Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

57.கார்த்திகா கார்த்திகேயன்-தேவனுக்கேற்ற தேவியோ

அத்தியாயம் 2.2_தேவனுக்கேற்ற தேவியோ_கார்த்திகா கார்த்திகேயன்

அனைவரிடமும் சாதாரணமாக பேசினாலும் அவன் முகத்தில் கண்ணுக்கே தெரியாத ஒரு சோகமும் வலியும் இருந்து கொண்டே இருக்கும். ஆனாலும் அலுவலக வேலையை சரியாக செய்வான்.

 

அலுவலகத்திற்குள் உள்ளே வந்தவனுக்கு ஒரு அழைப்பு வர போனை எடுத்து காதில் வைத்தான்.

 



Advertisement

“ஹலோ யாருங்க?”

 

“ஹலோ சார், நான் உணவு துறைல இருந்து கால் பண்ணுறேன். உங்க மசாலா தொழிற்சாலைக்கு இன்னைக்கு ரெய்டு வாராங்கலாம் சார்? அங்க கலப்படம் அதிகமா நடக்குறதா அங்க இருக்குற யாரோ கால் பண்ணி புகார் பண்ணிருக்காங்க. உங்க அப்பா தான் என் மகனுக்கு வேலை வாங்கிக் கொடுத்தது. அந்த விசுவாசத்தில் தான் சொல்றேன் சார். நான் வைக்கிறேன். கொஞ்சம் கவனமா இருங்க”, என்று சொல்லி போனை வைத்து விட்டார்.

Advertisement

 

Advertisement

அதைக் கேட்டு அவசரமாக வெளியே வந்தவன் இப்போது தான் பார்க் செய்து விட்டு போன காரை எடுத்துக் கொண்டு தொழிற்சாலை நோக்கிச் சென்றான்.

 

அவன் அங்கே போய் பார்த்த போது உண்மையிலே கலப்படம் அதிகமாக தான் இருந்தது. அதைக் கண்டு கொதித்துப் போனவன் அவசரமாக சாணக்கியனை தான் அழைத்தான்.

Advertisement

 

அதை எடுத்தவன் “சொல்லு டா தம்பி”, என்று சொல்ல “தம்பி அது இதுன்னு சொன்ன செருப்பு பிஞ்சிரும். இந்த ஃபேக்டரில என்ன பண்ணி வச்சிருக்க நீ?”, என்று கேட்டவனின் குரலில் கோபம் கொந்தளித்தது.

 

“நான் என்ன டா செஞ்சேன்?”

 

“என்ன செஞ்சியா? நீ லாபம் பாக்குறதுக்கு அப்பாவி மக்களோட உசுரோட விளையாடுவியா? எல்லாத்துலயும் கலப்படம் பண்ணி வச்சிருக்க? அதுவும் குழந்தைக்கு கொடுக்குற பால் மாவு டப்பால கூட? என் குழந்தை கூட அதை சாப்பிடுவா டா? ஏற்கனவே இழந்தது பத்தாதா? இன்னுமா உனக்கு ரத்த வெறி அடங்கலை? என்ன சாணக்கியா இது?”

 

“அமரா  நான் எதுவும் செய்யலை டா. அதுவும் தொழில் எல்லாம் நீ பாக்க ஆரம்பிச்ச பிறகு நான் செய்வேனா? சொல்லு”

 

“நீ செய்யலைன்னா அந்த ஆள் தான் செஞ்சிருப்பான்? ஒழுங்கா ரெண்டு பேரும் இன்னும் கொஞ்ச நேரத்துல இங்க இருக்கணும்”

 

“டேய் அப்பா டா அவர். அந்த ஆள் அது இதுன்னு பேசுற?”

 

“ஏதாவது அசிங்கமா சொல்றதுக்குள்ள வந்து சேருங்க. ரெயிடு வராங்க. இப்ப நீங்க வரலைனா உங்க ரெண்டு பேர் மேல நானே கேஸ் கொடுப்பேன்”, என்று சொல்லி விட்டு போனை வைத்தான்.

 

ஒரு நொடி தாடையை தடவிய சாணக்கியன் அடுத்த நொடி தந்தைக்கு அழைத்தான்.

 

“சொல்லு டா மூத்தவனே”, என்று கேட்டார் தருமர்.

 

“எங்க பா இருக்க?”

 

“நானா?”, அவர் கேட்க அருகில் இருந்து யாரோ ஒரு பெண்மணி “என்னங்க வாங்க”, என்று அழைப்பது மகன் காதில் கேட்டது.

 

அதைக் கேட்டு தந்தை எங்கே இருக்கிறார் என்று அறிந்தவன் “ஒரு நாள் நீ போற அந்த ஹோட்டலை நானே வெடி வைக்கிறேன் பாரு? பேக்டரில என்ன யா செஞ்சு வச்ச? சின்னவன் அந்த கத்து கத்துறான்?”, என்றான்.

 

“அவனுக்கு என்னவாம் டா? ரெண்டு பேரும் கொஞ்சமாவது என்னை நிம்மதியா இருக்க விடுறீங்களா?”

 

“என்னவா? பேக்டரிக்கு ரெய்டு வாராங்கலாம். என்னத்த செஞ்சு வச்ச?”

 

“நாமளும் லாபம் பாக்க வேண்டாமா? அதான் சின்னதா செஞ்சேன். அது பொறுக்காதே அவனுக்கு. சரி சரி இரு நான் பத்து நிமிஷத்துல கிளம்புறேன்”, என்று சொல்லி போனை வைத்தார்.

 

பத்து நிமிஷம் அவர் என்ன செய்வார் என்று அறிந்தவன் தலையில் கை வைத்து அமர்ந்து கொள்ள பேத்தியை தூக்கிய படியே கீழே வந்தார் சகுந்தலா.

 

ஏனோ அன்னையைக் கண்டு குற்ற உணர்வாக இருந்தது சாணக்கியனுக்கு. அதனால் அவன் அமைதியாக இருக்க “என்ன டா ஒரு மார்கமா முழிச்சிட்டு இருக்க?”, என்று கேட்டாள்.

 

“ஒண்ணும் இல்லையே? நீ கோர்ட்டுக்கு போகலையா மா?”

 

“பெரியப்பா இன்னைக்கு ஆச்சி லீவ் போட்டுருக்காங்க”, என்று அவந்திகா சிறு சிரிப்புடன் சொல்ல இருவரையும் கண்டு சிரித்து விட்டு அறைக்குச் சென்று கிளம்ப ஆரம்பித்தான்.

 

பின் அன்னையிடம் சொல்லி விட்டு தம்பியை தேடி தொழிற்சாலைக்குச் சென்றான். தந்தையும் சரியாக வந்து விட வேண்டுமே என்ற கவலையும் இருந்தது. தாய்க்கு அவர் துரோகம் செய்கிறார் என்று தெரிந்தே வாய் மூடிக் கொண்டிருக்கிறான். அதனால் தான் அன்னையை அவனால் நிமிர்ந்து கூட பார்க்க முடியவில்லை. ஆனால் பெற்ற தந்தையே ஆனாலும் அவனால் அவருடைய பர்சனல் விஷயங்களில் தலையிட முடியவில்லை. அவன் சொன்னாலும் கேட்டுக் கொள்ள மாட்டார் என்பது வேறு தனிக்கதை.

 

சாணக்கியன் அங்கே போன போது தருமரும் வந்து விட இருவரையும் முறைத்துப் பார்த்த அமர் அண்ணனை திட்டுவது போல தந்தையை கேள்வி கேட்க அவர் பதில் எதுவும் சொல்ல வில்லை.

 

அதற்கு பின் அங்கே இருக்கும் கலப்பட பொருள்களை எல்லாம் அப்புறப் படுத்தி முடிக்கும் போது சோதனை செய்பவர்களும் வந்து விட அதில் இருந்து மூச்சு விடுவதற்கு சரியாக ஐந்து மணி நேரம் ஆகி இருந்தது.

 

மதிய உணவு வேளைக்கு மூவரும் வீட்டுக்குச் செல்ல அனைவருக்கும் இணைப்பு பாலமாக இருக்கும் சகுந்தலா ஒரு கேஸ் விஷயமாக வெளியே சென்றிருப்பதாகவும் குழந்தையையும் அழைத்துச் சென்றிருப்பதாகவும் வேலைக்காரியிடம் இருந்து தகவல் வர மூவருக்கும் எரிச்சல் தான் வந்தது.

 

ஆனால் சற்று நேரத்தில் சகுந்தலா வீட்டுக்கு வந்து விட தருமர் “எங்க போய் தொலைஞ்ச?”, என்று கத்த ஆரம்பித்தார். “என்னோட வேலை விஷயத்துல மூக்கை நுழைக்க கூடாதுன்னு ஏற்கனவே சொல்லியிருக்கேன்னு நினைக்கிறேன். சாப்பாடு ரெடியா தானே இருக்கு? எடுத்து போட்டு சாப்பிட வேண்டியது தானே?”, என்று கேட்டவள் குழந்தைக்கு சோறு ஊட்டிக் கொண்டிருந்தாள்.

 

“எனக்கு இன்னைக்கு ஒரு முடிவு தெரியணும்”, என்றார் தருமர். அனைவரும் அவரையே பார்க்க அவந்திகா கூட தாத்தாவைப் பார்த்தாள். ஆனால் பார்க்க வேண்டியவனோ அவர் புறம் திரும்பக் கூட இல்லை.

 

“என்னப்பா? என்ன விஷயம்?”, என்று கேட்டான் சாணக்கியன்.

 

“என்ன சொல்லுவேன்னு உனக்கு தெரியாதா டா? தலைவர் மகளுக்கு இவனைக் கேக்குறார். இவன் என்ன டான்னா பதிலே சொல்ல மாட்டிக்கான். இன்னைக்கு எனக்கு தெரிஞ்சே ஆகணும்”, என்றார்.

 

“அப்பா சொல்றதையும் கேளேன் டா”, என்றான் சாணக்கியன்.

 

“உன் அப்பன் சொன்னா நீ கேளு. நான் ஏன் கேக்கணும்?”, என்று எரிச்சலுடன் கேட்டான் அமர்.

 

“டேய் அவ என்னோட மச்சினிச்சி. பொண்டாட்டி செத்ததும் அவ தங்கச்சியை கல்யாணம் பண்ணிக்கிற ஆள் நான் இல்லை. அது மட்டும் இல்லாம அப்பா கொல்ல சொன்னா கொல்லுவேன், வெட்ட சொன்னா வெட்டுவேன். ஆனா இந்த அரசியல் எல்லாம் எனக்கு சரி வராது. நாம அப்படியே ரவுடியா தான் சுத்தி வரணும்?”, என்று அசால்ட்டாக சொல்ல அவனை கடுப்புடன் பார்த்தார்கள் அன்னையும் தம்பியும்.

 

“அவனுக்கு மட்டும் கல்யாணம் ஆகலைனா உன்னை எவன் டா தொங்கிக்கிட்டு இருக்க போறான்?”, என்று நேரடியாக அமரிடமே கேட்டார் தர்மர்.

 

“ஏன்? கல்யாணம் அவனுக்கு மட்டும் தான் முடிஞ்சிருக்கா? எனக்கு கல்யாணம் ஆகலைனு யார் சொன்ன? எனக்கு கல்யாணம் முடிஞ்சி இதோ எனக்கு பிள்ளையே இருக்கா. என்னால என் பொண்டாட்டியை மறந்து வேற பொண்ணை கட்டிக்க முடியாதுன்னு உன் அப்பன் கிட்ட சொல்லு டா சாணக்கியா”, என்றான் அமர்.

 

“அவ கிட்ட பேசாத அவளைப் பாக்காதேன்னு எவ்வளவோ சொன்னேன். கடைசில என் குடும்பத்துக்கு சூனியம் வச்சிட்டு போய்ட்டா”, என்றார் தருமர்.

 

“என் ரதியை இனி ஒரு தடவை பேசுனீங்க அவ்வளத்தையும் தூக்கி போட்டுட்டு என் பிள்ளையை தூக்கிட்டு போய்கிட்டே இருப்பேன். அவ என்னோட மகாராணி, இங்க வருவாளா வர மாட்டாளா தெரியாது. ஏன் அவளுக்கு கல்யாணம் ஆகிருச்சான்னு கூட தெரியாது. ஆனா நான் சாகுற வரைக்கும் அவ தான் என்னோட பொண்டாட்டி. இந்த வீட்டுக்கு மருமக அவ தான். இனி ஏதாவது அவளைப் பத்தி சொன்னீங்க அப்புறம் மரியாதை இருக்காது. இனி நீங்க மிரட்ட கூட முடியாது. ஏன்னா நான் பழைய அமரும் கிடையாது”

 

“ஏன் மிரட்ட முடியாது?”, என்று கேட்ட தருமர் அவந்திகாவை ஏதாவது செய்து விடுவேன் என்பது போல பார்க்க அவரைப் பார்த்து நக்கலாக சிரித்தான் அமர்.

 

“அதெல்லாம் பயந்து ஓடினது ஒரு காலம். எங்க இப்ப என் பிள்ளை மேல கை வைங்க பாப்போம்”, என்று சவாலாகவே சொன்னான்.

 

அவர் அமைதியாக அவனைப் பார்க்க “அவ விளையாடும் போது கீழே விழுந்தா கூட அதுக்கு காரணம் நீங்க தான்னு கமிஷனர் ஆபீஸ்ல புகார் கொடுத்து வச்சிருக்கேன். ஏதாவது நடக்கட்டும். அப்புறம் இருக்கு உங்களுக்கு. உங்க அரசியல்  ஆட்டம் எல்லாம் அடங்கிரும்”, என்று சொல்லி சிரித்தவன் “அம்மா பாப்பாக்கு சாப்பாடு கொடுத்து என் கிட்ட விட்டுருங்க”, என்றான்.

 

“அப்புறம் இனி கம்பெனி விஷயத்தில் யாரும் தலையிடக் கூடாது. அக்கவுண்டஸ் முதல் கொண்டு எல்லாமே நான் தான் பாப்பேன். கலப்படம்ன்னு எதுவும் இருக்க கூடாது. நான் வேலையை விட்டு தூக்கினவங்களுக்கு திருப்பி வேலை கொடுக்க கூடாது. அப்படி இல்லையா இது நான் ஆரம்பிச்சது நான் வருவேன் தலையிடுவேன்னு உங்க அப்பா சொன்னாருன்னா நான் இப்பவே இங்க இருந்து போயிறேன். அதுக்கப்புறம் எனக்கும் உங்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. சொல்லி வை”, என்றான் அமர்.

 

“இவன் ஒருத்தன் வெட்டிக்கிட்டு போறதுலே குறியா இருப்பான். ஏலேய் சாணக்கியா உன் தம்பி கிட்ட சொல்லி வை. இனி நம்ம எதுலயும் தலையிட மாட்டோம்ன்னு”, என்று தருமர் சொன்ன பிறகு தான் அமர் கொஞ்சம் அமைதியானான். அப்போதும் அவரை முறைத்து விட்டு தான் அறைக்குச் சென்றான்.

 

இவ்வளவு பிரச்சனை நடக்க சகுந்தலாதேவி எதையுமே கண்டு கொள்ள வில்லை. குழந்தைக்கு சாப்பாடு மட்டுமே ஊட்டிக் கொண்டிருந்தாள்.

 

அவளை ஒரு பார்வை தர்மர் பார்க்க அவளும் திருப்பி பார்த்தாளே தவிர மகனுக்கும் கணவனுக்கும் இடையே அவள் செல்லவே இல்லை.

 

“நீ கொஞ்சம் அவனுக்கு சொல்ல வேண்டியது தானே சகு?”, என்றார் தருமர். அதற்கு சகுந்தலா பார்த்த பார்வையில் தீ பொறி பறக்க அமைதியாக அங்கிருந்து சென்று விட்டார்.

 

தம்பி ஒரு பக்கம் அப்பா ஒரு பக்கம் சென்று விட அவந்திகா அருகில் அமர்ந்த சாணக்கியன் “பாப்பு குட்டி”, என்றான்.

 

“பெரியப்பா என்னை ஆச்சி நைட் வெளிய கூட்டிட்டு போகப் போறாங்களே?”, என்று சொல்லி விட சகுந்தலா என்ன சொல்ல என்று தெரியாமல் திணறினாள். சாணக்கியன் அன்னையை குழப்பமாக பார்த்தான்.

 

“என்ன மா? பாப்பா என்ன சொல்றா?”

 

“அது ஒண்ணும் இல்லை டா, என் ஜூனியர் விஸ்வநாதன் இருக்கான்ல அவன் தங்கச்சிக்கு இன்னைக்கு நைட் என்கேஜ்மெண்ட், அதான் போக போறோம்”, என்று சமாளிக்க அவனும் சரி என்று சொல்லி விட்டு குழந்தையுடன் பேச ஆரம்பித்தான்.

 

அவளுடன் பேசினாலே சாணக்கியனுக்கு நேரம் தன்னால்  சென்று விடும். அதுவும் அவள் முகம் எப்படி அமருக்கு ரதியை நினைவு படுத்துகிறதோ அது போல சாணக்கியனுக்கு திவ்யாவை நினைவு படுத்தும். அவனுக்கும் மனதை போட்டு எதையோ அழுத்த சிறிது நேரம் பேசி விட்டு சாணக்கியன் அங்கிருந்து சென்று விட உறக்கம் வந்த குழந்தையை அமரின் அறையில் விட்டுவிட்டு சென்றாள் சகுந்தலா.

 

உறங்கும் குழந்தையை அணைத்துக் கொண்ட அமர் “நீ என்னை கொஞ்சம் கூட மிஸ் பண்ணவே இல்லையா டி? என்னை மறந்துருப்பியா? இல்லை என்னையே நினைச்சிட்டு இருப்பியா? என்னால உன்னை மறக்கவே முடியலை டி. எல்லாமே இப்ப நடந்த மாதிரி இருக்கு. இன்னும் எவ்வளவு நாள் தான் உயிரோட இருந்து இந்த சித்ரவதையை அனுபவிக்க போறேன்னு தெரியலையே. மகளை வயித்துல சுமக்கும் போது கஷ்ட பட்டியா ரதி மா? எனக்கு தெரியாது டி எதுவுமே. நான் உன்னை பாத்துருக்கவே கூடாது கண்ணம்மா”, என்று புலம்பியவன் அருகில் தூங்கிய மகளை ரதியின் நினைவில் அணைத்துக் கொண்டு அவள் தலையை வருடி விட்டான்.

 

சென்னையை நெருங்கிக் கொண்டிருந்த ரதியின் கண்களிலும் கண்ணீர் வடிந்தது அந்த நேரம். அவளுக்கு நன்றாக தெரியும் அவள் நினைவில் தான் அவன் வாழ்ந்து கொண்டிருக்கிறான் என்று.

 

அவர்கள் காதலிக்கும் போது ஒரு நாள் கூட அவனால் அவளைப் பார்க்காமல் இருக்க முடியாது. ஞாயிறு கூட ஏன் வருகிறது என்று அவ்வளவு கோபப் படுவான். இப்போதோ ஐந்து வருடங்களாக அவள் இல்லாமல் அவளைக் காணாமல் இருக்கிறான்.

 

அவன் மனம் எல்லாம் தன்னவளைப் பற்றி தான் எண்ணிக் கொண்டிருக்க அவளுக்கும் அவன் நினைவு தான். அவளை முதல் முறையாக பார்த்த நினைவு அவன் மனதில் வர ஏனோ ஒரு உற்சாகம் தொற்றிக் கொண்டது அமருக்கு.

 

“அமரா”, என்ற படி உள்ளே வந்தான் சாணக்கியன். அவனைக் கண்டு சிறு எரிச்சல் வந்தாலும் அவனும் பாவம் என்று உணர்ந்தவன் “வா டா”, என்றான்.

 

தம்பி அருகில் சென்று அமர்ந்தவன் “தூங்கிட்டாளா?”, என்று கேட்ட படி அவந்திக்காவைப் பார்த்தான்.

 

“தூங்கிட்டா. தூங்கட்டும். முழிச்சிருந்தா கேள்வியா கேப்பா. அதுக்கு பதில் சொல்ற மன நிலைல நான் இல்லை”

 

“ஆமா ஆமா, உன் பொண்ணு இருக்காளே, எப்பா என்னா வாய்?”, என்று சிலாகித்துச் சொன்னான்.

 

“அவ உனக்கும் பொண்ணு தான். ஆனா ஒண்ணு தான் புரியலை. நானும் சரி ரதியும் சரி இவ்வளவு பேச மாட்டோம், ஆனா இவ எப்படி டா இவ்வளவு பேசுறா?”, என்று சிரிப்புடன் கேட்டான் அமர்.

 

“அவ அவளோட சித்தி மாறி. அந்த ராங்கி அப்படி தான் வாயை திறந்தா மூடவே மாட்டா”, என்று திவ்யாவின் நினைவில் பேசின சாணக்கியன் முகத்தில் புன்னகை அரும்பியது.

 

“அது என்னவோ உண்மை தான். இந்த குட்டி சில நேரம் திவ்யா மாறியும் தான் இருக்கா. அவளும் இப்ப எப்படி இருக்காளோ எங்க இருக்காளோ? பழைய விஷயம் எல்லாம் நினைக்கும் போது மனசு என்னவோ பண்ணுது டா சாணக்கியா”

 

“உண்மை தான். விதி வேற வேற பக்கம் எல்லாரையும் சூழட்டி அடிக்குது அமரா”

 

“இதுக்கெல்லாம் காரணம் இந்த ஆள் தான்”, என்று அமர் சொல்ல சாணக்கியனும் அமைதியாக தலையசைத்தான்.   அந்நேரம் ரதியும் அதை தான் நினைத்துக் கொண்டிருந்தாள்.

 

தொடரும்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!