Post Views: 192
ஓம் ஸ்ரீ சாய்ராம்
பன்னிரண்டு வருடங்களுக்குப் பிறகு…
சென்னை, இந்தியா
மே 2012
Advertisement
இரவு உணவு உண்ண வராமல் ஒருமணி நேரமாகப் போக்குக் காட்டிக்கொண்டிருந்த தருணைத் தேடி விறுவிறுவென வசிப்பறைக்கு நடந்தாள் ரம்யா. உள்ளே புகாத குறையாக மடிக்கணினிக்குள் மூழ்கியிருந்தவனைக் கண்டதும் இன்னும் கடுப்பானது அவளுக்கு.
“மதியம் கூட நீ சரியா சாப்பிடல தருண்! அப்படி என்னத்தான் அந்த லேப்டாப்ல பாத்துட்டிருக்க?”
இடுப்பின் இருபுறமும் கைகளை வளைத்துக்கொண்டு, முழி பிதுங்க கண்களை உருட்டும் அவளைத் தலை முதல் பாதம் வரை பெருமிதம் பொங்க ஏறிட்டவன்,
Advertisement
“குழந்தைகளுக்கு ‘வி’ ன்ற எழுத்துல தொடங்குற மாதிரி பெயர்கள் பார்த்துட்டிருக்கேன்,” எனக் கூறி அவள் மணிவயிற்றில் வருடி புன்னகைத்தான்.
Advertisement
உதட்டைச் சுழித்து நகர்ந்தவள், இரண்டே நிமிடத்தில் தட்டு நிறைய கதம்ப குழம்புச் சாதத்துடன் அவனருகே அமர்ந்து, கையளவு சாதத்தை உருட்டி, “வாயைத் திற!” செல்லக் கண்டிப்புடன் வலுக்கட்டாயமாக ஊட்டினாள்.
இரண்டு உருண்டைகளை மடக்மடக்கென விழுங்கியவன், “உனக்கு எதுக்கு இந்த வீண் வேலை. அலட்டிக்கக் கூடாதுன்னு டாக்டர் சொல்லிருக்காரா இல்லையா?” கேட்டுக்கொண்டே மடிக்கணினியை மூடிவிட்டு தட்டை அவளிடமிருந்து வாங்க முயன்றான்.
தர மறுத்தவள், மேலும் ஒரு வாய் ஊட்டிவிட்டு, “இந்தக் கரிசனம் எல்லாம் ஜூனியர் பிறக்கும் வரைதானே,” முகம் சுருக்கினாள்.
Advertisement
அவள் முகத்தை கண் பார்க்க நிமிர்த்தி ஏந்தியவன், “எனக்கு எப்பவுமே நீதான் ஃப்ரஸ்ட். அதே மாதிரி நீயும் எத்தனை குழந்தைகள் பெற்றெடுத்தாலும், முதல் இடம் எனக்கு மட்டும்தான். நியாபகம் வச்சுக்கோ!” அழுத்தமாக நினைவூட்டினான்.
வலது கையால் அவன் கன்னத்தை வருடி, “இதை நீ எனக்குச் சொல்லணுமா டா,” வாஞ்சையாகப் பேச, அவள் அலைபேசி பளிச்சிட்டது.
திரையில் ‘ஷ்ரவன் காலிங்க்’ எனக் கண்டுகொண்ட தருண், “சொல்லுடா!” என அதிகாரம் பறக்க அழைப்பை ஒலிப்பெருக்கியில் உயிர்ப்பித்தான்.
“தருண்! நான் ஷர்மிலா பேசுறேன்,” மறுமுனையிலிருந்து தயக்கம் கலந்த பதில் வர,
“ஒரு நிமிஷம் இருங்க! ரம்யாகிட்ட தரேன்,” காற்று போன பலூனாய் சுருங்கிய முகத்துடன், அலைபேசியை ரம்யா பக்கம் தள்ளினான்.
“என்ன ஆச்சரியம்! ஷ்ரவன் நம்பர்லேந்து கூப்பிடுற,” ரம்யா தொடங்க,
“ஆச்சரியமா? அதிர்ச்சியா?” கேட்டு, கலகலவெனச் சிரித்தாள் ஷர்மிலா.
ரம்யாவும் அவள் கிண்டல் கேலிகளுக்கு எல்லாம் ஈடுகொடுத்துப் பேச, எரிச்சல் தலைக்கேறிய தருண் விருட்டென எழுந்தான்.
அவன் கையைப் பிடித்துத் தடுத்த ரம்யா, ‘ஐந்தே நிமிடம்’ என விரல்களை அசைத்து, கண்களைச் சுருக்கி கெஞ்சியபடி,
“சரி! எதுக்கு ஃபோன் பண்ணன்னு சொல்லு,” விஷயத்திற்கு வந்தாள்.
“அடுத்த வாரம் ஆஸ்த்ரேலியா கிளம்புறேன்ல. அதான் இன்னைக்குக் கொஞ்ச நேரம் ஷர்வனோட ஸ்பெண்ட் பண்ணலாம்னு மாலுக்கு வரச் சொன்னேன். அவன் என்னடான்னா, நீ பர்மீஷன் தந்தால் தான் வருவேன்னு சொல்றான். அதான் மேடம் உத்தரவு கொடுப்பீங்களான்னு தெரிஞ்சுக்க,” ஷர்மிலா முடிக்கும் முன்,
“அவளை நம்பாதே ரம்யா! ஒண்ணுக்கு ரெண்டா சொல்றா. உன்கிட்ட இன்ஃபார்ம் பண்ணிட்டுப் போகலாம்னு தான் சொன்னேன்,” இடைபுகுந்தான் ஷ்ரவன்.
ஹார்ன் சத்தம் இடைவிடாமல் கேட்க, சாலை நெரிசலில் வண்டியைச் செலுத்திக்கொண்டே பேசுகிறான் என உணர்ந்து, பேச்சை வளர்க்காமல் உடனே சம்மதம் சொன்னாள்.
“நீ சாப்பிட்டீயா?” அக்கறையாக வினவினான் ஷ்ரவன்.
சிடுசிடுக்கும் தருணை ஓரக்கண்ணால் விழுங்கியபடி “இன்னுமில்ல. இப்பதான் ஒருத்தருக்கு ஊட்டிட்டு இருக்கேன்,” ரம்யா உரைத்ததும்,
“சரியா போச்சுப்போ! அவனுக்கே குழந்தை பிறக்கப் போகுது. நீ என்னன்னா இன்னும் அவனை குழந்தை மாதிரி சீராட்டிப் பாராட்டி ஊட்டிட்டிருக்க,” குறுக்கிட்டுக் கிளுகிளுத்தாள் ஷர்மிலா.
அதைக் கேட்ட தருணின் முகம் கோபத்தில் சிவக்க, இதற்குமேல் இவன் முன் பேசினால், எரிமலையாக வெடிப்பான் என அறிந்த ரம்யா, முகத்தில் அசடுவழிய சமையலறைறை நோக்கி ஓட்டம் எடுத்தாள்.
கால்மணி நேரத்தில் தயிர் சாதம் வடுமாங்காயுடன் தன்னருகே வந்தமர்ந்தவளை சட்டைக் கூடச் செய்யவில்லை அவன்.
“என்னடா! குழந்தைகளுக்குப் பேரு செலக்ட் பண்ணிட்டீயா,” எதார்த்தமாகப் பேச்சுக் கொடுத்தாள்.
அனல்பார்வையில் சுட்டெரித்தவன், “பெத்த குழந்தைகளை வளர்க்காம பொழுதுக்கும் ஷாப்பிங்க் டின்னர்ன்னு ஊர் சுத்துற அவ எல்லாம் என்னைப் பற்றி விமர்சனம் பண்ண வந்துட்டா. அதைக் கேட்டு நீயும் கிளுகிளுன்னு சிரிக்குற,” வார்த்தைகளைக் கடித்துத் துப்பினான்.
“விடுடா! ஏதோ விளையாட்டுக்குத் தானே பேசினா,” என அவன் தோளினை வாஞ்சையாக அரவணைத்துத் தேய்த்துவிட்டாள்.
“எல்லாம் நீ கொடுக்கிற இடம்தான் ரம்யா,” அதிருப்தியில் புலம்பினான் அவன்.
“சரி! நான் பார்த்துக்கிறேன்,” பட்டும்படாமல் கூறி, “அப்பவே கேட்கணும்னு நெனச்சேன். அது என்ன குழந்தைகளுக்கு ‘வி’ல தான் பேரு வைக்கணும்னு அத்தனை தீர்மானமா இருக்குற,” பேச்சைத் திசைதிருப்பினாள்.
பதில்சொல்லும் ஜோரில் அவன் கோபமும் பஞ்சாய் பறந்தது.
ஊட்டிவிடச் சொல்லி ‘ஆ’ வென வாயைத் திறந்தவன், மடிக்கணினியை அவள் பக்கம் திருப்பினான்.
“ரம்யா & ஷ்ரவன்… உன் பேரும் உன் புருஷன் பேரும் ‘R’, ‘S’ல தொடங்குதா?”
“ம்ம்…”
“அதேமாதிரி, எங்க பேரு… தருண் & உத்ரா… ‘T’, ‘U’ல தொடங்குதா?”
“ம்ம்…”
பலத்த யோசனையுடன் ம்ம் கொட்டும் அவளைப் பார்த்து இளித்தவன், பெரும் உற்சாகத்துடன்,
“இப்படி R,S,T,Uன்னு வரிசையா தொடங்கும் நம்ம பெயர்களின் எழுத்தின் வரிசையில், அடுத்த லெட்டரான வி (Vல்) நம்ம வாரிசுகளுக்கு பேரு வைக்கணும் நினைக்கிறேன்,” விளக்கி,
“ஓகே வா?” என அவளை ஆவலாய்ப் பார்த்தான்.
“அட்டகாசம் டா!” ஆனந்தக் கண்ணீர் வழிய அவன் நெற்றிமுட்டி பூரித்தாள் பெண்.
என்னென்ன பெயர்கள் தேர்ந்தெடுத்திருக்கிறான் என அவன் மடிக்கணினியின் திரையை உற்சாகமாய் ஏறிட்டாள்.
“பிறக்கப் போகுறது ஆண் குழந்தையா, பெண் குழந்தையான்னு தெரியாததுனால, வினய், வருண், விருபா, வைஷ்ணவின்னு இப்போதைக்கு மொத்தம் நாலுபேரு செலெக்ட் பண்ணி வச்சிருக்கேன். உனக்கு ஓகே வா, இல்ல வேற பேரு யோசிக்கலாமா” அவன் கேட்க,
மேலும் மேலும் பூரித்துப்போனாள் பெண்.
“நீ செலக்ட் பண்ணிருக்க எல்லா பேரும் ரொம்பப் பிடிச்சிருக்குடா.” என்றாள்.
“எனக்கும் எல்லா பேரும் பிடிச்சிருக்கு ரம்யா. எந்த ரெண்டு பேரு எலிமினேட் பண்ணறதுன்னு தெரியல,” ஆழ்ந்த யோசனையில் திரையை மேலும் கீழும் நகர்த்தினான்.
“எதுக்கு எலிமினேட் பண்ணனும். எல்லாத்துக்கும் வேலை கொடுத்துட்டா போச்சு,” குறும்பாய் கண்சிமிட்டிய ரம்யாவின் உற்சாகத்தில் ஆடித்தான் போனான் அவன்.
**************************************************************************************************
“எதுக்கு எலிமினேட் பண்ணனும். எல்லாத்தையும் விலை கொடுத்து வாங்கிட்டா போச்சு,” அலட்டலே இல்லாமல் சொல்லும் ஷர்மிலாவை வியந்து பார்த்தான் ஷ்ரவன்.
பிரியாவிடை சந்திப்பு எனச் சொல்லிவிட்டு மனைவிக்கு வளையல்களைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பில் நிறுத்துவாள் எனக் கனவிலும் நினைக்கவில்லை அவன். கண்ணில் பார்ப்பது எல்லாம் ரம்யாவிற்குப் பாந்தமாக இருக்கும் எனத் தோன்ற, எதை எடுப்பது எதை விடுவது எனப் புரியாமல் தவித்தான்.
கண்மூடித்தனமான பாசத்தில் ஊறிப்போயிருக்கும் இவளை விட்டால் மொத்த நகைக் கடையையும் கூட வாங்க தயங்கமாட்டாள் என அறிந்தவன், தீபாவளிக்கு வாங்கித்தந்த பாட்டில் க்ரீன் பச்சை நிற பட்டுப்புடைவைக்கு இணங்க,மரகதக் கற்கள் பதித்த வளையல்களை தேர்ந்தெடுத்தான்.
ஒருமணி நேரமாக மொத்த வளையல்கள் பிரிவையே அலசி ஆராய்ந்து, கடைசியில் நாலே நாலு வளையல்களை வாங்கிச் செல்கிறார்களே என முணுமுணுத்துக் கொண்டே வளையல்களை டப்பாவில் பத்திரப்படுத்திய கடைக்காரர், புன்முறுவலுடன் ஷர்மிலாவிடம் தந்தார்.
அவள் அதை ஷ்ரவனிடம் தர, “ செலக்ட் பண்ண சொன்ன; செலெக்ட் பண்ணிட்டேன். இது நீ ஆசையா வாங்கிருக்குற கிஃப்ட். நீயே உன் கையாலே ரம்யாவுக்குப் போட்டுவிடு,” என்றான்.
“ம்ப்ச்.. சனிக்கிழமை நான் ஊருக்குக் கிளம்பிடுவேன் ஷ்ரவன்,” ஒரு குரல் அழுதாள் அவள்.
“அதுக்கு இன்னும் மூணு நாள் இருக்கு!” கைகளை மார்புக்குக் குறுக்கே கட்டிக்கொண்டு சிலையாக நின்றான்.
“பேக்கிங்க், வைண்டப்ன்னு ஏகப்பட்ட வேலை இருக்குடா,” புலம்பியும் மசியவில்லை அவன்.
“டைம் இருந்தால் சந்திக்கலாம்; இல்லேன்னா அவளை ஏர்ப்போர்ட்க்கு அழைச்சிட்டு வரேன்,” என்றான் தீர்மானமாக.
“அன்னைக்கும் சரி! இன்னைக்கும் சரி! உன் பிடிவாதம் மட்டும் குறையவே இல்ல!” அவள் ஒரு வேகத்தில் சொல்லிவிட,
அந்த நாள் நினைவுகள் கண்முன் தோன்றி சுருக்கென்று குத்தியது அவனுக்கு.
படபடவென வளையல் பெட்டியினை வாங்கிக்கொண்டு வாசலை நோக்கி நடந்தான்.
சிந்திக்காமல் பேசிவிட்டேனே என நொந்துகொண்டவள் அவனருகே ஓடிச்சென்று, “சாரி டா!” என வழியை மறித்தாள்.
பிடிகொடுக்காமல் அவன் முகத்தைத் திருப்பிக்கொள்ள, “ப்ளீஸ் ஷ்ரவன். நாலே நாளுதான். என்னோட சண்டைபோடாம இரு; அதுக்கப்புறம் என் தொல்லையே உனக்கு இருக்காது,” அடிமனத்திலிருந்து மன்றாடினாள்.
“உன்னைத் தொல்லைன்னு சொன்னேனா. நீயே நேருல சந்திச்சுக் கொடுத்தா ரம்யா இன்னும் சந்தோஷப்படுவான்ற எண்ணத்துல தானே சொன்னேன்,” அழுத்திக்கூறினான்.
“சரி கொடு! நாளைக்கு மீட் பண்ணறேன்,” என வலுக்கட்டாயமாக வளையல் டப்பாவைப் பிடுங்கினாள்.
கோபம் தணிந்தவன், “எங்க மீட் பண்ணலாம்?” என வினவ,
“பண்ணலாம் இல்ல. பண்ணறோம்! நானும் ரம்யாவும் மட்டும்,” கண்சிமிட்டினாள்.
சமரசமானவர்கள் அந்த வணிக வளாகத்தில் உள்ளேயே அமைந்திருந்த உணவகம் ஒன்றில் வந்தமர்ந்தனர்.
“ரெண்டு ப்ளேட் வெஜிடபுள் பிரியாணி!” இருவருக்குமான உணவை அவளே ஆர்டர் செய்ய, மீண்டும் கடந்த கால நினைவில் தத்தளித்தான் ஷ்ரவன்.
‘தன்னைக் காதலிக்கும் ஒரே காரணத்திற்காக அவளுக்கு மிகவும் பிடித்த அசைவ உணவையே புறம்தள்ளிவைத்தவள் அல்லவா!’ எனச் சிந்தனையில் கரைந்தான்.
“பிரியாணி வந்தாச்சு! சாப்பிடுங்க மிஸ்டர்!” ஷர்மிலா உலுக்க சுயத்திற்கு வந்தான்.
“என்னடா ஆச்சு உனக்கு?” கடிந்தாள் அவள்.
“நமக்கு ப்ரேக் அப் ஆனதும், நீதான் தழைஞ்சு போகணும்; என்னைத் தேடி வரணும்னு நான் பிடிவாதமா இருந்தது உண்மைதான். அப்பாவோட எதிர்பார்ப்பை மீறி என்னால உனக்குச் சம்மதம் சொல்லமுடியலடி. தப்பு என்மேலதான்,” ஷ்ரவன் தலைகுனிய,
“அதெல்லாம் எதுக்குடா இப்போ? நான் ஏதோ தெரியாம சொல்லிட்டேன்,” தடுத்தாள் ஷர்மிலா.
“இல்ல ஷர்மிலா. உன் மனசுல அந்த ரணம் இன்னும் ஆறாம இருக்குதோன்னு கில்டியா இருக்கு. ஐ யாம் சாரி ஃபார் எவ்ரிதிங்,” அவன் பரிபூரணமாக மன்னிப்புக் கேட்க,
“அடேய்! நீ வருத்தப்படுற அளவுக்கு எதுவும் நடந்துடல. சொல்லப்போனா, நம்ம ரெண்டு பேருக்கும் இன்னும் பெட்டரான லைஃப் தான் அமைஞ்சிருக்கு,” அழுத்தமாகக் கூறினாள்.
இருவருக்கும் அமைந்திருக்கும் வாழ்க்கைத்துணைகளின் குணங்களை அசைபோட்டவன், ஆமோதிப்பாய் தலையசைத்துப் புன்னகைத்தான்.
லேசான மனத்துடன் தங்கள் காதல் காவியத்தின் சுவாரசிய நிகழ்வுகளை நினைவுகூர்ந்து சிரித்தபடி பிரியாணியை ருசித்தனர்.
தரிப்பிடத்திற்குப் போகும் வழியில் பிரபலமான பேக்கரி ஒன்றினைக் கண்டுகொண்டவள், “ஒரேவொரு நிமிஷம் ஷ்ரவன். இந்தக் கடையில் கிடைக்கும் ரஸ்க் பிஸ்கெட் ரம்யாவுக்கு ரொம்பப் பிடிக்கும். வாங்கிட்டுப் போகலாம்,” என நின்றாள்.
இரவு ஒன்பது மணிக்கு மேலானதை கவனித்தவன், “ரம்யா தூங்காமல் காத்துட்டு இருப்பா. நீ வாங்கிட்டு மெயின் கேட்டுக்கு வந்துடு. நான் பார்க்கிங்கேலேந்து கார் எடுத்துட்டு வரேன்,” என முன்னே நடந்தான்.
“டபுள் ஓகே!” புள்ளிமான் எனக் கடைக்குள் புகுந்தாள்.
கால்கள் முன் சென்றதே ஒழிய, அவன் விழிகளும் மனமும் ஷர்மிலாவையே தழுவி இருந்தது. அவள் ரம்யாவிடம் காட்டும் அன்பு; ரம்யா இவள் மீது வைத்திருக்கும் நம்பிக்கை; எனப் பெண்களின் புரிதலில் நெகிழ்ந்தபடி நகர்ந்தான் ஷ்ரவன்.
திடீரென “ஆஆஆஆஆஆஆஆஆ!” என்ற பெருங்குரலுடன் பொதுமக்களின் அலறல் சேர, கீழ்தளத்தில் கூட்டம் கூடியிருப்பதைக் கண்ட ஷர்மிலா விரைந்து ஓடினாள்.
“நான் டாக்டர்! முதலுதவி செய்யணும் வழிவிடுங்க!” என கூட்டத்தில் வலிய நுழைந்தவள், விழுந்து கிடப்பது ஷ்ரவன் எனக் கண்டதும் பேரதிர்ச்சி கொண்டாள்.
முழுபலத்துடன் அவனைத் தன் மடியில் போட்டுக்கொண்டு, “ஷ்ரவன்! ஷ்ரவன்! உனக்கு என்ன ஆச்சுடா? கண்ணத் திறந்து பாரு!” என அவன் கன்னங்களில் மாறி மாறி அடித்தாள்.
அதற்குள் கூட்டத்திலிருந்த ஒரு இளைஞன் மேலேறும் தானியங்கி படிக்கட்டுகளைக் கவனிக்காமல் அவன் தவறுதலாகக் கீழே இறங்க முயன்றதனால், தடுமாறி உருண்டு விழுந்துவிட்டான் என விளக்கினார்.
மறுகணமே ஷர்மிலா அவன் நெற்றி, காதுகள், பின்மண்டை எனச் சோதிக்க,
“நான் இங்கதான் மேடம் நின்னுட்டு இருந்தேன். உருண்டு விழுந்த வேகத்துல அவர் பின்மண்டை கைப்பிடியிலும் படிக்கட்டிலும் இடிச்சதைக் கண்கூடா பார்த்தேன் மேடம்,” என விவரித்தார்.
‘கன்கஷன்’ (மூளை அதிர்ச்சி) என நொடியில் கண்டுகொண்ட ஷர்மிலா ஆம்புலன்சை அழைக்குமாறு கதறினாள்.
************************************************************************************************
‘கன்காக்ஷன்’ (மருந்துகளின் கலவை) என நொடியில் கண்டுகொண்ட தருண் கிளுகிளுவெனச் சிரித்தான்.
பிரசவத்திற்கு அம்மா வீட்டிற்குச் சென்றிருக்கும் மனையாளுடன் ஸ்கைப் காணொளி அழைப்பில் பேசிக்கொண்டிருந்தான் தருண். மகப்பேறு மருத்துவரிடம் சென்று வந்ததைப் பற்றி விவரித்துக் கொண்டிருந்த உத்ரா, மருந்துச் சீட்டில் குறிப்பிட்டிருந்த வார்த்தையை ‘கன்செஷன்’ எனத் தவறாக உச்சரித்து, 20% சலுகைத் தந்திருப்பதாக மகிழ்ச்சியில் மிதந்து கொண்டிருந்தாள்.
“சரி! சரி! எங்க இங்க்லிஷ் எல்லாம் அவ்வளவுதான்,” முகம் சுருக்கினாள் பேதை.
“சிம்பிள் லாஜிக் டி! எந்த டாக்டராவது டிஸ்கவுன்ட் தந்து பார்த்திருக்கீயா,” அவன் விடாமல் ஓட்ட, அவனுக்கு ஷ்ரவனின் எண்ணிலிருந்து அழைப்பு வந்தது.
மனையாளை வம்பிழுப்பதில் மும்முரமாக இருந்தவன், அண்ணனின் அழைப்பை லட்சியம் செய்யவில்லை. தொடர்ச்சியாக மூன்றுமுறை அழைப்பு வரவும்,
“ஏதாவது முக்கியமா இருக்கப்போகுது தருண். அண்ணாகிட்ட பேசு,” குறுக்கிட்டாள் உத்ரா.
“சொல்லுடா!” சிடுசிடுத்தவன், ஷர்மிலாவின் குரல் கேட்டதும் இரட்டிப்பு எரிச்சல் கொண்டான்.
அவன் குணமறிந்தவள், “ப்ளீஸ். ரம்யாகிட்ட ஃபோன தந்துடாதே. உன்கிட்ட தான் பேசணும்… ஷ்ரவனுக்கு ஆக்சிடன்ட்,” அவள் தொடங்கியதுதான் தாமதம்.
“என்ன.. என்னாச்சு… எப்படி…?” பயத்தில் தருணின் குரல் தழுதழுத்தது.
“பதற்றப்படாதே,” என ஆசுவாசப்படுத்தி, தேவையான அளவு மட்டும் பகிர்ந்தவள், ரம்யாவிடம் பக்குவமாக எடுத்துச் சொல்லி அழைத்து வருமாறு கூறி மருத்துவமனையின் விலாசத்தை பகிர்ந்தாள்.
‘என்ன சொல்லி இவளை இந்த ராத்திரி வேளையில் அழைத்துச் செல்வது!’ யோசனையுடன் தன் அறையிலிருந்து மாடி இறங்கியவன், வாசலுக்கும் வசிப்பறைக்கும் நடந்துகொண்டிருக்கும் ரம்யாவைக் கண்டு அதிர்ந்தான்.
பத்து மணியைத் தாண்டியும் ஷ்ரவன் வீட்டிற்கு வரவில்லை என்றதும் தவித்துப்போயிருந்தாள் ரம்யா. காரணம் சொல்லிவிட்டுச் சென்றிருப்பவரை அழைத்து விசாரிப்பது நாகரீகம் இல்லை எனப் புத்தி தடைவிதிக்க, கவலையில் தோய்ந்திருந்த மனம் அழைத்துப் பேசத் தூண்ட, என ஊசலாடிக் கொண்டிருந்தாள்.
மாடிப்படியில் தருணைக் கண்டதும், “ஷ்ரவன் வர நேரம். அதான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன்,” பதற்றத்தை மறைத்துப் புன்னகைத்தாள்.
அவளிடம் பூசிமெழுகுவது ஆகாத காரியம் என உணர்ந்தவன், மெல்ல சோஃபாவில் அமரவைத்து, அவள் வலதுகையை தன் கரங்களில் அழுந்த பிடித்துக்கொண்டு,
“நான் சொல்றத பதற்றப்படாம கேளு,” என மெல்லத் தொடங்கினான்.
“ஷ்ரவனுக்கு என்ன ஆச்சு?” பொலபொலவென்று அழத்தொடங்கினாள் பெண்.
“நீ பயப்படும் அளவுக்கு எதுவுமாகல ரம்யா,” என மறுகணமே அவளைத் தோளோடு சேர்த்து கெட்டியாக அணைத்துக்கொண்டவன், ஷர்மிலா சொன்னதில் கால் பங்குக்கும் குறைவாகக் கூறி, மருத்துவமனைக்குச் செல்லலாம் என அவளைத் தயார்படுத்தினான்.
நடைப்பிணமாக காரில் ஏறி அமருபவளைக் கண்டு உடல் நடுங்கியது அவனுக்கு.
இதற்கிடையில் பாதியில் அழைப்பைத் துண்டித்த தருண் மீண்டும் அழைக்காததை எண்ணி கவலையில் கரைந்த உத்ரா அவனுக்கு விடாமல் அழைத்துக் கொண்டிருக்க, வேறு வழியில்லாமல் அழைப்பை ஏற்று பொத்தாம் பொதுவாகப் பதிலளித்தான்.
உத்ரா ரம்யாவிடம் பேச முயல அவளோ பிடிவாதமாய் மௌனம் சாதித்தாள். மருத்துவமனைக்குச் சென்றுவிட்டுத் தகவல் சொல்கிறேன் என மனையாளிடம் கூறி அழைப்பைத் துண்டித்தான் தருண்.
மருத்துவமனையை வந்தடையும் அந்த அரைமணி நேரம் யுகமாகத் தோன்ற, வாசலில் ஷர்மிலாவின் உருவம் தெரிந்ததும், முதல் முறையாக, அவளைக் காண்பதில் நிம்மதி கொண்டான் தருண்.
ரம்யாவின் அருகே ஓடிவந்த ஷர்மிலா, “ஷ்ரவன் இஸ் டூய்ங்க் ஓகே ரம்யா. செடேடிவ் கொடுத்திருக்குறதுனால மயக்கத்துல இருக்கான். நீயே வந்து பாரு,” நம்பிக்கையூட்டி கார் கதவைத் திறக்க, அப்போதும் சிலையாக அமர்ந்திருந்தாள் பெண்.
“எழுந்து வா ரம்யா!” உலுக்கிய ஷர்மிலா, முன்னிருக்கை மொத்தமும் ரத்த வெள்ளத்தில் நனைந்திருப்பதைக் கண்டதும்,
“ஓ மை காட்! ஸ்டெரச்சர் கொண்டுவாங்க!” என அடிவயிற்றிலிருந்து அலறினாள்.
ரத்த வெள்ளத்தில் இருப்பது கூடத் தெரியாமல் பிரம்மை பிடித்ததுபோல ஸ்டெரச்சரில் கிடக்கும் தோழியிடம் பேசச்சொல்லி கெஞ்சிக்கொண்டே அவர்களைப் பின்தொடர்ந்தான் தருண்.
அவசர அறுவை சிகிச்சை பிரிவு வந்ததும், “தருண்! நீ ஷ்ரவனைப் போய் பாரு. நான் இவளுக்கு ட்ரீட்மென்ட் தந்துட்டு உன்னைக் கூப்பிடறேன்,” எனத் தடுத்தாள் ஷர்மிலா.
“இவளைக் காப்பாத்திக் கொடுங்க ப்ளீஸ்,” கண்ணீர் மல்க, அரை மயக்கத்தில் இருந்த தோழியின் தலையைக் கோதினான்.
“பயப்படாம போ தருண். ரெண்டு பேரையும் காப்பாத்தி தருவது என் பொறுப்பு,” தீர்க்கமாக உரைத்து, அவசர சிகிச்சை அறையின் உள்ளே சென்று தாளிட்டாள்.
ஈருடல் ஓர் உயிராக உறவாடும் தோழியே!
இக்கட்டான நேரத்தில் தன்னந்தனியாக விட்டாயே!
ஆறுதல் சொல்ல யாருமின்றி – விடை தேடுகிறேன்
அகத்தில் நிழலாடும் நின் நினைவில்…