Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

21. சுபகீதா - ஆகாயமே என் ஆதாரமே

ஆகாயமே என் ஆதாரமே 3

ஆகாயமே என் ஆதாரமே 3

90’களின் ஆரம்பத்திலேயே கணினியின் இராஜ்ஜியம் தொடங்கி  இருந்தது. சிறுவயதில் நான் எனது அம்மாவிடம் அடம் பிடித்து அவர்களுடன் வங்கிக்கு செல்வதை வழக்கமாக வைத்திருந்தேன். சில சமயங்களில் அம்மாவுக்கு என் மீது மிகுந்த கோவம் வந்தது உண்டு. அங்கே வரிசையில் காத்திருந்து நமது  பாஸ் புத்தகத்தில் வரவு -செலவு கணக்குகளை வாங்கியாளர் தமது புத்தகத்திலிருந்து எடுத்து எழுதி கொடுத்து, மீண்டும் நாம் பணம் எடுப்பதற்கு என்று தனியாக விண்ணப்பத்துடன் இன்னொரு வரிசையில் நின்று என அரை நாள் அங்கேயே கழிந்து விடும்.



Advertisement

வீட்டின் பெண்கள் காலையில் அரக்கப் பறக்க வீட்டு வேலைகளை முடித்துவிட்டு  வங்கியின் வரிசையில் சென்று நின்று கொள்வார்கள் .அவர்களின் முகத்தில் அவ்வளவு களைப்பு இருக்கும். மதியம் பள்ளிக்கு சென்று இருக்கும் பிள்ளைகள் வீட்டுக்கு வருவதற்கு முன்பாக இவர்கள் வீட்டுக்கு சென்று மதிய டிபனுக்கு ஏற்பாடு செய்தாக வேண்டும்.

ராதாவுக்கு போன மாதம் வரை அவளது சம்பளப் பணம் கையில் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.பள்ளியின் பட்டயக்கணக்காளர் ,கனக்குப் பார்ப்பதற்கு சுலபமாக இருக்கும் என்று காசோலையாக கொடுத்து கையெழுத்து வாங்கிக்கொள்ள சொல்லியிருக்கிறாராம்.அதனால் வேலை பார்க்கும் ஆயா உட்பட அனைவருக்குமே காசோலை தாம். அதில் நிறைய பேருக்கு வங்கி கணக்கு வேறு கிடையாது என்பதால் பள்ளியின் நிர்வாகமே அவர்களுக்கு வங்கிக்கணக்கு ஆரம்பிக்க உதவியும் செய்து விட்டார்கள்.

ராதாவுக்கும் தனியாக அன்று வரை வங்கி கணக்கு கிடையாது. வரும் முன்னூறு ரூபாய்க்கு வாங்கியாவது,அதில் கணக்காவது என்றுதான் இருந்துவிட்டாள் . காசோலையை கணவரின் வங்கி கணக்கில் போட்டுக் கொள்ளலாம் என்று பள்ளியில் அவள் தமது கணவரின் பெயரில் கொடுக்க கேட்க அவர்கள் மறுத்து விட்டார்கள்.அதனால் வேறு வழி இல்லாமல் தனக்கென ஒரு கணக்கை ஆரம்பித்தும் கொண்டாள் .

Advertisement

ஒரு வாரம் முன்பு கொடுத்த காசோலையை இன்று தான் வங்கி கணக்கில் செலுத்துவதற்க்கென்று  அரைநாள் விடுப்பு எடுத்துக் கொண்டு வந்திருக்கிறாள் ராதா. மதியம் மீண்டும் பள்ளிக்கு செல்ல வேண்டும் என்றாலே ஆயாசம் தான். இதெல்லாம் தேவை இல்லாத அலைச்சல் என்று மனதில் தோன்றினாலும் தானும் தனது சம்பளமும் என்ற எண்ணம் சந்தோஷத்தை கொடுத்ததை அவளால் மறுக்க முடியாது.

Advertisement

அங்கே வரிசையில் நிற்கும் பொழுது பேசிக் கொண்டு இருந்தார்கள் ,”கொஞ்ச கொஞ்சமா கம்ப்யூட்டர் கொண்டு வராளாம் .அப்படி அது வந்துடுத்துன்னா  இங்கே இவ்ளோ நேரம் வரிசையில் நிக்க வேண்டாமா…சட்டுன்னு வேலை முடிஞ்சிடுமாம்” என்றும் ,அதற்க்கு மறு குரலாக “ஆமா  ஒய், பேஷா முடியும்.யாரு இல்லேங்கறா… ஆனா பாரும், அது வந்துடுதுன்னா இங்கே மனுஷாளுக்கு வேலை போயிடும் “என்றும் இருவிதமாக குரலைக் கேட்க முடிந்தது.

வரிசையில் நின்றுகொண்டு அவர்கள் பேசுவதை காதில் வாங்கியவளுக்கு வெகு சுவாரஸ்யமாக இருந்தது.கணினி பற்றி கிருஷ்ணனும் வீட்டில் பேசுவதுதான்! தானும் கணினி வகுப்புக்கு செல்லவேண்டிய கட்டாயத்தை பற்றி சொல்லிக் கொண்டு இருக்கிறார்.அவர் வேலை செய்யும் ஆடிட்டர் அலுவலகத்தில் கணினி கற்றவர்களை வேலைக்கு வைக்க வேண்டும் என்று பேசி கொண்டிருக்கிறார்களாம். மற்றவர்கள் வீட்டுக்கு நிரந்தரமாக சென்று விடலாம் எனும் நிலையில் இப்போதே வகுப்புக்கு செல்ல தொடங்கினால் சரியாக இருக்கும் என்ற எண்ணம் அவருக்கு.பிரச்சனை என்னவென்றால் அதற்க்கு சரியாக பணம் அவர் கையில் இல்லை.அருகில் இருக்கும் தங்கையிடம் கேட்பதற்கும் அவ்வளவாக விருப்பம் இல்லை. ஏற்கனவே சுதாவும் அவள் கணவரும் ரயில்வே டிபார்ட்மெண்டில் அவர்களே ஏற்பாடு செய்திருக்கும் கணினி வகுப்புக்கு சென்று கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களிடம் கடனாக பணம் கேட்கவும் கூட கிருஷ்ணாவுக்கு தயக்கம்.

வீட்டில் அவரது வார்த்தைகளை கேட்டுக்கொண்டிருக்கும் மனைவிக்கு தன்னால் என்ன செய்ய முடியும் என்றுதான் புரியவில்லை.ஏற்கனவே வீட்டு வேலை செய்யும் பெண்மணிக்கு மாதம் இருநூறு கொடுக்க வேண்டி இருக்கிறது. மிச்சம் பிடித்ததில் இப்போது கையில் ஆயிரம் ரூபாய் இருக்கிறது. கணினி பயில கட்டணமோ மூவாயிரம் வேணும் என்கிறார் கணவர்.என்ன செய்வது என்று புரியாமல் வங்கியில் அதை பற்றிய யோசனைகளுடன் நின்று கொண்டிருந்தாள் ராதா. கணவரை கடிந்து கொள்ளவும் முடியாது.அவர் தமது சம்பளப் பணம் முழுவதையுமே குடும்பத்திற்குத் தான் செலவு செய்கிறார். மாதம்  ஆனால் ரயிலுக்கு சீசன் டிக்கெட் வாங்கி விடுவார். அவருக்கு ஆகும் ஒரே செலவு சி ஏ வை முடிக்க வேண்டும் என்று பரீட்சைக்கு கட்டும்  பணம் தாம்.

Advertisement

முன்பு நிறைய சம்பளமாக தெரிந்த கிருஷ்ணனின் சம்பளம், காலம் மாறும்பொழுது,குடும்ப உறுப்பினர்கள் அதிகமாகும் பொழுது குறைவாக தெரிகிறது. விளைவாசி எல்லாம் ஏறிவிட்டது.தங்கம்  பவுன் நாலாயிரத்திலிருந்து கடந்த ஆறு மாதங்களில் ஆறாயிரத்தை தொட்டு விட்டது. அவ்வப்பொழுது ஜானகி,சீதா இருவருக்காகவும் ஏதாவது தங்க ஆபரணங்கள் வாங்குவார். பெண்கள் திருமண காலத்தில் தங்கம் எவ்வளவு இருக்குமோ என்ற பயம் தான்.

ஒருவழியாக ராதா வங்கியில் காசோலையை செலுத்தியவள் மனதில் கணினி படிப்பது பற்றியாய் யோசனைகள் தான் ஓடியது.

கணவரின் புலம்பல்கள் காதில் ரீங்காரம் இட , வீட்டுக்கு சென்றவள் முதலில் செய்த விஷயம் மேல்வேலைக்கு என்று வந்து கொண்டிருந்த பெண்ணை ‘இனிமேல் வேலைக்கு வரவேண்டாம்’ என்று நிறுத்தியது தான்.

அந்த மாதத்தில் வந்ததற்கான நாட்களுக்கு கணக்கு பார்த்து ஐம்பது ரூபாய்களை கொடுத்தவளிடம்,”ஏன்க்கா… நா சரியா  வேலை செய்யுறது இல்லியா..எதுக்காவ இப்போ என்னைய வேலைய விட்டு நிறுத்துறே ..”என்று கேட்டுவிட்டு ,இவளிடமிருந்து   மௌனத்தை பதிலாக பெற்றுக்கொண்டு சென்று விட்டாள்  அந்த பெண்.

அடுத்து வந்த நாட்களில் தனியாக வீட்டையும் கவனித்து,பிள்ளைகளையும் பார்த்து வேலைக்கும் சென்று கொண்டு ,பெண்டு நிமிர்ந்தது ராதைக்கு. கிருஷ்ணன் வீட்டு வேளைகளில் எந்த உதவியும் செய்ய முடிந்தது இல்லை.வீட்டில் இருக்கும் நேரங்கள் சொற்பம் தான்.அப்போது நன்றாக தூங்கிவிடுவது அவரது பழக்கம்.

பெரியவள் ஜானகி இப்போது எட்டாம் வகுப்பில் வாசிக்கிறாள் . அவளுக்கு இஷ்டம் இருந்தால் வீட்டு வேலைகள் செய்து கொடுப்பாள்.இல்லாவிட்டால் அவளை வேலை வாங்கவெல்லாம் முடியாது. அம்மாவின் நிலை பார்த்து சின்னவள் சீதாதான் அம்மாவுடன் நின்று எல்லா வேலைகளையும் செய்து கொடுப்பாள்.நான்காம் வகுப்பு படிக்கும் பொழுதே வீட்டை பெருக்கவும், வாசலில் கோலம் போடவும், அம்மா துலக்கி வைத்திருக்கும் பாத்திரங்களை அடுக்கி வைக்கவும் பழகி கொண்டாள் . வளரும் பொழுது வீட்டு வேலைகள் செய்யும் அவளது பாங்கும் கூடவே வளர்ந்தது.

எப்படியோ,தனது  வங்கி சேமிப்பு ,மாத சம்பளம் என்று பணம் பிரட்டி ஆயிரத்து ஐநூறு ரூபாய்களை கணவனிடம் கொடுத்தாள்  ராதா. “இதை வச்சிட்டு கம்ப்யூட்டர் கிளாஸ் சேந்திருங்க . என்னோட சம்பள பணத்தை மாசாமாசம் கொடுக்கறேன். மிச்சத்தையும் கட்டிடலாம். நாம இப்படியே குண்டு சட்டில குதிரை ஓட்ட முடியாது. காலம் மாறுது.விலைவாசி நம்ம  நாடு அனுப்ப முயற்சி செய்யுற ராக்கெட்டை விடவும் வேகமா பறக்குது. அடுத்த நிலைக்கு வர முயற்சி செய்யுங்க “என்றுவிட்டாள் . ராதை செய்திருக்கும் இந்த விஷயம் கிருஷ்ணனை ராதையின் மீது காதல் கொள்ள செய்தது.ஏதோ அத்தை பெண். நம் வீட்டு  பெண்ணை அங்கே  அவர்கள் மகனுக்கு கொடுத்து அவர்கள் வீட்டு பெண்ணை நம் வீட்டுக்கு மருமகளாக கொண்டு வருகிறோம். பெண் அதிகம் படிக்கவில்லை. இவளெல்லாம் என்ன செய்ய முடியும்? என்றெல்லாம் ராதை பற்றிய எண்ணங்கள் அவரது ஆழ் மனதில் உண்டு .  வெளியே காண்பித்து கொண்டதில்லை. அவ்வளவு தான். ராதை வேலைக்கு செல்ல முடிவு எடுத்த பொழுதும் இதெல்லாம் எத்தனை நாட்கள் என்று தான் நினைத்து இருந்தார். இப்போது பார்த்தால்  அவள் தான் நினைத்தது போல இல்லை என்று யோசித்தார்.

ஏறத்தாழ ஒரு வருஷம் ஒரு நல்ல கணினி கற்பிக்கும் பயிற்சி நிலையத்தில் சேர்ந்து அப்போது தேவைப்பட்ட அனைத்து பயிற்சிகளையும் முடித்தார்.பயிற்சிகள் முடிந்து அவர் வீட்டுக்கு வருவதற்கே இரவு ஒன்பது மணி ஆகிவிடும். சனி ஞாயிற்று கிழமைகளில் கூட ஒன்று பயிற்சிக்கு சென்று விடுவார்.இல்லாவிட்டால் அலுவலக வேலைகள் கழுத்தை நெறிக்கும். வேலை இருப்பதே பெரிய விஷயம் என்பது போல ஒரு தோற்றம்.அடிப்படை கணினி பயிற்சிகளை கிருஷ்ணன் முடித்திருப்பதால் வேலையில்  நிலைத்து இருக்கிறார்.இன்னும் கணக்கு பதிவியல் தொடர்பான கணினி பயிற்சிக்கும் செல்ல சொல்லி இருக்கிறார் ஆடிட்டர்.

ராதையின் சம்பளம் அப்படியே கிருஷ்ணனின் பயிற்சிக்கு சென்றது. நடுவில் இருவருக்குமே சம்பளம் உயர்ந்தது. ஏறிய சம்பள பணத்தில் ராதை அடிப்படை கணினி வகுப்புக்கு மூன்று மாத காலம் சென்றாள் .பள்ளியில் இவளது கணினி அறிவின் காரணமாக அலுவலக வேலைகளை இவள் தலையில் சுமத்தினார்கள். வகுப்புகளும் எடுக்க வேண்டும் என்ற நிலை. சம்பளம் ஒன்று அதிகமாக கொடுத்துவிட வில்லை. இப்போது இருக்கும் நிலையில் வேலையை விட முடியாத சூழ்நிலை.

ராதை பல்லைக் கடித்து பொறுத்துக் கொண்டாள் . வீட்டு வேலையும்,பள்ளியிலும் என்று சக்கையானாள் ராதா. சீதா பொறுப்புடன் வீட்டு வேலைகளை செய்தாள் .கூடவே நன்றாக படிக்கவும் செய்தாள் .  பிரபல தனியார் தொலைக்காட்சி தொடர்கள் மக்கள் மனதில் பிடிவாதமாக ஆக்கிரமிப்பு செய்த நேரம். தொலைக்காட்சிகளில் நிறைய படங்கள் ஒளிபரப்பினார்கள் .

வெள்ளிக்கிழமை இரவு ஏழரை மணிக்கு ஒளியும் ஒலியும் , பத்து மணிக்கு திரைப்படம், ஞாயிற்று கிழமைகளில் காலை எட்டு மணிக்கு ரங்கோலி,மதியம் ஒண்ணரை மணிக்கு மாநிலங்கள் மொழி திரைப்படம்,நான்கு மணிக்கு திரும்ப திரும்ப ஒளிபரப்பான ஒரு சில திரைப்படங்கள்.(நான் வீடு,சந்தியா காலம் திரைப்படங்களை நினைவு கூர்கின்றேன் )  மஹாபாரதம்,ராமாயாணம் தொடர்கள் எட்டரை மணிக்கு தினமும் செய்திகள் ,வாரத்தின் எல்லா  நாட்களிலும் உழைப்பு. இப்படி ஒரு நேர்கோட்டில் பயணம் செய்த மக்களின் வாழ்க்கை  பாதை மாற்றப்பட்டு, தொலைக்காட்சி தொடர்களின் மீது மோகம் கொண்டு அதன் முன்னால் தவம் கிடக்க ஆரம்பித்த காலம் அது .

ராதையும் கிருஷ்ணனும் வீட்டில் கேபிள் கொடுக்கவில்லை.அதனால் ஜானகி தனது அத்தை வீட்டில் தவம் இருந்தாள் . காலநேரம் என்பதெல்லாம் அவளது கணக்கில் வரவே இல்லை. சுதா எவ்வளவோ சொல்லி விட்டாள் ,”ஜானும்மா… எப்போவும் டிவிய பார்த்தா படிப்புல நாட்டம் குறைஞ்சிடும். புக் எடுத்து வந்து கொஞ்ச நேரமாவது படியேன்”எண்டு சொல்லிப்பார்த்து விட்டுவிட்டாள் . ராதையின் அண்ணனும் சொல்லிப் பார்த்து அலுத்து போனார். வீட்டில் முதியவர்கள் இருவரும் கூட ராமாயணம் ,மஹாபாரதம் படிக்க  ஜானகி தொலைக்காட்சிக்கு அடிமை ஆனாள் . படிப்பில் நாட்டம் குறைந்து முதல் பத்து ராங்குகளில் வந்து நின்றது. சரியாக ஜானகி பத்தாம் வகுப்பு படிக்கும்  நேரம்,சுதா தங்கள் வீட்டு கேபிள் கனக்ஷன்னை எடுத்துவிட்டாள் . அவர்களது இரண்டு குழந்தைகளும் கூட அதிகம் தொலைக்காட்சி பார்ப்பது இல்லை . ஜானகிக்கு கோவமாக வந்தது. ஆனால் அதை காண்பிக்க முடியாது.

எப்படியோ பத்தாம் வகுப்பில் ஒப்பேற்றி அறுபது சதவிகித மதிப்பெண்களில்  பாஸானாள் . அதே சமயம் சீதா படிப்பில் படு கெட்டி.வீட்டு வேலைகள் செய்வதில் அவ்வளவு நேர்த்தி. இப்போது ஆறாம் வகுப்பிலிருந்து ஏழாம் வகுப்புக்கு செல்கிறாள்.பள்ளியில் கற்றுக்கொடுத்த வேலைகளை செய்து பார்ப்பதில் உல்லன் நூலில் எலாஸ்டிக் வைத்து தலை முடிக்கு ஹேர் பேண்ட் செய்ய கற்றுக்கொண்டு விதவிதமாக அம்மா, பாட்டி ,அத்தை,அக்கா, அத்தையின் பெண் என உடைக்கு தகுந்த நிறத்தில் செய்து கொடுத்தாள் .

ஒயர் கூடை முடையவும் , அலங்கார தோரணங்கள் செய்யவும் கூட கற்றுக் கொண்டாள் .அவளது கை வண்ணத்தில் அருகருகே இருக்கும் இரண்டு வீடுகளும் மின்னின. ஜானகிக்கு இதில் எல்லாம் எப்போதுமே ஆர்வம் இருந்தது கிடையாது. அதேசமயம் தங்கை சீதாவை மற்றவர்கள் புகழ்ந்து பேசுவதும் பிடிக்காது.வெளிப்படையாக காண்பித்துக் கொள்ளாவிட்டாலும் அதிகமாக  அவளது சப்தம் கேட்காது.யாரிடமும்  பேசிப் பழக அவள் ஆர்வம் காட்டவில்லை.பள்ளியிலும் அப்படிதான்.

இவளது மதிப்பெண்களும் பள்ளிகளில் கேட்கும் அளவுக்கு  இல்லை என்பதால் பள்ளியில் ஹாம் சயன்ஸ்,நியூட்ரிஷன் போன்ற எதிலாவது சேர்த்துக் கொள்கிறோம் என்றுவிட்டார்கள்.  சரி என்றுவிட்டார் கிருஷ்ணன். கூடவே ஏதோ ஒரு கணினி வகுப்பிலும் சேர்த்து விட்டார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!