Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

81. Zeeraf - ஊனாகி உயிராகினாய் பெண்ணே

ஊனாகி உயிராகினாய் பெண்ணே – 24

அத்தியாயம் – 24

 

“இப்பதான்மா நீ முழுசா இந்த வீட்டுப் பொண்ணாத் தெரியுற… அப்படியே அந்த மகாலட்சுமி மாதிரியே இருக்க,” என்று சுமதி அவள் முகத்தை வழித்துத் திருஷ்டி கழிக்க, அந்த கணம் மிருதுளாவிற்கு அவள் தாயின் நினைவு வந்து விழிகள் கலங்கிப் போனது, அவள் தாயும் இப்படித்தானே அவளுக்கு அடிக்கடி திருஷ்டி கழித்து விடுவார்! அந்த நினைவுகள் நெஞ்சை அடைக்க, கண்களில் இருந்து கண்ணீர் துளிகள் கன்னத்தில் உருண்டன…

​அவளது கலங்கிய விழிகளைக் கண்ட சுமதி, “என்னாச்சுமா? ஏன் கண்கலங்குற?” என்று பதறிப்போய் வினவ, “அம்மா நியாபகம் வந்துடுச்சு” என்றவள் சட்டென்று தன் விழிகளைத் துடைத்துக் கொண்டாள்…



Advertisement

​சுமதி காயத்ரியை நோக்க, அவரோ மிருதுளாவின் அருகில் வந்து அவளது கூந்தலை மென்மையாக வருடிவிட்டபடி.. “உன்னோட கவலை என்னன்னு எனக்குப் புரியுது மிருதுளா, அம்மாவை நினைச்சு நீ வருத்தப்பட வேண்டாம், இங்கே உனக்கு ஒன்னுக்கு ரெண்டு அம்மா இருக்கோம், நாங்க உன்னை எங்க சொந்தப் பொண்ணு மாதிரிப் பார்த்துப்போம்,” என்று கனிவுடன் சொல்ல, அந்த வார்த்தைகள் அவளுக்கு மிகுந்த நிம்மதியைத் தந்தன…

​ஆதரவற்றவளாய் ஒரு சிறையில் அடைபட்டுக் கிடப்பதாக உணர்ந்தவளுக்கு, அந்தத் தாயுள்ளம் பெரிய வடிகாலாக அமைய, உணர்ச்சிப் பெருக்கில் அவளை அறியாமலேயே காயத்ரியைச் சட்டென்று அணைத்துக் கொள்ள, அங்கிருந்த அனைவரின் முகத்திலும் நெகிழ்ச்சியான புன்னகை அரும்பியது,..

​அந்தத் தழுவல், அவளது காயங்களுக்கு ஒரு மருந்தாக அமைந்தது, அவள் ரன்வீரை வெறுத்தாலும், அவனது குடும்பத்தினர் காட்டும் இந்தத் தூய்மையான அன்பை அவளால் தள்ளி வைக்க முடியவில்லை…

Advertisement

அதன் பின் பூஜை அறையிலிருந்து அனைவரும் வெளியே வந்தனர், மிருதுளாவின் நெற்றியில் ஜொலித்த அந்த செந்நிறக் குங்குமம், அங்கிருந்த பெரியவர்களின் மனதில் ஒரு நிம்மதியைத் தந்திருந்தது…

Advertisement

​”சாப்டியா மிருதுளா?” என்று காயத்ரி கனிவாக வினவ, “அது… வந்து…” என்று அவள் தயங்கி நின்ற ​அந்த நேரம், அந்தப் பக்கமாகச் சென்ற பணிப்பெண், “மேடம் இன்னும் சாப்பிடலம்மா… ரூமுக்குச் சாப்பிட்ட பிளேட்டை எடுக்கலாம்னு போனேன், சாப்பாடு அப்படியே இருந்தது, நைட்டும் அவங்க சாப்பிடல,” என்று கூற, காயத்ரியின் முகம் பதற்றத்தில் துடித்தது…

​”என்ன மிருதுளா, நைட்டுல இருந்து சாப்பிடலையா நீ? ஏன்மா இப்படி பண்ற? பசியோட இருந்தா உடம்பு என்னத்துக்கு ஆகுறது?” என்று அவர் கேட்க, சுமதியும் வருத்தத்துடன் அவளையே பார்த்தார்…

​”இங்க பாருமா, மனசுல ஆயிரம் கவலை இருக்கலாம், ஆனா அதுக்காக சாப்பிடாம இருந்தா தீர்வு கிடைச்சிடுமா?” என்று சுமதி ஆதங்கமாகக் கேட்க, மிருதுளா என்ன சொல்வதென்று தெரியாமல் மௌனமாக நின்றாள்..

Advertisement

சம்யுக்தாவோ… “விடுங்க சித்தி, அண்ணி ஏதோ வருத்தத்துல அப்படி இருந்துட்டாங்க, இனி நாம பார்த்துக்கலாம்” என்றவள்,.. “நானே  போய் அண்ணிக்குச் சூடா டிபன் எடுத்துட்டு வர்றேன்,” என்று சமையலறைக்குள் நுழைந்தாள்…

​”வாம்மா முதல்ல வந்து உட்காரு,” என்று காயத்ரி அவளது கையைப் பிடித்து டைனிங் டேபிளுக்கு அழைத்துச் செல்ல, அவர்கள் காட்டிய அந்த அசாத்தியமான அக்கறைக்கு முன்னால் வேண்டாம் என்று மறுக்கும் சக்தி மிருதுளாவிற்கு இல்லை. ஒரு இயந்திரம் போல சென்று அமர்ந்தவள், அவர்கள் பரிமாறிய உணவை மௌனமாக சாப்பிட தொடங்கினாள்,…

​பசியும் இருந்ததினால் சுடச் சுட இருந்த இட்லி தொண்டைக்குள் இதமாக இறங்க, ஒரு இட்லி உள்ளே போன பிறகுதான், தான் மட்டும் சாப்பிடுவது நினைவில் வர, “நீங்களும் சாப்பிடலாமே,” என்றாள்…

​”நாங்க எல்லாரும் சாப்பிட்டு முடிச்சாச்சி அண்ணி, என் அக்கா இவ இருக்காளே எட்டு இட்லி சாப்பிட்டா, ஸோ நீ சங்கடப்படாம சாப்பிடுங்க,” என்று வினோத் சம்யுக்தாவை வாரியபடி சொல்ல,
“டேய்… சும்மா இருடா! எதுக்கு இப்போ அண்ணி முன்னாடி என்னைப் பத்தி தப்புத் தப்பா சொல்ற? என் சைஸைப் பார்த்தாலே நான் எத்தனை இட்லி சாப்பிடுவேன்னு அண்ணிக்கு தெரியும், நீ சாப்பிட்ட அளவை எனக்கு திருப்பி விடாத,” என்று சம்யுக்தா அவனை வார, “அக்காவை நம்பாதீங்க அண்ணி, ஆளை வச்சு எடை போடக் கூடாதுன்னு சொல்லுவாங்கள்ல அது அக்காவுக்கு பொருந்தும்,” என்று வினோத் கூற, அந்த இடத்தில் அவர்களுக்குள் ஒரு கலகலப்பான சண்டை ஆரம்பமாகியது…

​மிருதுளாவிற்கோ அவர்களின் அந்தப் பேச்சு மனதில் இருந்த கவலைகளைத் தற்காலிகமாக நீக்கி நிம்மதியைத் தந்தது, அவள் இதழ்களிலும் ஒரு மெல்லிய குறும்புன்னகை படர்ந்தது. அவளது அந்த சிரிப்பைக் கண்ட காயத்ரியும் சுமதியும் நிம்மதியுடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்…

சாப்பிட்டு முடித்ததும் அனைவருடனும் ஹாலில் அமர்ந்திருந்தாள், வினோத்தும் சம்யுக்தாவும் அவளிடம் அவர்கள் கல்லூரியில் நடந்த சுவாரஸ்யமான கதைகளைச் சொல்லிக் கொண்டிருக்க, மிருதுளாவும் அவர்களை தான் கவனித்து கொண்டிருந்தாள்…

​”அண்ணி, ரன்வீர் அண்ணா உங்களைப் பத்தி சொல்லும்போதே நாங்க நினைச்சோம், நீங்க ரொம்ப அமைதியா இருப்பீங்கன்னு, அதே சமயம் உங்க சிரிப்பு ரொம்ப அழகா இருக்கு,” என்று சம்யுக்தா சொல்ல,
​மிருதுளா  மெல்லப் புன்னகைப்பதோடு நிறுத்திக்கொண்டாள், ரன்வீரின் பெயர் வந்தால் மட்டும் அவளது மனநிலை மாறி விடுகிறது…

மேலும் பேச்சுவாக்கில் வினோத், சுமதியின் மகன் என்பதையும், சம்யுக்தா ரன்வீரின் உடன் பிறந்த தங்கை என்பதையும் அவள் புரிந்து கொண்டாள், அந்த இளசுகள் அவளை ஒரு நிமிடம் கூட சும்மா இருக்க விடவில்லை, ஏதாவது ஒன்று பேசிக்கொண்டே இருந்தனர், சம்யுக்தா கல்லூரியில் இறுதி ஆண்டும், வினோத் முதலாம் ஆண்டும் படித்துக் கொண்டிருப்பதையும், அன்று அவளுக்காகவே இருவரும் கல்லூரிக்கு விடுமுறை போட்டுவிட்டு வீட்டில் இருப்பதையும் அறிந்து கொண்டபோது, அவர்களின் அன்பு அவளுக்குத் திகைப்பை ஏற்படுத்தியது…

​மதிய நேரத்தின் போது சுமதியின் கணவர் சமுத்திரவேலும் வீட்டிற்கு வந்தார், ஹாலில் அமர்ந்திருந்த மிருதுளாவைக் கண்டதும் அவருக்கு ஆச்சரியம் தான், இருந்தாலும் உடனே அதை மறைத்துவிட்டு அவளிடம் மிகவும் அன்பாகப் பேசினார்…

​அங்கே இருந்த ஒவ்வொருவரும் அவளிடம் பழகிய விதம், ஏதோ பெரியோர்களால் நிச்சயம் செய்யப்பட்டு, முறைப்படி திருமணம் நடத்தி அவளை இந்த வீட்டிற்கு அழைத்து வந்தது போலத்தான் இருந்தது, அந்த வீட்டின் மருமகளாக அவளுக்குக் கிடைக்க வேண்டிய அத்தனை மரியாதையையும் அன்பையும் அவர்கள் வாரி வழங்கினார்கள்…

அடுத்தடுத்து வந்த நாட்களும் அப்படியே தான் நகர்ந்தன, முதலில் அந்த வீட்டிற்குள் ஒரு அந்நியரைப் போலவும், கைதியைப் போலவும் நுழைந்த மிருதுளா, இப்போது மெல்ல மெல்லத் தன் தயக்கங்களைத் துறந்து பேசத் தொடங்கி இருந்தாள், பெரியவர்களின் தாயன்பும், சிரியவர்களின் விடாத குறும்புப் பேச்சுகளும் அவளுக்குள் ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்தன, தன் தாத்தா இறந்து போன அந்தப் பெரும் மன அழுத்தம் கூட, இந்தப் புதிய உறவுகளின் அரவணைப்பால் அவளை விட்டு ஓரளவு நீங்கி இருந்தது…

இருப்பினும், ரன்வீரின் மீதான அவளது கோபம் மட்டும் எள்ளளவும் குறையவில்லை, அன்று போனவன் மீண்டும் அந்த வீட்டிற்கு வரவும் இல்லை, அவள் அதனை பற்றி கவலையும் கொள்ளவில்லை,..

மிருதுளா இப்போது சுமதியுடன் சமையலறையில் உதவி செய்வது, சம்யுக்தாவுடன் தோட்டத்தில் நடப்பது எனத் தன் நாட்களைக் கடத்தினாள், காயத்ரி அவ்வப்போது ரன்வீரைப் பற்றிப் பேச்செடுத்தால் மட்டும் மௌனமாகத் தவிர்த்து விடுவாள்..

அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சமுத்திரவேல், வினோத், சம்யுக்தா என அனைவரும் வீட்டில் தான் இருந்தார்கள். மதியம் வரை அந்த வீடே திருவிழாக் கோலம் பூண்டது போல மிகவும் கலகலப்பாகப் போனது, வினோத்தின் சேட்டைகளும் சம்யுக்தாவின் அரட்டைகளும் மிருதுளாவின் மனதை லேசாக்கி இருந்தன…

​மதிய உணவிற்குப் பிறகு சமுத்திரவேல் ஓய்வெடுக்கத் தன் அறைக்குச் சென்றுவிட, வினோத் தன் நண்பர்களுடன் வெளியே சென்றுவிட்டான். காயத்ரியும் சுமதியும் கூட சிறிது நேரம் உறங்குவதற்காக அவரவர் அறைக்குச் சென்று விட, வரவேற்பறையில் மிருதுளாவும் சம்யுக்தாவும் மட்டுமே எஞ்சி இருந்தனர்…

​சம்யுக்தா ஆர்வத்துடன் தங்களது குடும்ப ஆல்பத்தை எடுத்து வந்து மிருதுளாவின் மடியில் வைத்தவள்… “அண்ணி, இதைப் பாருங்க… இது ரன்வீர் அண்ணாவோட சின்ன வயசு போட்டோஸ்,” என்று திறந்து காட்டினாள்.

​அதில் ரன்வீர் ஒரு சிறுவனாக, இப்போது இருக்கும் அந்த முரட்டுத்தனம் ஏதுமில்லாமல் மிகவும் வெகுளியாகச் சிரித்துக் கொண்டிருந்தான், அந்த புகைப்படத்தைப் பார்த்த மிருதுளாவிற்குள் ஒரு மெல்லிய அதிர்வு. ‘இவ்வளவு அழகாகச் சிரிக்கும் இந்தச் சிறுவனா இப்போது இப்படி ஒரு கொலையை செய்து இருக்கிறான்’ என்று அவள் மனம் வியந்தது…

ஒவ்வொரு புகைப்படமாகப் புரட்டிக் கொண்டே வந்த மிருதுளா, தன்னையும் அறியாமல் ரன்வீரின் புகைப்படங்களில் கவரப்பட்டு ஆர்வமாகப் பார்க்க ஆரம்பித்தாள். அவனது அந்தச் சிறு வயதுப் படங்கள் அவளுக்குள் ஏதோ ஒரு மாற்றத்தை ஏற்படுத்தின, அவளது ஆர்வத்தைப் புரிந்து கொண்ட சம்யுக்தா, “அண்ணாவைப் பார்க்கத் தோணுதா அண்ணி?” என்று மெல்ல வினவ, ஒரு நொடி அமைதியானவள், “அப்படியெல்லாம் இல்ல சம்யு” என்று கூறிவிட்டு சட்டென்று அந்த ஆல்பத்தை மூடிவிட, சம்யுக்தாவிடமிருந்தோ ஒரு நீண்ட நெடிய பெருமூச்சு வெளிப்பட்டது.

​ஆனாலும் தன் அண்ணாவும் அண்ணியும் சீக்கிரம் சேர வேண்டும் என்ற ஆசை அவளுக்குள் நிறையவே இருந்தது. அதனால் இன்று அவர்களைச் சந்திக்க வைத்தால் என்ன என்ற யோசனை தோன்ற, மெல்ல அவளிடம், “அண்ணி… வெளியே போயிட்டு வருவோமா?” என்றாள்…

​”வெளியேவா? எங்கே?” என்று மிருதுளா வினவ, சம்யுக்தா சுற்றி யாரும் இருக்கிறார்களா என்று ஒருமுறை நோட்டமிட்டுவிட்டு “கிட்ட வாங்களேன்” என்று சொல்ல, அவளும் புரியாமல் அவளது அருகே சென்றாள்…

​சம்யுவோ மிகவும் ரகசியமாக, “எனக்கு என் லவ்வரைப் பார்க்கணும் போல இருக்கு அண்ணி” என்று சொல்ல, அதிர்ந்து போன மிருதுளாவோ.. “உனக்கு லவ்வர் இருக்கானா?” என்றாள் வியப்புடன்…

​”ஷ்ஷ்… சத்தம் போடாதீங்க அண்ணி” என்று அவசரமாய் அவள் வாயை பொத்தியவள், “எஸ்… நானும் ஒருத்தரும் லவ் பண்ணுறோம், அது வீட்ல யாருக்கும் தெரியாது” என்று சொல்ல,.. ​”சொல்ல வேண்டியது தானே?” என்றாள் மிருதுளா.

​”பயமா இருக்கு… ஆனா அண்ணாக்கு மட்டும் தெரியும், அவர் என் படிப்பு முடியட்டும், அப்புறம் பேசலாம்னு சொல்லியிருக்காரு” என்றவள், “அவரைப் பார்த்து ரொம்ப நாளாச்சு, தனியா என்னால போக முடியாது, வீட்ல சந்தேகம் வரும், அதனால நீங்க என் கூட வாங்களேன்” என்று சம்யு கெஞ்சினாள்…

​”நானா? நான் அங்கே வந்து உங்க ரெண்டு பேருக்கும் நடுவுல என்ன பண்ணுறது?” மிருதுளா சங்கடத்துடன் வினவ,.. ​”சும்மா வாங்க அண்ணி, நான் அவர்கிட்ட உங்களை இன்ட்ரோ பண்ணி வைக்கிறேன், நீங்களும் என் மனசுக்கு பிடிச்சவரை சந்திக்கனும்ல, என் செலக்சன் எப்படி இருக்குனு சொல்லுங்க” அவள் சொல்ல,.. “ஆனா” என இழுத்தாள் மிருதுளா…

“ப்ளீஸ் அண்ணி, என் செல்ல அண்ணில!” என்று அவள் செல்லம் கொஞ்ச, அந்த அன்பிற்கு முன்னால் மிருதுளா உடனே சம்மதித்து விட.. “தேங்க்ஸ் அண்ணி” என்றவள்.. ​”சரி இருங்க, நான் அம்மாகிட்ட சொல்லிட்டு வரேன்” என்று சம்யுக்தா உற்சாகமாக ஓட, அவளது துள்ளலான ஓட்டத்தைக் கண்டு மிருதுளாவின் இதழ்களில் ஒரு புன்னகை மலர்ந்தது…

மிருதுளாவிற்குச் சம்யுக்தாவின் இந்த மறுபக்கம் ஆச்சரியமாக இருந்தது, இவ்வளவு கலகலப்பாக இருக்கும் பெண்ணிற்குள் இப்படி ஒரு காதல் ரகசியம் ஒளிந்திருக்கும் என்று அவள் நினைக்கவே இல்லை. அதைவிட ஆச்சரியம், அந்த முரட்டு ரன்வீர் தன் தங்கையின் காதலுக்குத் துணையாக நிற்பதுதான். ‘தங்கையின் காதலுக்குப் பச்சைக்கொடி காட்டும் அவனா, தாத்தாவை கொன்று என்வாழ்க்கையை இப்படிச் சிதைத்தான்?’ என்ற கேள்வியும் ஒரு கணம் மின்னலாக வந்து போனது…

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!