பார்த்தாள்.

 

அவள் மட்டும் என்ன மா பிரச்சனை என்று கேட்டு விட்டால் அதற்கு பிறகு மஞ்சுவின் கோபம் முழுக்க ரதி புறம் திரும்பி விடும்.

 

“படிச்சு படிச்சு சொல்லி விட்டேன். காய் பிரஷா இருந்தா மட்டும் வாங்குங்க. இல்லைன்னா நான் அப்புறம் போயிக்கிறேன்னு. ஆனா வாடி இருக்குன்னு தெரிஞ்சும் இதை வாங்கிட்டு வந்தா என்ன அர்த்தம்?”, என்று மஞ்சு கேட்க அப்போது தான் அவர் திட்டு வாங்கும் காரணம் புரிந்தது ரதிக்கு.

 

“கூடவே ஊருல அவன் அவன் என்ன கஷ்டத்துல இருக்கான். இந்த அம்மா என்ன டான்னா எதுக்கு தான் சண்டை போடுறதுன்னு இல்லை”, என்று எண்ணிக் கொண்டு அப்படியே நின்றாள். ஏனென்றால் அவர் அதை வாங்காமல் வந்திருந்தாலும் “கொஞ்சமாவது வாங்கிட்டு வந்திருக்கலாமே? நான் இன்னும் மெனக்கெட்டு அலையனும்? இது கூட தெரியாதா?”, என்று சொல்லி மஞ்சு அதற்கும் திட்டுவாள் என்று அனைவருக்குமே தெரியும்.

 

இப்போது அவர்களுக்கு இடையே சென்றால் அன்னையின் கோபம் அவள் பக்கம் திரும்பும் என்று எண்ணி அவர்களை வேடிக்கை பார்த்த படி ஒதுங்கி நின்றாள். ஆனால் தாமோதரன் மடியில் அமர்ந்து போனில் குழந்தைகள் பாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்த ரதியின் நான்கு வயது மகன் அவினாஷ் அன்னை வாசம் உணர்ந்து தலையை உயர்த்திப் பார்த்து “அம்மா”, என்று குதூகளித்தான். அன்னையைக் கண்டு அவன் முகம் மத்தாப்பாக மலர்ந்து போனது.

 

மகனைக் கண்டு அவளுக்கும் சிறு சிரிப்பு வந்தது. அவனை அள்ளி அணைக்க அவ்வளவு ஆசையாக இருந்தது. ஆனாலும் அடக்கிக் கொண்டாள். ஏனென்றால் மகன் அவளிடம் ஒட்டி விட்டால் அவன் மஞ்சுவை விட்டு விலகி விடுவானே? அதனால் அமைதி காத்தாள். தன்னுடைய பாசம் மகனுக்கு அதிகம் கிடைப்பதை விட மஞ்சுவின் பாசம் தான் அவனுக்கு அதிகம் தேவை என்று அவள் உணர்ந்து பல நாட்கள் ஆகி விட்டது.

 

அதனால் முடிந்த அளவு மகனிடம் ஒதுங்கி இருப்பாள். ஆனால் அவனாக அவளிடம் வந்து விட்டால் போதும் மகனை அந்த அளவுக்கு இறுக்கிக் கொள்வாள். உடை பழக்க வழக்கங்களில் மட்டும் அல்ல. தான் பெற்ற மகனைக் கொஞ்சுவதில் கூட ரதிக்கு சில கட்டுப்பாடுகள் உண்டு.

 

பிறந்ததில் இருந்தே குழந்தைக்கு பசி ஆற்றியது மட்டும் தான் ரதி. அதற்கு பின் குழந்தையை பார்த்துக் கொண்டது மஞ்சு தான். மஞ்சுவாக வந்து “இந்தா உன் மகனை பிடி”, என்று கொடுத்தால் மட்டுமே வாங்கிக் கொள்வாள்.

 

இரவு உறக்கமும் அவினாஷ்க்கு தாத்தா பாட்டியுடன் தான் இருக்கும்.  அவளை விட அவர்களும் அவனை நன்றாக பார்த்துக் கொள்வதால் அவன் அப்படியே ஒட்டிக் கொண்டான். சில நேரம் அம்மா கிட்ட போகணும் என்று அவன் அடம் பிடிப்பான். அப்போது மஞ்சுவாக அவனை அவளிடம் கொடுப்பாள். அப்போது ரதிக்கு சந்தோஷமாக இருக்கும். இரவு முழுவதும் மகனை வருடிய படியே இருப்பாள்.

 

சில நேரம் அவினாஷ் அழுதாலும் மஞ்சு அவனை ரதியிடம் விடக் கூடாது என்று இறுக்கமாக இருந்தால் “அம்மாவுக்கு வேலை இருக்கு டா கண்ணா”, என்று ரதியே மகனை சமாளித்து விட்டு அவர்களிடம் விட்டுச் செல்வாள்.

 

இந்த சிறு வயதில் அவள் இழந்தது மகனை மட்டுமா? அனைத்தையும் தான் இழந்து விட்டாள். திரும்புவோமா இல்லையா என்று தெரியாத ஒரு பாதையில் அவள் பயணம் சென்று கொண்டிருக்கிறது.

 

நேற்று இரவு தாத்தா பாட்டியுடன் உறங்கி விட்டதால் அன்னையை இப்போது பார்த்ததும் அந்த சந்தோஷம் அவனிடம்.

 

அவள் அவனைக் கண்டு புன்னகைக்க தாத்தாவின் மடியில் இருந்து இறங்கி ஓடி வந்தவன் அன்னையின் காலைக் கட்டிக் கொண்டான்.

 

அவனை அப்படியே தூக்கி அணைத்துக் கொண்டவள் அவன் கன்னத்தில் முத்தமிட்டு “காலைலே என்ன டா ஃபோன்? தாத்தா கிட்ட கேட்டு படிக்கலாம்ல?”, என்று சிறு அதட்டலாக கேட்டாள். அதில் லேசான கண்டிப்பும் அக்கறையும் மட்டுமே இருந்தது.

 

அது புரியாமல் “காலைலே எதுக்கு குழந்தையை திட்டுற ரதி? அவன் இப்ப தான் போனை எடுத்தான்”, என்று பேரனுக்காக பரிந்து வந்தாள் மஞ்சு. அதில் ரதி அப்படியே வாயை மூடிக் கொண்டாள். அன்னையை எதிர்த்து எல்லாம் அவளால் பேசி விட முடியாது.

 

ஆனால் மஞ்சுவிடம் பேரனுக்கு எந்த தடையும் இல்லையே? அதனால் “ஆச்சி தாத்தாவை திட்டிக்கிட்டே இருந்தா மா? எனக்கு போர் அடிச்சது. அதான் போன்ல பாட்டு கேட்டேன்”, என்று சொல்ல அவனையும் மகளையும் இடுப்பில் கை வைத்து முறைத்தாள் மஞ்சு.

 

“ஏய் சும்மா இரு டா”, என்று ரதி சொல்வதற்கு முன் “நான் பேசுறது உனக்கு போரா டா பொடியா?”, என்று பேரனிடம் கேட்டாள் மஞ்சு.

 

அதற்கு அவன் “ஆமா”, என்று பதில் சொல்லும் முன் மகன் வாயை மூடி விட்டாள் ரதி.

 

அவனை தூக்கி கொண்டு தந்தை அருகில் வந்தவள் “தாத்தா கிட்ட போ, அம்மா ஆபீஸ் கிளம்புறேன்”, என்றாள்.

 

அவனும் தாத்தாவிடம் தாவ அவனை வாங்கி மடியில் அமர்த்திக் கொண்டவர் “வேலைக்கு கிளம்பிட்டியா பாப்பா?”, என்று கேட்டார்.

 

“ஆமா பா, நான் வரேன். அம்மா போய்ட்டு வரேன்”, என்று சொல்லி விட்டு எஸ்கேப் ஆக பார்த்தாள்.

 

“ஏய் இரு டி”, என்ற மஞ்சுவின் குரலில் அதிர்ந்து நின்றாள். “போச்சு இன்றைய நாள் அவ்வளவு நல்ல நாள் இல்லை”, என்று அவள் மனம் சொல்ல அவள் நினைத்தது சரி என்பது போல “உன் மனசுல என்ன நினைச்சிட்டு இருக்க ரதி?”, என்று கேட்டாள் மஞ்சு.

 

“என்ன மா?”

 

“அவிக்கு நாலு வயசு ஆகுது? அவனை ஸ்கூல்ல சேக்கணும்? அந்த நினைப்பு உனக்கு இருக்கா இல்லையா? நீ உன் பாட்டுக்கு ஒவ்வொரு ஊருலயும் பிராஞ் ஓப்பன் பண்ணிக்கிட்டு சுத்திக்கிட்டு இருக்க? அவனையும் கவனிக்கணுமா இல்லையா?”

 

“அவ்வளவு தானா?”, என்று எண்ணிக் கொண்டு “இந்த வருஷம் சேத்துறலாம் மா. நான் நம்ம வீட்டுக்கு பக்கத்துல இருக்குற ஸ்கூல்ல பேசிட்டு சொல்றேன். அப்ப தான் அப்பா அவனை கூட்டிட்டு போய்ட்டு வர வசதியா இருக்கும்”, என்றாள்.

 

“சரி”, என்று மட்டும் சொல்லி பேச்சை முடித்திருந்தால் அவள் மஞ்சு இல்லையே?

 

“ஸ்கூல்ல போய் என்ன பேசுவ? இல்லை என்ன பேசுவன்னு கேக்குறேன்? அப்ளிகேஷன் பாரம்ல அவன் பேருக்கு அடுத்து போட்டுருக்குறது அப்பா பேர் தான். அந்த இடத்துல என்னன்னு போடுவ?”, என்று கேட்க “அம்மா”, என்று அதிர்வாக அழைத்து அன்னையைப் பார்த்தாள் ரதி.  அவள் கண்கள் சட்டென்று கலங்கி விட்டது.

 

“மஞ்சு”, என்று தாமோதரனும் அதட்ட “என்ன ரெண்டு பேரும் என்னை அரட்டுறீங்க? நான் இல்லாததையா சொல்றேன்?”, என்று கேட்டாள் மஞ்சு.

 

வந்த கண்ணீரை அடக்கி கொண்ட ரதி “என் பையன் ஒண்ணும் அப்பா இல்லாதவன் கிடையாது. அப்பா பேர் தெரியாதவனும் கிடையாது. அவன் அப்பாவும் இருக்கார். அவருக்கு பேரும் இருக்கு. அப்படி இருக்கும் போது நான் எதுக்கு கவலைப்படனும்? அதையே தான் நிரப்பி கொடுப்பேன்”, என்றாள்.

 

“ஏது அவன் பேரைப் போடுவியா? மகன் இருக்குறதே தெரியாதவன் பேரை என் பேரனுக்கு அப்பனா போடுவியா? சரி தான்”, என்று மஞ்சு நக்கலாக கேட்க “அவனுக்கு தெரியுதோ  தெரியலையோ? அவன் தான் என் பிள்ளைக்கு அப்பா. அதுல எந்த மாற்றமும் கிடையாது? அப்பா பேர் அவன் பேர் தான் போடுவேன். எங்க வேலை பாக்குறார்ன்னு கேட்டா பாரின்ல இருக்காருன்னு சொல்லிருவேன். நீ கவலைப் படாத மா”, என்று சற்று உரக்கவே சொன்னாள்.

 

மகளின் கோபத்தில் மஞ்சுவின் கொதிநிலை இன்னும் கூட “ஆமா ஆமா உனக்கு கோபம் வர வேண்டியது தான். தான்தோன்றி தனமா திரிஞ்சு நீ பாத்த வேலைல தான் இவ்வளவு பிரச்சனை நமக்கு. சொந்த ஊரை விட்டு சொந்த வீட்டை விட்டு இப்படி வாடகை வீட்ல இருக்கோம். உன்னால இன்னொருத்தி தினம் தினம் செத்துகிட்டு இருக்கா”, என்று சொல்ல அது வரை அடக்கிய கண்ணீர் ரதிக்கு அப்படியே பொங்கி விட்டது.

 

“அவ வேலைக்கு கிளம்பும் போது தான் அவளை அழ வைப்பியா மஞ்சு? விடு அவ கிளம்பட்டும்”, என்று தாமோதரன் சொல்ல மஞ்சு வாயை மூடிக் கொண்டாள் என்றால் ரதியோ அடுத்து யார் முகத்தையும் பார்க்காமல் வெளியே சென்று விட்டாள்.

 

அவள் வாங்கிய கார் வெளியே கம்பீரமாக வீற்றிருக்க அதை எடுத்தவள் வேகமாக செலுத்த ஆரம்பித்தாள். மனது துவண்டு விட்டது.

 

காரின் வேகம் போலவே அவள் மனமும் அவ்வளவு கோபத்தில் இருந்தது. ரதி சென்றதும் கணவர் அருகே அமர்ந்தாள் மஞ்சு. அவள் கண்களும் லேசாக கலங்கி சிவந்திருக்க “அம்மாச்சி”, என்று அழைத்தான் அவினாஷ்.

 

“என்ன டா கண்ணா? பசிக்குதா?”

 

இல்லை என்னும் விதமாய் தலையசைத்தவன் “நானும் அம்மாவும் வேணும்னா சாமி கிட்ட போயிறட்டுமா?”, என்று கேட்க பெரியவர்கள் அதிர்ந்து போனார்கள்.

 

“கண்ணா என்ன டா இப்படி கேட்டுட்ட?”, என்று கேட்ட படி தாமோதரன் பேரனை அணைத்துக் கொள்ள அவரிடம் இருந்து அவினாசை தூக்கிய மஞ்சு ஏங்கி ஏங்கி அழுதே விட்டாள்.

 

“எதுக்கு டா இப்படி ஒரு வார்த்தை கேட்ட? இதைக் கேக்கவா இந்த அம்மாச்சி உயிரோட இருக்கேன்?”, என்று கேட்டாள் மஞ்சு.

 

“எப்பவும் அம்மாவை திட்டிக்கிட்டே இருக்க? உனக்கு அம்மாவை பிடிக்கலை தானே? ஆனா அம்மா பாவம். எனக்கு அம்மா அழுறது பிடிக்கலை. உன்னையும் பிடிக்கலை. ஆனா அம்மா உன்னை எதுவும் சொல்லக் கூடாது, நீ நல்லவன்னு சொன்னா? ஆனா நீ அம்மாவை அழ வைக்கிற? நான் அம்மாவை சாமி கிட்ட கூட்டிட்டு போய்ட்டா நீ அம்மாவை திட்ட மாட்டல்ல? அம்மாவும் அழ மாட்டா”, என்று சொல்ல “இப்ப உனக்கு சந்தோஷமா மஞ்சு? உன் பேச்சு இந்த பிஞ்சு மனசுல என்ன தாக்கத்தை ஏற்படுத்திருக்கு பாரு? ரதியை எதுவும் பேசாத பேசாதன்னு சொன்னா கேக்குறியா? இப்ப இவன் கேக்குறான் பாரு? பதில் சொல்லு”, என்றார் தாமோதரன்.

 

“அவி கண்ணா, நான் இனி உன் அம்மாவை எதுவும் சொல்லலை போதுமா? நீ இனியும் அப்படி எல்லாம் பேசக் கூடாது”

 

“சரி அம்மாச்சி”, என்றவன் சிரித்த படி அவள் கன்னத்தில் முத்தமிட குழந்தையின் அன்பில் நனைந்தவள் “இதையும் உன் அம்மா தான் சொல்லிக் கொடுத்தாளா டா?”, என்று கேட்டாள்.

 

“ஆமா நீ கோபமா இருந்தா இப்படி முத்தம் கொடுன்னு அம்மா சொன்னா? நீயும் சிரிச்சிட்ட”, என்று அவனும் சிரிக்க மஞ்சுவுக்கும் அடக்க மாட்டாமல் சிரிப்பு வந்தது.

 

“சரி நான் அவனை கொஞ்ச நேரம் வெளிய கடைக்கு கூட்டிட்டு போய்ட்டு வரேன்”, என்று தாமோதரன் சொல்ல பேரனின் மனதுக்கு சிறு மாற்றம் தேவை என்பதால் இருவரையும் அனுப்பி வைத்த மஞ்சு அப்படியே தளர்ந்து அமர்ந்து விட்டாள்.

 

அவளுக்கு மட்டும் மகளை இப்படி எல்லாம் பேச வேண்டும் என்ற ஆசையா? அது அவளையும் மீறி வந்து விடுகிறது? மற்ற பெண்கள் போல தங்கள் மகள் இருக்க வில்லை என்ற ஆதங்கமே அவ்வபோது கோபமாக இப்படி வெளிப்பட்டு அவளை ரணமாய் கீறி வைக்கும்.

 

ரதியை ஒரு காலத்தில் அவ்வளவு செல்லமாக தாங்கியவள் தான் மஞ்சு. ஆனால் இப்போது அந்த பாசம் இருந்தாலும் சிறு வெறுப்பு மகள் மீது உண்டு. அது இப்படி வெளிப்படும் போது ரதி மனது மட்டும் அல்ல. மஞ்சு மனதிலும் அது காயமாக தான் பதியும்.

 

அதுவும் பேரன் இப்படி பேசிய பிறகு இனி மகளிடம் கவனமாக பேச வேண்டும் என்று எண்ணிக் கொண்டாள்.

 

அதே நேரம் அன்னையின் பேச்சில் இருந்து வெளியே வர முடியாமல் கண்களில் கண்ணீர் பெருக காரை செலுத்திக் கொண்டிருந்தாள் ரதி. கண்ணீரைத் துடைக்க துடைக்க அது பெருக்கெடுத்துக் கொண்டே இருந்தது.

 

வாழ்க்கையில் ஒரு முறை பெரிய தவறு செய்து விட்டாள் தான். அதுவும் தவறு என்று தெரிந்தே அவள் செய்தது தான். அதை உணர்ந்தும் விட்டாள். ஆனாலும் மேலும் மேலும் பேசி சாகடித்தால் என்ன செய்வது என்றவளுக்கு அவளவனின் நினைவு வந்தது.

 

கூடவே ரோஜா மொட்டுக்களாய் இருந்த அவளது பெண் குழந்தைகளின் நினைவும் வந்தது. ஒரு மொட்டு பிறந்ததும் காய்ந்து கருகிப் போனது என்றால் மற்றதை அவளே பிரியும் வேதனை.

 

பிறந்து ஒரு மாதம் கழித்து பசிக்கு அழுத குழந்தைக்கு பால் கொடுத்து அழுகையை அடக்கி அதை உடனே பிரிந்த வலி இப்போது வரை இருக்கிறது. என்னவோ இன்று மகளின் நினைவு அதிகமாக தாக்க தன்னுடைய தந்தைக்கு அழைத்தாள்.

 

அதை எடுத்த தாமோதரன் “சொல்லு டா பாப்பா”, என்றார்.

 

“அம்மா சரியாகிட்டாங்களா பா?”

 

“சரி ஆகிட்டா. உன் மகன் சரி பண்ணிட்டான்”

 

“என்னப்பா சொல்றீங்க?”

 

“ஆமா மா, அவி தான் உன் அம்மா கிட்ட பேசினான். ஆனா அவன் பேசுனது ரொம்ப கஷ்டமா ஆகிருச்சு பாப்பா”, என்றவர் நடந்ததைச் சொன்னார்.

 

மகனின் பேச்சு அவளுக்கும் கஷ்டமாக இருந்தது. “அவி இப்ப எல்லாம் ரொம்ப கவனிக்கிறான் பா. கவனமா பேசணும் அவன் முன்னாடி”, என்றாள். கூடவே மகன் மனதை எண்ணி ஒரு தாயாக அவ்வளவு கவலையாக இருந்தது.

 

“சரி நீ ஆபீஸ் போய்ட்டியா?”

 

“போய்க்கிட்டு இருக்கேன் பா. அப்புறம் அப்பா. அது. நான்..”

 

“என்ன மா?”

 

“சென்னைக்கு கிளம்புறேன் பா. உடனே வந்துருவேன்”

 

“இப்பவா?”

 

“ஆமா, ஒரு மாதிரி இருக்கு. எனக்கு அவளைப் பாக்கணும்”

 

“சரி போன் பண்ணிட்டு போ”

 

“அம்மா..”

 

“அவளை நான் சமாளிச்சிக்கிறேன்”, என்று சொல்லி அவர் போனை வைக்க காரை ஒடித்து திருப்பியவள் சென்னை செல்லும் பாதையில் காரை செலுத்தினாள்.

 

அருகில் இருந்த பெட்ரோல் பங்கில் டேங்க்கை நிரப்பியவள் காரை செலுத்திய படியே அவளது அலுவலகத்திற்கு அழைப்பு விடுத்தாள்.

 

அவள் அழைப்பை எடுத்த அட்மின் சுதா “குட் மார்னிங் மேம் சொல்லுங்க. ஆபீஸ் வரலையா?”, என்று கேட்டாள்.

 

“சுதா நான் இன்னைக்கு வர மாட்டேன். சென்னை போறேன். நீங்க கொஞ்சம் பாத்துக்கோங்க”

 

“சரி மேடம் நான் பாத்துக்குறேன்”

 

“எல்லா பிரான்ச்க்கும் ஒரு மீட்டிங் கால் பிக்ஸ் பண்ணி நீங்களே பேசிருங்க சுதா”

 

“என்ன விஷயமா மேம்?”

 

“எல்லாரையும் பேஷண்ட்க்கு டெஸ்ட் சரியா எடுக்க சொல்லுங்க. இது டேரக்ட் மெடிக்கல் ஃபீல்ட் இல்லைன்னாலும் நம்ம ரிப்போர்ட் சம் டைம்ஸ் ஆபரேஷன் வரைக்கும் போகும். ஏர் கண்டக்சன் போன் கண்டக்சன் எல்லாம் தெளிவா எடுக்க சொல்லுங்க. ரிப்போர்ட் உங்களுக்கு இல்லைன்னா எனக்கு அனுப்பின பிறகு தான் பேஷண்ட் கிட்ட போகணும். எங்கயாவது யாராலயாவது  பேஷண்ட் அட்டென்ட் பண்ண முடியலைன்னா நாதனை அங்க அனுப்புங்க. கொஞ்சம் பாத்துக்கோங்க”

 

“சரிங்க மேடம் நான் பாத்துக்குறேன். அப்புறம் நாதன்க்கு மட்டும் இன்னும் சம்பளம் போகலை”

 

“ஓ சாரி, நான் பாக்கலை. அமெளண்ட் எவ்வளவுனு எனக்கு மெசேஜ் போடுங்க. நான் கிரெடிட் பண்ணிறேன்”

 

“சரிங்க மேடம்”, என்று சொல்லி போனை வைத்தாள்.

 

ரதி தேவி பி.எஸ்.சி ஃபிசிக்ஸ் படித்து முடித்ததும் எம்.எஸ்.சி படிக்க வேண்டும் என்ற முடிவில் தான் இருந்தாள். ஆனால் விதி அவளை வேறு மாதிரி விரட்ட அவினாஷ்க்கு ஆறு மாதம் இருக்கும் போது பாரினில் அவளுக்கு ஆடியாலஜிஸ்ட் கோர்ஸ்க்கான வாய்ப்பு அவளது நண்பன் மூலமாக வந்தது.

 

ஒரு வருடம் மட்டுமே இருக்கும் அந்த கோர்சை அங்கேயே முடித்து அதன் பிறகு ஒரு வருடம் பணி புரிந்தாள். அப்போது குழந்தையை பார்த்துக் கொண்டது மஞ்சுவும் தாமோதரனும் தான். அதனால் தான் ரதி அவினாஷ் விஷயத்தில் அவ்வளவு உரிமை எடுக்க மாட்டாள்.

 

பல பேருக்கு அப்படி ஒரு துறை இருக்கிறது என்று தெரியாமல் இருக்கும் போது கடுமையாக அங்கே மூன்று வருடம் உழைத்தவள் அடுத்த ஒரு வருடத்தில் தனக்கான விடியல் காது கருவி மையம் என்ற அலுவலத்தை திருநெல்வேலியில் துவங்கினாள். முதல் இரண்டு மாதங்கள் ஒழுங்காக செல்ல வில்லை என்றாலும் அடுத்து சூடு பிடித்தது.

 

அடுத்த இரண்டு வருடங்களில் திருநெல்வேலியை முதன்மை அலுவலகமாக கொண்டு மூன்று இடங்களில் ஆரம்பித்தாள். விடியல் காது கருவி மையம் கொஞ்சமாக வெளி இடங்களில் நல்ல பெயர் எடுக்க ஆரம்பித்தது.

 

சிறு வயதில் இருந்து பெரியவர்கள் வரை காது கேட்காமல் இருப்பவர்கள் அநேகம். கண் தெரியாதவர்கள் கொஞ்சம் தன்னம்பிக்கையோடு இருப்பார்கள். இல்லையென்றால் எனக்கு கண் தெரிய வில்லை என்று சொல்லி அனுதாபம் சம்பாதிப்பார்கள். ஆனால் காது கேட்காதவர்கள் அப்படி இல்லை. அந்த விஷயம் வெளியே தெரியக் கூடாது என்று தான் நினைப்பார்கள்.

 

மெஷின் மாட்டி இருப்பவர்களுக்கு கூட வெட்கமாக தான் இருக்கும். இப்போது அதில் பல வகை இருக்கிறது. வெளியே தெரியாத வகையில், ஒரு லேசான கம்பி மட்டும் தெரியும் படி, வெளியே தெரியாத காதுக்குள்ளே இருப்பது போன்ற மிஷின் கூட இப்போது இருக்கிறது என்பதால் அநேகம் பேர் அதை வாங்குகிறார்கள்.

 

அதிலும் வரும் பேஷண்ட் அவர்கள் காது கேட்காததற்கு சொல்லும் காரணங்கள் சில இன்னும் கொடுமையாக இருக்கும். கணவர் குடித்து விட்டு அடித்ததால் கூட காது கேட்காமல் போய்விடும்.

 

சிலருக்கு பிறந்ததில் இருந்தே கேட்காது. சிலருக்கு அதிக இரைச்சலில் நின்று வேலை பார்த்ததால் இந்த குறைபாடு வரும். ஒவ்வொன்றையும் சோதனை செய்து அதற்கேற்ப அது சரியான பவர் மிசினா, இல்லை சூப்பர் பவர் மிசினா, இல்லை அல்ட்ரா பவர் மிசினா என்று பார்த்து அவர்களை தேர்வு செய்ய சொல்ல வேண்டும்.

 

சிலர் “வயதாகி விட்டது. எங்க பேரன் பேத்தி பேசுவதை கேட்க முடியவில்லை. வெளிய தெரிஞ்சா பரவால்ல. எங்களுக்கு கேக்கணும் அவ்வளவு தான்”, என்று சொல்வார்கள். அவர்களுக்கு ஐயாயிரம் அளவு மெஷின் கூட போதுமானது.

 

விலை கூட கூட அதற்கு ஏற்ப மெஷின் தரமும் அதிகமாக இருக்கும். இன்னும் சொல்ல போனால் அதில் புளூடூத் வசதி கூட இருக்கிறது. அதுவே அவள் தொழில் என்றாகிப் போனது. கஷ்ட படும் ஏழைகள் என்றால் முடிந்த அளவு விலை குறைத்து கொடுப்பாள். சிலருக்கு இலவசமாகவும் செய்வாள். அநேக இடங்களில் டிரஸ்ட் மூலம் இலவச பரிசோதனை முகாம் கூட நடத்திக் கொண்டிருக்கிறாள். ரசித்து அனுபவித்து அவள் அந்த வேலையை செய்ய மகனின் பொறுப்பை முழுவதுமாக அன்னையிடம் கொடுத்து விட்டாள்.

 

இதை எல்லாம் யோசித்த படி ரதி காரை செலுத்திக் கொண்டிருக்க அவளது மொபைல் அப்போது ஒலித்தது. அப்போது அழைப்பது அரவிந்த் என்று தெரிந்ததும் சிறு புன்னகை உதயமானது.

 

அதை எடுத்தவள் “சொல்லு டா”, என்றாள்.

 

“எங்க டி இருக்க?”

 

“சென்னை போறேன் டா”, என்று சொன்னதும் அவனிடம் ஆழ்ந்த அமைதி.

 

“அர்வி”, என்றாள் தயக்கமாக.

 

“இருக்கேன், என்ன திடீர்னு அங்க போற? பத்து நாள் முன்னாடி தானே போன?”

 

“ஆமா, ஆனா இன்னைக்கு தோணுச்சு”

 

“உங்க அம்மா ஏதாவது கிளறி விட்டாங்களா?”

 

“ஆமா”

 

“நீ போகவே நைட் ஆகிரும் டி. அப்புறம் என்ன பண்ணுவ? டிரஸ் எதுவும் எடுத்து வச்சியா?”

 

“அதெல்லாம் பாத்துக்கலாம். டிரஸ் கார்ல ஒரு செட் இருக்கு. மெதுவா தான் போக போறேன், மார்னிங் பாத்தா போதும்”

 

“நாளைக்கு சண்டே வேற, ஸ்கூல் இருக்காது”

 

“எனக்கு அந்த தூரம் வேண்டாம். கிட்ட பாக்கணும். கூட்டிட்டு வரச் சொல்லி சொல்லணும்”

 

“வருவாங்களா?”

 

“வருவாங்க, எனக்கு என் கைல தூக்கணும்”

 

“எத்தன நாளைக்கு இந்த போராட்டம் ரதி?”

 

“தெரியலை?”

 

“ஆனாலும் அவனை வெறுக்க மாட்டல்ல?”

 

“வெறுக்குற அளவுக்கு எங்க காதல் பலவீனமானது இல்லை. எல்லாத்துக்கும் ஒரு காரணம் இருக்கும். நான் நம்புறேன்”

 

“உன்னை திருத்தவே முடியாது. எப்பவும் அவனுக்கு சப்போர்ட் பண்ணியே பேசு. சரி பாத்து போய்ட்டு வா. சேபா இரு”

 

“சரி டா”, என்றவள் “அர்வி”, என்றாள்.

 

“சொல்லு மா”

 

“திவி எப்படி இருக்கா?”

 

“நல்லா தான் இருக்கா”

 

“உண்மையா தான் சொல்லுறியா?”, என்று கேட்க அவனிடம் அப்படி ஒரு அமைதி.

 

“இதுக்கு என்ன தான் டா முடிவு?”

 

“என் கிட்ட கேக்குற?  இதுக்கு முடிவு உன் தங்கச்சி கிட்ட தான் இருக்கு. என்னை என்ன பண்ண சொல்ற?”

 

அவன் சொல்வது உண்மை என்று புரிய “ம்ம்”, என்றாள்.

 

“நீயாவது கால் பண்ணி பேசு டி அவ கிட்ட. கொஞ்சம் சந்தோஷமா இருப்பா”

 

“சரி”, என்று சொல்லி போனை வைத்த ரதி அடுத்து அழைத்தது அவள் தங்கை திவ்யாவைத் தான்.

 

முதல் முறை திவ்யா அந்த அழைப்பை எடுக்க வில்லை. ரதி மீண்டும் அழைக்கவும் தான் எடுத்தாள்.

 

“சொல்லு கா”, என்ற திவ்யாவின் குரல் அவ்வளவு சோர்ந்து வந்தது.

 

ரதியால், ரதியின் செய்கையால் அதிகம் பாதிக்கப் பட்டவள் தான் திவ்யா.

 

“திவி அழுறியா டி?”

 

“இல்லையேக்கா, சொல்லு. எப்படி இருக்க?”

 

“நல்லா இருக்கேன்”

 

“அவி குட்டி எப்படி இருக்கான்?”

 

“நல்ல தான் இருக்கான் டி”

 

“இப்ப எங்க கா இருக்க? திடீர்னு கால் பண்ணியிருக்க?”

 

“சென்னை போய்க்கிட்டு இருக்கேன் டி”

 

“பாப்பாவை பாக்க போறியா?”

 

“ஆமா”

 

“எனக்கும் பாப்பா போட்டோ அனுப்பி விடு. சரிக்கா நான் அப்புறம் பேசுறேன்”, என்று சொல்லி உடனே அழைப்பைத் துண்டித்தாள் திவ்யா.

 

அவள் போனை வைத்ததும் தான் தாமதம் “எவன் கிட்ட டி பேசிட்டு இருக்க?”, என்ற குரல் கேட்டு கலவரமாக எதிரே நின்றவனைப் பார்த்தாள்.

 

அவன் பாண்டியன், அவள் கணவன். காலை பத்து மணிக்கே அரை போதையில் இருந்தான்.

 

“ரதி அக்கா தாங்க பேசினா. வேற யாரும் இல்லை”

 

“அவ கிட்ட பேசக் கூடாதுன்னு சொல்லிருக்கேனா இல்லையா? அவ கிட்ட பேசினா அவ குணம் தான் டி உனக்கும் வரும். இன்னொரு தடவை பேசினா உனக்கு இருக்கு”

 

“இனி பேசலைங்க”, என்று சொல்லி விட்டாள். அப்படி தான் பேசுவேன் என்று சொல்லி ஒரு முறை பட்ட ரணம் போதாதா?

 

“சரி உங்களுக்கு சாப்பாடு எடுத்து வைக்கவா?”, என்று கேட்ட படி அவள் அங்கிருந்து செல்லப் பார்க்க அவளை கை நீட்டி தன் பக்கம் இழுத்தான் பாண்டியன்.

 

அவன் மேல் இடித்து நின்றவளுக்கு மேனி பயத்தில் நடுங்கியது. அடுத்து என்ன நடக்கும் என்று தெரிந்தவளுக்கு உள்ளுக்குள் நடுங்கியது.

 

“அத்தை குளிச்சிட்டு வந்துருவாங்க. சாப்பாடு கொடுக்கணும்ங்க”, என்று சொல்லி அவள் நகரப் பார்க்க “இதுவும் உன் வேலை தான். இதுக்குன்னு நான் வேற ஆளா வைக்க முடியும்?”, என்றவன் அவளை கட்டிலில் தள்ளி அவள் மேல் படர்ந்து பரவ ஆரம்பித்தான்.

 

அவன் செய்கையில் நொந்து போனவளுக்கு கண்களில் கண்ணீர் பெருக அதை அவன் அறியாமல் துடைத்துக் கொண்டாள். அவன் பார்த்தான் என்றால் நான் தொடும் போது எவனை நினைக்கிற என்று கேட்பான் என்பதால் கவனமாக இருந்தாள்.

 

எதற்கு என்ன திட்டுவானோ என்று பயந்து இருந்தவளுக்கு அவன் கொடுக்கும் காயங்கள் வலியைக் கொடுக்க அதற்கும் அழுகை தான் வந்தது.

 

சிறிது நேரத்தில் அவளை விட்டு விலகியவன் “எவனை தான் நினைச்சிக்கிட்டு இருப்பியோ? மரக்கட்டை மாதிரி கிடக்க? சே மனுசனுக்கு சந்தோஷமே போச்சு? உன்னை போய் கட்டி வச்சிருக்காங்க பாரு”, என்று புலம்பிய படியே அப்படியே படுத்துக் கொண்டான்.

 

துவண்டு போனவள் மெதுவாக எழுந்து அமர்ந்து அவனைத் திரும்பிப் பார்த்தாள். அவன் கிடந்த அலங்கோலம் காதல் கணவனாக இருந்திருந்தால் ரசித்திருப்பாளோ என்னவோ? இப்போது அருவருப்பை மட்டும் தர அவனுக்கு ஒரு போர்வையை மூடி விட்டு குளிக்கச் சென்றாள்.

 

அடுத்த அரை மணி நேரத்தில் வலியையும் கண்ணீரையும் மறைத்து வேறு உடை மாற்றி விட்டு சமையல் அறைக்குச் செல்ல “இது வீடா என்னன்னு தெரியலை? சோறு போடக் கூட ஆள் இல்லை? எந்நேரமும் புருஷன் கூடவே ஒட்டிக்கிட்டு ரூமுக்குள்ளே கிடக்க வேண்டியது. சீ”, என்று ஜாடையாக அவளது மாமியார் தங்கம் சொல்ல திவ்யாவுக்கு உடலே கூசிப் போனது.

 

அவளே விருப்பம் இல்லாமல் தான் அவளுடைய மகனிடம் அகப்பட்டுக் கொள்கிறாள். இதில் அவள் தான் மகனை முடிந்து வைத்திருப்பதாக நினைத்துக் கொண்டு தங்கம் பேசுவது உண்மையிலே கடுப்பாக தான் இருக்கும் திவ்யாவுக்கு.

 

“கொஞ்சம் நேரம் ஆகிட்டு அத்தை. மன்னிச்சிருங்க. எல்லாம் தயாரா தான் இருக்கு. நான் சாப்பாடு எடுத்துட்டு வரேன்”, என்று சொல்லி விட்டு சமையல் அறைக்குச் செல்ல  போனை வைக்க பின் வாசல் வழியாக அப்போது தான் ரதியிடம் பேசி விட்டு உள்ளே வந்து கொண்டிருந்த அரவிந்த் மேல் மோதி நின்றாள்.

 

அவனும் அதை எதிர் பார்க்காததால் சட்டென்று அவளை பிடித்து நிறுத்தினான். ஒரு நொடியில் அவசரமாக அவனிடம் இருந்து விலகி அங்கிருந்து சென்று விட்டாள் திவ்யா.

 

அரவிந்த் தான் அங்கேயே ஆனி அடித்தது போல நின்று விட்டான். அவனுக்கு திவ்யாவை நினைத்தால் அவ்வளவு கஷ்டமாக இருந்தது.

 

ஒரு காலத்தில் அவளை அடித்து கிள்ளி தலையில் கொட்டி விளையாடியவன் தான். இன்றோ அவனைக் கண்டாலே தூரச் சென்று விடுவாள். ஏனென்றால் அவனிடம் அவள் ஒரு வார்த்தை பேசி சிரித்து விட்டாலும் அவனது அன்னையும் அண்ணனும் “உனக்கு அவனும் வேணுமா?”, என்று அசிங்கமாக பேசுவார்களே? அதனால் அமைதியாக ஒதுங்கிச் சென்று விடுவாள்.

 

அவள் வாழ்வை இந்த அளவுக்கு நாசமாக்கிய மஞ்சுவை நினைத்தால் எரிச்சலாக வந்தது அரவிந்துக்கு. ஆனாலும் இதற்கு முழு காரணம் மஞ்சு அல்லவே. ரதியின் செய்கை அல்லவா. அதனால் அமைதி காத்தான்.

 

தன்னுடைய அறைக்குள் வந்த அரவிந்த்க்கு “எனக்கு சைன்டிஸ்ட் ஆகணும்னு ரொம்ப ஆசை அர்வி மாமா”, என்று ஒரு காலத்தில் குதூகலமாய் சொன்ன திவ்யா நினைவில் வந்தாள்.

 

அதை நினைத்துக் கொண்டிருக்கும் போது மஞ்சுவே அவனை அழைத்தாள். அதை எடுத்தவன் “சொல்லு அத்தை”, என்றான் எரிச்சலாக.

 

“திவி எப்படி இருக்கா?”

 

“எப்படி இருப்பான்னு நான் உனக்கு சொல்லணுமா? நீ எதுக்கு இப்படி பண்ணின? அவ வாழ்க்கையை மொத்தமா சிதைச்சிட்டியே? எனக்கு வேதனையா இருக்கு. எதுக்கு இப்படி பண்ணின?”, என்று கேட்க ஏற்கனவே மூத்த மகளின் நினைவிலும் பேரன் பேசியதிலும் கவலையாக இருந்த மஞ்சு ஏங்கி ஏங்கி அழ ஆரம்பித்து விட்டாள். மஞ்சு வேறு யாரும் அல்ல. அவனது தந்தையுடன் பிறந்த சொந்த அத்தை. அதனால் அவள் அழுததும் அவனுக்கும் பதறி விட்டது.

 

“அத்தை ஒரு ஆதங்கத்துல தான் கேட்டுட்டேன். அழாத”

 

“நான் வேணும்னா டா எல்லாம் பண்ணுனேன்? கடைசில என் ரெண்டு பொண்ணுங்க வாழ்க்கையும் சீரழிஞ்சு போயிருச்சே?”

 

“எப்பவும் இப்படியே இருக்காது. நீ கவலையை விடு. எல்லாம் ஒரு நாள் மாறும். உன் ரெண்டு பொண்ணுங்களும் கண்டிப்பா சந்தோஷமா இருப்பாங்க”

 

“உன் வாய் முகூர்த்தம் பழிக்கட்டும் அரவிந்தா. சரி நான் அப்புறம் பேசுறேன். அவளைப் பாத்துக்கோ”, என்று சொல்லி போனை வைக்க போனாள் மஞ்சு.

 

“அத்தை இரு”

 

“சொல்லு அரவிந்தா?”

 

“என்ன சொல்லு அரவிந்தான்னு சாதாரணமாக கேக்குற? நீ செஞ்சது கொஞ்சமாவது நியாயமா இருக்கா அத்தை?”

 

“நான் என்ன டா செஞ்சேன்?”

 

“இன்னைக்கு எதுக்கு ரதியை திட்டுன?”

 

“உடனே உன் கிட்ட வத்தி வச்சிட்டளாக்கும்?”

 

“அவ ஒண்ணும் சொல்லலை. ஆனா சென்னை கிளம்பிட்டா. எனக்கு அதுலே தெரிஞ்சிருச்சு. நீ ஏதோ சொல்லிருக்கேன்னு”

 

“என்னது சென்னை கிளம்பிட்டாளா? எல்லாம் உன் மாமா கொடுக்குற இடம். வரட்டும் இந்த மனுஷன்”

 

“நீ மறக்க வேண்டிய விஷயத்தை நினைவு படுத்திட்டு இருந்தா எப்படி அத்தை? தப்பு பண்ணிட்டா தான். ஆனா அதையே பேசி திருப்பி திருப்பி நீ அவளை துரத்துற?”

 

“ஆமா நான் நினைவு படுத்தாம போனாலும் அவ மறந்துருவா பாரு. போடா. அவ வாழ்க்கை முடிஞ்சது தான். இது அவளா தேர்ந்தெடுத்து அவளா ஏதோ பண்ணிக்கிட்டு இருக்கா. அந்த ஆதங்கத்துல தான் நான் ஏதோ சொல்லிட்டேன். அதை விடு. நீயாவது வேற யாரையாவது கல்யாணம் பண்ணிக்கலாம்ல? இன்னும் இவளையே நினைச்சிக்கிட்டு இருக்கியா?”

 

“அவளையே நினைக்க எல்லாம் செய்யலை. ஆனா அவளுக்கு ஒரு நல்லது நடக்காம என்னால சுயநலமா முடிவு எடுக்க முடியலை”, என்று மஞ்சுவிடம் சொன்னவன் மனதோ “இது முழுக்க முழுக்க பொய். மனசுல ரதி கிடைக்கணும்னு ஆசை இருக்கு. வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்கிட்டா அது நடக்காதேன்னு தான் இழவு காத்த கிளியாட்டம் காத்து கிடக்க”, என்று சொன்னது.

 

அதை அடக்கியவன் மஞ்சுவிடம் சாதாரணமாக பேசி விட்டு போனை வைத்தான்.

 

“ஆச்சி”, என்ற பேரனின் குரலில் நடப்புக்கு வந்த மஞ்சு “உன் அம்மாக்காரியை பாத்தியா டா. சொல்லாம கொள்ளாம கிளம்பி போய்ட்டா? நீயாவது அவளை பிடிச்சு வைக்கலாம்ல? சில பிள்ளைங்க அம்மா வேணும்னு எவ்வளவு அழுது? நீயும் இருக்கியே? அம்மா வந்தா அவளே கதின்னு கிடக்க. மத்தக் நேரம் எங்க கிட்ட ஒட்டிக்கிற? நல்லா உஷாரு டா நீ. அப்படியே உன் அப்பனை மாதிரியே வந்து பிறந்துருக்க? அந்த குட்டி எப்படி இருக்கோ? உன் அப்பனை மாதிரியா இல்லை உன் அம்மா மாதிரியான்னு தெரியலை”, என்று புலம்பிக் கொண்டாள்.

 

அப்போது தாமோதரன் வேறு எட்டிப் பார்க்க மகள் சொல்லாமல் கிளம்பியதற்கு ஒரு ஆட்டம் ஆடி தீர்த்தாள் மஞ்சு. “அவி குட்டி தாத்தா கூட வெளிய போகலாமா?”, என்று கேட்டு நைசாக பேரனை தூக்கிக் கொண்டு சென்று விட்டார் தாமோதரன்.

 

தொடரும்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!