Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

76. Rythm - ரிதம் சரிகமபதநிContest Stories 2026

ரிதம் 7

ரிதம் 7

மேடை மேலே கௌதம் கைதட்டியபடி பாடல் பாடிக்கொண்டிருக்க, அவனுடன் வேறு ஒரு பெண் பாடலைப் பாடிக்கொண்டிருந்தாள். அவ்வளவு கரகோஷம், ஆர்ப்பாட்டம் என்று அந்த இடமே கோலாகலமாகக் காட்சியளித்தது. கடலெனக் கூடியிருந்த மக்கள் கூட்டம் மிதந்து கொண்டிருந்தது.



Advertisement

“என்ன ப்ரீத்தி, இந்தக் கூட்டத்துல அந்த மனுஷனைப் பார்க்க முடியுமா? அப்படியே பார்த்தாலும் உன்னை ஞாபகம் வச்சிருப்பாரா? எப்பயோ மூணு வருஷத்துக்கு முன்னாடி பார்த்ததுன்னு சொல்ற?” ப்ரீத்தியின் கணவன் ரமேஷ் சலித்துக் கொண்டான்.

“ப்ளீஸ் ப்ளீஸ், கண்டிப்பா மீட் பண்ணணுங்க. இப்ப அவர் பெரிய மியூசிக் டைரக்டர் ஆயிட்டாரு. அதனால அவரு வீட்டுக்குப் போனாலும், அலோவ் பண்ண மாட்டேங்குறாங்க. அவர் இருந்தா பிரச்சனை இல்லை. ப்ளீஸ் எனக்காக” என்று கெஞ்சினாள்.

Advertisement

Advertisement

“உனக்காகத்தான் அன்னைக்கு அவங்க வீட்டாண்டையும் போனோம். ஆனா அவங்க ஊர்லேயே இல்லைன்னு சொல்லிட்டாங்க. இப்ப இந்த மியூசிக் கான்செர்ட்டுக்கும் உனக்காகத்தான் கூட்டிட்டு வந்தேன். ஒரு டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா? ஆனாலும் உனக்காகத்தான் எல்லாமே பண்றேன்” என்றான்.

“எனக்குத் தெரியுங்க. இந்த ஒரு வாட்டி மட்டும்தான். அதுக்கப்புறம் அவசியமிருக்காது. என்னைப்பார்த்தா கண்டிப்பா அவருக்கு ஞாபகம் இருக்கும்” திடமாகக் கூறினாள் ப்ரீத்தி.

Advertisement

“ஆனா, எல்லாரும் வசதி வாய்ப்புன்னு வந்ததுக்கப்புறம் நம்மள மறந்துடுவாங்க ப்ரீத்தி. நீ உனக்காகக் கேட்கலை, உன் பிரண்டுக்காகத்தான் கேட்கிற, எனக்கு அது புரியுது. ஆனா நீ போய் அவமானப்படுற மாதிரி ஆயிடும், ஞாபகம் வச்சுக்கோ” என்றான் ரமேஷ்.

“ஐயோ அப்படியெல்லாம் இல்லைங்க. அவர் அப்பவே கொஞ்சம் வசதியானவர்தான். இவ்வளவு வசதி இல்லைனாலும், அப்பவே பணக்காரராகத்தான் இருந்தாரு. அவ்வளவு பெரிய வீடு. மியூசிக்காக செட்டப் பண்ற அந்த ரூம் எல்லாமே அவ்வளவு ராயலாக இருந்தது. அப்பயும் அவரும் அவங்க அம்மாவும் அன்பாகத்தான் பழகினாங்க. கண்டிப்பா கௌதம் அப்படிப்பட்டவர் இல்லைங்க. ரொம்ப நல்ல டைப்தான். ஏமாந்த பாடகர்களுக்கு உதவி செய்யணும்னு அப்பவே அவருக்கு அவசியமில்லை, ஆனாலும் செஞ்சாரு. அங்கிருந்த எல்லாரும் அப்படிப்பட்டவங்கதான். இன்னைக்கும் அவர் ட்ரூப்ல அவங்க எல்லாரும் இருக்காங்க, நத்தாஷாவைத் தவிர” என்று கவலையாக முடித்தாள் ப்ரீத்தி.

“ஒருவேளை மறந்திருந்தா என்ன பண்றது? மூன்று வருஷம் கடந்திருக்குல்ல, இதுக்கு நடுவுல எத்தனை பேரை அவங்க பார்த்துக் கடந்து இருப்பாங்க?”

“நீங்க சொல்றதும் சரிதான். மறந்திருக்கவும் வாய்ப்பிருக்கு. ஆனா முயற்சி பண்ணாமலே எப்படித் தோல்வியை ஒத்துக்கிறது? ஒரே ஒரு வாட்டி அவர்கிட்ட பேச சந்தர்ப்பம் கிடைச்சதுன்னா நல்லா இருக்கும். அவர் என்னைச் தெரியாதுன்னு சொல்லிட்டா, நான் அதுக்கப்புறம் உங்களை இதுபோல வற்புறுத்தவே மாட்டேன். அவள் வாழ்க்கையை மாற்றி அமைக்கணும்னு நினைக்கிறேன். ஆனா அவர் தெரியாதுன்னு சொல்லிட்டா அதுக்கு மேல என்னாலையும் எதுவும் பண்ண முடியாதுங்க” என்றாள்.

“என்னமோ உனக்காக ஒரு வாட்டி முயற்சி பண்ணலாம் ப்ரீத்தி” என்றான். அவனும் தன் புது மனைவிக்காக அதைச் செய்யத் துணிந்தான்.

அவர்களுக்குத் திருமணமாகி ஆறு மாதங்களுக்கு மேலாகிவிட்டது. மூன்று மாதம் முடிவடையும் தருவாயில்தான் கணவனிடம் துணிந்து தன் தோழியைப் பற்றிக் கூறியவள், ‘அவளுக்காக வாய்ப்புத் தேட வேண்டும், தான் தனியாகப் போனால் நன்றாக இருக்காது, பாதுகாப்பு இருக்குமா என்று தெரியாது, இந்த இடத்தைப் பற்றியும் தனக்கு எதுவும் தெரியாது, நீங்கள் துணைக்கு வாருங்கள்’ என்று கேட்டாள்.

ரமேஷுக்கும் நத்தாஷாவைப் பார்த்த ஞாபகம் இருந்தது. மனைவி கேட்கிறாளே, அதுவும் முதல்முறையாக, உதவி புரியலாம் என்று சென்றான். ஆனால் முதல்முறை பார்க்க முடியவில்லை. இப்பொழுது மீண்டும் மனைவிக்காக அவளை அழைத்து வந்திருந்தான், அதுவும் மிகுந்த பொருட்செலவில்.

ரமேஷ் இருப்பது சென்னையில்தான். அந்த வரன் ப்ரீத்தியின் சித்தி வாயிலாக அவளுக்கு அமைந்ததுதான். ப்ரீத்தி சென்னையில் செட்டில்லாவதற்கு உடனே ஒத்துக்கொண்டதற்குக் காரணமும், தோழிக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்றுதான்.

ஆனால் அவளுடைய நல்ல மனதிற்கு அவளுடைய கணவன் நல்லவனாகவே அமைந்தான். மாமனார் மட்டும்தான், மாமியார் எப்பொழுதோ கொரோனாவில் இறந்துவிட்டிருந்தார்.

ஆக, அந்த வீட்டின் பொறுப்புகள் அவளிடம்தான் இருந்தது. ஆனாலும் தனியாகச் சென்னையில் சென்று பார்ப்பதற்குச் சற்றுப் பயமாக இருந்தது. மதுரையானால் சுற்றித் திரிந்திருப்பாள், அது அவளுக்குப் பழகிய இடம். ஆனால் இது? அவளுடைய தம்பியும் படிப்பை முடித்தவுடன் வெளிநாட்டில் செட்டிலாகிவிட, கணவனின் துணையில்லாமல் கௌதமின் வீட்டிற்குச் செல்லவே முடியாது என்ற நிலைதான்.

கௌதமின் வீடு, அவள் முதலில் பார்த்ததை விட இப்பொழுது பிரம்மாண்டமாக இருந்தது. ஆனால் வீட்டில் யாரும் இல்லை என்று கூறிவிட்டார்கள். அதன் பிறகு கான்செர்ட் நடப்பதாகத் தெரிந்தது. எப்படியாவது அதில் அவனைச் சந்தித்துவிட வேண்டும் என்று துடித்தாள்.

கான்செர்ட்டில் அவன் நடைப்பயணம் செய்துகொண்டிருக்க, அப்போது எம்பிக் குதித்துத் தன் இருப்பைக் காட்ட நினைத்தாள் ப்ரீத்தி. ஆனால் மேடை மட்டும்தான் ஒளிர்ந்து கொண்டிருந்தது. கீழே இருந்த இடம் இருள் சூழ்ந்திருக்க, அதில் அவன் அவளை அறிந்துகொள்வது மிகச் சிரமம் என்று ரமேஷ் எடுத்துக் கூறினான்.

வேறு வழியில்லாமல் அமைதி காத்தாள். கான்செர்ட் முடிந்து வெளியே செல்லும் இடத்திற்குச் சென்று முன்னதாகவே நின்று கொண்டார்கள். கௌதமும் அவனுடன் சேர்ந்து அவனுடைய ட்ரூப்பும் வெளியில் வரும்போது கூட்டம் அலைமோதியது.

அவள் நசுக்கிப் பிழியப்பட்டாள். அவளுக்கு அரணாக அவள் கணவன் பாதுகாத்தான். ப்ரீத்தியை அணைத்தாற்போல முன்னால் நிறுத்திக் கொண்டான். பாடிகார்ட்ஸ் படை சூழ கௌதம் நடந்து வருவது தெரிந்தது.

“சார் சார்!” என்று எம்பிக் குதித்தாள். அங்கு எழும்பிய கரகோஷத்தில் அவளுடைய சத்தம் அவன் செவிப்பறையை எட்டியிருக்கவேயில்லை.

ஆனாலும் விடவில்லை, விடாமுயற்சி செய்தாள். “கௌதம் சார்!” என்று முந்தியடித்துக்கொண்டு அவன் பார்வை படும் இடத்தில் சென்று நின்றாள்.

அவள் இழுத்த இழுப்பிற்கு அவள் கணவனும் சென்றான். “சார், நான் ப்ரீத்தி, இங்க கொஞ்சம் பாருங்க!” என்று அவள் எம்பிக் குதித்தாள்.

அந்த நொடி அவளைப் பார்த்துவிட்டான் கௌதம். அவன் புருவம் இடுங்கியது. பிறகு பார்வை ஒளிர, “ஹே!” என்று கையை ஆட்டினான்.

“நான் உங்ககிட்ட பேசணும். ப்ளீஸ், எனக்கு வர்றதுக்கு வழி கொடுக்கச் சொல்லுங்க!” என்று கத்தினாள்.

அந்த நெரிசலிலும் சத்தத்திலும் அது அவனுக்குத் தெளிவாகக் கேட்கவில்லை. ஆனால் அவள் எதையோ கூற வருகிறாள், இத்தனை போராட்டங்களுக்கு நடுவில் என்பது மட்டும் புரிந்தது.

அவளைச் சுற்றி ஆண்கள் இருப்பதும், அங்கே அவள் மட்டும்தான் பெண்ணாக இருப்பதும் புரிந்தது. அவளைப் பாதுகாக்க ஒருவன் பிடித்துக்கொண்டு இருப்பது தெரிந்தது. ‘கண்டிப்பாக அது அவளுடைய கணவனாகவோ அல்லது அண்ணன் தம்பியாகவோ இருக்க வேண்டும்’ என்று நினைத்தவன், “கார்ட்ஸ், அவங்க என்னோட ஃப்ரெண்ட். கொஞ்சம் அவங்களை உள்ள விடுங்க” என்று தன் பாடிகார்டிடம் காட்டிவிட்டு, முன்னால் நின்றிருந்த ரசிகர்களிடமும் கூறினான். அவர்கள் அவன் வாய்மொழிக்குச் செவிமடுத்து வழிவிட்டார்கள். ப்ரீத்தி நன்றிப் பெருக்கோடு அவனை அடைந்தாள்.

“ரொம்ப தேங்க்ஸ் சார், என்னை ஞாபகம் வச்சிருக்கீங்க. கண்டிப்பா நத்தாஷாவையும் மறந்திருக்க மாட்டீங்க. உங்ககிட்ட கொஞ்சம் தனியா பேசணும், அவளுக்காக ஒரு உதவி கேட்கணும்.” அவள் படபடப்பாகக் கூறினாள்.

அவளை மறப்பதா என்று அவன் மனம் ஒரு நொடி சிந்தித்துவிட்டு மீண்டது.

“எங்கே உங்க ஃப்ரெண்ட்? டூ இயர்ஸ்ல கண்டிப்பா வருவேன்னு போன் பண்ணாங்க? இப்ப த்ரீ இயர்ஸ் ஆயிடுச்சு, இன்னும் வரலை? நானும் ரெண்டு வருஷம் கழிச்சு அவங்க கண்டிப்பா வருவாங்கன்னு வழிமேல் விழி வைத்துக் காத்திருந்தேனே? வரவே இல்லையே? ஃபாரின் எங்கேயாவது போயிட்டாங்களா என்ன?” என்று கேட்டு வைத்தான்.

அவள் கண்கள் சடாரென்று கலங்க, அவனுக்கு ஏதோ போலாகிவிட்டது.

அவர்களை மட்டும் அழைத்துக்கொண்டு அவனுக்காக ஒதுக்கப்பட்ட பிரத்தியேக அறைக்குத் திரும்பி அழைத்துச் சென்றான். அவனுடைய ட்ரூப்பில் இருப்பவர்களுக்கும் அவளைத் தெரிந்திருந்தது. புதிதாக இருப்பவர்கள் ‘யார் இவர்?’ என்று கேட்டு வைத்தனர்.

“அது ஒரு பெரிய கதை, அப்புறம் சொல்றேன் வா” என்று அழைத்துக்கொண்டு சென்றார்கள்.

“காய்ஸ், நீங்க வர வேண்டாம், நான் பார்த்துக்கிறேன். ரிகர்சல், ப்ராக்டிஸ், இன்னைக்கு ப்ரோக்ராம்னு ரொம்பச் சோர்வா இருக்கீங்க, ஓய்வு எடுத்துக்கோங்க. ரெண்டு நாள் கழிச்சு நம்ம அகாடமியில சந்திக்கலாம்” என்று மற்றவர்களைப் பார்த்துக் கூறியவன், ரமேஷையும் ப்ரீத்தியையும் மட்டுமே அழைத்துக்கொண்டு தன் அறைக்குள் நுழைந்தான். பாடிகார்ட்ஸ் வெளியில் நின்று கொண்டார்கள்.

“அப்புறம், நீங்க எப்படி இருக்கீங்க? முதல்ல அதை சொல்லுங்க? கல்யாணம் ஆயிடுச்சா என்ன? இன்வைட் பண்ணவே இல்லையே?” என்று உரிமையுடனே கேட்டான்.

அவள் அவனை ஆர்வமாகப் பார்த்தது கௌதமிற்கு அப்பொழுதே தெரிந்திருந்தது. ஆனால் இதுபோலப் பல பெண்களின் பார்வையைக் கடந்து வந்தவனுக்கு அது ஒரு பெரிய விஷயம் இல்லை. ஆர்வம் வேறு, காதல் வேறு, அவனுக்கு அதைப் பிரித்துப் பார்க்கத் தெரிந்திருந்தது. கணவன் முன்பாக அந்தப் பேச்செடுக்க அவன் விரும்பவில்லை, அதனால் லகுவாகப் பேசினான்.

ரமேஷுக்கு ஆச்சரியம்தான். இத்தனை பெரிய மனிதன், அதுவும் உயர்ந்த நிலையில் இருப்பவன், தன் மனைவியுடன் தோழமையாகப் பேசுவது அவனுக்கு ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியைத்தான் கொடுத்திருந்தது. மேல் வர்க்கமோ அல்லது கீழ் வர்க்கமோ, உயர்ந்த நிலைக்குப் போய்விட்ட பிறகு யாரும் யாரையும் திரும்பிப் பார்ப்பதில்லை, அதுதான் இன்றைய நிலை என்றான பிறகு, மனைவிக்காக மட்டுமே அவன் வந்திருந்தான். ஆனால் கண்டுகொண்டது மட்டுமில்லாமல் கௌதம் அவளிடம் உரிமையாகப் பேசியது மெச்சுதலாக அவனைப் பார்க்க வைத்தது.

“நீங்க இவளை ஞாபகம் வச்சிருக்கீங்கன்னு நான் கொஞ்சம் கூட நினைக்கலை. ஆனா இவள் சொல்லிட்டே இருந்தாள், இவளைக் கண்டிப்பா ரெகக்னைஸ் பண்ணுவீங்கன்னு. ஆனா நான் தான் நம்பவே இல்லை. இவ்வளவு பெரிய பொசிஷனுக்கு வந்ததுக்கப்புறமும் என்னைக்கோ ஒரு நாள் மீட் பண்ண பொண்ணை ஞாபகம் வச்சிருக்கிறது எல்லாம் பெரிய விஷயம் சார். ரியலி யூ ஆர் கிரேட்! உங்க குணம்தான் உங்களை இவ்வளவு உயர்த்தி இருக்குன்னு நினைக்கிறேன். என் மனைவி புண்ணியத்துல என்னால உங்களை இவ்வளவு கிட்ட நேர்ல பார்க்கிறதுக்குச் சந்தர்ப்பம் கிடைச்சது. எனக்குப் பேசுவதற்கு வாய்ப்புக் கிடைச்சிருக்கு, அதுக்கு நான் என் மனைவிக்குத்தான் நன்றி சொல்லணும்” என்று பெருமை பொங்கப் பேசினான் ரமேஷ்.

“பரவாயில்லை ப்ரீத்தி, உங்க கணவர் உங்களை விட்டுக் கொடுக்காமல் பேசுறாரு. உங்களைப் புகழ்ந்து தள்ளுறாரு. பெண்கள் தான் எல்லாத்துக்கும் காரணமா இருந்தாலும், அதை மனசார ஒத்துக்க நிறைய ஆண்களுக்கு மனசு வராது. ஆனா உங்க கணவருக்கு வருது, யூ ஆர் வெரி லக்கி” என்றான் கௌதம்.

அதில் ப்ரீத்திக்குச் சிறிதாக வெட்கம் ஏற்பட்டது.

“சரி, அப்புறம் சொல்லுங்க, எங்கே உங்க பிரண்டு? காணாமல் போயிட்டாங்க?” என்று கேட்டு வைத்தான்.

அடுத்து அவள் சொன்ன விஷயத்தில் அவனுடைய சிரிப்பு காணாமல் போயிருந்தது.

“இப்ப எங்க இருக்காங்க?” என்று கேட்டான்.

“மதுரையில தான் சார் இருக்காள்” என்றாள்.

“அவங்களுக்கான இடம் என்கிட்ட எப்பயும் காலியாகத்தான் இருக்கு. அதை மத்த யாராலும் ரீப்ளேஸ் பண்ண முடியாது. ரெண்டு வருஷம் கழிச்சு என்னை வந்து மீட் பண்ணுங்கன்னு நான் தான் சொன்னேன்ல, ஏன் வரலை?” சற்று அழுத்தமாகவே கேட்டான்.

அவன் மனதிலும் பாரம் ஏறிய உணர்வு. அவன் முகத்தை வெளியில் காட்டாமல் மறைக்கப் பெரும் பாடுபட்டான் கௌதம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!