Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

81. Zeeraf - ஊனாகி உயிராகினாய் பெண்ணே

ஊனாகி உயிராகினாய் பெண்ணே – 27

அத்தியாயம் – 27

 

காயத்ரி சொன்ன அந்த வார்த்தைகள் மிருதுளாவின் நெஞ்சில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியது போல இருந்தது, தன்னால் தான் இந்த வீட்டில் எல்லாரும் கஷ்டப்படுகிறார்கள் என்பதும், ரன்வீர் தன் குடும்பத்தோடு சேர முடியாமல் தவிப்பதும் அவளுக்குப் புரிந்தது, ரன்வீர் இந்த வீட்டிற்கு வந்தால் அனைவரும் அளவற்ற சந்தோசம் கொள்வார்கள் என்பதில் சந்தேகமே இல்லை…

​ஆனால், ‘என்னால் அவனுடன் நிம்மதியாக இருக்க முடியுமா? அவனுடன் ஒரே அறையில் இருக்க முடியுமா? தினம் தினம் அவனைப் பார்க்க வேண்டியது வருமே! என் தாத்தாவைக் கொன்றவனுடன் என்னால் எப்படி ஒன்றாக இருக்க முடியும்?’ என்று நினைத்தவளுக்கு, அவளை அன்பு காட்டித் தாங்கும் அனைவரின் முகமும் நிழலாடி அவளது உறுதியைச் சோதித்தது…



Advertisement

​காயத்ரியின் அந்த ஏக்கமான பார்வையும் அவளைப் பாடாய்ப்படுத்தியது. ‘இந்தக் குடும்பத்தின் மகிழ்ச்சிக்காக நான் என் வைராக்கியத்தை விட்டுக்கொடுக்க வேண்டுமா? அல்லது என் தாத்தாவிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்காக இவர்களைத் தவிக்க விட வேண்டுமா?’ என்ற தர்மசங்கடம் அவளை நிலைகுலைய வைத்தது..

அன்றைய இரவு முழுக்க அவளுக்கு இதே குழப்பம் தான், படுக்கையில் புரண்டு படுத்தபடி ஜன்னல் வழியாகத் தெரிந்த நிலவைப் பார்த்துக் கொண்டிருந்தாள், ஒருபுறம் ரன்வீர் மீதான மாறாத சந்தேகம், மறுபுறம் அவனது குடும்பத்தினர் அவள் மீது பொழியும் எல்லையற்ற அன்பு…

​இரவு முழுக்க யோசித்தவள், இறுதியாக ஒரு முடிவிற்கும் வந்தாள்….

Advertisement

அடுத்த நாள் வழக்கம் போல் விடிந்தது, வினோத்தும் சம்யுக்தாவும் கலகலப்பாகப் பேசிக்கொண்டே கல்லூரிக்குக் கிளம்பிச் சென்றனர், சமுத்திரவேலும் தனது அலுவலகத்திற்கு புறப்பட்டுவிட, வீடு சற்று அமைதியானது…

Advertisement

​மிருதுளா தனது அத்தையைத் தேடி ஹாலுக்கு வந்தாள், அங்கே காயத்ரி ஏதோ வேலையாக இருக்க, மெல்ல அவர் அருகில் சென்றவள், “நான் கொஞ்சம் வெளியே போயிட்டு வரட்டுமா அத்தை?” என்று அனுமதி கேட்டிட, ​காயத்ரி அவளைப் பார்த்துப் புன்னகைத்து, “தாராளமாப் போயிட்டு வாம்மா, கூட யாரையாவது கூட்டிட்டுப் போறியா?” என்று கேட்க, “இல்ல அத்தை, நானே கார் எடுத்துட்டுப் போயிட்டு வந்திடுறேன்” என்று கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள்..

​ஆனால், அவள் காரை எடுத்துக் கொண்டு புறப்பட்டது கடைக்கோ அல்லது தோழியின் வீட்டிற்கோ அல்ல, அவள் நேராகச் சென்றது ரன்வீரின் அந்தப் பிரம்மாண்டமான பேலஸிற்கு தான்…

​வழியில் அவளது மனதிற்க்குள் பல எண்ணங்கள் ஓடினஸ் காயத்ரி சொன்ன விஷயங்கள் ரன்வீர் மீதான அவளது பார்வையைச் சற்று மாற்றியிருந்தாலும், தாத்தாவின் மரணம் குறித்த சந்தேகம் இன்னும் தீராத நெருப்பாக அவளுக்குள் எரிந்தும் கொண்டிருந்தது…

Advertisement

சிறிது நேரப் பயணத்திற்குப் பின், ரன்வீரின் வீட்டின் அந்தப் பெரிய இரும்பு வாயில்கள் அவள் முன்னால் தெரிந்தன, செக்யூரிட்டி அவளைப் பார்த்ததும் அடையாளம் கண்டுகொண்டு கதவைத் திறந்துவிட, ​மிருதுளாவும் காரை நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்தாள், அந்த வீடே ஒரு மயான அமைதியில் இருந்தது. வரவேற்பறையைத் தாண்டி உள்ளே சென்றவளுக்கு, அன்று பார்த்த அதே நிலையில் ரன்வீரைப் பார்த்ததும் கோபம் தான் வந்தது…

‘இன்று அவன் அலுவலகத்திற்குப் போயிருப்பானோ, மாலையில் வந்திருக்கலாமோ’ என்று நினைத்துக்கொண்டு வந்தவளுக்கு, அலுவலகம் கூட செல்லாமல் குடித்துக் கொண்டிருந்த ரன்வீரைக் கண்டு இரத்த அழுத்தம் தான் ஏறியது…

​இன்றும் மிருதுளாவை அவன் எதிர்பார்க்கவில்லை, இன்றும் நிதானமிழந்து அவளை நோக்க, அவளோ, “ஆபீஸ் போற பழக்கம் எல்லாம் இல்ல போல?” என்றாள் ஏளனமாக…

​”போகப் பிடிக்கல,” என்று சுருக்கமாகச் சொன்னவன், “என்ன விஷயமா வந்திருக்க?” என்றான். விஷயம் இல்லாமல் அவள் வர மாட்டாள் என்பதை அவன் அறிந்தேயிருந்தான்…

​சற்று நேரம் மௌனம் காத்தவள், பின் அவனை நோக்கி, “நீ உன் வீட்டுக்கு வர்றதுல எனக்குப் பிரச்சனை இல்ல,” என்று சொல்ல,
​அவனோ புரியாததால் “புரியல…” என்றான்…

​”ப்ச்… உன் வீட்ல உள்ளவங்க எல்லாரும் உன்னை ரொம்ப மிஸ் பண்ணுறாங்க, என்னால அவங்க வருத்தப்படுறதைப் பார்த்துட்டுச் சும்மா இருக்க முடியல, எனக்காகத் தானே உன் வீட்டை விட்டு வந்த? அதெல்லாம் எதுவும் தேவையில்லை, நீ அங்க வர்றதுனால எனக்குப் எந்தப் பிரச்சனையும் இல்ல,” என்று அவள் தன் முடிவைச் சொல்ல,..
கையில் இருந்த மதுக்கோப்பை ரன்வீரின் விரல்களுக்கு இடையே ஒரு கணம் ஆடியது, இவளிடமிருந்து இப்படி ஒரு பதிலை அவன் துளியும் எதிர்பார்க்கவில்லை, அவனது நிதானமற்ற கண்களில் ஒரு நொடி ஆச்சரியம் மின்னிட, ​”என்ன திடீர்னு?” என்றான்…

​”அதுதான் சொன்னேனே… உன் குடும்பத்துக்காகனு!” அவள் சொல்ல, “ஓ…” என்றவன், “என்னால வர முடியாது,” என்றான்…

​”ஏன்?” அவள் அதிர்ச்சியாய் வினவ, “வரத் தோணல,” என்று அவன் அலட்சியமாகச் சொல்ல, அவளுக்கோ கோபம் தலைக்கேறியது…

​”ஏன் வரத் தோணல? உன் குடும்பத்துல உள்ளவங்க சந்தோஷம் உனக்கு முக்கியம் இல்லையா?” அவள் ஆவேசமாக வினவ… ​”முக்கியம்தான். பட், நான் அங்கே வர்றது உனக்குப் பிடிக்காதே?” என்றான் உண்மையைச் சுட்டிக்காட்டி…

​”பிடிக்காதுதான்! என்ன பண்ணுறது? சகிச்சிக்கிட்டுப் போறேன்,” அவள் எரிச்சலுடன் சொல்ல, அவள் எரிச்சலைக் கண்டு வருத்தத்துடன் விழிகளை மூடித் திறந்தவன்… ​”அங்கே வந்தா தினமும் என்னைப் பார்க்கிற மாதிரி இருக்கும், என் கூட ஒரே ரூம்ல இருக்கணும், காலையில ஆரம்பிச்சு நைட் வரைக்கும் என் முகத்துலதான் முழிக்கிற மாதிரி வரும்,” என்று அவன் எதார்த்தத்தைச் சொல்ல…​”எல்லாத்துக்கும் தயாராத்தான் இருக்கேன்!” என்று மிருதுளா சொன்ன அந்த ஒற்றை வார்த்தை, ரன்வீரின் மனதிற்குள் ஏதோ ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது…

கையில் இருந்த
மதுக்கோப்பையை மேஜையின் மீது வைத்தவன், அவளை ஒரு நீண்ட பார்வை பார்த்து… ​”நிஜமா தான் சொல்றியா மிருதுளா? எனக்காக இல்லனாலும், என் குடும்பத்துக்காக உன்னால என்னைச் சகிச்சுக்க முடியும்னு  நம்புறயா?” என்று ரன்வீர் மெல்லிய குரலில் கேட்டான். அவனது பேச்சில் இப்போது அதிகாரம் இல்லை, ஒருவிதத் தயக்கம் இருந்தது…

​”வேற வழி தெரியல ரன்வீர், அத்தை முகத்துல இருக்குற கவலையைப் பார்க்க எனக்கு சகிக்கல, வினோத் சம்யுலாம் ரொம்ப ஃபீல் பண்ணுறாங்க, மாமாவுக்கும் சுமதி அத்தைக்கும் கூட அந்த வருத்தம் இருக்குனு தெரியும், அவங்க என்கிட்ட காட்டிக்கல, நீ அங்க வர்றதால அவங்க எல்லாரும் சந்தோஷப்படுவாங்கன்னா, அதைத் தடுக்க எனக்கு உரிமை இல்லை, மத்தபடி நமக்குள்ள இருக்குற கசப்பு அப்படியே தான் இருக்கும், அதுல எந்த மாற்றமும் இல்லை,” என்று கறாராகச் சொன்னாள்.

ரன்வீர் சோபாவில் இருந்து மெல்ல எழுந்து நின்றான், மதுவின் போதையிலும் அவனது கண்கள் இப்போது ஏதோ ஒரு தெளிவுடன் அவளை உற்று நோக்கிட.. ​”ஓகே ஃபைன்… நான் வரேன்,” என்றவன், ஒரு நிமிடம் மௌனமாக இருந்துவிட்டு…. “அண்ட், என் ஃபேமிலி சந்தோஷத்துக்காக உனக்குப் பிடிக்காத ஒரு முடிவை எடுத்திருக்க… அதுக்கு தேங்க்ஸ்,” என்று அவன் மெல்லிய குரலில் சொல்ல, அவளோ அவனுக்குப் பதில் எதுவும் சொல்லவில்லை…

​அவனது நன்றியையோ அல்லது அந்தப் பார்வையில் இருந்த நெகிழ்ச்சியையோ எதிர்கொள்ள விரும்பாதவளாய், வந்த வழியிலேயே விறுவிறுவெனத் திரும்பி நடக்கத் தொடங்கினாள்…

​அவள் காரை நோக்கிச் செல்லும்போது அவள் மனதிற்க்குள் ஆயிரம் எண்ணங்கள் ஓடின. ‘நான் எடுத்தது சரியான முடிவுதானா? அவன் சொன்னது போல ஒரே அறையில் அவனுடன் காலத்தைக் கழிப்பது சாத்தியமா?’ என்ற அச்சம் ஒருபுறம் இருந்தாலும், தன் அத்தையின் முகம் சிரிப்பதைப் பார்க்கப் போகிறோம் என்ற நிம்மதி அவளுக்குப் பலத்தைத் தந்தது…

​மறுபுறம் ரன்வீர், அந்தப் பெரிய வரவேற்பறையில் தனியாக நின்றபடி அவள் சென்ற திசையையே பார்த்துக் கொண்டிருந்தான், இத்தனை நாட்களாகத் தன்னை மதுவிலும் தனிமையிலும் சிறைவைத்துக் கொண்டிருந்தவன், இப்போது மீண்டும் அந்தப் பழைய வாழ்க்கைக்குள் நுழையப் போகிறான், ஆனால் இந்த முறை, அவன் நேசிக்கும் பெண் அவனை வெறுப்போடு வரவேற்கக் காத்திருக்கிறாள் என்பதுதான் அவனுக்குப் பெரிய சவாலாக இருந்தது…

அன்றைய மாலைப் பொழுது அந்த வீட்டிற்கு ஒரு புதிய விடியலையே கொண்டு வந்தது, ரன்வீர் வருவான் என்று யாரும் அந்த நேரத்தில் எதிர்பார்க்கவில்லை, அவனது கார் வாசலில் வந்து நின்றபோதே, வீட்டில் ஒருவித நிசப்தம் நிலவியது, காரிலிருந்து இறங்கி வந்த மகனைக் கண்டதும் காயத்ரிக்குத் தன் கண்களையே நம்ப முடியவில்லை…

​மகிழ்ச்சியில் உறைந்து நின்ற அவர்.. “இப்போ எத்தனை மணி நேரம் இருக்க வந்திருக்க ரன்வீர்?” அவன் மீண்டும் கிளம்பி விடுவானோ என்ற தயக்கத்தோடு கேட்க,  தாயின் அந்த ஏக்கம் ரன்வீரின் மனதை என்னவோ செய்தது…

மெல்ல அவர் அருகில் சென்று, அவரைத் பாசத்தோடு தோளோடு அணைத்துக் கொண்டவன், “இனி உங்க எல்லார் கூடவும் மொத்தமா இருந்துடலாம்ன்ற பிளானோட தான் வந்திருக்கேன்மா,” என்று உறுதியான குரலில் சொல்ல,
​அவன் சொன்ன அந்த ஒற்றை வார்த்தையில் அந்த வீட்டின் சுவர்களே சந்தோஷத்தில் அதிர்வது போல இருந்தது.

சமுத்திரவேல் தனது அண்ணன் மகனின் வருகையை ஒருவிதப் பெருமிதத்தோடு பார்த்துக் கொண்டிருக்க, அவனது தம்பியும் தங்கையும் ஓடிச் சென்று தமையனை ஆரத்தழுவிக் கொண்டனர், நீண்ட நாட்களாகக் காணாமல் போயிருந்த அந்த வீட்டின் கலகலப்பு, ரன்வீரின் வருகையால் மீண்டும் ஒட்டிக்கொண்டது…

​அந்தக் குடும்பத்தின் சங்கமத்தை சற்றுத் தள்ளி நின்று பார்த்துக் கொண்டிருந்த மிருதுளாவின் மனதிற்குள் ஒரு இனம் புரியாத நிம்மதி பரவியது, ஒருவரையொருவர் கட்டியணைத்து, அன்பைப் பகிர்ந்து கொள்ளும் அந்தத் தருணம் அவ்வளவு அழகாக இருந்தது, அனைவரின் முகத்திலும் வழிந்த அந்த உண்மையான மகிழ்ச்சியைக் கண்டபோது, தான் எடுத்த முடிவு எவ்வளவு சரியானது என்பதை உணர்ந்த மிருதுளாவின் இதழ்களிலும் அவளை அறியாமல் ஒரு மெல்லிய புன்னகை அரும்பியது…

அன்று வீடே ஒரு திருவிழா கோலம் பூண்டிருந்தது, ரன்வீருக்குப் பிடித்தமான உணவுகளைத்தான் சுமதி சமைத்திருந்தார், அந்த உணவுகளின் மணம் வீடெங்கும் பரவி, ஒருவித இதமான சூழலை உருவாக்கியது, நீண்ட நாட்களுக்குப் பிறகு, டைனிங் டேபிளில் அனைவரும் ஒன்றாகக் கூடி அமர்ந்து உணவருந்தினர்…

​ரன்வீரின் தம்பியும் தங்கையும் அவனை விட்டு ஒரு நிமிடம் கூட விலகவே இல்லை, அவனது இருபுறமும் ஒட்டிக்கொண்டு அமர்ந்தவர்கள், ஓயாமல் பேசிக்கொண்டே இருந்தார்கள், கல்லூரியில் நடந்த விஷயங்கள், அவன் இல்லாத நேரத்தில் அவர்கள் அடித்த லூட்டிகள் என ஒவ்வொன்றையும் மிக உற்சாகமாக அவனிடம் பகிர்ந்து கொண்டனர்…

​”அண்ணா, நீங்க இல்லாம இந்த இடமே எவ்வளவு வெறிச்சோடி இருந்துச்சு தெரியுமா? இனிமே நீங்க எங்கயும் போகக் கூடாது,” என்று சம்யுக்தா செல்லமாக மிரட்ட, ரன்வீர் புன்னகையுடன் அவள் தலையைக் கோதிவிட்டான்…

​சமுத்திரவேலும் காயத்ரியும்  ஒருவரை ஒருவர் பார்த்து நெகிழ்ந்து போயினர்,  இத்தனை கலகலப்பிற்கு நடுவிலும், ரன்வீரின் பார்வை அவ்வப்போது மிருதுளாவைத் தேடியது, அவள் அமைதியாக உணவருந்திக் கொண்டிருந்தாலும், அந்த வீட்டின் மகிழ்ச்சியில் அவளுக்கும் ஒரு பங்கு இருப்பதை அவனது கண்கள் கண்டுகொண்டன…

​அந்த உணவு மேஜையில் பரிமாறப்பட்டது வெறும் உணவுகள் மட்டுமல்ல, பல நாட்களாகப் பிரிந்திருந்த ஒரு குடும்பத்தின் அன்பும், அன்யோன்யமும் தான், அந்த அன்பின் சூட்சுமத்தை உணர்ந்த மிருதுளாவின் மனதிற்குள், ரன்வீர் மீதான கோபத்தின் வீரியம் சற்று குறைந்திருப்பது போன்ற ஒரு உணர்வு ஏற்பட்டது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!