அத்தியாயம் 2.1_தேவனுக்கேற்ற தேவியோ_கார்த்திகா கார்த்திகேயன்
அத்தியாயம் 2
காலங்கள் ஓடி மறையலாம்
நிமிடங்கள் நொடியில் மறையலாம்
Advertisement
காதல் மட்டுமே காலமெல்லாம்
நிலைபெற்றிருக்கும்!!!
Advertisement
சென்னையில் அமைந்திருந்தது அந்த பெரிய பங்களா. அந்த வீட்டின் உரிமையாளர் தருமர். அவர் ஒரு பெரிய அரசியல் கட்சியின் மூத்த தலைவர். ஒரு முறை எம்.எல்.ஏ வாக இருந்திருக்கிறார். அடுத்த முறையும் ஆட்சியில் அமர ஆசை இருந்தும் இது வரை நடக்க வில்லை.
Advertisement
அந்த கட்சியின் தலைவர் சிவஞானத்துக்கு தருமர் எண்ணம் தெரியும் தான். ஆனால் அவர் சொந்த சம்பந்தி என்பதால் அவருக்கு வாய்ப்பு கொடுத்தால் மற்றவர்கள் தவறாக நினைப்பார்கள் என்பதால் பதவி கொடுக்காமல் இருந்தார்.
Advertisement
தருமர் அரசியலில் பல வருஷம் இருந்தாலும் அவர் ரொம்ப நல்லவர் எல்லாம் இல்லை. இல்லாத கெட்ட வேலைகள் அனைத்தையும் தயங்காமல் செய்தார். அப்படி கெட்ட வேலைகளில் தொடர்ந்தது தான் சிவஞானம் தருமரின் நட்பு.
உண்மைக்கு இலக்கணமாக விளங்கிய அந்த தருமரின் பெயரை வைத்துக் கொண்டு இந்த தருமர் செய்யாத தவறுகள் இல்லை. என்ன செய்தாலும் கேட்க ஆளும் இல்லை.
சாதாரண அடியாளாக தொடர்ந்த அவரது அரசியல் பயணம் இப்போது வரை தொடர்கிறது. பதவி இல்லாவிட்டாலும் அரசியலில் அவர் சம்பாதித்தது அதிகம்.
ஒரு கேஸ் விஷயமாக வழக்கறிஞர் சகுந்தலாதேவியை சந்தித்து சிரிக்க சிரிக்க பேசி நட்பாகி பின் காதலாகி அவளை திருமணமும் செய்து கொண்டார்.
சகுந்தலா தேவிக்கு கணவர் சில தவறுகள் செய்கிறார் என்று தெரியும் தான். ஆனால் என்ன என்றெல்லாம் தெரியாது. திருமணத்திற்கு முன்பே அவர்கள் செய்து கொண்ட ஒப்பந்தம் இருவரும் அடுத்தவர்களின் வேலை விஷயங்களில் தலையிடக் கூடாது என்பது தான். ஏனென்றால் தன்னுடைய தொழிலை அவ்வளவு ரசித்து நேசித்து செய்பவள் சகுந்தலா தேவி. அவள் எடுத்த கேஸ் இது வரை தோற்றதே கிடையாது. அதே போல உண்மைக்கு துணையாக மட்டுமே நிற்பாள்.
அவள் வாழ்க்கையில் செய்த ஒரே தவறு தருமரைப் பற்றி விசாரிக்காமல் தன்னை அவருக்கு ஒப்புக் கொடுத்தது தான். தருமரும் சகுந்தலா மீது காதலாக தான் இருந்தார். அவர்களின் காதலுக்கு பிறந்தவர்கள் தான் மூத்தவன் சாணக்கியன் மற்றும் அமரதேவன்.
அதே காதலால் அவர்கள் குடும்பமும் இப்போது பிரிந்து தான் கிடக்கிறது. சிவஞானத்தின் மூத்த மகள் ஸ்னேகாவைத் தான் தன்னுடைய மூத்த மகன் சாணக்கியனுக்கு திருமணம் செய்து வைத்திருந்தார்கள்.
மனைவியை சாணக்கியன் நேசித்தானா இல்லையோ ஆனால் அவளுக்கு உண்மையாக தான் இருந்தான். அவளும் உண்மையாக தான் இருந்தாள். ஆனால் அமைச்சரின் மகள் என்ற திமிர் அதிகம் இருக்கும். சாணக்கியனை அவள் அவ்வளவு மதித்தது எல்லாம் கிடையாது. அவனும் அதை பெரிதாக எடுத்துக் கொண்டதும் கிடையாது.
ஸ்னேகாவுக்கு பணத்தை தண்ணீராக செலவு செய்ய வேண்டும், ஊர் சுற்ற வேண்டும். அவள் குழந்தையை வயிற்றில் தங்க வைத்ததே பெரிய விஷயம். ஆனால் கடவுள் அதை நீடிக்க வில்லை. தலை பிரசவத்தில் தாய் சேய் இருவருமே இவ்வுலகை விட்டுச் சென்று விட்டனர். அதுவும் ஒரு விபத்தில்.
ஸ்னேகாவுடன் காதலான வாழ்க்கையை அவன் வாழ வில்லை என்பதால் அந்த பிரிவில் இருந்து மீண்டு கொண்டான். ஆனாலும் இப்போது வரை ஒரு மாதிரி தான் சுற்றிக் கொண்டிருந்தான்.
அவனுக்கு அடுத்து பிறந்தவன் அமரதேவன் என்ற அமர். அவர்களுக்கு பல தொழில்கள் இருந்தாலும் கெமிக்கல் தொழிற்சாலையை மட்டும் தனக்கென்று எடுத்துக் கொண்டு மற்றதை மேற்பார்வை மட்டும் செய்கிறான்.
அந்த வீட்டில் பணத்துக்கு பஞ்சம் இல்லை என்றாலும் நிம்மதி என்ற ஒன்று இருந்ததே இல்லை. காலை நேரத்தில் அந்த வீடே அமைதியாக தான் இருந்தது. காலை பத்து மணி ஆகி இருந்தாலும் நல்ல உறக்கத்தில் இருந்தான் அமர்.
“அப்பா எந்திப்பா”, என்று அவனை தன் பிஞ்சு கைகளால் எழுப்பினாள் அவனது நான்கு வயது மகள் அவந்திகா.
அவன் அப்போதும் எழுந்து கொள்ள வில்லை என்றதும் அவன் முதுகில் ஏறி படுத்துக் கொண்டாள். மீண்டும் எழுப்பி எழுப்பி பார்க்க அவன் எழுந்து கொள்ள வில்லை என்றதும் அப்படியே அவன் முதுகில் படுத்த படியே உறங்கிப் போனாள்.
மகனை எழுப்ப சென்ற பேத்தி இன்னும் வரவில்லை என்று தேடி அந்த அறைக்குள் வந்தாள் அமரின் அன்னை சகுந்தலா.
மகன் முதுகில் பேத்தி தூங்கிக் கொண்டிருக்க அந்த காட்சி அவளுக்கு சிரிப்பை தந்தது. அப்படியே அதை புகைப்படம் எடுத்தவள் உடனே அதை ரதிக்கு அனுப்பி வைத்தாள்.
காரில் வந்து கொண்டிருந்த ரதி புகைப்படம் வந்ததும் காரை ஒரு ஓரமாக நிறுத்தி விட்டாள். தன்னுடைய மறு பிம்பமாக இருக்கும் மகளையும் குழந்தை போல உறங்கும் தன்னவனையும் பார்த்தவளுக்கு சிரிப்புடன் கூடிய அழுகை வந்தது.
“நான் அங்க தான் வரேன், ஏழு மணிக்கு பார்க் க்கு வாங்க. இல்லைனா காலைல பாக்கலாம்”, என்று தகவல் மட்டும் அனுப்பி விட்டு காரை செலுத்தினாள்.
தகவலைப் பார்த்த சகுந்தலாவுக்கு மனம் ஒரு மாதிரி படபடத்து போனாலும் கொஞ்சம் ரதி வருவதை எண்ணி சந்தோஷம் தான்.
தூங்கும் மகனையும் பேத்தியையும் பார்த்த படி அங்கேயே கட்டிலில் அமர்ந்து விட்டாள். அவர் கண்ணுக்கு மகனே சிறுவனாக தோன்ற அவனுக்கே மகள் இருப்பது வியப்பாக இருந்தது. காலம் தான் எவ்வளவு வேகமாக ஓடுகிறது என்று எண்ணிக் கொண்டாள்.
மகன் அசந்து தூங்குவதைக் கண்டவளுக்கு நிச்சயம் அவன் இரவு தூங்க நேரம் எடுத்திருக்கும் என்று புரிந்தது. ஒரு அன்னையாக மகனின் கண்ணீரை வேடிக்கை பார்ப்பது, வாழ வேண்டிய பிள்ளைகளை இப்படி பார்ப்பது அதுவும் சிறு குழந்தை அன்னை தந்தையுடன் இல்லாமல் இருப்பது என மனது அவ்வளவு பாரமாக இருந்தது.
இதற்கு எல்லாம் காரணம் ஒரே ஒரு ஆள். அது வேறு யாரும் அல்ல சகுந்தலாவின் கணவர் தருமர் தான். பெற்ற மகனின் வாழ்வையை தலைகீழாக பிரட்டி போட்ட பெருமை அவரையே சாரும்.
லேசாக கண் விழித்த அமருக்கு அப்போது தான் மகள் தன் முதுகில் ஏறி படுத்திருப்பது புரிந்தது. சிறு சிரிப்பும் வந்தது. அவள் மட்டும் இல்லையென்றால் இந்நேரம் அமர் என்ற ஒருவன் இல்லாமலே போயிருக்கலாம்.
அவனுக்கு மறு ஜென்மம் அளிக்க வந்த தேவதை தான் அவன் மகள் அவந்திகா. கூடவே ரதியை நினைத்து அவனுக்கு சிறு கோபமும் வந்தது. என்ன தான் தன் மீது கோபம் இருந்தாலும் பெற்ற மகளை அனாதையாக விட்டு சென்றவள் மீது லேசான கோபம் தான். ஆனால் கோபம் வந்த அடுத்த நொடியே “அவளுக்கு என்ன கஷ்டமோ? அவளால் எப்படி இந்த குழந்தையை வளர்த்திருக்க முடியும்? தன்னுடைய தந்தையே கூட அவளிடம் இருந்து குழந்தையை பிரித்திருக்கலாம். என் ரதி கெட்டவள் அல்ல. அவள் எங்கே இருக்கிறாளோ? எப்படி இருக்கிறாளோ?”, என்று கவலையாக எண்ணினான்.
அவனுக்கு அவளைத் தேட ஒரு நொடி ஆகாது. ஆனால் அதற்கு பிறகு அவள் உயிருடன் இருக்க வேண்டுமே? ஏற்கனவே தன்னால் அவள் பட்ட கஷ்டங்கள் போதாதா? அவளாவது சந்தோஷமாக இருக்கட்டும் என்று எண்ணியவன் மகள் கீழே விழாதவாறு பிடித்துக் கொண்டு திரும்பினான். அப்படியே அவளை முன் பக்கமாக திருப்பி நெஞ்சில் படுக்க வைத்துக் கொண்டவன் அப்போது தான் அவனையே பார்த்துக் கொண்டிருந்த அன்னையைப் பார்த்தான்.
“மா நீ இங்க என்ன பண்ணுற?”
“பாப்பா உன்னை எழுப்ப வந்தா டா? என்ன டா ஆளைக் காணும்னு பாத்தா அவளும் உன் மேல படுத்து தூக்கம்”
“ஆமா மா, நல்லா தூங்குறா”, என்றவன் அவள் நெற்றியில் முத்தமிட்டான்.
“சரி எழுந்துக்கலயா? ஆபீஸ் போகணும் தானே டா?”
“போகணும் மா. மெதுவா போகலாம்”, என்றவன் குழந்தையை தலையணையில் படுக்க வைத்து விட்டு அவன் அப்படியே அன்னை மடியில் தலை சாய்த்து படுத்தான். குழந்தையையும் நெஞ்சோடு இறுக்கிக் கொண்டான்.
மகனின் செய்கையில் சகுந்தலாவின் கண்கள் பணித்தது. ஒரு கை மகனின் தலையை வருட மற்றொரு கரம் பேத்தியின் தலையை வருடியது.
“என்ன டா கண்ணா?”, என்றாள் சகுந்தலா.
“ஒண்ணும் இல்லை மா”
“அம்மா கிட்ட சொல்ல மாட்டியா டா?”
“ரதியை தேடுது மா. உள்ளுக்குள்ள ரொம்ப இம்சை பண்ணுறா. அதும் பாப்பா அவளை மாதிரியே வேற இருக்காளா? நைட் தூங்க கஷ்டமா இருக்கு மா”, என்று உண்மையை ஒத்துக் கொண்டான்.
இளம் வயதில் தாம்பத்தியத்தை ரசித்த ஒருவனுக்கு துணையை தேடுவது இயல்பு தானே? மகனின் மனது புரிய “அவளை அம்மா வேணும்னா கண்டு பிடிக்கவா டா?”, என்று கேட்டு அவன் மனதை அறிய முயன்றாள்.
“என்னால அது முடியாதுன்னு நினைக்கிறீங்களா? ஆனா நான் அவளைத் தேடுனா அவ உயிரோட இருக்க மாட்டாளே? இப்ப அவளுக்கு கல்யாணம் கூட ஆகிருக்கும் என்ன மா? அவங்க அம்மா அப்பவே ரொம்ப கட்டுப்பாடா இருப்பாங்க. ரொம்ப பயப்படுவா”, என்றவன் தன்னவளின் நினைவில் சிறு சிரிப்புடன் சொன்னான்.
காலை உணவு உண்ண அறையில் இருந்து வெளியே வந்த தருமர் வெகு நேரம் மனைவியைக் காணாததால் சின்ன மகனின் அறைக்கு வர மகன் மனைவியின் மடியில் படுத்திருப்பதையும் பேத்தி மகன் மார்பில் படுத்திருப்பதையும் பார்த்த விட்டு அப்படியே திரும்பிச் சென்று விட்டார்.
அவர் முகம் பல யோசனைகளைக் காட்டியது. என்ன என்னவோ இது வரைக்கும் செய்து விட்டார். ஆனால் இப்போது அவர் மகன் அவரை தலையால் தண்ணீர் குடிக்க வைக்கிறான்.
அவருக்கு இருப்பது இரண்டே இரண்டு ஆசைகள் தான். கட்சி தலைவரின் மகளை இளைய மகன் அமருக்கு மணம் முடித்து வைக்க வேண்டும். அடுத்ததாக தனக்கு அடுத்த அரசியல் வாரிசாக அவனை அறிவிக்க வேண்டும் என்பது தான்.
ஆனால் இது இரண்டையும் அவரால் மகனிடம் சொல்லக் கூட முடிய வில்லை. அவர் பேசினால் அந்த இடத்திலே இருக்க மாட்டான். அவன் அவரிடம் பேசியே ஐந்து வருடங்கள் ஆகிறது.
எப்போது அவன் உணர்வுகளோடு உயிரையும் தொலைத்து நடை பிணமாக வாழ்ந்து கொண்டிருக்கிறானோ அதற்கு காரணமானவரை மன்னிக்க அவன் தயாராக இல்லை.
“அப்பா வலிக்குதுப்பா, அப்பா பிளீஸ் பா, எரியுதுப்பா. நீங்க சொன்ன மாதிரி தானே பேசினேன்? மாத்தி எதுவும் பேசலையே? அப்புறம் எதுக்கு அடிக்கிறீங்க? வலிக்குது பா”, என்று ஒரு நாள் அவ்வளவு அழுத அமரின் குரல் அவருக்கு இன்றும் கேட்டது.
“நீ பண்ணின வேலைக்கு அடிக்காம கொஞ்சுவாங்களா டா? காதலிக்கிற வயசா இது?”, என்று கேட்ட தருமர் மாட்டை அடிப்பது போல அவனை அடித்தார்.
“அதான் அவளை பிடிக்கலை, காதலிக்கலை, நடிச்சேன்னு சொல்லிட்டேன் தானே? விடுங்க பா”
“நான் உன்னை அடிப்பேன்னு பயத்துலயா அப்படி சொன்ன? அவளை கொன்னுருவேன்னு சொன்னதுனால தானே அப்படிசொன்ன?”, என்று அவர் கேட்க அவன் பதில் எதுவும் சொல்ல வில்லை.
அன்று தான் அமர் தருமரிடம் கடைசியாக பேசியது. அதற்கு பின் முற்றிலும் மாறிப் போனான்.
மகனைப் பற்றி யோசித்த படியே அவர் அமர்ந்து இருக்க “ஐயா டிபன் எடுத்து வைக்கவா?”, என்று கேட்டாள் வேலைக்காரப் பெண்.
“லாயர் அம்மா அவ மகனை திருப்பள்ளி எழுச்சி பாடி எழுப்ப போயிருக்காங்க. வந்ததும் சாப்பிடுறேன். நீ போ கங்கா”, என்றவர் மீண்டும் யோசனையில் ஆழ்ந்தார்.
சிறிது நேரத்தில் மகனை எழுந்து கொள்ளச் சொல்லி விட்டு கீழே வந்தாள் சகுந்தலா. அன்னை போனதும் அவன் குளிக்கச் செல்ல கீழே வந்த சகுந்தலா காலை உணவுக்காக காத்திருந்த கணவனை ஒரு பார்வை பார்த்து விட்டு “என்ன கங்கா உங்க ஐயாவுக்கு சாப்பாடு கொடுக்கலையா?”, என்று கேட்டாள்.
“நீங்க வரட்டும்ன்னு சொல்லிட்டாங்க மா”, என்று சொல்லி விட்டு அவள் உள்ளே செல்ல “ஆமா ஆமா, பொண்டாட்டி வந்து பரிமாறினா தான் உங்க ஐயாவுக்கு உள்ள இறங்கும். இவர் மட்டும் தான் குடும்பத்தோட இருக்கணும். பசங்க எப்படி போனாலும் கவலை இல்லை”, என்று முணுமுணுத்த படி காலை உணவை பரிமாறினாள்.
மனைவி பேச்சு கேட்டும் தருமரால் எதுவும் பேச முடியவில்லை. அமைதியாக உண்ண ஆரம்பித்தார். அவர் கடைசி தோசையை உண்டு கொண்டிருக்கும் போது மாடியில் அரவம் கேட்க தலையை தூக்கிப் பார்த்தார்.
அங்கே மகளைத் தூக்கிய படி அவளிடம் பேசிக் கொண்டே கீழே வந்து கொண்டிருந்தான் அமர். இளஞ்சிவப்பு நிறத்திலான பார்மல் முழுக்கைச் சட்டை, கருப்பு நிற பேண்ட் அணிந்து கம்பீரமாக வந்து கொண்டிருந்தான். கழுத்தை ஒட்டிய தங்கச் சங்கிலி அதில் எ என்ற டாலர் மின்னியது.
இடது கையில் அவன் எப்போதும் அணியும் கடிகாரம், வலது கையில் ஆர் என்ற எழுத்து போட்ட வெள்ளி மோதிரம் தங்கத்தை விட கொஞ்சம் அதிகமாக தான் மின்னியது. எப்போது போட்டானோ அப்போது இருந்து அவன் அதை கழட்டியதே இல்லை. அவளின் நினைவில் இருப்பது குழந்தையுடன் சேர்த்து அந்த மோதிரமும் தான்.
இதழ்களில் சிரிப்போடு அவந்திகாவுடன் பேசிய படியே மாடியில் இருந்து இறங்கி வந்தவனைத் தான் சகுந்தலாவும் தருமரும் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
அங்கிருந்த தருமரைக் கண்டு கொள்ளாமல் அன்னையிடம் குழந்தையைக் கொடுத்தவன் ஒரு இருக்கையில் அமர்ந்தான்.
நேர்த்தியான முக வடிவு, களையான முகம், வில் போல வளைந்து நிற்கும் புருவம் புருவங்களுக்கு இடையில் லேசாக சுளிக்க அவன் நெற்றியில் கோடாக மடங்கும் மடிப்புகள் கூட அழகாக தான் இருந்தது.
கூர்மையான கருவிழிகள், எடுப்பான நாசி, அதன் கீழே கத்தையான மீசை, இயற்கையிலே லேசாக சிவந்த உதடுகள், டிரிம் செய்திருந்த தாடி என இருபத்தி ஆறு வயது நிறைந்த இளைஞனாக இருந்த மகனை ரசித்தார் தருமர்.
தந்தையை ஒரு பார்வை பார்த்து விட்டு “அம்மா எனக்கு சாப்பாடு வேண்டாம். குட்டிக்கு கொடுங்க. நான் ஆபீஸ் கிளம்புறேன்”, என்றான்.
“சாப்பிட்டு போயேன் டா, நீ இருந்தா அவளும் சமத்தா சாப்பிடுவா”, என்று அன்னை சொன்னதால் மகள் அருகே அமர்ந்தவன் அவளிடம் பேசிய படியே உண்ண ஆரம்பித்தான்.
தருமர் அவனையே பார்க்க அவன் கவனம் முழுக்க மகள் மீது மட்டுமே. உணவை கூட அவன் ரசித்து உண்ண வில்லை. கடமைக்கு என்று வாழ்பவன் எப்படி உணவை ரசிப்பான்?
இரண்டு இட்லி உண்டு விட்டு அன்னை மற்றும் மகளிடம் மட்டும் சொல்லி விட்டுச் சென்று விட்டான்.
“உன் அப்பன பாத்தியா டி? எப்பவும் மூணு இட்லி சாப்பிடுவான். இன்னைக்கு அதுவும் குறைஞ்சிருச்சு”, என்று பேத்தியிடம் புலம்பினாள் சகுந்தலா.
“நீ வைக்கும் போதே கூட ஒண்ணு வைக்கணும்? கொஞ்சம் மெலிஞ்சும் போய்ட்டான்”, என்று தருமர் வாயைத் திறக்க “மெலிஞ்சுட்டான்னு வருத்தப் படுறீங்களா? இல்லை அது உங்க கண்ணுக்கு உருத்துதா?”, என்று சகுந்தலா கோபமாக கேட்க அவந்திகாவும் தருமரை முறைத்துப் பார்த்தாள்.
“ஏய் கோபமா பேசாத டி, நீ முறைக்கிறேன்னு இந்த குட்டியும் என்னை முறைக்குது பாரு”, என்று பயத்துடன் சொன்ன தருமர் அப்படியே எழுந்து சென்று விட்டார்.
ஒரு காலத்தில் யாரையும் மதிக்காமல் யாருக்கும் பயப்படாமல் ராஜாங்கம் நடத்திக் கொண்டிருந்தவர் தான் தருமர். ஆனால் இப்போது மகனுக்கும் அவன் பெற்ற மகளுக்கும் பயந்து தான் இருந்தார். அது பயமும் இல்லை அவரது சுயநலம் மட்டுமே. என்ன இருந்தாலும் அவருக்கு அவர் நினைத்தது நடக்க வேண்டும்.
ஆனால் அவர் நினைத்தது கனவில் கூட நடக்காது என்பதை யார் அவருக்குச் சொல்வது? மனைவி இல்லாத நேரத்திலும் தங்கத்தில் சிலை செய்து வைத்த ராமன் போலவே அருகில் இல்லாத போதிலும் அவள் நினைவில் வாழ்ந்து கொண்டிருக்கும் அமர் எப்படி வேறு ஒரு பெண்ணை நினைப்பானாம்?
அமர் சென்னை டிராபிக்கில் புகுந்து அலுவலகம் வர முற்பகலைத் தொட்டது. வெகு பிரபலமாக இருக்கும் அமர் குருப் ஆப் கம்பெனீஸ் உள்ளே சென்று காரை நிறுத்தினான். இப்போது இந்த அலுவலகம் முழுப் பொறுப்பில் இருப்பது அமர் கையில் தான். அந்த பறந்து விரிந்த இடத்துக்குள் கெமிக்கல், லெதர், மெடிக்கல் அப்பாரட்டஸ் செய்யும் தொழிற்சாலைகள் கூட உண்டு.
அவனது அண்ணன் சாணக்கியனுக்கும் அதில் பங்கு உண்டு என்றாலும் அவன் அரசியலைத் தவிர வேறு எதிலும் தலையிட விரும்பவில்லை. அதற்கு அமர் விடவும் மாட்டான் என்று அவனுக்கு தெரியும். ஆனால் அவ்வபோது அமருக்கு தேவை என்றால் மட்டும் சாணக்கியன் கம்பெனிகளுக்கு செல்வான். மற்ற படி மத்த நேரம் சாணக்கியன் தந்தை சொன்ன அடியாள் வேலையை மட்டுமே செய்வான்.
சென்னையில் அவர்களுக்கு என இரண்டு பீச் ஹவுஸ், ஐந்து இடத்தில் சூப்பர் மார்க்கெட், அது போக மூன்று இடத்தில் மிகப் பெரிய மாளிகைகள் என பெயர் பணம் செல்வாக்கு எல்லாம் குவிந்து தான் கிடக்கிறது. அதற்கு என்று இப்போது வாரிசாக இருப்பவள் அவந்திகா மட்டுமே.
ஆனால் தனக்கு எத்தனை சொத்துக்கள் இருக்கிறது என்ற பெருமை எல்லாம் இல்லாமல் சாதாரணமாக நடமாடிக் கொண்டிருப்பது அமர் மட்டுமே.
