Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

21. சுபகீதா - ஆகாயமே என் ஆதாரமே

ஆகாயம் 1

ஆகாயமே என் ஆதாரமே

ஆகாயம் 1

வருஷம் 1986:



Advertisement

வீடே விழாக்கோலம் பூண்டிருந்தது. வீட்டின் முதியவர்கள் விழாவுக்கான ஏற்பாடுகளை இங்குமங்குமாக சுற்றி சுழன்று செய்து கொண்டிருக்க, சிறு பெண் குழந்தைகள் பாவாடை சட்டை ,நீளமாக பின்னல், அதில் வழிந்து கீழே வரும் மல்லிகை சரம் ,இலையில் அரைத்து கையில் வட்ட வடிவத்திலும் ,விரல்களில் தொப்பியாகவும் வைத்து சிவந்திருந்த மருதாணி சகிதம் வீடு முழுவதும் ஓடி விளையாடிக் கொண்டிருக்க ,அங்கே வந்திருக்கும் ஆண் குழந்தைகளோ சுலபமான ஒரு அரை நிஜார், கடையில் மூன்று மாதங்களுக்கு முன்னர் வந்த தீபாவளிக்காக கொடுத்து தைக்கப்பட்ட ஷர்ட் அணிந்து கொண்டு வந்திருக்கும் எல்லா ஆண் குழந்தைகளுமாக ஒரு குழு அமைத்து வெளியே கிரிக்கெட் விளையாட சென்று விட்டார்கள். அது ஒரு அபார்ட்மெண்ட் வகை குடியிருப்பு என்பதால் குழந்தைகளுக்கு பஞ்சம் கிடையாது.சிலர் வீட்டில் மூன்று குழந்தைகள் கூட உண்டு.

சென்னையில் அடுக்ககங்கள் 1967லேயே வந்திருந்தாலும் அவ்வளவாக கட்டப் படாத காலம் அது.பெரும்பாலும் மக்கள் தனி வீடு அமைப்பையே விரும்பினார்கள். சிலர் அடுக்ககங்களில் வீடு வாங்குவதோ,அதில் வாடகைக்கு குடி செல்வதோ உண்டுதான்.

Advertisement

Advertisement

இன்னமும் இப்போது இருக்கும் நாகரீக வாழ்வுக்கு மக்கள் தயாராகவில்லை.நாடு வளர்ந்த நாடுகள் வரிசையில் வளர்ந்து வர போராடிக் கொண்டிருந்த காலம் அது. எல்லார் வீட்டிலும் தொலைபேசி, தொலைக்காட்சி, குளிர்சாதன பெட்டி ,குளிரூட்டி இவையெல்லாம் இருந்தது இல்லை.

பிரிட்டிஷ் கால ஆட்சியின் தாக்கமோ என்னவோ, வீட்டின் சிறு குருத்து முதல் வயதானவர்கள் வரை ரேடியோவை ஒலிக்கவிட்டு கிரிக்கெட் கமெண்ட்டரி கேட்பதை ஒரு சாங்கியமாகவே வைத்திருந்தார்கள். இந்த விழா நடக்கும் சமயத்தில் எதுவும் டெஸ்ட் மாட்ச் இல்லை போலும். கிரிக்கெட் பற்றிய பேச்சுக்கள் மட்டும் தாழ்வாரத்தில் ஒலித்து கொண்டிருந்தது.

Advertisement

வீட்டின் பெண்களுக்கு கிரிக்கெட் பிடிக்கும், ஸ்ரீகாந்த், கபிலதேவ் மீது பிடித்தம் இருந்தாலும் ஹாலில் ஒலிக்கும் கமண்ட்டோரியை அரைகுறையாக கேட்டுக்கொண்டே அடுப்பங்கரையில் நாற்பது தோசைகள் வார்த்தாக வேண்டும்.இதோ இன்றைக்கு கூட விழா வீட்டின் ஆண்கள் வேலை செய்து கொண்டிருக்க,மற்ற ஆண்கள் அரட்டை கச்சேரி செய்து கொண்டிருந்தார்கள்.

வீட்டுப்பெண்களோ,விருந்தாளி பெண்களோ எங்கே சென்றாலும் அவர்களுக்கு வேலை காத்துகொண்டு தான் இருக்கும். என்ன.. இங்கிருக்கும் பெண்களுடன் பேசிக்கொண்டே செய்ய முடியும். பெண்கள் நிறையபேர் வேலைக்கு செல்ல தொடங்கி இருந்தாலும் அவர்களுக்கும் தங்களது வேலை அதில் உயர் நிலைமை, என்பதெல்லாம் விட வேலையின் மூலம் வரும் சம்பளம், குடும்பம்,அதன் தேவை,மாத செலவு, கணவன் மனைவி இருவரும் சேர்ந்து சம்பளம் வாங்கியும் துண்டு விழும் பட்ஜெட், வீட்டின் குழந்தைகள்,பெரியவர்கள்,நாத்தனார் திருமணம்,அதற்க்கு வாங்கிய கடன், சில பேருக்கு வீடு கட்ட வாங்கிய கடன்,சிலருக்கு சொந்த வீடு எனும் கனவு இதுதான் உலகம்.

இதோ விழா ஆரம்பிக்கும் நேரம் ஆகி விட்டது.வாருங்கள் என்ன நடக்கிறது என்று உள்ளே சென்று பார்ப்போம் .

ஹா… நல்ல மணம். சாப்பிடு உள்ளே வந்து இறங்கி இருந்தது. இங்கே செய்ய இடம் இல்லை என்பதால் இரண்டு வீடுகள் தள்ளி இருக்கும் நாத்தனார் வீடு புழக்கடையில் விறகு அடுப்பு வைத்து சமையல் தயாராகி இருத்தது. சிறிய விழா தான்.வீட்டில் பிறந்திருக்கும் இரண்டாவது குழந்தைக்கு முதல் வருஷ பிறந்தநாள் கொண்டாட்டம்.(ஆயுசு ஹோமம்)

அது முடிந்த உடனே சாப்பாடு தான். அதனால் கங்காளங்களை அங்கிருந்து கொஞ்சம் இங்கே எடுத்து இறக்கி இருந்தார்கள். அதன் மணம் தான். வீட்டில் அய்யரை கூப்பிட்டு பூஜைகள் செய்து கொண்டிருந்தார்கள்.

இவர்கள் வீட்டை பற்றி தெரிந்து கொள்வோமே!

வீட்டுத்தலைவர் கிருஷ்ணா. சி ஏ இன்னமும் பாஸ் செய்யவில்லை.இன்டெர் வரை முடித்திருக்கிறார். ஒரு தனியார் ஆடிட்டிங் நிறுவனத்தில் வேலை. சி ஏ இறுதித் தேர்வுகளுக்காக படித்துக் கொண்டு இருக்கிறார். பிள்ளை அதிகமாக படிக்கிறான்.அவனுக்கு ஒரு துணை தேவை என்று திருமணம் செய்து வைத்து விட்டார்கள்.திருமணத்தின் பொழுது அவரது வயது இருபத்து எடடு . அவரது சகதர்மணி raadha . கிருஷ்ணாவின் சொந்த அத்தை மகள் . அவளுக்கு திருமணம் ஆகும் பொழுது வயது இருபத்து ஏழு. பிள்ளை சி ஏ முடிக்க எவ்வளவு காலம் ஆகும் என்று தெரியாது என்பதால் வீட்டுப் பெரியவர்கள் திருமணம் செய்து வைத்து விட்டார்கள். ராதையின் அண்ணனை தான் கிருஸ்ணாவின் தங்கை திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.

ராதா பிறந்த வீட்டில் சொத்து அதிகம். ராதாவின் உடன் பிறந்தவர்கள் மொத்தம் ஆறு பேர். நாத்தனார் வீடு என்று சொன்னது உண்மையில் ராதாவின் அப்பா வீடு. இதோ இப்போது சாப்பாடு தயாராகி வந்ததும் அங்கிருந்து தான்.

கிருஷ்ணாவின் அப்பா வீட்டில் இவர்கள் அளவுக்கு வசதி இல்லை.பூர்வீகம் திருநெல்வேலி .அங்கே ஒரு வீடும் கொஞ்சம் நிலங்களும் உண்டு. கிருஷ்ணாவின் பெற்றவர்கள் இன்னமும் அங்கே தான் இருக்கிறார்கள். பெண் கொடுத்து பெண் எடுக்கலாம் என்ற பேச்சில் கிருஷ்ணாவுக்கு அவரது தங்கைக்கும் திருமணம் முடிந்திருந்தது.கிருஷ்ணாவின் இன்னொரு தங்கை திருமணம் முடிந்து தில்லியில் தில்லியில் இருக்கிறார்.அவரது கணவர் ஒரு வழக்கறிஞர். நல்ல வசதியான குடும்பம்.அங்கேயே இரண்டு வீடுகள் இருக்கிறது. அவர்கள் இப்போது இங்கே

விழாவுக்கு வரவில்லை.

இதோ இப்போது ராதா கிருஷ்ணாவின் குடும்பம் நடப்பது ராதாவுக்கு சீதனமாக அவளது அப்பா தங்கள் வீட்டின் அருகில் கட்டிக்கொண்டிருந்த அடுக்ககத்தில் வாங்கி கொடுத்தது தான் ஆயிரம் சதுர அடிகள் இருக்கலாம். கச்சிதமான கட்டிட அமைப்பு என்பதால் வீடு விஸ்தாரமாக இருக்கும். மொத்தம் நான்கே வீடுகள் தான் அந்த அடுக்ககத்தில். இவர்களது கீழ் தளம்.

விழா ஆரம்பித்து விட்டது. ராதா கிருஷநா தம்பதிக்கு இரு பெண் குழந்தைகள் மூத்தவளுக்கும் இரண்டாவது குழந்தைக்கும் மூன்று வருஷ இடைவெளி. விழாவுக்கு வந்திருந்த நிறைய பேர் கேட்டது,”ரெண்டாவதும் பொண்ணா .. இதுவாவது பையனா பொறந்திருக்கலாம்” என்ற அங்கலாய்ப்பை பொதுவாக கேட்க முடிந்தது. ராதாவுக்கு அவ்வளவு கோவம். பொறந்த குழந்தையை ஆசிர்வாதம் செய்ய சொன்னா.. இங்கே வந்து வம்பு பேசிட்டு…இதென்ன ,விவஸ்தை இல்லாம! என்று மனதுக்குள் ராதைக்குள் ஆயிரம் எண்ணங்கள்,கோவங்கள். சரியான வார்த்தை மன வருத்தம்.வெளியே வாய்விட்டு சொல்லிவிட முடியாது.

ஒருவழியாக விழா நல்ல படியாக முடிந்தது. சிறிய குழந்தை சீதா அவ்வளவு அழகு. பார்க்க பொம்மை போல,சிவந்த நிறத்தில்.வாயில் ஆறு பற்கள் முளைத்திருந்தது. ராதா இன்னமும் தாய்ப்பாலை நிறுத்தவில்லை. அதனாலோ என்னவோ சீதா நல்ல செழுமையாக இருந்தாள் . குட்டி பாட்டுபாவாடை .தலையில் தென்னை மரக்குடுமி போட்டு பூ சுற்றி விட்டிருந்தார்கள்.

பெரிய குழந்தை ஜானகி. இப்போது நான்கு வயது ஆகிறது .இன்னமும் பள்ளிக்கு செல்ல ஆரம்பிக்கவில்லை. அவளும் பட்டு பாவாடை சட்டைதான் அணிந்தித்திருந்தாள் . சிறியவள் அளவுக்கு சிவந்த நிறமோ, வசீகரிக்கும் அழகோ இல்லை. கொஞ்சம் கருப்பு என்று கூட சொல்லலாம்,(இந்த வரிகள் கதையின் போக்கை சொல்வதற்கு மட்டும்.தனி மனித வருணிப்போ,உருவ கேலிக்கோ சொல்லவில்லை.அந்த காலகட்டத்தின் மன நிலை ..மன்னிக்க ) அவளை பெரியதாக யாரும் கொஞ்சவெல்லாம் இல்லை.

நடப்பவற்றை பார்த்துக் கொண்டு அவள் ஒரு மூலையில் நின்று கொண்டிருந்தாள். அவளது பாட்டி வந்து அவளை சாப்பிட அழைத்து சென்றாள் . ராதாவுக்கும் கிருஷ்ணாவுக்கும் வந்திருந்த விருந்தினர்களை கவனித்து அவர்களை சாப்பிட வைத்து ,தாம்பூலம் கொடுத்து அனுப்பவே மதியம் மூன்று மணி ஆகியிருந்தது. அதற்குப் பிறகு இருவருக்குமே சாப்பிடவே பிடிக்கவில்லை. வயிறு மந்தம் தட்டிப் போயிருந்தது.

வேறு வழி இல்லாமல் வெறும் ரசம் போட்டு இருவரும் சாப்பிட்டார்கள்.தயிர் சாதம் கலந்து வைத்திருந்தார்கள்.அதிலிருந்து ஆளுக்கு கொஞ்சம் கொறித்துவிட்டு அறைக்குள் சென்று படுத்து விட்டார்கள். இருவருக்கும் இடுப்பு விட்டுப் போய் விடும் அளவுக்கு வலித்தது. தூக்கம் வேறு சுழட்டி அடிக்க தூங்கி போனார்கள்.

குழந்தைகள் இருவரையும் இருபக்க பாட்டி தாத்தாவுமாக விழா முடியவும் சாப்பிட வைத்து தூங்கவும் வைத்து விட்டார்கள். காலையில் இருந்த கூட்டம் இப்போது வீட்டில் இல்லை.வீடே அமைதியாக இருந்தது.”இன்னும் ரெண்டு நாளைக்கு இந்த அலுப்பு தீராது. நாமளே பார்த்து பார்த்து செய்யுறது ..அப்பா…. ஏதாவது ஏஜென்சி மாதிரி வந்து எல்லா விஷயத்தையும் அவங்களே பார்த்து செய்வாங்க.நாம போய் நின்னாலே போதும்னு வந்தா எவ்ளோ நல்லா இருக்கும் “என்றார் தூக்க கலக்கத்தில். அதை ஆமோதிப்பதா..வேண்டாமா..என்ற சந்தேகத்தில் உறங்கிப் போனாள் ராதா.

அடுத்த இரண்டு நாட்களுக்கு வீட்டை ஒழுங்கு படுத்துவதிலேயே நேரம் கழிந்தது. மூன்றாவது நாள் காலை கிருஷ்ணன் அலுவலகம் கிளம்பிவிட்டார். ராதா வீட்டு வேலைகளில் மூழ்கிப் போனாள் .அவளுக்கும் வேலைக்குப் போக வேண்டும் என்றுதான் இருக்கிறது.ஆனால் ,குழந்தைகளை பார்த்துக்கொள்ள யாரும் இல்லை.

யாரும் இல்லை என்றால்… அம்மாவும் அப்பாவும் அண்ணனின் வீட்டில் தான் இருக்கிறார்கள்.மற்ற உடன் பிறந்தவர்கள் எல்லாரும் வெளி மாநிலங்களில் இருக்க நாத்தனாரை திருமணம் செய்திருக்கும் அண்ணனின் குடும்பம் மட்டும் இங்கே இருக்கிறார்கள். அவர்களுடன் ராதாவின் பெற்றவர்கள்.

உண்மையில் ராதாவுக்கு தனது மாமனும் மாமியும் இப்போது மாமனார் மாமியாராய் தெரிவதால் அவர்களை தங்களுடன் வைத்துக்கொள்ள முடியாது,கூடாது,அதற்க்கு அனுமதிக்க மாட்டேன் என்று கணவனிடம் தீர்மானமாக சொல்லி விட்டாள் .அதில் நாத்தனார் சுதாவுக்கு கோவம். அவள் மாமனார் மாமியாரை வெளியே எல்லாம் போக சொல்லவில்லை.ஆனால் ,அவள் அனுமதி இல்லாமல் அங்கே எதுவும் செய்ய முடியாது.அவள் ஒரு ரயில்வே டிபார்ட்மென்ட்டில் வேறு வேலை செய்வதால் “அவர்களுடைய குழந்தைகளை பார்த்துக்கொள்ளவே கஷ்டமாக இருக்கு. இதுல உன்னோட பொண்ணுகளை வேறேயா..கண்டிப்பா முடியாது ” என்றுவிட்டார்கள் ராதாவின் பெற்றவர்கள்.

உண்மையில் தங்கள் அண்ணன் -அண்ணியை மகள் வைத்துக்கொள்ள முடியாது என்று சொன்னதில் ராதையின் பெற்றவர்களுக்கு மன வருத்தம் உண்டு.வெளியே சொல்லிக் கொள்ளவில்லை.ஆனாலும் , அவர்களுக்கு மனம் ஆறவில்லை. என்ன இது கொஞ்சமும் மனிதாபிமானம் இல்லாமல் என்று தான் பெரியவர்களுக்கு.அதன் பிரதிபலிப்புதான் , “குழந்தைகளை பார்த்துக்கொள்ள முடியாது” என்று மறுத்தது.

ராதா நொடித்துக் கொண்டாள் .அவளும் எவ்வளவோ சண்டை போட்டு பார்த்தாகிவிட்டது.”உன்னோட மருமக மட்டும் வெளியே வேலைக்கு போகணும்.பிள்ளை பணம் வைக்க இடமெல்லாம் சேக்கணும் .ஏற்கனவே நீங்க சேர்த்து வச்சிருக்குறது போதாது.நான் மட்டும் கஷ்டப் படணும் .கல்யாணம் செஞ்சு வைச்சீங்களே அவர் இப்போதைக்கு சி ஏ முடிக்க மாட்டாரு.என்னோட குழந்தைகளை நா மட்டும் நல்லா வளர்க்க வேணாவா ..”

பெற்றவர்களின் ஒரே பதில்,”எங்களோட மருமக எங்களை வீட்டுல நல்லா வச்சிருக்கா. என்னோட பையனும் மருமகளும் எங்க ரெண்டு பேரையும் நல்லவிதமா பார்த்துக்கறாங்க. அதனால நாங்க அவங்களுக்கு சின்ன உதவியா பசங்களை பார்த்துக்கறோம்.உனக்கு வேணுமா ..உன்னோட மாமியார் மாமனாரை கூட்டிட்டு வந்து வச்சிக்கோ.அவங்க பார்த்துப்பாங்கன்னா வேலைக்கு போ.உன்னோட குடும்ப பிரச்சனை.”என்றுவிட்டார்கள்.

ராதாவுக்கு பெற்றவர்களிடம் அவ்வளவு கோவம் .ஆனால் ,அவர்ளிடம் போராடுவது வீண் என்று முடிவு செய்துவிட்டாள் .ஆனாலும் மாமியார் மாமனாரை வீட்டுக்கு அழைத்து வைத்துக்கொள்ளும் எண்ணம் மட்டும் இல்லை. வீட்டுக்கு அருகில் இருக்கும் ஒரு பள்ளியில் மூத்தவள் ஜானகியை எல் கே ஜி சேர்த்து விட்டார்கள் கிருஷ்ணன் ராதா தம்பதி. ஜானகி பார்ப்பதற்கு தன்னை போலவே இருப்பதால் கிருஷ்ணனுக்கு தன் மூத்த மகள் மீது பிரியம் அதிகம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!