Skip to content
Post Views: 337
மூன்று மாதங்களுக்கு பிறகு,
“ரஞ்சனி போன் அடிக்குது, யார்னு பாரு” என்று குரல் கொடுத்தார் அலமேலு.
Advertisement
“வசி தாம்மா போன் பண்றான்” குரல் கொடுத்தபடி போனை ஏற்றவள், “டேய் அண்ணா, எப்போ ஊருக்கு வரப்போறே?”
“உனக்கு சின்ன அண்ணி யாரும் இன்னும் சிக்கல, கிடைச்சதும் வந்துடறேன்”
Advertisement
Advertisement
“அடப்பாவி அண்ணா, இரு அம்மாகிட்ட சொல்றேன்”
“சொல்லிடாதடி” என்று அவன் கத்திக் கொண்டிருக்கும் போதே ரஞ்சனியிடமிருந்து அலமேலு போனை பிடுங்கியிருந்தார்
Advertisement
“வசி, கோர்ஸ் முடியப்போகுதுனு சொன்னியேடா, இன்னுமா முடியல? எப்போடா வருவே?” அலுப்புடன் கேட்டுக் கொண்டே ஆரத்தி தட்டில் மஞ்சளையும் சுண்ணாம்பையும் கலந்து கொண்டிருந்தார் அலமேலு
“இங்கே இருக்கற பெரிய கம்பெனியில வேலையில ஐாயின் பண்ண சொல்லிட்டாங்க. இன்னும் ஒரு வருஷத்துக்கு வரமுடியாதும்மா”
“என்னடா இப்படி சொல்றே?” அலமேலு அதிர்ச்சியுடன் கேட்க
“ஒரு வருஷம் தானே சீக்கிரம் ஓடிடும். அதவிடு, சரவணன் அண்ணியையும் குழந்தையையும் வீட்டுக்கு அழைச்சுட்டு வந்துட்டானா?”
“போன வாரமே ரெண்டு பேரையும் கூட்டிட்டு வரேன்னு மாமியார் வீட்டுக்கு போனான். ஒரு வாரமா வீட்டுக்கு வரவேயில்ல, காலேஜ்க்கு கூட மாமியார் வீட்ல இருந்தே போயிட்டு வரான், நம்ம வீட்டு பக்கம் எட்டி கூட பாக்கல. என்னதான் மாமியார் வீடு ஒரே ஊர்ல இருந்தா கூட இப்படியா போய் அவங்க வீட்லயே இருக்கறது?”
“குழந்த கூடவே இருக்கணும்னு அவனுக்கும் ஆசையா இருக்காதாம்மா?”
“எப்பவும் நீ உன் அண்ணனுக்கு தான்டா சப்போர்ட் பண்ணுவே. நீ வெளிநாட்டுக்கு போய்ட்ட, அவன் மாமியார் வீட்டுக்கு போய்ட்டான், ரெண்டு புள்ளையும் இல்லாம நாங்க என்னடா பண்றது?”
“சரி புலம்பாதம்மா. அவன் தான் இன்னைக்கு வரப்போறானே, ஜூனியர் சரவணன் வேற வரப்போறான். இனி என்னையெல்லாம் கவனிப்பியா?”
“இப்படி எதாச்சும் பேசி என் வாயை அடைச்சுடு. காலைல உன் அண்ணி லதா போன் பண்ணி குழந்தையோட வரப்போறதா சொன்னா. அதான் ஆரத்தி கரைச்சிட்டு இருக்கேன், நம்ம வீட்டோட முதல் வாரிசு வரப்போகுது, நீயும் இருந்திருந்தா நல்லா இருந்திருக்கும். வாசல்ல ஹார்ன் சத்தம் கேக்குது, அவங்க தான்னு நினைக்கிறேன், நான் அப்புறம் பேசறேன்டா” என்று கைப்பேசியை வைத்துவிட்டு கணவர் நடராஜனுக்கும் குரல் கொடுத்து விட்டு வேகமாக வெளியே சென்றார்.
வாசலில் கார் வந்து நின்றிருந்தது, அதிலிருந்து சரவணன் இறங்கி கார்கதவை திறந்து விட அவன் மனைவி லதா கையில் குழந்தையுடன் இறங்கினாள்.
“எப்படிம்மா இருக்கே!” என்று மருமகளை நலம் விசாரித்தவர் குழந்தையின் கன்னத்தை தொட்டு முத்தமிட்டார்.
“ரஞ்சனி, அந்த ஆரத்தி தட்டை எடுத்துட்டு வா” அலமேலு குரல் கொடுத்துக் கொண்டே இருக்கும் போது சரவணன் மீண்டும் பின்பக்க கார்கதவை திறக்க, இன்னும் யார் வந்திருக்கிறார்கள் என்று அலமேலு அங்கே பார்வையை செலுத்த சாயம் போன பாவாடை சட்டையும் கையில் கைப்பையுமாக காரிலிருந்து கீழே இறங்கினாள் சின்ன பொண்ணு.
அவளை கண்டதும் அலமேலுவுக்கு அதிர்ச்சி, அவரை விட சின்னபொண்ணுவின் முகத்தில் அப்பட்டமான அதிர்ச்சி தெரியவே, சரவணன் இருவரையும் குழப்பத்துடன் பார்த்தான், “அம்மா இந்த பொண்ணு, நான் வேலை செய்யற காலேஜ்ல புதுசா ஜாயின் பண்ணியிருக்கா. பாவம் அப்பா அம்மா யாருமே இல்லாத அனாதை பொண்ணு, காலேஜ் பீஸ் ஸ்காலர்ஷிப்ல கிடைச்சுடும், ஆனா தங்கறதுக்கும் சாப்பிடறதுக்கும் ஹாஸ்டல் பீஸ் கிடைக்காதுனு தெரிஞ்சதும் தனியா நின்னு முழிச்சிட்டு இருந்தா.
நான் பணம் கொடுத்தா வாங்கல, படிச்சிட்டே வேலை பாக்கற மாதிரி எதாச்சும் உதவி செய்யுங்கனு சொன்னா. லதாவும் குழந்தையை பாத்துக்கறதுக்கறதுக்கும் ஒத்தாசைக்கும் ஆள் வேணும்னு சொல்லிட்டு இருந்தா. செய்றீயானு கேட்டேன், சரிண்ணுட்டா. லதாவுக்கும் இவள புடிச்சு போச்சு. அதனால நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வந்தோம்” என்று சரவணன் சொன்ன பிறகு தான், அலமேலுவுக்கு மூச்சே வந்தது.
‘நல்லவேளை இந்த பொண்ணு நேரா சரவணன்கிட்ட எல்லா உண்மையும் சொல்லி வீட்டுக்கே வந்துட்டாளானு பக்குனு ஆயிருச்சு’ என்று நினைத்தவர் கூடிய சீக்கிரம் இந்த பெண்ணை வீட்டை விட்டு அனுப்பிடனும்.
நல்ல வேளையா வசீகரன் இந்தியா வர்றதுக்கு ஒரு வருஷம் ஆகும்னு சொன்னான். அவன் வர்றதுக்குள்ள, இவள துரத்திடணும் என்று பெருமூச்சுடன் ரஞ்சனியிடமிருந்து ஆரத்தி தட்டை வாங்கினார்.
அதே சமயம் இன்னொரு காரும் வந்து நிற்க, அனைவரும் ஆச்சரியமாக திரும்பி பார்க்க, வெகுநேரம் கார் கதவு திறக்கவேயில்லை. ஒருவேளை பெண்ணை அனுப்பிவிட்டு பின்னாலேயே சம்மந்தி வீட்டார் வந்துவிட்டார்களா என்று அலமேலு பார்க்க, லதாவும் அதே யோசனையில் தான் இருந்தாள்.
அனைவருமே குழப்பத்துடன் பார்த்துக் கொண்டிருந்த வேளையில் கார் கதவு படாரென்று திறக்க பழுப்பு நிற ஜீன்ஸ் பேன்ட் மற்றும் ஸ்போர்ட்ஸ் ஷூ அணிந்த கால் மட்டும் வெளியே நீட்டப்பட்டு தரையில் ஊன்றியது. யாராக இருக்கும் என அனைவருமே கண்களை சுருக்கி பார்க்க “சர்ப்ரைஸ்” என்று சொல்லி கொண்டு வசீகரன் பக்கவாட்டாய் தலையை சாய்த்து வசீகரமாக புன்னகைக்க, அலமேலுவை தவிர மற்றவர்களின் முகங்கள் மகிழ்ச்சியில் மலர்ந்தது.
அடர்ந்த சிவப்பும் பழுப்பும் கலந்த முழுக்கை டிசர்ட், கூலிங்கிளாஸ் அணிந்து காற்றில் கலைந்த சிகையை இருகரங்களால் கோதிவிட்டபடி நின்றவனை நோக்கி சரவணனும், நடராஜனும் ஓடி வந்து கட்டிக் கொண்டனர்.
“வரேன்னு ஒரு வார்த்தை கூட சொல்லவே இல்லியேடா, சொல்லியிருந்தா ஏர்போர்ட் வந்து பிக்கப் பண்ணியிருப்போமில்ல” என்று தந்தையும் அண்ணனும் அங்கலாய்த்தனர்.
“எங்க கல்யாணத்துக்கு வந்து போனவரு, குழந்தை பொறந்தபின்னாடி வந்திருக்கீங்க, எப்படி இருக்கீங்க வசி?” என்று லதா குசலம் விசாரித்தாள்.
“டேய் அண்ணா இந்தியா வந்துட்டு தான் யுஎஸ் நம்பர்ல இருந்து போன் பண்ணியா?” என்று ரஞ்சனி அவனிடம் ஓடினாள்.
அனைவரும் அவனை சூழ்ந்துக் கொண்டு கேள்விகளால் அவனை துளைத்தெடுத்துக் கொண்டிருக்க, அலமேலு மட்டும் அசையாமல் அப்படியே நின்றிருந்தார்.
“என்னம்மா ஷாக்ல இருந்து இன்னும் வெளிய வரலயா? பேயை பாத்த மாதிரி முழிக்கிற?” என்றபடி அன்னையின் அருகில் சென்றான்.
அவனுடைய ஆளுமையான குரல் தடையின்றி சின்னபொண்ணுவின் காதில் விழுந்திருந்தது, அவன் வாசமும் எவ்வித கட்டுப்பாடுமின்றி அவள் நாசியை நிறைத்திருந்தது. அதேபோல கண்களும் அவன் உருவத்தை தன்போக்கில் கண்டுவிடக்கூடாது என்று கண்களுக்கும் மனதிற்கும் கடிவாளமிட்டவள் சட்டென திரும்பி சரவணன் வந்த காரிலிருந்த லக்கேஜை இறக்க ஆரம்பித்தாள்.
அலமேலுவின் பார்வை சின்னபொண்ணுவின் முதுகையே துளைத்துக் கொண்டிருப்பதை கண்டவன் புருவம் சுருக்கி, “இது யாரும்மா?” என்றான்.
லக்கேஜை இறக்கி கொண்டிருந்த சின்னபொண்ணுவின் கரங்கள் சில நொடி அப்படியே நின்றது.
“வேலைக்காரி, லதாவுக்கு உதவியா இருக்கட்டும்னு சரவணன் கூட்டிட்டு வந்திருக்கான்” என்றார் அலமேலு
“சரிம்மா, நான் முதல்ல என் காரை பார்க் பண்ணிட்டு வந்துடறேன்” என்று திரும்பி தான் வந்த காரை நோக்கி சென்றான்.
நடராஜன் மனைவியின் அருகில் வந்து “நீ செய்றது சரியில்லனு சொன்னேன் கேட்டியா? கர்மா எப்போவும் விடாது அலமு” என்றார் மனைவிக்கு மட்டும் கேட்கும் குரலில்.
திரும்பி கணவரை முறைத்த அலமேலு கண்களால் எச்சரிக்கை செய்து கணவரின் வாயை அடைத்தார்.
“சரவணா, அந்த பொண்ணை லக்கேஜ் எடுத்துட்டு போய் உள்ளாற வைக்க சொல்லு” என்றார் மகனிடம்.
“ஹால்ல இருக்கற பெரிய மாஸ்டர் பெட்ரூம் தான் எங்களோடது, நாங்க கொண்டு வந்த லக்கேஜை முதல்ல எங்க ரூம்ல வச்சிடு. அப்புறம் வசியோட ரூம் மாடியில இருக்கு, அவனோட லக்கேஜ அங்கே வச்சிடு, ரஞ்சனி இவளுக்கு ரூமை காட்டு” என்றான் சரவணன்.
“சின்னபொண்ணா இருக்கா வசியோட லக்கேஜையெல்லாம் மாடிக்கு தூக்கிட்டு போகமுடியாது, அத உங்கப்பா பாத்துப்பாரு. நான் போய் இவளுக்கு உங்க ரூமை காட்றேன்” என்றார் அலமேலு அவசரமாக
“ரஞ்சனி, இந்த ஆரத்திய எடு. நான் போய் சரவணன் ரூமை க்ளீன் பண்ண சொல்றேன்” என்று தட்டை மகளிடம் கொடுத்து விட்டு சின்னபொண்ணுவின் பின்னாலேயே மூச்சு வாங்க சென்றார். நடராஜனும் மனைவியை பின்தொடர்ந்தார்.
இருவரும் உள்ளே நுழைந்ததும், வெளியே பார்வையை பதித்தபடி, “இந்தா பொண்ணே நில்லு” என்றார் அலமேலு அதட்டலாக
அவள் தயங்கி நிற்கவும், “என்ன நினைச்சுட்டு இருக்க மனசுல?” என்று அவளை ஆராயும் பார்வை பார்த்தார்.
“நான் எதுவும் நினைக்கல அத்தே”
“அத்தே, சொத்தேனு உறவுமுறை சொல்லிட்டு இருந்தேனா மனுஷியா இருக்கமாட்டேன். மேடம்னு சொல்லு”
“சரிங்க மேடம்”
“இங்கே எதுக்கு வந்தே? உன் அப்பாகிட்ட வாங்கின பணத்தை தான் திருப்பி கொடுத்தாச்சு இல்ல? ஓ என் மகனுக்கு உன்னை கட்டிக்கறதா சொன்னனே அத நம்பி வந்துட்டியா? அன்னைக்கு எனக்கு பணம் அவசரம், வேற வழியில்லாம வாய்க்கு வந்தத உளர்னேன், உன் அப்பன் தான் அம்மாஞ்சியா இருக்கான்னா, நீயும் அத நம்புவியா? என்ன முறைக்கிற?
நான் ஒன்னும் கைநீட்டி வாங்கின காசை இல்லங்கலயே, திருப்பி கொடுத்துட்டேனே? சம்மந்தம் பேசறதும் அது நடக்காம போறதும் சகஜம் தானே. அந்த நேரத்துல மூணு பேரோட செலவையும் பாக்க வேண்டியதா இருந்துச்சு, தொழில்ல வர வேண்டிய லாப பணம் வராம இருந்துச்சு. எனக்கும் வேற வழி தெரியல. ஆபத்துக்கு பாவமில்லனு ஒரு பொய் சொன்னேன். பணத்தை திருப்பி கொடுத்துட்டு இந்த சம்மந்தம் சரிவராதுனு சொல்லிடலாம்னு நினைச்சேன். அதுக்குள்ளாற என்னென்னவோ நடந்து போச்சு.
நீ பழச மனசுல வச்சுக்கிட்டு சொந்தம் கொண்டாட நினைக்கறது கொஞ்சம் கூட சரியில்ல. இங்கே வேலை செய்ய புடிக்கலனு சரவணன் கிட்ட சொல்லிட்டு மரியாதையா இங்கிருந்து கிளம்பிடு”
“மேடம், இந்த வீடு உங்களோடதுனோ, சரவணன் சார் உங்க பையனோ எனக்கு சத்தியமா தெரியாது. நீங்க வீட்டுக்கு வந்து பணத்தை கொடுத்துட்டு எதுவும் பேசாம போனதும், நான் பாக்கறதுக்காக என் அப்பா கவர்ல வச்சிருந்த உங்க குடும்ப போட்டோவ திறந்து கூட பாக்காம பரண் மேல தூக்கி போட்டுட்டேன்.
நீங்க நினைக்கற மாதிரி எந்த எண்ணமும் என் மனசுல இல்ல. என் அப்பா நான் நல்லா படிக்கணும்னு ஆசப்பட்டாரு, எனக்கும் படிக்கணும்னு ஆசை. எனக்கு வேற எந்த நினப்பும் இல்ல”
“இத நம்ப சொல்றீயா? சரவணன் புரபசரா இருக்கறது மெட்ராஸ்லயே நம்பர் ஒன் காலேஜ், அவ்வளவு சுலபமா அந்த காலேஜ்ல சீட் கிடைக்காது. நீ சரவணன்கிட்ட உண்மைய சொல்லி தான் காலேஜ்ல சேர்ந்திருக்க, இப்போ வீட்டுக்கும் வந்துட்ட” என்றார் உக்கிரத்துடன்
“சத்தியமா இல்ல மேடம், நான் என் பிரெண்ட் செல்வி மூலமா காலேஜ் என்ட்ரன்ட்ஸ் எக்ஸாம் ஆன்லைன்ல எழுதினேன். அப்பா அம்மா இல்லனு ஸ்காலர்ஷிப்க்கு எழுதி போட்டேன். எப்படியோ காலேஜ்ல சீட் கிடைச்சிடுச்சு. தங்கறதுக்கும் சாப்பிடறதுக்கும் என்ன பண்றதுனு தெரியாம முழிச்சிட்டு இருந்தப்போ தான் சரவணன் சார் எனக்கு உதவி செய்யறதா சொன்னாரு.
நான் இங்கே வேலை செய்ய தான் வந்திருக்கேன். மத்தபடி என் மனசுல எந்த எண்ணமும் இல்ல. தயவு செஞ்சு என்னை தப்பா நினைக்காதீங்க. சென்னையில எனக்கு யாரையும் தெரியாது, என் பிரெண்ட் அவளோட சொந்தகாரங்க வீட்ல தங்கியிருக்கா. அவளாலயும் எனக்கு உதவி செய்ய முடியாது. படிச்சிட்டே இங்கே வேலை செஞ்சா எனக்கு சம்பளமும் கிடைக்கும், அது எனக்கு உதவியா இருக்கும். நீங்க இப்போ என்னைய வெளியே போக சொன்னா எனக்கு எங்கே போறதுனு கூட தெரியல, நான் இங்கே வேலைக்காரியா தான் வந்திருக்கேன், வேலைக்காரியாவே போயிடுவேன், ப்ளீஸ் மேடம் என்னை போக சொல்லாதீங்க”
அலமேலு யோசனையோடு நின்றிருந்தார், அவரின் கணவர் நடராஜனுக்கு அவளை பார்க்க பாவமாக இருந்தது, “அலமு, பாவம்டி அந்த பொண்ணு. தர்மகத்தாவா வாழ்ந்தவரோட பொண்ணு நம்ம வீட்ல வேலைக்காரிய இருக்கறேன்னு சொல்றா. அதையும் வேணாம்னு துரத்தினா நமக்கு தான்டி பாவம்” என்று மனைவியின் காதில் கிசுகிசுக்க, அலமேலு முறைத்த முறைப்பில் நடராஜன் வாயை கப்பென்று மூடிக் கொண்டார்.
“நீங்க இங்கே தங்கறது உங்க அக்காங்களுக்கோ, மத்த சொந்தகாரங்களுக்கோ தெரிஞ்சா, நீ எனக்கு சொந்தக்கார பொண்ணுனு என் பசங்களுக்கு தெரியவரும். அப்புறம் பிரச்சனையில தான் முடியும். இது சரிவராது நீ கிளம்பு”
“எதும்மா சரிவராது” என்றபடி வசீகரன் உள்ளே நுழைய அவனை தொடர்ந்து லதாவும் சரவணனும் வந்தார்கள்.
அவனுக்கு பதில் சொல்லாமல், “அந்தா இருக்கே, அது தான் சரவணனோட ரூம், அங்கே லக்கேஜை வச்சுட்டு, தூசியெல்லாம் துடைச்சு வை” என்று அவளை அங்கிருந்து அனுப்பினார்.
“நான் வீட்டுக்கு வந்தது உனக்கு பிடிக்கலையாம்மா?” வசீகரன் புருவம் சுருக்கினான்
“ஏன்டா இப்படி கேக்கறே?”
“போன முறை சரவணன் கல்யாணத்தப்போ லீவுல வந்தப்போ ஓடிவந்து என்னை கட்டிக்கிட்டு அழுதே, இப்போ வந்தததுல இருந்து என்னை கண்டுக்கவே இல்லயே ஏன்?”
“அதெல்லாம் ஒன்னுமில்லடா. நீ கொடுத்த இன்ப அதிர்ச்சியில கையும் காலும் ஓட மாட்டேங்குது. லதா உட்காரும்மா. ரஞ்சு எல்லாருக்கும் ஜூஸ் கொண்டாந்து கொடு” என்று சிறிது நேரம் மகன்களுடன் சம்பிரதாயத்திற்கு பேசிவிட்டு, “நான் போய் சரவணன் ரூம்ல குழந்தைக்கு தொட்டிலை எங்கே வைக்கலாம்னு பாக்கறேன், என்னங்க நீங்களும் வாங்க” என்று கணவனுக்கு கண்ஜாடை காட்டிவிட்டு மீண்டும் சின்னபொண்ணுவை தேடி சரவணன் அறைக்கு சென்றார்.
அறையை பெருக்கி கொண்டிருந்தவள் அலமேலுவை கண்டதும் விட்ட இடத்திலிருந்து தொடங்கினாள். “மேடம், என் அக்காங்களுக்கு நான் சென்னையில இருக்கறது கூட தெரியாது. நீங்க கொடுத்த பணத்தை பங்கு போட்டு எடுத்துக்கிட்டாங்க. ஏற்கனவே இருந்த கடனையெல்லாம் அடைச்சிட்டு கடை வைக்கறோம்னு செலவு பண்ணிட்டாங்க.
ரெண்டு மாசம் அவங்க வீட்ல தான் இருந்தேன். என்னை வீட்லயே இருந்து படிக்க சொன்னாங்க. ஆனா வீட்டு வேலை, காட்டு வேலைனு ஓய்வில்லாம வேலை செய்ய சொல்லிட்டே இருக்காங்க. அங்கே இருந்தா படிக்க முடியாதுனு தோணுச்சு. என் மாமனுங்க வேற குடிச்சுட்டு வந்து என்கிட்ட வேற மாதிரி பேசனாங்க, எங்கக்காங்க கிட்ட சொன்னா, இதுக்கு தான் கல்யாணம் பண்ணிக்கிட்டு போய்டுனு சொன்னோம், எங்களால உனக்கு காவல் காத்துட்டு இருக்க முடியாதுனு சொல்றாங்க. நான் செல்விக்கிட்ட என் நிலைமைய சொல்லி அழுதேன்.
வெளிநாட்டுல எல்லாம் பதினெட்டு வயசாயிட்டா பசங்க எல்லாரும் அவங்க படிப்புக்கு ஆகற செலவ அவங்களே பாத்துப்பாங்க. நாம தான் இன்னமும் பெத்தவங்க கைய எதிர்பாத்துட்டு இருக்கோம், நீ படிக்கறதுக்கு நீதான் போராடணும்னு சொல்லி காலேஜ்ல சேர்றதுக்கு இப்படி ஒரு வழி இருக்குனு சொன்னா. அப்பா இல்லாத என் வாழ்க்கைய அக்காங்க பாத்துப்பாங்கனு நான் உட்கார்ந்துட்டு இருந்தா சரிவராது,
படிச்சிட்டே செய்யமுடியற எந்த வேலை கிடைச்சாலும் அதை செஞ்சுட்டே படிக்கணும்னு தான் நான் அவங்ககிட்ட சொல்லிக்காம கிளம்பி வந்துட்டேன். அவங்க என்னய தேடி வரமாட்டாங்க. அப்படியே வந்தாலும் உங்க வீட்டுக்கு வரமாட்டாங்க. நீங்க கவலப்படாதீங்க”
சரியான பேருந்து வசதிகூட இல்லாத கிராமத்தில் பிறந்து வளர்ந்தவள், பார்க்க வெகுளியாக, ஒன்றுமறியாத சின்னபெண்ணாக இருப்பவள் இவ்வளவு அறிவு கூர்மையுடன் பேசுவதை கண்டு நடராஜன் உள்ளுக்குள் மெச்சிக் கொண்டார்.
“சரி, நடந்த விஷயத்த பத்தி என் வீட்ல”
“யாருக்கும் சொல்ல மாட்டேன்”
“அம்மா” என்றபடி சரவணன் உள்ளே நுழையவும் அலமேலு முகத்தை சரி செய்து கொண்டு அவனை கேள்வியாக பார்த்தார்.
“என்னம்மா நீங்க? வீட்டுக்கு வந்ததுல இருந்து குழந்தைய கூட கையில வாங்கல, சரியா பேசலனு லதா மூஞ்ச தூக்கி வச்சிட்டு இருக்கா, இதுக்கு தான் வீட்டு போகலாம்னு சொல்லிட்டே இருந்தீங்களானு கேக்கறா” என்றான் சரவணன்.
“அச்சோ, அப்படியெல்லாம் இல்லடா, அப்பாவும் நீயும் தொட்டிலை கட்டிவிடுங்க. நான் லதாகிட்ட போறேன்” என்ற அலமேலு மருமகள் லதாவின் அருகில் சென்று அமர்ந்து அவளின் நலத்தை விசாரித்தபடி குழந்தையை கையில் வாங்கி கொண்டார்.
வசீகரன் ரஞ்சனியின் கல்லூரிப்படிப்பை பற்றி விசாரித்துக் கொண்டிருந்தான். அனைவரும் குடும்பத்துடன் மதிய உணவு சாப்பிட்டு முடித்ததும் வசீகரன் ஓய்வு எடுக்க போவதாக நடுஹாலில் இருந்த படிக்கட்டில் ஏறி மாடியில் இருந்த அவன் அறைக்கு சென்று விட்டான். “எனக்கு யுஎஸ்ல இருந்து என்னண்ணா வாங்கிட்டு வந்தே” என்று கேட்டபடி ரஞ்சனியும் அவன் பின்னால் மாடிக்கு சென்று விட, சரவணனும் குழந்தையை தூக்கி சென்று தொட்டிலில் போட்டுவிட்டு மனைவியை அவர்கள் அறைக்கு அழைத்து சென்றான்.
சின்னபொண்ணிடம், “பக்கத்துல இருக்கற ஸ்டோர் ரூம்ல உன்னோட திங்க்ஸ் வச்சுட்டு, நீ காலேஜுக்கு கிளம்பு. காலைலயும் ஈவ்னிங்லயும் ஹெல்ப் பண்ணா போதும், அதே சமயம் படிப்பு மேலயும் கவனமா இருக்கணும்” என்றான் ஆசிரியனாக, ஆனால் அவளுக்கும் பசிக்கும் என்பதை மறந்திருந்தான்.
அறிவு பசிக்கு முன் வயிற்று பசியை பொருட்படுத்தாமல் அவள் கலங்கிய கண்களுடன் நன்றி தெரிவிக்கும் விதமாக கைகூப்பி விட்டு தன்னுடைய கைப்பையை எடுத்துக் கொண்டு வெளியேறினாள். சரவணன் சொன்னது போல தன் துணிமணியிருந்த பையை பக்கத்திலிருந்த சின்ன அறையில் வைத்துவிட்டு, ஹாலில் இருந்த அலமேலுவிடம் தலையை குனிந்தபடி வந்து நின்றாள்.
“காலேஜுக்கு போறேன் மேடம்”
“இங்கே இருக்கறவரைக்கும் நீ இருக்கற இடம் தெரியாம இருந்துக்கணும், காலைலயும் சாயந்திரமும் சமையல் ரூம்ல இருக்கற வேலைய முடிச்சிட்டு, சரவணன் ரூம்ல குழந்தைய பாத்துக்கணும், பக்கத்துல இருக்கற ரூம்ல நைட் தூங்கிக்கோ. இந்த மூணு ரூமை தவிர உன்னை எங்கேயும் பாக்க கூடாது. முக்கியமா வசி கண்ணுல நீ படவே கூடாது. தேவையில்லாம வெளியே நடமாடற வேலையே வச்சுக்க கூடாது, புரியுதா?”
“புரியுது மேடம்”
“நீ நடந்துக்கறத பொறுத்து தான் உன்னை இந்த வீட்ல வச்சுக்கறதா வேணாமானு நான் முடிவு பண்ணுவேன்”
“சரிங்க மேடம்”
“கிளம்பு”
சின்னபொண்ணு கிளம்பியதும் சுற்றும் முற்றும் பார்த்த அலமேலு மெல்லிய குரலில் கணவனிடம் புலம்ப ஆரம்பித்தார்.
“இந்த சரவணனுக்கு அறிவே இல்லைங்க. ஊர்ல உலகத்துல எத்தனை பேரு பீஸ் கட்ட முடியாம இருக்காங்க, அவங்கள எல்லாம் வீட்டுக்கு கூட்டிட்டு வந்துடுவானா? அதுவும் வயசு பொண்ணை கூட்டியாந்திருக்கான். அவனுக்கு தான் அறிவில்லனு பாத்தா, இந்த லதாவுக்கு கூட புத்தியில்ல. பெரிய இடத்து பொண்ணா இருக்காளேனு எதுவும் பேசாம இருக்கேன்.
வயசு பசங்க இருக்கற வீட்ல வயசு பொண்ணு வேலைக்காரியா? இவ ரொம்ப அவசியமா? குழந்தைய நான் பாத்துக்க மாட்டேனா? பஞ்சையும் நெருப்பையும் பக்கத்துல வச்சுக்கிட்டு நான் காவல் வேற காத்துட்டு கிடக்கணுமா?”
‘நீ தான் பஞ்சை தண்ணி ஊத்தி நனைச்சிட்டியே’ என்று மனதிற்குள் நினைத்த நடராஜன் வெளிய சொல்லவில்லை. மனைவியுடன் வீண் விவாதம் புரிந்தால் தொழிலில் நிம்மதியாக கவனம் செலுத்தமுடியாது என்பதால் எப்போதும் மனைவியின் சொல்லுக்கு தலையாட்டியே பழகியிருந்தார்.
“வசி வேற திடீர்னு வீட்டுக்கு வந்துட்டான். எப்போ போவான்னு தெரியல. இந்த பொண்ண நம்ம வீட்ல வச்சுக்கிட்டு என்ன நடக்க போகுதோனு பதட்டத்துலயே இருக்க முடியுமா? இவள வெளியே அனுப்ப எனக்கு நீங்களாச்சும் உதவி செய்ய கூடாதா?”
“நம்ம வசி அந்த பொண்ணு பின்னாடி போற அளவுக்கு அவ ஒண்ணும் பேரழகி கிடையாது, அதே சமயம் அவனும் அப்படிப்பட்ட ஆளில்ல, அந்த பொண்ணும் ரொம்ப தெளிவா தான் இருக்கு. நீ எதுக்கு வீணா கிடந்து புலம்பற அலமு?
எனக்கு ஒரு விஷயம் மட்டும் புரியல, என்கிட்ட ஒருவார்த்த கூட கலந்து பேசாம நீதான் முத்துமாணிக்கத்துக்கிட்ட சம்மந்தம் பேசினே, இப்போ நீயே இந்த கல்யாணம் நடக்க கூடாதுனு உறுதியா இருக்கே. அது ஏன்னு தான் புரியல. இந்த பொண்ணுக்கு என்ன குறைச்சல்? தர்மகத்தாவா வாழ்ந்தவரோட மக தானே இவ? அதுவும் அவர் உனக்கு அண்ணன் முறை. பொண்ணை கட்டிக்கறதா அவருக்கு வாக்கு வேற கொடுத்துட்ட. அவரும் அந்த நம்பிக்கையில தான் கடைசி வரைக்கும் இருந்திருப்பாரு. பொண்ணுக்கு நல்ல வாழ்க்கை அமைஞ்சிருக்கும்னு அவரோட ஆத்மா நிம்மதியா போயிருக்கும். ஆனா நீ ஏன் இந்த பொண்ணை நம்ம வசிக்கு கட்டி வைக்க கூடாதுனு நினைக்கிறே? எப்போ உன் மனசு மாறுச்சு? இல்ல சொல்லும் போதே பொய் தான் சொன்னியா?”
“என்னங்க நீங்க? இந்த காலத்துல போய் வாக்கு, ஆத்மானு பேசிட்டு இருக்கீங்க. அப்போதைக்கு நமக்கு பணம் தேவை, அதிகமா போக்குவரத்து இல்லாததால அவரோட நிலைமையும் எனக்கு பெரிசா தெரியாது, அதனால உதவி கேட்டா செய்வாருனு கேட்டேன், அவர் பொண்ணு கல்யாணத்துக்காக தயங்கினாரு. வேறவழியில்லனு சம்மந்தம் பேசினேன், அப்போதைக்கு பெரிசா எதையும் யோசிக்கல. பின்னால சரி வரலனா ஜாதகம் பொருந்தலனு சொல்லிக்கலாம்னு இருந்தேன்.
நம்ம சரவணன் பொண்டாட்டி லதா, எம்,எல்,ஏவோட ஒரே பொண்ணு. அவங்க கல்யாணத்துக்கு வந்த அமைச்சரோட பொண்ணு லதாவுக்கு பிரெண்ட். அவ நம்ம வசி பின்னாடியே சுத்திட்டு இருந்தத நீங்க பாக்கலயா? அந்த பொண்ணு பாக்கறதுக்கு எவ்ளோ அழகா மாடர்னா இருந்தா? நம்ம வசிக்கு நல்ல பொருத்தமா இருப்பாங்க. அவளோட அம்மாவும் என்கிட்ட ஜாடையா வசிய பத்தி விசாரிச்சாங்க. படிப்பு வேலை முடியட்டும், மேற்கொண்டு பேசலாம்னு சொல்லியிருக்கேன்.
யோசிச்சு பார்த்தா இன்னைக்கு நிலைமைக்கு முத்துமாணிக்கம் வாழ்ந்து கெட்ட மனுஷன், எதுவுமே இல்லாத ஏழை. இவளாச்சும் நல்லா படிச்சிருக்காளானு பாத்தா இப்போ தான் படிச்சிட்டே இருக்கா. நிறமும், உசரமும் கம்மி. பணத்தை கைநீட்டி வாங்கிட்டேங்கிறதுக்காக என் மகனுக்கு எவளோ ஒருத்திய கட்டி வைக்க முடியுமா?
நாளைக்கு அவன் என்னய கேள்வி கேக்க மாட்டானா? சரவணன் லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் நல்ல படிச்ச, அழகான வசதியான பொண்ண பாத்து கட்டிக்கிட்டான். நீயா எனக்கு தேடி பாத்து வச்ச பொண்ணு இவ தானானு கேட்டா நான் என்ன பண்றது? பெரிய மருமகளோட ஸ்டேட்டஸ்ல சின்ன மருமகளும் இருந்தா தானே அவ மச்சினனையும் அவன் பொண்டாட்டியையும் மதிப்பா?
இந்த பொண்ணு பழைய தர்மகத்தாவோட பொண்ணா இருந்தாலும் இன்னைக்கு நிலமைக்கு அவ நம்ம வீட்டு வேலைக்காரியா வந்திருக்கா, இது தான் அவளோட நிலம. அது மட்டுமில்லாம இவ அஞ்சாவதா பொறந்த பின்னாடி தான் அவ அம்மா, பாட்டி எல்லாம் செத்துட்டாங்க. இவ ராசி தான் நல்லா வாழ்ந்துட்டு இருந்த முத்துமாணிக்கம் பால் வியாபாரம் செய்யற நிலைமைக்கு கொண்டு வந்து விட்டிருக்கு. இதெல்லாம் தெரிஞ்சே நாம எதுக்கு ரிஸ்க் எடுக்கணும்? பணத்தை திருப்பி கொடுத்துட்டு விஷயத்தை சொல்லிடலாம்னு இருந்தேன்.
அவர் பாட்டுக்கு போனை போட்டு நாளைக்கு என் பொண்ணை அழைச்சுட்டு வரேன், நீயே நல்ல காலேஜ்ஜா பார்த்து சேர்த்துடு, மாப்பிள்ளை வந்ததும் கல்யாணத்த முடிச்சிடலாம்னு சொல்றாரு. என்னடா இவர் பாட்டுக்கு கனவு கோட்டை கட்டிட்டு இருக்காரேனு அப்பவே இந்த சம்மந்தம் சரி வராதுனு சொல்லிட்டேன். பணத்தையும் திருப்பி கொடுத்துடறேன். நீங்க உங்க பொண்ணுக்கு வேற இடத்துல மாப்பிள்ளை பாத்துக்கோங்கனு சொல்லிட்டேன்”
“என்னடி சொல்றே? இது எப்போ நடந்துச்சு?” நடராஜன் அதிர்ந்தார்.
“லதாவுக்கு பிரசவ வலி வந்துடுச்சுனு ஆஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு போனோமே அப்போ தான் போன் பண்ணாரு, ‘விடிஞ்சா ப்ளஸ் டூ ரிசல்ட், அத பார்த்துட்டு காலைல கிளம்பி நானும் மகளும் வரோம்னு’ இஷ்டத்துக்கு உரிமை எடுத்துட்டு பேசிட்டே போறாரு. இதென்னடா வம்பா போச்சுனு விஷயத்தை போட்டு உடைச்சிட்டேன். அந்த நேரத்துல பணம் கிடைக்கறதுக்காக சொன்னேன். உங்க பொண்ணு வேண்டாம் எங்களுக்கு வேண்டாம், நீங்க வேற சம்மந்தம் பாத்துக்கோங்கனுட்டேன்”
“என்ன சொன்னாரு?”
“பதிலே சொல்லல, போனை வச்சிட்டாரு”
“மறுநாளே இறந்து போயிருக்காரே அலமு, நீ சொன்ன அதிர்ச்சி தாங்காம தான் போயிட்டாரா?” நடராஜன் குற்றம் சாட்டும் பார்வை பார்க்க,
“என்ன நீங்க? அவர் செத்ததுக்கு நான் தான் காரணம்ங்கிற மாதிரி பாக்கறீங்க? அவருக்கு நேரம் வந்துடுச்சு அவர் போயிட்டாரு. நான் கடனா வாங்கின பணத்தை திருப்பி கொடுத்துட்டேன். சம்மந்தம் பேசறதும் அது தட்டி போறதும் ஊர்உலகத்துல நடக்காததா? தாலி கட்ற சமயத்துல கூட கல்யாணம் நின்னு போயிடுது தெரியும் தானே” என்று அலமேலு கணவனை முறைக்க,
“எல்லாம் சரி அலமு, அந்த மனுஷன் சூதுவாது தெரியாத வெள்ளிந்தயான கிராமத்தான். நீ சொன்னத நிஜம்னு நம்பி எவ்வளவு மனக்கோட்டை கட்டியிருந்தானோ, நீயில்லனு சொன்னது அந்தாளுக்கு எவ்வளவு பெரிய ஏமாற்றமா இருந்துச்சோ தெரியலையே”
“நீங்க கொஞ்சம் வாய மூடறீங்களா? என் சொந்தங்காரங்க மேல உங்களுக்கு என்ன அக்கற? இந்த விஷயத்துல நீங்க வாய தொறக்காம இருக்கறது தான் உங்களுக்கு நல்லது. பசங்க காதுவரைக்கும் இந்த விஷயம் போச்சு, நான் மனுஷியா இருக்க மாட்டேன்” என்று ஒற்றை விரலை நீட்டி கணவரை எச்சரித்தார்.
‘இப்போ மட்டும் நீ மனுஷியா’ என்று மனதில் நினைத்தாரே தவிர வெளியே சொல்லாமல் வேலையிருப்பதாக சொல்லி அலுவலகத்திற்கு கிளம்பி விட்டார்.
(தொடரும்)
error: Content is protected !!