Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

57.கார்த்திகா கார்த்திகேயன்-தேவனுக்கேற்ற தேவியோ

அத்தியாயம் 4.2_தேவனுக்கேற்ற தேவியோ_கார்த்திகா கார்த்திகேயன்

ஆரம்பத்திலே கருகிப் போன தன்னுடைய காதலை எண்ணி சோர்ந்த படி சாணக்கியன் வீட்டுக்குச் சென்றான். அன்றைய இரவு உணவின் போது சாணக்கியன் மற்றும் ஸ்னேகா இருவரின் திருமண விஷயம் பற்றி தருமர் பேச அமர் மற்றும் சகுந்தலா சந்தோஷப் பட்டார்கள் என்றால் சாணக்கியன் எந்த உணர்வையும் காட்டாமல் இருந்தான்.

 

தருமர் அவனையே தான் அளவிட்டுக் கொண்டிருந்தார். அவன் மட்டும் திருமணத்தை மறுத்தால் அடுத்த நாள் திவ்யாவை கொல்லும் எண்ணம் அவருக்கு வந்தது.

 



Advertisement

சாணக்கியனோ மனதுக்குள் என்ன நினைத்தானோ? “எனக்கு சம்மதம் பா”, என்று சொல்லி விட்டான். அவள் கனவுக்கு இடைஞ்சலாக இருக்க கூடாது என்று நினைத்தானா என்பதை அவன் மட்டுமே அறிவான்.

 

“டேய் அண்ணா சூப்பர் டா”, என்று அமர் அவனைக் கட்டிக் கொள்ள சாணக்கியனும் புன்னகைத்தான்.

Advertisement

 

Advertisement

அதற்கு பின் வந்த நாட்களில் சாணக்கியனும் சரி திவ்யாவும் சரி ஒருவரை ஒருவர் பார்க்க வில்லை. ஆனால் அதே நேரம் ஒருவர் மற்றவரை நினைக்காமல் இருந்ததும் இல்லை. ஏனோ அந்த சம்பவம் இருவரையுமே விடாமல் துரத்திக் கொண்டு தான் இருந்தது. திவ்யா அதை நினைத்து பார்த்து சந்தோஷப் பட்டாள் என்றால் அவனோ புதிய வாழ்வு வரப் போவதால் அந்த நிகழ்வை மறக்க போராடிக் கொண்டிருந்தான். மறக்க வேண்டிய நினைவுகள் தானே மனதில் அதிகம் அரை படும்.

 

அடிக்கடி நினைத்துப் பார்த்து சந்தோஷப் படும் அழகான தருணமாக தான் அது இருந்தது. காதல் இல்லை என்று சொன்னவளும் மனதால் அவனை நேசித்தாள். அவனுக்கோ அவளை தொல்லை செய்ய கூடாது என்ற கட்டாயம். புதிய பெண்ணை மனதுக்குள் பதிய வைக்க வேண்டிய நிர்பந்தம். யாரும் அறியாமல் தருமர் சாட்டையை சுழற்றி கொண்டு அனைவருக்கும் சூடு வைத்துக் கொண்டிருந்தார்.

Advertisement

 

இவர்களுக்கு நேர மாறாக இருந்தான் அமர். எந்நேரமும் ரதி அவனை ஆட்டுவித்தாள். அவளோ எங்கேயாவது கண்ணில் பட்டு விடுவானோ என்ற பயத்தில் இருந்தாள். ஏனென்றால் அவளுக்கும் அவன் மீது சலனம் வந்திருந்தது. அரவிந்தை தவிர வேறு யாரிடமும் நெருங்கிப் பழகி இராத இரண்டு பெண்களுக்குமே இன்னொரு ஆணிடம் சலனம் வருவது இயல்பு தானே?

 

அதுவும் காதல் என்று முன்னே வந்து நிற்கையில் எப்படி உதறி தள்ளவாம்? திவ்யா லட்சியத்தைச் சொல்லி தப்பித்துக் கொள்ள ரதிக்கு அப்படி எந்த கட்டாயமும் இல்லை என்பதால் அமரின் நினைவுக்குள் சிக்கித் தவித்தாள். அதே நேரம் அவன் காதலை சொல்லி விடக் கூடாது என்ற பயமும் இருந்தது.

 

சாணக்கியனின் திருமணத்திற்கு மூன்று நாட்கள் இருக்கும் போது தான் அமரின் கண்ணில் சிக்கினாள் ரதி. அப்போதும் திவ்யா உடன் இருந்தாள் தான். ஆனால் இன்விடேசன் என்ற சாக்கு இருக்கிறதே. அதை எடுத்துக் கொண்டு இருவரையும் நெருங்கிச் சென்று விட்டான்.

 

திவ்யா அவனை கேள்வியாக பார்க்க ரதியோ தடுமாற்றமாக பார்த்தாள். இருவரைக் கண்டு புன்னகைத்தவன் “வர சண்டே என்னோட அண்ணனுக்கு கல்யாணம். நீங்க ரெண்டு பேரும் குடும்பத்தோட வரணும்”, என்று சொல்ல ரதியோ அவன் பார்வையிலும் புன்னகையிலும் மதி மயங்கி நின்றாள். அவள் பார்வையில் தெரிந்த வித்தியாசத்தில் அமர் அவளையே ஆராய்ச்சியாக ரசனையாக பார்த்துக் கொண்டிருக்க திவ்யாவோ திருமண விஷயம் கேள்வி பட்டு சிலையாக நின்றதையும் அவள் கண்ணில் துளிர்த்த கண்ணீரையும் யாருமே பார்க்க வில்லை.

 

அமர் கையில் இருந்த பத்திரிக்கையை வாங்கி பிரித்துப் பார்க்க ஸ்னேகா என்ற பெயரில் அவள் கண்ணீர் பட்டு தெரித்தது.

 

“நீ தானே சொன்னே வேண்டாம்னு? இப்ப எதுக்கு அழுற?”, என்று மனசாட்சி கேள்வி கேட்க “நான் வேண்டாம்னு சொன்ன அடுத்த ஒரு வாரத்துக்குள்ள வேற பொண்ணை கல்யாணம் பண்ணுவானா? அப்ப அவன் சொன்ன காதல் அவ்வளவு தானா?”, என்ற கேள்வி எழுந்தது அவளுக்கு.

 

“அவன் உன் கனவு நிறைவேறுற வரைக்கும் காத்திருக்கேனு தானே சொன்னான்? வேண்டாம்னு சொன்னது நீ தானே? நீ வேண்டாம்னு சொல்லியும் அவன் உனக்காக காத்திட்டு இருக்கணுமா?”, என்ற கேள்விக்கு அவளிடம் பதில் இருக்கிறதா என்ன?

 

நிச்சயம் அவளுக்கு அவனைப் பார்க்க வேண்டும். கடைசியாக ஒரு முறை அவனை மனதுக்குள் கண்களுக்குள் மூச்சுக்குள் நிறைத்துக் கொள்ள வேண்டும். அவன் சந்தோஷமாக இருக்கும் தருணத்தை ஒரு முறை பார்க்க வேண்டும் என்ற ஆவல் பிறக்க அவளை மீறி “நானும் ரதியும் கல்யாணத்துக்கு வறோம் அமர்”, என்று பதில் அளித்திருந்தாள் திவ்யா.

 

வேறு ஒரு உலகத்தில் இருந்த அமரும் ரதியும் அப்போது தான் நடப்புக்கு வந்தார்கள். “ஹேய் நிஜமா வரியா திவ்யா? எங்க வர மாட்டேன்னு சொல்லுவியோன்னு நினைச்சேன்? ரொம்ப தேங்க்ஸ் மா. ரதி நீயும் வரணும். நான் உன்னை எதிர் பார்ப்பேன்”, என்றவன் ரதியைப் பார்த்து கண் சிமிட்டி விட்டே அங்கிருந்து சென்றான்.

 

ரதி திவ்யாவை குழப்பமாக பார்க்க “என்ன ஏதும் கேக்கணுமா ரதி?”, என்றாள்.

 

“நாம இந்த மாதிரி கல்யாணத்துக்கு எல்லாம் போனது இல்லையே? அம்மா விட மாட்டாங்க திவி”

 

“எனக்கு போகணும்னு தோணுது. நான் அம்மா கிட்ட பேசிக்கிறேன். நீ வரணும்னா வா. இல்லைன்னா வராத”

 

“இல்லை இல்லை நானும் வரேன்”, என்று அவசரமாக ஆர்வமாக சொன்னாள் ரதி. இருந்த குழப்பத்தில் திவ்யா அதை கவனிக்க வில்லை.

 

அன்று சாணக்கியனின் திருமணம். திவ்யா ரதி இருவருமே திருமணத்துக்கு கிளம்பி விட்டார்கள். மஞ்சு அதற்கு கேட்ட கேள்விகள் பல. ஆனாலும் திவ்யா அதை சமாளித்தாள். ஆனாலும் ஒரு கட்டத்தில் “அம்மா இப்ப போகவா வேண்டாமா? இப்படி எங்கயும் விடாம வீட்டுக்குள்ளே எங்களை பூட்டி வச்சிக்கோ. நீ பண்ணுறதுக்கு எங்க கல்யாணத்துக்கு கூட யாரும் வர மாட்டாங்க”, என்று  உச்ச கட்ட எரிச்சலில் கத்திய பிறகு தான் மஞ்சு அமைதியானாள்.

 

“சரி சரி போனோமா வந்தோமானு இருக்கணும். ஏதாவது வம்பு வந்துச்சு அப்புறம் என்னோட இன்னொரு முகத்தை தான் பாக்கணும்”, என்று மஞ்சு சொல்ல “மஞ்சு விடு, அவங்க ரெண்டு பேரும் தானே போறாங்க? சின்ன பிள்ளைகளா அவங்க? ரொம்ப இறுக்கிப் பிடிக்காத”, என்றார் தாமோதரன்.

 

“காலம் கெட்டு கிடக்குறது உங்களுக்கு எப்படி தெரியும்? பொம்பளை பிள்ளையை பெத்தா வயித்துல நெருப்பை கட்டிட்டு தான் இருக்கணும். போங்க பேசாம”, என்று சொல்ல அவர் அதற்கு எதுவும் சொல்ல வில்லை.

 

காலையிலே கோவிலில் வைத்து முகூர்த்தம் என்பதால் இவர்கள் இருவரும் சென்றது மண்டபத்துக்கு தான். அமரின் நண்பர்கள் அனைவரும் அங்கே இருந்தார்கள். அதில் இருந்த பிரியா என்ற பெண் வேறு இவர்களை கண்டு முறைக்க “என்ன ரதி இது அந்த பொண்ணு அப்படி பாக்குது?”, என்று கேட்டாள் திவ்யா.

 

“எனக்கு என்ன தெரியும்? வா உள்ள போகலாம்”, என்று சொல்லி இருவரும் உள்ளே சென்று அமர்ந்தார்கள்.

 

அப்போது அங்கே வந்த அமர் “ஹேய் வாங்க வாங்க”, என்று சந்தோஷமாக வரவேற்றான். அவனைக் கண்டதும் ரதி அமைதியாகி சிறு வெட்கத்தில் நிற்க பிரியாவின் பார்வை இன்னும் தீயாக அவர்கள் மேல் விழுந்தது.

 

சாணக்கியனை தேடிய திவ்யாவின் விழிகள் அவனைக் காணாமல் தேட “பொண்ணு மாப்பிள்ளை எங்க?”, என்று கேட்டாள் அவனிடம்.

 

“கோயில்ல கல்யாணம் முடிஞ்சதும் ஏதோ மேக்கப் வேற மாத்தணும்னு சொல்லி அண்ணி கேட்டுருப்பாங்க போல? அதான் அவங்களுக்கு அலங்காரம் நடக்குது. அண்ணா அவனோட ரூம்ல இருக்கான். நீங்க ரெண்டு பேரும் உக்காருங்க. நான் ஜூஸ் எடுத்துட்டு வரேன்”

 

“அதெல்லாம் இப்ப எதுவும் வேண்டாம். நீங்க மத்தவங்கள கவனீங்க”, என்று சொன்ன திவ்யா ரதியை அழைத்துக் கொண்டு அங்கே அமர்ந்து விட வேறு வழி இல்லாமல் அமர் அங்கிருந்து சென்றான்.

 

அவன் தன்னுடைய நண்பர்கள் அருகில் செல்ல “அவங்களை எதுக்கு அமர் கூப்பிட்டுருக்க? நீ எந்த ஜூனியரையும் கூப்பிடலையே? இவங்களை மட்டும் ஏன்?”, என்று கேட்டாள் பிரியா.

 

“நான் யாரை கூப்பிடனும் யாரை கூப்பிட கூடாதுன்னு நீ சொல்லக் கூடாது சரியா? அது என் விருப்பம்”, என்று முகத்தில் அடிப்பது போல சொல்லி விட அணைத்து நண்பர்களின் முன்னிலையில் பிரியாவுக்கு அவமானமாக இருந்தது.

 

“ஹேய் அமர் அவ சாதாரணமா தான் கேட்டா. எதுக்கு இவ்வளவு கோபம்? எனக்குமே அந்த டவுட் வந்துச்சு டா”, என்றான் சரண்.

 

இப்போது பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் என்பதால் “அண்ணா தான் அவங்களை கூப்பிட சொன்னான். திவ்யா அண்ணனுக்கு ஏதோ உதவி செஞ்சிருப்பாங்க போல?”, என்று சொல்லி சமாளித்தான். ஏனென்றால் யாரும் சாணக்கியனிடம் சென்று விசாரிக்க மாட்டார்களே.

 

ஒரு வழியாக அலங்காரம் முடிந்து மணமக்கள் மேடைக்கு வர திவ்யாவின் கண்கள் சாணக்கியனை நோக்கியது. அவன் அவளை கவனிக்க வில்லை. அவள் வருவாள் என்றும் அவன் நினைக்கவும் இல்லை. ஏதோ போல இருந்தான். ஏனென்றால் அந்த அளவுக்கு ஸ்னேகா அவனை படுத்தி எடுத்திருந்தாள்.

 

இருவருக்கும் ஆயிரம் முரண் இருந்தது. அவன் ஒன்று சொன்னால் அவள் ஒன்றைச் செய்தாள். ஏன் என்று அவன் கேட்டதற்கும் எனக்கு பிடித்திருக்கிறது என்று பதில் அளித்தாள். அவனை அவளுக்கு பிடித்திருந்தது தான். ஆனால் கணவனுக்கான மரியாதை அவளிடம் இருந்ததா என்று கேட்டால் இல்லை தான் பதில்.

 

சாணக்கியனும் ஒரு மாதிரி மன உளைச்சலில் இருக்க அதற்கு பின் அவளை அதிகம் கண்டு கொள்ளவே இல்லை. அதுவும் ஸ்னேகாவுக்கு எரிச்சலை தான் கொடுத்தது.

 

 

கோவிலில் வைத்தே “என் குங்குமம் சரியா இருக்கான்னு பாருங்க. என் ஜடை கலைஞ்சிருக்கான்னு பாருங்க”, என்று ஏதோ ஒன்றைச் சொல்லி அவனை சோதித்துக் கொண்டிருந்தாள்.

 

இப்போதும் அதே எரிச்சலில் அவன் மேடைக்கு வந்து நிற்க திவ்யா கண்கள் அவனை இமைக்காமல் நோக்கியது. யாருமே அவளைக் கவனிக்க வில்லை. தருமர் கூட திருமணம் முடிந்த நிம்மதியிலும் முக்கிய அரசியல்வாதிகளை கவனிப்பதிலும் பிஸியாகி விட இவர்களை கவனிக்க வில்லை.

 

சாணக்கியனைப் பார்க்க பார்க்க வாழ்க்கையை இழந்த வலி திவ்யாவுக்கு பூதாகரமாக இருந்தது. கண்கள் எல்லாம் கலங்கிக் கொண்டே இருந்தது. அதிக நேரம் அங்கே இருந்தால் அவளால் சமாளிக்க முடியாது என்று அவளுக்கே புரிந்தது.

 

“ரதி ரொம்ப தலை வலிக்குது. நம்ம சீக்கிரம் கிப்ட் கொடுத்துட்டு கிளம்பலாமா?”, என்று கேட்டாள்.

 

“எப்படி திவி? இப்ப எல்லாரும் அரசியல்வாதியா மேடைக்கு போறாங்க. நாம எப்படி போறது?”

 

“நாம என்ன போட்டோவுக்கு போஸ் கொடுக்கவா போறோம்? இதை மட்டும் கொடுத்துட்டு கிளம்பலாம் வா”, என்று சொல்லி இழுத்துச் சென்றவள் கூட்டத்தில் நுழைந்து சாணக்கியன் அருகே சென்று விட்டாள்.

 

அனைவரும் கொடுக்கும் மொய்க் கவரையும் பரிசையும் கடமைக்கு என்று வாங்கிக் கொண்டிருந்த சாணக்கியன் “வாழ்த்துக்கள்”, என்ற திவ்யாவின் குரலில் அதிர்ந்து அவளைப் பார்த்தான்.

 

அவனைக் கண்டு அழகாக புன்னகைத்தவள் அவனிடம் பரிசை நீட்ட அவன் கண்கள் கூட கலங்கிப் போனது. அதைக் கண்டவள் “என்னோட காதல் சாக வில்லை சாகடிக்க பட்டிருக்கிறது”, என்று எண்ணிக் கொண்டு “நாங்க வறோம்”, என்றவள் புகைப்படம் கூட எடுக்காமல் ரதியை இழுத்துக் கொண்டு சென்று விட்டாள். அமர் கண்ணிலும் அவர்கள் சென்றது பட வில்லை.

 

சாணக்கியன் என்னும் மனிதன் அதற்கு பின் ஒரு மாதிரி இறுக்கத்துடன் நின்றான். அவன் கண்ணீர் வற்றி இருந்தது. உதடுகள் பேருக்கு புன்னகைத்தது. அவனையே அவனுக்குள் கொஞ்சம் கொஞ்சமாக தொலைத்துக் கொண்டிருந்தான்.

 

சாணக்கியன் ஸ்னேகா வாழ்க்கை ஆர்ப்பட்டமாக எல்லாம் ஆரம்பிக்க வில்லை. ஆனால் அரம்பித்திருந்தது. காலத்திற்கு ஏற்ப அவர்களும் வாழ ஆரம்பித்தார்கள். ஆனால் அவளின் திமிர் அவனை அவளிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலக்கி நிறுத்தியது. அதை யாரும் அறியவும் இல்லை.

 

தருமர் அரசியலில் பதவியை அடைய முழு மூச்சாக ஈடுபட சகுந்தலா தன் வேலையில் கவனம் செலுத்த அமரின் கவனம் ரதி மீது என்றானதில் சாணக்கியன் என்ற மனிதனை அனைவரும் மறந்து தான் போனார்கள். அவனுக்கு என மனைவி வந்த பிறகு அவனை அவள் பார்த்துக் கொள்வாள் என்று எண்ணினார்களோ என்னவோ?

 

திருமணத்திற்கு சென்று வந்த பின்னர் திவ்யா முற்றிலும் வேறு மாதிரி தான் இருந்தாள். ஒரு மாதிரி சிடுசிடுவென்று உயிர்ப்பே இல்லாமல்.

 

ரதி கண்டு பிடித்து கேட்டதற்கு கூட ஏதோ சொல்லி சமாளித்தாள். ஆனால் அன்று ஞாயிற்று கிழமை வீட்டுக்கு வந்த அரவிந்த் “உன் கிட்ட ஏதோ மாற்றம் தெரியுது திவ்யா எதுக்கு டல்லா இருக்க?”, என்று அனைவரின் முன்னிலையிலும் கேட்டு விட அப்போதைக்கு தலைவலி என்று சமாளித்தவள் தனியே தெளிவாக யோசித்தாள்.

 

“பழைய படி தான் மாற வில்லை என்றால் வீண் சந்தேகம் எழும். கனவுக்காக தானே காதலை தொலைத்தேன்? இப்படியே இருந்தால் கனவையும் தொலைத்து விடுவேன்”, என்று எண்ணியவள் மீண்டும் பழைய படி உற்சாகமாக வாயாடியாக மாற ஆரம்பித்தாள்.

 

ரதி அமர் காதல் வேறு முதலும் தெரியாமல் முடிவும் தெரியாமல் சென்று கொண்டிருந்தது. ரதி இப்போதெல்லாம் ஏதோ யோசனையிலே இருந்தாள். அன்று இரவு அவள் உறக்கம் வராமல் போராடிக் கொண்டிருக்க “என்ன ஆச்சுக்கா? என்னத்த இப்படி தூங்காம யோசிச்சிட்டு இருக்க?”, என்று கேட்டாள் திவ்யா.  இப்ப என்ன சொல்ல என்ற தெரியாமல் தடுமாற்றமாக தங்கையைப் பார்த்தாள் ரதி.

 

தொடரும்..

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!