Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

25. Kala Palaniappan - காஃபி வித் காதல்

காஃபி வித் காதல் 20

அத்தியாயம் 20

“இதுதான் எங்க காதல் கதை, எப்படி இருந்துச்சு”என்று முடித்தார் ரத்னா.



Advertisement

“சூப்பர் ஆன்ட்டி, அந்த காலத்துலயே காஃபி ஆர்ட்ல ப்ரோபோசல் எல்லாம் செம போங்க” என்றாள் எழிலரசி.

“எங்க அம்மாவும் அழகு.. எங்க அம்மாவோட காதல் கதையும் ரொம்ப அழகு..” என்று ஆசையாக அம்மாவை தோளோடு அனைத்து கொண்டான் கார்த்தி.

Advertisement

Advertisement

“நான்தான் சொன்னேன் இல்ல எங்க காதல் கதை சூப்பரா இருக்கும்”னு என்றார் ரத்னா பெருமையாக.

“சரி, அதுக்கு அப்புறம் நீங்க உங்க ஊருக்கு போகவே இல்லையா? உங்க வீட்டு ஆளுங்களை பார்க்கவே இல்லையா?”

Advertisement

“ஒரு தடவை போனோம், அவங்க சேர்த்துக்கல. அப்புறம் நாங்க போகவே இல்ல. என்னைவிட அதுல கண்ணத்தானுக்கு தான் ரொம்ப வருத்தம்.”

“உங்க லவ் எல்லாம் சூப்பர் தான் அத்தை.. ஆனா நீங்க செஞ்சதும் தப்பு தானே? உங்க அப்பா அம்மாகிட்ட ஒரு தடவை பேசி பார்த்திருக்கலாம் தானே. அவங்களுக்கு நீங்க செஞ்சது பெரிய அதிர்ச்சியாகவும் ஏமாற்றமாகவும் இருந்திருக்கும் தானே?”

“எனக்கு அப்பா அம்மா சம்மதத்தோடு கல்யாணம் செய்யணும் ஆசை தான் எழிலு. ஆனா சந்தர்ப்ப சூழ்நிலை அப்படி அமைஞ்சிடுச்சு..”

“கார்த்தி அப்பா இறந்ததுக்கு அப்புறம் நீங்க அவங்க கிட்ட பேசினீங்களா?”

“எனக்கு ஒரு விதத்துல அவங்க விட்ட சாபம் தான் என் நிலைமைக்கு காரணம்னு ஒரு எண்ணம் என்னையும் அறியாமலே மனசுல வந்துடுச்சு.. அதனால நான் பேசலை. அவங்க நினைச்சா என் கிட்ட பேசி இருக்க முடியும். நான் கார்த்தி பொறந்தப்ப, விக்கி பொறந்தப்ப, வீடு கட்டினப்பபண்ணு எல்லா முக்கியமான நேரத்துலயும் எங்க வீட்டுக்கு லெட்டர் போட்டேன். எதுக்குமே பதில் வந்தது இல்ல.. அங்க நடந்த எந்த நல்லது கெட்டதுக்கும் எனக்கு தகவல் சொன்னதும் இல்லை.”

“சாரி ஆன்ட்டி, எனக்கு தோனுனதை கேட்டுட்டேன். நீங்க சொன்னப்ப உங்க அண்ணியும் தம்பியும் ரொம்ப உதவினதா சொன்னீங்க இல்ல, அவங்க கிட்டயாவது பேசிருக்கலாமே?”

“அவங்களும் விலகி நின்னுட்டாங்க. நானும் விலகி வந்துட்டேன்” என்றார் ரத்னா மெல்ல.

“சரி ஆன்ட்டி, அதை விடுங்க. அப்புறம் உங்க கண்ணத்தான் காதல் எப்படி அடுத்த கட்டத்துக்கு போச்சுன்னு சொல்லுங்க” என்று பேச்சை மாற்றி விட்டாள் எழில்.

“எங்க அம்மாவும் அப்பாவும் எப்பவுமே லவ் பேர்ட்ஸ் தான் எழிலு.. அப்பா அம்மாவை ஒண்ணுமே செய்ய விடமாட்டாங்க.. ராணிம்மான்னு அப்பா கூப்பிடறதே அவ்வளவு மிருதுவா இருக்கும். அப்பா அம்மாவை சத்தமா பேசிக்கூட நான் பார்த்து இல்ல.. உண்மையை சொல்லனும்னா, அப்பா இருந்தவரை அம்மாவைவும் எங்களோட சேர்த்து குழந்தை மாதிரி தான் அப்பா பார்த்துப்பாங்க” என்றான் கார்த்தி அப்பாவின் நினைவில்.

“அம்மாக்கு தினமும் அப்பா தான் தலை சீவி விடுவாங்க, தெரியுமா?”

“ஆமா எழிலு, முதல்ல கோணல்மாணலா பின்னல் போட்டவங்க நாள் ஆக ஆக அவ்வளவு அழகா பிண்ணி தினமும் ஆசையா பூ வச்சுவிடுவாங்க தெரியுமா?”

“கண்ணத்தான் ராணிம்மா லவ் ஸ்டோரி செம ஸ்வீட்” என்றாள் எழிலரசி புன்னகையுடன்.

பின் மூவரும் தூங்க சென்றனர். மறுநாள் கார்த்திக்கு ஆயிரம் பத்திரம் கூறிவிட்டு, அங்கே இருந்து எழிலும் ரத்னாவும் ஊருக்கு புறப்பட்டனர்.

——————–

ரேவதி அலுவகத்தில் இருந்து வந்ததும் எழில் கரக்பூர் சென்று வந்த கதையை ரேவதியிடமும் தமிழிடமும் கூறி கொண்டிருந்தாள்.

அங்கே சுற்றி பார்த்த இடங்கள், அங்கே இருக்கும் கடைத்தெரு, கோவில்கள், மக்கள் என்று கதை கூறிக்கொண்டிருந்தாள்.

பின் ரேவதி காஃபி கலந்து கொடுக்கவும்,

“காஃபியை பார்த்தும் தான் நியாபகம் வருது அம்மா. ரத்னா ஆன்ட்டி லவ் ஸ்டோரிலாம் கேட்டேன் தெரியுமா? செம சூப்பர் போ..” என்றாள் உற்சாகமாக.

உடனே,”சொல்லுக்கா சொல்லுக்கா” என்றாள் தமிழ் ஆசையாக.

ஏற்கனவே அழகாக இருந்த கதையை எழில் இன்னும் மெருகூட்டி சினிமாவை போலவே கூறினாள்.

“இங்க பாருங்க எழிலு தமிழு, இந்த காதல் கதை எல்லாம் கேட்கவும் பார்க்கவும் நல்லா இனிப்பா தான் இருக்கும். ஆனா நிஜத்துல ரொம்ப கஷ்டம். நம்ம குடும்பத்துக்கு எல்லாம் ஒத்து வராது, புரியுதா?” என்றார் ரேவதி. அன்னையாக அவர் மனதில் இருக்கும் நியாயமான பயம் மேலெழுந்தது.

அக்கா தங்கை இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக்கொண்டனர்.

“சிரிக்காதீங்கடி, நீங்களே பாருங்க இப்ப அவங்க வீட்டுக்காரை இழந்தப்ப எப்படி தனியா நின்னு கஷ்டப்படறாங்க?”

“புரியுதும்மா.. நாங்க லவ் பண்ண மாட்டோம், அப்படியே பண்ணாலும் உங்க கிட்ட சொல்லிட்டு தான் கல்யாணம் பண்ணிப்போம் சரியா?” என்றாள் எழில்.

“அடிப்பாவி” என்று அவள் தலையில் நங்கென்று ஒரு கொட்டு வைத்துவிட்டு உர்ரென்று உள்ளே சென்றுவிட்டார்.

“நம்ம ரேவ்ஸ் உர்ருனு இருக்கிறதே ஒரு அழகு தான் இல்ல தமிழு?” என்றாள் தங்கையிடம். அதை கேட்டு திரும்பி முறைத்த அன்னையை பார்த்து,“ஆத்தி, என்னால எல்லாம் கொட்டு வாங்க முடியாது.. ஆளை விடு” என்று சென்றுவிட்டாள் தமிழ்.

எழிலரசிக்கு நாமும் காதலிக்கலாமா என்று விளையாட்டாக ஒரு எண்ணம் வந்தது… யாரை காதலிக்கிறது என்று யோசிக்க, கண் முன் வந்து நின்றது கார்த்தியின் மில்லிமீட்டர் சிரிப்பு தாங்கிய முகம்.

‘என்ன இந்த படிப்ஸ் மூஞ்சி வருது?’ என்று தலையை உலுக்கிக்கொண்டாள். அதன் பிறகு அதை பற்றி யோசிப்பதை கவனமாக தவிர்த்தாள்.

அந்த வாரத்தில் இருந்து எழிலரசி அப்பாக்களுடன் ஹோட்டல் கணக்கு வழக்குகளை பார்க்க தொடங்கினாள். நாட்கள் விரைவாக சென்றது.

இப்பொழுது அனுராதாவின் இழப்பில் இருந்து முழுதாக வெளியே வந்து, அவர் நினைவுகளை அசைபோட்டு மகிழ்ச்சியாக இருக்க பழகி கொண்டாள்.

ரேவதி தான் கொஞ்சம் குழப்பத்தோடு சுற்றி கொண்டிருந்தார்.

“என்ன ரேவதி, ஏன் ஒரு மாதிரி இருக்க?” என்றார் சரவணன் மனைவியின் குழம்பிய முகத்தை பார்த்து.

“இல்லைங்க, நம்ம எழில் பத்தி தான் யோசிச்சிட்டு இருந்தேன். அவளுக்கு கல்யாணத்துக்கு பார்ப்போமா?”

“என்ன ஆச்சு உனக்கு திடீர்ன்னு? இப்ப தானே பி.காம் முடிச்சிருக்கா? உனக்கே இருபத்தி மூனு வயசுல தானே ரேவதி கல்யாணம். அவளுக்கு இருபத்தி ஒன்னு தானே?”

“என்னமோ தோனுது.. காலம் கெட்டு கெடக்குல.. அதான்..” என்று சமாளித்தார்.

“உன் பிரண்ட் கூட தைரியமா அவ்வளவு தூரம் பொண்ணை அனுப்பி வைச்சவ நீ? காலம் கெட்டு கெடக்குன்னு இப்ப நீ சொல்றதை நம்பற மாதிரி இல்லையே?”

“ஆமா இல்ல?”

“என்ன ஓடுது உன் தலைக்குள்ள.. சொல்லும்மா”

“அது வந்து காதல் அப்படி இப்படின்னு வந்து நின்னா?”

“நின்னா? அப்படி வந்து நின்னா, பையன் யார் என்னன்னு விசாரிக்க வேண்டியது தான்”

“ஆங்..”

மனைவியின் ரியாக்ஷனில் தன்னை மறந்து கலகலவென சிரித்தார் சரவணன்.

“எழிலை பத்தி தெரியாதா உனக்கு? நம்ம மனசை கஷ்டப்படுத்துற மாதிரி எல்லாம் எந்த காரியமும் செய்ய மாட்டா டா”

“இருந்தாலும் மனசு ஒரு மாதிரி உறுத்தலா இருக்கு. நேத்து பேசிட்டு இருந்தப்ப, காதல்னு வந்தா உங்க கிட்டயும் அப்பாகிட்டயும் சொல்லிட்டு தான் கல்யாணம் எல்லாம்னு சொல்றா.. விளையாட்டா தான் சொன்னா”

“காலம் மாறிட்டு வருது தான். காதல் தப்பு ஒன்னும் இல்லையே? சரியான துணையை தேர்ந்தெடுக்கணும். தேர்வு தப்புனா நாம் எதிர்த்து நிக்கணும். சரின்னா துணையா நிக்க வேண்டியது தானே?”

“என்னங்க.. நீங்களா இப்படி பேசுறீங்க.. நம்ம குடும்பத்துல இதுவரை ஒரு காதல் கல்யாணம் கூட நடக்கலையே?”

“அதுக்கு? யாருக்கும் கல்யாணத்துக்கு முன்னாடி காதல் வரலை.. ஆனா கல்யாணத்துக்கு பிறகு நாம காதலோடு தானே இருக்கோம்”

“அதான் நானும் சொல்றேன், நாம எல்லாரும் வீட்ல பார்த்து கல்யாணம் பண்ணி இப்ப நிம்மதியா இருக்கோம். அந்த ரத்னா காதல் கல்யாணம் செஞ்சு சந்தோசமா வாழ்ந்திருந்தாலும், இப்ப நிர்கதியா நிக்குறாங்க தானே?”

“எல்லாருக்கும் எல்லாமே சரியா அமைஞ்சிடறது இல்ல ரேவதி.. நடக்கிறதை நடக்கும் பொழுது பார்த்துக்கணும். இது சரி இது தப்புன்னு யூகங்களை வளர்க்க கூடாது. இப்ப எழில் யாரையாவது காதலிக்கிறதா நினைக்கிறியா?”

“இல்லைங்க.. இப்ப அப்படி எதுவும் இல்லை” என்றார் உறுதியாக.

“பாரு உனக்கே உறுதியா அப்படி எதுவும் இல்லைன்னு தெரியுது. அப்புறம் எதுக்கு மனசை போட்டு குழப்பிக்கிற?”

“ம்ம்”

“அவ்வளவு அழகா கணக்கு வழக்குகளை எல்லாம் பார்க்கிறா.. நம்ம பழைய அக்கௌன்ட்டெண்ட் ‘பாப்பா கர்ப்பூரம் மாதிரி எல்லாத்தயும் பிடிச்சுக்குது. நான் சொல்லி தர்ற வேண்டிய அவசியமே இல்லைன்னு’ அண்ணன்கிட்ட சொல்லி இருக்காரு. அண்ணனுங்க ரெண்டு பேருக்கும் அவ்வளவு சந்தோசம் தெரியுமா? எனக்கே அவளை பார்க்கிறப்ப பெருமையா இருக்கு”

“ஏன் எங்களுக்கு எல்லாம் கணக்கு பார்க்க தெரியாதா.. நானும் இருபத்தி அஞ்சு வருஷமா அக்கௌன்ட்டெண்ட்டா தான் இருக்கேன். என்கிட்ட உங்க ஹோட்டல் கணக்கை பார்க்க சொல்லி ஒரு தடவையாவது கேட்டு இருக்கீங்களா? இப்ப உங்க பொண்ணு பார்க்கிறான்னு பெருமை வேற?”

“என் பொண்ணு உரிமையா ‘நான் பார்க்கவா அப்பா’ன்னு கேட்டா.. நீ கேட்டிருந்தா உனக்கும் கொடுத்திருப்பேன்”

“கேட்டு தான் வாங்கணும்னு எனக்கு ஒன்னும் அவசியம் இல்லை.. தள்ளுங்க” என்று அதுவரை அவர் தோளில் சாய்ந்து பேசிக்கொண்டிருந்தவர், அவரை தள்ளிவிட்டு திரும்பி படுத்துக்கொண்டு கண்களை மூடிக்கொண்டார்.

கண்களை மூடி இருந்தாலும், உர்ரென்று இருந்தது அவர் முகம்.

“ரேவ்ஸ், நீ இப்படி உர்ருன்னு இருந்தா தான் பார்க்க அவ்வளவு அழகா இருக்க” என்றார் சிரித்து கொண்டே.

“அப்பாவுக்கும் பொண்ணுக்கும் கொழுப்பு கூடி போச்சு.. வேணும்னே என்னை டென்ஷன் பண்ணிட்டு, உர்ருன்னு இருந்தா அழகா இருக்குன்னு பேச்சு வேற” என்று மேலும் முறுக்கி கொண்டார்.

“என் செல்ல உர்ராங்கொட்டான் ரேவ்ஸ் நீ” என்று மனைவியை தன் பக்கம் ஆசையாக திருப்பினார்.

அதன் பிறகு அவர்கள் இருவரும் அவர்களுக்கான உலகத்திற்கு சென்றுவிட்டனர். ரேவதியின் மனசஞ்சலங்களும் விலகியது.

————————–

“டேய் எதுக்கு டா இப்படி கோவமாவே சுத்திட்டு இருக்க?” என்றார் ரத்னா விக்கியிடம். ஒரு வாரமாக முகம் கொடுத்து பேசாமல் சுற்றிக்கொண்டிருக்கிறான்.

“——————”

“இப்ப சொல்ல போறியா இல்லையா விக்கி. அம்மா பாவம் தானே? நானும் நீயும் தான் வீட்ல இருக்கோம். நீ பேசலைன்னா அம்மா என்ன செய்வேன் விக்கி?”

“உங்க லவ் ஸ்டோரிய குகனும் பாலு அண்ணாவும் எனக்கு சொல்றாங்க.. நீ என்கிட்ட தானே முதல்ல சொல்லி இருக்கணும், அவங்க சொல்லி தான் எனக்கு தெரியுது.”

“டேய்.. நான் எழில் கேட்டுச்சு சொன்னேன்.. நீ கேட்டியா சொல்லு?”

“போம்மா..”

“இப்ப என்ன உனக்கு சொல்றேன், வா”

“ஒன்னும் வேண்டாம்.. அவங்களே முழுசா சொல்லிட்டாங்க.. இன்னும் குறும்படம் ஒன்னு தான் எடுக்கலை”

“ஏன் விக்கி, எழில் கிட்ட ஒரு நாள் தான் கதை சொன்னேன். ஒரு நாள்ல எங்க முழு கதையை சொல்ல முடியுமா? அவ கிட்ட சொல்லாம நிறைய இருக்கு. உனக்கு சொல்றேன் சரியா?” என்று பலதும் கூறி அவனை மலை இறக்கினார்.

விக்கி தான் அம்மாவின் புதுக்கடைக்காக எல்லா மர சாமான்களையும் செய்து கொண்டிருக்கிறான். ப்ரத்யேகமாக ஒவ்வொன்றாக செய்துகொண்டிருக்கிறான்.

பணியாரம் ஊற்றும் பெண்கள் அமருவதற்காக ஸ்டூல்கள், அம்மாவிற்காக மேஜை நாற்காலி, பொருட்களை வைப்பதற்கு சின்ன அலமாரி, சாமி படம்வைத்து விளக்கு ஏற்றுவதற்கு அழகான மாடம் ஒன்று.

எப்படியும் கார்த்தி வரும்பொழுது தான் புது கடையை திறக்க வேண்டும் என்று அவனது செமெஸ்டர் விடுமுறைக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்குள் விக்கியின் வேலையும் முடிந்துவிடும்.

சுந்தரேசன் ஆரம்பத்தில் வந்து மேற்பார்வை பார்த்தவர், “அப்படியே உங்க அப்பா கை வண்ணம் விக்கி உனக்கு” என்று ஆசையாக அவன் செய்வதை பார்த்து செல்வார்.

சுந்தரேசன் மகன் மகள்களுக்கு எல்லாம் அவரது தொழிலை எடுத்து செய்யவெல்லாம் இஷ்டம் இல்லை. உங்களுக்கு முடியலைன்னா எல்லாத்தையும் வித்து க்ளோஸ் பண்ணி, எங்களுக்கு பணமா கொடுத்திடுங்க என்று கூறி விட்டார்கள்.

அவருக்கு பிறகு விக்கிக்கு தொழிலை கொடுக்க வேண்டும் என்று சமீப காலமாக அவருக்கு ஒரு ஆசை. கார்த்தி வேலைக்கு சேர்ந்த பிறகு, அவனிடம் பேசலாம் என்று நினைத்து கொண்டிருக்கிறார்.

எழில் தான் ரத்னாவிற்கும் உதவி செய்கிறாள். புது கடையை முறையாக ரெஜிஸ்டர் செய்வது, லைசென்ஸ் வாங்குவது என்று அனைத்தையும் விசாரித்து செய்து கொடுத்தாள். எல்லா இடங்களுக்கும் அவளது டூ வீலர்லயே அழைத்து சென்று வருகிறாள். ‘நானே போய்ட்டு வந்துடுவேன் எழிலு, நீ விவரம் சொன்னா மட்டும் போதும்’ என்று ரத்னா கூறியதற்கு,

“எங்க அத்தை எல்லாம் என் கூட தான் வண்டில வருவாங்க. உங்கள மாதிரி பிஹு பண்ண மாட்டாங்க தெரியுமா?” என்றாள்.

அதன்பிறகு ரத்னாவும் மறுக்கவில்லை.

விஜயனையும் விடாமல் அவரது பெட்ரோல் பங்க் கணக்கு வழக்குகளையும் அவள் தான் பார்க்கிறாள்.

இம்முறையும் ரத்னா அவர்கள் வீட்டிற்கு கடைதிறப்பு விழா அழைப்பிதழை அனுப்பினார்.

“ஆன்ட்டி, எனக்கு ஒரு டவுட், ஒரு வேலை உங்க வீட்டு ஆளுங்க வேற வீடு மாறி இருப்பாங்களோ? அதான் நீங்க அனுப்புற லெட்டர்க்கு எல்லாம் பதில் இல்லாம இருக்குன்னு நினைக்கிறேன்” என்றாள் எழில் தீவிரமாக.

“அப்பிடியா சொல்ற? ஆனா எங்க வீடு சொந்த வீடு எழிலு. அதை விட்டுட்டு வேற எங்க போகப்போறாங்க?”

“அது தெரியலை. உங்க அப்பா அம்மா எல்லாரும் எப்படி இருக்காங்கன்னு ஒரு தடவை போய் பார்த்திட்டு வருவோமா?”

“போலாம்னு ஒரு மனசு சொல்லுது.. வேணாம்னு ஒரு மனசு சொல்லுது”

“அது ஒன்னு உங்க மனசு.. ஒன்னு உங்க கண்ணத்தான் மனசு.. “

“நீங்க உங்க மனசு சொல்றதை கேட்கப்போறீங்களா? உங்க கண்ணத்தான் மனசு சொல்றதை கேட்கப்போறீங்களா?”

“அம்மாடி, உன் கிட்ட பேசி ஜெயிக்க முடியுமா? கார்த்தி வரட்டும், அவன் வந்ததும் அவனையும் கூட்டிட்டு போய்ட்டு வரேன் ஒருதடவை”

திறப்புவிழாவிற்கு இரண்டு தினங்களுக்கு முன்பு தான் கார்த்தி வந்து இறங்கினான்.

வந்ததிலிருந்து ரத்னா “எழில் இதை சொன்னுச்சு, அதை சொன்னசுச்சு, அவ கூட அங்கே போனோம் இங்கே போனோம்” என்று எழிலரசி புராணம் தான்.

“என்ன விக்கி இது?” என்றான் கார்த்தி விக்கியிடம் செய்கையால்.

“நீ வேற ஏன் கேட்குற.. பாதி நேரம் என்னையவே அம்மா எழிலுனு தான் கூப்பிடறாங்க..” என்றான் போலியான வருத்தத்தோடு.

கார்த்திக்கும் எழிலை நேரில் பார்க்கவேண்டும் என்று ஆவலாக இருந்தது.

“இன்னிக்கு கிருத்திகை, எழிலு காலையில கோவிலுக்கு வந்திருக்கும். ஒரு போன் போட்டு வீட்டுக்கு வரச்சொல்லு விக்கி” என்றார் ரத்னா கார்த்தி வாங்கி வந்திருந்த பொருட்களை எடுத்து வைத்துக்கொண்டு.

“அவங்க வீட்டுக்கு சேர்த்து தான் ம்மா பெங்காலி ஸ்வீட் வாங்கிட்டு வந்திருக்கேன். கொடுத்திடறீங்களா?” என்றான் கார்த்தி.

“இல்ல கார்த்தி, இங்க கொடுத்தா நல்லா இருக்காது. நீயும் விக்கியும் சாயங்காலம் போய் அவங்களுக்கு கொடுத்திட்டு, கடை திறப்பு விழாக்கு வாங்கனு நேர்ல கூப்பிட்டுட்டு வந்துடுங்க..”

“சரிம்மா..”

விக்கி போன் செய்து அழைக்கவும் எழிலும் கோவிலில் இருந்து இவர்கள் வீட்டிற்கு வந்தாள்.

ரத்னா குளிக்க சென்றிருந்தார். விக்கி கடைக்கு பால் வாங்கி வர சென்றிருந்தான். கார்த்தி மட்டும் தான் ஹாலில் அமர்ந்திருந்தான்.

“வா வா எழில்.. எப்படி இருக்க?”

“ஹாய் பாஸ்.. நான் சூப்பரா இருக்கேன்.. நீங்க எப்ப வந்தீங்க?” என்றாள் அத்தனை புத்துணர்ச்சியாக.

“அரைமணி நேரம் ஆச்சு.. உட்காரு எழில், அம்மா குளிக்க போனாங்க.. இப்ப வந்திடுவாங்க. ஒரு கப் காஃபி குடிக்கிறீயா?”

“கண்டிப்பா காஃபி குடிக்க தான் வந்தேன்.. ஆன்ட்டி ஸ்பெஷல் காஃபி.. சோ ஆன்ட்டி வந்திடட்டுமே?”

கார்த்தி உதட்டில் எப்பொழுதும் போல சின்ன சிரிப்பு..

‘என்னைக்காவது ஒரு நாள் இந்த மில்லிமீட்டர் சிரிப்பை சென்டிமீட்டர் சிரிப்பா மாத்துறேனா இல்லையா பாரு’ என்று மனதிற்குள் பேசிக்கொண்டாள் எழில்.

“அம்மா வந்ததுல இருந்து உன்னை பத்தி தான் பேசிட்டே இருக்காங்க.. ரொம்ப தேங்க்ஸ் எழில். உன்னோட ப்ரெசென்ஸ் அவங்களை ரொம்ப உயிரோட்டமா வச்சிருக்கு..”

“பாஸ்.. சும்மா சும்மா இப்படி சென்டிமென்ட்டா பேசாதீங்க ப்ளீஸ்..”

இவர்கள் பேசிக்கொண்டிருக்கையில் “ஹாய் அக்கா” என்று

விக்கி பால் பாக்கெட்டுடன் வந்துவிட்டான்.

ரத்னா வந்து இவர்கள் மூவருக்கும் காஃபி கலந்து கொடுத்து, கார்த்திக்காக செய்திருந்த பால் கொழுக்கட்டையை ஒரு டப்பாவில் போட்டு எழில் வீட்டிற்கு கொடுத்துவிட்டார்.

அன்று மாலை கார்த்தியும் விக்கியும் நேரில் சென்று எழில் வீட்டில் அனைவரையும் அழைத்து வந்தனர். அப்படியே நந்திதா மேம் ரிச்சர்ட் சார் என்று அவர்களையும் அழைத்து வந்தனர்.

ரத்னா எழில் கூறியதை போல அவர் அம்மா வீட்டிற்கும் செல்வோமா? என்று கேட்டார்.

“இன்னும் ஒரு நாள் தானே அம்மா இருக்கு. இப்ப வேண்டாம், ஆனா கண்டிப்பா ஒரு முறை போலாம். உங்க வாழ்க்கையில இது ஒரு பெரிய ஸ்டெப். இதை முழு மனசா என்ஜாய் பண்ணுங்க. இது முழுக்க முழுக்க உங்களோட உழைப்புக்கு கிடைத்த வெற்றி. அப்பா இருந்திருந்தா அவ்வளவு சந்தோசப்பட்டிருப்பாங்க. அதனால அப்புறம் ஒரு முறை உங்க ஊருக்கு போகலாம்” என்று விட்டான் கார்த்தி.

கண்ணன் பணியாரம் ஸ்டால் இவர்களது நெருங்கிய நட்பு வட்டாரத்துடன் சிறப்பாக புது பொலிவுடன் ஆரம்பமானது.

காமாட்சி அம்மா குத்து விளக்கு ஏற்றி ஆரம்பித்துவைத்தார். அவரும் சுந்தரேசனும் இவர்கள் குடும்பத்தின் பெரியவர்களாகவே அனைத்தையும் முழு மனதாக செய்தனர்.

எழிலரசி, அழகான நாவல்பழ நிறத்திலான மைசூர் சில்க்கில் மிகவும் எழிலோவியமாக வலம் வந்தாள்.

கார்த்தியின் பார்வை முதன்முறையாக ரசனையாக அவள் மீது மீண்டும் மீண்டும் படிந்தது.

வேறு யார் கண்ணில் படாவிட்டாலும், எழிலரசியின் கண்களுக்கு அது தப்பவில்லை.

ஆஹா.. என்று சிலாகித்துக் கொண்டது அவளது மனசு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!