Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

88. வித்யா வெங்கடேஷ் - நிழலாடும் நின் நினைவில்

03 நிழலாடும் நின் நினைவில்

ஓம் ஸ்ரீ சாய்ராம்

அது ஷர்மிலாவின் மிக நெருங்கிய நண்பரின் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை. தானே ஒரு மகப்பேறு மருத்துவராக இருப்பதால், ரம்யாவிற்குச் சிகிச்சை அளிக்கும் பிரதான பொறுப்பிலும் நிறுத்தப்பட்டிருக்கிறாள்.

ஆறு வருடங்களாகப் பிள்ளைவரம் வேண்டித் தவம் கிடப்பவளிடம் கருக்கலைந்த செய்தியை எப்படிச் சொல்லப் போகிறேன் என்ற கனத்த மனத்துடன் சிகிச்சையைத் தொடங்கினாள்.

கருப்பையில் நுழைந்த அவள் விரல்கள் அடுக்கடுக்காய் அதிர்ச்சிகளை உணர்ந்தன. தொடர்ந்து எடுக்கப்பட்ட பரிசோதனைகள், ஸ்கேன், சீஃப் டாக்டரின் விளக்கங்கள் அனைத்தும் தன் சந்தேகங்களை ஊர்ஜிதம் செய்ய, தலைசுற்றியது அவளுக்கு.



Advertisement

“அவங்க ஃபேமிலி மெம்பர்ஸ்க்கு சொல்லிட்டு சர்ஜெரிக்கு ஏற்பாடு செய் ஷர்மிலா,” தோழி கூற,

இரட்டைக் குழந்தைகளைச் சுமந்தவளுக்கு அதைப்பற்றி தெரிந்திருந்ததா இல்லையா என்று கூடத் தெரியவில்லை; இந்நிலையில், ‘உன் இரண்டு கருவும் கலைந்துவிட்டது; அதன் பின்விளைவாக உன் கருப்பையும் பழுதடைந்து அதை நீக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறாய்’ என்பதை அவளிடம் எப்படிச் சொல்ல, என உள்ளுக்குள் குமுறியவள்,

“கொஞ்சம் டைம் கொடு கவிதா,” கசந்த குரலில் கெஞ்சினாள்.

Advertisement

“உனக்குத் தெரியாதது ஒண்ணுமில்ல; டிலே பண்ணப்பண்ண பேஷன்ட் உயிருக்குத் தான் ஆபத்து,” கவிதா நினைவூட்ட, நிதர்சனத்தை உணர்ந்தாள் ஷர்மிலா.

Advertisement

தருணிடம் எடுத்துச்சொல்லி சிகிச்சையைத் தொடங்க தீர்மானித்தாள்.

“என்ன இது ஷர்மிலா! சின்ன ஆக்சிடென்டுன்னு சொல்லிட்டு, இப்படி என் அண்ணன் உடம்பு முழுக்க ட்யூப்ஸ் சொருகி வச்சிருக்கீங்க. டாக்டரைக் கேட்டால், ப்ரெயின் இஞ்சுரி, கோமாக்குப் போகாத வரைக்கும் நல்லதுன்னு பயமுறுத்துறாரு. என்ன நடக்குது இங்க? எனக்கு உண்மையைச் சொல்லுங்க!” ஷர்மிலாவைக் கண்டதும் படபவெனப் பொரிந்தான் தருண்.

‘அதிகப்பிரசங்கி மருத்துவர் அனைத்தையும் உளறிவிட்டாரா!’ என மனதளவில் நொந்தவள்,

Advertisement

“ஹெட் இஞ்சுரிதான் தருண். ஆனால் நீ பயப்படும் அளவுக்கு ஆபத்தானது இல்ல. மைல்ட் கன்கஷன். மயக்கம் தெளிய 48மணி நேரம் வரை ஆகலாம். அவன் முன்னேற்றத்தைக் கண்காணிக்கவும், ஆகாரம், மருந்து மாத்திரை செலுத்தவும் தான் அத்தனை ட்யூப்ஸ்,” சற்று ஆளுமையுடனே விளக்கினாள்.

“ஒரு டாக்டரா என் அண்ணன் விஷயத்தில் பொய்சொல்ல மாட்டீங்கன்னு நம்புறேன்,” அழுத்தமாக உரைத்தவன்,

“ரம்யாக்கு எப்படியிருக்கு?” என்றான் இடைவெளியே விடாமல்.

மற்றொரு பூகம்பத்தை அவன் எப்படி எதிர்கொள்வான் என யோசித்தவள், “வீட்டுல வேற யாரும் வரலையா…” இழுத்தாள்.

“எதுவா இருந்தாலும் என்கிட்ட சொல்லுங்க!” கறாராக மடக்கினான்.

“அதுக்கில்ல தருண்… அவளுக்கு இப்போ ஒரு பெண்ணின் துணை தேவை…” ஷர்மிலா வார்த்தைகளைக் கோர்க்க,

“கருக்கலஞ்சிடுத்து! அதானே சொல்லப்போறீங்க,” நேரடியாகவே கேட்டான்.

திகைத்து நின்றாள் ஷர்மிலா.

“மருத்துவ ரீதியா தெரியலேனாலும், ப்ரெக்னென்சி பற்றி எனக்கும் ஓரளவுக்குத் தெரியும். நானும் அப்பாவாகப் போகுறவன்,” அவன் மேலும் இடித்துக்காட்ட,

“அதுக்கில்லடா…” வார்த்தைகள் தொண்டைக் குழியில் சிக்கிக்கொண்டது அவளுக்கு.

தன் பெற்றோர் இலங்கை புனித யாத்திரை பயணம் மேற்கொண்டிருப்பதாகவும், ரம்யாவின் பெற்றோர் அவள் தந்தையின் பணி நிமித்தமாக, கனடாவில் வசித்து வருவதாகவும் உரைத்தவன்,

“ப்ளீஸ் ஷர்மிலா! அவளுக்கு இப்ப எப்படி இருக்குன்னு சொல்லுங்க. எதுவா இருந்தாலும் நான் தனியா சமாளிச்சுப்பேன்,” இரு கரங்களையும் கூப்பி கண்ணீர் வழிய கெஞ்சினான்.

மொத்தமாய் உடைந்திருக்கும் அவனிடம் ரம்யாவின் உடல்நிலை பற்றி முழுவிவரங்களையும் சொல்ல மனமில்லாமல், “ஆமாம் கருக்கலைஞ்சிருக்கு. அவளுக்கு இன்னும் தெரியாது. ப்ரோசீஜர் பண்ணிட்டா ஷி வில் பெ ஃபைன் இன் ய டே ஆர் டூ,” அச்சமயத்திற்குத் தேவையானதை மற்றும் பகிர்ந்தாள்.

எதிர்பார்த்தது தான் என்றாலும், சிகிச்சை அறையில் ஏதாவது பேரதிசயம் நிகழ்ந்திருக்காதா என்ற நப்பாசை இருக்கத்தான் செய்தது அவனுக்கு.

நிதர்சனத்தை உள்வாங்க அவன் மௌனத்தில் கரைய,

“ப்ரொசீஜர் முடிஞ்சதும், அவளும் ஷ்ரவனும் ஒரே அப்சர்வேஷன் ரூம்ல இருக்குறதுக்கு நான் ஏற்பாடு பண்ணறேன். ஒரு பெண்ணா, அவளுக்குத் தேவையானதை நான் செய்யறேன். வேற எந்த ஹெல்ப் வேணும்னாலும் தயங்காம கேளு,” தீர்வு சொல்லி அவன் தோளில் தட்டிக்கொடுத்தாள் ஷர்மிலா.

தனியாளாகச் சமாளிக்க வேண்டிய நெருக்கடியில் இருந்தவனுக்கு, தலையாட்டுவதைத் தவிர வேறுவழி இருக்கவில்லை.

****************************************************************************************

மறுநாள் காலை ஆறு மணியளவில் இருவரையும் ஒரே அறையில் மாற்றும் ஏற்பாடுகளைக் கவனித்தாள் ஷர்மிலா.

அசைவின்றி கிடக்கும் அண்ணன் ஒருபுறம்; ஷ்ரவன்! ஷ்ரவன்! என அரைமயக்கத்தில் முனகிக்கொண்டிருக்கும் தோழி ஒருபுறம் எனக் கண்ட தருணுக்கு,

“இதைப் பார்க்கவா உங்க ரெண்டு பேரையும் கல்யாணம் செஞ்சுக்க சொல்லிக் கட்டாயப்படுத்தினேன்,” ஓ என்று கதறி அழுதான்.

காணொளி அழைப்பில் இணையச் சொல்லி உத்ரா நச்சரிக்க, கனத்த மனத்துடன் கண்களைத் துடைத்துக்கொண்டு அவளை அழைத்தான்.

அவர்களைக் கண்டதும் வீரிட்டு அழுதாள் பாவை.

“அழாதே டி! உடம்பை அலட்டிக்காத உத்ரா,” கெஞ்சியும் சமாதானம் ஆகவில்லை அவள்.

“உத்ரா! ப்ளீஸ்! நிதானமா இரு. இதுக்குமேல கஷ்டங்களைச் சமாளிக்க எனக்குச் சுத்தமா தெம்பில்ல,” அவன் கேவி அழ,

ஆறுதல் சொல்ல யாருமின்றி தனியாளாகச் சமாளிக்கும் அவன் பயத்தை உணர்ந்தவள், நீள் பெருமூச்சுவிட்டு தன்னைத்தானே ஆசுவாசப்படுத்திக்கொண்டு,

“ஐ யம் ஓகே டா. நீயும் தைரியமா இரு,” என நிதானமாகப் பேசினாள்.

இருவரின் பெற்றோரும் கூட தருணின் அழைப்பிற்காக காத்திருப்பதாக உத்ரா அறிவிக்க, அவர்களிடம் பேச திராணி இல்லாமல் தான் ஒருவர் பின் ஒருவராக காணொளியில் அழைத்தான்.

உடனே கிளம்பி வரப்போவதாக ஆர்ப்பாட்டம் செய்தவர்களை அதட்டி கட்டுக்குள் கொண்டு வருவதற்குள் போதும் போதும் என்றானது அவனுக்கு. அதுவும் அவர்கள் அம்மா திலகா, வந்தே தீருவேன் என ஒற்றைக் காலில் நின்றார்.

“புரிஞ்சுக்கோ ‘ம்மா. குறைஞ்சது ஒரு வாரமாவது ரெண்டு பேரும் இங்க இருக்க வேண்டியிருக்கும். நீங்க வந்தாலும் ஹாஸ்பிட்டல்ல ஒருத்தருக்கு மேல தங்க முடியாது. நான் பாத்துக்கிறேன். நீங்க உங்க வேண்டுதல் எல்லாத்தையும் முடிச்சிட்டே கிளம்பி வாங்க. அந்த கடவுள் இவங்களுக்கு வழிகாட்டட்டும்,” தீர்க்கமாக மறுத்தான்.

அரைமனதாக தருணிற்குச் செவிசாய்த்தவர்கள், மணிக்கொருமுறை அழைத்து விசாரிக்கவே செய்தனர்.

*********************************************************************************************

அன்று மாலை சுயத்திற்கு வந்த ரம்யாவின் விழிகள் ஷ்ரவனைத் தான் முதலில் தேடியது.

மருத்துவக் குழாய்களுக்கு இடையே சிறைவாசம் அனுபவிக்கும் அவனின் அசைவற்ற தேகத்தைக் கண்டு மிரண்டு எழுந்தாள். உள்ளத்தின் வேகத்திற்கு உடல் ஈடுகொடுக்கவில்லை. ஆயிரம் முட்கள் துளைப்பது போல அடிவயிற்றில் சுள்ளென்று வலி பரவ, மெத்தையின் இருபுறமும் கைகளை அழுந்த ஊன்றியபடி எழுந்து உட்கார மெனக்கெட்டாள்.

“மெதுவா எழுந்திரு ரம்யா,” பாய்ந்து வந்து தாங்கிக்கொண்ட தருணின் மார்பில் தலைசாய்த்தவளுக்குத் துக்கம் தொண்டையை அடைத்தது.

பாலைவனமாகிப் போன வயிற்றில் தடவி, “எல்லாம் முடிஞ்சுபோச்சுல டா,” உதட்டைப் பிதுக்கி கேவினாள்.

“மனச தளரவிடாதே ரம்யா.” சொல்பவனுக்கே மனதளவில் தைரியமில்லை.

“ஷ்ரவன் இதை எப்படித் தாங்கிக்க….” தொடங்கியவள், உணர்வின்றி கிடக்கும் ஷ்ரவனின் நிலையை உற்றுபார்த்து பயந்தாள். வாய்விட்டுக் கேட்கவும் பயமாக இருந்தது அவளுக்கு.

“உன் அண்ணனும் என்னை ஏமாத்திட மாட்டாரு இல்ல,” மொத்தமாய் உடைந்தாள்.

“ஏன் ரம்யா ஏதேதோ பேசுற,” கலங்கியவன், மருத்துவர் சொன்ன அனைத்தையும் ஒன்று விடாமால் பகிர்ந்தான்.

நிதர்சனங்களை உள்வாங்கி தலையசைத்தவள், “எனக்குக் கொஞ்ச நேரம் அவர் பக்கத்துல உட்கார்ந்துக்கணும் போல இருக்குடா,” கண்ணீர் மல்க கெஞ்சினாள்.

********************************************************************************************

கொஞ்ச நேரம் என்றவளை நாள் கணக்காகத் தன் பக்கத்தில் அமர்த்தி ஏங்கவைத்தான் கோமாவுக்குச் சென்ற ஷ்ரவன்.

“அவனால கண் திறந்து பார்க்க முடியலையே தவிர சுத்தி நடக்குறது எல்லாத்தையும் கவனிச்சிட்டுத்தான் இருக்கான் ரம்யா. அவன்கிட்ட பேச்சுக்கொடுத்துட்டே இரு. சந்தோஷமா பேசு; மனசவிட்டுப் பேசு. அவன் நினைவு திரும்புறதுக்கு இதுதான் பெஸ்ட் மெடிசன்,” நம்பிக்கை ஊட்டினாள் ஷர்மிலா.

இடிமேல் இடி வந்து விழுகிறதே என விரக்திப் புன்னகை உதிர்த்தவள் சில நேரங்களில் நம்பிக்கையுடனும், பல நேரங்களில் துவண்டும் என மனப்போராட்டத்தில் தத்தளித்தாள்.

ரம்யாவின் நிலையைக் கருத்தில் கொண்ட ஷர்மிலா, தன் ஆஸ்திரேலியா பயணத்தை ஒத்திப்போட்டாள். பெரும்பாலான நேரத்தை அவர்களுடன் செலவழித்தாள்.

தார்மீக ஆதரவு தரும் ஷர்மிலாவின் எண்ணம் புரிந்தாலும், ஏனோ தருணால் அவளுடன் சகஜமாகப் பழக முடியவில்லை. அவள் உபயத்தால், உடலாளும் உள்ளத்தாலும் தேறிவரும் தோழியின் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை போடவும் இயலவில்லை.

மலையெனக் குவிந்திருந்த அலுவல் வேலைகளைக் காரணம் காட்டி, பகல் நேரத்தில் அலுவலகத்திலும், இரவு நேரத்தில் மருத்துவமனையிலும் என நாட்களை ஓட்டினான்.

******************************************************************************************

விளையாட்டுப் போல இரண்டு வாரங்கள் கடந்திருந்தது. வழக்கம் போல ஷ்ரவனின் கை விரல்களை வருடியபடி கதை பேசிக்கொண்டிருந்தாள் ரம்யா.

“சண்டே மார்னிங்க் அம்மாவும் அப்பாவும் ஸ்ரீலங்காலேந்து வந்துடுவாங்க ஷ்ரவன். நீங்கதான் அவங்கள ரிசீவ் பண்ண ஏர்ப்போர்ட் போனோம் சொல்லிட்டேன்,” நிபந்தனை இட்டவள், அடிவயிற்றை வருடிக்கொள்ள, தன்னையும் மீறி கண்ணீர் வழிந்தது.

“நீங்க இப்படியே பிடிவாதமா இருக்குறது நியாயமா? நீங்க எனக்குப் பக்கபலமா இருந்தால் தானே என்னால அவங்கள ஃபேஸ் பண்ண முடியும்,” தொண்டையை அடைக்க விசும்பி, அவன் மார்பில் தலைசாய்த்தாள்.

அவன் உள்ளங்கை தன் கையில் அழுந்துவதை உணர்ந்தவள், திடுதிப்பென்று எழுந்து “ஷர்மிலா! ஷர்மிலா!” எனக் கூவினாள்.

கணவனுடன் அலைபேசியில் பேசிக்கொண்டிருந்தவள், விரைந்தோடி வந்தாள்.

அதற்குள் ஷ்ரவன் மெல்ல தலையசைத்து கண்விழிக்க முயல,
“யெஸ்! யெஸ்! யெஸ்! அவனுக்கு நினைவு திரும்புது,” மகிழ்ச்சி பொங்க அறிவித்தாள் ஷர்மிலா.

சூரிய ஒளியில் அவனுக்கு கண்கள் கூச, இமைகளை மூடித் திறந்து சிரமப்பட்டான்.

“எல்லா கர்டன்ஸும் மூடிட்டு, டிம் லைட் போடு ரம்யா,” உத்தரவிட்ட ஷர்மிலா,
“ரிலாக்ஸ் ஷ்ரவன்! ரிலாக்ஸ் ஷ்ரவன்!” உள்ளங்கையைத் தேய்த்து விட்டுக்கொண்டே அவன்மேல் ஒரு கண், ஈ.சி.ஜி. மானிடர் மீது ஒரு கண் என அவன் உடல்நிலையைக் கூர்ந்து கவனித்தாள்.

விழித்தவன், “பானு! எனக்குத் தெரியும் நீ என்னைத் தேடி வந்துடுவன்னு. உன்னால என்னைப் பிரிஞ்சு வாழவே முடியாது…” என்றதும் தூக்கிவாரிப்போட்டு இரண்டடி பின் சென்றாள் ‘பானு’ என்கிற ஷர்மிலா பானு.

திரைசீலைகளை மூடச்சென்றவளோ அதே இடத்தில் உறைந்து நின்றாள்.

இடது கை விரல்களை பரப்பி அவற்றை முன்னும் திருப்பி ஷர்மிலா பக்கம் நீட்டியவன், “நான் செய்தது முட்டாள்தனம் தான் பானு. உன்மேலிருந்த கோபத்துல இப்படிச் செஞ்சிட்டேன்,” அவன்போக்கில் பேசிக்கொண்டு போக,
கதவைத் திறந்தான் தருண்.

“ஷ்ரவன்! நான் உன்னை பிரிஞ்சு போனது போனதுதான். அதுக்கப்புறம் உனக்கும் ரம்யாவுக்கும் கல்யாணமாகி எட்டு வருஷமாச்சு,” விளக்கிக்கொண்டே, ரம்யாவை அருகில் வரச்சொல்லி கண்ணசைத்தாள்.

ரம்யா கற்சிலையாக நிற்க, பதற்றம் கொண்ட ஷர்மிலா,
“பயப்படாதே ரம்யா. அவனுக்கு ரெட்ரோகிரேட் அம்னீசியாவா இருக்குமோன்னு சந்தேகமா இருக்குது. நான் டாக்டர அழைச்சிட்டு வரேன். நீ பக்கத்துல வந்து அவன்கிட்ட பேசு,” தயங்கித் தயங்கிப் பேசினாள்.

ரம்யாவோ ஓர் அடிக் கூட நகராமல் பிடிவாதமாக நின்றாள்.

புருவங்களை வளைத்து இரு பெண்களையும் மாறி மாறி பார்த்த ஷ்ரவன்,ரம்யாவை மருத்துவர் என யூகித்தான்.

“ஐ ஏம் பர்ஃபெக்ட்லி ஆல்ரைட் டாக்டர். எனக்கும் என் லவ்வருக்கும் சின்ன மனஸ்தாபம். நாங்களே பேசித் தீர்த்துக்குறோம்,” என்றதும், ரம்யாவின் இதயம் துடிக்க மறந்தது.

“ஐயோ ஷ்ரவன்! ரியாலிடிய புரிஞ்சுக்கோ டா. நாம இப்போ 2012ல் இருக்கோம்,” விறுவிறுவென தன் ஆப்பிள் அலைபேசியை உயிர்ப்பித்து நாள்காட்டியை காட்டியவள், “ரெண்டு வாரத்துக்கு முன்னாடி உனக்கு ஆக்சிடென்ட் ஆகி தலையில் பலமா அடிப்பட்டிருக்கு. கன்கஷன் கோமாவா மாறி, இன்னைக்குத் தான் கண் முழிக்குற,” அழுத்திக் கூறினாள்.

கையளவு தொலைக்காட்சிப் பெட்டி போல எதையோ அசைத்து வித்தைக் காட்டுகிறாளே என யோசித்தவன், “இல்ல இல்ல பானு! நீ பொய் சொல்ற. நம்ம லவ் டைரியில் நான் கடைசியா எழுதிருக்க பக்கத்தில் பாரு. இது மே 2000. தேதிக் கூட…” நெற்றி சுருக்கியவன், 15 இல்ல 16 இருக்கும்,” தீர்க்கமாக வாதாடினான்.

மறுக்கும் அவனுக்கும், மறத்துப் போய் நிற்கும் அவளுக்கும் என்ன சொல்லி புரியவைப்பது எனத் தெரியாமல் ஷர்மிலா தன் முகத்தை இரு கைகளிலும் மூடிக்கொண்டு மெத்தையில் அமர்ந்தாள்.

அதற்கு மேலும் பொறுக்க முடியாதவனாக விறுவிறுவென அறைக்குள் நுழைந்த தருண்,

“நீ மறுபடியும் இவனைத் தேடி வந்த போதே இப்படியெல்லாம் நடக்கும்னு நெனச்சேன்,” உறுமினான்.

திடுக்கிட்டு எழுந்த ஷர்மிலா, “தருண் அவசரப்படாதே! ஷ்ரவனுக்குப் பார்ஷியல் மெமரி லாஸ் ஆகிருக்கு,” புரியவைக்க முயல,

“போதும் நிறுத்து! நீ சொல்றத எல்லாம் ரம்யா வேணும்னா கண்மூடித்தனமா நம்பலாம். என்னை ஏமாத்த முடியாது,” தடுத்தவன், தோழியை வலுக்கட்டாயமாக இழுத்து வந்து அண்ணன் முன் நிறுத்தினான்.

“தருண்… நீ எப்போடா திருச்சிக்கு வந்த,” ஷ்ரவன் வினவ,

“நீயும் உன் காதலியும் என்ன நாடகம் ஆடினாலும், உன்னை உயிராய் நேசிக்குற இவளை அழவச்சிட்டு உங்களால சந்தோஷமாவே வாழ முடியாதுடா, எனச் சபித்தான்.

“டாக்டர் ஏன் அழணும்… என்னடா சொல்ற… எனக்கு ஒண்ணுமே புரியல,” ஷ்ரவன் அப்பாவியாகக் குறுக்கிட,

குழும்பித் தவிக்கும் அவன் இதயத்தில் அழுத்தம் கூடுவதைக் கவனித்த ஷர்மிலா,

“தருண்! ப்ளீஸ். கண்டதையும் பேசி அவனைக் குழப்பாதே. அவனுக்கு நிஜமாவே ரம்யாவைப் பற்றி எதுவுமே நினைவில்ல,” மன்றாடினாள்.

கோபம் தலைக்கேறியவனோ கேட்கும் மனநிலையில் இல்லை.

ஷ்ரவன் முகமருகே தலைசாய்த்தவன், “சபாஷ்! விட்டுட்டு ஓடிப்போனவள நியாபகம் வச்சுப்ப; நீதான் உலகம்னு உன்னோட குடும்பம் நடத்துறவள மறந்துடுவ… நல்லா நாடகம் ஆடுறீங்கடா நீயும் உன் காதலியும்,” ஏளனமாக உரைத்தான்.

ஆயிரம் வண்டுகள் குடைவது போல தலை பாரமாகிப் போக, மண்டையை அழுந்த பிடித்துக்கொண்ட ஷ்ரவன்,

“இல்லடா! நானும் பானுவும் நாலு வருஷமா காதலிக்கிறோம். அவங்க வீட்டுல சம்மதம் கூடச் சொல்லிட்டாங்க. அவதான் என்னோட சண்டை போட்டு….” மனஸ்தாபம் கண்முன் நிழலாடி ரத்த அழுத்தம் எகிறி, மூச்சுத் திணறலில் விழி பிதுங்கித் துடிதுடித்தான். அவன் நாடித்துடிப்பும் மளமளவெனச் சரியத் தொடங்கியது. நிலைமை கையைமீறி போவதை உணர்ந்த ஷர்மிலா, ஆக்சிஜன் பொருத்தி,

“காம் டவுன் ஷ்ரவன். நான் உன்னை விட்டுப் போகமாட்டேன்,” நெஞ்சை நீவிவிட்டபடி மருத்துவரை அழைத்தாள்.

இமைக்கும் நொடியில் ஆஜரான மருத்துவக் குழுவினர் ஆளுக்கொரு பக்கமாய் சிகிச்சை அளித்து அவனைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். மயக்க மருந்தின் உபயத்தால் ஆழ்ந்த மயக்கத்திற்குச் சென்ற ஷ்ரவனுக்கு எல்லாம் சீராக இயங்குகிறதா என உறுதி செய்துகொண்ட மருத்துவர்,

“பேஷன்ட், மூளையைக் கசக்கி யோசிக்குற மாதிரி துருவித் துருவிக் கேள்வி கேட்காதீங்க. அவர் போக்கில் விட்டுப்பிடிங்க,” அறிவித்து நகர்ந்தார்.

ரம்யா அருகில் ஓடிவந்த ஷர்மிலா, அவள் நகராத வண்ணம், இருகரங்களையும் இறுக்கப் பிடித்துக்கொண்டு, “நீயாவது நான் சொல்றத நம்பு ரம்யா. ஷ்ரவனுக்கு ஏற்பட்டிருக்கிறது தற்காலிகமான மறதி தான். அவனுக்கு ஆக்சிடென்ட் ஆகுறதுக்கு முன்னாடி, நாங்க எங்க காலேஜ் டேஸ் பற்றி பேசிட்டு இருந்தோம். அதன் விளைவுதான் இப்படிக் குழம்பிப் போயிருக்கான். பக்குவமா எடுத்துச் சொல்லி குணப்படுத்திடலாம். ஆனால் அதுக்கான நேரம் இதுயில்ல. உடலளவில் தேறினதும் நிதானமா புரியவைக்கலாம்,” தன்மையாகப் பேசி புரியவைக்க முயன்றாள்.

“கறையான் மாதிரி ஒட்டிட்டு இவங்க வாழ்க்கையை அரிச்ச வரைக்கும் போதும். நீ முதல்ல இங்கிருந்து கிளம்பு. எதுவா இருந்தாலும் நாங்க பார்த்துக்குறோம்,” தோழியை அவள் கரத்திலிருந்து பற்றினான் தருண்.

கண்ணீர் வடிய கூனிக்குருகி நின்றாள் ஷர்மிலா.

‘சிந்தித்துப் பார் ரம்யா! ஷர்மிலா உன் வாழ்க்கையை அரிக்க வந்த கறையானா அல்லது ஒளி சேர்க்க வந்த மின்மினி பூச்சியா?’ மனசாட்சி உறுத்த, விருட்டென தருணின் கையை உதறியவள், ஷர்மிலாவின் விழிநீரைத் துடைத்துவிட்டு,

“நீ அவரை எனக்கு மீட்டுத் தந்துடுவன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. நான் உன்னை முழுசா நம்புறேன். அவருக்கு என்ன சிகிச்சை வேணும்னாலும் கொடு. எத்தனை நாள் வேணும்னாலும் எடுத்துக்க; நான் வீட்டுக்குக் கிளம்புறேன்; இனி நீ சொல்லும்போது தான் அவரை வந்து பார்ப்பேன்,” தெளிவாகப் பேசினாள்.

“என்ன உளறுர ரம்யா. அவ யாரு நம்ம வீட்டு விஷயத்துல தலையிட,” தருண் கொந்தளிக்க,

“இது எனக்கும் என் கணவருக்கும் அவர் முன்னாள் காதலிக்குமான அந்தரங்கம் தருண். நீ தலையிடாதே,” தீர்க்கமாக உரைத்து அறையை விட்டு வெளியேறினாள்.

நிர்க்கதியாய் நிற்கும் இந்த அவலையை – உன்
நட்பெனும் கரங்களால் அரவணைத்தாய்;
நல்லுயிரான் என்னவன் களங்கமற்றவன் – உணர்த்த
நறுக்கென்று உன் உறவை வெட்டிவிட்டு – விடை தேடுகிறேன்
நெஞ்சோரம் நிழலாடும் நின் நினைவில்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!