Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

25. Kala Palaniappan - காஃபி வித் காதல்

காஃபி வித் காதல் 16

அத்தியாயம் 16

ஈரோடு மாவட்டத்துல இருக்கிற சென்னிமலை பக்கத்துல ஒரு சின்ன கிராமம் தான் எங்க ஊர். எங்க அப்பா சுப்பிரமணியன் சென்னிமலைல தான் டிம்பர் கடை வச்சிருந்தாங்க.



Advertisement

எங்க வீட்ல முதல்ல எங்க அண்ணா ரமேஷ், அப்புறம் ரெண்டு அக்காங்க பெரிய அக்கா ரஞ்சிதா, சின்ன அக்கா ராகவி, அப்புறம் நான், எனக்கு அப்புறம் ஒரு தம்பி கதிர். நாங்க அஞ்சு பசங்கன்றதுனால அம்மாவுக்கு எப்பவுமே வேலை நிறைய இருக்கும். அதுமட்டுமில்லாமல், எங்க வீட்டுக்கு முன்புறம் காஃபி அரைக்கிற மெஷின் வச்சு நடத்திகிட்டு இருந்தாங்க அம்மா. 

அண்ணாக்கு படிப்பு வரலை, அதனால பிளஸ் டூ முடிச்சிட்டு அப்பாகூட கடையில வேலை பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க. அண்ணாவுக்கும் அடுத்த ரெண்டு அக்காவுக்கும் நடுவுல வயசு வித்யாசம் கம்மி. சின்ன அக்கா பொறந்து எட்டு  வருஷம் கழிச்சு எதிர்பார்க்காம தான் நான் பொறந்திருக்கேன். எட்டு வருஷம் கழிச்சு குழந்தைன்னு வந்தப்ப, பையனா பொறக்கணும்னு ஆசை பட்டிருக்காங்க. அதனால எதிர்பார்க்காத நேரத்துல, பொண்ணா பொறந்த என்னை கொஞ்சி ஆசையா வளர்க்க எல்லாம் யாருக்கும் நேரமும் இல்லை, இஷ்டமும் இல்லை. ஆனா மறுபடியும் பையன் வேணும்னு ஒரு வருஷம் கழிச்சு விரும்பி பொறந்த தம்பியை மட்டும் எல்லாரும் கொண்டானுங்க. அவன் பொறந்தப்புறம் தான் அப்பாக்கு வியாபாரம் நல்லா போக ஆரம்பிச்சுதுன்னு அப்பாக்கும் அம்மாக்கும் அவன் மீது கொள்ளை பிரியம்.

Advertisement

Advertisement

எப்படி சொல்றது, ஆக்குற சோறுல எனக்குன்னு ஒரு பங்கு கரெக்ட்டா வந்துடும், ஆனா என் விருப்பம் என்னன்னு கேட்டு எனக்காக எதுவுமே வராது. ரெண்டு அக்காங்களுக்கும் அவங்களுக்கு கிடைக்கிறதுல பங்கு போட வந்த என்னை கண்டாலே ஆகாது.

பெரிய அண்ணாவுக்கு கல்யாணம் முடிஞ்சு மரகதம் அண்ணி வந்தாங்க. அவங்க வந்ததும் என் வாழ்க்கை கொஞ்சம் வசந்தம்மா மாறுச்சுன்னு சொல்லலாம். அக்கா ரெண்டு பேரும் அண்ணிகிட்ட சிசிடுசிடுன்னு இருக்கவே, அவங்களை பார்தது அன்பா சிரிச்ச என்னை அவங்களுக்கு பிடிச்சு போச்சு.. அண்ணிக்கு என்னை பிடிச்சதே ஏதோ பெருசா சாதிச்ச மாதிரி எனக்கு தோணும். அண்ணி அண்ணின்னு அவங்க பின்னவே சுத்துவேன்.

Advertisement

பெரிய அக்காவுக்கு நாலு வருஷமா மாப்பிள்ளை பார்த்துட்டு இருந்தாங்க. ஜாதகம் பொருந்தி வர்றதே கஷ்டமா இருந்துச்சு.. அப்படி பொருந்தி வந்த வரனெல்லாம் அக்கா இது நொட்டை அது சொட்டைன்னு தட்டி கழிச்சிட்டு இருந்தாங்க. சின்ன அக்கா அதனால ஒரே சண்டை.. இவளால நானும் வீட்லயே இருக்கேன்னு.

நான் அப்ப ட்வெல்த் படிச்சிட்டு இருந்தேன். நானும் அண்ணியும் அன்னைக்கு ஒரு படத்துக்கு போய்ட்டு வந்தோம்.. அதுல வந்த ஹீரோ அரவிந்த்சாமியை  பார்த்து எனக்கு அப்படி தான் மாப்பிள்ளை வேணும்னு ஒரே ஆசையா போச்சு. எங்க அண்ணிகிட்ட சொன்னேன்..

“ஆசை தான் போ.. உங்க பெரிய அக்கா குந்தானி கணக்கா உட்கார்ந்து இருக்கு. சின்ன அக்கா குறுக்க நெடுக்க நடந்துட்டு இருக்கு.. இதுல உனக்கு அரவிந்த்சாமி மாதிரி தான் மாப்பிளை ஏரோப்பிளேன்ல வருவாரு.. போவியா” அப்படின்னு சொன்னாங்க.

“ஏரோப்பிளேன்ல வராட்டி என்ன அண்ணி, என் ஹீரோ எனக்காக எப்படியாவது  வருவாரு பாருங்கன்னு” நானும் சவால் விட்டேன்.

ட்வெல்த் முடிச்சதும்,மேலே படிக்கிறியான்னு அப்பா கேட்டாங்க.. எப்படியும் அக்காங்களை கரை சேர்த்தப்புறம் தானே எனக்கு கல்யாணம் செய்ய முடியும்

எனக்கும் ஆசை தான். ஆனா அம்மா தான், “இங்க எனக்கு ஒத்தாசையா இருக்கட்டும். எனக்கு உடம்பு முடியல.. பெரியவளுங்க ரெண்டு பேரும், ஒரு குண்டூசிய கூட நகர்த்த மாட்டேங்குறாளுங்க. நாகு, ஒன்னு வீட்டை பார்க்க ஒத்தாசை செய்யட்டும், இல்லையா மெஷின்ன கொஞ்ச நேரம் பார்க்கட்டும்”னு சொல்லிட்டாங்க.

அதுக்கப்பறம் நானும் அண்ணியும் மெஷின்னை பார்த்துக்கிட்டோம். கொஞ்ச நாள்ல அண்ணி பிரசவத்துக்காக அவங்க அம்மா வீட்டுக்கு போனாங்க.. அப்ப ஒரு நாள் நான் மட்டும் தனியா மெஷின்ல இருந்தப்ப,

“இங்க சுப்பிரமணியன் சார் வீடு இது தானா?” அப்படின்னு ஒருத்தர் வந்து அப்பாவை கேட்டாங்க.

நான் ஒரு நிமிஷம் அப்படியே உறைஞ்சு போய் நின்னுட்டேன். வந்தவரு பார்க்க அப்படியே அரவிந்த்சாமி மாதிரி இருந்தாரு.

அவ்வளவு சிவப்பா, அழகா, ஒல்லியா உயரமா.. 

எனக்கு அப்படியே வானத்துல பறக்குற மாதிரி இருந்துச்சு..

“ஹலோ.. ஏங்க.. இங்க சுப்பிரமணியன் சார் வீடு” அப்படின்னு அவர் என் முகத்துக்கு முன்னாடி கையை ஆட்டி ஆட்டி பேசி தான் என்னை நிஜ உலகத்துக்கே கொண்டு வந்தாரு..

இப்பொழுது கூறுகையில்கூட  ரத்னாவின் முகத்தில் அப்படி ஒரு மலர்ச்சி. பார்க்கவே அவ்வளவு அழகாக இருந்தார். கன்னங்களில் குட்டி குட்டி  ரோஜா பூக்கள் பூத்தது போல சிவந்து இருந்தது.

“அய்யோ ஆன்ட்டி, இப்ப சொல்லும்போதே இப்படி அழகா இருக்கீங்களே. அன்னிக்கு உங்க ஹீரோ உங்களை பார்த்து மயங்கியே விழுந்திருப்பாரு இல்லை” என்றாள் எழில் குறும்பாக.

எழில் பேசியது எல்லாம் அவர் காதில் விழுந்ததாகவே தெரியவில்லை. அவர் அந்த நாட்களுக்கே சென்றிருந்தார்.

“ஆமாங்க, ஆனா அப்பா வீட்ல இல்லையே, கடைக்கு போய் இருக்காங்க” 

“சார்ரை கடையில பார்த்துட்டு தான் வந்தேன். சார் தான் இந்த பேக்கை வீட்ல கொடுத்திட சொன்னாங்க. நீங்க வாங்கிக்குறீங்களா இல்ல உங்க அம்மாவை கூப்பிடுறீங்களா?”

“இருங்க அம்மாவை கூப்பிடறேன்” என்று உள்ளே சென்று அவள் அம்மாவை அழைத்து வந்தாள்.

“வாங்க தம்பி, இப்ப தான் அவர் போன் பண்ணி சொன்னாரு. கொஞ்சம் அவசரமா வீட்ல காசு தேவை பட்டது, அதான் கடையில ஆள் இல்லைன்னு உங்களை கொடுக்க சொன்னாங்க..”

“இருக்கட்டும் ம்மா.. இந்தாங்க.”

“காஃபி சாப்பிட்டு போறீங்களா தம்பி” என்று சும்மா ஒரு சம்பிரதாயத்துக்கு கேட்டார்.

“உங்களுக்கு சிரமம் இல்லைன்னா தாங்க அம்மா, இங்க வந்ததுல இருந்து ஒரே காஃபி வாசமா இருக்கு, ஒரு காஃபி குடிக்க ஆசையா இருக்கு.”

அவரது வெளிப்படையான பேச்சு தெய்வானை அம்மாவுக்கு பிடித்திருந்தது. அதுவுமில்லாமல் கணவன் கொடுத்து அனுப்பி இருந்தது கொஞ்சம் பெரிய தொகை. நம்பிக்கையான ஆள் இல்லை என்றால் அனுப்பி இருக்க மாட்டார். 

“நாகு, உள்ள போய் காஃபி போட்டு கொண்டு வா”, என்று இவர்களை வேடிக்கை பார்த்து கொண்டிருந்த மகளை அனுப்பினார்.

“உங்க பேர் என்ன தம்பி, எந்த ஊர்?”

“என் பெயர் கண்ணன். சென்னை பக்கம் தான். கார்பென்டர் வேலை பார்க்கிறேன். எப்பவுமே முதலாளி கூட தான்,  சாமான் வாங்க வருவேன். இந்த தடவை தான் நான் மட்டும் வந்தேன்”

“உங்க முதலாளி யாரு சுந்தரேசன் அண்ணாவா?”

“ஆமா ம்மா..”

“அண்ணன் ரொம்ப வருஷ பழக்கம். நல்லா இருக்காங்களா?”  

“நல்லா இருக்காங்க அம்மா.”

இவர்கள் பேசிக்கொண்டிருக்கையில், ரத்னா காஃபி போட்டு கொண்டு வந்துவிட்டாள்.

கண்ணன் காஃபியை எடுத்து கண்களை மூடிக்கொண்டு வாசனை பிடித்தான்.

ரத்னா குறுகுறுவென அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

பின் மெல்ல மெல்ல ரசித்து அந்த காஃபியை குடித்தான் கண்ணன். அவன் நிறத்திற்கு தொண்டைக்குள் காஃபி இறங்குவது கூட வெளியே தெரிவது போல தோன்றியது ரத்னாவிற்கு.

“ரொம்ப நல்லா இருக்குங்க காஃபி”  என்று பலமுறை கூறினான்.

ரத்னாவிற்கு ஜிவ்வென்று இருந்தது. தெய்வானை அம்மாவிற்கு அவனது செய்கை சிறு பிள்ளைத்தனமாக தோன்றியது. 

“நல்ல பிள்ளை போ..” என்றார் சிரித்துக்கொண்டே.

அவரிடம் கேட்டு, அங்கே அரைக்கும் காஃபி தூளை வாங்கிக்கொண்டு விடை பெற்று சென்றான்.

ரத்னாவிற்கு மறுபடியும் எப்பொழுது அவரை பார்ப்போம் என்று ஆசை தோன்றி, பின் பார்ப்போமா இல்லையா? என்ற கேள்வி எழும்பி, பின் பார்க்க வேணுமே என்று ஏக்கமாக போனது.

அந்த சென்னிமலை முருகனிடம் எப்படியாவது உதவுமாறு வேண்டிக்கொண்டாள்.

கண்ணனும் அவள் அம்மாவும் பேசியதையும் அவள்  கேட்டிருக்கவில்லை. அதனால் எந்த ஒரு விவரமும் அவளுக்கு தெரியவில்லை. அன்னையிடம் கேட்கவும் பயமாக இருந்தது. ஒரு மாதம் ஆன போதிலும் ஒரு வழியும் கிடைக்காமல் சோர்ந்து போனாள். 

திடீரென்று பெரிய அக்காவிற்கு ஒரு வரன் தகைந்து வந்து திருமணம் நிச்சயமானது. வீட்டின் இறுக்கமான சூழல் சற்றே தளர்ந்தது. 

திருமனத்திற்கு  தனக்கு எல்லா பொருட்களும் பிரத்யேகமாக செய்து கொடுக்க வேண்டும் என்று அக்கா கேட்டாள். அப்பாவும், எப்படியாவது திருமணம் நல்ல படியாக முடிந்தால் சரி என்று அவள் கூறியவற்றை செய்து தருவதாக கூறினார். கட்டில், அலமாரி, நாற்காலி, மேஜை, ஊஞ்சல் என்று பெரிய லிஸ்ட் போட்டாள்.

பெரியவளுக்கு செய்யும் பொழுதே அடுத்தவளுக்கும் சேர்த்து ரெண்டா செஞ்சிடலாம் என்றார் அம்மா.

வீட்டின் அருகில் காலி இடம் இருந்தது. அங்கே ஷெட் போட்டு ஆசாரியை வரவழைத்து செய்து கொடுப்பதாக ஏற்பாடுகள்  நடந்தது.

ரத்னா எதிலும் ஆர்வமில்லாமல் விட்டேற்றியாக சுற்றிக்கொண்டிருந்தார்.

சுப்பிரமணியன் சுந்தரேசனிடம் தான் கேட்டிருந்தார். அவர் என் கூட எப்பவுமே வருவான் இல்ல, அந்த பையனை அனுப்பி வைக்கிறேன். நம்பகமான ஆள், தொழில்ல ரொம்ப கெட்டிக்காரன் என்று கூறி இருந்தார்.

“இன்னிக்கு வேலை செய்ய அந்த பையன் வந்திடுவான். மெஷின்ல வந்து தான் சாவி வாங்கிக்க சொல்லி  இருக்கேன். ஷெட் சாவியை கொடுத்திடுங்க”என்று தந்தை கூறி சென்றார்.

ப்ச்.. என்று அசட்டையாக கேட்டுக்கொண்டார் ரத்னா .

காலை பத்து மணிக்கு,

“எப்படி இருக்கீங்க? நல்லா இருக்கீங்களா?” என்று கேட்ட குரலில் துள்ளி குதிக்காத குறையாக ரத்னா எழுந்து நின்றார்.

இம்முறையும் உறைந்து போய் வைத்த கண் எடுக்காமல் கண்ணனை பார்த்தார்.

“என்னங்க நீங்க, எப்ப பார்த்தாலும் இப்படி உறைஞ்சு போய்டறீங்க? அப்பா உங்க கிட்ட ஷெட் சாவி வாங்கிக்க சொன்னாங்க” என்றார் அவள் முன் கைகளை ஆட்டி.

ரத்னா கலங்கிய கண்களும் நடுங்கிய கையுமாக சாவியை கொடுத்தாள்.

கண்ணனுக்கு ரத்னாவின் பரிதவிப்பான முகம் என்னவோ செய்தது..”ஏங்க ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க? உடம்புக்கு எதாவது செய்யுதா? தண்ணீ வேணுமா?”

ரத்னா, தலையை இடம் வலமாக ஆட்டினார்.

உதட்டில் சிரிப்பு துடித்து நிற்க.. கண்களில் மகிழ்ச்சி பொங்க, தேங்கி நின்ற கண்ணீர் கோடாய் இறங்கியது.

அந்த முகம், புன்னகையும் கண்ணீரும் கலந்த முகம், கண்ணனின் மனதிற்குள் அனுமதியின்றி புகுந்து கொண்டது.

அதற்குள் மரசாமான்கள் கொண்ட வண்டி வந்துவிடவே கண்ணன் வேலைகளை பார்க்க சென்று  விட்டார்.

இனி தினமும் அவரை பார்க்க முடியும்.. பேச முடியும்.. பழக முடியும்.. என்று மகிழ்ச்சியில் ரத்னா மனதிற்குள் குத்தாட்டம் போட்டு கொண்டார்.

ரத்னாவின் வாட்டத்தையும் யாரும் கவனிக்க வில்லை, அவரது மாற்றத்தையும் யாரும் கவனிக்கவில்லை.

வீட்டில் திருமன வேலைகள் ஜோராக நடந்து கொண்டிருக்க, ரத்னாவின் மனதில் காதல் அதைவிட ஜோராக வளர தொடங்கியது.

காலையிலும் மாலையிலும் கண்ணனுக்கு காஃபி கொடுக்கும் வேலை ரத்னாவிற்கு வழங்கப்பட்டது.

கண்ணனும், அந்த காஃபியையும், அதை கொண்டு வரும் பெண்ணையும் ரசிக்க தொடங்கினார்.

இருந்தாலும் காதல் என்ற அளவில் யோசிக்க தைரியம் எல்லாம் அவருக்கு இல்லை. சிறு வயதிலே பெற்றோர்களை இழந்து, அரசு ஹாஸ்டல்களில் தட்டி தடுமாறி பள்ளி படிப்பை முடித்து, எப்படியோ ஒரு முறை தூரத்து சொந்தம் என்று சுந்தரேசனை விதி வசத்தால் சந்தித்து அவரிடம் வேலைக்கு சேர்ந்திருந்தார். கடந்த சில ஆண்டுகளாக தான் வாழ்க்கை நன்றாக சென்று கொண்டிருக்கிறது.

அவரின் கதையை  கேட்ட பிறகு, எப்படியாவது இவருக்கு ஒரு குடும்பத்தை கொடுத்திட வேண்டும், எல்லாமாக இருந்து அவரை தாங்கிட வேண்டும் என்று ரத்னவிற்குள் பேராவல் புகுந்து கொண்டது.

காதல் என்றெல்லாம் வீட்டில் பேசிடவே முடியாது. எப்படி கண்ணனுடன் சேர்வது என்று தன் மூளையை கசக்கி இரவும் பகலும் யோசித்துக்கொண்டிருந்தார் ரத்னா.

மிகுந்த கஷ்டத்துக்கு பிறகு ஏற்பாடாகிக்கொண்டிருக்கும் பெரிய அக்கா திருமணம், எனக்கு எப்பொழுது என்று உம்மமென்று இருக்கும் சின்ன அக்காவிற்கு அடுத்து செய்ய வேண்டும், இதற்கிடையில் தம்பியின் மேற்படிப்பு என்று வீட்டில் வரிசையாக விசேஷங்களும் செலவுகளும் அணிவகுத்து நிற்கையில் காதல் என்று போய் எப்படி நிற்பது. நின்றால் அப்பா அம்மா அக்கா அண்ணா என்று யார் யார் எப்படி எப்படி ஆடுவார்களோ என்று நினைக்கையில் பீதியாக இருந்ததது.

இருந்தாலும் காதல் கொண்ட மனது காத்திருக்க மறுத்தது. சரி முதலில் அவர்கிட்ட நம்ம காதலை சொல்லுவோம் அப்புறம் மத்ததை பார்த்துக்கலாம் என்று நினைத்து, எப்படி தன் காதலை சொல்லலாம் என்று யோசிக்கத்தொடங்கினார் ரத்னா..

அந்த யோசனைகள் எல்லாமே தித்தித்தது. தினமும் கற்பனையில் ஒவ்வொவரு  விதமாக கண்ணனிடம் காதலை சொல்லி பார்த்து என மகழ்ச்சி கடலில் சுகமாக நீந்திக்கொண்டிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!