காதலும் கடத்தப்படும் – 18

காதலும் கடத்தப்படும் – 18
வேதநாயகத்தின் பணியாளர்களில் ஒருவன், சிறிய கண்ணாடி கோப்பையில் மதுவினை ஊற்றிக்கொடுக்க, அது சிறிது ருசித்தபடி,
“என்னடா சாப்டீங்களா?” என்றார் வேதநாயகம், அர்ஜுன் மற்றும் மதனிடம்.
Advertisement
“ஆச்சுங்க சார்… உங்ககிட்ட நன்றி சொல்லிட்டு கிளம்பலாம்னு தான் காத்துட்டு இருந்தோம்” என்றான் அர்ஜுன்.
“ஆமா என்ன வேலை பண்றீங்க ரெண்டு பேரும்”
“நிரந்தரமா வேலை எதுவும் இல்லை. அப்பப்ப ட்ரூப்ல பாடுவோம். கிடைக்கற வேலையை செய்வோம்”
Advertisement
“பாடுவியா? இந்த காலத்து புள்ளைங்க கேட்குதே டொம்மு டொம்முனு சத்தமா, அந்த மாதிரி பாட்டா?”
Advertisement
“அதுவும் பாடுவேன், பழைய பாட்டும் நிறைய தெரியும். அப்பா சொல்லிக் கொடுத்திருக்காங்க…”
“பார்றா… சிவாஜி பாட்டு, எம்.ஜி.ஆர். பாட்டெல்லாம் பாடுவியா?”
“பாடுவேன்”
Advertisement
“அப்ப ரெண்டு பேரும் உட்காருங்க… நாலு பாட்டு பாடி காட்டிட்டு கிளம்பலாம்”
வேதநாயகம் கூறியதும், அர்ஜுனும் மதனும் உற்சாகமானார்கள்.
மதன் அங்கிருந்த பணியாளரிடம், தாளம் போட ஏதுவாய் ஒரு பாட்டிலையும், அதில் தட்டி சத்தம் எழுப்ப சிறிய கரண்டியை வாங்கிக்கொண்டு தயாராக, அர்ஜுன் தனது குரலை சரி செய்துகொண்டான்.
“சார் முத பாட்டு உங்களுக்கு என்ன வேணும்னு சொல்லுங்க. அப்புறம் அடுத்தடுத்து ஒரு ஃப்ளோல தானா வந்துடும்” என்றான் அர்ஜுன்.
சற்று யோசித்தவர், “பாலும் பழமும் பாடு” என்றார்.
அர்ஜுன் பாடத் தொடங்கினான். அஞ்சலி மெலிதாய் புன்னகைக்கத் தொடங்கினாள்.
“பாலும் பழமும் கைகளில் ஏந்தி, பவள வாயில் புன்னகை சிந்தி, கோல மயில் போல் நீ வருவாயே, கொஞ்சம் கிளியே அமைதி கொள்வாயே” என்று அர்ஜுன் பாட, அதற்கு ஏத்தாற்போல் மதன் ஓசை எழுப்ப, தலையாட்டி அதை ரசித்திருந்தார், வேதநாயகம். அங்கிருந்த பணியாளர்களின் முகத்தில் கூட உற்சாகம் தென்பட்டது.
“காலங்களில் அவள் வசந்தம், கலைகளிலே அவள் ஓவியம், மாதங்களில் அவள் மார்கழி, மலர்களிலே அவள் மல்லிகை…”
வேதநாயகம் மெய் மறந்து தலையாட்டிக்கொண்டிருந்தார். மதன் எழுந்து நின்று ஆடுவது போல் ஏதோ முயற்சி செய்துகொண்டிருந்தான். அஞ்சலி சிரிப்போடு நடப்பதை பார்த்துக்கொண்டிருந்தாள்.
“அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்…” என்று அர்ஜுன் பாட, அனைவரும் எழுந்து நின்று ஆடியதோடு, “லாலாலா…” என்று கோரஸும் பாடினர். அஞ்சலிக்கு அங்கு நடப்பவை அனைத்தும் வேடிக்கையாக இருந்தது.
ஒரு மணி நேர கும்மாளத்திற்கு பிறகு ஓய்ந்து போன வேதநாயகம், அர்ஜுனின் தோள் மீது கை போட்ட படி,
“நல்லா பாடற நீ… ரொம்ப நாள் கழிச்சு மனசு விட்டு சிரிச்சு சந்தோஷமா இருந்தேன்… பொண்ணு விஷயம் அதனால உங்களை இப்படியே விடறேன். அமைதியா இருந்துக்கணும். புரியுதா?” என்றார், மெலிதான மிரட்டலோடு.
“சரிங்க சார்” என்றான் பணிவோடு.
தனது பணியாளரை அழைத்த வேதநாயகம், “பசங்களுக்கு ஏதாவது கவனிச்சு அனுப்பு” என்றுவிட்டு, மற்றொரு பணியாளரின் உதவியோடு தனது அறைக்குச் சென்றார்.
வீட்டு வாயிலுக்கு வேதநாயகத்தின் பணியாளரோடு வந்த அர்ஜுனும், மதனும், பணியாளர் கொடுத்த பணத்தினை பெற்றுக்கொண்டனர்.
“ஆமா உன் பேர் என்ன சொன்ன?” என்றான் மதனிடம்.
“இவன் எஸ்.பி.பாலசுப்ரமணியம், நான் மலேசியா வாசுதேவன். உங்க பேரு அண்ணே?”
“ம்ம்… ஜேசுதாசு” என்றான் அவன் நக்கலாக.
கரடுமுரடான குரலை வைத்துக்கொண்டு அவன் மதனை கலாய்த்தது அவனுக்கு சற்றே எரிச்சலைத் தந்தது.
“தெரியாமத்தான் கேட்கறேன், ஜெ.சி.பி மாதிரி கடமுட கடமுடன்னு குரலை வச்சிருக்கற நீ ஜேசுதாசா?”
“நானும் தெரியாமத்தான் கேட்கிறேன், சப்பிப்போட்ட மாங்கா கொட்டை மாதிரி இருக்கற நீ மைக் டைசனா?” என்றான் பதிலுக்கு.
“ரைட்டு விடுண்ணே, நமக்குள்ள என்ன?” என்று அத்தனை பற்களும் தெரிய சிரித்தான்.
அஞ்சலி அவர்களின் எதிரே வந்து நிற்க, பணியாளர் விலகிச் சென்றான்.
“ரொம்ப தேங்க்ஸ் அஞ்சலி. நீ மட்டும் காப்பாத்தலேன்னா எங்களுக்கு இறுதி அஞ்சலி நடந்திருக்கும்” என்றான் மதன்.
“ஆமா அஞ்சலி. நீ பொய் சொல்லியிருக்க வேண்டிய அவசியமில்லை. இருந்தாலும் எங்களை காப்பாத்தி விட்டதுக்கு ரொம்ப தேங்க்ஸ்” என்றான் அர்ஜுன், மனமார.
“நான் தான் அர்ஜுன் தேங்க்ஸ் சொல்லணும். ரொம்ப நாள் கழிச்சு என் அப்பாவை ‘அப்பா’னு கூப்பிட்டேன்…”
“நினைச்சேன்… மனுஷன் எவ்வளவு பதறிட்டாரு… பாவம் அவரு, இனி எப்பவும் இந்த மாதிரி பண்ணிடாத…”
“ம்ம்” என்றவள், மதனிடம் ஒரு கைபேசியை நீட்டினாள்.
“இந்த ஃபோனை நீ வச்சுக்கோ, நல்லாயிருக்குனு சொன்னல?!”
“வேண்டாம் அஞ்சலி, அதான் காசு கொடுத்தீங்களே… போதும்” என்றான் தயங்கியபடி.
“அந்த காசு என் அப்பா கொடுத்தது மதனா, இது என்னோட அன்பளிப்பு, நான் எல்லாத்தையும் ரீசெட் பண்ணிட்டேன், வாங்கிக்கோ”
அவன் அஜூவை பார்க்க, ‘வாங்கிக்கோ’ என்று அஜூ கூறியதும் “தேங்க்ஸ் அஞ்சலி” என்றுவிட்டு, கைபேசியினை வாங்கிக்கொண்டான்.
“அஞ்சலி இனிமே நாம எப்போ பார்க்க போறோம்னு தெரியல. ஒரேயொரு போட்டோ எடுத்துப்போமா?”
அவள் ‘சரி’ என்க, அர்ஜுனும், மதனும் அவளது இரு புறமும் நிற்க, மதன் சுயபடம் எடுத்தான். இருவரும் விடைபெற்றுக்கொண்டு செல்ல, வேண்டாவெறுப்பாக தனது அறைக்குத் திரும்பினாள், அஞ்சலி.
நள்ளிரவு, மதன் நல்ல உறக்கத்தில் இருக்க, தூக்கம் தொலைத்தவனாய் புரண்டு புரண்டு படுத்தான் அர்ஜுன். எப்படி படுத்தும் உறக்கம் வரவில்லை. அவளது நினைவுகள் இடைவிடாமல் அவனை அழைக்கழித்தன. எழுந்து சென்று சாளரம் வழியே நிலவினைக் கண்டான். அவளை திருமணக்கோலத்தில் சில தினங்களுக்கு முன் கண்டது நினைவிற்கு வந்தது. அவள் தங்கியிருந்த அறைக்குள் நுழைந்தான். அவள் உடுத்தியிருந்த புடவையை எடுத்தான். கட்டிலின் அருகே தரையில் அமர்ந்தபடி புடவையை அணைத்துக் கொண்டான். புடவையில் அவளது வாசம் வீசியது. அவள் படுத்திருந்த கட்டிலில் தலை சாய்த்து படுத்துக்கொண்டான். சாளரம் வழியே தெரியும் நிலவில் அவளது முகம் தெரிந்தது.
“அஜூ அஜூ…”
மறுநாள் காலை மதன் எழுப்ப, மெல்ல எழுந்து அமர்ந்தான். தான் கட்டிலின் மேல் படுத்திருப்பதை அப்பொழுதே உணர்ந்தான். வெடுக்கென எழுந்தவன், அவனது கையிலிருந்த அஞ்சலியின் புடவையை கட்டிலின் மேல் வைத்து விட்டு, அறையை விட்டு வெளியே சென்றான்.
“என்ன யோசனை அஜூ? டீயை குடி, ஆறிடப்போகுது” என்றான் மதன், வெகு நேரமாக கையில் தேனீரை வைத்துக்கொண்டு ஏதோ யோசனையாய் இருந்தவனிடம்.
“மதனா, ஏதோ தூக்க கலக்கத்துல… கட்டில்ல…”
“நீ எதுவும் சொல்ல வேண்டாம் அஜூ…”
“இல்ல மதனா…”
“இத்தனை வருஷத்துல நீ அந்த கட்டில்ல படுத்ததில்லை… இன்னைக்கு படுத்து தூங்கினதுக்கு நீ விளக்கம் கொடுக்க வேண்டாம்…”
அர்ஜுன் கவலையாய் அவனை நோக்க,
“எல்லாம் நல்லபடியா நடக்கும் அஜூ” என்றான் ஆறுதலாக.
“எதுவுமே நடக்க வேண்டாம்” என்ற அர்ஜுன், விருட்டென எழுந்து வெளியே சென்றான்.
அடுத்து வந்த நாட்களில் அர்ஜுன் மிகவும் அமைதியாகவே இருந்தான். அவனது இந்த அமைதி மதனை வருத்தப்படுத்தியது. அண்ணனுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று அவனை எண்ண வைத்தது. ஆனால் என்ன செய்வது என்று புரியாமல் அவனும் குழம்பியிருந்தான்.
ஓர் நாள் இரவு, உறக்கத்திலிருந்து விழித்த மதன்,
“என்ன அஜூ தூங்கலையா?” என்றான், அருகே சுவரில் சாய்ந்தபடி கைபேசியை பார்த்திருந்தவனிடம்.
“இல்லை தூங்கணும்… இந்தா உன் ஃபோன்” என்று நீட்டினான்.
“வச்சுக்கோ அஜூ, நீயே எடுத்துக்க”
“எனக்கு ஃபோன் வேண்டாம், அதுல இருக்கற ஃபோட்டோ பார்க்கத் தான் எடுத்தேன்” என்றுவிட்டு, படுத்துக்கொண்டான்.
மதன் யோசனையாய் அது என்ன புகைப்படம் என்று எடுத்துக் பார்க்க, மூவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் கைபேசியில் மிளிர்ந்தது.
அப்புகைப்படத்தில், அர்ஜுனின் முகத்தில் அப்படியொரு ஆனந்தம் தெறித்தது.
“அஜூ…”
“சொல்லு மதனா…”
“அஞ்சலி கிட்ட போய் பேசு அஜூ”
திடுக்கிட்ட எழுந்து அமர்ந்த அர்ஜுன்,
“என்னத்த பேச சொல்ற?” என்றான்.
“உன் ஆசையை சொல்லு. அந்த புள்ளைக்கும் உன்னை ரொம்பப் பிடிக்கும் அஜூ”
“மதனா தேவை இல்லாதத பேசாம தூங்கு”
“நிஜமாத்தான் சொல்றேன். நீ சாவு வீட்ல பாடினதை பார்த்து அது எவ்வளவு வருத்தப்பட்டுச்சுன்னு தெரியுமா? நீ ஒரு தடவை போய் பேசு…”
“பேசி, மனச குழப்பி, கல்யாணம் பண்ணி, கடைசில அப்பா மாதிரி பொலம்பியே சாக சொல்றியா?”
“டேய்…”
“மதனா, என்கிட்ட படிப்பில்லை, காசில்லை, தொழிலும் இல்லை… அந்த பொண்ணுக்கும் எனக்கும் ஏணி வச்சாலும் எட்டாது. அதுக்கு நல்ல மனசு. அதான் வருத்தப்பட்டிருக்கு. அம்மா அப்பா கதையைக் கேட்டுட்டு அழுதுச்சு. பாவம்டா. பெத்தவ இல்லாம, பாசம் காட்ட ஆள் இல்லாம ரொம்ப மனசு வருத்தத்துல இருக்கு. பாசத்தை காட்டேறேன்னு சொல்லி அந்த புள்ளைக்கு மேலும் கஷ்டத்தை கொடுக்க எனக்கு மனசில்லை… நாம முதல்ல ஒரு வேலைய தேடுவோம். பொழப்ப பார்ப்போம். இதெல்லாம் தேவையில்லாத எண்ணம். கொஞ்ச நாள்ல மறந்துடுவேன். எல்லாம் சரியாயிடும். நீ தூங்கு” என்றவன் படுத்துக்கொள்ள, அர்ஜுனைப் பற்றி கவலையோடு மதனும் படுத்துக்கொண்டான்.
அர்ஜுன் எவ்வளவு தெளிவாக பேசினாலும், அவனது மனதின் எண்ணம் துளியும் மாறவில்லை என்று மதன் உணர்ந்தான். அடிக்கொருமுறை மதனின் கைபேசியில் இருக்கும் அவளது புகைப்படத்தைக் கண்டான். அப்பா, அம்மா படத்திற்கு முன் நின்று அவ்வப்போது காரணமே இல்லாமல் கண்கலங்கினான். அடிக்கடி அவள் தங்கியிருந்த அறையில், அவளது புடவையை அணைத்தபடி இரவுகளில் உறக்கமின்றி அமர்ந்திருந்தான். தன்னை தொலைத்தவனாய் எதிலும் நாட்டமில்லாமல் இருந்தான். இயல்பான கவனம் கூட அவனிடம் தப்பியிருந்தது. இதற்கெல்லாம் முடிவு கட்ட வேண்டும் என்று எண்ணிய மதன், வேலைக்காக ஒருவரை சந்திக்க வேண்டும் என்று அர்ஜுனை அழைத்துச் சென்றான்.
