Skip to content
Post Views: 133
எப்போதும் இரவு நைட்டியுடன் படுப்பவள் இன்று சுடிதாரில் உறங்கினாள்.
முதலில் உறக்கமே வரவிரவில்லை, ஏனோ அன்று நேரத்தை கடப்பதே வெகு சிரமமாய் இருந்தது.
ஒரு வழியாய் தூங்கி போனாள், நடு இரவிருக்கும், ஏதேதோ சத்தங்கள் கேட்க, கண்கள் விழித்து பார்த்தாள் கமலி.
வசந்தா, குழந்தைகள் தூக்கத்தில் இருக்க, தொடர்ந்து கேட்ட சத்தத்தில், எதுவென உணர்ந்து காது இரண்டையும் பொத்தி கொண்டு கதவை திறந்து போர்டிகோவில் வந்து நின்றுவிட்டாள்.
Advertisement
இது பெரிய குற்றமெனவும் எடுக்க முடியவில்லை, இது அவ்வளவு பெரிய விசயமில்லையே! எல்லோர் வீட்டிலும் நடப்பது தானே! என அசால்ட்டாய் விடவும் முடிவில்லை. ஏதோ ஒரு மாதிரி அசூசையாக உணர்ந்தாள்.
என்ன தான் இருந்தாலும், அவர்களது அந்தரங்கங்கள் மற்றவர்கள் முன் கடைபரப்ப படலாமா? அவளுடைய அறிவிற்கு தகுந்த மாதிரி யோசித்து கொண்டிருந்தாள்.
போர்டிகோவின் கும்மிருட்டில் கால்கள் இரண்டையும் இறுக்க கட்டிக்கொண்டு பயந்தபடியே தான் அமர்ந்திருந்தாள்.
Advertisement
திடீரென்று தோளில் படிந்த கையில் திடுக்கிட்டு இவள் திரும்ப, வசந்தா “என்ன பண்ற, உள்ள வா.. உன்னை காணும் பயந்திட்டேன்” தூக்க கலக்கத்தில் உளறிவிட்டு மீண்டும் இவர் உள்ளே சென்றுவிட்டார்.
Advertisement
அன்று முதல் இது தொடர் கதையானது, அது எரிச்சலை கூட்டியது என்றால், “கமலி, ஒரு அப்பாயில் குடும்மா, ராஜிக்கு வரவே வராது” பே என வாய் திறந்து விழுங்குகையில் இவளுக்கு வாந்தியே வந்துவிடும்.
“கமலி, நீ கொடுக்குற இஞ்சி டீ செம்ம.. இன்னொரு டீ ப்ளீஸ்” என்கையில், உம் பொண்டாட்டிட்ட கேளேன், என வாய் துருதுருக்கும்.
“ம்.. பிரியாணி சூப்பர்.. அருமையா இருக்கும்மா.. நாளைக்கு காலையிலும் செஞ்சு வைம்மா.. எங்கம்மாக்கு ரொம்ப பிடிக்கும்” என மறுநாள் சட்டமாய் செய் செய் என படாய் படுத்திய ராஜியையும், வசந்தாவையும் என்ன செய்யலாம் என திட்டம் தீட்டுமளவு யோசித்தாள்.
Advertisement
போதாதென்று செந்தில் காலையில் வந்து பிரியாணி ரெடியா என சட்டமாய் கேட்டு, வாங்கி செல்கையில், ‘பேசுமா பேதி மருந்தை கலந்தா என்ன?’ சராசரியான கமலி பெண்ணை வில்லியாக மாற்றி கொண்டிருந்தனர் மூவரும்.
இதில் குழந்தைகள் வேறு.. கிரி இருக்கையில் குழந்தையை கண்ணில் காட்டவே மாட்டாள் ராஜி. ஆனால் இப்போதோ, தத்தக்கா பித்தக்கா என விழுந்து வாரும் மகளையும், வீட்டையே இரண்டாக்கும் அவள் மகனையும் மேய்ப்பதே முழு நேர வேலையானது.
ராஜிக்கு அடங்கி இருக்கும் இருவரும், அவளை கண்டால் ஓட விடுவார்கள். ராஜி, “அத்தையை ஓட விடு” என சொல்லி கொடுத்தாளோ என்னவோ? நினைத்து கொள்வாள் கமலி.
கிரி இருக்கையில் “கமலி, சாப்பிட வா, கமலி சாப்பிட வா” என பக்கத்துவீடு கேட்டகும் அளவிற்கு அலறுபவள், ‘கமலிக்கு சாப்பாடு இருக்கா என கூட பார்ப்பதில்லை’, மிச்ச மீதியை உண்பது அதை விட கொடுமை.
இரவில் அதனினும் கொடுமை காதில் பஞ்சை திணித்து கொண்டு சோபாவோடு ஒதுங்கி விடுவது.
இவளது நடவடிக்கைகளை கொண்டு, சிரித்து கொண்டாள் ராஜி.. இது தான் சரியான நேரம் என, இரவு இவள் உறங்கிய பின் வசந்தாவை எழுப்பி போர்டிகோவிற்கு இழுத்து வந்தாள் ராஜி.
“பிளான் சக்ஸஸ்ம்மா.. இனி வீடு எடுக்குறத பத்தி பேசு, கண்டிப்பா வேலை முடிஞ்சிடும்” நகத்தை கடித்து துப்பி கொண்டிருந்தாள் ராஜி.
“இதுக்காடி தூங்க விடாம இழுத்துட்டு வந்த.. சொல்லிட்டல்ல.. நாளைக்கே நகையை வாங்கி தரேன் பாரு” என சத்தியம் செய்து “ஆனால் அதுக்காக நீ பண்றதெல்லாம் ரொம்ப ஓவர்டி.. அவளை வேலை வாங்கு தப்பில்லை அதற்குனு காதுல பஞ்சு வைக்கிற அளவுக்காடி கொண்டாருவ! அது ரொம்ப அதிகம்டி”
“இதெல்லாம் தெரிஞ்சு தான் பண்றேன்.. என்னன்ற போ.. போய் ஆக வேண்டிய வேலைய பாரு” என வசந்தாவை தூண்டிவிட்ட பிறகே ராஜியால் உறங்க முடிந்தது.
மறுநாளே கமலியிடம் நைச்சியமாய் பேசி, “மாப்ள வந்து போக சங்கடபடுறாரு, மாடி வீடு எடுக்கலாமா கமலி”
இவள் அதிர்ந்து பார்த்து “என்கிட்ட ஏன் கேட்குறீங்க” கவனமாய் கேள்வி கேட்டாள்.
“அது.. உன் நகை கொஞ்சம் கொடு கமலி, பேங்கில் வச்சு மாடி எடுக்கலாம்.. மாடி உங்களுக்கு தான். அவ கீழ தான் இருப்பா, சும்மா வந்து போவா அவ்வளவு தான், உனக்கும் சங்கடம் இல்லை பாரு, நகையை ஒரு வருசத்தில் கிரி திருப்பிடுவான்” அத்தனை குழைவு வசந்தாவின் குரலில்.
“அம்மாட்ட கேட்கனுமே” இவள் நிற்க
“கேளு.. உங்கம்மாவே சரின்னு தான் சொல்லவாப்ள” எனவும்
மல்லிகாவும் கூட ‘மாடி ஏன் எதற்கு என கேட்டுவிட்டு..’ “ஆமாடி அவங்க இருக்கும்போது உனக்கும் சங்கடம் தானே. உனக்கு தான் வீடுனா குடுடி, ஆனால் எல்லா நகையையும் குடுக்காத. மாப்பிள்ளை கிட்டயும் சொல்லிடுடி” என்று விட, இவர்களை நம்பி குடுப்பதா? வேண்டாமா? என இன்னுமே குழப்பம் அவளிடம்.
இவள் இங்கே படும் கஷ்டம் எதையுமே மல்லிகாவிடம் கமலி சொல்லவில்லை. ஒரு வேளை சொல்லியிருந்தாள் கொடுக்க விட்டிருக்க மாட்டாரோ மல்லிகா.?
ஆனால் செந்திலின் வருகை நிற்க போவதில்லை, தானும் எத்தனை நாளைக்கு அம்மா வீட்டிற்கு ஓடி ஒளிய முடியும்? மாடி எடுப்பதே இதற்கு நிரந்தர தீர்வென தெரிந்தது.
கூடவே மனதில் கிரியிடம் சொல்ல வேண்டும் என்ற எண்ணம் வேறு. ஆமாம் இவர் கிட்டயும் கேட்டுப்போம்! என அப்படியே கிரிக்கும் அழைத்தாள், ரிங் சென்று கொண்டே இருந்தது. அவன் எடுக்கவே இல்லை.
“என்னம்மா உங்கம்மா என்ன சொன்னாங்க” வசந்தா ஈ என வந்து நின்றார், கூடவே ராஜியும்.
“அம்மா ஓகே சொல்லிட்டாங்க.. ஆனால் அவர்கிட்ட கேட்கனும் போன் எடுக்க மாட்றார்” என அடுத்த குண்டை இவள் இறக்க.
‘கிரியிடமா.. போச்சு” வசந்தாவிற்கு இத்தனை நாள் கனவே ஆட்டம் கண்டது.
ஆனால் ராஜியோ ‘யாமிருக்க பயமேன்’ என சின்ன செய்கையை கொடுக்க, ‘சதி காரி என்ன பண்ணானு தெரியலையே’ என வசந்தா நினைக்கையிலேயே,
அவர்கள் முன்பே கிரியின் எண்ணுக்கு அழைத்தாள் கமலி. ரிங் சென்றதே தவிர எடுக்க படவில்லை.
“ஏம்மா இவ்வளவு வெசனபடுற.. நான் ஏற்கனவே அவன்ட்ட பேசிட்டேன். சரினுட்டான், நீ கேட்டாலும் கிரி சரினு தான் சொல்வான்.” பேசி பேசியே இறுதியில் நகையை கொடுக்கும்வரை ஓயவில்லை வசந்தா. முப்பது பவுனில் பதினைந்தை வாங்கி விட்டார்.
அந்த வகையில் பதினைந்தை காப்பாற்றி, மார்க்கெட்டுக்கு அண்ணனை வர சொல்லி, மல்லிகாவிடம் சேர்பித்து விட்டாள் கமலி.
அடுத்த இரண்டே நாளில் பூஜை போட்டு விட்டு வீடு கட்ட துவங்கி விட்டனர்.
கீழே வீட்டை பிழங்கிக்கொண்டு மேலே வீடு எடுப்பதென்றால் எத்தனை கஷ்டம் சொல்லி தெரியவேண்டியதில்லை.
சுவரை பெயர்த்தெடுக்கும் சத்தமும், எப்போது கேட்டு கொண்டே இருக்கும் கொத்தனார்களின் குரல்கள், எங்கும் தூசி எதிலும் தூசி, காலை மாலை என எத்தனை முறை சுத்தம் செய்தாலும் சிறதும் போகாத அழுக்கு.
வீடு மட்டுமா இவளே எஞ்ஜினிற்கு கரியள்ளி போட்டவள் போல தான் இருந்தாள்.
நல்ல வேளை சோபா, வாஷிங் மிஷின் கவரை பிரிக்கவில்லை, இல்லையென்றால் அவ்வளவு தான் தூக்கி குப்பையில் தான் போட வேண்டும். அவளது அறையை சதா பூட்டி வைத்து விடுவாள் அதனால் அதுவும் தப்பித்தது.
“இங்க முடியலத்தை.. அம்மா வீட்டுக்கு இரண்டு நாள் போய்ட்டு வரேனே” என மாதத்தில் நான்கு ஐந்து நாட்கள் எடுத்தேன் பாரு ஓட்டம் என ஓடி விடுவாள்.
அங்கே மல்லிகா நிம்மதியை கொடுத்து கிரியின் நினைவை தள்ளிவைத்தார் எனில், இங்கே வேலைக்கு மேல் வேலை சொல்லி, நிம்மதியை கெடுத்து கிரியின் நினைவை தள்ளி வைத்தார் வசந்தா.
இதில் பெரிய டுவிஸ்டே, “வீட்டு வேலை ஆரம்பிக்கும் வரை தான் இங்கு இருந்தனர் செந்தில் குடும்பத்தினர். வீடு எடுக்க ஆரம்பித்த நாளில் இருந்து ராஜி ‘எம்மகனுக்கு, மகளுக்கு தூசி ஆகாதும்மா’ என அவளும், ‘அப்புறம் யாரு ஆஸ்பத்திரி ஆஸ்பத்திரியா அலையுறது’ என வசந்தாவும் ராஜியோடு கூட்டணி சேர்த்து கொண்டதில் ராஜி கடந்த மூன்று மாதமாய் வரவே இல்லை வீட்டிற்கு.
மேலே நடக்கும் வேலைகளை கவனிக்க சென்றவள், பத்து நிமிடங்கள் வரை இருந்துவிட்டு கீழிறங்கி விடுவாள்.
மகள் இருக்கும் போது ஓடியாடிய வசந்தா, அவள் இல்லையென்றான பின்.. “உனக்கு செய்யும் போது எனக்கும் கொஞ்சம் கொடுத்துடும்மா, வயசாய்டுச்சு முடியல” சமையலறையை திரும்பியும் பார்ப்பதில்லை.
கீழே இருக்கும் அதே போர்ஷனை அப்படியே மேலே எடுக்கிறார்கள். அதனால் கண்காணிக்கவோ, இப்படி செய்யுங்கள் அப்படி செய்யுங்கள் என கட்டளையிடவோ எதுவும் தேவையில்லை.
எப்படியோ வீடு கட்ட வேண்டும், ஆனால் அது தங்கள் பணத்தில், இதுவும் தாங்கள் கட்டினதாய் இருக்க கூடாது. இதுவே ராஜியின் பிரதான எண்ணம்.
அது நிறைவேறிக்கொண்டிருக்கிறது. அதை அவ்வப்போது வந்து பார்க்கும் ராஜியின் கண்களில் எதிர்கால கனவுகள் மின்னும். பார் என் பிறந்த வீட்டு சீதனம் என பெருமையாய் சொல்லி மார் தட்டி கொள்ள வேண்டும் அதுவும் காந்திமதியின் முன்.
அப்புறம் அந்த பொம்பளை மூஞ்சை எங்குட்டு கொண்டு போய் வைக்கிறான்னு நானும் பார்க்கேன். இப்போதே குதியாட்டம் பட்ட கொண்டிருந்தாள் ராஜி.
error: Content is protected !!