Skip to content
Post Views: 133
ரிதம் 2
“எதுக்குடி அவர் கிட்ட இருந்து வாங்குன?” என்று கோபமாக கேட்டாள் நத்தாஷா.
“ஏன் வாங்கினேன்னு கேட்டால் என்ன அர்த்தம்? உனக்கு எந்த வகையிலயாவது உபயோகப்படும்னுதான் வாங்கினேன்,” என்றாள் ப்ரீத்தி.
“அவங்க எந்த இன்டென்ஷன்ல கொடுக்குறாங்கன்னு உனக்கு தெரியலையா? பாக்கவே பொறுக்கி மாதிரி இருக்காங்க?” கடுப்பாக கூறினாள் நத்தாஷா. அவளுடைய ஆற்றாமையை இறக்கிக் கொண்டிருந்தாள்.
Advertisement
“என்ன, பொறுக்கி மாதிரி இருக்கானா? உனக்கு என்ன புத்தி பேதளிச்சு போச்சா?” என்றாள் ப்ரீத்தி.
“பின்ன இல்லையா?” என்று அவள் கேட்க,
“தாடி வச்சவங்க எல்லாம் உனக்கு பொறுக்கியா?” என்றாள் ப்ரீத்தி.
Advertisement
கருப்பு கலர் ஹுட்டி அணிந்து, நைட்ல கிளாஸை கண்களுக்கு பொருத்தி இருந்தவன். ஆறடி உயரத்தில் ஆஜானுபாகுவாகத்தான்இருந்தான். ஆனால் அவன் முகம் தாடிக்குள் ஒளிந்திருந்தது. ஹுட்டி தலையை மறைந்திருக்க, கிட்டத்தட்ட அவன் தன்னை மறைத்தார் போல வந்திருக்கிறான் என்று தோன்றியது. அதனால் பார்த்ததும் நல்ல அபிப்பிராயம் தோன்றவில்லை நத்தாஷாவிற்கு. நிதானமாக சிந்திக்கும் நிலையிலும் அவள் இல்லை.
Advertisement
“உனக்கு நட்டு கழண்டுடுச்சுன்னு நினைக்கிறேன்,” என்றாள் ப்ரீத்தி.
‘உண்மையில் அப்படித்தான் இருக்குமோ?’ என்று நத்தாஷாவே நம்ப ஆரம்பித்து விட்டாள். அவ்வளவு வேதனைகளை தாங்கிக் கொண்டிருந்தாள். வெற்றியின் விளிம்பில் இருக்கும் போது, தோல்வி என்பது ஒரு மனிதனை சாய்க்க வல்ல ஆயுதம்தான்.
“முதலில் இங்கிருந்து கிளம்பலாண்டி,” என்று கூறியவள், தன் தோழியுடன் கிளம்பி விட்டாள்.
Advertisement
அவர்கள் வீட்டிற்குள் வரும்போது ஏதோ துக்க நிகழ்வை ஆராதிக்கும் வீடு போலத்தான் இருந்தது.
“நீ நல்லா பண்ணேம்மா. அவனுங்கதான் ஏதோ பிராடுத்தனம் பண்ணிட்டானுக,” என்று ப்ரீத்தியின் சித்தி, சித்தப்பா சொல்லும்போது அவளுக்கு எப்படி எதிர்வினை ஆற்றுவது என்று தெரியவில்லை. உண்மையில் யாரையும் எதிர்கொள்ளும் தைரியம் இல்லை.
அவள் நிலையறிந்து ப்ரீத்தி சமாளித்து, அவளை அறைக்குள் அனுப்பிவிட்டு, அவள் தன் சித்தியிடம் அங்கு நடந்ததை சொல்லிக் கொண்டிருந்தாள்.
அறைக்குள் வந்தவள், குளியலறைக்கு சென்று சுவரோடு சுவராக இணைந்து நின்று கண்ணீரில் கரைந்து கொண்டிருந்தாள்.
எத்தனை போராட்டங்கள்? எத்தனை அவமதிப்பு? இதையெல்லாம் தாண்டி இறுதிச்சுற்றுக்கு வந்துவிட்டாள். அவள்தான் ஜெயிக்கப் போகிறாள் என்ற நிலையில் இருந்தாள். ஆனால் தனக்கு மூன்று இடங்களில் ஒன்று கூட கிடைக்கவில்லை என்பதை அவளால் நம்பவே முடியவில்லை.
தோல்வியடையும் ஒவ்வொருவரின் நிலையும் இதுதான் என்றாலும், அந்தப் போட்டியின் ஆரம்பத்திலிருந்து முடிவுவரை அவளுக்கு கிடைத்த அங்கீகாரங்கள், வெற்றிகள், பாராட்டுக்கள் எல்லாமே அவள்தான் வெற்றியாளர் என்று அவளை மட்டுமல்ல, பார்த்துக் கொண்டிருந்த ஒவ்வொருவரையும் சிந்திக்க வைத்திருந்தது. இந்த கடைசி நாளில் கூட, கிட்டத்தட்ட அவள்தான் வெற்றியாளர் என்ற நிலையில் பேசப்பட்டுக் கொண்டிருக்க, இப்போது முற்றிலும் அப்படியே தலைகீழாக கவிழ்த்து விட்டார்கள். நினைக்க நினைக்க நெஞ்சு பொறுக்கவில்லை. அடுத்த நாளும் அதே நிலைதான். அங்கேயே அழுது கரைந்து கொண்டு இருந்தாள். ப்ரீத்தி எவ்வளவு சமாதானம் கூறியும் அவளால் அதிலிருந்து மீள முடியவில்லை.
அவள் தாய் தந்தையிடம் இருந்து அழைப்பு வந்தது. “பரவாயில்லை, அடுத்த முறை பார்த்துக் கொள்ளலாம். வீட்டிற்கு வந்து சேர்,” என்று.
ஆனால் ஏதோ ஒரு விரக்தி நிலை. அது என்னவென்று அவளால் வரையறுக்க முடியவில்லை. உயிரையே மாய்த்துக் கொள்ளலாம் என்று கூட எண்ணம் தோன்றியது. ஏதோ தன் வாழ்க்கையே முடிந்து விட்டதாக எண்ணினாள். தன் மனதை சிறிதாக தேற்றிக் கொள்ள நினைத்தாள். ஆனால் முடியவில்லை என்பதுதான் உண்மை.
“இப்படியே ரூமுக்குள்ள அடஞ்சு அழுதுட்டே இருந்தா என்னமா அர்த்தம்? மனச தேத்திக்கோ. அப்படியே கொஞ்சம் பீச்சுக்கு போய் காத்து வாங்கிட்டு அவளை சமாதானம் பண்ணி கூட்டிட்டு வா,” என்று ப்ரீத்தியின் சித்தி சொல்ல,
ப்ரீத்தியும் அவளை அழைத்துக்கொண்டு மெரினா கடற்கரைக்கு வந்து சேர்ந்தாள். அது பொது இடம் என்பதால் அவள் அழவில்லை. ஆனால் தன் நிலையில் இருந்து மீளவும் இல்லை.
அவளை கண்டுகொண்ட ஒரு சிலர் அவளை நெருங்கி, “மேடம், நீங்க ரொம்ப சூப்பரா பண்ணீங்க. நீங்கதான் ஜெயிக்க வேண்டியது. ஆனா பாருங்க, அவங்களுக்கு கொடுத்துட்டாங்க. எங்களுக்கு ரொம்ப வருத்தம்,” இப்படி மாறி மாறி பேசிக் கொண்டிருக்க,
எதை மறக்க வேண்டும் என்று வந்தாளோ, அதையே மற்றவர்களும் நினைவுபடுத்தி விட்டு சென்றனர். ஆனால் புகழ் ஜெயிப்பவர்களைத் தானே திரும்பிப் பார்க்கும்; தோற்பவர்களை மறந்து விடும் அல்லவா? மக்களின் மனதில் அவள் இடம் பெற்றிருக்கிறாள். ஆனால் அதை உணரும் நிலையில் கூட அவள் இல்லை.
சம்பந்தமே இல்லாமல் திடீரென்று அந்த ஹுட்டி மனிதனின் ஞாபகம் வந்தது நத்தாஷாவிற்கு.
‘இதற்கு பயந்துதான் அவன் முகத்தை மறைத்து வந்தாரோ? நானும் அதுபோல ஒரு உடையில் வந்திருக்கலாமோ? ஒருவேளை அவனும் இந்த கண்டஸ்டண்டில் தோற்றவனாக இருப்பானோ?’ என்று பல எண்ணங்கள் அவளை ஆக்கிரமிக்க தொடங்கின.
“பேசாம ஷால்ல முகத்தை மறைச்சுக்கோ. நீ ஜெயிக்கலனு கவலைப்படாத. எல்லாருடைய மனசுலயும் இடம் பெற்றிருக்க, அதுவே பெரிய விஷயம். எத்தனை பேருக்கு உன்னை யாருன்னு தெரிஞ்சிருக்கு பாரு? எல்லாரும் உனக்காக சப்போர்ட் பண்றாங்க பாரு? உன்னோட குரல் வளத்தை அவங்க மனசுல நீ பதிச்சிட்ட. ஜெயிக்கலனா என்ன? கிட்டத்தட்ட இப்பவே நீ ஒரு வி. ஐ. பி. யாகிட்ட. இதை வச்சு சினிமால ஏதாவது ட்ரை பண்ணலாம்,” என்றாள் ப்ரீத்தி.
“முட்டாள்தனம் பண்ண சொல்றியா? நான் இதுவரைக்கும் பண்ண முட்டாள்தனம் போதாதா? தோத்தவங்களை யாரும் திரும்பிப் பார்க்க மாட்டாங்க. இதுக்காக என்னோட படிப்பைக் கூட விட்டுட்டு வந்தேன். அதையும் விட்டா நடுத்தெருவுலதான் நிக்கணும். இனி என்னோட பெத்தவங்களுக்காக அதையாச்சும் பண்ணனும்,” என்றாள் நத்தாஷா.
அதற்குமேல் ப்ரீத்தி எதுவும் பேசவில்லை.
தோழி சொன்னது போல முகத்தை மறைத்துக் கொண்டு, தண்ணீரில் காலை வைக்க இருவரும் நின்று கொண்டிருந்தார்கள்.
மேடை, போட்டியாளர்கள், நடுவர்கள், இத்தனை நாள் கிடைத்த வரவேற்பு என்று எல்லாம் அவளை ஒரு சுற்று சுற்றி வர, தன்னிலை மறந்து தண்ணீரில் தன்னை மறந்து சற்று முன்னோக்கி சென்று விட்டாள் நத்தாஷா.
ப்ரீத்தி அவள் கையைப் பிடித்து இழுக்க, அவள் அதற்குள் நிலை இல்லாமல் சரிய ஆரம்பித்தாள்.
திடீரென்று ஒரு வலிய கரம் அவளைப் பிடித்து மண்ணுக்கு அழுத்தமாக இழுத்தது. அந்த ஸ்பரிசத்தில் தன் உணர்வு பெற்றவள், திடுக்கிட்டே நிமிர்ந்தாள். அதற்குள் அவன் கட்டுப்பாட்டிற்குள் வந்திருந்தாள்.
கரைக்கு அழைத்து வந்தவன், “என்ன இது முட்டாள்தனம்? நான்தான் என்னை வந்து பாருங்கன்னு சொன்னேன்ல?” முன்பு பேசிய கனிவு இல்லை. வார்த்தைகள் சற்று ஆக்ரோஷமாகவே வந்திருந்தது.
அவன், முந்தினம் மேடைக்கு பின்னால் அவளிடம் பேசியவன்தான். அதே உடை இல்லை என்றாலும், கிட்டத்தட்ட அதுபோல ஒரு உடையில் தன்னை மறைத்துக் கொண்டுதான் இருந்தான். தாடிக்குள் அவன் முகத்தை ஊடுருவினாள் நத்தாஷா.
“சார், நீங்களா?” என்றபடி ப்ரீத்தி அவனிடம் பேச ஆரம்பித்தாள்.
மீண்டும் அவன் பாக்கெட்டை துலாவினான்.
“என்கிட்ட உங்க கார்டு இருக்கு சார். நான் பத்திரமாத்தான் வச்சிருக்கேன்,” என்றாள் ப்ரீத்தி.
“உங்க பிரண்டு விரக்தியோட உச்சத்துல இருக்காங்க. உங்களுக்கு என் மேல சந்தேகம் இல்லனா அந்த அட்ரஸ்க்கு வந்து சேருங்க. அங்க எங்க அம்மாவும் இருப்பாங்க. கூட உங்கள போல கலைஞர்களும் இருப்பாங்க. நீங்க பயப்படுற அளவுக்கு எதுவும் இல்ல,” என்று கூறிவிட்டு அவர்கள் பதிலுக்கு காத்திருக்காமல் நடந்து விட்டான்.
அவன் பேசியது நத்தாஷாவிற்கும் நன்றாகவே கேட்டது. ஆனால் ஏற்க மனம் ஏனோ சண்டித்தனம் செய்தது.
பல குழப்பத்தோடு வீட்டுக்கு வந்து சேர்ந்தாள். மறுநாள் அங்கு சென்று பார்க்கலாம் என்று ப்ரீத்தி கூறினாள்.
“வேண்டாம், ஊருக்கு கிளம்பலாம்,” என்றாள் நத்தாஷா.
“எதையும் முயற்சி பண்ணி பாக்காம இருக்கக் கூடாதுடி. உன் கூட துணைக்கு நான் இருக்கேன். வேணும்னா ஒன்னு பண்ணலாம். தம்பியையும் சேர்த்து கூட்டிட்டு போகலாம், நம்ம பாதுகாப்புக்கு. ஏதாவது பிரச்சனை வர மாதிரி இருந்தா உடனே கிளம்பிடலாம்,” என்றாள் ப்ரீத்தி.
அவளுக்கு குழப்பம் தீர்ந்திருக்கவில்லை. இன்னொரு ஏமாற்றத்தை அவள் ஆழ்மனம் ஏற்காது என்று தோன்றியது.
“எனக்கு தேவையில்லாத வேலைன்னு தோணுது, ப்ரீத்தி,” என்றாள் நத்தாஷா.
“புடுங்கப் போறது எல்லாமே தேவையில்லாத ஆணிதான். ஆனாலும் புடிங்கிட்டு அதுக்கப்புறம் போகலாமே?” என்று ப்ரீத்தி பாவனையாக கூறினாள்.
தன் தோழிக்காக அதையும் முயற்சித்து பார்க்கலாம் என்று முடிவிற்கு வந்தாள் நத்தாஷா. உடனே அவளுடைய சித்தி மகனான அவளுடைய தம்பிக்கு அழைத்து அதைப் பற்றி பேசினாள்.
வீட்டிற்கு வந்ததும் மூவருமாக விசிட்டிங் கார்டை வைத்துக் கொண்டு கலந்தாலோசித்தார்கள். அவனும் அவர்களுடன் துணைச் செல்வது என்று முடிவெடுத்து விட்டான்.
மறுநாள் குளித்து சிவப்பு நிற சுடிதார் அணிந்து கொண்டு, ப்ரீத்தி, ப்ரீத்தியின் தம்பி வாசு, நத்தாஷா என்று மூவரும் கிளம்பினார்கள்.
“இன்னைக்கு போற வேலை நல்லபடியா முடியனும்னு அந்தக் கடவுளை வேண்டுகிறேன். மூணு பேரா போறீங்க. காரை எடுத்துட்டு போங்க,” என்று கூறினார் வாசுவின் தாய்.
வாசு வாகனத்தை ஓட்ட, அந்த அட்ரஸ் இருக்கும் இடத்திற்கு அவனே சரியாக அழைத்து வந்தான்.
டி.நகர் தாண்டி வடபழனியை நோக்கி சென்று கொண்டிருந்தது வாகனம். சென்னை பற்றி அறியாதவர்களுக்கு பெரிதாக அந்த இடம் தெரிந்திருக்க நியாயம் இல்லை. அவன் தம்பி துணைக்கு வந்தது உண்மையில் நல்லதாக போய்விட்டது என்று மனதினுள் நினைத்தாள் ப்ரீத்தி.
காலணிகள் போல் அமைந்திருக்கும் அந்த இடத்திற்கு வந்து சேர்ந்ததும், வீட்டு முகவரியை தேடிக் கொண்டு சென்றார்கள். கிட்டத்தட்ட அந்த வீடு கடைசியில் இருந்தது.
பங்களா வகைதான். ஆனால் லக்ஸரி என்று சொல்ல முடியாது.
வீட்டின் உள்ளே பார்க்கிங்கில் இருசக்கர வாகனம், சைக்கிள், கார் என்று வாகனங்கள் இருக்க, அவர்கள் மகிழுந்தை வெளியிலேயே நிறுத்திவிட்டு கேட்டில் இருக்கும் காவலாளியிடம் கூறிக்கொண்டு உள்ளே நுழைந்தார்கள்.
வீட்டிற்குள் இருந்து லட்சுமி கடாட்சமாக ஒருவர் வாசலுக்கு வந்து அவர்களை உள்ளே வரவேற்றார்.
“பார்க்க மகாலட்சுமி கணக்கா இருக்காங்கல்ல? இந்த வீட்டுக்கு ஓனரா இருப்பாங்களோ? இல்லல்ல, அவரோட அம்மாவா இருப்பாங்களோ?” என்று ப்ரீத்தி முனுமுனுக்க,
“அமைதியா இரு,” என்று சிறு குரலில் கூறினாள் நத்தாஷா.
அவர்களை வரவேற்பில் அமர வைத்துவிட்டு யாருக்கோ அலைபேசி மூலமாக தொடர்பு கொண்டவர், பிறகு வந்து அவர்கள் முன்பாக நிற்க, அவர்கள் எழுந்து நின்று கொண்டார்கள்.
“கௌதம் உங்கள மேல வர சொன்னான்மா. அதோ படி இருக்கு பாருங்க. அந்த வழியா போங்க. உங்களுக்கு குடிக்கிறதுக்கு ஏதாவது நான் மேல எடுத்துட்டு வரேன்,” என்று கூறினார்.
ப்ரீத்தி ‘சரி’ என்ற தலையாட்டினாள்.
“சாரிம்மா, அவங்களை கொஞ்சம் கீழே கூப்பிடுறீங்களா?” என்றாள் நத்தாஷா.
“அவன் கம்போசிங்ல இருக்கான்மா,” என்றார் அவர்.
“சரி, அப்ப நாங்க போயிட்டு, அவரு எப்ப ஃப்ரீயா இருப்பாரோ அப்போ வரோம்,” என்று கூறினாள் நத்தாஷா.
ஓரளவுக்கு அந்தப் பெண்ணின் பார்வையை வைத்து மனநிலையை யூகித்து கொண்டவர், தனக்குள்ளாக சிரித்துக் கொண்டார். அவர்களுக்குள் சிறு சலசலப்பு.
“ஒரு நிமிஷம், நான் அவனை கீழே வர சொல்றேன்,” என்று கூறிவிட்டு மீண்டும் அலைபேசியை நோக்கி நடந்தார்.
திரும்பி வந்தவர் அவர்களைப் பார்த்து புன்னகைத்தார். “பெண்களுக்கு இந்த பாதுகாப்பு உணர்வு ரொம்ப அவசியமானதுதான். இவ்வளவு தூரம் கஷ்டப்பட்டு வந்திருக்கீங்க. அவனை பாத்துட்டு போங்க. நான் அவனோட அம்மா மகாலட்சுமி,” என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார்.
“ஏய், அவங்க பேரு உண்மையிலேயே மகாலட்சுமியாண்டி,” என்று புன்னகை பூத்தாள் ப்ரீத்தி.
சிறிது நேரத்தில் காலடி சத்தம் கேட்க, நால்வருமே திரும்பி அனிச்சையாக பார்த்தனர்.
‘நல்ல வேளையாக இம்முறை அவன் ஹுட்டி அணியவில்லை. ஆனால் வீட்டுக்குள் எதற்காக ஷூ அணிந்திருக்கிறான்?’ என்று நினைத்தாள் நத்தாஷா.
error: Content is protected !!