Skip to content
Post Views: 80
கோவிலிற்கு சென்றுவிட்டு வந்து அலுவலகம் திரும்பிய பிறகும் சேரன் செங்குட்டுவனின் மனம் வழக்கம்போல் இயங்கவில்லை.
அது அவனிற்கே சற்று வித்தியாசமாக இருந்தது.
Advertisement
ஏனெனில்,அவன் வாழ்க்கையில் பல விதமான மனிதர்களை கடந்து வந்திருக்கிறான்.
ஆனால் ஒருவரிடமும் இப்படியொரு பிணைப்பு உருவாகியதில்லை.
Advertisement
Advertisement
இன்றோ அனைத்தும் தலைகீழ்…அவன் மனதிற்குள் அந்த குட்டி தேவதை அடிக்கடி கண் முன் வந்து சென்றுக் கொண்டிருந்தாள்.
இரட்டை ஜடை,அஞ்சனம் தீட்டிய குறும்பு விழிகள், துறுதுறுவென பேசிக்கொண்டே இருக்கும் செப்பு இதழ்கள்,மேலும் அவளின் பிரத்யேகமான ‘ஹீரோ அங்கிள்’ என்ற அழைப்பு!
Advertisement
ஒன்றன் பின் ஒன்றாக அனைத்தும் அவனது நினைவடுக்கில் வந்து செல்ல,கோப்பில் கையெழுத்திட்டுக்கொண்டிருந்தனின் கரம் சட்டென நின்றன.
அவனது இதழ்களில் அவனையும் அறியாமல் ஒரு மென் முறுவல்!
இவ்வாறு அவன் செய்யும் ஒவ்வொரு பணியின் போதும் குழந்தையின் ஞாபகம் குறுக்கே வந்துக்கொண்டே இருந்தது.
‘எனக்கு என்னாச்சு?’ என அந்த முரட்டு ஆடவன் தன்னையே கேட்டுக்கொண்டான்.
அதனால் அவளின் நினைவு எழும் நேரம் எல்லாம் தலையை உலுக்கிய சேரன் “பேபி கேர்ள் என்ன என்னவோ பண்ணிட்ட நீ” என முணுமுணுத்தப்படியே மீண்டும் வேலையில் கவனம் செலுத்த முயன்றான்.
அதில் வெற்றி வாகையும் சூடினான்.
இங்கு இவனை போலவே ஸ்ருதியும் தனது ஹீரோ அங்கிளை பற்றி வாய் ஓயாமல் தனது பாட்டி சங்கரியிடம் பேசிக்கொண்டிருந்தாள்.
“பாட்டி ஹீரோ அங்கிள் எவ்வளவு ஹைத்து தெரியுமா?நானும் பெருசாகி அவது மாதியே ஹைத்தாகுவேன்…” என பிரம்மிப்புடன் விழி விரித்து பேசிய பேத்தியின் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியை கண்களில் பூரிப்புடன் பார்த்திருந்தார் சங்கரி.
பிறந்ததிலிருந்து அந்த குழந்தையாய் பார்க்கிறார் அவர்.
அவளை பெற்றெடுத்த தகப்பனை பற்றி கூட,அவள் இவ்வாறெல்லாம் சிலாகித்து பேசியது இல்லை.
ஆனால் இன்றோ புதிதாக சந்தித்த…அதுவும் ஒரே ஒரு முறை மட்டுமே கண்ட மனிதனைப் பற்றி ஓயாமல் பேசிய பேத்தியை அவர் வித்தியாசமாகப் பார்த்திருந்தார்.
சில பந்தங்கள் எங்கு,எப்படி,எவ்வாறு எதனால் உருவாகிறது என்று யாவருக்கும் தெரியாது?
பார்த்த முதல் பார்வையிலே காதல் மட்டுமல்ல…பல புதிய உறவுகளுக்கான தொடக்கமும் உருவாகலாம்.
அதுப்போல் தான் சேரனுக்கும் ஸ்ருதிக்குமான பிணைப்பு!
கடவுளின் சன்னதியில் விதியால் போடப்பட்ட அழுத்தமான முடிச்சு அவர்களுக்கிடையானது!
இரவு வீட்டிற்கு வந்த மருமகளிடம் “தேவி யாரும்மா அந்த ஹீரோ அங்கிள்?பாப்பா இன்னைக்கு பூராவும் அவரை பத்தியே பேசிட்டிருந்தாள்” என சங்கரி ஆவலாக கேட்க,அவரிடம் ‘என்ன’ பதில் கூறுவது என்று தெரியாமல் ஒரு கணம் தடுமாறினாள்.
பின்பு தன்னை சமாளித்து அவள் அன்று காலையில் கோவிலில் நடந்த சம்பவத்தைப் பற்றி விவரிக்க,அனைத்தையும் கேட்டதும் அவருக்கு சப்பென்றானது.
“ஓ..” என பெருத்த ஏமாற்றத்துடன் முகத்தைச் சுருக்கிக்கொண்டார் சங்கரி.
மருமகளின் வாழ்வில் புதிதாக ஒரு வெளிச்சம் கிடைத்து,அவளின் வாழ்வு மலர்ந்துவிடக் கூடாதா என தவித்துக்கொண்டிருக்கும் ஜீவன் அவர்.
அவரிடத்தில் வேறொரு மாமியாராக இருந்திருந்தால் அவளை காலம் முழுவதும் தன் காலடியில் அடிமைப்படுத்தி வைத்திருக்க வேண்டும் என்று ஆணவத்துடன் எண்ணியிருப்பார்.
சங்கரியோ மற்றவரிடமிருந்து முற்றிலும் வேறுப்பட்டவர்.
ஆனந்தன் அவர் பெற்றெடுத்த மகனாகினும் அவனது தீயப்பழக்கங்களை பற்றி நன்கு அறிவார்.
இருப்பினும்,இருவருக்கும் திருமணம் பேசி முடித்து வைத்தது சங்கரி தான்!
வழமையான பெற்றோர்கள் போல் திருமணம் செய்து வைத்தால் அனைத்தும் சரியாகிவிடும் என்று மற்ற சராசரி அன்னையைப் போலவே சங்கரியும் எண்ணினார்.
ஆனால் அவரின் மகன் திருமணத்திற்கு பின்பும் மாறாமல் தினந்தோறும் தேவியை கொடுமை செய்வதைக் கண்டு அவர் துடித்துப்போனார்.
‘தன்னால் தான் இந்த பெண்ணிற்கு இந்த நிலைமையோ?’ என அவர் கண்ணீர் சிந்தாத நாளில்லை.
அவரே சில நேரங்களில் “தேவி உனக்கு இந்த வாழ்க்கை பிடிக்கலைனா?விவாகரத்து பண்ணிடும்மா…நானே உனக்கு வேற வாழ்க்கை அமைச்சு கொடுக்கிறேன்” என்றெல்லாம் கூறியிருக்கிறார்.
அவர் கூறியதை கேட்டு அதிர்ந்த தேவியோ “அத்தை அவர் உங்க பையன்” என்று சொல்ல,
“இருந்திட்டு போகட்டும்மா…கண்ணு முன்னாடி ஒரு பொண்ணு கஷ்டப்படும் போது எப்படிம்மா அதை பார்த்திட்டு சும்மா இருக்க முடியும்?அப்படி அமைதியா இருந்தால் நான் மனுஷியே இல்லையேம்மா” என இயலாமை கலந்த வருத்தத்துடன் அவர் உரைத்தார்.
தனக்காக அவர் சிந்தித்துப் பேசிய விதம் பாவையவளின் நெஞ்சத்தை உருக்கிட “அத்தை உங்களுக்கு தெரியாதது இல்லை…அவரு போதையிலே இருக்கும் போது தான் அப்படி நடந்துப்பாரு…மத்த நேரத்திலே என்னை ராணி மாதிரி தானே வைச்சு பார்த்துக்கிறாரு…எனக்கு அது போதும் அத்தை” என தீர்மானமாக கூறிவிட்டாள்.
அவர் எதிர்பார்த்த பதிலும் அது தான்.ஆயிரம் இருந்தாலும் ஆனந்தன் அவர் பெற்றெடுத்த மகனாகிற்றே?
அதனால் ஓரளவு அதில் மகிழ்ச்சியுற்றாலும் நாள்தோறும் அவள் படும் துன்பத்தை கண்டு அவரின் இதயத்தில் உதிரம் கொட்டியது.
அவரது மகனிடமும் “ஆனந்தா குடிச்சிட்டு வந்தால் நீ நீயா இருக்கிறதே இல்லை…கொஞ்சம் அந்த கெட்டப்பழக்கத்தை விட்டு தேவி கூட சந்தோஷமா தான் வாழேன்” என இறைஞ்சு கேட்டிருந்தார்.
தாய் உருகிக் கேட்டதை கண்டு மனமிறங்கிய ஆடவன் “சரிம்மா” என தெளிந்த மனதுடன் காலையில் கூறிவிட்டு செல்பவன்,மாலை வீட்டிற்கு வரும் போது மது அருந்திவிட்டே வருவான்.
அவன் ஒரு ஆட்டோ ஓட்டுனர்…
பகலெல்லாம் கடுமையாக உழைப்பான்.மாலை ஆறு மணியை தொட்டு விட்டால் அவனது நரம்புகள் தளர்ந்து கைகால் எல்லாம் நடுங்க ஆரம்பித்துவிடும்.
தவறான சகவாசத்தால் கற்றுக்கொண்ட பழக்கம் அது!
அவனே அதிலிருந்து விடுப்பட நினைத்தாலும் அவனால் அது முடியவில்லை.
தீராத மதுப்போதைக்கு அடிமையாகி இருந்தவனால் அவ்வளவு எளிதில் அதிலிருந்து விடுப்பட முடியுமா என்ன?
அதிலும்,சமீபக்காலமாக போதை மருந்துக்கும் அடிமையாக தொடங்கியிருந்தான்.
அவை இன்னும் அதிகமாக அவனை பலவீனப்படுத்திக் கொண்டிருந்தன.
அவனிற்கு உரிய சிகிச்சை அளித்தால் ஒழிய,அதிலிருந்து அவனை நிரந்தரமாக மீட்க முடியாது என்று அறியாத அன்னையவளால் கதறியழுவதை தவிர வேறு எதுவும் செய்ய முடியவில்லை.
தேவியும் வெறும் சிறு வயது பாவை என்பதால்,அவளிற்கும் இதைப்பற்றிய விவரமில்லை.
அதேநேரம் தேவியின் மீது அளவிடமுடியாத காதலை வைத்திருந்தான் ஆனந்தன்.
பகல் பொழுதில் ‘தேவி…தேவி’ என்று உருகுபவன்,இரவில் அவளை உடலளவிலும் மனதளவிலும் துன்புறுத்தி வெறித்தனமாக தனது நேசத்தைச் செயலில் காட்டுவான்.
அவனை பொறுத்தவரை அது நேசமாக இருக்கலாம்.ஆனால் அவளிற்கோ அதுவொரு சாபம்!
அந்த சாபத்திற்கு என்றுமே விமோச்சனம் கிடையாது என்று அவள் அறிவாள்.
அதனால் அவனுடனான வாழ்வு சாபம் என்று தெரிந்தும் அந்த நரகத்தில் வாழ பழகியிருந்தாள்.
அவளிற்கு சாப விமோசனமாக வந்தவள் தான் ‘ஸ்ருதி’.
மகளின் வருகை மட்டுமே அவளது வாழ்வில் நடந்தேறிய சுபமான ஒரு நிகழ்வு!
கணவனால் அனுபவித்த வேதனைகள் அனைத்தையும் நீக்கி அவளின் வாழ்வில் வண்ணங்கள் சேர்த்தது,அந்த மழலையின் சிரிப்பு.
தனது குழந்தைக்காக அவ்வப்போது சிரிக்க கற்றுக்கொண்டாள்.
ஆனால் ஆனந்தனின் கொடுமைகள் நாளுக்கு நாள் தொடர்ந்துக் கொண்டே இருந்தது.
அவன் கொடுக்கும் தண்டனைகளை அவள் மனமாற வாங்கிக்கொண்டாலும்,அவனது நிழல் கூட குழந்தையைப் பாதிக்காத வண்ணம் போற்றி பாதுகாத்தாள்,அந்த இளம் அன்னை.
ஒரு கட்டத்தில் இதையெல்லாம் பொறுத்துப் பார்த்திருந்த சங்கரியே ‘கடவுளே இந்த புள்ளைக்கு ஒரு நல்ல விடிவுக்காலத்தை கொடுப்பா…என்னாலே இதையெல்லாம் கண்கொண்டு பார்க்க முடியலை’ என மனமுடைந்து கடவுளின் பாதம் சரணடைந்திருந்தார்.
அவரின் வேண்டுதலுக்கு இணங்கியோ அல்லது தேவியின் துன்பங்களை அறிந்தோ ஆனந்தனின் உயிரை பறித்துக்கொண்டு சென்றிருந்தார்.
அதில் முழுதாய் உடைந்துப்போனது என்னவோ கோப்பெருந்தேவி தான்!
அதற்காக அவனை அந்த அளவு நேசிக்கிறாளா என்று கேட்டால்,இல்லை.
ஆனால் அவளிற்கென்று அது நாள் வரை கணவன் என்ற பாதுகாப்பு வளையம் இருந்தது.
இன்று அந்த வளையம் முழுதாய் உடைந்து நொறுங்கிப்போனதும் அவளால் ஏற்க முடியவில்லை.
இனி தன் குழந்தையின் எதிர்காலம் என்னவாகும் என நினைக்கும் போதே அவளின் நெஞ்சம் அடைத்தது.
சங்கரிக்கு மகனின் இழப்பு அதீத வருத்தத்தைக் கொடுத்தாலும் ‘இனியாவது அவள் நல்லப்படியா வாழட்டும்’ என ஆறுதலாக எண்ணிக்கொண்டார்.
அன்றிலிருந்து இன்று வரை அவளை இரண்டாவதாக திருமணம் செய்துக்கொள்ள வலியுறுத்திக்கொண்டு இருக்கிறார்.
ஆனால் அவளோ “இல்லை அத்தை…இனி என் வாழ்க்கையிலே கல்யாணம் என்ற பேச்சுக்கே இடமில்லை… நான் என் பொண்ணுக்காக மட்டுமே வாழப்போறேன்…அவளோட எதிர்காலம் தான் என்னோட வாழ்க்கையே” என அழுத்தமாக கூறி மறுத்துவிட்டிருந்தாள்.
அவரோ விடாமல் அவளின் முடிவை மாற்றப்போராடிட,அவள் அவருக்கு எவ்வகையிலும் இளகவே இல்லை.
‘பார்க்க தான் மென்மையான பொண்ணா இருக்காள்…ரொம்ப அழுத்தமா இருக்காளே’ என சங்கரி உள்ளுக்குள் நொந்துப்போனார்.
இன்று பேத்தி புதிதாக ஒரு ஆடவனை பற்றி பேசியதும் தன் மருமகளின் வாழ்வு மலர்ந்து விடுமோ என்ற ஆர்வத்தில் அவளிடம் பேச,
அவர்களின் சந்திப்பை அவள் விளக்கியதும் அவரின் மனம் ஏமாற்றத்தில் சுருண்டுப்போனது.
“எப்போ தான் உனக்கொரு விடிவுக்காலம் வருமோ” என பெருமூச்சுடன் சொல்லிக்கொண்டே அவர் அங்கிருந்து நகர,தேவியோ அதை பற்றியெல்லாம் கவலைக்கொள்ளவில்லை.
தனது மகளை காண தங்கள் அறைக்குள் சென்றுவிட்டாள்.
தேவி அறைக்கு செல்லும் நேரம் ஸ்ருதி ஆழ்ந்து உறங்கியிருந்தாள்.
தரையில் போடப்பட்டிருந்த மெத்தையில் உடலை குறுக்கி கன்னத்தில் கைவைத்து படுத்திருந்தாள் குழந்தை.
மகள் உறங்கும் அழகை கண்ணாற ரசித்த அன்னையவள் “ஹேப்பி பர்த்டே அம்மு” என மென் குரலில் கூறியப்படி அவளருகே மண்டியிட்டு அமர்ந்து குனிந்து அவளின் நெற்றியில் முத்தமிட்டாள்.
ஸ்ருதி இலேசாக அசைந்ததும் அவளின் நெற்றியில் புரண்ட முடியை ஒதுக்கிவிட்டு ஒரு சிறு புன்னகையுடன் அவளிற்காக வாங்கி வந்திருந்த மகிழுந்து பொம்மையை அவளருகே வைத்தாள்.
மீண்டும் மகளை நோக்கி திரும்பிய தேவி “அம்மா நீ கேட்ட மாதிரி பொம்மை வாங்கிக்கொடுத்திட்டேன் அம்மு…இதே மாதிரி நீ என்ன கேட்டாலும் அம்மா செய்வேன்டா…உன்னை எதுக்காகவும் ஏங்கவிடமாட்டேன்” என கரகரத்தது குரலில் கண்ணோரம் கசிந்த நீருடன் அவள் சூளுரைத்தாள்.
தகப்பன் இருந்த சமயமும் அவள் மட்டுமே அன்னையாகவும் தந்தையாகவும் அவளின் கடமையை செய்தாள்.
இப்போதும் குழந்தைக்கு தந்தையின் நினைவு வரக்கூடாது என்றெண்ணி அனைத்தையும் பார்த்து பார்த்து செய்தாள்.
அது அவளின் சக்திக்கு மீறியதாக இருந்தாலும்,மகளது மகிழ்ச்சியே தன் மகிழ்ச்சி என பிரதானமாக எண்ணி,அதற்காக போராடினாள் தேவி.
இரவு பத்து மணி,
சேரன் அன்று உறங்காமல் வெகு தீவிரமாக ஒரு வழக்கின் கோப்பை படித்துக்கொண்டிருந்தான்.
ஒரு பிரபலமான திரைப்பட நாயகனின் மனைவி விவாகரத்து வேண்டி அவனை நாடி வந்திருந்தாள்.
அந்த கோப்பை முழுதாய் படித்து முடித்தவனிற்கு ஒரு விடயம் நன்கு புரிந்துப்போனது.
இந்த வழக்கில் அந்த திரைப்பட நாயகனின் மீது எத்தகைய தவறும் இல்லை.
அவனது மனைவி தான் பணத்தாசை பிடித்த பெண்ணாக இருக்கிறாள் என்றும்,அவனது பாதிச் சொத்தை அபகரிக்க வேண்டியே விவாகரத்து கேட்டு வந்திருக்கிறாள் என்றும் அறிந்துக்கொண்டான்.
ஏனெனில்,அவள் வைத்திருந்த கெடுப்பிடி அப்படியானது!
விவாகரத்தை முதலில் பதிவு செய்தது என்னவோ அந்த நாயகன் தான்!
ஆனால் அவனை அந்த முடிவிற்கு தள்ளி அதன் மூலம் ஆதாயம் அடைய எண்ணியவள்,இப்போது இந்த சூழ்நிலையை பயன்படுத்த அவனை நாடியிருக்கிறாள்.
“சார் நீங்க என்ன செய்வீங்களோ எனக்கு தெரியாது…எப்படியாவது அந்த சொத்திலே பாதி எனக்கு வந்தாகணும்…அதுவும் இல்லாமல் மாச செலவுக்கு ஒரு ஐந்து லட்சம் வாங்கிக்கொடுத்திடுங்க…இதெல்லாம் ஒரு மாசத்துக்குள்ள முடிஞ்சா நல்லாயிருக்கும்…பிகாஸ் நெக்ஸ்ட் வீக் என் லவ்வரோட கனடா போறேன்” என திமிராக கால் மேல் போட்டு பேசியிருந்தாள்,அந்த பெண்.
‘ஆசை இருக்கலாம்…ஆனால் இவ்வளவு பேராசை இருக்கக்கூடாது இந்த பொண்ணுக்கு’ என பெருமூச்சுடன் அவளை ஏறிட்டான் சேரன்.
அவள் வைத்த கோரிக்கையில் ஒன்றை கூட ஒரு வழக்கறிஞன் அவனாலே ஏற்க முடியவில்லை.ஆனால் அவளோ அதைப்பற்றி எல்லாம் கவலைப்படவில்லை.
அவள் நினைத்ததை சாதித்து தீர வேண்டும் என்ற வெறியோடு இருந்தாள்.
ஏனெனில்,அவள் அத்துடன் மட்டும் தனது பேச்சை நிறுத்தவில்லை.
மேலும்,அவள் பேசிய பேச்சில் ஆடவனான அவனே முகத்தை சுழித்தான்.
“சார் அவன் டிவோர்ஸ் தரலைனு சீன் ஏதாவது போட்டால் என்கிட்ட சொல்லுங்க…அவனோட நியூடு வீடியோ ஒண்ணு என்கிட்ட இருக்கு…அதுவும் அச்.டி குவாலிட்டி…பார்க்க படுக்கவர்ச்சியா இருக்கும்….பிளாக் மார்க்கெட்டிலே விட்டால் அதுவே பல கோடி தேறும்…டாப் ஸ்டாரில்லை” என கண்சிமிட்டி கொஞ்சமும் வெட்கமின்றி சொல்ல,
அதைக்கேட்ட சேரனோ ‘ச்சை இவளாம் ஒரு பொண்ணா?’ என மனதிற்குள் அவளை எண்ணி அருவருத்துப்போனான்.
ஆயினும்,ஒரு வழக்கறிஞராக அவளின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டிய கடமை அவனிற்கு இருப்பதால் அந்த வழக்கைப் பற்றி வெகு தீவிரமாக ஆராய்ந்தான்.
அவனிற்கு இது ஒன்றும் புதிதல்ல…இதுப்போல் பல வித்தியாசமான வழக்குகளையும் விசித்திரமான நபர்களையும் சந்தித்திருக்கிறான்.
ஆதலால்,அவளின் நடத்தை பேச்சு எல்லாம் அவனிற்கு சர்வ சாதாரணம்!
அதனால் கண்களில் கண்ணாடி அணிந்து குளம்பியைப் பருகியப்படி அந்த வழக்கிற்கான குறிப்பு எடுத்துக்கொண்டிருக்க,அந்நேரம் அவனது அலைப்பேசி அதிர்ந்தது.
விழி உயர்த்தி அலைப்பேசியை அவன் ஏறிட,அதில் ‘காவ்யா’ என்ற பெயர் ஒளிர்ந்தது.
அந்த பெயரை கண்டதும் அவனது இமைகள் இடுங்கின.
கையிலிருந்த குவளையை கீழே வைத்துவிட்டு அழைப்பை ஏற்று காதில் வைத்தான்.
அவள் இரவு வேளையில் அழைப்பது என்பதெல்லாம் அபூர்வம்.
முக்கியமான பணி என்பதால் மட்டுமே அழைத்திருக்கிறாள் என்றெண்ணி “சொல்லு காவ்யா?என்ன இந்த நேரத்திலே கூப்பிட்டிருக்கே?” என்று அழுத்தமாக வினவினான்.
“சாரி சார் உங்களை டிஸ்ட்ர்ப் பண்ணனும்னு நினைக்கலை…ஆனால் முக்கியமான விஷயம் அது தான்” என தயங்கியப்படி கூறினாள்.
அவனோ மெதுவாக இருக்கையில் சாய்ந்து அமர்ந்தப்படி “ஓகே ஃபைன் சொல்லு” என அவள் பேச அனுமதி வழங்கினான்.
“சார் அந்த டாப் ஸ்டாரோட கேஸை எடுத்து நடத்தப்போறது நம்ப சீனியர் லாயர் சூர்ய குமார் சார்” என அவள் அறிவித்த அடுத்த கணமே சேரனின் ஒற்றை புருவம் மேலேறி கீழிறங்கியது.
“இன்ட்ரெஸ்டிங்” என அவன் அதரங்கள் மெல்லியதாக முணுமுணுத்திட,
‘ஏதே இன்ட்ரெஸ்டிங்கா?டேய் நான் இங்க பீதியிலே கிடக்கிறேன்…உனக்கு இன்ட்ரெஸ்டிங்கா?’ என அவனை உள்ளுக்குள் திட்டியவள் “சார் உங்களுக்கு பயமா இல்லையா?” என கவலையாக அவள் வினவ,
“எதுக்கு பயம்?” என பதில் கேள்வி எழுப்பியவனின் விழிகள் இடுங்கிப்போயின.
எதிர்ப்புறம் இருந்தவளோ “சார் என்ன இப்படி சொல்லறீங்க?அவர் உங்களோட குரு…அதுவுமில்லாமல் சீனியர் லாயர்…அவர் இந்த கேஸை எடுத்தால் நிச்சயமா நாம்ப தோத்திடுவோம்…அதுவுமில்லாமல் நம்ப சைடு வேற கொஞ்சம் வீக்கா இருக்கு” என படபடவென தனது பயத்தை கொட்டித் தீர்த்தாள்.
அதில் கோபம் கொண்ட சேரன் “காவ்யா இத்தனை வருஷமா எனக்கு அசிஸ்டென்ட்டா இருந்திருக்கே…நீ என்னை பத்தி இவ்வளவு மட்டமாவா நினைச்சிட்டு இருக்கே?” என அடிக்குரலில் சீற,காவ்யா மிரண்டுப்போனாள்.
“இல்லை சார்…அது வந்து…” என அவள் பயத்தில் தடுமாற,
“நீ எதுவும் பேச வேண்டாம்…உனக்கு அவ்வளவு பயமா இருந்தால் வேலைய விட்டு போயிடு…என் மேலே நம்பிக்கையில்லாத யாரும் என் கூட இருக்கணும்னு அவசியமில்லை” என கண்டிப்புடன் கூறி அழைப்பை துண்டித்தவனின் முகம் இறுகிப்போயிருந்தது.
அவள் தன்னுடைய வேலையின் மீது சந்தேகம் கொண்டதை ஆடவனால் ஏற்க முடியவில்லை.
அவளின் மேல் அப்படியொரு சீற்றம் அவனிற்கு!
இங்கு காவ்யாவோ ‘போச்சு போ’ என தலையில் கைவைத்து அமர்ந்துவிட்டாள்.
‘அடியே காவ்யா அந்த ஆளுக்கிட்ட இப்படி வாங்கி கட்டவா இந்த நேரத்துக்கு ஃபோன் பண்ணி தொலைச்சே…நாளைக்கு அவரு மூஞ்சியிலே எப்படி முழிப்பேன்?’ என புலம்பிக் கொண்டே இரவெல்லாம் உறங்காமல் காலையில் விடிந்ததும் விரைவாக அலுவலகம் புறப்பட்டு சென்றாள்.
error: Content is protected !!