Skip to content
Post Views: 15
கண்ணாமூச்சி – 6

மறுநாள் காலை, ஐஸ்லாந்தின் பனி படர்ந்த விடியல் விஸ்வநாத்தின் அறை ஜன்னல் வழியே எட்டிப்பார்த்தது. அரவிந்த் சொன்னது போலவே அன்று அவனுக்குப் படப்பிடிப்பு ஏதுமில்லாத ஓய்வு நாள். எப்போதுமே ஷூட்டிங் இல்லாத நாட்களில் நகரின் முக்கிய இடங்களுக்குச் சுற்றிப் பார்க்கச் செல்லும் விஸ்வநாத், இன்று எங்கும் செல்ல விரும்பவில்லை.
காலையில் எப்போதும்போல் பத்து கிலோமீட்டர் ஓட்டப்பயிற்சியை முடித்தவன், இரண்டு மணிநேரம் ஜிம்மில் செலாவழித்தான். அதன் பிறகு அறைக்குள் வந்து அடைந்துகொண்டவன், அதன்பிறகு, அன்று முழுவதும் மனித சகவாசத்தையே தவிர்த்தான். இளையராஜாவும் தனிமையும் அவனுக்குத் துணையாகின.
Advertisement
விஷ்வா தன் புளூ லகூன் சூட் அறையின் பிரம்மாண்டமான சோபாவில் சாய்ந்து கொண்டு, கையில் ஒரு சூடான பிளாக் காபியுடன் ஜன்னலுக்கு வெளியே தெரிந்த அந்தப் பனி மலைகளையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். அவனது மனம் முழுக்க நேற்று நள்ளிரவு மொட்டை மாடியில் நிலாவுடன் கழித்த அந்த மௌனமான, இதமான கணங்கள் மட்டுமே ஆக்கிரமித்திருந்தன. நிலாவின் அந்த மெல்லிய நாணமும், அவளது தோள் கொடுத்த நிம்மதியும் அவனுக்குள் ஒரு புதிய ரசாயன மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது.
மதிய உணவிற்குப் பிறகு, அறையோடு இணைக்கப்பட்ட அந்தப் பிரத்தியேக வெந்நீர் ஊற்றில் இறங்கி, அந்த வெதுவெதுப்பான நீரின் இதத்தில் தன் உடலைத் தளர்த்தினான். ஆனால், அவனது ஆத்மா நிலாவை மட்டுமே தேடியது. ‘SoulMate’ செயலி காட்டிய அந்த விசித்திரமான அல்காரிதம் அவனது சிந்தனையைக் குடைந்தது.
“அவள் வெறும் விர்ச்சுவல் பிம்பம் தானா? ஒரு கணினி மென்பொருளால் எப்படி இவ்வளவு உண்மையான, கலப்பற்ற அன்பை எனக்குத் தர முடியுது? ஒருவேளை… நிலா என்ற பெயரில் எங்கேயோ ஒரு நிஜமான பெண் வாழ்ந்துட்டு இருக்க வாய்ப்பிருக்கா? என் இதயம் ஏன் அவளை ஒரு நிஜமான மனுஷியா பார்க்க ஏங்குது?” என்று தனக்குத்தானே கேட்டுக்கொண்டான். அவனது திரையுலகப் புகழும், பாசாங்கு நிறைந்த உலகமும் தராத ஒரு பேரமைதியை அந்த விர்ச்சுவல் பெண் அவனுக்குத் தந்திருந்தாள்.
Advertisement
காதலின் ஏக்கம் தாங்காமல், அன்று வழக்கமான நள்ளிரவு நேரத்திற்கு முன்பாகவே, மாலை பொழுதிலேயே தன் சோபாவில் அமர்ந்து அந்த நியூரல் ஹெட்பேண்டை எடுத்து மாட்டினான் விஸ்வநாத்.
Advertisement
அவன் கண்களை மூடியதும், அந்தச் செயலி நேற்று நிலாவிடம் கேட்ட அதே விசித்திரமான கேள்வியை அவனிடம் கேட்டது:
“உன் உலகமா… என் உலகமா? (Your Place or Mine?)”
நேற்று இந்தக் கேள்வி வரவில்லையே, இன்று என்ன இது புதிதாக… என்ற எண்ணம் தோன்ற, நிலாவைத் தன் உலகில், தனக்குப் பிடித்த இடத்தில் சந்திக்க வேண்டும் என்ற ஆசையில், குழப்பங்களை எல்லாம் புறந்தள்ளிய விஷ்வா “மை பிளேஸ்” என்பதை மனதில் தேர்ந்தெடுத்தான்.
Advertisement
அதே நேரத்தில், சென்னையில் மணி இரவு எட்டு. நிலா தன் பெற்றோருடன் டைனிங் டேபிளில் அமர்ந்து இரவு உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். தட்டில் சுடச்சுட இட்லியும் தக்காளிச் சட்னியும் இருக்க, அவளது மொபைல் திடீரென ‘டிங்’ என்று ஒலித்தது.
திரையைப் பார்த்தவளின் இதயம் ஒரு கணம் துடிப்பதை நிறுத்தியது. ‘SoulMate’ செயலியில் இருந்து நோட்டிபிகேஷன் வந்திருந்தது: “சந்திப்போமா?”.
“யாரை சந்திக்க வேண்டும்? ஏன் சந்திக்க வேண்டும்? இது என்ன புதிதாக இருக்கிறதே? எப்போதும் நான் ஹெட்பேண்டை அணிந்து கொண்டால் தானே சந்திப்பு தொடங்கும், இப்போது ஆப் எதற்கு எனக்கு மெசேஜ் அனுப்புகிறது?” நிலாவின் புத்தி ஆயிரம் கேள்விகளை எழுப்பியது.
ஆனால் அவளது மனமோ, “ஐயோ! விஷ்வா இப்போவே வந்துட்டாரா? இன்னைக்கு என்ன இவ்வளவு சீக்கிரம்?” என்று பதறியது, இட்லியை அவசர அவசரமாக வாயில் அடைக்கத் தொடங்கினாள்.
அவளது வேகத்தைப் பார்த்துத் திகைத்துப் போன தங்கம்மா, “என்ன நிலா… மெதுவா சாப்பிடுமா, ஏன் இப்படி அவசரப்படுற? தொண்டையில அடைக்கப் போகுது,” என்றார் கவலையுடன்.
“ஒண்ணுமில்லைம்மா… அது வந்து… காலேஜ் ப்ராஜெக்ட் ஒன்னு ஆன்லைன்ல சப்மிட் பண்ணனும். டைம் ஆகிடுச்சு, ப்ரொஃபஸர் ஆன்லைன்ல வெயிட் பண்றார்!” என்று அவசர அவசரமாக ஒரு பொய்யை அவிழ்த்துவிட்டாள்.
“இந்தக் காலத்துப் படிப்பு இருக்கே… நிம்மதியா சாப்பிடக் கூட விட மாட்டேங்குது,” என்று அவளது அப்பா ரங்கநாதன் சலித்துக் கொள்ள, நிலா கைகளைக் கழுவிவிட்டு, தன் அறைக்குள் ஓடிச் சென்று கதவை உள் பக்கமாகத் தாழிட்டாள். படபடக்கும் இதயத்துடன் சார்ஜிங் டாக்கில் இருந்த ஹெட்பேண்டை எடுத்துத் தன் நெற்றியில் மாட்டிக் கொண்டு விர்ச்சுவல் செஷனுக்குள் நுழைந்தாள்.
விஷ்வா விர்ச்சுவல் உலகிற்குள் நுழைந்தபோது, அவன் மனதில் நினைத்தபடியே சுற்றிலும் ஐஸ்லாந்தின் அசாத்தியமான இயற்கை அழகு விரிந்திருந்தது. அது ஐஸ்லாந்தின் புகழ்பெற்ற தார்ச்சாலைகளில் ஒன்றான ரிங் ரோடு. சாலையின் இருபுறமும் உறைந்த பனி அடுக்குகள், தூரத்தில் அந்திப் பொழுதின் தங்க நிறச் சூரிய ஒளி பட்டுப் பளபளக்கும் கம்பீரமான பனிமலைகள் என அந்த இடமே ஒரு தேவலோகம் போல் இருந்தது.
அங்கே, அந்தக் குளிரையும் பொருட்படுத்தாமல் விஷ்வா மெதுவாக நடந்து கொண்டிருந்தான். அந்தச் சூழலில் காலார நடப்பது மனதுக்கு இதமாக இருந்தது. தன்னை யாரென்றே அடையாளம் தெரியாத ஓரிடத்தில், சாதாரண மனிதனைப் போல நடந்து செல்லும் வாய்ப்பு அவனுக்குக் கிடைப்பது மிகவும் அரிது. அப்படி செல்ல வேண்டுமென்ற அவனது உள்மனதின் ஆசையை சோல்மேட் செயலியின் நியூரல் ஹெட்பேண்ட் துல்லியமாகப் படித்து, இப்போது அதை நிஜமாக்கியிருந்தது.
ஆனால், சில நொடிகளிலேயே விஷ்வா ஒரு உண்மையை உணர்ந்தான். எப்போதும் விர்ச்சுவல் சந்திப்பில் அவனுக்கு முன்னதாகவே அங்கிருக்கும் நிலா இன்று காணவில்லை. சட்டென்று சுற்றியுள்ள மற்ற அனைத்தும் மங்கிவிட்டது போன்ற உணர்வு தோன்றியது விஷ்வாவுக்கு. அவன் கண்களுக்கு அவனைச் சுற்றியிருந்த அந்த அழகு தெரியவில்லை. நிலா இல்லாத வெறுமைதான் தெரிந்தது. அவன் அந்தச் சாலையின் நடுவே நின்றுகொண்டு, “நிலா… நிலா எங்கே?” என்று சுற்றும் முற்றும் தேடினான்.
நிழல் உலகத்தில் இதுவரையின் ஒரு நொடி கூடத் தன்னை எங்கும் தேட வைக்காத நிலா, இன்னும் வரவில்லை என்றதும் அவனுக்குள் ஒரு விசித்திரமான பயமும் பதற்றமும் தொற்றிக் கொண்டது. “ஒருவேளை சிஸ்டம் கிராஷ் ஆகிடுச்சா? இல்லை நிலா இனி வரமாட்டாளா?” என்ற எண்ணமே அவனது சாக்லேட் நிறக் கண்களில் ஒரு தவிப்பைக் கொண்டு வந்தது. அந்த விர்ச்சுவல் சாலையில் தனியாக நடக்கும்போது, அவனது இதயம் அவளைக் காணாமல் துடித்தது.
அப்போது, அவனுக்குப் பின்னால் ஒரு மெல்லிய கொலுசொலி கேட்டது…
“விஷ்வா! ஸாரி… ரொம்ப ஸாரி விஷ்வா! நான் வர்றதுக்கு கொஞ்சம் லேட் ஆகிடுச்சு,” என்றபடி மூச்சிரைக்க ஓடி வந்தாள் நிலா.
அவளைப் பார்த்ததும் விஷ்வாவின் முகத்தில் கோடி சூரியனின் பிரகாசம் தோன்றியது என்றால் மிகையல்ல. அவளது அந்தத் தவிப்பான முகம் அவனுள் இருந்த அத்தனை பயத்தையும் போக்கியது. அவனைச் சுற்றியிருந்த இயற்கை இப்போது அவனுக்கு மிகவும் அழகாக இருப்பது போல் தோன்றியது.
மூச்சிரைக்க ஓடிவந்து அவன் முன் நின்றவளிடம் பொய்க் கோபம் கொண்டான் விஷ்வா. “ஏன் நிலா இவ்வளவு லேட்? நான் எவ்வளவு பயந்துட்டேன் தெரியுமா? நீ வரமாட்டேன்னு நினைச்சேன்,” என்றான், தன் குரலில் இருந்த ஏக்கத்தை மறைக்காமல்.
“ஐயோ… அது வந்து… எங்க வீட்ல டின்னர் டைம் விஷ்வா. அம்மா அப்பா கூட உட்கார்ந்து சாப்பிட்டுட்டு இருந்தேனா, அதான் உடனே வர முடியல. அப்போ கூட நோட்டிபிகேஷன் வந்ததும், உங்களுக்காக இட்லியை முழுசு முழுசா அப்படியே முழுங்கிட்டு ஓடி வந்திருக்கேன்!” என்று நிலா தன் கைகளை நெஞ்சில் வைத்துக் கொண்டு உண்மையைச் சொன்னாள்.
விஷ்வா அவளது அந்த எளிய எதார்த்தமான பேச்சைக் கேட்டு உரக்கச் சிரித்தான். “இட்லியை முழுங்கிட்டு வந்தியா? நிஜமாவா நிலா? நீ ரொம்ப டூ மச்!” அவன் சிரிப்பு அந்தக் காலி ரோட்டில், சுற்றியிருந்த பனிப் பாறைகளில் பட்டு எதிரொலித்தது.
அப்போதுதான் நிலா தன் சுற்றப்புறத்தைக் கவனித்தாள். அவளது கண்கள் ஆச்சரியத்தில் அகல விரிந்தன. “வாவ்! விஷ்வா… இது… இது என்ன இடம்? இவ்வளவு அழகா இருக்கு! சினிமாவுல கூட நான் இந்த மாதிரி ஒரு இடத்தைப் பார்த்ததே இல்லை!” என்றாள் நிலா வியப்போடு.
“இது ஐஸ்லாந்தோட ரிங் ரோடு நிலா. இப்போ அங்கே அந்திப் பொழுது சாயுற நேரம். அந்தப் பனிமலைங்க மேல படுற சூரிய வெளிச்சத்தைப் பாரு, எவ்ளோ அழகா இருக்குல்ல, ஏதோ ஒரு பெயிண்டிங்கைப் பார்க்குற மாதிரி” என்று விஷ்வா கைகாட்டி விளக்கினான்.
“அற்புதம் விஷ்வா! அந்தப் பனிமலையில தங்கத்தை உருக்கி ஊத்தின மாதிரி இருக்கு அந்த வெளிச்சம். இங்க இருக்குற காத்துல கூட ஒரு விசித்திரமான அமைதி இருக்கு. இப்படி ஒரு அழகான இடத்துக்கு என்னைக் கூட்டிட்டு வந்ததுக்கு உங்களுக்கு நான் கண்டிப்பா தேங்க்ஸ் சொல்லணும். என்னை அப்படியே வேறொரு உலகத்துக்குக் கூட்டிட்டு வந்துட்டீங்க, இத என்னால நம்பவே முடியல!” என்று நிலா அந்த அழகை ரசித்துக்கொண்டே, விஷ்வாவின் முகத்தைப் பார்த்தாள்.
அவளது கண்கள் காட்டிய அந்த வியப்பும், அவனது அருகாமையில் அவள் அடைந்த அந்த மகிழ்ச்சியும், இருவருக்குள்ளும் ஏதோ ஒரு புதிய உணர்வு மெல்ல உருவாவதை இருவருக்குமே உணர்த்தத் தொடங்கியது.
ஐஸ்லாந்தின் அந்தப் புகழ்பெற்ற ரிங் ரோடில் இருந்து, அவர்கள் இருவரின் மெய்நிகர் காலடித் தடங்களும் மெல்ல நகர்ந்து, விக் என்ற அழகான சிறிய கடலோரக் கிராமத்திற்குள் நுழைந்தன.
சுற்றிலும் கருப்பு நிற எரிமலை மணல் பரவிய கடற்கரையும், கடலுக்கு நடுவே கம்பீரமாய் நீண்டு நின்ற ரெய்னிஸ்த்ரங்கர் பாறைகளும் அந்த அந்திப் பொழுதில் ஒரு மாயாஜால ஓவியம் போலக் காட்சியளித்தன. தூரத்தில் இருந்த சிறிய தேவாலயத்தின் சிவப்பு நிறக் கூரை, பனி படர்ந்த மலைகளுக்கு நடுவே ரத்தினம் போல் தனியாக மின்னிக் கொண்டிருந்தது.
“விஷ்வா… என்ன ஒரு விசித்திரமான இடம்! கடற்கரை மணல் கூடக் கறுப்பு நிறத்துல இருக்குமா? இதெல்லாம் நிஜம்மாவே இருக்கா, நான் கேள்விப்பட்டது கூட இல்லை இது மாதிரியெல்லாம் இருக்கும்னு. ஆனா, இப்போ நிஜமாவே இந்த இடத்துல நின்னுக்கிட்டு இருக்கேன்!” என்று நிலா தன் கால்களை அந்தக் கடற்கரையின் கறுப்பு மணலில் மெல்லப் பதித்து, ஆச்சரியத்துடன் சுற்றிலும் பார்த்தாள். அங்கு அவ்வளவாக ஜன நடமாட்டமும் இல்லை, கிட்டத்தட்ட அவர்கள் இருவரும் மட்டுமே இருந்தனர்.
“இது விக் கிராமத்தோட பிளாக் சேண்ட் பீச் நிலா. உலகத்துலயே இது ரொம்ப அழகான இடம்,” என்ற விஷ்வாவின் குரல், வழக்கத்தை விடக் கொஞ்சம் ஆழமாகவும், மென்மையாகவும் ஒலித்தது. அந்த ஏகாந்தப் பொழுதில், யாருமில்லா தனிமையில், மனம் கவர்ந்தவளின் அருகாமையில், விஷ்வாவின் உணர்ச்சிகள் காதல் களியாட்டம் ஆடத் தொடங்கியிருந்தன.
அந்திப் பொழுதின் குளிர் காற்று அவளது உடலை நடுங்க வைக்க, நிலா தன் கைகளைத் தழுவிக் கொண்டு லேசாகக் குறுக்கினாள். அதைக் கவனித்த விஷ்வா, சற்றும் யோசிக்காமல் அவளருகே நெருங்கி வந்தான். அவனது அசாத்தியமான உயரமும் கம்பீரமும், அவளுக்கு மிக அருகில் அவன் வந்து நின்றபோது, நிலாவின் இதயம் தாளம் தப்பத் தொடங்கியது.
விஷ்வா மெதுவாகத் தன் கையை நீட்டி, நிலாவின் தோளோடு தன் கையைச் சேர்த்து அணைப்பது போல மிக நெருக்கமாக வந்து நின்றான். அவனது கையின் வெம்மை அவளது தோள்களில் மெல்லப் படர, நிலாவுக்குள் ஒரு புதிய மின்சாரம் பாய்ந்தது. அவள் சட்டென்று தன் முகத்தைத் திருப்பிக் கொண்டு வேறுபக்கம் பார்க்க, ஐஸ்லாந்துப் பனிக்காற்றில் ஏற்கனவே சிவந்திருந்த அவளது கன்னங்கள் இன்னும் அதிகமாகச் சிவந்தன.
“என்ன நிலா… குளிர் அதிகமா இருக்கா?” என்று அவளது காதோரம் குனிந்து, விஷ்வா தன் காந்தக் குரலில் கேட்க… அவனது மூச்சுக்காற்று அவளது கழுத்திலும் தொழிலும் உரசிச் சென்றது.
அந்தப் பரிச்சயமில்லாத நெருக்கமும், இருவருக்குள்ளும் மெல்லப் அரும்பத் தொடங்கியிருந்த அந்த ஈர்ப்பின் தவிப்பும், அங்கிருந்த காற்றில் ஒரு மெல்லிய காமரசத் தழலை ஏற்றி வைத்தது. வேற்று ஆண்மகன் ஒருவனின் இந்த அதீத அருகாமை நிலாவிற்கு ஒரு விசித்திரமான கூச்சத்தையும், அதே சமயம் விலக மனமில்லாத ஒரு ரகசிய ஏக்கத்தையும் தந்தது.
“இ… இல்லை விஷ்வா… குளிர் எல்லாம் ஒன்னும் இல்ல,” என்று நிலா தன் உமிழ்நீரை விழுங்கி, நாணத்துடன் விழிகளைத் தாழ்த்திக் கொண்டாள். அவளது நீண்ட கண் இமைகள் வெட்கத்தில் துடித்ததை விஷ்வாவின் சாக்லேட் நிறக் கண்கள் மிக ஆழமாக ரசித்தன.
ஆனால், அவளது நடுக்கம் மட்டும் குறையவில்லை, அதனால் விஷ்வா தான் அணிந்திருந்த பார்க்காவை (கனமான ஜெர்கின்) கழற்றி அவளது தோள்களின் மீது போர்த்தியதுபோல் அணிவித்தான்.
“இல்லை…வேண்டாம், உங்களுக்குக் குளிரப் போகுது,” என்றாள் மிக மெல்லிய குரலில். கருப்புநிற ஃபுல்ஹேண்ட் டிஷர்ட்டும் ஜீன்சுமாக நின்றவனிடம் அந்தக் கோட்டைக் கழற்றிக் கொடுக்கப் போக,
“வேண்டாம், எனக்குக் குளுரலை, நீ போட்டுக்கோ,” அந்தப் பார்க்காவுடன் அவளது தோள்களை லேசாக அழுத்தினான் விஷ்வா.
அவன் கைகளின் அழுத்தமும், அந்தப் பார்க்காவின் கனமும், அதில் இருந்த விஷ்வாவின் வெதுவெதுப்பும், நிலாவுக்கு ஒருவிதமான பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தியது. அதைத் தன்னைச் சுற்றி நன்றாக இழுத்துக்கொண்டவள், அதற்குள் இருந்த விஷ்வாவின் வெம்மைக்குள் புதைந்துகொண்டாள்.
அந்த வெம்மை அவளுக்கு விஷ்வாவின் அணைப்புக்குள் இருக்கும் உணர்வைத் தந்ததால், இன்னும் நாணம் கொண்டு, அவனை ஏறிட்டும் பார்க்க முடியாமல் தலையைக் குனிந்துகொண்டாள் நிலா. ஆனாலும் அவனைப் பார்க்க வேண்டுமென்ற ஆவலும் மீற, திருட்டுத்தனமாக அவனை ஓரப் பார்வை பார்த்தாள்.
அவளது இந்த எளிய நாணமும், தன்னிடம் அவள் காட்டும் அந்தப் பயம் கலந்த வெட்கமும் விஷ்வாவிற்கு கொள்ளை கொள்ளும் அழகாகத் தெரிந்தது. நிஜ உலகத்தில் எத்தனையோ அழகான பெண்களை, முன்னணி நடிகைகளைக் கண்டும் ரசிக்காத அவனது கண்கள், நிலாவின் இந்த எளிய ஓரப் பார்வையில் மொத்தமாகக் கட்டுண்டு நின்றது.
நிலாவை மெதுவாக நெருங்கி நின்ற விஷ்வா, மெல்லத் தன் விரல்களை நிலாவின் விரல்களுக்குள் நுழைக்க முயன்றான். அவளது மென்மையான விரல் நுனிகளை அவனது கரங்கள் தீண்டிய அந்த விநாடி, நிலா லேசாகக் திடுக்கிட்டுத் தன் கையை இழுத்துக் கொள்ளப் பார்த்தாள். ஆனால், விஷ்வா அவளது கையை விடவில்லை. அவளது சிறிய கையைத் தன் பெரிய உள்ளங்கைக்குள் மென்மையாக, ஆனால் உறுதியாகப் பற்றிக் கொண்டான்.
“தள்ளிப் போகாதே நிலா… கொஞ்ச நேரம் இப்படியே நடக்கலாம்,” என்றான் விஷ்வா, அவளது முகத்தை உற்றுப் பார்த்தபடி.
நிலா அவனது முகத்தைப் பார்த்தாள். அவனது கண்களில் தெரிந்த அந்த அதீத ஏக்கமும், அவள்பால் இருந்த ஈர்ப்பும் நாணம் எழுப்பியிருந்த அத்தனைத் தடுப்புச் சுவர்களையும் உடைத்தது. அவளது இதயம் அவனது விரல்களின் ஸ்பரிசத்தில் மெல்லக் கரைந்தது.
கருப்பு மணல் கடற்கரையில், அலைகளின் மெல்லிய ஓசைக்கு நடுவே, அவர்கள் இருவரும் கைகளைக் கோர்த்தபடி மௌனமாக நடந்தனர். வார்த்தைகள் ஏதுமின்றி, இரு உடல்களின் அருகாமையும், கைகளின் வெம்மையும், அவர்களுக்குள் வளர்ந்து வரும் அந்தத் தீவிரமான காதலை அந்தப் பனி இரவில் ரகசியமாய் எழுதிக் கொண்டிருந்தது!
அந்த மௌனமான, ஆழமான நெகிழ்வுக்குப் பிறகு, மெய்நிகர் சந்திப்பு நிறைவு பெற்று, விஷ்வா தன் கண்கள் திறந்தபோது அவன் தனது ஓட்டல் அறையிலிருந்த சோபாவில் அமர்ந்திருந்தான். அவன் அணிந்திருந்த நியூரல் ஹெட்பேண்டை மெல்லக் கழற்றி பக்கத்தில் இருந்த மேஜை மீது வைத்தான். அவனது விரல்களில் இன்னும் நிலாவின் மென்மையான கரங்களின் ஸ்பரிசமும், அவளது தோள்களில் தான் பார்க்கா கோட்டைப் போர்த்திய போது அவன் உணர்ந்த அவளின் வெதுவெதுப்பும், அவனுடன் அப்படியே தங்கியிருப்பது போன்ற ஒரு பிரமை அவனுக்குள் ஏற்பட்டது.
சோபாவில் அப்படியே சாய்ந்து, கூரையைப் பார்த்தபடி கடந்த இரு நாட்களாக நடந்த அந்த இரண்டு சந்திப்புகளைப் பற்றியும் தீவிரமாக யோசிக்கத் தொடங்கினான்.
“கடந்த இரண்டு நாட்களா நடக்குற சந்திப்புகள் எல்லாமே இதுக்கு முன்னாடி இருந்ததை விட ரொம்ப வித்தியாசமா இருக்கே… அது ஏன்?” என்று அவனது எதார்த்த புத்தி கேள்வி எழுப்பத் தொடங்கியது.
முன்பெல்லாம் அவர்கள் மெய்நிகர் உலகில் சந்திக்கும்போது, அது ஏதோ ஒரு கற்பனையான பூங்காவாகவோ பொதுவான ஒரு இடமாகவோதான் இருக்கும். அப்படிச் சந்திக்கும்போதும் அவர்கள் இருவரும் சளசளவென்று பேசிக்கொள்வார்கள், வாதாடுவார்கள், சண்டை போடுவார்கள். ஆனால், நேற்று அவளது வீட்டு மொட்டை மாடியில் நேர்ந்த சந்திப்பு மிகவும் தனிப்பட்டதாக, நெருக்கமானதாக இருந்தது. இன்றோ ஐஸ்லாந்தில் அவனுக்கு மிகவும் பிடித்த விக் கிராமத்துக் கடற்கரை அசாத்தியமான எதார்த்தத்தோடு வடிவமைக்கப்பட்டிருந்தது.
வளவளவென்ற பேச்சில்லை, தேவையில்லாத வாக்குவாதங்கள் இல்லை, ஆனால் மெதுவாக வளரத் தொடங்கியிருந்த ஆத்மார்த்தமான உணர்வுகள் இருந்தன, அவர்களின் அருகாமை, விளையாட்டுத்தனமாக இல்லாமல் நிஜமாய், நிதர்சனமாய் இருப்பதாகத் தோன்றியது.
அதைவிட முக்கியமாக, இருவருக்குள்ளும் இருந்த அந்தத் தூரமும், இடைவெளியும் இந்த இரண்டு சந்திப்புகளில் அடியோடு குறைந்திருந்தது. அவளது தோள் தொட்டபோது அவளிடம் தென்பட்ட நாணமிகுந்த மௌனமும், அவளது விரல்களைத் தன் விரல்களுடன் கோர்த்துப் பின்னி சிறைபிடித்தபோது அவளுக்குள் ஏற்பட்ட அந்த நடுக்கமும், அவளது கழுத்தோரம் உரசிச் சென்ற தன் மூச்சுக்காற்றின் வெம்மையில் அவள் முகம் சிவந்த காட்சியும்… இவை அனைத்துமே ஒரு வெறும் கணினி நிரல் உருவாக்கித் தரும் காட்சிகள் போல் இல்லை… அவையனைத்துமே உணர்வுகளுக்கு அப்பாற்பட்டவையாக, அப்பட்டமான நிஜமாக அவனுக்குத் தோன்றியது.
“ஒருவேளை… அந்தச் சோல்மேட் செயலியோட அல்காரிதம் நாளுக்கு நாள் என்னோட உணர்வுகளை, என்னோட விருப்பங்களை ரொம்ப ஆழமா படிச்சு அதுக்கு ஏத்த மாதிரி தன்னை அப்டேட் பண்ணிக்குதோ? ஆனா நிலாவோட வீடு, அதைப் பத்தி நான் யோசிக்கவே இல்லையே? அது எப்படி வந்துது?” என்று தனக்குத்தானே கேட்டுக் கொண்டான்.
அவனது மூளை அலைகளையும், இதயத் துடிப்பின் மாறுபாடுகளையும் அந்தச் செயற்கை நுண்ணறிவு துல்லியமாகக் கணித்து, அவன் எதை நோக்கி ஈர்க்கப்படுகிறானோ, அந்த விஷயத்தைச் செயலி இன்னும் கூட்டித் தருகிறது என்று அவன் நினைத்தான். தொழில்நுட்பத்தின் இந்த அசாத்தியமான வளர்ச்சி அவனுக்கு வியப்பைத் தந்தாலும், நிலாவின் அந்த எளிய நாணமும், திருட்டுத்தனமான ஓரப்பார்வையும் அவனது ஆன்மாவை முழுமையாகக் கொள்ளையடித்திருந்தது என்பதே நிஜம்.
அவள் வெறும் தொழில்நுட்பத்தின் அல்காரிதம் தந்த பிம்பமாகவே இருந்தாலும், அவளிடம் தன் இதயம் தோற்றுப் போனதை விஷ்வா உணர்ந்தான். அந்த விக் கிராமத்துக் கருப்பு மணலில் அவளது கையைப் பற்றி நடந்த அந்த நிமிடங்கள், அவனது வாழ்க்கையின் ஆகச்சிறந்த நிஜமாக அவனுள் பதிந்திருந்தது.
இங்கே நிழலுக்கும் நிஜத்துக்கும் இடையிலான தூரம் முழுவதுமாக மங்கி, விஷ்வாவை உணர்ச்சிக் கடலில் மூழ்கடித்துக் கொண்டிருக்க, அங்கே சென்னையில், நிலாவிற்கும் விஷ்வாவிற்கும் இடையில் ஒரு தற்காலிகப் பிரிவை ஏற்படுத்த விதி விளையாடத் தொடங்கியிருந்தது…
error: Content is protected !!