ஊனாகி உயிராகினாய் பெண்ணே – 43
அத்தியாயம் – 43
மிருதுளாவின் வீட்டிற்குள் நுழைந்த சரஸ்வதியின் கால்கள் லேசாக நடுங்கின. ‘மிருதுளாவும் அவள் கணவனைத் தப்பாகத்தானே நினைத்துக் கொண்டிருக்கிறாள்… அவளுக்கு இந்த உண்மை தெரிந்தே ஆக வேண்டும்’ என்ற வைராக்கியத்துடன் அவர் உள்ளே சென்ற போது, ஹாலில் அமர்ந்திருந்த காயத்ரி தான் அவரை முதலில் பார்த்தார்.
மிருதுளா ஏற்கனவே தன் போனில் அவள் அத்தையின் புகைப்படத்தைக் காட்டியிருந்ததால், காயத்ரிக்கு அவரை அடையாளம் காண சிரமமில்லை. “வாங்க… உள்ளே வாங்க,” என்று இன்முகத்துடனே வரவேற்றார் காயத்ரி.
Advertisement
அவரது வரவேற்பில் சற்றே வியப்படைந்த சரஸ்வதி, “நான்…” என்று ஏதோ சொல்லத் தொடங்க, காயத்ரியோ முந்திக்கொண்டு, “நீங்க மிருதுளாவோட அத்தை தானே?” என்று சொல்ல,.. சரஸ்வதி மெல்லப் புன்னகைத்துவிட்டு, “மிருதுளாவைப் பார்க்கலாமா?” என்று நேரடியாக விஷயத்திற்கு வந்தார். அவருக்கு எப்படியாவது உண்மையைச் சொல்லிவிட்டு அங்கிருந்து சீக்கிரம் கிளம்ப வேண்டும் என்ற பதற்றம் இருந்தது. ஒருவேளை அவர் கணவர் சுந்தரம் வீட்டிற்கு வந்து, தான் அங்கு இல்லாததை அறிந்துவிட்டால் கேள்வி கேட்டே சாகடித்துவிடுவார் என்ற பயம் அவரைத் அவசர படுத்தியது…
சரஸ்வதி ஏதோ அவசரத்தில் இருப்பதை அவரது முகபாவனையில் இருந்தே புரிந்துகொண்ட காயத்ரி, “மிருதுளா மாடியில அவ ரூம்ல தான் இருக்கா,” என்று கூறி, ஒரு பணிப்பெண்ணை அழைத்து சரஸ்வதியுடன் அனுப்பி வைத்தார் அவளது அறையை காட்டுவதற்காக…
தன் கணவன் ரன்வீரை மிகவும் காயப்படுத்திவிட்டோமோ என்ற குற்ற உணர்ச்சியில் தவித்துக் கொண்டிருந்த மிருதுளா, கதவை திறந்து கொண்டு வந்த தன் அத்தையைக் கண்டதும் ஓடி வந்து அவரைக் கட்டிக்கொண்டாள், அவளைப் பொறுத்தவரை அவளது தாய் வீட்டுச் சொந்தம் என்று சொல்லிக்கொள்ள மிஞ்சியிருந்தது இந்த மாமா குடும்பம் மட்டும்தானே! தன் மனபாரத்தை அடக்க முடியாமல் அவள் விம்மி விம்மி அழ, அவளைத் தன்னிடமிருந்து மெல்லப் பிரித்து, அவளது கண்ணீரைத் துடைத்து விட்ட சரஸ்வதி,.. ”எப்படி இருக்கம்மா?” என்று கேட்டார்,..
Advertisement
அவளோ… “நான் நல்லாவே இல்லை அத்த, அம்மா அப்பா போன அப்புறம் என் வாழ்க்கையே இருண்டு போயிருந்தது, அந்த இருட்டுல தாத்தா மட்டும்தான் எனக்கு ஒளி விளக்கா இருந்தாரு, அப்புறம் ரன்வீர் என் வாழ்க்கைக்குள்ள வந்து என் உலகத்தையே இன்னும் பிரகாசிக்க வச்சாரு, ஆனா… தாத்தா என்னை விட்டுப் போனதும் என் வாழ்க்கையில இருந்த அந்த ஒளி அணைந்து போச்சு, ரன்வீர் மூலம் எனக்குக் கிடைச்ச சந்தோஷங்களை என்னால முழுசா ஏத்துக்கவே முடியல அத்த, ஏன்னா, அவர்தானே என் தாத்தாவைக் கொன்னுட்டாரு? அந்த ஆத்திரமும் கோபமும்தான் எனக்குள்ள பெருசா இருக்கு, இந்தக் குடும்பம் என்னை ஒரு குறையும் இல்லாம தலையில தூக்கி வச்சுக் கொண்டாடுறாங்க… அவங்க காட்டுற பாசம் எல்லாம் எனக்கு ஆறுதலா இருந்தாலும், ரன்வீர் பண்ணின அந்த ஒரு காரியம் என் மொத்த நம்பிக்கையையும் உடைச்சுடுச்சு அத்த, இப்போ அவர் லண்டன் போயிட்டாரு, இனிமே உன்னை பார்க்க வர மாட்டேன்னு சொல்லிட்டு போயிட்டாரு, அவர் என் கண்ணு முன்னாடி இல்லாம இருக்கிறது எனக்கு நிம்மதியை கொடுக்கல அத்த, ரொம்ப வலிக்குது, அவரை பார்க்கணும் போல இருக்கு, ஆனா அவர் கூட என்னால நிம்மதியா வாழவும் முடிய, என்ன பண்றதுன்னே தெரியல அத்த” என்று கேவி கேவி அழ, சரஸ்வதியின் இதயம் சுக்குநூறாக உடைந்தது, ஒரு பக்கம் தன் மகனின் பாவம், மறுபக்கம் தன் கணவரின் மிரட்டல் எனத் தவித்த அவருக்கு, மிருதுளாவின் இந்த வேதனை மரண அடியாக விழுந்தது. ‘இனியும் உண்மையை மறைத்தால் அது கடவுளுக்கே அடுக்காது’ என்று முடிவெடுத்த சரஸ்வதி, மிருதுளாவின் கைகளை இறுகப் பற்றிக்கொண்டு,.. “மிருதுளா… ரன்வீர் உன் தாத்தாவைக் கொல்லல, அவர் மேல எந்தத் தப்பும் இல்லை!” என்று சொல்ல
மிருதுளா அப்படியே திகைத்து நின்றாள்.
Advertisement
“எ.. என்ன சொல்றீங்க? அன்னைக்கு நானே என் கண்ணால பார்த்தேனே…” என்று அவள் குழப்பத்துடன் கேட்க, சரஸ்வதியோ.. ”இல்லை மிருதுளா! நீ பார்த்தது பாதி உண்மைதான். உன் தாத்தா உயிரை எடுத்தது என் மகன் விஷ்வா தான்! பணத்துக்காக அவன் தன் சொந்த தாத்தாவையே கொலை பண்ணிட்டு, பழியை ரன்வீர் மேல தூக்கிப் போட்டுட்டான். உன் மாமாவும் இதுக்கு உடந்தை. நிஜமா ரன்வீர் ரொம்ப நல்லவர்மா, அவரை இதுக்கு மேல தப்பா நினைக்காதே. இதை நான் முன்னாடியே உன்கிட்ட சொல்லி இருக்கணும். மகன் மேல இருந்த பாசத்துலயும், கணவர் மேல இருந்த பயத்துலயும் உண்மையை மறைச்சுட்டேன்… என்னை மன்னிச்சிடுமா!” என்று சொல்லி அவள் கரம் பற்றி அழுதவர், தன்னை சமன்படுத்திக் கொண்டு..
”நான் உடனே போகணும் மிருதுளா, இதை உன்கிட்ட சொல்லத்தான் வந்தேன்மா,” என்று கூறிவிட்டு, அவளது தோளில் ஒரு அழுத்தம் கொடுத்துவிட்டு அங்கிருந்து வேகமாய் வெளியேறினார் சரஸ்வதி.
மிருதுளாவோ இடி விழுந்தாற்போல் நிலை குலைந்து போய் அப்படியே அமர்ந்திருந்தாள். தான் இத்தனை நாட்களாக ஒரு பாவமும் அறியாத தன்னவனையா கொலைகாரன் என்று சொல்லித் துரத்தினோம் என்ற குற்ற உணர்ச்சி அவளைச் சித்திரவதை செய்தது.
சரியாக அந்தத் தருணத்தில்தான் சம்யுக்தா ஓடி வந்தாள். “அண்ணி… ஒரு முக்கியமான எவிடன்ஸ் கிடைச்சிருக்கு, இதை முதல்ல பாருங்க!” என்று படபடப்புடன் சொன்னவள், தனது போனில் இருந்த அந்த வீடியோவை ஓட விட்டாள்.
Advertisement
ஏற்கனவே அத்தையின் வார்த்தைகளால் நொறுங்கிப் போயிருந்த மிருதுளா, அந்த வீடியோவைப் பார்த்ததும் துடித்துப் போய்விட்டாள். அதில் விஷ்வா கொடூரமாகத் தன் தாத்தாவின் கழுத்தைக் கயிற்றால் நெறிப்பதும், அவர் மூச்சுத் திணறித் துடிப்பதும் அப்பட்டமாகப் பதிவாகியிருந்தது. தன் ரன்வீர் எந்தப் பாவமும் செய்யவில்லை என்பதும், அவர் தாத்தாவைக் காப்பாற்றத்தான் போராடினார் என்பதும் அவளுக்கு இப்போது தெளிவாகப் புரிய, சமைந்து போய் அமர்ந்து விட்டாள் அவள்.
தாத்தா சாகும் அந்த வீடியோவைப் பார்த்த அதிர்ச்சியும், தன்னவனைப் புரிந்து கொள்ளாமல் போய்விட்டோமே என்ற வலியும் அவளை அதிக மன அழுத்தத்திற்கு ஆளாக்க, அதன் விளைவால் மயங்கி சரிந்தாள் அவள்…
இங்கு அவசர அவசரமாகத் தாத்தாவின் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர் சுந்தரமும் விஷ்வாவும். கார் நின்றதும் நிற்காததுமாக இறங்கிய விஷ்வா, நேராகத் தாத்தாவின் அறையை நோக்கி ஓடிட, சுந்தரமும் பதற்றத்துடன் அவனைப் பின்தொடர்ந்தார்.
விஷ்வா தான் கேமராவை மறைத்து வைத்திருந்த இடத்தில் தேடிட, ஆனால் அவன் கையில் அது சிக்கவில்லை, அங்கே கேமரா இல்லாததைக் கண்டு அவன் முகம் வெளுத்துப் போனது.
”என்னடா தேடுற? இங்கதான் வச்சியா?” என்று சுந்தரம் படபடப்புடன் வினவ, “இங்கதான்ப்பா வச்சேன்… ஆனா இப்போ காணோம்!” என்று திணறிய விஷ்வா, ஒருவேளை கீழே விழுந்துவிட்டதா என்று குனிந்து தரை முழுவதும் தேடினான். ஆனால், அவன் வைத்த அந்த ரகசியக் கேமரா அங்கும் இருக்கவில்லை.
”அப்பா… காணோம்ப்பா!” என்று அவன் பயத்தில் கூறிட… “யார் கைக்கும் சிக்கி இருக்காதுடா, நல்லாத் தேடிப் பாரு!” என்று சொன்ன சுந்தரமும் மகனுடன் சேர்ந்து அறையின் ஒவ்வொரு மூலையையும் அங்குல அங்குலமாகத் தேடினார், அப்படியும் அவர்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை.
சுந்தரத்திற்கும் இப்போது பயம் கவ்விக்கொண்டது. “நிச்சயமா இங்கேதான் வச்சியா?” என்று அவர் திரும்பத் திரும்பக் கேட்க, “சத்தியமா இங்கேதான்ப்பா வச்சேன்!” என்று நடுங்கும் குரலில் பதிலளித்த விஷ்வா… ”யாராவது எடுத்துட்டாங்களா?” என்று வினவ, சுந்தரம் தன்னைத் தானே சமாதானம் செய்துகொண்டு, “அதெல்லாம் எதுவும் ஆகி இருக்காது. வா, நாம வீட்டுக்குப் போய் பேசிக்கலாம்,” என்று மகனை அழைத்துக் கொண்டு அவர் வீட்டில் போய் இறங்கவும், போலீஸ் வாகனம் அவர்கள் வீட்டின் காம்பவுண்டினுள் நுழையவும் நேரம் சரியாக இருந்தது..
போலீஸைக் கண்டதும் விஷ்வா அப்படியே நடுங்கிப்போய் நின்றான், சுந்தரத்திற்குள்ளும் பதற்றம் அலைமோதினாலும், அதை சாமர்த்தியமாக மறைத்துக்கொண்டு ஏதும் தெரியாதவர் போல.. “என்ன இன்ஸ்பெக்டர்? என்ன விஷயம்? எதுக்கு இவ்வளவு போலீஸ் என் வீட்டுக்கு வந்திருக்கீங்க?” என்று அதிகாரத் தொனியில் கேட்க,
இன்ஸ்பெக்டர் அவரை ஒரு ஏளனப் பார்வையுடன் பார்த்துவிட்டு.. “சுந்தரம் சார்… நடிப்பு போதும்! உங்க மகன் விஷ்வா பண்ணின லீலைகள் எல்லாம் இப்போ ஆதாரத்தோட எங்க கைக்கு கிடைச்சிருச்சு,” என்று சொன்னவர், தன் கையில் இருந்த டேப்லெட்டை ஆன் செய்து காட்டிட, அதில் விஷ்வா, தாத்தாவின் கழுத்தை நெறிக்கும் அந்தக் கொடூரமான வீடியோ ஓடியது. அதைப் பார்த்ததும் விஷ்வாவின் முகம் ரத்தமே இல்லாமல் வெளுத்துப் போக, அதிர்ச்சியில் தன் பாக்கெட்டில் இருந்த காரின் சாவியைத் தரையில் நழுவ விட்டான்.
”இன்ஸ்பெக்டர்… அது… அது வந்து ஒரு தற்காப்புக்காக…” என்று சுந்தரம் மழுப்ப முயல, இன்ஸ்பெக்டர் அவரை இடைமறித்து.. “தற்காப்பா? ஒரு வயசானவரை கழுத்தை நெறிச்சுக் கொல்றதுக்கு பேரு தற்காப்பா? இதுல நல்லா தெளிவாவே பாதிவாகிருக்கு, அது மட்டும் இல்லாம ஆதாரத்தை மறைக்க முயற்சி பண்ண உங்களையும் அவனோடு சேர்த்து இப்போ அரெஸ்ட் பண்றோம்!” என்று கர்ஜிக்க, விஷ்வா பயத்தில் நிலைகுலைந்தான்.
“சார்… ப்ளீஸ் சார்… என்னை விட்டுடுங்க சார்! எல்லாம் எங்க அப்பா சொன்னதுனால தான் நான் செஞ்சேன்!” என்று தன் தந்தையை மாட்டிவிட்டு புலம்பத் தொடங்கிட, சுந்தரம் தன் மகனை அதிர்ச்சியுடன் பார்த்தார், எவனைப் பாதுகாக்க இவ்வளவு தூரம் கஷ்டபட்டாரோ அதே மகனே தன்னை இப்படி கொலை செய்யாத தன் மீது பழி போடுவான் என்று அவர் எதிர்பார்க்கவே இல்லை…
சரியாக அந்த நேரத்தில் தான் சரஸ்வதியும் வீட்டினுள் நுழைந்தார், அங்கே நடப்பவற்றைக் கண்டு அவருக்குப் படபடப்பாக இருந்தாலும், இவர்களுக்கு இது தேவைதான் என்று அவரது உள்மனம் சொல்ல, எதையும் தடுக்காமல், மௌனமாக நின்று வேடிக்கை பார்த்தார், அவரால் அந்த இடத்தில் வேறு என்னதான் செய்ய இயலும்?
அதன் பிறகு போலீஸார் விஷ்வாவிற்கும் சுந்தரத்திற்கும் கைவிலங்கு பூட்டி, அவர்களைக் காவல்துறை வாகனத்தில் ஏற்றினர். கார் கிளம்ப, அந்த வீட்டில் சரஸ்வதி மட்டும் தனி மரமாய், கண்களில் வழியும் கண்ணீருடன் நின்றிருந்தார்…
