Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

38. அர்ச்சனா நித்தியானந்தம் - காதலும் கடத்தப்படும்Contest Stories 2026

காதலும் கடத்தப்படும் – 10

 

காதலும் கடத்தப்படும் – 10

 



Advertisement

அங்கிருந்தோரிடம், தங்களது நிலையை எடுத்துக்கூறி இளமாறன் தங்க வீடு கேட்க, தெய்வ அருளால் அவ்விடத்தில் வாடகைக்கு உடனே வீடு கிடைத்தது. ஆஸ்பெஸ்டோஸ் கூரை கொண்ட வெறும் ஒற்றை அறை மட்டுமே கொண்ட வீடு தான், ஆனபோதிலும் அவர்களுக்கு அதுவே போதுமானதாக இருந்தது. தங்களது வாழ்வில் அடுத்து ஒரு வேலை தான் இப்போதைய முக்கியத் தேவை என்று இருவருமே உணர்ந்தனர். இளமாறன், நாடகத்தின் மீதான காதலை ஒதுக்கிவைத்துவிட்டு, கிடைக்கும் சில்லறை வேலைகளை செய்யத் தொடங்கினான். இளமாறன் மறுத்த போதிலும், இந்து அருகிலிருந்த உணவகத்தில் பாத்திரம் தேய்க்கும் வேலைக்குச் சென்றாள். இருப்பினும், தனது பட்டபடிப்பைக் கொண்டு வேறு வேலைவாய்ப்பு கிடைக்குமா என்றும் தேடி வந்தாள். 

 

அடுத்த சில மாதங்களில் இளமாறன் செக்கியூரிட்டி வேலைக்கும், அருகிலிருந்த தனியார் பள்ளியில், இந்து, பால் வாடி வகுப்பின் துணை ஆசிரியராகவும் பணியமர்ந்தனர். 

Advertisement

 

Advertisement

மெதுவாக சுற்றிக்கொண்டிருந்த மின்விசிறியின் கீழே, பாயில் இளமாறன் படுத்திருக்க, அவனது மார்மீது இந்து படுத்திருந்தாள். திறந்திருந்த ஜன்னலின் வழியே, விரிந்த வானமும், உலா செல்லும் நிலவும், கண்சிமிட்டும் நட்சத்திரங்களும் இரவுக்கு இனிமை சேர்த்தன. 

“என்னங்க…”

“சொல்லு இந்து…”

Advertisement

“ஒரு பாட்டு பாடுங்களேன்…”

“என்ன பாட்டு?”

“எனக்கு பிடிச்ச பாட்டு…”

‘பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா’ என்று அவன் பாடத் தொடங்கினான்.

 

நிலவை ரசித்தபடியே அவன் பாடுவதை, இதழோர சிரிப்போடு ரசித்திருந்தாள்.

“இந்து…”

“ம்ம்…”

“சந்தோஷமா இருக்கியா?”

“ரொம்ப…”

அவளது நெற்றியில் முத்தமிட்டான்.

 

“நான் இன்னும் ரெண்டு இடத்துல வேலை கேட்டிருக்கேன். வந்து பார்க்க சொல்லியிருக்காங்க…”

“நீங்க திரும்பவும் நாடகத்துக்கு நடிக்க போங்க. இந்த வேலையெல்லாம் வேண்டாம்.”

“அதெப்படி முடியும்? என்ன நம்பி வந்த உன்னை பாத்துக்கறது என்னோட கடமை…”

“அதேபோல உங்களோட கனவுக்கும், ஆசைக்கும் துணை நிக்கறது என்னோட கடமை”

அவள் எழுந்து அமர்ந்து அவனைக் கண்டாள்.

 

“நீங்க சினிமாவுல கதை எழுதணும்னு எவ்வளவு ஆசைப்பட்டிங்கன்னு எனக்கு தெரியும். அதுக்கு முயற்சி பண்ணுங்க. நான் தான் ஸ்கூலுக்கு வேலைக்கு போறேன்ல? அதுவுமில்லாம…”

“என்ன இந்து?”

“நீங்க பாட்டு பாடறதே இல்லை. நீங்க பாடிக்கேட்டு ரொம்ப நாள் ஆச்சு… என்னால தான் உங்களுக்கு இடைஞ்சலோன்னு தோணுது…”

“என்ன பேசற நீ? என் வாழ்க்கையின் அர்த்தமே நீ தான்… பாட்டு தான பாடணும்? தினமும் உனக்காக பாடறேன். காசு சம்பாதிக்கத்தான் பாடணுமா என்ன? என் தங்கத்தை சந்தோஷப்படுத்த கூட பாடலாம்…”

அவளது விழிநீர் கன்னம் வழிய சிரித்தவள், அவனது மார் மீது மீண்டும் படுத்துக்கொண்டாள். அவன் இனிமையான பாடல்களை பாட, அவளது நெஞ்சம் அமைதியாகிப்போனது.

 

கையில் ஒரு நெகிழிப்பையோடு வீட்டிற்குள் நுழைந்தவன், வாயிற் கதவின் அருகே நின்றபடி, அந்த ஒற்றை அறையின் மூலையில் மண்ணெண்ணெய் அடுப்பில் சமைத்துக்கொண்டிருந்த மனைவியைக் கண்டான். அவளது முகத்தில் நீங்காத புன்னகை பூத்திருந்தது. அப்பொழுதே, அவனும் காதலை மட்டுமே தேடியிருக்கிறான் என்று உணர்ந்தான்.

 

பையை தரையில் வைத்துவிட்டு, தனது கைகளை இதய வடிவில் சேர்த்து, அதன் வழியே காதல் மனைவியைக் கண்டான். எதேச்சையாக திரும்பியவள், இவன் நின்றிருப்பதைக் கண்டு விரைந்து சென்று அருகே நின்றாள்.

“இந்து…” என்றபடி அவளது முகத்தினை கையில் ஏந்தினான்.

முதல் முறை அவர்களது விழிகள் மோதி உறைந்து நின்றது போல், இன்றும் உறைந்து நின்றனர். ஏதோ சத்தம் கேட்டு நிலைக்குத் திரும்பிய இருவரும், சிரித்துக்கொண்டனர்.

 

“உனக்காக ஸ்வீட் வாங்கிட்டு வந்தேன் இந்து” என்று தரையில் இருந்த நெகிழிப்பையை அவளிடம் நீட்டினான்.

“என்ன விசேஷம்?”

“நீ ஆசைப்பட்ட ஒன்னு நடக்கப்போகுது..”

“என்னது?”

“இனி நான் பாடப்போறேன்”

“என்ன சொல்றீங்க!!” என்று குதூகலமானாள்.

“ஒரு ட்ரூப்’ல பாட வாய்ப்பு கொடுத்திருக்காங்க…”

“ரொம்ப சந்தோஷமா இருக்கு” என்றவள், கையிலிருந்த இனிப்பினை அவனுக்கு ஊட்டினாள்.

 

அவன் பாடும் நேரம் போக, மீதி நேரங்களில் ஒரு ஆட்டோவை வாடகைக்கு எடுத்து ஓட்டினான். சற்று ஓய்வு நேரங்களில், கதைகள், நாடகங்கள் எழுதினான். இந்துவிற்கு பி.எட். படிக்க பள்ளி நிர்வாகமே உதவ, அவளும் படித்து தேர்ச்சி பெற்று, ஒன்றாம் வகுப்பு ஆசிரியை ஆனாள். 

 

அடுத்த மூன்று ஆண்டுகளில் அவர்களிடம் ஓரளவு பணம் சேர்ந்திருந்தது. வங்கியில் கணக்கு வைத்து, அதில் பணத்தினை சேமித்து வைத்திருந்தாள். அன்று வங்கியில் அவள் பணம் செலுத்தி விட்டு வர, வாயிலில் அவளுக்காக ஆட்டோவில் காத்திருந்தான் இளமாறன். 

“எவ்வளவு பணம் சேர்ந்திருக்கு இந்து?” என்றான்.

அவள் பாஸ்புக்கை நீட்டினாள்.

“எல்லா பணத்தையும் எடுத்துட்டு வரியா, பக்கத்துல நகைக்கடைக்கு போய் உனக்கு தங்கத்துல தாலி, தோடெல்லாம் வாங்கிக்கலாம். ரொம்ப நாள் ஆசை இந்து. பொட்டு தங்கம் இல்லாம நீ இருக்கறத பார்க்கும்போது…”, அவனது குரல் உடைந்தது.

“வேண்டாம்ங்க… இப்போ அதுக்கு அவசியம் இல்லை… உழைச்சு சம்பாரிச்ச காசை, தங்கமா தொங்கவிட்டுக்கறதுல எனக்கு சந்தோஷம் இல்லை. ஒரு வீடு வாங்கணும், நமக்கே நமக்குன்னு… அப்புறம் குழந்தை… எத்தனை நாள் நாம குழந்தையை தள்ளிப்போட முடியும்? ஸ்கூல்ல குட்டி குட்டி பிள்ளைங்களை பார்க்கும்போது ரொம்ப ஆசையா இருக்கு…”

“அதை தள்ளி போட வேண்டாம் இந்து…”

“இல்லீங்க… சொந்தமா ஒரு வீடு… இப்போ நாம இருக்கோமே அதே போல கச்சிதமா நமக்கே நமக்குன்னு ஒரு கூரை… அந்த வீட்ல நம்ம புள்ள பிறக்கணும்… குடிசையா இருந்தாலும், நீங்க ராஜா, நான் ராணி, நம்ம புள்ள இளவரசன்…”

அவள் கூறியதைக் கேட்டு அவனது கண்களிலிருந்து நீர் வழிய, அவள் துடைத்து விட்டாள்.

 

அவளது ஆசைக்கு ஆண்டவன் செவி சாய்த்தது போல, அவர்கள் தங்கியிருந்த வீடு விலைக்கு வந்தது. தங்களது சேமிப்பு அனைத்தையும் கொடுத்து வீட்டினை வாங்கினர். 

 

“இந்து… என்ன எதுவும் பேசாம அமைதியா படுத்திருக்க?”

அவன் மார் மீது படுத்திருந்தவள், அமைதியாய் நிலவினை ரசித்திருந்தாள்.

“ரொம்ப கர்வமா இருக்கு. என் வீடு, என் நிலம், பூமியிலிருந்து வானம் வரைக்கும் இது என் சொத்து… ரொம்ப கர்வமா இருக்கு”

அவளை அவன் இறுக்கி அணைத்துக்கொண்டான்.

 

வங்கியில் மேலாளரின் முன் இந்துவும், இளமாறனும் அமர்ந்திருந்தனர். தனது கையிலிருந்த கோப்பினை புரட்டிப்பார்த்த மேலாளர், 

“உங்களுக்கு லோன் சாங்க்ஷன் ஆகியிருக்கு மிஸஸ் இந்து… வாழ்த்துக்கள்” என்றபடி காசோலையை நீட்டினார். அவளது விருப்பப்படி, வெறும் ஒற்றை அறையாக இருந்த வீடு, அடுக்களை, படுக்கும் அறை, குளியல் அறை என்று விரிவாக்கப்பட்டு, நிறைவான தோற்றம் பெற்றது. 

 

இளமாறனின் பாடல் குழுவிற்கு அதிக வரவேற்பு இருக்க, அவனுக்கு அடிக்கடி பாடும் வாய்ப்பு கிடைத்ததோடு, பணமும் கிட்டியது. இந்துவும் தனது பணியில் கவனம் செலுத்தியதோடு, மாலை நேர டியூஷன் வகுப்புகளும் எடுத்தாள். மூச்சு திணற திணற அவர்கள் உழைத்து தேய, மெல்ல வங்கிக்கடனும் கரைந்து தீர்ந்தது.

 

அவள் அடுக்களையில் மும்முரமாக சமைத்துக்கொண்டிருக்க, அடுக்களை கதவருகே வந்து நின்றவன், தனது கைகளை சேர்த்து இதய வடிவம் கொண்டு, அதன் வழியே அவளைக் கண்டான். அடுப்பை அணைத்துவிட்டு அவள் திரும்ப, அங்கு நின்றிருந்தவனைக் கண்டதும் ஓடிச்சென்று கட்டிக்கொண்டாள். 

“எப்போ ஊர்லேர்ந்து வந்தீங்க? நேத்து ப்ரோக்ராம் எப்படி போச்சு?”

“ரொம்ப நல்லா போச்சு… கை தட்டினாங்க… ரிபீட்டு கேட்டாங்க…”

அவனது நெற்றியில் முத்தமிட்டாள். 

“குளிச்சுட்டு வாங்க, உங்களுக்கு பிடிச்சதை சமைச்சிருக்கேன்”

“ம்ம்…” என்றவன், தனது கைபையைத் திறந்து ஒரு கவரை நீட்டினான். அதில் அவன் சென்று வந்த நிகழ்ச்சிக்காக அவனுக்கு தரப்பட்ட ஊதியம் இருந்தது. சாமி படத்தின் அருகே வைத்துவிட்டு அவள் வணங்கிவிட்டு திரும்ப, 

“இது உனக்கு” என்றொரு பையை நீட்டினான்.

“என்னது?”

“நம்மளோட அஞ்சாவது கல்யாண நாளைக்கு உனக்கு ஒரு பரிசு”

அவள் பிரித்துப்பார்க்க உள்ளே அவளுக்கு பிடித்த மஞ்சள் நிறத்தில் ஒரு புடவை இருந்தது. தனது தோள் மீது அப்புடவையினை போட்டுக் காட்டியவள், ‘எப்படி இருக்கிறது?’ என்றாள், கண்களால்.

“என்னோட மஞ்சள் தேவதை” என்றான்.

“நானும் உங்களுக்கு ஒரு பரிசு வச்சிருக்கேன்” என்றவள், அடுப்பின் அருகே சென்று, பாயசத்தை ஒரு குடுவையில் ஊற்றி அவனிடம் நீட்டினாள்.

அதனை குடித்துமுடித்தவன், “பரிசு சூப்பரோ சூப்பர்” என்றான்.

“உங்களுக்கான பரிசு பாயசம் இல்லை” என்றவள், அவனது கையை எடுத்து தனது வயிற்றின் மேல் வைத்து, “இங்க இருக்கு… பத்து மாசத்துல கையில கொடுத்திடறேன்” என்றாள். அவளை அவன் இறுக்கி அணைத்துக்கொண்டான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!