Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

38. அர்ச்சனா நித்தியானந்தம் - காதலும் கடத்தப்படும்Contest Stories 2026

காதலும் கடத்தப்படும் – 17

 

காதலும் கடத்தப்படும் – 17

 



Advertisement

அர்ஜுன் அருகே வந்து நின்ற அஞ்சலி,

“அஜூ, ரெண்டு பேரும் தப்பிச்சு ஓடிடுங்க… நான் சமாளிச்சுக்கறேன்” என்றாள், அவனுக்கு கேட்கும்படி.

“முடியாது”

Advertisement

“அவன் போலீஸ் ஸ்டேஷன் கூட்டிட்டு போய் உங்களை என்ன பண்ணுவான்னு தெரியாது. சொன்னா கேளு…”

Advertisement

“பரவால்ல. உன்னை தனியா விட்டுட்டு போக முடியாது. ஸ்டேஷனுக்கு உன் அப்பா வருவாருல்ல, அவர்கிட்ட உன்னை ஒப்படைக்கற வரைக்கும் நான் எங்கயும் போகமாட்டேன்” என்றான் திட்ட வட்டமாக.

“நான் ஒரு யோசனை சொல்லட்டா… உன் துப்பாக்கியை எடுத்து சுட்டுடுவேன்னு மிரட்டு அவன் ஓடிடுவான்…” என்றான் மதன்.

“அவனே ஒரு துப்பாக்கி வச்சிருக்கானே…” என்றாள், அஞ்சலி.

Advertisement

“அப்போ கான்ஸ்டபிளை சுட்டுடுவேன்னு மிரட்டு”

“லூசா டா நீ?”

“உன்னை நீயே சுட்டுக்க போறேன்னு மிரட்டு…”

“டேய்…” – குறுக்கிட்டான், அர்ஜுன்.

“இல்லை அஜூ, நல்ல யோசனை தான்… ஆனா…” – என்றாள், யோசனையாக.

“என்ன ஆனா ஆவன்னா…” – பரபரத்தான் மதன்.

“ஆனா, என்கிட்ட தான் துப்பாக்கியே இல்லையே…”

நெஞ்சை பிடித்துக்கொண்டு சிலையாக நின்றான், மதன். அர்ஜுனும் அதிர்ச்சியில் அவளை பார்த்திருந்தான்.

“மதனா?” – என்றாள் அவள், மெல்லமாக.

“எதனா சொல்லிடப்போறேன்… சுட்டுடுவேன் சுட்டுடுவேன்னு சொல்லி எவ்வளவு பயம் காட்டின?” என்றவன்,

“அஜூ, தயவு செஞ்சு அந்த கஜாவை வந்து என்னை அரெஸ்ட் பண்ணிக்க சொல்லு… முடியல…” என்று கைகளை நீட்டி அர்ஜுனிடம் அழாத குறையாக கூறினான்.

“அவன் அதைத்தான் பண்ணியிருக்கான். விலங்கு தான் மாட்டல…”

 

“உள்ள என்னடா பண்றீங்க?”

கஜேந்திரன் குரல் கொடுத்தான். அவர்கள் மூவரும் வெளியே வந்தனர்.

“போலீஸ்னு பயமே இல்லாம என்னடா பண்றீங்க இவ்வளவு நேரமா?”

எரிந்து விழுந்தான், கஜேந்திரன்.

“சாமி கும்பிட்டுட்டு வந்தோம் சார்” என்றான், மதன்.

“ம்ம்… லாடம் கட்டப்போறோம், நல்லா கும்புட்டுக்க” 

“சார், என்னை லாடம் கட்டறதுக்காக நான் வேண்டிக்கல, நீங்க கரீனா சோப்ராவை கட்டணும்னு வேண்டிக்கிட்டேன்”

“போடா” என்று மிரட்டலாய் கூறினாலும், வெட்கப்பட்டு சிரித்தபடி அமர்ந்திருந்தான், கஜேந்திரன். அஞ்சலியும், அர்ஜுனும், மதனை எரிச்சலோடு பார்த்தனர்.

 

மூவர் அமரும் பின் சீட்டில் அஞ்சலி ஏற, அடுத்து ஏறச்சென்ற மதனை, 

“டேய் பின்னாடி போய் உட்காரு” என்றான், கஜேந்திரன்.

அஞ்சலி அமர்ந்திருந்த இருக்கைக்கு பின்னே இருந்த எதிரெதிர் இருக்கையில், அர்ஜுனும், மதனும் எதிரெதிரே அமர்ந்தனர்.

“கொஞ்சம் இடம் கொடுத்தா, எக்ஸ் மினிஸ்டர் பொண்ணு பக்கத்துலயே உட்காருவீங்களாடா?” 

“எது மினிஸ்டர் பொண்ணா?” என்று அர்ஜுன் அதிர்ந்து அவளை பார்க்க, அவள் அவனைக் கண்டும் காணாததுபோல் திரும்பிக்கொண்டாள்.

“முந்திரி பழம் மாதிரி இருக்கும்போதே நினைச்சேன் இவ மந்திரி பொண்ணாத்தான் இருக்கணும்னு” என்று மதன் அழாத குறையாக கூற, அஞ்சலி களுக்கென்று சிரித்தாள். தயங்கியபடி அவள் திரும்பிப் பார்க்க, இருவரும் அவளை முறைத்துக்கொண்டு அமர்ந்திருந்தனர். 

 

வண்டி செல்ல, மதன் மரண பீதியில் அமர்ந்திருந்தான்.

“வண்டியை ஸ்டேஷனுக்கு வேண்டாம், நம்ம தல வீட்டுக்கே விடு” என்றான் கஜேந்திரன், வண்டி ஓட்டும் ஓட்டுனரிடம்.

“சார், இதுக்கும் தலைக்கும் என்ன சம்மந்தம். அவரு துபாய்’ல இந்நேரம் ரேஸ் ஓட்டிக்கிட்டு இருப்பாருல?” என்றான், மதன்.

“டேய், இந்த பொண்ணு வீட்டுக்கு டா… அவங்க அப்பாவை ‘தல’னு தான் கூப்பிடுவேன்… ஆட்சியில இருந்தபோது ‘தலைவரே’னு கூப்பிட்டேன். ஆட்சி போனதும் மனுஷன் கடுப்பாகிட்டாரு, அதான் சுருக்கி தல’னு கூப்பிட ஆரம்பிச்சுட்டேன்…”

“ரொம்ப முக்கியம்” என்று மதன் முனகியது அஞ்சலிக்கு மட்டும் கேட்க, அவள் அவனைக் கண்டு சிரித்தாள்.

“என்ன சிரிப்பு?” என்றான், அவளிடம்.

கஜேந்திரன் தன்னைத்தான் குறிப்பிடுகிறான் என்று எண்ணி,

“என்னடா வாய் நீளுது? இருடி லத்தியை விட்டு ஆட்டறேன், டேய் சாங்கிஸ்டு இன்னும் கொஞ்ச நேரத்துல உனக்கு சங்கிஸ்டுடி” என்றான். 

வேறு வழியின்றி அமைதியாக அமர்ந்திருந்தான், மதன். சற்று சாய்ந்து அமர்ந்த அர்ஜுன், ஓரக்கண்ணால் அஞ்சலியை பார்த்துக்கொண்டே வந்தான். இன்னும் சிறிது நேரத்தில், அவள் அவளது வீட்டிற்கு சென்றுவிடுவாள். அவளைக் கடத்திய குற்றத்திற்கான தண்டனையை அவன் அனுபவிக்கப் போகிறான். இனி அவளை எப்பவும் பார்க்கப்போவதில்லை என்று தோன்றியது. பெரிய இடத்து பெண் வேறு. இன்றுதான் அவளை அவன் இறுதியாக பார்க்கிறான் என்று முடிவே செய்துவிட்டான். அந்த எண்ணம் அவனை மிகவும் வாட்டியது. 

 

அரண்மனை போன்றதொரு இல்லத்தின் முன் அவர்களின் வண்டி சென்று நின்றது. உள்ளே வேதநாயகம் யாரிடமோ காரசாரமாக பேசிக்கொண்டிருக்கும் குரல் கேட்டது, அஞ்சலிக்கு. வாயிலில் நின்றிருந்த இருவர், அஞ்சலி வண்டியை விட்டு இறங்கியதைக் கண்டு உள்ளே ஓடிச்சென்றனர். வீடே பரபரப்பாக, கஜேந்திரன், அஞ்சலி மற்றும் அர்ஜுன், மதனோடு உள்ளே சென்றான். 

 

அத்தனை நேரமும் கத்திக்கொண்டிருந்தவர், மகளைக் கண்டதும் ஒரு நிமிடம் ஸ்தம்பித்து தான் நின்றார். பெரிய பாரம் குறைந்தது போல் உணர்ந்தவர், கண்கள் மெல்ல ஈரம் கொண்டார். குரலை செருமிக்கொண்டு, “உள்ள போ” என்றார்.

“என்னய்யா கஜா, எப்படி?” என்று பதைபதைத்தார்.

“முதல்ல உட்காருங்க தல” என்றவன், வேதநாயகம் அமர்ந்ததும், 

“இவனுங்க தான் இந்த வேலையை பார்த்துவிட்டது” என்றான்.

 

“இவனுங்கள அடிச்சு கொல்லாம விடப்போறதில்லை” என்று வேதநாயகம் எழ,

“அப்பா…” என்று தடுத்து நிறுத்தினாள், அஞ்சலி.

வெகு நாட்கள் கழித்து அவள் ‘அப்பா’ என்று உரிமையோடு அழைத்தது, அவரை சற்றே அசைத்தது. அவளது அதிகாரத்தில் அதிகம் புழங்கப்படாத வார்த்தை ‘அப்பா’.

“அப்பா ப்ளீஸ், அவங்க எந்த தப்பும் பண்ணல” என்றாள்.

“என்னமா அவனுங்க எதுவும் மிரட்டுனானுங்களா? சொல்லு நான் தோலை உருச்சுடறேன்” என்று சீறிக்கொண்டு வந்தான், கஜேந்திரன்.

“நான் என் அப்பாக்கிட்ட பேசிக்கிட்டு இருக்கேன்” என்று அவள் காட்டமாக கூற, 

“யோவ், நீ இரு…” என்று அவனை அமைதியாக்கிய வேதநாயகம், மகளைக் கண்டார்.

 

“அப்பா என்னை ரெண்டு பேர் கடத்தினது உண்மை தான். ஆனா அந்த ரெண்டு பேர் இந்த ரெண்டு பேர் இல்லை. அவங்ககிட்டேர்ந்து இவங்க ரெண்டு பேரும் தான் என்னை காப்பாத்தினாங்க.”

“இது என்னமா புது கதை?” என்றான் கஜேந்திரன். அவனைக் கண்டு எரிச்சலானவள், தனது அப்பாவிடம் திரும்பி, 

“அப்பா, இவரு கேசு முடிக்க என்னென்னமோ கதை சொல்றாரு. உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்க சொல்லுங்க. இவங்க ரெண்டு பேரும் இல்லனா நான் இன்னைக்கு இருந்திருப்பேனானு தெரியல” என்றாள், பாவம் போல் முகத்தினை வைத்துக்கொண்டு.

 

மதன் அர்ஜுனைக் கண்டு பெரிதாய் சிரிக்க, அர்ஜுன் குழம்பியபடி நின்றிருந்தான்.

“உடனே வீட்டுக்கு வந்திருக்கலாம்ல? எங்க இருந்த?” என்றார் வேதநாயகம்.

“இவங்க வீட்ல தான்”

“என்னது இவனுங்க வீட்லயா?”

“இவங்க ரெண்டு பேரும் ரொம்ப நம்பிக்கையானவங்க. அவ்வளவு ஈஸியா நான் யாரையும் நம்பமாட்டேன்”

மகளைப் பற்றி அறிந்திருந்தமையால், அவள் கூறுவது சரியாக இருக்கக்கூடும் என்று வேதநாயகம் எண்ணினார்.

 

“ஏன் எனக்கு போன் பண்ணல? வீட்டுக்கு வரல? எதுக்கு ஒளிஞ்சிருந்த?”

“எனக்கு பிடிக்காத கல்யாணத்தை பண்ணி வச்சிடுவீங்களோன்னு பயந்து…”

சற்று அதிர்ந்துதான் போனார், வேதநாயகம்.

“எத்தனை நாள் நீ இவனுங்க வீட்ல இருந்துட முடியும்?”

“இல்ல நான் வெளிநாடு போயிடற முடிவுல இருந்தேன். இவங்க தான் நான் வீட்டுக்கு திரும்பணும்னு என்னை சமாதானம் பண்ணாங்க. இல்லனா எப்பவோ போயிருப்பேன்” 

அவள் கூறியதைக் கேட்டு, அவ்விருவரையும் பார்த்தார். அவர்களது முகம் கள்ளம் கபடமின்றி இருந்தது. அதிலும் சிரித்துக்கொண்டிருந்த மதனின் வெகுளித்தனம் அவருக்கு பிடித்துப்போனது.

 

இருக்கையில் அமர்ந்தவர், 

“உங்க பேரு என்ன?” என்றார்.

“இவன் பேரு முகம்மது அலி. என் பேரு மைக் டைசன்” என்றான் மதன்.

அஞ்சலி சிரித்துக்கொண்டாள்.

“டேய் நீ எடிசன்னு தான சொன்ன?” என்றான் கஜேந்திரன்.

“அது செல்ல பேரு” என்றான் பதிலுக்கு, சளைக்காமல்.

“சம்பவம் பண்ற பயலுகளா நீங்க?” என்றார், வேதநாயகம்.

“இல்லை சார், நாங்க கராத்தே கிட் (Karate Kid)” 

“அதெல்லாம் பழகியிருக்கீங்களா?”

“ஆமா, இவன் ப்ளாக் பெல்ட்டு, நான் லெதர் பெல்ட்டு” 

“லெதர் பெல்ட்டா?” என்றான் கஜேந்திரன், எரிச்சலோடு.

“ஆமா, புதுசா கண்டுபிடிச்சிருக்காங்க. பெல்ட்டால அடி வெளுக்கிறது எப்படினு சொல்லி கொடுப்பாங்க”

“இருடி, ஒரு நாள் உன்னை நான் வெளுக்கறேன்” என்றான் பற்களை கடித்துக்கொண்டு.

 

“கஜா” – குறுக்கிட்டார் வேதநாயகம். 

“நீ கிளம்பு”

“தல… எப்பவுமே இந்த கஜாவை கவனிப்பீங்க” 

“இன்னைக்கு சிறப்பான கவனிப்பு உண்டு. பொண்ண வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்ட, விட்டுடுவேனா…” என்றவர், தனது செயலாளரிடம் கஜாவிற்கு வேண்டியதை செய்யும்படி பணித்தார். தன்னுடைய காரியம் ஈடேறினால் போதுமென்று கஜாவும் விடைபெற்றுக் கொண்டான்.

 

“அய்யா மாத்திரை சாப்பிடணும்” என்று அவருடைய பணியாளர் அவரிடம் கூற, எழுந்தவர் அங்கிருந்த வேலையாட்களிடம் அவ்விருவருக்கும் உணவு வழங்கும் படி கூறினார். 

 

அவ்விருவரையும் பணியாளர்கள் அழைத்துச் செல்ல, தனது அறைக்குத் திரும்பினாள், அஞ்சலி. பணிப்பெண் ஒருவள் அவளுக்கு உணவு எடுத்துக்கொண்டு வர, வேண்டாமென்று அஞ்சலி அனுப்பி வைத்தாள். தனது கட்டிலின் மேல் கனத்துப்போன மனதோடு படுத்திருந்தாள். தன்னிடம் ஒரு வார்த்தை கூட பேசாமல் அவர்கள் சென்றுவிட்டதை எண்ணி வருந்தினாள். அதிலும் குறிப்பாக அர்ஜுன் பேசாமல் சென்றது அவளை ஏனோ வதைத்தது.

 

சிறிது நேரம் கழித்து எழுந்து சென்றவள், கட்டிலின் எதிரே இருந்த சாளரத்தை திறந்துவிட்டு வானில் உலவும் நிலவினை பார்த்தபடி நின்றிருந்தாள். அர்ஜுனின் வீட்டில் நின்றிருந்த ஞாபகம் வந்தது. ஏனோ அவன் வீடு சாளரம் வழியே பார்க்கையில் அதே நிலவு அழகாயிருந்தது. 

 

ஏதோ பேச்சுக் குரல் கேட்டது. அது அர்ஜுனின் குரல் தான் என்று கண்டுகொண்டவள், தனது அறையில், கட்டிலின் அருகே இருந்த சாளரத்தை திறந்தாள். வெளியே அவளது தந்தை புல்வெளி மீது நாற்காலியில் அமர்ந்திருக்க, அருகே அவருடைய பணியாளர்கள் இருவர் நிற்க, எதிரே அர்ஜுனும், மதனும் நின்றிருந்தனர். 

‘அய்யயோ, இவங்க ரெண்டு பேரும் கிளம்பிட்டாங்கன்னு நினைச்சேன். இன்னும் போகலையா… உண்மைய உளறிட்டா அவ்வளவு தான்…’ என்று அவளை பயம் சூழ்ந்தது. திரை சீலைகள் மறைவில் நின்றபடி, அவர்களின் உரையாடலை கூர்ந்து கவனித்தாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!