ஊனாகி உயிராகினாய் பெண்ணே – 45
அத்தியாயம் – 45
நாட்கள் மெல்ல நகர்ந்து மாதங்களாய் கனிந்தன, மிருதுளாவின் வாழ்வில் சிரிப்பும் சந்தோஷமும் முழுமையாகத் திரும்பிடாமல், ரன்வீர் இல்லாத ஒவ்வொரு நொடியும் அவளுக்கு ஒரு யுகமாகவே கழிந்தது, அவன் அருகில் இல்லாத அந்த வெற்றிடம் அவளை ஒவ்வொரு நொடியும் வாட்டி வதைத்துக் கொண்டே இருந்தது, இருப்பினும், அந்த வீட்டில் இருந்த மற்றவர்களின் அன்பு அவளைத் தாங்கிப் பிடித்தது,..
ஒரு தாயைப் போல அவளுக்கு என்ன பிடிக்கும் என்று பார்த்துப் பார்த்துச் சமைத்துப் போட்டார் காயத்ரி, அவ்வப்போது அவர் ரன்வீரைப் பற்றிப் பேசும் கதைகள் மிருதுளாவிற்கு ஒரு நம்பிக்கையைத் தந்தன.
Advertisement
மிருதுளா சோகமாக அமர்ந்திருக்கும் போதெல்லாம், வினோத்தும் சம்யுக்தாவும் அவளை சும்மா விடமாட்டார்கள், அவளை வம்படியாக இழுத்து வந்து பேச வைப்பதும், விளையாடுவதும் என அவளைத் தனிமையில் வாட விடாமல் பார்த்துக் கொண்டனர்.
சுமதியும் சமுத்திரவேலும் அவளுக்கு இன்னொரு தாய் தந்தையாகவே மாறி இருந்தனர்,..
அதே சமயம், கணவன் சுந்தரமும் மகன் விஷ்வாவும் சிறைக்குச் சென்ற பிறகு, தனித்துப் போன சரஸ்வதிக்கு செல்வதற்கு வேறு இடமும் இல்லை, ஒட்டிக்கொள்ள உறவுகளும் இல்லை. அந்தத் தனிமை அவருக்கு பல பாடங்களைக் கற்பித்திருக்க, அவ்வப்போது அவர் மிருதுளாவின் வீட்டிற்கு தான் வருவார். ஆனால், முன்பு பயந்து நடுங்குவது போல் இல்லாமல் அவருக்குள் ஒரு புதிய துணிச்சல் பிறந்திருந்தது…
Advertisement
இத்தனை அன்பிற்கு நடுவே, மிருதுளாவின் அடிவயிறு இப்போது மேடுபடத் தொடங்கியிருந்தது, ஒருநாள் தன் குழந்தையின் முதல் அசைவை அவள் உணர்ந்த தருணம், மகிழ்ச்சிக்கு பதில் பெரும் வலியையே தந்தது. ‘தன்னவன் இதனை அனுபவிக்க அருகில் இல்லாமல் போய்விட்டானே’ என்று எண்ணி விம்மி அழுதவளுக்கு இதற்கு தான் மட்டுமே காரணம் என்பதும் அவளை இன்னும் ஆழமாகச் சுட்டெரித்தது…
Advertisement
நாட்கள் இவ்வாறு கடக்க அன்று காயத்ரி, சமுத்திரவேல் மற்றும் சுமதி ஆகியோர் அமர்ந்து ரன்வீரைப் பற்றி தான் பேசிக்கொண்டிருந்தனர்…
”ரன்வீர் கிட்ட பேசுனீங்களா அண்ணி? இந்த பையன் ஏன் இப்படி பண்ணுறான்? ஆனாலும் இவ்வளவு ரோஷம் ஆகாது,” சமுத்திரவேல் ஆதங்கத்துடன் சொல்ல,.. ”சொல்லி சொல்லி சோர்ந்து போயிட்டேன் தம்பி, அவன் நம்மகிட்ட பேசுறான், ஆனா மிருதுளாவை பத்திப் பேச்சு எடுத்தாலே போனை கட் பண்ணிடுறான்,” என்று வருத்தத்துடன் சொன்னார் காயத்ரி.
”என்கிட்டயும் இதையே தான் பண்ணுறான் அண்ணி, வாய்ஸ் மெசேஜ் அனுப்பினா கூட பார்க்கிறது இல்ல, பாவம் நம்ம வீட்டு மருமக, என்ன தான் தப்பு பண்ணி இருந்தாலும், மன்னிக்கிற மனசும் இருக்கணும்ல… ரன்வீர் கிட்ட இருந்து இதை நான் எதிர்பார்க்கல,” என்று சமுத்திரவேல் தன் வருத்தத்தைக் கொட்டிட, அந்த கணம் சுமதி குறுக்கிட்டு, “பேசாம நீங்களும் அக்காவும் நேரடியா லண்டனுக்கே போய் பேசி கூப்பிட்டு வாங்களேன், அந்தப் பொண்ணு முகத்தை பார்க்கவே கஷ்டமா இருக்கு” என்றார் கவலையுடன்.
Advertisement
“நானும் அதான் நினைச்சேன் சுமதி ஆனா மிருதுளா வேண்டாம்னு சொல்றா. ‘அவர் கோபம் குறைந்து எப்போ வரணும்னு தோணுதோ, அப்போ வரட்டும் அத்த, கட்டாயப்படுத்தி அவரை இங்க வர வைக்க வேண்டாம், அவரைத் தொந்தரவு பண்ணாதீங்க’ன்னு சொல்றா,” என்று சொல்ல, மற்றவர்களுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
அவளது அந்தப் பக்குவமும், தண்டனையை ஏற்றுக்கொள்ள நினைத்த அந்த மௌனமும் அவர்களை இன்னும் வேதனைப்படுத்தியது…
மருத்துவர் இப்போது அவளை கொஞ்சமாக நடைப்பயிற்சி செய்யச் சொல்லி இருந்தமையால் அத்தனை மாதங்களாக வீட்டிலேயே அடைந்து கிடந்த மிருதுளா, அன்று வினோத் மற்றும் சம்யுக்தாவுடன் அருகிலிருந்த கடற்கரைக்குச் சென்றாள்…
பதினைந்து நிமிடத்திலேயே சென்றுவிடலாம் என்பதால், பெரியவர்கள் துணைக்கு வருகிறோம் என்று சொன்னபோது அவர்களை வர வேண்டாம் என்று மறுத்துவிட்டு, வினோத்தும் சம்யுக்தாவும் மட்டுமே அவளை அழைத்து வந்தனர்…
கடற்கரையின் ஈரமான மணலில் மெதுவாகக் கால் பதித்து நடக்கத் தொடங்கினாள் மிருதுளா, கடலில் இருந்து வீசிய அந்த உப்புக்காற்று முகத்தில் மோதியபோது, அவளுக்கு ஒருவித இதத்தைத் தந்தது. வினோத் வலது பக்கமும், சம்யுக்தா இடது பக்கமுமாக அவளோடு நடந்தபடி அவளது கவனத்தைத் திசைதிருப்ப பல கதைகளைப் பேசிக்கொண்டே வந்தனர்…
அவர்கள் பேசுவதை கேட்டுக் கொண்டு வந்த மிருதுளாவின் பார்வையோ தற்செயலாகச் சற்றுத் தள்ளி நடந்து கொண்டிருந்த ஒரு ஜோடியின் மீது நிலைத்தது. அவளைப் போலவே கர்ப்பிணியாக இருந்த ஒரு பெண், தன் கணவனின் கையைப் பற்றிக் கொண்டு, மிக நிதானமாக நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்தாள். அந்தப் பெண்ணின் கணவன், ஒவ்வொரு அடியையும் பார்த்துப் பார்த்து எடுத்து வைக்கச் சொல்லி அவளிடம் ஏதோ பேசிச் சிரித்துக் கொண்டிருந்தான்…
அந்தக் காட்சியைக் கண்டதும் மிருதுளாவின் இதயம் பிழிந்தது, அவளையும் மீறிய ஏக்கம் கண்களில் கண்ணீராய்த் திரண்டது…
‘இந்தத் தருணத்துல என் கையைப் பிடித்து நடக்க வேண்டியவர் எங்கேயோ இருக்கிறாரே’ என்ற நினைப்பே அவள் இதயத்தை கனக்கச் செய்தது…
அந்தப் பெண்ணின் கணவன், அவள் நடக்கத் சிரமப்படுவதைக் கண்டு மெல்ல அவள் இடையைச் சுற்றிக் கைபோட்டுத் தாங்கிய அந்த நொடி, மிருதுளாவிற்க்கு ரன்வீரின் நினைவு தான் சுளீரென வந்து போனது, திருமணம் நடக்கும் முன்பு அவர்கள் சந்தித்து கொண்ட ஒருமுறை இதே போல் ஒரு கடற்கரையில் அவளைத் தூக்கிக் கொண்டு அவன் ஓடிய நினைவுகள் அவள் நெஞ்சில் அலைகளாய் மோதின…
”அண்ணி… என்னாச்சு?” அவளது கண்கள் கலங்கி இருப்பதை கண்டு சம்யுக்தா பதற்றத்துடன் கேட்க, சட்டென்று தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்ட மிருதுளா.
”இல்ல சம்யு… ஒன்னுமில்லை. கடற்கரை காற்று கொஞ்சம் கண்ணுல பட்டுருச்சு,” என்று பொய் சொன்னாள். ஆனால், அவள் எதைப் பார்த்து ஏங்குகிறாள் என்பது வினோத்திற்கும் சம்யுவிற்கும் புரியாமல் இல்லை, அவர்களுக்கும் மனது கஷ்டமாகத்தான் இருந்தது. ஆனால் அவர்களாலும் என்ன செய்திட முடியும்? அண்ணனுக்குத் தினமும் மெசேஜ் அனுப்பி அனுப்பி சலித்தே போய்விட்டார்கள்..
சரியாக அந்த நேரம், “ஹாய்!” எனும் குரல் கேட்டு அவர்கள் திரும்ப, அங்கே நிதின் தான் வந்து கொண்டிருந்தான்.
”ஹாய் மாமா! என்ன, அக்கா தான் உங்களை இங்கே வர சொன்னாளா?” என்று சரியாகக் கணித்துக் கேட்டான் வினோத். சம்யுக்தாவின் படிப்பு சமீபத்தில்தான் முடிந்திருக்க, நிதின் மற்றும் சம்யுக்தாவின் காதல் விவகாரத்தைப் பற்றி ரன்வீர் போனில் சொல்லியிருந்தான். குடும்பத்தினருக்கும் அதில் மறுப்பு இல்லாததால், அவர்களின் காதலுக்கு யாரும் தடை போடவில்லை. அதனால் வினோத்தும் இப்போது நிதினை உரிமையுடன் மாமா என்றே அழைக்க ஆரம்பித்திருந்தான்.
”ஆமா, நான் தான் வர சொன்னேன், அதுக்கு என்னடா இப்போ உனக்கு?” என்று சம்யுக்தா அவன் தலையில் செல்லமாகக் கொட்டிட,.. ”ஷ்ஷ்… மாமா, பார்த்தீங்களா? உங்க முன்னாடியே அக்கா என்னை எப்படிக் கொட்டுதுன்னு!” என்று அவன் சிணுங்க, நிதினோ, “விடு வினோ… பொம்பளைப் பிள்ளை, பண்ணிட்டுப் போகுது,” என்று ஜாலியாகச் சொன்னான்…
”ம்ம்… ஆனாலும் நீங்க அக்காவுக்கு இப்படி கூஜா தூக்கக் கூடாது மாமா!” என்று வினோத் சொல்ல, நிதின் வாய்விட்டுச் சிரித்தான்.
இவர்கள் மூவரும் கலகலப்பாகப் பேசிக் கொண்டிருக்க, மிருதுளா மட்டும் இன்னமும் அந்த ஜோடியையே ஏக்கமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள். அதைக் கண்ட நிதினிற்கு அவளின் தவிப்பு நன்றாகப் புரிந்தது. அவன் சம்யுக்தாவைப் பார்க்க, அவளும் ஜாடையிலேயே அர்த்தத்தைப் புரிந்துகொண்டவள், உடனே தம்பியின் தலையில் மீண்டும் ஒரு கொட்டு வைத்துவிட்டு, “என்னைப்பிடிடா பார்ப்போம்!” என்று கூறி மணலில் ஓட, வினோத்தும் அவளைப் பிடிக்கப் பின் தொடர்ந்து ஓடினான்…
சின்னவர்கள் இருவரும் சற்றுத் தள்ளி நகர்ந்ததும், மெல்ல மிருதுளாவின் அருகில் வந்த நிதின், “எப்படி இருக்க மிருதுளா?” என்று கனிவுடன் வினவிட,..
அவனை நிமிர்ந்து பார்த்து.. “ம்ம்…” என்று ஒரு நீண்ட பெருமூச்சை விட்டவள்.., “அவரைப் பத்தி ஏதாச்சும் சொல்லுங்களேன் அண்ணா,” என்றாள் ஏக்கமாய்.
எப்போதும் அவள் இப்படித்தான், எப்போதெல்லாம் நிதினை அவள் சந்திக்கிறாளோ, அப்போதெல்லாம் ரன்வீரைப் பற்றித் தான் விசாரிப்பாள். ரன்வீரின் குரலைக் கேட்கவோ, அவனிடம் பேசவோ அவளுக்குத் தார்மீக உரிமை இல்லை என்று அவளே ஒரு எல்லையை வகுத்துக் கொண்டதால், நிதின் சொல்லும் தகவல்கள் தான் அவளுக்குப் பிராண வாயுவாக இருந்தது…
”அவனைப் பத்தி என்கிட்ட பேசாதம்மா, நான் அவன் மேல செம கோபத்துல இருக்கேன்” என்று நிதின் கூற, “ஏன் அண்ணா என்னாச்சு?” என்றாள் மிருதுளா பதற்றத்துடன்.
”பின்ன என்ன… அவன் போய் எத்தனை மாசமாச்சு? இன்னும் கோபத்தை இழுத்துப் பிடிச்சிகிட்டு இருக்கான், அவன் இப்படியெல்லாம் இருந்ததே இல்லமா, இப்போ ரொம்ப மாறிட்டான்” என்று நிதின் சொல்ல, “அவர் இப்படி மாறினதே என்னால தானே அண்ணா” என தன் குற்ற உணர்ச்சியை மீண்டும் வெளிப்படுத்தினாள் அவள்..
”சரி அவனை விடு, நீ செக்கப்லாம் போனியா? டாக்டர் என்ன சொன்னாங்க?” என்று அவன் வினவ, “எல்லாம் ஓகே தான் அண்ணா, பட் ட்ராவல் தான் பண்ணக் கூடாதுன்னு ஸ்ட்ரிக்ட்டா சொல்லிட்டு இருக்காங்க” என்றாள்.
”பண்ணலாம்னு சொன்னாலும், நாங்க பண்ண விட மாட்டோம். இந்த மாதிரி சமயத்துல ஓய்வு தான் முக்கியம், நீ குழந்தையைப் பத்தி மட்டும் யோசி, வேற எதையும் யோசிச்சு மனசை வருத்திக்காத” என்று அவன் ஆறுதல் கூறிட…
”முடியலையே அண்ணா, கண்ணை மூடினாலே அவர் முகம் தான் வருது, ரொம்ப கில்டியா இருக்கு” என்று அவள் கண்ணீர் விட, நிதினிற்கோ ஒரு மாதிரியாக இருந்தது…
”ஸாரி அண்ணா, உங்களை சங்கடப்படுத்துறேன் இல்ல? ஆனா என்னால கட்டுப்படுத்த முடியல” என்று கூறி கண்ணீரை அழுந்தத் துடைத்தவள், “வேற ஏதாச்சும் பேசலாம்” என்றாள் மனதை மாற்றும் முயற்சியாக.
”இப்போ தான் சரியா யோசிச்சு இருக்க, சரி சொல்லு என்ன பேசலாம்?” என்று அவன் வினவ, “உங்களுக்கும் அவருக்கும் இடையில உள்ள பிரண்ட்ஷிப் பத்தி சொல்லுங்களேன், எப்போ உங்க நட்பு ஆரம்பமானது?” என்று வினவிட, ”இப்போவும் அவன் சேப்டரை விட மாட்டியே!” என பொய்யாகச் சலித்துக்கொண்டவன், “எங்க நட்பு ஆரம்பமானது காலேஜ்ல தான்மா” என்று கூறத் தொடங்கினான்..
”எனக்கு அம்மா அப்பா கிடையாது மிருதுளா, ஒரு அநாதை ஆசிரமத்துல தான் வளர்ந்தேன், ஆனா நிஜமா சொல்றேன்மா, ரன்வீர் எனக்கு நண்பனா கிடைச்ச பிறகுதான், எனக்கு ஒரு குடும்பமே உறவா கிடைச்சது. அவன் எனக்கு வெறும் நண்பன் மட்டும் இல்ல, ஒரு அண்ணனா, தம்பியா என் எல்லா கஷ்டத்துலயும் கூட நின்னான், எனக்கு அவன் எவ்வளவோ பண்ணி இருக்கான்.
நான் பார்த்த வரைக்கும் ரன்வீர் எப்போதும் சிரித்த முகம் மாறாமத்தான் பழகுவான், ஆனா, அவன் முதல்முறை அப்படி உடைஞ்சு போய் நான் பார்த்தது அவனோட அப்பாவோட இறப்பு செய்தியை கேட்டப்போதான், அந்த துக்கத்துல அவன் ரொம்பவே நொறுங்கி போயிட்டான், அதுக்கு அப்புறம் அவன் வாய்விட்டுச் சிரிக்கிறதே ரொம்ப அபூர்வமான விஷயமா மாறிடுச்சு.
அப்பா போன பிறகு, அந்த வீட்ல இருக்குற ஒவ்வொரு இடமும் அவரோட நினைவை கிளறிக்கிட்டே இருந்ததால, அவனுக்கு அங்க இருக்கவே பிடிக்கல. அதனாலதான் தனியா ஒரு வீடு வாங்கிட்டு அங்க போயிட்டான். அவனுக்குத் துணையா நானும் அங்கேயே போயிட்டேன், என் படிப்பு முடிஞ்சதும், அவங்க கம்பெனிலயே நான் வேலைக்குச் சேர்ந்தேன், அன்னைல இருந்து நாங்க நிழல் போல ஒன்னாத்தான் இருந்தோம்.
அப்பா மறைவுக்குப் பிறகு அவன் கடமைக்காகச் சிரிச்சிருக்கானே தவிர, உண்மையா சிரிச்சதே இல்லை. ஆனா, வருஷங்களுக்கு அப்புறம் அவன் மனசார, உணர்வுப்பூர்வமாச் சிரிச்சு நான் பார்த்தது… அது உன்னை அவன் காதலிக்க ஆரம்பிச்சதுல இருந்து தான் மிருதுளா! உன் மேல அவன் வச்சிருந்த காதல் தான் அவனோட பழைய சிரிப்பை அவனுக்குத் திரும்பக் கொடுத்துச்சு” என்று நிதின் நிறுத்த மிருதுளாவின் இதயம் ஒரு நிமிடம் துடிப்பதை நிறுத்தியது…
அவன் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் அவளது மனசாட்சியைத் தட்டி எழுப்பியது. ‘அப்பா இறந்த பிறகு சிரிப்பையே தொலைத்த ஒரு மனுஷனுக்கு, நான் தான் மீண்டும் சிரிப்பைக் கொடுத்திருக்கிறேன். ஆனா அதே சிரிப்பை மீண்டும் நானே பறித்துவிட்டேனே’ என்ற எண்ணம் அவளை மேலும் சித்திரவதை செய்தது…
