Skip to content
Post Views: 52
ரிதம் 6
இரண்டு மாதங்கள் உருண்டோடின.
Advertisement
பெற்றது இரண்டும் பெண்களாகிப் போய்விட்டது. தங்களுக்கு ஏதாவது ஒன்று ஆகிவிட்டால்? தங்களுக்குப் பிறகு, அவர்களுக்கு யார் துணை நிற்பார்கள்? மருமகன் என்ற ஒருவன் துணைக்கு நிற்பான் என்று ஏதேதோ கூறி அவளை நடைப்பிணமாக நிற்க வைத்தார்கள்.
பெண் பார்த்துவிட்டுப் பிடித்திருக்கிறது என்று தாம்பூலம் மாற்றிவிட்டுச் சென்றுவிட்டார்கள். இவளுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
Advertisement
Advertisement
மீண்டும் அழுதாள்; அடம் பிடித்தாள். “ஏற்கனவே நீ பண்ணி வச்ச வேலையில நம்ம குடும்ப மானம் போச்சு. உங்க அப்பாவை எல்லாரும் நிக்க வச்சு கேள்வி கேக்குறாங்க. பொண்ண அடக்கி வைக்கத் தெரியாதா, இப்படித்தான் டிவில வந்து பாடிக்கிட்டுத் திரிவாளானு? என்ன பொண்ண வளர்த்து வச்சிருக்கீங்க? இந்த பொண்ணுக்கு எப்படி கல்யாணம் ஆகும்? அப்படி இப்படின்னு ஆயிரம் கேள்விகள். சென்னைக்கு போற பொண்ணுங்க எல்லாம் கெட்டுப் போயிடுறாங்கலாமே? உன் பொண்ணுக்கும் அதுபோல ஏதாவது ஆயிடுச்சானு கேள்வி கேக்குறாங்க? நல்லவேளையா இவங்க அதெல்லாம் பெருசா எடுத்துக்கல. நீ அடம் பிடிச்சு திரும்பவும் ஏழரையக் கூட்டிடாத.”
“நான் முதல்ல சொன்னதுதான். இந்தக் கல்யாணம் நடக்கணும்; அப்படி இல்லன்னா எங்க ரெண்டு பேருக்கும் கருமாதிய பண்ணி வச்சிட்டு நீ என்ன வேணாலும் பண்ணு.” எங்கே திருமணத்தில் இதே போல, அல்லது திருமணத்தை விட்டு ஓடிவிடுவாளோ என்ற பயத்தில் அவர் தன் பங்கிற்குப் பெண்ணை மிரட்டி வைத்தார்.
Advertisement
………
“அக்கா அழாதீங்க. உங்கள கட்டிக்கப் போறவரு, அப்பாவோட ஃப்ரெண்டோட பையன் தானே, அவர்கிட்ட உங்க ஆசையைச் சொல்லுங்க. யாரு கண்டா? அவர் ஒருவேளை நல்லவரா இருந்து, உங்க குரல் அவருக்குப் பிடிச்சு, அவரே உங்களக் கூட்டிட்டுப் போய் அந்த கௌதம் கிட்ட சேர்த்து விட்டா நல்லா இருக்குமில்ல? அவங்க இப்ப ஃபேமஸாயிட்டாங்கக்கா. அந்த இரணியன் மூவி நல்லா ஓடுச்சில்ல? அதனால அந்தப் படத்தோட மியூசிக் டைரக்டர் கௌதம்னும், புது பாடகர் நிறைய பேர அவர் இண்ட்ரொடுயூஸ் பண்ணியிருக்காருன்னும் இன்னிக்கு நியூஸ் பேப்பர்ல படிச்சேன்” என்று பேசிக் கொண்டிருந்த தங்கையைப் பாதூரமாய் பார்த்தாள்.
“அவங்க எல்லாருமே இப்ப பேமஸாயிட்டாங்க. அந்தப் படத்துல வந்த எல்லாப் பாட்டும் ஹிட்டாயிடுச்சு. இப்ப நீங்க போனீங்கனா, கண்டிப்பா நீங்களும் ஃபேமஸ் சிங்கராய்டுவிங்க. எல்லாத்தையும் நீங்க கட்டிக்கப் போறவர்கிட்ட சொல்லுங்க அக்கா” என்றாள்.
அதற்கும் அவளிடம் விரக்தியான புன்னகை மட்டுமே.
திருமண நாளும் நெருங்கியது. அவனும் அவளிடம் எதுவும் பேசவில்லை; அவளும் அவனிடம் எதுவும் கேட்கவில்லை. ஆனால் தங்கை கூறுவது சரி என்று தோன்றியது. கடைசி வாய்ப்பாகக் கேட்டுவிடலாம் என்று தோன்ற, தாயிடமிருந்து அலைபேசி எண்ணை வாங்கி அவனுக்கு அழைப்பு விடுத்தாள்.
“ஹலோ” என்று எடுத்தவனின் குரலில் போதை தெரிந்தது.
“நல்லவன்னு சொன்னாங்களே? இப்ப இது என்ன?” என்று சிந்தித்துக் கொண்டிருக்க, அவனே குரல் கொடுத்தான்.
“ஹலோ நத்தாஷாவா? என் அழகு தேவதையே? எனக்கு போன் பண்றதுக்கு உனக்கு இத்தனை நாளாச்சா? எங்க வீட்ல தான் என் கையக் கட்டிப் போட்டுட்டாங்க, உன்கிட்ட போன் பேசக் கூடாதுன்னு. இல்லனா தினமும் மணி கணக்கா பேசியிருப்பேன்” என்று வாய் குளறப் பேசினான்.
“இன்னொரு நாள் பேசட்டுமா?” என்று அவள் கேட்க,
“அதெல்லாம் அவசியமே இல்ல டார்லிங். சொல்லு, இங்க நான் உன் நினைப்புல தான் உருகிட்டிருக்கேன். எங்கப்பன் தான் எனக்குத் தடை விதிச்சானு பார்த்தா, உங்க அப்பன் அதுக்கு மேல. ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆபீசராமே? கல்யாணத்துக்கு முன்னாடி உன்னைப் பார்க்கக் கூடாது, பேசக் கூடாதுன்னு சொல்லிட்டாரு. உனக்கு போன் கூட பண்ணக் கூடாதுன்னு சொல்லிட்டாரு. உன் நம்பரைக் கூட கொடுக்கல. நல்லவேளை நீயே என் நம்பரை வாங்கிப் பண்ணிட்ட” என்று அவன் பெருமை பேசினான்.
‘இந்த நிலையில் இவனிடம் இதைப் பற்றிப் பேச வேண்டுமா?’ என்று சிந்தித்தவள், பிறகு பேசிக் கொள்ளலாம் என்று முடிவை எடுத்தாள். அவள் அழைப்பைத் துண்டித்தாலும், அவன் மீண்டும் முயற்சித்து, என்ன பேச வேண்டும் என்று கேட்டுக் கொண்டேயிருந்தான்.
வேறு வழியே இல்லாமல் அவளும் கூறினாள். “வந்து, நான் சரிகமபதநி-ல வின்னர் கண்டஸ்டண்டா தேர்வாகியிருக்கேன். நல்லா பாடுவேன்” என்று ஆரம்பிக்க,
அவன் இடைமறித்தான். “தெரியுமே, டிவில பார்த்தேனே? ரொம்ப அழகு நீ. நல்லாத்தான் பாடுன. நீ போட்டிருந்த டிரஸ்ஸெல்லாம் ரொம்ப நல்லா இருந்தது. உன்னோட ஸ்ட்ரக்சருக்கு ரொம்ப ஃபிட்டா பொருந்தியிருந்தது. உங்க அப்பாவும் அதைச் சொல்லிப் பெருமை பீத்திக்கிட்டாரு” என்று அவன் அசட்டையாகக் கூறினான்.
தன் சாரீரத்தைப் பற்றிச் சொல்லுவான் என்றால் சரீரத்தைப் பற்றிச் சொல்கிறானே? அவளுக்கு அப்போதே ஏதோ போலாகிவிட்டது. இருந்தாலும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டாள்.
“ஒரு பெரிய மியூசிக் டைரக்டர்” என்று அவள் ஆரம்பிக்க,
“யாரு?” என்று கேட்டான்.
“இல்ல, ஒரு மியூசிக் டைரக்டர் எனக்கு அவரோட ட்ரூப்ல வாய்ப்புக் கொடுக்குறதா சொல்லியிருக்காரு. ஆனா அப்பா படிப்ப முடிச்சிட்டுப் போன்னு சொன்னாரு. இப்ப படிப்பு முடியல, கல்யாணமும் ஆகப்போகுது. நீங்க என்னைக் கூட்டிட்டுப் போறீங்களா?” என்று கேட்டாள்.
“மியூசிக் டைரக்டர்கிட்ட என்னைக் கூட்டிட்டுப் போகச் சொல்றியா?” என்று அவன் எகத்தாளமாகக் கேட்டான்.
அவன் குரலின் பேதம், அவன் தவறாகப் புரிந்து கொண்டானோ என்று சிந்தனை வயபட்டாலும், ‘இல்லை அப்படி இருக்காது’ என்று தன்னைத் தானே கட்டுப்படுத்திக் கொண்டாள்.
“இல்ல சென்னையில போய் வாய்ப்புத் தேடுறதுக்கு எனக்கு உதவி பண்றீங்களா? கண்டிப்பா நான் பெரிய பாடகியாகிடுவேன்” என்று அவள் பேசிக் கொண்டிருக்க,
“என்னை என்ன மாமா வேலை பார்க்கச் சொல்றியா?” என்று கேட்டானே பார்க்கலாம்!
அவள் சில்லுச் சில்லாக உடைந்துவிட்டாள். இதற்கு மேல் இவனிடம் பேசுவது வீண் என்று நினைத்தவள், உடனே அழைப்பையும் துண்டித்துவிட்டாள்.
ஆர்வமாக எதிர்பார்த்திருந்த தங்கையிடம் உதட்டைப் பிதுக்கியவள், “அவர் நல்லவர் இல்லை” என்று சிறு வாக்கியத்தோடு முடித்துக் கொண்டாள்.
“என்ன அக்கா இப்படிச் சொல்றீங்க? திரும்பத் திரும்பக் கேட்டுப் பார்க்கலாம். அப்பா மட்டும் நீங்க கேட்ட உடனே ஒத்துக்கிட்டாரா இல்லல்ல? நீங்க பேசினதை நான் கேட்டேன். அவர் என்ன பதில் சொன்னாருன்னு சொல்லுங்க?” என்று கேட்டவளிடம், அவள் என்னவென்று சொல்லுவாள்?
சிறு பெண்ணிடம் அவன் பேசிய வார்த்தைகளை வெளிப்படுத்த முடியுமா என்ன? இவனைத் தந்தை நல்லவன் என்று சொன்னாரே? குடும்பமும் நல்ல குடும்பம் என்றாரே? குடிப்பழக்கம், தவறான வார்த்தை; இன்னும் தங்களுக்குத் தெரியாமல் என்னென்ன இருக்கிறதோ தெரியவில்லையே? இதைத் தந்தையிடம் சொல்லலாமா, வேண்டாமா?
இதைச் சொன்னால் எதற்காக அவனிடம் பேசினாய் என்று கேட்பாரே? அதற்கு என்ன பதில் சொல்வது? அவள் எதையோ சிந்தித்துக் கொண்டிருக்க,
“அக்கா சொல்லுங்க அக்கா? என்ன பதில் சொன்னாருன்னு சொல்லுங்க, அப்பத்தான் என்னால வேற ஐடியா ஏதாவது கொடுக்க முடியும்” என்றாள் ராகினி.
இதற்கு மேல் சொல்லவில்லை என்றால் இவள் விடமாட்டாள் என்று தோன்றியது. ஆழ்ந்த மூச்சை இழுத்துவிட்டாள். “எனக்கென்னமோ, அவரு நல்லவர் இல்லன்னு தோணுதுடி. பேச்சு சரியில்ல, குடிச்சிட்டுப் பேசுற மாதிரி தோணுது. தப்புத் தப்பாவும் பேசுறாரு. ஆனா அப்பா அவருக்கு எந்தக் கெட்ட பழக்கமும் இல்லைன்னு சொன்னாரு. அப்பாகிட்ட போய் சொன்னா, நான் பேசினதையும் சொல்ல வேண்டியிருக்கும். இப்ப என்னடி பண்றது?” என்று கேட்டாள்.
“பேசாம கல்யாணத்தை நிறுத்திட்டு ஓடிப்போயிடுங்க அக்கா” என்று கூறினாள் இளையவள்.
“அதெப்படி அப்படிப் பண்ண முடியும்? நம்மளப் பெத்து வளர்த்தவங்களுக்குத் தலைகுனிவை ஏற்படுத்திட்டுப் போகக் கூடாது. அவங்கள் என்னுடைய கனவுகளுக்குச் சம்மதம் கொடுக்கலனு அவங்கள ஏறி மிதிச்சிட்டுப் போகக் கூடாது. அது எப்பயும் நமக்கு நல்ல வாழ்க்கையைக் கொடுக்காது; சாபத்தை மட்டும்தான் கொடுக்கும். யாரோ ஒருத்தர் எனக்கு வாக்கு கொடுத்தாருன்றதுக்காக என் அப்பா அம்மாவைத் தலைகுனிய வச்சிட்டுப் போக மாட்டேன்” என்று உறுதியாகக் கூறினாள் நத்தாஷா.
“ஆனா அப்பா அம்மாவுக்கு இது புரியலையே? அவங்க வாக்கு கொடுத்ததில் எல்லாம் நிற்கிறாங்க, உங்களைப் பத்தி யோசிக்கலையே?” என்றாள் ராகினி.
“அவங்க நமக்கு நல்லது பண்றதுக்குத்தான் நினைக்கிறாங்க. உலகத்திலேயே அப்பா அம்மாவைவிட பிள்ளைகளுக்கு நல்லது பண்றவங்க வேற யாரும் இருக்க முடியாது ராகினி. நல்லதோ கெட்டதோ, அம்மாவுக்குக் கட்டுப்படுவதுதான் நல்லது” என்றாள்.
“இதுவரைக்கும் நானும் அப்படித்தான் நினைச்சேன் அக்கா. ஆனா அவரு நல்லவர் இல்லைன்னு சொல்றீங்களே? இப்ப என்ன பண்றது?” என்று கேட்டாள்.
“எனக்கும் புரியலடி, பேசாம அம்மாகிட்ட போய் சொல்லலாமா?” என்று அவள் கேட்க, இருவரும் ஏகமனதாகச் சிந்தித்துத் தாயிடம் சென்று நின்றார்கள்.
அவர், அவள் மண்டையிலேயே தட்டினார். “உன்னை யாருடி அவன்கிட்ட போய் பேசச் சொன்னது? யாராவது பெரிய பாடகியாக்குவேன்னு சொன்னா கூட்டிகிட்டுப் போய் சேர்ப்பாங்களா? இந்த கூத்தாடுற தொழிலே பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத தொழில்னு நினைக்கிறவங்கதான் நம்ம மக்கள். அது மட்டுமில்ல, இந்த ஆம்பளைங்க எல்லாம் தனக்குக் கீழேதான் தன் பொண்டாட்டி இருக்கணும்னு நினைப்பாங்க. தனக்கு மேல வரணும்னு நினைக்கிறவங்க எல்லாம் எங்கேயாவது அத்தி பூத்தா மாதிரிதான் இருப்பானுங்க.”
“எனக்குக் கூடத்தான் படிச்சு முடிச்சவுடனே கல்யாணமாயிடுச்சு. கேம்பஸ்ல வேலை வந்தது; ஆனா உங்க அப்பா அனுப்பலையே! குடும்பத் தலைவியா மட்டும் இரு போதும்னு சொல்லிட்டாரு. ஏன்னா நான் கல்யாணமாகி வரும்போது உங்க அப்பா ஏழாயிரம் ரூபாய் சம்பாதிச்சிட்டிருந்தாரு. எனக்குக் கேம்பஸ் பத்தாயிரம் சம்பளத்தில் வேலை கிடைச்சது. ரெண்டு பேரும் சம்பாதிச்சா குடும்பத்தை நல்லா பார்த்துக்கலாம்னு நான் நினைச்சேன். ஆனா அவர் அப்பயே அதைத் தடுத்து நிறுத்திட்டாரு. வேலைக்குப் போற பொண்ணு வேண்டாமாம், வீட்ல அடங்கியிருக்கிற பொண்ணுதான் வேணும்னு சொல்லிட்டாரு.”
“என்னால வீட்டையும் பார்த்துவிட்டு வேலையையும் செய்ய முடியாதாம். எனக்கென்ன செய்ய முடியும், செய்ய முடியாதுன்னு அவரே முடிவெடுத்துட்டாரு. குடும்பம்தான் முக்கியம் வேலை இல்லைன்னு சொல்லிட்டாரு” என்று விரக்தியாகக் கூறினார்.
சகோதரிகள் இருவரும் தத்தமது முகத்தை மாறி மாறிப் பார்த்துக் கொண்டனர்.
“அதுக்காக அவரை தப்பானவர்ன்னு சொல்லிட முடியாது. நம்ம சமூக கட்டமைப்பு அப்படித்தான் இருக்கு. குடும்பத்தை பார்த்துக்கிறது தான் நல்ல பொண்ணுக்கு அழகுன்னு எழுதி வைக்காமல் நியாயப்படுத்த ஆரம்பிச்சுட்டாங்க. அதுக்குள்ள நமக்கே தெரியாம நாம சிக்கி கிட்டு தவிக்கிறோம்.”
“நீ அடம் பிடிச்சுப் பாட்டுப் பாடுறதுக்குப் போகும்போது கூட அவர் அனுமதிக்கலையே? இங்கேயே காம்பெடிஷன் வச்சாங்க, உன்னைத் தேர்வு செஞ்சாங்க. அதுக்கப்புறம் சென்னைக்குப் பாடப் போகணும்னு சொன்னேல்ல, உங்க அப்பா அதைத் தடுத்தார் தானே? ப்ரீத்தி வந்து, ‘என் சித்தி அங்கேயே இருக்காங்க நானும் கூடப் போறேன்’ அது இதுன்னு சொல்லி உன்னையும் சேர்த்து கூட்டிட்டுப் போனாள். இல்லனா, அவர் அனுமதிச்சிருக்கவே மாட்டார். சரி போனது போன, ஜெயிச்சுட்டு வந்திருந்தா கூடப் பரவால்ல, நானும் சந்தோஷப்பட்டிருப்பேன். தோத்துட்டல? அதுக்கப்புறம் திரும்பத் திரும்ப வாய்ப்புத் தேடுறதுன்றது உனக்கே அபத்தமா தோணலையா?” என்று கேட்டார்.
“இல்லம்மா, எனக்கு வாய்ப்புக் கொடுக்கிறேன்னு சொன்னாங்க.”
“உனக்கு இந்த ஆம்பளைங்களப் பத்தி எல்லாம் தெரியாதுடி. இங்க எந்த ஆம்பளைங்களும் நல்லவங்க கிடையாது. ஒருத்தன் ரெண்டு பேருதான் நல்லவனா இருப்பானுங்க. அதுவும் இந்த சினிமா உலகத்துல இருக்க யாரும் நல்லவங்க இல்லடி. நீயே பார்த்தல? அந்த டிவி சேனல்காரங்களை. முன்னாடியே ஒருத்தரைத் தேர்ந்தெடுத்து, அதுக்கப்புறம் உங்களையெல்லாம் வச்சு நிகழ்ச்சி நடத்திட்டிருக்காங்க. அதுபோலத்தான் இவனுங்களும். வாய்ப்புக் கொடுக்கிறேன்னு நம்ம புடவையைத் தாண்டிப் பிடிப்பாங்க. சொன்னா புரிஞ்சுக்கோடி”.
“ஒன்னு அவங்க பார்வை நிலையா இருக்காது; அப்படியே இருந்தாலும் நம்மகிட்ட நல்ல பேர் வாங்குவதற்கு நம்மள நல்லபடியா பார்த்துகிட்டுப் புத்தியில் வேற சிந்திச்சுக்கிட்டே இருப்பானுங்க. அதுபோல ஆம்பளைங்கள எல்லாம் என் வாழ்க்கைல நானும் கடந்து வந்திருக்கேன். சூதானமா இருந்துக்கோ, பெத்தவங்க நாங்க நல்லதுதான் பண்ணுவோம். வீடு வாசல்னு இருக்கு, நல்ல வேலையும் இருக்கு, குடும்பமும் நல்லபடியா இருக்கு. எல்லாத்துக்கும் மேல, செலவு பண்ணி கல்யாண வேலையெல்லாம் பார்த்தாச்சு. ஏதாவது சொல்லி ஏடாகூடம் பண்ணாத” என்றார்.
“அம்மா, நீங்க அக்காவுக்குப் பார்த்திருக்க மாப்பிள்ளை குடிக்கிறார், தப்புத் தப்பா பேசுறாரு. அவரைப் போய் ஏன் பார்த்திருக்கீங்க?” பெரியவளுக்குப் பதிலாக இளையவள் படபடத்தாள்.
ஒரு நிமிடம் அந்தத் தாயின் மனம் சுருங்கியது.
“உங்க அப்பா மாப்பிள்ளைக்கு எந்தக் கெட்ட பழக்கமும் இல்லைன்னு சொன்னாரேடி?” பரிதவிப்பாகக் கேட்டார்.
“அம்மா, என்கிட்ட பேசும்போது அவர் குடிச்சிட்டுத்தான் பேசினார்” என்றாள் நத்தாஷா.
“ஆனா, அடுத்த வாரத்துல கல்யாணத்தை வச்சுட்டு, இப்ப என்னடி பண்ண முடியும்?” அவருக்கு என்ன செய்வதென்று புரியவில்லை, கையைக் கசக்கிக் கொண்டு நின்றார்.
“அம்மா, அவங்க தப்புன்னு தெரிஞ்சபிறகும் கல்யாணத்தை நிறுத்தாம, நீங்க என்ன இப்படிப் பேசுறீங்கம்மா?” என்றாள் சிறியவள்.
“வாய ஒடச்சிடுவேன்! அபசகுனமா பேசாத, வாய மூடிக்கிட்டு இரு. என்ன ஏதுன்னு நான் கேட்டுப் பார்க்கிறேன்” என்றார்.
அவர்கள் இந்தச் சமூகத்தில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்; திடீரென்று காரணங்களைக் கூறாமல் திருமணத்தை நிறுத்த முடியாது. மருமகன் குடிக்கிறான் என்பதற்காகவும் திருமணத்தை நிறுத்த முடியாது. இங்கு குடிக்காதவர்கள் யார் இருக்கிறார்கள்? ஏன், அவளுடைய தந்தையே குடிப்பார்தானே? ஆனால் மகள்களுக்குத் தெரியாமல் அளவாக எடுத்துக் கொள்வார். அதை நினைத்து விரக்தியாகச் சிரித்தவர், ஆழ்ந்த பெருமூச்சை இழுத்துவிட்டார்.
……..
தன் வாழ்க்கையில் நடந்த கசப்பான அனுபவங்களை புரட்டி பார்த்துக் கொண்டிருந்த நத்தாஷா, தங்கையின் அழைப்பில் நிகழ்காலத்திற்கு வந்தாள்.
error: Content is protected !!