ஊனாகி உயிராகினாய் பெண்ணே – 23
அத்தியாயம் – 23
அடுத்த நாள் காலை, ஜன்னல் திரைச்சீலைகளின் இடுக்குகளின் வழியே ஊடுருவிய சூரிய ஒளியின் மெல்லிய வெளிச்சம் பட்டு மெல்லக் கண்விழித்தாள் மிருதுளா…
ஒரு நிமிடம் தான் எங்கே இருக்கிறோம் என்பது புரியாமல் திகைத்தவளுக்கு, அறையின் அந்த பிரம்மாண்டமும், கழுத்தில் பாரமாய் ஏறியிருந்த அந்தத் தாலியும் நேற்றைய கசப்பான சம்பவங்களை நினைவூட்டிட, வருத்தமான ஒரு பெருமூச்சை வெளியிட்டவாரு எழுந்து அமர்ந்தவளுக்குத் தலை பாரமாக இருந்தது, அழுது அழுது கண்கள் வீங்கிப் போயிருந்தன…
Advertisement
நேற்று இரவு நடந்தவை ஒவ்வொன்றாக அவள் மனக்கண்ணில் நிழலாடின, ரன்வீரின் அதிகாரப் பேச்சு, அவன் மீது தான் வீசிய அந்த அலங்காரப் பொருள், அவன் நெற்றியில் இருந்து பீறிட்ட ரத்தம்… நினைக்க நினைக்க அவளுக்குள் ஒருவித நடுக்கம் ஏற்பட்டது…
’அவருக்கு காயம் ரொம்ப அதிகமா இருந்ததே… இப்போ எப்படி இருக்கோ’ என்ற கேள்வி அவள் மனதில் மின்னலாய் வந்து போனஅடுத்த கணமே, ‘ஏன் அவனைப் பற்றிக் கவலைப்படுகிறாய் மிருதுளா? அவன் உன் தாத்தாவைக் கொன்றவன்! அவன் ரத்தம் சிந்துவது அவனுக்குத் தேவையான தண்டனைதான்’ என்று அவளது அறிவு அவளை எச்சரித்தது. ஆனாலும், அடிமனதில் எங்கோ ஒரு மூலையில் அவனுக்காக ஒரு மெல்லிய தவிப்பு இருப்பதை அவளால் மறுக்க முடியவில்லை…
படுக்கையை விட்டு எழுந்தவள், அங்கிருந்த நிலை கண்ணாடியின் முன்பு வந்து நின்றாள், கண்ணாடியில் தெரிந்த தன் உருவத்தைப் பார்த்தவளுக்குத் தன் மேலேயே ஒரு கணம் எரிச்சல் வந்தது. கலைந்த கூந்தல், அழுது வீங்கிய கண்கள் என நேற்றைய போராட்டத்தின் சுவடுகள் முகத்தில் அப்படியே தெரிந்தன…
Advertisement
கழுத்தில் மின்னிய அந்தப் புதுத் தாலியைத் தொட்டுப் பார்த்தாள், ஒரு காலத்தில் இது அவள் கண்ட கனவு, ஆனால் இப்போது அதுவே அவளுக்கு ஒரு விலங்காகத் தோன்றிட, இப்போதும் அவளிடமிருந்து பெருமூச்சு மட்டுமே வெளிவந்தது,…
Advertisement
குளித்து வந்தால் உடல் சோர்வாவது கொஞ்சம் குறையும் என்ற எண்ணத்தில், அந்த அலமாரியில் இருந்த ஒரு சுடிதாரை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் நுழைந்து கொண்டாள். குளித்து வந்தவளுக்கு உடல் சோர்வு ஓரளவிற்குக் குறைந்திருந்தாலும், மனச் சோர்வு மட்டும் குறையவே இல்லை.
ஆறுதலுக்காகப் பால்கனியின் பக்கம் வந்து நின்றாள். அங்கே கீழே இருந்த தோட்டத்தில் சில பேர் வேலை செய்து கொண்டிருந்தனர்.
கொஞ்ச நேரம் அமைதியாக அந்த இயற்கைக் காற்றில் கீழே வேடிக்கை பார்த்தபடி நின்றிருந்தவள், அறையின் கதவு தட்டும் சத்தத்தில் அறைக்குள் வந்தாள். நேற்றைய இரவு வந்த அதே பணிப்பெண் தான் இப்போதும் வந்திருந்தாள் அவளுக்கான காலை உணவோடு.
Advertisement
”டிபன் கொண்டு வந்திருக்கேன்மா,” என்று பணியுடன் சொல்லிவிட்டு அதனை அங்கிருந்த டீபாயில் வைத்தவள், நேற்றைய இரவு அவள் வைத்துவிட்டுப் போன உணவு அப்படியே இருப்பதை கவனித்தாள், அது சாப்பிடாததால் கெட்டுப் போய் இருப்பதை கண்டு, “நைட் சாப்பிடலையாம்மா?” என்று கவலையுடன் வினவிட,. ”பசிக்கல,” என்றாள் மிருதுளா ஒரே வார்த்தையில்…
அந்தப் பெண் வேறு எதுவும் கேட்கவில்லை, கெட்டுப்போன சாப்பாட்டை எடுத்துக்கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டாள், மிருதுளாவிற்கு இப்போதும் சாப்பாட்டைச் சாப்பிடும் மனநிலை இல்லை, வயிறு பசித்தாலும் அவளது பிடிவாதம் அதனை உண்ண விடவில்லை…
படுக்கையில் ஒருவித எரிச்சலுடன் அமர்ந்தாள், அவன் தன்னை ஜெயிலில் அடைத்து வைத்திருப்பது போன்ற ஒரு உணர்வு தான் அவளுக்குள், இந்த தனிமையும், அவன் கட்டிப்போட்டிருக்கும் இந்தச் சூழ்நிலையும் அவளைப் பைத்தியம் பிடிக்க வைப்பது போல் இருந்தது…
‘எவ்வளவு நேரம் தான் இப்படியே இருக்கிறது? இதுக்கு மேல இங்க இருந்தா பைத்தியம் பிடிச்சாலும் பிடிச்சிடும்’ என்ற எண்ணம் மேலோங்க, அந்த அறையை விட்டு வெளியே வந்தாள் மிருதுளா…
வெளியே வந்தவளுக்கு அந்த இடத்தின் பிரம்மாண்டம் திகைப்பைத் தந்தது, விசாலமான வரவேற்பறையைத் தாண்டி, கீழே இறங்கும் அகலமான படிக்கட்டுகள் தெரிந்தன, மெல்லத் தயக்கத்துடன் அவள் ஒவ்வொரு படியாக இறங்க, கீழே பல பேச்சுச் சத்தங்கள் கேட்பது அவளது கவனத்தை ஈர்த்தது. அந்தச் சத்தங்கள் அவளுக்குள் ஒருவித அச்சத்தையும் அதே சமயம் ஆர்வத்தையும் தூண்டின…
தயங்கித் தயங்கி அவள் கடைசிப் படியை எட்டிப் பார்த்தபோது, அந்த வீட்டின் விசாலமான ஹாலில் இருந்த சோபாவில் நான்கு பேர் அமர்ந்திருப்பதைக் கண்டு அடுத்த அடி எடுத்து வைக்காமல் அப்படியே நின்றுவிட்டாள்..
அங்கே கிட்ட தட்ட ஐம்பத்தி ஐந்து வயதை நெருங்கிய ஒரு கம்பீரமான பெண்மணியும், அவரை விடச் சற்றே வயது குறைந்த இன்னொரு பெண்மணியும் அமர்ந்து ஏதோ பேசிக்கொண்டிருந்தனர், அவர்கள் மட்டும் அல்லாது, சுமார் 22 வயது நிரம்பிய ஓர் இளம் பெண்ணும், 19 வயது மதிக்கத்தக்க ஓர் இளைஞனும் ஏதோ ஒரு விஷயத்திற்காகச் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தனர்…
இளையவர்கள் இருவரும் உற்சாகமாகப் பேசிக்கொண்டிருக்க, அவர்கள் இருவரையும் அந்த முதிய பெண்கள் இருவரும் வாஞ்சையுடனும் புன்னகையுடனும் பார்த்துக் கொண்டிருக்க, ஒரு அழகான குடும்பப் பின்னணி அங்கே தெரிந்தது…
இத்தனை நேரம் ரன்வீரை ஒரு தனிப்பட்ட கடத்தல்காரன் போலவும், இந்த இடத்தை ஒரு சிறைச்சாலையைப் போலவும் நினைத்துக் கொண்டிருந்த மிருதுளாவிற்கு, இவர்களைப் பார்த்ததும் ஒரு கணம் ஆச்சரியமாக இருந்தது, ரன்வீருக்கு ஒரு அழகான குடும்பம் இருப்பதை அவள் ஏற்கனவே அறிவாள், அவன் தான் முன்பே சொல்லி இருக்கிறானே! நேற்று ரன்வீர் அங்கிருந்து கிளம்பும் போது கூட, ‘என் குடும்பத்துடன் உன் விருப்பம் இருந்தால் நீ பேசலாம், அவர்கள் நிச்சயம் உனக்கு ஆதரவாக இருப்பார்கள்’ என்று கூறிச் சென்றதும் இப்போது அவளுக்கு நினைவில் வந்தது, வன்முறையும் ஆத்திரமும் நிறைந்த ரன்வீரின் இன்னொரு முகத்தை பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு, இந்த மனிதர்களைப் பார்த்த கணம் மனதில் ஏனோ ஒருவித அமைதி வந்தது.
மிருதுளா ஓரிரு நிமிடங்கள் அந்தப் படிக்கட்டிலேயே நின்றிருக்க, அவளை முதலில் கவனித்தது அந்த இளம் பெண் தான்…
”அண்ணி!” என்று அவள் உற்சாகமாக அழைக்க, அங்கிருந்த அனைவரின் பார்வையும் அந்தப் பெண்ணின் பார்வையைத் தொடர்ந்து மிருதுளாவின் மீது வந்து நிலைத்தது…
வேகமாக ஓடிவந்து மிருதுளாவின் அருகில் வந்த அந்தப் பெண், அவளது கைகளைப் பற்றிக்கொண்டு, “ஏன் அண்ணி இங்கேயே நிக்கிறீங்க? வாங்க…” என்று மிகுந்த உரிமையுடன் மற்றவர்களிடம் அழைத்துச் சென்றாள், இது வரை அவர்களை சந்தித்ததே இல்லை என்பதால், மிருதுளா ஒருவித சங்கடத்துடனும் தயக்கத்துடனும் அவளுடன் நடந்தாள்…
சோபாவில் அமர்ந்திருந்த அந்தப் பெரியவர் இருவரும் அவளைப் பார்த்து கனிவாய் புன்னகைத்தனர், அந்தப் பார்வையில் ஒரு தாய்க்கே உரிய வாஞ்சை இருப்பதை மிருதுளாவால் உணர முடிந்தது…
அந்த இளைஞனோ, “ஹாய் அண்ணி, ஐம் வினோத்!” என்றவாறு உற்சாகமாகத் தன் கையை நீட்ட, அவளோ பதில் சொல்ல முடியாமல் தயக்கத்துடன் நின்றாள். தன் வாழ்வின் மிகக்கசப்பான ஒரு சூழலில், ஒரு கொலையாளியின் வீட்டில் தான் இருப்பதாக அவள் நினைத்துக் கொண்டிருந்த நிலையில், இந்த இயல்பான வரவேற்பு அவளுக்குள் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது…
”இவன் சரியான வாலு அண்ணி, இவன் பேச்சையெல்லாம் கண்டுக்காதீங்க!” அவளை அழைத்து வந்த அந்த இளம்பெண் சிரித்துக்கொண்டே சொன்னவள்,
“நான் சம்யுக்தா, ரன்வீர் அண்ணாவோட தங்கை, இவங்க எங்க அம்மா காயத்ரி, இவங்க எங்க சித்தி சுமதி, நேத்து நீங்க ரொம்ப டயர்டா இருந்ததால நாங்க தொந்தரவு பண்ணல,” என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள் அவள்…
மிருதுளாவின் மௌனத்தையும், வாடியிருக்கும் முகத்தையும் கவனித்த ரன்வீரின் அம்மா காயத்ரி, அவளது கைகளை மென்மையாகப் பற்றிக்கொண்டு… “மனசுக்குள்ள நிறைய வருத்தத்தோட இருக்கேன்னு புரியுதுமா, ரன்வீர் ரொம்ப பிடிவாதக்காரன் தான், ஆனா அவன் செய்யுறதுக்கு பின்னாடி ஒரு நியாயம் இருக்கும், கொஞ்ச நாள் போனா உனக்கே எல்லாம் புரியும்,” என்று மெல்லிய குரலில் ஆறுதல் சொல்ல,.. மிருதுளாவிற்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை, மௌனமாகவே நின்றாள்,..
அப்போது சுமதி குறுக்கிட்டு, “அதையெல்லாம் விடுங்கக்கா, நம்ம வீட்டு மருமகளை முதல்ல பூஜை அறைக்கு அழைச்சிட்டு போய் செய்ய வேண்டியதை செய்ய வைக்கலாம். அதுதானே முறை,” என்று சொல்ல,.. ”அதுவும் சரிதான்,” என்று ஆமோதித்த காயத்ரி, “வாமா…” என்று கனிவோடு மிருதுளாவை பூஜை அறைக்கு அழைத்துச் சென்றார்… அவர்களைப் பின் தொடர்ந்து வினோத்தும் சம்யுக்தாவும் ஆர்வத்துடன் சென்றனர்…
அந்தப் பிரம்மாண்டமான் வீட்டின் ஒரு பகுதியில் அமைந்திருந்த அந்தப் பூஜை அறை, தெய்வீக மணத்துடனும் அமைதியுடனும் இருந்தது, அங்கே எரியும் தீபத்தின் ஒளியில், அந்த இடமே ஒரு மங்கலமான தோற்றத்தைத் தந்தது. ஆனால், அந்த மங்கலமான சூழலிலும் மிருதுளாவின் மனதில் மட்டும் இருள் சூழ்ந்திருந்தது…
’ஒரு கொலைகாரனின் வீட்டில், நான் எப்படி விளக்கேற்றுவேன்?’ என்ற கேள்வி அவளைத் துளைத்தெடுத்தாலும் வேறு வழியின்றி அந்த பெரியவர்களின் சொல்லைத் தட்ட முடியாமல் மௌனமாகப் பின் தொடர்ந்தாள், அவர்கள் காட்டும் இந்த அதிகப்படியான அன்பு அவளுக்கு ஒருவித சங்கடத்தை தந்தாலும் மிகவும் பிடித்தும் இருந்தது…
பூஜை அறைக்கு வந்ததும், ஒரு நெய் தீபத்தை ஏற்றி மிருதுளாவின் கையில் கொடுத்த காயத்ரி.. “இந்த வீட்டு மகாலட்சுமியா நீதான் முதல்ல இந்த தீபத்தை ஏத்தி வைக்கணும்,” என்று சொல்ல, மிருதுளா நடுங்கும் கரங்களுடன் அந்தத் தீபத்தைப் பெற்றுக்கொண்டு, அவர் கூறியதைச் செய்து முடித்தாள், அந்தப் பெரியவர்களின் கனிவான பேச்சிற்கு முன்னால் அவளுக்கு இதையெல்லாம் மறுக்கத் தோன்றவில்லை…
அதன்பின் காயத்ரி அவளிடம் குங்குமச் சிமிழை நீட்டி, “கல்யாணமான பொண்ணு நெத்தில குங்குமம் இல்லாம இருக்கக் கூடாதுமா” என்று மென்மையாகச் சொல்ல, மிருதுளா ஒரு கணம் தயங்கினாள், ரன்வீர் கட்டிய தாலியைச் சுமப்பதே அவளுக்கு பாரமாக இருக்கும் நிலையில் இப்போது அவன் பெயரால் குங்குமம் வைப்பதா? ஆனால், காயத்ரியின் எதிர்பார்ப்பு நிறைந்த கண்களைப் பார்த்தவளால் ‘வேண்டாம்’ என்று சொல்ல முடியவில்லை…
மெல்ல விரலால் குங்குமத்தை எடுத்துத் தன் நெற்றி வகிட்டில் அவள் வைத்துக் கொள்ள, அதைக் கண்டு பெரியவர்கள் இருவரும் நிறைவாகப் புன்னகைத்தனர், சம்யுக்தாவும் வினோத்தும் ஒருவரையொருவர் பார்த்து மகிழ்ச்சியுடன் சிரித்துக் கொண்டனர்…
”இப்பதான்மா நீ முழுசா இந்த வீட்டுப் பொண்ணாத் தெரியுற… அப்படியே அந்த மகாலட்சுமி மாதிரியே இருக்க,” என்று சுமதி அவள் முகத்தை வழித்து திருஷ்டி கழிக்க, அந்த கணம் அவளுக்கு அவள் தாயின் நினைவு வந்து விழிகள் கலங்கி போனது,.
