Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

03. சிவயாழினி - மௌனமாய் ஒரு மோகனம்

மெளனம் 04

சின்னபொண்ணு கல்லூரி முடிந்து வந்ததும் அலமேலு சமையல்காரரை அழைத்து, “காளியப்பா இந்த பொண்ணுகிட்ட எல்லா வேலையும் வாங்கிக்க, சாப்பாடு இங்கேயே கொடுத்துடு. இவ கிட்ட சாப்பாடு கொடுத்தணுப்பறதாே டீ காபி கொடுத்தணுப்பறதோ கூடாது. எப்பவும் போல நீ தான் சாப்பாடு கொண்டு வந்து தரணும்” என்றார் கட்டளையாக
சமையல்காரரும் “சரிம்மா” என்று சொல்லி, சின்னபொண்ணிடம் செய்ய வேண்டிய வேலைகளை சொன்னார். சமையல் முடிந்ததும், “தாத்தா காலைலயிருந்தே சாப்பிடல, ரொம்ப பசிக்குது, கொஞ்சம் சாப்பாடு போட்டு தர்றீங்களா?” என்று கேட்டாள்.


Advertisement

“வீட்டு முதலாளிங்களுக்கு சாப்பாடு போட்டு மிச்சமிருக்கறத தாம்மா நாம சாப்பிடணும், அதுக்கு முன்னாடி நாம சாப்பிட்டா எப்புடி? பாத்தா என்ன சொல்லுவாங்களோ?”
“சரி தாத்தா, நான் குழந்தைய பாத்துக்க போறேன், எல்லாரும் சாப்பிட்டதும் எனக்கு சொல்றீங்களா?” என்று கேட்டவளின் முகம் உண்மையில் மிகவும் சோர்ந்து போயிருப்பதை கண்ட சமையல்காரர், தட்டில் சாப்பாடு வைத்து அவளிடம் நீட்டினார்.

Advertisement

Advertisement

“ஓரமா உட்கார்ந்து சாப்பிடும்மா, பாத்துக்கலாம்” 
அவள் தயக்கத்துடன் பார்க்க, “அவங்க யாரும் சமையல் ரூமுக்கு வரமாட்டாங்க, அப்படியே வந்தா நான் சமாளிச்சுக்கறேன். நீ சாப்பிடு” என்று சொல்ல, அவசரமாக தட்டை வாங்கியவள் உணவை அள்ளி எடுத்து வேகமாக சாப்பிட தொடங்கினாள்.

Advertisement

“என்ன நடக்குது இங்கே?” குழந்தையை பார்த்துக் கொள்ள சின்ன பொண்ணுவை அழைக்க வந்த லதா, அவள் சாப்பிடுவதை பார்த்து கோபமாக கேட்க, “அம்மா, ரொம்ப பசிக்குதுனு சொல்லுச்சு, அதான்”
“அதுக்கு? வேலைக்காரி சாப்பிட்டு மிச்சத்தை எங்களுக்கு போடுவியா?” என்று லதா உக்கிரமாக பார்க்க, சின்னபொண்ணு லதாவை கண்டு உண்மையில் மிரண்டு விட்டாள். கருணை வடிவான சரவணன் சாரின் மனைவியிடம் இதை அவள் எதிர்பார்த்திருக்கவில்லை.
வாயிலிருந்த உணவை விழுங்குவதா வேண்டாமா? என்ற சந்தேகத்தில் அப்படியே அமர்ந்திருந்தாள்.
“உனக்கும் உன் படிப்புக்கும் உதவியா இருக்கட்டும்னு நான் உன்னை வீட்டுக்குள்ள தங்கறதுக்கு அலோவ் பண்ணேன், அத நீ அட்வான்டேஜ்ஜா எடுத்துக்காத. வேலை செய்ய வந்தவ வேலைக்காரி மாதிரி நடந்துக்கோ, புரிஞ்சதா?” என்று விரல் நீட்டி கேட்க, அவளால் தலையை மட்டும் தான் அசைக்க முடிந்தது.
“உங்க ரெண்டு பேருக்கும் இது தான் பர்ஸ்ட் அன்ட் லாஸ்ட் வார்னிங். எனக்கும் சரவணனுக்கும் வேற சமைச்சு வைங்க. இதுல எதுவும் என் டேபிளுக்கு வரக்கூடாது” என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டாள்.
லதாவை பொறுத்தவரை நான் ஒரு பெரிய இடத்து பெண், எந்த வேலையும் செய்ய மாட்டேன், எனக்கென ஒரு அந்தஸ்து மரியாதை இருக்கிறது என்று நினைப்பவள், மருமகளாக அலமேலுவின் வீட்டிற்கு வந்ததும் ஆரம்பத்தில் வேலை எதுவும் சொல்லா விட்டாலும் நாளடைவில் அலமேலு சின்னசின்னதா எதாவது வேலை சொல்ல ஆரம்பித்து விட்டார்.
அது லதாவிற்குள் புகைச்சலை கொடுத்திருந்தது, அது வெடிப்பதற்குள் அவள் கர்ப்பமாகிவிட எந்த வேலையும் செய்யாமல் மகாராணி போல வலம் வந்தாள். குழந்தை பிறந்ததும் புகுந்த வீட்டிற்கு தனியாக போகாமல் வேலைக்காரியுடன் போனால், தனக்கு வேலை சொல்ல தயங்குவார்கள் என்று நினைத்தே சரவணனிடம் உதவிக்கு ஆள் வேண்டும் என்று சொல்லியிருந்தாள். அவன் சின்னபொண்ணை அறிமுகம் செய்த போது வேலை கொடுப்பதால் ஒருத்தி படித்து முடித்தால் அதையும் பெருமையாக வெளியே சொல்லிக் கொள்ளலாமே என்று சம்மதம் தெரிவித்தாள்.
ஆனால் தான் ஒரு முதலாளி என்ற கர்வமும், வேலை செய்பவர்கள் எப்போதும் தனக்கு கீழே இருக்க வேண்டும் என்ற எண்ணமும் அவளிடம் நிறையவே இருந்தது. அவளின் இந்த முகம் சரவணன் கூட அறியாத ஒன்று. 
சின்னபொண்ணு சாப்பிட்டு முடித்து, வேகமாக சமையல்காரருக்கு காய்களை நறுக்கி கொடுத்து விட்டு, பாத்திரங்களை கழுவி சரவணன் அறைக்கதவை தட்டினாள். லதா கொடுத்த குழந்தையின் ஆடைகளை துவைத்து காயப்போட்டு விட்டு, அவர்கள் சாப்பிட்டு அறைக்கு வரும்வரை குழந்தையை பார்த்துக் கொண்டாள். அவர்கள் அறைக்கு வந்ததும், “உனக்கு இங்கே எல்லாம் ஓகே தானே?” என்று சரவணன் விசாரிக்க, பலமாக தலையாட்டிவிட்டு தன் அறைக்கு சென்றாள்.
இரவில் எழுதவேண்டிய அசைன்மென்ட்டை எழுதிவிட்டு சிறிது நேரம் படித்துக் கொண்டிருந்தாள். 
அன்றிரவு வசீகரன் நண்பர்களுடன் வெளியே செல்வதாகவும் அங்கேயே சாப்பிட்டு விட்டு வருவதாகவும் சொல்லிவிட்டு சென்றதால் அலமேலு உறங்க சென்றுவிட்டார். சாப்பிடாமல் வீட்டிற்கு வந்த வசீகரன் அனைவரும் உறங்கியிருப்பதை கண்டு சமையலறையை எட்டி பார்க்க அங்கே சாப்பிட எதுவுமில்லை. மிகவும் பசிக்கவே என்ன செய்யலாம் என்று யோசித்தான், சின்ன பொண்ணு இருந்த அறையில் மட்டும் மின்விளக்கு எரிவதை கண்டான். அந்த அறைக்குள் தானே சரவணன் கூட்டி வந்த வேலைக்கார பெண் இருக்கிறாள், அவகிட்ட சமைக்க சொல்லி கேக்கலாமா? என்று நினைத்தவன் ஒற்றை ஆட்காட்டி விரலை மடக்கி கதவை லேசாக தட்டினான்.
ஏதோ வேலை சொல்ல தான் அழைக்கிறார்கள் என்று சின்ன பொண்ணு பட்டென கதவை திறக்கவும் பலத்த இடியோடு கரண்ட் ஆப் ஆகவும் சரியாக இருந்தது. வசீகரன் தன் கையிலிருந்த கைப்பேசியில் டார்ச்சை அடித்து அவளை பார்க்க, அவள் கூசிய கண்களை சுருக்கி அண்ணாந்து பார்க்க, அங்கே வாசலை அடைத்தபடி ஆறடி உயரத்தில் நின்றிருந்தவனை கண்டதும் கண்கள் அதிர்ச்சியில் அகல விரிந்து கொண்டன.
கலைந்த தலையும் சோர்ந்த முகமுமாக இருந்தவளின் காதில் பிளாஸ்டிக் தோடும், கழுத்தில் சிவப்பு கயிறும் இருந்தது. பெரிய கண்களை உருட்டி மருண்ட பார்வை பார்த்தவளிடம், “ஹாய் ஐயம் வசி, சரவணனோட தம்பி” என்று புன்னகைத்தான்.
பளிச்சென்று மின்விளக்குகள் மின்ன ஆரம்பிக்க, அதன் வெளிச்சத்தில் அவன் முழுஉருவம் நன்கு தெரிந்தது. அவள் தந்தை வசீகரனை வர்ணித்தது நினைவிற்கு வந்தது, ‘நல்ல உசரம், கோதுமை நிறம், தீர்க்கமான பார்வை, நல்லா எக்ஸர்சைஸ் பண்ணுவார் போல உடம்பு நல்லா ஆரோக்கியமா இருக்கு, சிரிச்ச முகம், வசீகரன்ங்கிற பேருக்கு தகுந்தாப்போல கம்பீரமா வசீகரமா இருப்பாரு மாப்பிள்ள!’ அவள் தந்தை சொன்னது போல அவனின் அகன்ற தோள்களும், உறுதியான உடற்கட்டும், அடர்த்தியான கருமுடியும், கூர்மையான விழிகளும், முதல் முறை அவளிடம் பேசும் போதே புன்னகை முகத்துடன் தன்னை அறிமுகம் செய்து கொள்ளும் இந்த வசீகர தோற்றத்தை பார்த்து தான் அவள் தந்தை இவனை மகளுக்கு மணமுடிக்க உடனே முடிவெடுத்த விட்டாரா?
“முக்கியமா என் மகன் வசீகரன் கண்ணுல நீ படவே கூடாது, எதேச்சையா அவன் முன்னாடி வந்தாலும் நீ வேற பக்கம் போயிடணும்” என்ற அலமேலுவின் எச்சரிக்கை நினைவிற்கு வர, பட்டென கதவை சாத்தியிருந்தாள்.
சற்றும் எதிர்பார்க்காத அவளின் செயல் வசீகரனுக்கு மிகுந்த அவமானமாகி போனது. இவ என்னய என்ன நினைச்சுட்டா? ராத்திரியில வந்து கதவ தட்ற கேவலமானவன்னா? நான் என்ன சொல்ல வரேன்னு முழுசா கேட்காம அவளா ஒரு முடிவுக்கு வந்தா என்ன அர்த்தம்? மூடிய கதவை முறைத்து பார்த்துவிட்டு வேகமாக மாடி படியேறினான்.
இதுவரையிலும் அவனிடம் யாருமே இப்படி முகத்திலடித்தாற் போல நடந்து கொண்டதேயில்லை. எப்போதுமே சிரித்த முகத்துடன் பேசுபவன் அவன், அவனிடம் ஒருத்தி அதுவும் அவன் வீட்டில் வேலைக்கு வந்த பெண் அவமானப்படுத்துவதா? கோபத்துடன் தன் அறைக்குள் சென்று கூண்டுபுலியாய் நடைபயின்றான்.
அவன் கோபத்தை அறியாதவளோ அலமேலுவிடம் கொடுத்த வாக்கை காப்பாற்றிவிட்ட நிம்மதியில் நன்றாக உறங்கி போனாள்.
அடுத்த நாள் காலை சரவணனும் வசீகரனும் ஜிம்முக்கு போய்விட்டு வீட்டிற்கு வந்தனர். இருவரும் வீட்டிற்குள் நுழையும் போது பாவாடை சட்டையுடன் சின்னபொண்ணு சமையலறை பக்கம் சென்றாள். அவளை பார்த்ததும் வசீகரனுக்கு முந்தையநாள் இரவு அவள் கதவை அடித்து சாத்தியது நினைவு வர, அவளை பார்க்க பிடிக்காமல் வசீகரன் மாடியேறினான்.
“ஏய் சின்னபொண்ணு, சமையல் ஆயிடுச்சா?” என்று அலமேலு அதட்ட, “கொஞ்ச நேரத்துல முடிஞ்சுடும்மா” என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றாள்.
அவளை சின்னபொண்ணு என்று அலமேலு அழைத்தது வசீகரின் காதில் விழுந்தது. வேலைக்கு வந்த பெண், வீட்டில் எல்லோருக்கும் சின்னவளாக இருப்பதால் அலமேலு அவளை சின்னபொண்ணு என்று அழைப்பதாக நினைத்துக் கொண்டான். குளித்து முடித்து சாப்பாடு மேஜைக்கு வந்தான்.
வெகுநாளைக்கு பிறகு அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவதால் அலமேலு அவரவர்களுக்கு பிடித்த வகையை சமைக்க சொல்லி சமையல்காரரிடம் சொல்லியிருந்தார். அவர் ஒருவரே அனைத்தையும் கொண்டு வந்து வைத்து கொண்டிருப்பதை கவனித்தவன்,
“இந்த வீட்டுக்கு புதுசா வந்த வேலைக்காரி எங்கே? அவங்க இந்த வேலையெல்லாம் பாக்க மாட்டாங்களா? பாவம் வயசானவரு எத்தனை முறை சமையல்கட்டுக்கும் டைனிங் டேபிளுக்கும் அலைஞ்சுட்டு இருப்பாரு? ” என்றான்
அலமேலு திருதிருவென்று விழிக்க, “டேய் அவ என் ஸ்டுடெண்ட். படிக்கற பொண்ணை வேலைக்காரினெல்லாம் சொல்லாத. அவளுக்கு காலேஜூக்கு நேரமாயிருக்கும், அதான் வந்திருக்கமாட்டா” என்றான் சரவணன்.
“காலேஜ்க்கு போனா வேலை செய்ய மாட்டாங்களா? அதுக்கு தானே வந்தாங்க” என்று ரஞ்சனி சொல்ல, “சின்ன பொண்ணு” என்று லதா குரல் கொடுத்தாள்.
இதற்கு பின்பும் வெளியே வராமல் இருக்க முடியாது என்பதால் அலமேலுவின் எச்சரிக்கையை மீறி சமையலறையிலிருந்து வெளியே வந்தாள்.
தலைகுனிந்தபடி வந்து நின்றவளிடம், “உன்னை பொண்ணு பாக்கவா வந்திருக்காங்க? தலைய குனிஞ்சுட்டு இருக்க? மசமசன்னு நின்னுட்டு இருந்தா எப்படி? வந்து எல்லாருக்கும் சாப்பாடு பறிமாறு” என்றான் வசீகரன் லேசான எரிச்சல் குரலில்.
நேற்று இரவு அவள் கதவை அடித்து சாத்தியதால் அவள் மீது கோபத்துடன் இருந்தான். அலமேலுவுக்கு வசீகரனின் எரிச்சல் நிம்மதியை தந்திருந்தது. “சொல்றாங்க இல்ல, சாப்பாடு பறிமாறு” என்று அலமேலு கூறிய பின்பே உள்ளே சென்று உணவு பாத்திரங்களை எடுத்து வந்தாள்.
அவள் யாரையும் நிமிர்ந்தும் பார்க்காமல் அனைத்தையும் எடுத்து வந்து இயந்திரகதியில் வைத்து விட்டு மீண்டும் சமையலறையை நோக்கி செல்லவும் ஏனோ வசீகரனுக்கு அவளை வம்பிழுக்க தோன்றியது. 
“சின்னபொண்ணு” என்று அதட்டலாக அழைத்திருந்தாலும் முதன்முதலாக அவன் அவள் பெயரை சொல்லி அழைக்கவும் அதிர்ச்சியுடன் திரும்பினாள். அலமேலுவின் எச்சரிக்கும் பார்வையில் தயங்கி தாய் மகன் இருவரையும் பார்த்தாள்.
“எனக்கு சூடா வெங்காய தோசை போட்டு எடுத்துட்டு வா” என்றான்.
அவள் கடிகாரத்தையும், சரவணனையும் பார்த்தாள். கல்லூரிக்கு தாமதமாகி கொண்டிருந்தது.
“டேய் வசி அவளுக்கு காலேஜுக்கு நேரமாச்சுடா. காளியப்பா, வசிக்கு தோசை சுட்டு போடுங்க” என்ற சரவணன் கைகழுவ எழுந்து சென்றான்.
“ஏன் அண்ணி, நீங்க வச்ச வேலைக்காரங்ககிட்ட எங்களுக்கு வேலை செய்யக்கூடாதுனு சொல்லியிருக்கீங்களா?” என்றான் வசீகரன் 
“உங்கண்ணன் சொன்னதுக்கு என்னைய ஏன் வம்பிழுக்கறீங்க வசி?” என்ற லதா சின்னபொண்ணை முறைத்தாள். “ஒரு தோசை சுடறதுக்கு எவ்ளோ நேரமாகும்? எதுக்கெடுத்தாலும் சரவணன் வக்காலத்து வாங்குவாரானு பாத்துட்டு இருப்பியா? சொன்ன வேலைய சீக்கிரம் செஞ்சுட்டு காலேஜுக்கு போக வேண்டியது தானே?” என்று சிடுசிடுத்தாள்.
“தோசையில மாவே தெரியக்கூடாது, வெங்காயம் மட்டும் தான் தெரியணும்” என்று குரல் கொடுத்தான் வசீகரன்
“இவன் ஒரு முடிவோட தான் இருக்கான், நீ பண்றத விட உன் மகன் அந்த பொண்ணை ரொம்ப டார்ச்சர் பண்ணுவான் போலருக்கு” என்று மனைவியிடம் முணுமுணுத்துவிட்டு நடராஜனும் எழுந்து சென்றுவிட்டார்.
மருத்துவ கல்லூரிக்கு கிளம்ப வேண்டுமென்பதால் தந்தையுடன் காரில் சென்று விடலாம் என்று ரஞ்சனியும் தந்தையின் பின்னால் சென்றுவிட அலமேலுவும் வசீகரனும் மட்டும் சாப்பாட்டு மேஜையில் அமர்ந்திருந்தார்கள்.
சின்னபொண்ணு சமையலறைக்கு சென்றதும், “நீ சாப்பிடும்மா, நான் அதுக்குள்ள தோசை சுட்டுறேன், நீ எடுத்துட்டு போய் கொடுத்துட்டு காலேஜூக்கு கிளம்பு” 
“வேணாம் தாத்தா. நீங்க செஞ்சீங்கனு தெரிஞ்சா அதுக்கும் திட்டுவாங்க. நானே சுடறேன்” என்றவள் நான்கைந்து வெங்காயங்களை பொடிபொடியாக அரிந்தாள். அதே சமயம் சரவணனின் குழந்தை வீறிட்டு அழும் சத்தம் கேட்கவும் அலமேலு அவர்கள் அறைக்கு சென்றார்.
சின்னபொண்ணு தோசையை சுட்டு எடுத்து வந்த போது சாப்பாட்டு மேஜையில் வசீகரனை தவிர யாருமில்லாததை கண்டு திடுக்கிட்டாள், கையில் தோசையை வைத்துக் கொண்டு திருதிருவென்று விழித்தவளை பார்த்து என்ன என்பது போல இருபுருவங்களையும் ஏற்றி இறக்கினான்.
அவள் இல்லை என்று பதட்டத்துடன் தலையாட்ட, தோசையை தட்டில் வைக்குமாறு கண்களால் சைகை செய்தான்.
அவசரமாக வந்து அவன் தட்டில் தோசையை வைத்து விட்டு, மீண்டும் சமையலறைக்கு சென்றவள், “சின்ன பொண்ணு” என்ற வசீகரனின் ஆளுமையான அழைப்பில் திரும்பாமல் தயங்கி நின்றாள்.
“உன் பேரே சின்ன பொண்ணா?”
தலையை மட்டும் மேலும் கீழும் ஆட்டினாள்
“இவ்வளவு பெரிய பொண்ணா வளர்ந்திருக்க? பேரு மட்டும் சின்ன பொண்ணா? ஸ்கூல்ல காலேஜ்ல கூட இந்த பேர் தானா?”
இல்லை என்று தலை இடவலமாக அசைந்தது
“அப்போ உன் பேரு என்ன?”
“வேண்டாம்”
“நான் உனக்கு எதுவும் தரலம்மா, எதுக்கு வேண்டாம்னு சொல்றே, பேரை சொல்லு”
“என் பேரு வேண்டாம் பொண்ணு”
“இப்படி ஒரு பேரா?” அவன் கேள்விக்கு பதில் சொல்வதற்குள் தொண்டைக்குழியில் ஏதோ சிக்கி கொள்ள ஆமாம் என்று தலையை மேலும் கீழும் அசைத்துவிட்டு அதற்கு மேல் அங்கே நிற்காமல் உள்ளே சென்று விட்டாள்.
பாத்திரங்களை எடுக்க வந்த சமையல்காரரிடம், “ஏன் காளியப்பா, வேண்டாம்பொண்ணுனு கூட யாராச்சும் பேரு வைப்பாங்களா?” என்றான் ஆச்சரியத்துடன்
“எங்க ஊர்பக்கம் தொடர்ந்து பொம்பள புள்ளையே பொறந்தா வேண்டாம்பொண்ணுனு பேர் வைப்பாங்க ஐயா, அப்படி வச்சா அடுத்தது பையன் பொறக்கும்னு அவங்க நம்பறாங்க”
“ச்சே, என்ன கேவலமான நம்பிக்கை இது? இவங்க பாட்டுக்கு வரிசையா புள்ளய பெத்துப்பாங்க, வேணாம்னு பேரு வேற வைப்பாங்களா?  வாழ்க்கை பூரா அந்த பேரை வச்சிருக்கவங்களுக்கு அது எவ்வளவு வேதனையா இருக்கும்?” என்றான்.
சின்னபொண்ணுவின் மீது கோபம் மறைந்து கரிசனம் வந்திருந்தது. 
அவள் அனைத்து வேலைகளையும் முடித்துக் கொண்டு அவசரமாக தன் புத்தகப்பையை எடுத்துக் கொண்டு பஸ்நிலையத்தை நோக்கி ஓட்டமும் நடையுமாக சென்றாள். அவள் வழக்கமாக செல்லும் பேருந்து அப்போது தான் கிளம்ப, அதன் பின்னால் ஓடி தோற்று மூச்சு வாங்க நின்றாள்.
அவளுக்கு பின்னால் தன்னுடைய யமகா ஸ்போர்ட்ஸ் பைக்கில் கிளம்பியிருந்த வசீகரன், அவள் பேருந்தை தவறவிட்டதை கவனித்தான். அவளருகே சென்று வண்டியை நிறுத்தி, “வண்டியில ஏறு, சரவணன் வேலை செய்யற காலேஜ் தானே, நான் டிராப் பண்ணிடறேன்” என்றான்.
அவனை கண்டு அதிர்ந்தவள் பலமாக தலையை இடவலமாக அசைத்து தன் மறுப்பை தெரிவித்தாள்.
‘ச்சே பாவம், படிக்கற பொண்ணு, அதுவும் சின்னபொண்ணு வேற, ஆளும் சின்னபொண்ணு, பேரும் சின்னபொண்ணு. நமக்கு தோசை சுட்டதால நேரமாயிடுச்சேனு ஹெல்ப் பண்ண வந்தேன் பாரு என்னை சொல்லணும்’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு அவளை முறைத்தபடி வண்டியை நன்றாக முறுக்கினான். அவன் பார்வை கடைசியாக பின்சீட்டை ஒருமுறை பார்த்து அவளையும் அழுத்தமாக நோக்கியது. அதில் வண்டியில ஏறபோறீயா? இல்லையா? என்ற கேள்வி மிரட்டலாக தொக்கி நிற்கவும் அவள் மெளனமாக தலையை குனிந்து கொண்டு வேறுபக்கம் போய் நின்றுக் கொண்டாள்.
‘இதுவரையில் அவன் எந்த பெண்ணையும் தன்பின்னால் அமர்த்தியதே இல்லை. அவளின் நிலை தெரியாமல் படிக்கும் பெண்ணை வேலைக்காரி என்று அவமானப்படுத்தியதோடு, வேண்டுமென்றே தோசை சுடச்சொல்லியதால் அவள் கிளம்ப தாமதமாகிவிட்டது, அதனால் பேருந்தையும் தவறவிட்டுவிட்டாளே என்ற எண்ணத்தில் தான் அவளை கல்லூரியில் விட்டு விட நினைத்தான். ஆனால் அவன் தன்மானத்தை விட்டு அவளை அழைத்தும் அவள் வர மறுத்தது கோபத்தை தூண்டியிருந்தது. அதுமட்டுமில்லாமல் அங்கே நிற்பவர்கள் அவனை இவளின் பின்னால் சுற்றும் ரோமியோ என்று நினைக்கிறார்கள் என்பது அவர்களின் பார்வையிலேயே தெரிந்தது, அது தன்மேலேயே ஆத்திரத்தை கிளப்பியிருக்க அதே வேகத்துடன் வண்டியை புழுதி பறக்க கிளப்பியிருந்தான்.
(தொடரும்)’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!