Skip to content
Post Views: 188
அத்தியாயம் 18
பெண் பார்க்கும் நிகழ்வுக்கு வீடு தயாரானது.
Advertisement
“அம்மா, காஃபி மட்டும் நாகுவே போடட்டும். வழக்கமா போடற பஜ்ஜி, கேசரி எல்லாம் செய்யாதீங்க. வித்யாசமா எதாவது செய்யுங்க” என்றாள் சின்ன அக்கா.
“பார்த்தியா நாகு, இவ அலம்பலை..” என்று பொருமினார் அண்ணி.
Advertisement
Advertisement
மாலை ஆறு மணிக்கு மினி பஸ்சில் வந்து இறங்கினார்கள் மாப்பிள்ளை வீட்டிலிருந்து.
‘என்ன இவ்வளவு பெரிய கூட்டமா இருக்கே!’ என்று தயங்கினாலும், வந்தவர்களை இன்முகத்தோடு வரவேற்றனர் சுப்ரமணியன் தம்பதியினர்.
Advertisement
சம்பிரதாய நல விசாரிப்புகளுக்கு பிறகு,
“எங்களுக்கு பொண்ணை ரொம்பவே பிடிச்சிடுச்சு, உங்களுக்கும் விருப்பம்ன்னு தான் எங்க மச்சான் சொன்னாரு. அதான் இன்னிக்கே ஒப்புதாம்பூலம் மாத்திக்கலாம்னு நெருங்கிய சொந்தத்தை எல்லாம் கூட்டிட்டு வந்துட்டோம்..” என்றார் மாப்பிள்ளையின் அம்மா.
“என்ன அத்தை இது. நம்ம வீட்லயும் எல்லாரும் தயாரா இருக்க வேணாமா? அவங்க பக்கத்தை மட்டும் பார்த்து பேசுறாங்க?”என்று மாமியாரின் காதை கடித்தார் ரத்னாவின் அண்ணி.
அவருக்கும் நெருடலாக இருந்த போதிலும் அமைதியாகவே இருந்தார்.
நிறைய ஆட்கள் இருக்கவும், குழந்தை அழத்தொடங்கியது.
“நாகு, பாப்பாவை கொஞ்சம் காத்தாட வெளிய வச்சுக்கோயேன்” என்று ரத்னாவிடம் குழந்தையை கொடுத்தார் அண்ணி. அவளும் சரி என்று குழந்தையை தூக்கிக்கொண்டு வாசலுக்கு சென்றாள்.
“இது யாருங்க உங்க சின்ன பொண்ணா?” என்றார் வந்திருந்தவர்களில் ஒரு பெண்மணி.
“ஆமாங்க” என்றார் சுப்பிரமணியன்.
சில நிமிடங்கள் சலசலவென அவர்களுக்குள் பேசினார்கள். பெற்றவர்களுக்கு எதற்காக இந்த சலம்பல் என திக் திக் என்று இருந்ததது.
“இங்க பாருங்க, எங்க மனசுல படறதை கேட்கிறோம். உங்களுக்கே தெரியும் எங்களுக்கு ரெட்டை பசங்க. தங்கராசுக்கு தான் இப்ப பொண்ணு கேட்டு வந்திருக்கோம். இதோ இவன்தான் எங்க இன்னொரு பையன், சின்னராசு” என்று அங்கே இருந்த ஒருவனை கை காட்டினார் மாப்பிள்ளையின் அம்மா.
மாப்பிள்ளை தங்கராசு நல்ல உயரமாக ஜம்மென்று இருக்க, அந்த சின்னராசு கொஞ்சம் ஒல்லியாக, உயரம் நிறம் எல்லாம் கம்மியாக சுமாராக காட்சி அளித்தான்.
“தங்கராசுக்கே ஜாதகம் பொருந்த நாள் பிடிச்சிடுச்சு. இவங்க கல்யாணம் முடிஞ்சு தான் சின்னராசுக்கு பார்க்கவே ஆரம்பிக்கணும். இப்ப உங்க சின்ன பொண்ணை பார்த்ததும் தான் எங்களுக்கே தோனுது. எங்க சின்னராசுக்கு உங்க சின்ன பொண்ணை பேசுவோமே?” என்றார் மாப்பிள்ளையின் அத்தை ஒருவர் சிரித்துக்கொண்டே.
இவர்களுக்கு எல்லாம் என்ன சொல்வதே என்று ஒரு நிமிடம் புரியவில்லை.
“ரெண்டு பொண்ணுங்களும் ஒரே வீட்ல இருந்தா ஒருத்தருக்கு ஒருத்தர் துணையா இருப்பாங்க தானே?” என்றார் இன்னொரு பெண்மணி.
அவர்கள் பேசுவதை பார்த்தால், எதேச்சையாக இன்று பார்த்து இப்பொழுது தோன்றுவதை கேட்பது போல எல்லாம் இல்லை. முன்பே இதை திட்டமிட்டு யோசித்து பேசுவதை போலவே இருந்தது.
“இல்லைங்க, அது சின்ன பிள்ளை. இந்த பொண்ணுக்கும் அவளுக்கும் எட்டு வயசு வித்யாசங்க.. இப்ப சின்ன பொண்ணுக்கு நாங்க கல்யாணம் செய்றதா இல்லைங்க” என்றார் சுப்பிரமணியன் இதை இத்தோடு முடித்துவிடும் எண்ணத்தோடு.
“தங்கராசுக்கும் பொண்ணுக்கும் ஒரே வயசு.. இருபத்தி ஆறு. நீங்க சொல்ற கணக்கு படி பார்த்தாலும் சின்ன பொண்ணுக்கு பதினெட்டு ஆகுதுங்களே? எட்டு வயசு வித்யாசம் ஒன்னும் பெருசு இல்லையே ? நல்ல சம்பந்தம்.. ஏன் உடனே வேணாம்னு சொல்றீங்க.. யோசிச்சு சொல்லுங்க..”
இவர்கள் என்ன இப்படி கிடுக்குபிடி போட்டு பேசுகிறார்கள் என்று சங்கடமாக இருந்தது.
“எங்களுக்கு எல்லாம் ரெண்டு மருமகளையும் ஒரே வீட்ல எடுக்கிறதுல ரொம்ப இஷ்டம். யோசிங்க.. ரெட்டை பசங்க வேற.. அக்கா தங்கச்சிங்களே வாக்கப்பட்டு வந்தா குடும்பமும் பிரியாது பாருங்க..
எங்க வசதிக்கு பெரிய சம்பந்தமே வரும். நாங்க காசு பணத்தை விட நல்ல மனுஷங்களா பார்க்கிறோம். அதான் உங்களை கேட்கிறோம்.
அதுவுமில்லாமல், நீங்க இப்பதான் ஒரு பொண்ணுக்கு கல்யாணம் செஞ்சிருக்கீங்க. உடனே அடுத்து ரெண்டு கல்யாணம் செய்ய யோசனையா இருந்தா கவலையே படாதீங்க. நீங்க ஒரு பொண்ணுக்கு மட்டும் செய்ங்க போதும், இன்னொரு பொண்ணுக்கு நாங்களே நகை எல்லாம் கூட செஞ்சு போட்டுக்கிறோம், எங்களுக்கு ரெண்டு பசங்களுக்கும் ஒண்ணா கல்யாணம் நடந்தாலே போதும்.
கல்யாண செலவும் நாங்களே பார்த்துகிறோம். என்ன சொல்றீங்க?”
இவர்களை மேலே யோசிக்க விடாமல் அவர்களே பேசிக்கொண்டிருந்தார்கள்.
“அண்ணி, அந்த பையன் உள்ளே வரும்போது கவனிச்சீங்களா? கால் தாங்கி தாங்கி நடந்த மாதிரி இருந்துச்சு” என்று கதிர் அண்ணியிடம் மெதுவாக கூறினான்.
“அப்படியா?என்னடா சொல்ற?” இவர்கள் இருவரும் மெதுவாக பேசிக்கொண்டிருக்க,
“இங்க பாருங்க, நாங்க ஒளிச்சு மறைச்சு பேச விரும்பல.. இரண்டுபேரும் இரட்டை குழந்தைங்க. பிறக்கும்போதே சின்னவனுக்கு கால் லேசா வளைஞ்சிருந்தது. ஆனா சொன்னா தான் யாருக்கும் தெரியும். இப்ப கூட பாருங்க, நாங்க சொல்லலைன்னா உங்களுக்கு தெரிஞ்சிருக்காது.. அது பெரிய குறை இல்லைனாலும் நாங்க சொல்லி தான் பொண்ணை கேட்கிறோம்”
என்ன செய்வது என்று புரியாமல் நின்றனர் பெண் வீட்டார்.
கடைசியில், நடந்தால் இரண்டு கல்யாணமும் ஒன்றாக தான் நடக்கும் இல்லை என்றால் நாங்கள் வேறு இடம் பார்க்கிறோம் என்பது போல் வந்து நின்றார்கள்.
வாசலில் நின்றுகொண்டிருந்தாலும், உள்ளே பேசுவது அனைத்தும் ரத்னாவிற்கு கேட்டுக்கொண்டு தான் இருந்தது.
என்ன இது இப்படி ஒரு குழப்பம் என்று, அவருக்கு நெஞ்செல்லாம் படபடவென வந்தது.. . அப்பா அம்மா ஒத்துகிட்டா என்ன செய்வது என்று கை கால் எல்லாம் நடுங்கவே ஆரம்பித்தது.
தெய்வானையும் சுப்பிரமணியனும் ஒருவரை ஒருவர் என்ன செய்வது என்று பார்த்து நின்றனர்.
“இங்க பாருங்க, நாங்க போய் சென்னிமலை முருகனை கும்பிட்டுட்டு ஒரு, ஒரு மணி நேரத்துல திரும்ப வர்றோம். அதுக்குள்ள நீங்க எல்லாரும் பேசி, யோசிச்சு நல்ல முடிவா சொல்லுங்க” என்று கூறி வந்திருந்தவர்கள் கிளம்பி சென்றனர்.
அவர்கள் சென்றவுடன் ரத்னாவும் உள்ளே வந்தார்.
“எனக்கு இது சரியா வரும்போல தோனல தெய்வா, நாகுக்கு இப்ப கல்யாண வயசா என்ன?”
ரத்னா அண்ணிக்கும் தம்பிக்கும் இடையில் நின்றுகொண்டார்.
“என்ன சொல்றதுன்னே தெரியல. இவங்க முன்கூட்டிய ரெண்டு சம்பந்தம் வேணும்னு கேட்காம இப்ப நம்மள நிர்பந்தத்தில நிப்பாட்றது சரி இல்லை தானுங்க..” என்றார் தெய்வா சுணக்கமாக.
“அம்மா, எனக்கு இந்த மாபிள்ளையை ரொம்ப பிடிச்சிருக்கு. இவரு தான் மாப்பிள்ளைன்னு நீங்க தானே போட்டோ காட்டுனீங்க? நான் மனசுக்குள்ள அவரை நினைக்க ஆரம்பிச்சிட்டேன். ப்ளீஸ் ம்மா எனக்கு இந்த மாப்பிளையை கல்யாணம் பண்ணி வைங்க ம்மா” என்று அழ ஆரம்பித்துவிட்டார் சின்ன அக்கா.
ரத்னாவிற்கு தலை எல்லாம் சுற்றுவது போல ஆனது. கலக்கமாக அனைவரையும் பார்த்து நின்றார்.
“அம்மா, ஆனா அந்த ஆளுக்கு கால் நல்லாவே ஊனமா இருக்கு. ரொம்ப தாங்கி தான் நடக்கிறாங்க.. அதுவில்லாமல் அக்காவவிடவே ஹயிட் கம்மியா இருப்பாரு போல.. எனக்கு பிடிக்கலை” என்றான் கதிர்.
“பெரியவங்க பேசும்பொழுது சின்ன பையன் நீ எதுக்கு பேசுற?” என்று அதட்டினார் அண்ணன்.
“கல்யாண செலவு முழுசும் அவங்க செய்றேன்னு சொல்றாங்க ம்மா. யோசிங்க.. எப்படியும் நாம நாகுக்கு நகை எல்லாம் இனி தான் சேர்க்கனும், அதுவுமில்லாமல் பெரிய குடும்பம், நல்ல சம்பந்தம். ஆளுங்களும் நல்ல மாதிரியா தான் தெரியுறாங்க. கல்யாண செலவுமே நமக்கு மிச்சம். சின்ன குறையை பார்க்காட்டி இதுல நமக்கு தான் ஆதாயம்” என்றார் அண்ணன் .
“அதுக்காக எல்லாம் பொண்ணை குடுக்க முடியாது தப்பி. இரண்டு பசங்களும் ஒரே மாதிரி நல்லா இருந்தா அது வேற, குறை இருக்கிற பையனை அவசரமா நிச்சயம் பண்ற அளவுக்கு நாகுக்கு வயசும் ஆகல, பொண்ணு கல்யாணத்தை பண்ண முடியாத அளவுக்கு நான் கையாலாகாமையும் போகலை” என்றார் சுப்பிரமணியன் கோவமாக.
‘அப்பாடா’ என்று இருந்தது ரத்னாவிற்கு.
“அப்ப யாரும் என்னை பத்தி யோசிக்கலை இல்ல அப்பா. உங்க பெரிய பொண்ணு கல்யாணத்தை யோசிச்சு யோசிச்சு நான் இப்படி கல்யாண வயசு தான்டி நிக்குறது உங்க கண்ணுக்கு தெரியலை. உங்க செல்ல பொண்ணுக்கு வயசு ஆகலைன்னு சொல்றீங்க.. அப்ப எனக்கு?” என்று அழுதுகொண்டே பேசினார் சின்ன அக்கா.
“இந்த மாப்பிள்ளை இல்லைன்னா என்ன இப்போ, சீக்கிரம் வேற நல்ல சம்பந்தம் வரும்மா” என்றார் தெய்வானை சமாதானமாக.
“முடியவே முடியாது. இந்த மாப்பிள்ளை தான் எனக்கு பிடிச்சிருக்கு. நீங்க எல்லாரும் என்ன செய்வீங்களோ, இவர் தான் எனக்கு வேணும். இல்லைன்னா நான் செத்து போயிடுவேன்” என்றார் அவர் தீவிரமாக.
“என்ன ம்மா இப்படி எல்லாம் பேசுற? நீயும் உன் தங்கச்சியை பத்தி யோசிக்கணும் இல்ல” என்றார் அண்ணி.
“இங்க பாருங்க அண்ணி, அவளை பத்தி யோசிக்க என்ன இருக்கு. வசதியான வீட்டுல வாக்கப்பட என்ன கஷ்டம். அங்க நானும் இருக்க போறேன். நான் தங்கச்சிய நல்லா பார்த்துக்குவேன். இதுல மறுப்பு சொல்ல காரணமே இல்லையே?”
கடைசியாக, “நாகு ப்ளீஸ், என் வாழ்க்கையே இப்ப உன் கையில தான் இருக்கு. எனக்காக ஒத்துக்கோ” என்று ரத்னாவிடம் கெஞ்சினார்.
இனியும் பேசாமல் இருந்தால் நிலைமை கை மீறி போய்விடும் என்று நாகரத்னா,
“நான் வந்து ஒரு…” என்று தன் காதலை கூற நினைக்கையில், கதிர் ரத்னாவின் கைகளை இறுக்கி பிடித்து கூறாதே என்று தடுத்துவிட்டான்.
‘ஏன்?’ என்று விழித்தாள் பெண்.
அண்ணனும் சின்ன அக்காவும் இந்த இடத்தை முடித்தே ஆக வேண்டும் என்று அவர்கள் பங்கிற்கு பெற்றவர்களை கட்டாயப்படுத்தினார்.
“நான் சும்மா எல்லாம் சொல்லல அப்பா, கட்டாயம் இந்த கல்யாணம் நடக்காட்டி நான் உயிரோடவே இருக்க மாட்டேன்” என்ற சின்ன அக்காவின் மிரட்டலே ஜெயித்தது.
அரைமனதாக என்றாலும் சரி என்று ஒத்துக்கொண்டார்கள்.
மாப்பிள்ளை வீட்டினர் வந்து இவர்கள் சம்மதம் சொல்லவும் மிகவும் மகிழ்ச்சியாக இரு பெண்களையும் தங்கள் இரு மகன்களுக்கு நிச்சயம் செய்து கொண்டு , அடுத்த இரண்டாம் மாதத்தில் திருமண தேதியையும் நிச்சயம் செய்துவிட்டே புறப்பட்டனர்.
நடப்பது எதையும் ரத்னாவால் ஜீரணிக்கவே முடியவில்லை. பித்து பிடித்த நிலையில் இருந்தார்.
“இப்ப ஒன்னும் சொல்லாத நாகு, அப்புறம் பேசிக்கலாம்” என்று அண்ணி கூறியதை கேட்டு, குனிந்த தலை நிமிரவே இல்லை.
கல்யாணம் முடிவான மகிழ்ச்சியால் வானில் பறந்து கொண்டிருந்தார் சின்ன அக்கா. மற்றவர்களுக்கு சஞ்சலமும் குழப்பமும் அதிகமாக இருந்தது.
யாரும் அதிகம் பேசாமல் அன்று தூங்க சென்றுவிட்டார்கள்.
நள்ளிரவில், அண்ணியும் கதிரும் சத்தமில்லாமல் ரத்னாவை எழுப்பி, மொட்டை மாடிக்கு அழைத்து சென்றார்கள்.
மூவரும் அடுத்து என்ன செய்யலாம் என்று திட்டமிட ஆரம்பித்தனர்.
“ஏன் கதிர் என்னை சொல்ல வேணாம்னு தடுத்த?” என்றார் ரத்னா ஆதங்கமாக தம்பியிடம்.
“லூசாக்கா நீ? அப்பாவுக்கு கொஞ்சம் உறுத்தல் சின்ன வயசு பொண்ணை இப்படி கல்யாணம் செஞ்சு கொடுங்கணுமான்னு.. இப்ப நீ நான் ஒருத்தரை காதலிக்கிறேன்னு சொன்னேன் வை, அடுத்த யோசிக்காம சட்டுனு அப்பாவே இந்த கல்யாணத்தை முடிச்சிடுவாங்க”
“என்னது காதலா?” என்று நெஞ்சை பிடித்துக்கொண்டு நின்றுவிட்டார் அண்ணி.
“என்ன நாகு சொல்றான் இவன்? காதலா? என்கிட்டே சொல்லவே இல்ல? யார் அது? எத்தனை நாளா நடக்குது?”
“நான் உங்க கிட்ட சொன்னேன் தானே அண்ணி ?”
“எப்படீ சொன்ன?”
“அன்னிக்கு நாம படத்துக்கு போனப்ப, அரவிந்த்சாமி மாதிரி எனக்குன்னு ஒருத்தர் வருவார் பாருங்கன்னு”
“ஆங்.. அரவிந்த்சாமியா?”
“கண்ணத்தான் அரவிந்த்சாமியை விடவே சூப்பரா இருப்பாங்க தெரியுமா?”
“கண்ணத்தானா?”
சுருக்கமாக ரத்னா அவர்களின் காதல் கதையை கூறினார்.
“உனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லை, அதனால் அத நிறுத்த உதவி செய்யலாம்னு தான் வந்தேன். காதல் விவகாரம்ன்னு தெரிஞ்சிருந்தா நான் வந்தே இருக்க மாட்டேன்..”
“அண்ணி.. தெய்வமே.. நீங்க தான் என்னை காப்பாத்தணும்” என்று ரத்னா அவரின் காலில் விழுந்துவிட்டார்.
“பயமா இருக்குடா கதிர்.. உங்க அம்மாக்கு மட்டும் தெரிஞ்சதுன்னு வை, என்னை வெட்டி போட்டு குழம்பு வச்சிருவாங்களே?” என்றார் அண்ணி கதிரை பார்த்து.
“நீங்க குழம்புன்னா நான் பொரியல்.. விடுங்க அண்ணி பார்த்துக்கலாம்.”
“எதை பார்க்கிறது?”
காலில் விழுந்த ரத்னாவை மறந்துவிட்டு இவர்கள் இருவரும் புலம்பிக்கொண்டிருந்தனர்.
“அப்ப நான்”, என்றார் ரத்னா தலையை மட்டும் நிமிர்த்தி.
“எழுந்திரடி முதல்ல.. பார்க்க இந்த குழந்தையும் பால் குடிக்குமான்னு இருந்துட்டு நீ பண்ணி வச்சிருக்க வேலை என்ன?”, என்றார் அண்ணி ஆதங்கமாக.
“அவங்க ரொம்ப நல்லவங்க அண்ணி..”
“இப்ப உன் ஆளு எங்க இருக்காரு? சென்னையா?”
“இல்லை, அவர் இங்க நம்ம வீட்ல வேலை செஞ்ச மாதிரி, மைசூர்ல ஒரு வீட்ல வேலை செஞ்சுட்டு இருக்காங்க. அங்க போய் ஒரு வாரம் தான் ஆகுது. இன்னும் எட்டு மாசம் அங்கே வேலை இருக்கும்னு சொன்னாங்க.”
“அவங்க கூட போன்ல பேசமுடியுமா அக்கா?” என்றான் கதிர்.
“இல்லடா லெட்டர் தான் போடமுடியும்”
“சரி, முதல்ல இங்க நடக்கிறதா அவருக்கு தெரியபடுத்துவோம். அவர் என்ன சொல்லறாருன்னு பார்ப்போம். அதுக்கு இடையில கல்யாணத்தை நிறுத்த முடியுமான்னு யோசிப்போம்.”
“சரி அண்ணி.. சரி அண்ணி” என்றனர் கதிரும் ரத்னாவும் கோரஸாக.
“நாளைக்கு யாருக்கும் தெரியாம அந்த சின்னராசு கிட்ட பேசி பார்க்கலாம். இந்த கல்யாணத்துல விருப்பப்ம் இல்லைன்னு சொல்லி பேசி பார்க்கலாமா?”
“சரி அண்ணி சரி அண்ணி..” என்று கதிரும் ரத்னாவும் மண்டையை ஆட்டினார்கள்.
“நான் என்னமோ கொள்ளைக்கூட்ட தலைவி மாதிரி நீங்க ரெண்டு பேரும் மண்டைய ஆட்டுறீங்க.. திருட்டு முழி முழிச்சு மாட்டிவிட்றாதீங்க டா..”
“சரி அண்ணி சரி அண்ணி..” என்று மீண்டும் மண்டையை ஆட்டினார்கள் இருவரும்.
தினமும் மொட்டைமாடியில் இவர்கள் ரகசிய மீட்டிங்குகள் தொடர்ந்தது. அடுத்த நாளில் இருந்து ரத்னா யாருக்கும் தெரியாமல் இவர்கள் மூவருக்கும் டீ போட்டு பிளாஸ்கில் எடுத்து வந்துவிடுவார். அதனுடனே கொறிப்பதற்கு ஸ்னாக்ஸ் வேறு.
என்ன இவர்கள் திட்டங்கள் எல்லாம் புஸ் என்று போய் கொண்டிருந்தது. அந்த சின்னராசு சரியான திமிர் பிடித்தவனாக இருந்தான்.
“காதல் கத்திரிக்காயை எல்லாம் கல்யாணத்துக்கு முன்னவே தலை முழுகிரணும் புரியுதா? வெளியே தெரிஞ்சா எனக்கு தான் அசிங்கம் அதனால தான் யார்கிட்டயும் சொல்லாம விடறேன். புரியுதா?” என்று ரத்னாவை நன்றாக மிரட்டி இருந்தான்.
சரி சின்ன அக்கா மூலம் தங்கராசுவிடம் பேசி இந்த கல்யாணத்தை தவிர்க்க முயற்சி செய்தனர். சின்ன அக்காவே அதற்கு போர் கொடி தூக்கினார். கையில் கத்தியை எடுத்துக்கொண்டு, இனி இப்படி பேசினா கையை வெட்டிப்பேன் என்று பயம் காட்டினார்.
ஒரே நாளில் இரண்டு திருமணங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு கொண்டிருந்தது. இரண்டு முஹூர்த்தத்திற்கும் ஒன்றரை மணி நேர இடைவெளி இருந்தது.
“நமக்கு இருக்கிறது இந்த ஒன்றரை மணி நேரம் தான். அதுல தான் எதாவது செய்யணும். நல்ல ஐடியாவா யோசிங்க” என்றார் அண்ணி இருவரிடமும்.
ஒரு வழியும் தெரியாமல் மூவரும் திண்டாடி கொண்டிருந்தார்கள்.
error: Content is protected !!