Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

38. அர்ச்சனா நித்தியானந்தம் - காதலும் கடத்தப்படும்Contest Stories 2026

காதலும் கடத்தப்படும் – 11

 

காதலும் கடத்தப்படும் – 11

 



Advertisement

“இந்து… இந்து…” என்று கண்ணை கசக்கியபடியே அடுக்களை கதவருகே இளமாறன் வந்து நிற்க, “மா…” என்று மழலை மொழியோடு இளமாறன் அருகே வந்து நின்றான், இரண்டு வயது நிரம்பியிருந்த அர்ஜுன்.

 

“அப்பாவும் புள்ளையும் காலைல விடிஞ்சதும் கிச்சனுக்கு வந்து அட்டெண்டன்ஸ் போட்டுடணும். இல்லை? உங்க பழக்கம் அப்படியே உங்க புள்ளைக்கும் வந்துடுச்சு” என்று சிரித்தபடியே, மகனை வாரியணைத்து இடுப்பில் அமரவைத்து முத்தமிட்டவள், இளமாறனின் நெற்றியிலும் முத்தமிட்டாள்.   

Advertisement

“இதுக்குத்தான் ரெண்டு பேரும் காலைல வந்து நின்னுடறோம்…”

Advertisement

சிரித்துக்கொண்டவள், மகனை நெஞ்சோடு அணைத்தபடி இளமாறனின் மார் மீது சாய்ந்துகொண்டாள்.

 

எத்தனையோ இன்னல்களை கடந்திருந்தாலும், மன வேதனைகளைக் கொண்டாலும், உறவுகள் கைகொடுக்காமல் போனாலும், அவ்விருவருக்கமான ஒரே ஆறுதலாக அர்ஜுன் இருந்தான். ஒவ்வொரு நாளும் அவனது முகம் கண்டு விழித்தாள், இந்து. அவனை விழி மூடும் இமை போல பேணினாள். குழந்தை வந்த பிறகு, இளமாறனால் முன்பு போல வெளியூருக்கு குழுவினரோடு அடிக்கடி செல்ல முடியாமல் போனது. குழந்தையை வைத்துக்கொண்டு இந்து சிரமப்படக்கூடாது என்று, முடிவாய் இருந்தான். பணவரவு சற்றே குறைந்திருந்தாலும் மகிழ்ச்சி கட்டுக்கடங்காமல் பொங்கியது. 

Advertisement

 

அர்ஜுன் தந்தையிடம் கருப்பு வெள்ளை திரைப்படப் பாடல்களை பாட கற்றுக்கொண்டான். பல நாட்கள் தந்தையும் மகனும் நடத்தும் பாட்டுக் கச்சேரியை காலநேரம் மறந்து ரசித்திருந்தாள். பள்ளிக்கூடம் செல்லத் தொடங்கியதும், இந்துவின் கவனிப்பால் அவன் நன்கு படித்தாலும், அவனது ஆர்வம் முழுதும் பாட்டு பாடுவதிலேயே இருந்தது. குறும்பு செய்து அம்மாவிடம் திட்டு வாங்கும் நேரங்களில் கூட ஏதாவது பாட்டு பாடி அவளது கோபத்திலிருந்து தப்பித்து விடுவான்.

 

“அஜூ, வீட்டுப்பாடம் பண்ணிட்டியா?” 

ஏழு வயது சிறுவன் அர்ஜுன், அம்மாவிற்கு பயந்து அவசர அவசரமாக நோட்டில் எழுதிக்கொண்டிருந்தான். 

“அஞ்சு நிமிஷத்துல முடிச்சுடுவேன்” என்றவன், ஏதோ பாடலை பாடிக்கொண்டே எழுதினான்.

“காலைல  எழுந்ததுலேர்ந்து ராத்திரி தூங்கற வரைக்கும் பாட்டு பாடுற சரி, அதுக்குன்னு படிக்கும்போது கூட பாட்டு பாடிக்கிட்டே இருப்பியா?”

“அம்மா என்றழைக்காத உயிரில்லையே…” என்று பாட்டிலே பதில் கூறினான். மகனை வாரியணைத்து மடியில் அமர்த்தி முத்தம் வைத்தவள், அவன் எழுதியிருப்பதை சரிபார்த்தாள்.

 

“இந்து” – இளமாறனின் குரல் கேட்டு இந்துவும் அர்ஜுனும் தலை நிமிர்ந்து பார்க்க, இளமாறனின் கையை பிடித்துக்கொண்டு ஒரு சிறுவன் நின்றிருந்தான்.

அவர்களின் எதிரே வந்தமர்ந்த இளமாறன், அந்தச் சிறுவனை தனதருகே அமரச் செய்தான். 

“யாருங்க இந்த பையன்?”

“தெரியல இந்து. நான் சவாரி முடிச்சுட்டு, ஆட்டோ ஸ்டாண்டுல வண்டியை விட்டுட்டு வீட்டுக்கு வரும்போது, பைபாஸ் பக்கத்துல ரோட்டோரம் படுத்திருந்தான். எழுப்பி கூட்டிட்டு போய் பரோட்டா வாங்கிக் கொடுத்தேன். சாப்பிட்டான். யாரு என்னனு விவரம் கேட்டா, அவன் சொல்லல. இந்த ராத்திரி நேரத்துல சின்ன புள்ளைய தனியா விட்டுட்டு வர மனசில்லாம கையோட கூட்டிட்டு வந்துட்டேன்…”

அச்சிறுவனின் தலையைக் கோதிய இந்து, “உன் பேரு என்னப்பா?” என்றாள்.

“மதனு” என்றான் அவன்.

“உன் அப்பா அம்மா எங்க?” 

“—”

“உன் ஊரு பேரு ஞாபகம் இருக்கா?”

“—”

“என்ன கேட்டாலும் பதில் சொல்ல மாட்டேங்கறான் இந்து” என்று குறுக்கிட்டான், இளமாறன்.

“எதுவுமே சொல்லலையா?”

“இல்லை…”

“போலீஸ் கிட்ட?”

“கொண்டு போய் ஏதாவது அசிரமத்துல விட்டுடுவாங்களோன்னு தோணுது…”

“அதெல்லாம் வேண்டாம்… ரெண்டு நாள் போகட்டும், ஏதாவது சொல்றானான்னு பார்ப்போம்”

இந்து கூறியதற்கு இளமாறன் என்றும் போல் இன்றும் மறுவார்த்தை கூறவில்லை.

 

அடுத்த இரண்டு நாட்களில் அவளிடம் மதன் பேசினானோ இல்லையோ, அர்ஜுனிடம் மிகவும் நட்பாகிப் போனான். அவனோடு சிரித்து விளையாடுவதைக் கண்டு, தற்பொழுது அவனை விசாரித்தால் அவன் ஏதேனும் சொல்லக்கூடும் என்று எண்ணிய இந்துவும், இளமாறனும் அர்ஜுனையும், மதனையும் அழைத்து அமரச் செய்தனர்.

“மதன், நான் ஒன்னு கேட்பேன் நீ சொல்லுவியா?” என்றாள், இந்து.

அவன் ‘சரி’ என்று பதிலளித்தான்.

“மதன் உன் அம்மா எங்க?”

“அம்மா இல்லை…”

“அப்பா?”

“அப்பாவும் இல்லை…”

“இவ்வளவு நாள் யார் கூட இருந்த?”

“பாட்டி…”

“பாட்டிய பார்க்க போலாமா?”

“வேண்டாம்”

“ஏன் மதன்?”

“பாட்டி செத்து போச்சு…”

ஒரு நொடி இந்து திடுக்கிட்டாள்.

“சரி, சரி வேற யாரவது? மாமா? அத்தை? சித்தப்பா?”

“யாரும் இல்லை, அந்த கோவில் பக்கத்துல அந்த பச்சை பெயிண்டு அந்த வீட்ல நான் பாட்டி தான்… பாட்டி செத்து போச்சு… மாலை போட்டாங்க… பயமா இருந்துச்சு ஓடியாந்துட்டேன்…” என்றவனது குரல் உடைந்து லேசாக கண்கள் கலங்கின. அர்ஜுன் அவனது கைகளைப் பற்றிக்கொண்டான்.

“நான் ஒன்னு சொல்லவா?” என்றான் இந்துவிடம்.

“சொல்லு மதன்”

“அஜூ மாதிரி நானும் உன்னை அம்மானு சொல்லவா?!” என்றான். உடைந்து அழுத இந்து, அவனை வாரியணைத்து, கன்னத்தில் முத்தமிட்டு, “அம்மா தான்… அம்மா தான்…” என்று அழுது தீர்த்தாள். இளமாறன் அவ்விருவரையும் ஆரத்தழுவ, அர்ஜுன் அவர்கள் அனைவரையும் முடிந்த மட்டும் தனது கைகளுக்குள் அணைத்துக்கொண்டான்.

 

அதன்பிறகான நாட்களில் மதன் அவர்களுள் ஒன்றாகிப்போனான். அவனது பிறந்த தேதி தெரியாததால், அவனது வளர்ச்சியை கண்டு ஏறத்தாழ ஐந்து வயது இருக்கக்கூடும் என்று வீட்டருகே வசித்த செவிலியர் ஒருவர் கூற, அவன் அவர்களுக்கு கிடைத்த நாளே அவனது பிறந்தநாளாகிப் போனது. அவனும் பள்ளியில் சேர்ந்தான். இந்துவின் துணையோடு கல்வி கற்றான். அஜுவே அவனுக்கு முதலிடமாகிப் போனான். இருவருமே இந்துவின் இரு கண்களாகிப் போயினர். விடியற் காலை பொழுதுகளில் மூவரும் அடுக்களை கதவருகே அவளைத் தேடி வந்து நின்றனர். மாலையில், இந்து மூவரின் கச்சேரியை கேட்கத் தொடங்கினாள்.

 

மதன் அக்குடும்பத்தில் ஒருவனாகி ஏறத்தாழ ஒரு வருடத்திற்கும் மேல் ஆகியிருந்தது. இளமாறன் பாடிக்கொண்டிருந்த குழு நலிவடைந்து பெரியளவில் வாய்ப்புகள் இல்லாமல் போனது. என்ன செய்வதென்று கவலையோடு வாயிலில் அமர்ந்திருந்தான்.

“என்னங்க ராத்திரியில ஏன் இங்க உட்கார்ந்திருக்கீங்க? படுக்கலயா?” என்றபடி அவன் அருகே வந்து அமர்ந்தாள், இந்து.

“கவலையா இருக்கு இந்து… ட்ரூப்பு ஏறத்தாழ மூடியாச்சு. இனி ப்ரோக்ராம் எதுவும் இருக்காதுன்னு சொல்றாங்க… ஆட்டோ தொழிலும் முன்ன மாதிரி இல்லை. ஷேர் ஆட்டோ’னு ஓட்டறாங்க. அது மலிவா இருக்குனு ஜனங்க அதுல தான் போறாங்க…”

“கவலைப்படாதீங்க, நான்தான் வேலைக்கு போறேன்ல. சமாளிச்சுடலாம்.”

“அதுக்கில்ல இந்து. உன்னை வேலையை விட்டு வீட்ல உட்கார வச்சு பார்த்துக்கணும்னு ரொம்ப ஆசை. எப்போ நிறைவேறுமா?”

“நன் என்ன கஷ்டமா படறேன்? குழந்தைகளுக்கு பாடம் சொல்லித்தரேன். அது எவ்வளவு பெரிய வரம் தெரியும். அதுங்க முகத்தை பார்த்தாலே எல்லா கவலையும் மறந்துடுது”

‘இவளுக்கு வாழ்வில் குறையே இருக்காதா?’ என்று பிறர் யோசிக்கும் வண்ணம் அவள் தனது வாழ்வினை ஆராதித்தாள். இளமாறனுக்கும் அதே தோன்றியது.

“உனக்கு குறையே இல்லையா இந்து?”

“எனக்கு என்ன குறை? ராஜாத்தியாட்டம் இருக்கேன்” என்றுவிட்டு புன்னகைத்தாள்.

“நீங்க சினிமாவுல கதை எழுதணும். அது குறைன்னு சொல்லிட முடியாது. இன்னும் காலம் வரல. அதுவும் சீக்கிரம் நடந்துடும். அதுக்கு மேல வேற என்ன வேணும்?!”

“அரிஞ்சவன் தெரிஞ்சவன் சினிமாக்காரன்னு பாக்கறவனுக்கெல்லாம் எத்தனையோ ஸ்க்ரிப்ட்டை ஜெராக்ஸ் போட்டு குடுத்தேன். ஒரு பயனும் இல்லை. ஜெராக்ஸ் போட்ட காசை சேர்த்து வச்சிருந்தா உன் காதுக்கு தங்கத்தோடு வாங்கியிருக்கலாம்”

“இந்த காது ரெண்டும், நீங்க பாடறத கேட்டு சந்தோஷப்படத்தான் இருக்கு. அலங்காரமா தங்கத்தோடு போட்டுக்க இல்லை…” என்றவள், அவன் மார்மீது சாய்ந்து அமர்ந்து, அவன் பார்த்திருந்த நிலவினை இவளும் ரசித்திருந்தாள்.

“ஒரு பாட்டு பாடுங்களேன்…”

அவன் ஏதோ பாட நினைத்து, குரலை செருமினான். அவன் மன அழுத்தத்தில் உள்ளான் என்பதை புரிந்தவளாய், தனது கைகளை இதய வடிவில் சேர்த்து, அவர்கள் இருவருக்கும் எதிரே நீட்டினாள். அழகு நிலா அவளது இதய வடிவிற்குள் மிளிர்ந்தது.

“அந்த நிலாவத்தான் நான் கையில பிடிச்சேன்… என் ராசாவுக்காக…” என்று பாடியவள், வெட்கப்பட்டு சிரித்துக்கொண்டாள். 

“பாடு இந்து, நீ பாடினா எவ்வளவு நல்லா இருக்கு தெரியுமா?”

“உங்களவுக்கெல்லாம் பாட வராது… பாட கூச்சமா இருக்கு…”

“என்ன கூச்சம்… இத்தனை வருஷத்துல நான் எத்தனை தடவை கேட்டிருப்பேன்… நீ நாலஞ்சு முறை தான் பாடியிருக்க…”

“தெரிஞ்சா பாடமாட்டேனா… நீங்க பாடுங்க” 

அவளுக்காக, ‘பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா’ எனும் அவளது பிரியமான பாடலை பாடினான். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!