Skip to content
Post Views: 1,285
அத்தியாயம் 21
மலையிடுக்கில் இருந்து சிறிது சிறிதாக வெளிவரும் ஆதவனைப் போல், சிப்பி இமைகளை மிக மிருதுவாகத் திறந்தாள் நீலா. நெடுநேர இருளுக்குப் பின்னால் காணும் வெளிச்சம் என்பதால் கண்கள் கூச, பட்டாம்பூச்சியின் சிறகுகளைப் போல் இமைகள் படபடவென அடித்து பின் நிலையாக பிரிந்து நின்றது.
எல்லாம் சரியாகிவிட்டது, தன் பழைய அக்கா தனக்கு திரும்பக் கிடைத்துவிட்டாள் என்னும் பெரும் நம்பிக்கையோடு காத்திருந்த அமிர்தாவை ஏமாற்றும் வகையில், மருத்துவர் கேட்ட எந்த ஒரு கேள்விக்கும் விடையளிக்காமல் அங்கிருந்த அனைவரும் ஒரு பார்வை பார்த்துவிட்டு அமைதியாக சுவரைப் பார்த்தவண்ணம் இருந்தாள் நீலா.
மொத்தமாக உடைந்தே போனாள் அமிர்தா. தன் அருகே நின்று கொண்டிருந்த கேசியைப் பார்த்தவள், அவன் முழங்கையை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு, “ஏன் கேசி அக்கா இன்னும் இப்படியே இருக்காங்க. இந்த ஆபரேஷன் முடிஞ்சா அவங்க குணமாகிடுவாங்க, பழையபடி பேசுவாங்கன்னு தானே சொன்னாங்க. அது ஏன் நடக்கல.
Advertisement
என் அக்கா எப்ப தான் சரியாவாங்க. ஒருவேளை சரியாகவே மாட்டாங்களா? அவங்களைச் சுத்தி எல்லோரும் நல்லா இருக்க, கடைசி வரைக்கும் அவங்க இப்படியே கஷ்டப்படத்தான் போறாங்களா?” வேதனையாய் கேட்டவள், தான் உதிர்த்த வார்த்தைகளின் பாரத்தை தாங்கிக்கொள்ள முடியாமல் ஆறுதல் வேண்டி அவன் மீதே சாய்ந்து கொண்டாள்.
தன் இடையில் சாய்ந்து அழுது கொண்டிருந்தவள் தலைமுடியை வருடிக்கொடுத்தவனின் மனம் நெருஞ்சி முள்ளாய் குத்தியது. கடந்து போன மாதங்களில் எத்தனை முறை இப்படி ஆறுதல் தேடி தவித்திருப்பாள். தன்னைத் தேடியிருப்பாள் தானே. அவளை அம்போவென விட்டுவிட்டேனே. யாருமே உடன் இல்லாமல் எத்தனை சிரமங்களுக்கு நடுவில் தன்னை மீட்டெடுத்துக்கொண்டாளோ.
இளவரசியைப் போல் பார்த்துக்கொள்வேன் என்று வாக்கு கொடுத்துவிட்டு, இக்கட்டான நேரத்தில் ராஜா இல்லாத ராணியைப் போல் அவளைத் தனியாகப் போராட விட்டுவிட்டேனே. எனக்கான மன்னிப்பை யார் கொடுப்பார்.” என வேதனை கொண்டான். அவன் கண்ணீர் ஒருதுளி அவள் தலையில் விழ, அதில் சுயஉணர்வு வந்து நிமிர்ந்தவள் தலைமுடியைச் சரிசெய்வது போல் தன்னை சரிசெய்துகொண்டு, பொறுப்பான பொண்ணாக மீண்டெழுந்தாள்.
Advertisement
மருத்துவர் வசம் வந்தவள், “இன்னும் ஏதாவது டெஸ்ட் பண்ணனுமா? என்ன வேண்ணாலும் பண்ணுங்க, எனக்கு என் அக்கா சரியாகணும்.” ஒருவித பிடிவாதத்தோடு சொன்னாள்.
Advertisement
“நடந்திருக்கிறது மேஜர் ஆபரேஷன் அமிர்தா. நாம நினைக்கிற மாதிரி உடனே எல்லாம் சரியாகிடாது. நான் நல்லா செக் பண்ணிட்டேன். உங்க அக்காவோட கண், காது, கைகள், கால்கள் எல்லாம் நல்லாவே வேலை செய்யுது. சோ ஆபரேஷனில் எந்தப் பிரச்சனையும் இல்லை. காயம் ஆழமா இருந்ததாலும், அதைக் கண்டுபிடிச்சு குணப்படுத்த நேரம் எடுத்துக்கிட்டதாலும் பாதிக்கப்பட்ட பகுதி சீராக கொஞ்சம் காலம் எடுக்கும்.” என்க, “எத்தனை நாள் டாக்டர்?” வேகமாகக் கேட்டாள்.
“அது முழுக்க முழுக்க மிஸஸ் நீலாவைப் பொறுத்தது. மூளையின் நரம்புகளில் இருந்த காயங்களும், இரத்தக்கசிவுகளும் அப்புறப்படுத்தப்பட்டதால், இனி மெல்ல மெல்ல பாதிக்கப்பட்ட மூளையின் செல்கள் புத்துணர்வு பெற்று செயல்பட ஆரம்பிக்கும். அதற்குண்டான மாத்திரைகளை தவறாம கொடுத்துக்கிட்டே வாங்க. அவங்க ரொம்ப சீக்கிரமே சரியாகிடுவாங்க.” என்றார்.
“அவங்க குணமாகிட்டே வராங்க என்பதை நாங்க எப்படிக் கண்டுபிடிக்கிறது டாக்டர்?” என்றான் கேசி.
Advertisement
“அவங்ககிட்ட சின்னச்சின்ன ரெஸ்பான்ஸ் தெரியும். அதை வைச்சே நீங்க யூகிச்சுக்கலாம். இதுநாள் வரை நீங்க அவங்களைப் பார்த்துக்கிட்டதை அவங்களால் உணர முடிந்திருக்காது. இனி, நீங்க பேசினா அது அவங்க மூளையில் பதியும், அவங்க சாப்பிடுற சாப்பாட்டோட சுவையும், மணமும் தெரிய வரும். எல்லாத்தையும் விட முக்கியம் கொஞ்சம் கொஞ்சமா பேச ஆரம்பிப்பாங்க. அவங்க பேச ஆரம்பிச்சுட்டாலே எல்லாம் சரியாகிடும். அவங்ககிட்ட அதிகப்படியான மாற்றம் தெரியும் போது என்கிட்ட கூட்டிட்டு வாங்க, மத்தபடி அவங்க நல்லா இருக்காங்க.” என்றுவிட்டுச் சென்றார் மருத்துவர்.
அடுத்த சில நாட்கள் மருத்துவமனையின் கண்காணிப்பில் தான் இருந்தாள் நீலா. தலைவலி, மயக்கம், வலிப்பு போன்ற எந்தப் பிரச்சனையும் வரவில்லை என்பதால் நடந்த அறுவைச்சிகிச்சை முழு வெற்றி என்று தீர்மானித்து அவளை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
திருமணம் முடித்த அடுத்த நாளே அமிர்தாவை வேலையை விட்டுவிடுமாறு சொன்னான் கேசி. “ஹலோ என்ன ஆணாதிக்கமா? எனக்குன்னு இருக்கிறது என்னோட சம்பாத்தியம் மட்டும் தான். அதையும் விட்டுட்டு ஒவ்வொரு பத்து ரூபாய்க்கும் உங்ககிட்ட வந்து நிற்க முடியாது. அதோட இரண்டு வருஷம் கழிச்சு நாம பிரிஞ்ச பிறகு எவன் எனக்கு வேலை கொடுப்பான்.” வேண்டுமென்றே பிரிவை நினைவு படுத்த அவள் எதிர்பார்த்தது போலவே முகம் கசங்கினான் கேசி. ஆனால் விரைவில் தன்னை சமாளித்துக்கொண்டான்.
“இரண்டு வருஷத்துக்கு அப்புறம் நடக்கப்போற கதையை அப்புறம் பார்த்துக்கலாம். அதுவரைக்கும் நான் உன்னோட புருஷன் தானே.” என்க, “இல்ல நீங்க எஜமான், நான் அடிமை. கதைகளில் எல்லாம் வருமே, விளக்கைத் தேய்த்த உடனே ஒரு பூதம் வரும். நாம கேட்டது எல்லாத்தையும் கொடுக்கும் னு. நான் தான் அந்த பூதம், நீங்க தான் என்னோட எஜமான்.” என்றாள் வேண்டுமென்றே.
“சரி, உன் வழிக்கே வரேன். நான் உன்னோட எஜமான் நீ என்னோட அடிமை தானே. நான் சொல்றதைக் கேளு. வேலையை விட்டு வீட்டில் இருந்து உன்னையும், அண்ணியையும், குழந்தைகளையும் நல்லாப் பார்த்துக்கோ. கூடவே சேர்ந்து பேங்க் எக்ஸ்ஸாம் கு படி. இரண்டு வருஷத்துக்குள்ள உனக்கான ஒரு நல்ல வேலையை வாங்கிக்க பாரு. அதுவரை எல்லோருக்கான செலவை நான் பார்த்துக்கிறேன்.” என்றான்.
“யாரும் எங்களுக்குப் பாவம் பார்க்க வேண்டாம். ஓசியா கிடைக்கிற எதுவும் எங்களுக்குத் தேவையில்லை.” என்றவள் மீது கொலைவெறி உண்டாக, “ஓசியா ஒன்னும் நீ என் சொல் பேச்சைக் கேட்க வேண்டாம்.” என்றபடி அவள் அருகே வந்தவன் காதிற்குள் ஏதோ சொல்ல, பட்டென்று அவன் புஜத்தில் அடித்துவிட்டாள் அமிர்தா.
அதுவரை இருந்த கோபம் சற்றே மறைய, “நம்ம குடும்பத்துக்காக என்னை இதையெல்லாம் செய்யவிடு அமிர்தா.” என்று உருகும் குரலில் கேட்க, தன்னை மறந்து தலையாட்டி இருந்தாள் அவள்.
அன்றில் இருந்து இன்று வரை அனைத்திற்கும் கேசி தான் செலவளித்தான். ஆனால் பணம் வேண்டும் என்று அமிர்தா தன்னிடம் வந்து நிற்கும் ஒரு சூழ்நிலையை அவன் உருவாக்கியதே இல்லை. அளவுக்கு மீறிய பணத்தை எப்போதும் அவள் கைகளில் கொடுத்து வைத்திருந்து அவளே செலவழிக்கும் படி தான் பார்த்துக்கொண்டான்.
கேர்டேக்கர் குழந்தைகளைப் பார்த்துக்கொண்டு வீட்டில் இருக்க, பகலில் அமிர்தாவும் இரவில் கேசியும் மருத்துவமனையில் தங்கி இருந்து நீலாவைப் பார்த்துக்கொண்டனர். சமைக்க, குளிக்க, நீலாவின் உடைகளை துவைத்து போட என அமிர்தா வீடு செல்லும் நேரங்களில் தயங்காமல் கேசி வந்து நீலாவைப் பார்த்துக்கொள்வான். அமிர்தாவாவது இரவுகளில் நன்றாக உறங்கிக்கொள்வாள். ஆனால் கேசி பகலில் வேலை இரவில் சேவை என்று உறக்கம் இல்லாமல் இருந்தான். சொகுசாக இருக்கும் போது கிடைக்காத நிம்மதி, இத்தனை சோர்வோடும் சிரமத்தோடும் நீலாவைப் பார்த்துக்கொள்வதில் கிடைப்பதை உணர்ந்தவன் விரும்பியே கஷ்டங்களை ஏற்றுக்கொண்டான்.
மொட்டை அடித்த தலையில் பூனை முடிகள் முளைத்திருக்க அதைத் தாண்டிய வெண்பஞ்சு கட்டோடு வீடு வந்து சேர்ந்தாள் நீலாம்பரி. குணமாகி வந்த அக்காவை ஆரத்தி எடுத்து வரவேற்றாள் தங்கை.
உள்ளே வந்ததும் நீலாவை அவள் அறைக்கு அழைத்துச் செல்ல முயன்ற அமிர்தாவைத் தடுத்த கேசி, “முன்னாடி மாதிரி அவங்களை ஒரு இடத்தில் அடைக்காத அமிர்தா. ஹாலில் உட்கார வை. குழந்தைங்களை அவங்க முன்னால் போடு. டீவி பார்க்க வை. நீ ஊட்டி விடாம அவங்களை சாப்பிட சொல்லு. சின்னச்சின்ன வேலை சொல்லு. நாம அவங்களை சாதாரணமா நடத்தினா அவங்க தன்னால் நார்மல் ஆகிடுவாங்க.” என்க, அந்த யோசனை பிடித்திருந்தாலும் சொன்னவன் அவன் என்பதால் பிடிக்காதது போல் காட்டிக்கொண்டவள், “என்ன செஞ்சாலும் என்னை இம்ப்ரஸ் பண்ண முடியாது.” என்றாள்.
“பரவாயில்லை, எனக்கு விதி மேல நம்பிக்கை இருக்கு. நடக்க வேண்டிய நேரத்தில் எல்லாம் நல்லபடியா நடக்கும்.” என்றவன் தங்கள் அறைக்குள் சென்றுவிட்டான்.
இதுநாள் வரை அவர்கள் இருவரும் ஒரே நேரத்தில் அந்த அறைக்குள் சென்றது இல்லை. ஆள் மாற்றி மாற்றி தான் வந்து சென்று கொண்டிருந்தனர். அதனால் ஒரே அறையைப் பயன்படுத்துவது பெரிதாகத் தெரியவில்லை. இனி என்ன செய்வது என்கிற யோசனையோடு இரவு உணவை கவனித்தாள் அமிர்தா.
கேசி நீலாவோடும் குழந்தைகளோடும் அமர்ந்திருந்தான். இத்தனை நாட்கள் வந்து போய் இருந்ததில் குழந்தைகளோடு நன்றாகவே பழக்கமாகி இருந்தான். அவர்களும் இவன் முகத்தை அடையாளம் கண்டுபிடித்து பொக்கை வாய் திறந்து சத்தமாகச் சிரிக்க, சமையலறையில் அடுப்பை விட அமிர்தாவின் வயிறு தான் அதிகமாக எரிந்தது. ஆரம்பத்தில் அவனும் குழந்தைகளும் பழகுவதை முடிந்த அளவு எதிர்க்க தான் செய்தாள். ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் கேசியை அவளால் தடுக்க முடியவில்லை.
அமைதியாக அமிர்தா அமரவைத்த இடத்தில் அமர்ந்திருந்த இடத்தில் இருந்த நீலா குழந்தைகளையே உற்றுப் பார்த்தாள். அவள் பார்ப்பது புரிந்தது போல் ஆண் குழந்தை அவளை நோக்கி தவழ்ந்து சென்றது. நீலா அதை உணர்ந்தாலும் பார்த்தது பார்த்தபடியே இருந்தாள் தவிர குழந்தையை தூக்கவோ, தடுக்கவோ முயலவில்லை. நீலாவின் மடியில் ஏறிய குழந்தை அவள் உடையைப் பிடித்தபடி எழுந்து நின்று அவள் முகத்திற்கு மிக நெருக்கமாக வந்து அவளைப் பார்த்து சிரிக்க, அந்தக் காட்சியைக் காணக் கண் கோடி வேண்டும் போலத் தோன்றியது கேசிக்கு.
“உங்க அம்மாவா, தம்பிக்கு அவன் அம்மாவைத் தெரியுதா?” என்று ஆசையாக கேசி கேட்க, “அம்மா.” என்கிற அழைப்போடு அமிர்தாவைத் தேடி சென்றார்கள் இருவரும்.
கேசிக்கு முகம் சுருங்கிப்போனது. நீலாவுக்கு அவள் குழந்தைகளாவது கிடைப்பார்கள் என்று அவன் நினைத்திருக்க அவர்கள் அமிர்தாவை அம்மா என்றது மனதிற்கு சங்கடமாக இருந்தது. எனில் நீலாவுக்காக யார் இருக்கிறார்கள் என்று யோசிக்க, நீலா என்பவளே கேள்விக்குறியாகத் தான் தெரிந்தாள்.
“என்னடா, அம்மாவைத் தேடி வந்தீங்களா? அம்மா உங்களுக்கு மம்மம் ரெடி பண்ணிட்டு இருந்தேன்.” என்றபடி இரண்டு குழந்தைகளையும் இரண்டு கைகளில் தூக்கினாள் அமிர்தா.
“நீ ஏன் உன்னை அம்மான்னு குழந்தைங்களுக்கு சொல்லிக் கொடுத்த?” அதி முக்கிய சந்தேகத்தைக் கேட்டான் கேசி.
“வேற என்ன செய்யச்சொல்றீங்க? இவங்களோட அப்பா இங்களை வேண்டாம் னு சொல்லிட்டார். அம்மாவுக்கு இவங்களை யாருன்னே தெரியாது. அம்மாவும் இல்லாம அப்பாவும் இல்லாம குழந்தைங்க ஏங்கிப்போயிடுமேன்னு என்னை அம்மான்னு அடையாளம் காட்டினேன்.” சாதாரணமாகச் சொன்னாள்.
கேசி அமைதியாக இருக்க, “ஆனா உங்க கீரவாணி அண்ணிக்கு பிறக்கப் போற குழந்தைக்கு அப்பா, சித்தப்பா, பாட்டின்னு எல்லா உறவும் கிடைக்கும் இல்ல.” என்றவளின் கேள்விக்கு கோழையைப் போல் புறமுதுகு காட்டிவிட்டு திரும்பி வந்தான் கேசி.
தங்கை வீடு தேடி வந்த பைரவன், மகளின் வளைகாப்பை பற்றி பேச, “இருக்கிற பிரச்சனை போதாதுன்னு இந்தப் பிரச்சனை வேறையா? அதெல்லாம் வேண்டாம் பா.” என்று முதலாவதாக மறுத்ததே கீரவாணி தான்.
“அவ அப்படித்தான் சொல்லுவா. ஆனா நீ என்னம்மா நினைக்கிற. என்னோட மக வயித்துப் பேரப்பிள்ளை என்பதால் சொல்றேன்னு நினைக்காத. இந்த வீட்டோட முதல் வாரிசு. எந்த நேரத்திலும் அதுக்கு எந்தக் குறையும் வராம இருக்கணும் அதுக்காக தான் சொல்றேன்.” என்ற தன் வார்த்தையில் முதல் வாரிசு என்பதை அழுத்தி சொல்லி இருந்தார்.
அமர்ந்திருந்த இடத்தில் இருந்து விருட்டென எழுந்த மோகனன் வாணியை ஒரு பார்வை பார்த்துவிட்டு தண்ணீர் குடிக்கச் சென்றான். அந்தப் பார்வையின் அர்த்தம் உன் அப்பாவைக் கண்டித்து வை என்பதாகும்.
“அப்பா நான் உங்களுக்குப் பல முறை சொல்லிட்டேன். என் பிள்ளை இந்த வீட்டோட முதல் வாரிசு இல்ல மூணாவது வாரிசு. நீங்கன்னு இல்ல யார் நினைச்சாலும் இந்த உண்மையை மறுக்க முடியாது.” அழுத்தமாகச் சொன்னாள்.
“இந்த விஷயத்தில் உன்னோட முடிவு என்ன பைரவி. உனக்கு நம்ம பேரன் இந்த குடும்பத்தோட முதல் வாரிசா இருக்கணுமா? மூணாவது வாரிசா இருக்கணுமா?” நேரடியாக தங்கையிடம் கேட்டார் பைரவன்.
“இதில் நான் கருத்து சொல்ல என்ன இருக்கு? இது மோகன் எடுக்க வேண்டிய முடிவு.” என்று கையை விரித்தார் பைரவி.
“நல்லா இருக்கு மா நீ பண்றது. என்ன தான் அண்ணன் தங்கச்சியா இருந்தாலும் வாயும், வயிறும் தான் வேற வேறன்னு சொல்லுவாங்க. நீ ஒரு படி மேல போய் உன்னோட பையன் வேற, என் பொண்ணு வேறன்னு சொல்லிட்ட இல்ல.
கீரவாணி, மோகனன் கல்யாணம் நடக்கும் போது என்ன ஆனாலும் நீலாவோ அவளைச் சார்ந்தவங்களோ மறுபடி குறுக்க வரமாட்டாங்கன்னு உத்தரவாதம் கொடுத்து தானே கல்யாணம் பண்ணி வைச்ச. இப்ப மாத்திப் பேசுற. என் பொண்ணு தான் இரண்டாம் தாரமா போயிட்டான்னா அவ பெத்தெடுக்கும் குழந்தையும் இரண்டாம் பட்சம் தானா உன் பையனுக்கு.” கோபமாகக் கேட்டார் பைரவன். அவர் கேட்கும் கேள்வியில் இருந்த நியாயம் சுட யாராலும் பதில் சொல்ல முடியவில்லை.
தன் கேள்விக்குப் பதில் கிடைக்காது என்பதைப் புரிந்துகொண்டவர், “சரி எல்லாத்தையும் விடுங்க. என் பொண்ணுக்கு ஊர் கூட்டி வளைகாப்பு நடத்துவீங்களா மாட்டீங்களா?” விஷயத்திற்கு வந்தார்.
“அடங்கவே மாட்டீங்களாப்பா நீங்க. இப்ப ஊர் கூட்டி வளைகாப்பு நடத்துறது முக்கியமா?” வாணி கேட்க, “கண்டிப்பா முக்கியம் மா. நீலா பெத்த பிள்ளைங்களைப் பார்த்து நான் கேட்ட கேள்வியை நாளைக்கே உன் பிள்ளையைப் பார்த்து யாரும் கேட்டுடக் கூடாது பாரு. அதுக்காக தான் சொல்றேன். வளைகாப்பு கண்டிப்பா நடக்கணும். அதுவும் பிறக்கப் போற பிள்ளைக்கு தகப்பனா மோகனன் தம்பி மனையில் உன் கூட உட்காரணும்.” உறுதியாகச் சொன்னார்.
“என்னால் முடியாது.” மோகனன் சொல்ல, “உங்களால் முடியாதுன்னா இவளுக்கு புருஷனா வேற யாரையாவது வாடைகைக்கு பிடிக்கலாமா?” நக்கலாகக் கேட்டார்.
தன் மூத்த மகன் அருகே சென்ற பைரவி, “தம்பி அவர் கோபத்திலும் நியாயம் இருக்கு தானே. ஒத்துக்கோயேன்.” கெஞ்சலாகக் கேட்டார்.
“முடியாதும்மா. வேணும் னா பிள்யையோட அப்பா செத்துட்டான்னு சொல்லி வளைகாப்பு பண்ணிக்கோங்க.” என்றுவிட்டு வேகமாய் அவன் தன்னறைக்குச் சென்றுவிட, அவன் செல்லும் திசையை பார்த்தவண்ணம் அமைதியாகக் கண்ணீர் வடித்தாள் கீரவாணி.
“இன்னும் எவ்வளவு நாள் தான் அமைதியா இருக்கப் போற. உனக்காக நாங்க யார் வேண்ணா பேசலாம். ஆனா நீ பேசினா தான் அவர்கிட்ட எடுபடும்.” காட்டமாகப் பேசினார் பைரவன்.
“எந்த உரிமையில் பா பேசச் சொல்றீங்க?” கீரவாணி கேட்க, “உன் கழுத்தில் அவர் கட்டின தாலி இருக்கே. அந்த உரிமையில் தான்.” வாதாடினார் பைரவன்.
“அவரோட நினைவு இல்லாதப்ப கட்டிக்கிட்ட தாலிங்கிறதால் மனசாட்சி படியும் இந்த தாலிக்கு உரிமை இல்லை, நீலாவோட விவாகரத்து வாங்காமல் கட்டிக்கிட்டதால் சட்டப்படியும் இந்த தாலிக்கு உரிமை இல்லை. எந்த உரிமையில் என்னை என் உரிமைக்காக போராடச் சொல்றீங்க.” கண்ணீரோடு கேட்டாள் கீரவாணி.
“என்னடா கண்ணா” என்று அவளைத் தன்னோடு சேர்த்து அணைத்தார் பைரவன். “நான் ஆசைப்பட்டது எல்லாத்தையும் வாங்கிக் கொடுத்து வளர்த்ததுக்கு பதில், சில விஷயங்களுக்காச்சும் நோ சொல்லி பழக்கி இருக்கலாமே பா. ஒருவேளை ஆசைப்படுறது எல்லாமே கிடைக்காதுன்னு ஏத்துக்கிற பக்குவம் எனக்கு இருந்திருந்தா நான் இந்த சிக்கலான உறவுக்குள்ள தலையைக் கொடுத்திருக்க மாட்டேனோ என்னவோ.
என்னோட ப்ரண்டு. என் முகத்தைப் பார்த்து, திருமணத்தை மீறிய உறவுக்கும் உன்னோட கல்யாணத்துக்கும் என்ன வித்தியாசம் னு கேட்கிறா. மாற்றான் மனைவியை பார்க்கக் கூடாதுன்னு அறிவுரை சொல்ற உனக்கு மாற்றாள் கணவனைப் பார்க்கக் கூடாதுன்னு உங்க வீட்டில் சொல்லிக்கொடுக்கலையான்னு கேட்கிறா. நான் காதலா வாழ்ந்ததா தான் நினைச்சேன். ஆனா ஒரு வாக்கியத்தில் என்னோட நடத்தையையே சாம்பலாக்கிட்டா பா. எனக்கு மனசே விட்டுப்போச்சு. அதனால் தான் தனியா போயிடலாம் னு நினைச்சேன்.” மனது வெறுத்துப்போய் பேசினாள் வாணி. மகளைத் அணைத்து சமாதானப்படுத்தினார் பைரவன்.
வாணி எத்தனை சொல்லியும் கேட்காமல் அவளுக்கு வளைகாப்பு ஏற்பாடு நடந்தது. என்ன ஒன்று அவள் மனதை இலகுவாக்கும் பொருட்டு குறைவான நபர்களைக் கொண்டு வீட்டிலேயே ஏற்பாடு செய்திருந்தனர். அந்த விழாவுக்கு போக வேண்டும் என்றும், அமிர்தா வருத்தப்படுவாள் என்றும் இரண்டு மனமாக தவித்தான் கேசி.
“என்ன இன்னும் கிளம்பாம இருக்கீங்க. இன்னைக்கு தானே உங்க அண்ணிக்கு வளைகாப்பு. நீங்க போகல. பிறக்கப்போற குழந்தைக்கு அதோட சித்தப்பா ஆசிர்வாதம் வேண்டாமா?” நக்கலாகக் கேட்டாள்அமிர்தா.
“உனக்கு எப்படித் தெரியும்?” என்க, “ஸ்பீக்கரில் போட்டு பேசினா எனக்கு மட்டும் இல்ல யாருக்கு வேண்ணாலும் கேட்கும்.” என்றவள் ஒருகணம் நிறுத்தி, “என் அக்காவுக்கு வளைகாப்பே நடக்கல தெரியுமா?” என்றாள்.
கேசி கண்களை மூடித்திறந்தான். அடுத்து அவள் சொல்லப் போவது எதுவாக இருந்தாலும் அது கண்டிப்பாக தன் மனதைப் பாதிக்கத் தான் போகிறது என்று மனதை தயார் நிலையில் வைத்துக் காத்திருந்தான்.
அவன் நினைத்தது போலவே, “அந்த நேரம் அக்காவோட கர்ப்பத்தை கலைக்க சொல்லி சொன்னவங்க தான் அதிகம். இல்லையா பிள்ளைங்களோட அப்பா புருஷனா இல்ல தப்பா நடந்துக்கிட்டவனான்னு என் காதுபடவே பேசி காயப்படுத்துவாங்க. அப்படிப்பட்டவங்களைக் கூப்பிட்டு அக்காவுக்கு வளைகாப்பு நடத்த எனக்கு மனசு இல்ல. நான் மட்டும் நாலு டஜன் வளையல் வாங்கிட்டு வந்து அம்மா அப்பா போட்டோ முன்னாடி வைச்சு அக்காவுக்கு போட்டு விட்டேன். அன்னைக்கு அக்கா அத்தனை சந்தோஷமா இருந்தாங்க. வளையலை ஆட்டிப் பார்த்துட்டே இருந்தாங்க தெரியுமா?” ஏதோ நேற்று நடந்தது போல் சிலாகித்து சொன்னாள் அமிர்தா. அவள் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தான் கேசி.
“உங்க வாணி அண்ணிக்கு நல்லநாள், நல்லநேரம் பார்த்து, முறைப்படி எல்லாம் நடக்கும் இல்ல.” ஏக்கமாகக் கேட்க, எதுவும் பேசாமல் அவளை இழுத்து அணைத்துக்கொண்டான் கேசி. அவனால் அது மட்டும் தான் செய்ய முடிந்தது.
மோகனன் வீட்டில் வாணிக்கு வளைகாப்பு நடந்தது. என்ன கேட்டும் மோகனன் மனையில் அமர மாட்டேன் என்றுவிட்டான். சின்ன மனக்குறை இருந்தாலும் பிள்ளைக்கான முதல் விஷேஷம் என்பதால் மற்றதை மறந்து அமைதியாக ஏற்றுக்கொண்டாள் வாணி.
நாட்கள் நகர்ந்தது. ஒருநாள் காலை பத்து மணி அளவில் வாணிக்கு பிரசவ வலி வந்தது. அவளோடு அனைவரும் மருத்துவமனை வந்திருந்தனர். அதே மருத்துவமனைக்கு நீலாவை அழைத்துக்கொண்டு வந்திருந்தாள் அமிர்தா.
நீலாவுக்கான அப்பாயிண்மெண்ட் பற்றி அமிர்தா வரவேற்பறையில் பேசிக்கொண்டிருந்த நேரம் அவர்களைத் தாண்டிக்கொண்டு சென்ற மோகனனைப் பார்த்த நீலா என்ன நினைத்தாளோ தன்னால் அவனைப் பின்தொடர்ந்து சென்றாள்.
வாணியின் பின்னால் பிரசவ வார்டு நோக்கிச் சென்று கொண்டிருந்த மோகனன் மனதின் உந்துதலில் திரும்பிப் பார்க்க, அங்கே நீலா நின்றிருந்தாள். சம்பவம் நடந்து இரண்டு வருடங்களுக்குப் பிறகு முதல்முறையாக ஒருவருக்கு ஒருவர் நேரில் பார்த்தனர் இருவரும்.
அதிர்ச்சியில் சிலையாகிப் போனவனைப் பார்த்து, “மோகன்.” என மெதுவாக அழைத்தாள் நீலா.
error: Content is protected !!