காதலும் கடத்தப்படும் – 8

காதலும் கடத்தப்படும் – 8
“சூப்பர் லவ் ஸ்டோரி, இதெல்லாம் சினிமாவா வந்தா எவ்வளவு நல்லா இருக்கும்?” என்றபடி லதா படியிறங்க, அந்த கதையை அசைபோட்டபடி இந்து பின்தொடர்ந்தாள். ‘எழுத்து : இளமாறன்’ என்று கதையின் தொடக்கத்தில் குறிப்பிட்டிருந்தது அவளது நினைவிற்கு வந்தது. ‘அந்த ஹீரோவோட நிஜப்பெயர் தான்டி இளமாறன்’ என்று லதா கூறியதும் நினைவிற்கு வந்தது.
Advertisement
“யாராவது கீழ இருக்காங்களா?” என்றாள் இந்து.
“சாருக்கு க்ளாஸ் முடிய இன்னும் பத்து நிமிஷம் இருக்கு, யாரும் இருக்கமாட்டாங்க” என்றபடி அவர்கள் கீழே வர, கடையின் வாயிலில் இளமாறன் நின்றிருந்தான்.
‘இவன் எதுக்கு இங்க நிக்கறான்?’ என்று கண்ணாலேயே லதாவிடம் இந்து வினவ,
Advertisement
‘நான் பார்த்துக்கறேன்’ என்றபடி கீழே சென்றாள், லதா.
Advertisement
“இங்க தான் மேஜை மேல வச்சேன் அதுக்குள்ள எங்க போச்சுன்னு தெரியலையே” என்று ஆசிரியரின் குரல் கேட்க, தோழிகள் திடுக்கிட்டு நின்றனர்.
தோழிகளைக் கண்டவர், “இன்னுமா நீங்க வீட்டுக்கு போகல?” என்றார்.
“அது வந்து…”என்று லதா தயங்க, இளமாறனை ஓரக்கண்ணால் பார்த்தபடி கைகளை பிசைந்துகொண்டு நின்றாள், இந்து.
Advertisement
“இந்தாங்க சார்” என்று இளமாறனின் காகித கட்டினை நீட்டினாள், லதா.
“என்னம்மா இது? எதுக்குமா இங்க இருந்ததை எடுத்துட்டு போனீங்க?”
“சார், சும்மா படிச்சு பார்க்கலாமுன்னு…”
“அதுக்குன்னு இப்படியா?” என்று அவர் குரல் உயர்த்த,
“அண்ணே விடுங்க பரவால்ல” என்ற இளமாறன், தோழிகளைக் கண்டு, “கதை நல்லா இருந்ததா?” என்றான்.
“ரொம்ப சூப்பர்” என்றாள், லதா.
“ஒரு தடவை வந்து நாடகத்தை பாருங்க”
“கண்டிப்பா வரோம்”
“இன்னொரு தடவை இப்படி பண்ணாதீங்கமா, பயந்தே போயிட்டேன்” என்று ஆசிரியர் குறுக்கிட,
“இல்ல சார் பண்ண மாட்டோம்” என்றாள், லதா.
தோழிகள் கிளம்புகையில்,
“சாரி” என்றாள் இந்து, இளமாறனிடம்.
“பரவால்ல, இதுல என்ன இருக்கு?” என்றுவிட்டு அவன் புன்னகைக்க, இவளும் சிறு புன்னகையோடு கிளம்பிச் சென்றாள்.
“டைப்ரைட்டிங் க்ளாஸ் கிளம்பாம எதுக்கு ரெண்டு பேரும் இங்க நின்னுட்டு இருக்கீங்க?” என்றாள், இந்துவின் தாய், தோழிகளிடம். வகுப்பிற்கு செல்ல இந்துவின் இல்லத்திற்கு வந்த லதா, அவளது தாயிடம் சென்று நின்றாள்.
“இன்னைக்கு ஒரு நாள் இந்துவை க்ளாஸ் முடிச்சுட்டு என் வீட்டுக்கு கூட்டிட்டு போகட்டுமா மா?” என்றாள், லதா.
“ஏன்மா?”
“வீட்ல எல்லாரும் ஊருக்கு போயிருக்காங்க. எனக்கு தனியா என்னவோ மாதிரி இருக்கு. அதான்…”
“அப்போ இங்க வந்து இருமா…”
“இல்ல மா, எங்க ஃப்ரெண்ட்ஸ் இன்னும் ரெண்டு பேர் வரேன்னு சொல்லியிருக்காங்க… ப்ளீஸ் மா… சாயங்காலம் சீக்கிரமே இந்துவை அனுப்பி வச்சுடறேன். தேவைப்பட்டா நானே வந்து அவளை விட்டுட்டு போறேன்”
சற்றே யோசித்த இந்துவின் தாய், லதா மிகவும் பரிச்சயமான சிநேகிதியாகையினால், லதா கூறியதற்கு இணங்கினாள்.
இன்ஸ்டிடியூட்டில் மிதிவண்டியை நிறுத்துகையில்,
“எதுக்குடி உன்னை தனியா விட்டுட்டு உன் வீட்ல ஊருக்கு போயிருக்காங்க?” என்றாள், இந்து.
“அவங்க எங்க போயிருக்காங்க? வீட்ல தான் இருக்காங்க…”
“அப்போ நீ எங்க அம்மா கிட்ட சொன்னது?!”
“அதோ அதுக்கு” என்று எதிரே இருந்த தியேட்டரை சுட்டிக்காட்டினாள்.
“என்னடி சொல்ற?”
“இந்து இன்னைக்கு சனிக்கிழமை. எப்பவும் சனிக்கிழமைல, மத்தியானம் ஒரு ஷோ இருக்கும். நாம ரெண்டு பெரும் போய் பார்த்துட்டு வருவோம்…”
“எங்கப்பாவுக்கு தெரிஞ்சவங்க யாராவது பார்த்துட்டா பெரிய பிரச்சனை ஆயிடும்..”
“இங்கப்பாருடி சீக்கிரம் நீ கல்யாணம் ஆகி எங்கயோ போயிடுவ. நானும் எங்கயோ போயிடுவேன். அப்புறம் நினைச்சாலும் இதெல்லாம் நம்ம வாழ்க்கைல கிடைக்காது. யாருக்கும் தெரியாம முகத்தை மூடிக்கிட்டு போய் பார்த்துட்டு வருவோம்”
தயங்கினாலும், பயந்தாலும், இந்துவிற்கும் நாடகம் பார்க்க வேண்டும் என்ற ஆவல் இருந்தமையால், தோழியின் யோசனைக்கு சம்மதித்தாள்.
நாடகம் காண, சீட்டு விநியோகிக்கும் வரிசையில் தோழிகள் நிற்க, பக்கவாட்டில் இருந்த சுவற்றில், ‘காதலின் தீபம் ஒன்று’ என்ற தலைப்புடன் இளமாறனின் புகைப்படங்கள் ஒட்டப்பட்டிருந்தன. மற்ற கலைஞர்களின் புகைப்படங்கள் இருப்பினும், இந்துவின் பார்வையெல்லாம் இளமாறனிடமே பதிந்து போனது.
இரண்டாவது வரிசையில் தோழிகள் அமர்ந்திருக்க, நாடகம் தொடங்கியது. காட்சிகள் நடக்க, இளமாறனின் வருகைக்காக இந்து காத்துக்கொண்டிருந்தாள். ஏறத்தாழ இருபது நிமிட காத்திருப்புக்கு பின், இளமாறனின் அறிமுகக்காட்சி வந்தது. அவன் கேசத்தை சிலுப்பி விட்டபடி குரலெடுத்து, ‘பாட்டு பாடவா பார்த்து பேசவா’ என்று கையில் கிட்டாரோடு பாட, அரங்கத்தில் கைத்தட்டல் விண்ணைப் பிளந்தது. இவளும் கைகள் சிவக்க கைதட்டினாள்.
காதலும், மோதலும் பிறகு புரிதலுமாய் கதை நகர, ஒரு காட்சியில் கதாநாயகி கதாநாயகனிடம் ஒரு ரோஜாவினை நீட்ட, கோபத்தில் இருக்கும் கதாநாயகன், அதாவது இளமாறன், அந்த மலரை தூக்கி எறிய, அது இந்துவின் மடியில் வந்து விழுந்தது. அந்த இருட்டிலும் லதா அவளைக் கண்டு கேலியாகச் சிரிக்க, இவளும் வெட்கத்தில் தலை குனிந்துகொண்டாள்.
நாடகம் முடிந்து கூட்டம் கலைய, தோழிகள் கதைபேசியபடி வெளிய வந்தனர்.
“என்னங்க ஒரு நிமிஷம்” என்றொரு குரல் கேட்டு இருவரும் நிற்க, இளமாறன் இவர்களை நோக்கி ஓடி வந்து நின்றான்.
“சார், நாடகம் ரொம்ப நல்லா இருந்தது. கதையா படிக்கும்போது கூட அவ்வளவு ஆர்வமா இல்லை, ஆனா நாடகமா பார்க்கும்போது ரொம்ப நல்லா இருந்தது” என்று வாழ்த்தினாள், லதா.
“நன்றிங்க” என்றவன், “மன்னிச்சுக்கோங்க, தெரியாம பூவ உங்க மேல வீசிட்டேன்” என்றான் இந்துவிடம்.
“பரவாயில்லை… நடிக்கும்போது இதைக் கூட கவனிச்சீங்களா?”
“ஆமாங்க.. பூவ தரையில போட்டிருக்கணும், அதை கையில எடுத்து ஹீரோயின் அழுவாங்க. நான் தெரியாம தூர எறிஞ்சுட்டேன். ஆனாலும் அவங்க சமாளிச்சு நடிச்சுட்டாங்க…”
“சரிங்க…”
“நாடகம் எப்படி இருந்ததுன்னு நீங்க ஒண்ணுமே சொல்லலையே?!”
“நாடகம் நல்லா இருந்தது. அதைவிட நீங்க பாடினது தான் ரொம்ப நல்லா இருந்தது. அதுக்குத்தான் ஏகப்பட்ட க்ளாப்ஸ்.”
“ஆமாங்க… பழைய பாட்டெல்லாம் எனக்கு ரொம்பப் பிடிக்கும். எல்லாம் மனப்பாடமா தெரியும். கதைக்கு இன்னுமே மெருகேத்துது”
“கரெக்டு சார், நீங்க பாடறத கேட்கறதுக்கே நாடகம் பார்க்க வரலாம்” என்று லதா கூறினாள்.
அவன் விடைபெற்றுக்கொண்டு செல்ல, லதா ஏதேதோ பேசிக்கொண்டு வர, அவனை அருகில் பார்த்த நினைவுகளில் மெல்ல நடந்து வந்தாள், இந்து. பெரிய பதாகையில் ஒட்டப்பட்டிருந்த இளமாறனின் படத்தைக் கண்டாள். திரும்பி அவனைத் தேடினாள். வெகு தொலைவில் அவன் யாருடனோ பேசிக்கொண்டிருந்தது தெரிந்தது. இதழோர புன்னகையோடு அவள் வீட்டிற்கு திரும்பினாள்.
அதற்குப் பிறகான நாட்களில் இளமாறனை தோழிகள் அவ்வப்போது பார்த்தனர்; பலமுறை மொட்டை மாடியிலிருந்து தொலைவாக, சில முறை ஜெராக்ஸ் கடையிலும், கடைவீதி சாலையிலும் அருகாமையில். அவனைக் காணும்போது லதா இயல்பாக உரையாட, இந்துவிற்கு இயற்கையாகவே இருந்து வந்த தயக்கங்கள் மெல்ல மறைந்தன.
ஒருநாள் இந்து தனது வகுப்பிற்கு மிதிவண்டியை தள்ளிக்கொண்டு கடைவீதி சாலை வழியே நடந்து செல்ல, “எப்படி இருக்கீங்க இந்துமதி?” என்ற குரல் கேட்டு திடுக்கிட்டு நிமிர்ந்தாள். புன்னகையோடு இளமாறன் உடன் நடந்தான்.
“நீங்களா?”
“ஏதோ யோசனையா இருந்தீங்க, நான் தான் தொந்தரவு பண்ணிட்டேனோ?”
“இல்லையில்லை…”
“எங்க உங்க உயிர் தோழிய காணோம்?”
“அவளுக்கு உடம்புக்கு முடியல. அதான் வரல…”
“அச்சச்சோ, கேட்டதா சொல்லுங்க”
“நிச்சயம் சொல்றேன்…”
“அடுத்த வாரம் புது நாடகம். வர முயற்சி பண்ணுங்க…”
“அப்படியா? அதுவும் காதல் கதையா?”
“ஆமாங்க… காதல் தான்… ஏன் கேட்கறீங்க?”
“இல்லீங்க, வாழ்க்கைல நடக்கற எதார்த்தங்களை நீங்க உங்க நாடகத்துல காட்டுறதில்லையே?!”
“காதல்தாங்க எதார்த்தம்… வாழ்க்கையே அதுக்குள்ளத்தான் இருக்கு. நமக்கு பிடிச்ச எல்லா விஷயங்கள் மீதும், மனிதர்கள் மீதும் நாம வச்சிருக்கிறது காதல் தான?”
“ஆனா, ஒரு ஆணுக்கும் பெண்ணுக்குமான உறவை மையமா வச்சுத்தான் உங்க நாடகங்கள் இருக்கு?! அதெல்லாம் ஏதோ கனவு மாதிரி, சினிமா மாதிரி, ஃபேன்டசி மாதிரி இருக்கு. வாழ்க்கைல நடக்கற இயல்பான விஷயமா தெரியலையே…”
அவள் கூறியதைக் கேட்டு நின்றவன், அதிர்ச்சியோடு அவளை பார்த்திருந்தான்.
“ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இயல்பா இருக்கற விஷயத்தை வேணும்னா நாடகமோ சினிமாவோ மிகைப்படுத்திக் காட்டலாமே தவிர, அந்த இயல்பான, இயற்கையான விஷயமே மிகை கிடையாது, இந்து. அதுதான் அடிப்படை.”
“சராசரி வாழ்க்கையில நீங்க சொல்ற காதலெல்லாம் சாத்தியமா? உயிரும் உணர்வும் ஒன்றிணைந்து இரு வேறு மனிதர்களால வாழ முடியுமா?”
“நான் எழுதற கதையெல்லாம் சராசரி வாழ்க்கையிலிருந்து எடுக்கப்பட்டதுதான். காதலை மட்டுமே அடித்தளமா கொண்டு எத்தனையோ பேர் வாழ்ந்திருக்காங்க, வாழறாங்க, இன்னும் நிறைய உண்மையான நேசத்தை இந்த உலகம் வியந்து பார்த்துக்கொண்டே இருக்கும்.”
“அதெப்படி அப்படி ஒரு காதல் கிடைக்கும் இளமாறன்?”
“தேடினா கிடைக்கும். காதலை மட்டுமே தேடினா கிடைக்கும். காதல் பக்கத்துல முற்றுப்புள்ளி வைக்காம, கமா போட்டு தகுதி, கமா போட்டு பணம், கமா போட்டு அழகுன்னு அடுக்கிட்டே போகும்போதுதான் ஏமாற்றம் வருது. காதலே பொய்’னு சொல்ல தோணுது. உண்மையிலேயே காதல் பொய்யில்லை. மனிதர்கள் தான் சில சமயங்கள்ல பொய்யர்களா இருக்காங்க, அப்புறம் காதல் மேல பழி போட்டுடறாங்க…”
அவள் தன்னை மறந்து சில நொடிகள் அவனது விழிகளைக் கண்டாள். அவனும் மெய்மறந்து நின்றிருந்தான். ஏதோ சத்தம் கேட்டு நிலைக்குத் திரும்பினர், இருவரும்.
“நான் உங்களை காயப்படுத்திடலயே?! உங்க கதைகள்ல வர்ற மாதிரி காதலெல்லாம் நான் பார்த்ததில்லை. நிஜத்துல கேள்விகூட பட்டதில்லை. அம்பிகாபதி, அமராவதி, ரோமியோ ஜூலியட் தவிர அறிய பெரிய காதல் கதையெல்லாம் நான் நேர்ல பார்த்ததில்லை…”
“உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கா?”
“இருக்கு”
“அவரை நேர்ல பார்த்திருக்கீங்களா?”
அவள் மீண்டும் அவனது விழிகளை நோக்கி, புன்னகைத்தாள். அவனும் புன்னகையோடு விடை பெற்றுச் சென்றான்.
