Skip to content
Post Views: 199
அத்தியாயம்: 8
சட் சட் என்று ஜன்னல் கதவைத் தட்டின மழைத் துளிகள்…
Advertisement
கண்ணாடியில் படிந்து வடிந்தோடிய நீர்த் திவளைகளைப் பார்க்கும் போது, உயிரற்ற ஜடப் பொருள் கண்ணீரை வடித்து அழுவது போல் தோன்றியது. உயிருள்ள அவளும் அழுது கொண்டு தான் இருக்கிறாள், ஆற்றுவார் யாரும் இல்லாது ஊமையாய் உள்ளுக்குள்.
விடிந்தும் வெளிச்சத்தைக் கக்காத சீதோஷ்ணம் கொண்ட வைகறைப் பொழுது அது. சூரியன் கருமேக பொதிக்குள் மறைந்து கொண்டதால், வெளிச்சக் கீற்றுகளுக்கு அனுமதி இல்லை. மழை வேறு கொட்டிக் கொண்டிருக்க, இரு கால்களையும் குத்துக்காலிட்டுக் கட்டிக் கொண்டு, தூறிய மழையை ஜன்னலின் வழியே ஒரு நொடி பார்ப்பதும், உறங்கும் மகளின் மீது பார்வையைப் படரவிடுவதுமாக, உடலெங்கும் பரவிய நடுக்கத்துடன் அமர்ந்திருந்தாள் ரிதன்யா.
Advertisement
Advertisement
‘நானா! வீட்டை விட்டு வந்தது! பிறந்து வளர்ந்த மதுரையையே முழுதாக சுற்றிப் பார்க்காத, தானா! இன்று அந்த மண்ணை விட்டு, ஊரை விட்டுச் சென்று கொண்டிருக்கிறேன். எங்கிருந்து வந்தது இந்தத் தைரியம்? எந்த நம்பிக்கையில் செல்கிறேன்?.’ என்ற சுய அலசலுடன் நடந்தவைகள் அனைத்தும் உள்ளுக்குள் ஓடிக் கொண்டிருந்தன.
“ஐயா ப்ளீஸ்… இந்த வேலை இல்லன்னா… உங்களுக்கு என்னோட சூழ்நிலை நல்லாவே தெரியும். கொஞ்சம் எடுத்துச் சொல்லுங்கைய்யா.” என்று கொஞ்சியவளுக்குத் தன் மகளின் எதிர்காலமும் தன் எதிர்காலமும் கேள்விக்குறியாகி நிற்பதில் உடன்பாடில்லை.
Advertisement
என்ன தான் வீராப்பாய்ச் சுருதியிடம் வேலைக்கு ஏற்பாடு செய் என்று விட்டு வந்தாலும், இதே அளவு சம்பளம் கிடைக்குமா என்பது வினா எழும்பும் விடயம் தான். ஆறு ஆண்டுகள் வேலை பார்த்த அனுபவத்தால் நல்ல ஊதியம் கிடைத்துக் கொண்டிருந்தது அவளுக்கு.
ஆதலால் சுருதியிடம் பேசிய வீர வசனங்களைப் புறம் தள்ளிவிட்டு, மறுநாளே அவரின் இல்லம் தேடிச் சென்று பேசினாள்.
தந்தை, மகன் என இருவரும் பொறுப்பேற்று நடத்தி வந்த கடையில் அவளை நியமித்தது என்னவோ தந்தை தான். விரட்டி விட்டது மகன். ஆதலால் அவரிடம் பேச, நடுத்தர வயது தாண்டிய மகன் தான் குதித்தான்.
“அவரு வந்து கடை வாசல்ல பிரச்சனை பண்ணது தப்பு தான். நான் மன்னிப்பு கேக்குறேன் சார்.”
“உங்கள மன்னிச்சி மறுபடியும் வேலைக்கு வாங்கன்னு சொல்ல எனக்கும் ஆசை தான். ஆனா, உங்க புருஷன் மறுபடியும் வந்து கலாட்டா பண்ண மாட்டான்னு எந்த உத்திரவாதமும் இல்லயே! ஏற்கனவே கடை வாசல்ல நேத்து நடந்தத யாரோ யூட்யூப், இன்டான்னு சோசியல் மீடியா பேஜ்ல போட்டு கடையோட பேரையும், உங்க பேரையும் கெடுத்து வச்சிருக்கானுங்க. இதுக்கப்றமும் உங்களை நான் வேலைல எப்படி வச்சுக்க முடியும்?” என்று கேட்டதற்கு பதில் இல்லை அவளிடம். மேற்கொண்டு இறைஞ்ச மனமில்லாது, சோர்வுடன் நடக்க,
“வேற வேலை எதுவும் பாத்து வச்சிருக்கியாம்மா?” என்று அக்கறையுடன் கேட்டார் பெரியவர்.
“இங்க எதையும் தேடல ஐயா. அவரு அங்கயும் வந்து பிரச்சனை குடுப்பாரு. என்னோட சித்தப்பா பொண்ணு, வெளியூர்ல நர்ஸா இருக்கா. அங்க எதாவது வேலை கிடைக்குமான்னு கேட்டிருக்கேன்.” என்க, எந்த ஊர், என்ன வேலை உனக்குத் தெரியும் என்று கேட்டுத் தெரிந்து கொண்டவர்,
“நீ என்ன படிச்சிருக்கேன்னு சொன்னம்மா?” என்க, தந்தையை மகன் முறைத்தான்.
“B.A English literature.”
“முழுசா முடிச்சிட்டியாம்மா?”
“ஆமா ஐயா. கடைசி ரெண்டு செமஸ்டர் பாப்பா பிறந்த பின்னாடி எழுதி பாஸ் பண்ணிட்டேன். டிகிரி சர்டிபிகேட் இருக்கு. கம்யூட்டர்லயும் சில கோர்ஸ் முடிச்சிருக்கேன் ஐயா.” என்றதும் தாடையைத் தடவி யோசித்தவர்,
“செங்கல்பட்டுப் பக்கம் என்னோட ஃப்ரெண்டு இன்டர்நேஷனல் ஸ்கூல் ஒன்னு நடத்திட்டு இருக்கான். அதுல ஆபிஸ் வேலைக்கி ஆள் வேணும்னு சொன்னான். நல்ல சம்பளம் உறுதியா கிடைக்கும். உன்னை நான் ரெக்கமெண்ட் பண்றேன்.” என்றதும் முகம் மலர்ந்து போனது.
“பக்கத்துல நிறைய மெட்ரிகுலேஷன் ஸ்கூல்ஸ் இருக்கு. அதுல உன்னோட பொண்ணுக்கும் சீட் ஏற்பாடு பண்ண சிபாரிசு கடிதம் வாங்கித் தர்றேன். நீ வேலை பாக்கப் போற அந்த ஸ்கூல்ல படிக்க நிறைய செலவு ஆகும். உனக்குக் கட்டுப்படாது. உன் தங்கச்சிட்ட சொல்லி, அந்த ஏரியால தங்கிக்க வீடு மட்டும் ஏற்பாடு பண்ணிக்கம்மா.” என்றவருக்கு இரு கரம் கூப்பி அவள் தன் நன்றியை மனதார தெரிவித்தாள்.
அவர் செய்தது பேருதவி தான்.
விவாகரத்துச் செய்யப் போகிறேன் என்றதும் முதல் ஆதரவு அவரிடம் இருந்து தான் வந்தது.
“நல்ல முடிவு. இப்பவும் லேட் ஆகல. அவனத் தூக்கிச் சுமக்காம, விட்டுட்டு நீ உன் வாழ்க்கைய வாழ்றது தான் சரியான முடிவு. எப்படித்தான் இத்தன வர்ஷம் அவங்கூட வாழ்ந்தியோ!” என்று அடிக்கடி சொல்லும் அவருக்கும் கிளியை வளர்த்து குரங்கிடம் ஒப்படைத்தக் கதையாகிப் போன ரிதன்யாவின் கதை முழுதாகத் தெரியும். ஆதலால் அவளின் வாழ்க்கை சிறக்கச் சிறு துரும்மையாவது கிள்ளிப் போடலாம் என்ற எண்ணத்தில் செய்தார்.
வேலை மற்றும் சரிகாவின் படிப்பு பற்றிய கவலை நீங்கியது.
அது தந்த நம்பிக்கையால் தான் வீட்டை விட்டு வெளியேறினாளா?
இல்லை.
விசயத்தைச் சுருதியிடம் சொல்லி, பள்ளியுள்ள பகுதியில் வீடு வேண்டும் என்றாள் ரிதன்யா.
“சூப்பர் நியூஸ் சொல்லிருக்க. ஒரே வாரத்துல வீட்ட ரெடி பண்றேன். தயாரா இரு.” என்ற சுருதியிடம், ம் என்று சுருதியற்றுக் கூற,
“என்னாச்சி ரிது?”
“ஒன்னுமில்ல… எடுத்திருக்குற டிசிசன் கொஞ்சம் பெருசில்ல. அதனால கொஞ்சம் பயம்மா இருக்கு.”
“எனக்குப் புரியுது. எல்லாம் நல்லதாவே நடக்கும். நம்பு.” என்று ஆறுதல் கூறினாள்.
“சரிகாக்கு ஆன்வல் ஆரம்பிக்க இன்னும் மாசம் இருக்கு. அப்றம் டிசி வாங்கிட்டு… அன்வல் லீவ் முடியும் போது குடி வர்ற மாதிரி வீடு பாரு.” என்றவளுக்கு அப்பொழுதும் தனக்கு நிழலாக இருக்கும் குடும்பத்தை விட்டு, யாருமற்றுச் செல்ல மனம் இல்லை. சண்டை போட்டுக் கொண்டே என்றாலும் உடன் இருப்பர் என்று நம்பினாள்.
ஆனால்…
திருமண தகவல் மையத்தில் பதிவு செய்த மறுநாளில் இருந்தே தனபாலனுக்கு அழைப்புகள் வரத் தொடங்கி இருந்தன. தங்கைக்கு விவாகரத்து ஆனதையும், பிள்ளையுடன் வாழா வெட்டியாக வீட்டில் தண்டமாக அமர்ந்திருப்பதையும் ஏற்றுக் கொள்ள முடியாத அண்ணன் அவன். மறுமணம் என்றால் என்ன செய்வான்?
தாம் தூம் என்று குதித்தான்.
“டைவர்ஸ் வாங்கி முழுசா ஒரு வர்ஷம் கூட ஆகல. அதுக்குள்ள இவளுக்கு அடுத்த புருஷன் வேண்டியிருக்கு!” என்று அசிங்கமாக பேசி, கத்த,
“நானா தேடல. தேடித் தாங்கன்னு பொறுப்ப உங்க கிட்ட ஒப்படைச்சிருக்கேன். இந்த முறையாது நல்லா விசாரிச்சுக் கூட்டீட்டு வருவீங்கன்னு நம்புறேன்.” என்றாள் அமர்த்தலான குரலில்.
“கொழுப்பா டி உனக்கு. ஒழுங்கா அமைஞ்ச வாழ்க்கைய வாழ வக்கில்லாதவளுக்கு, இன்னொரு புருஷன தேடி பிடிச்சிக் கூட்டிட்டு வந்து *** குடுக்கணுமோ!” என்று கண்டபடி பேசினான்.
ரிதன்யா தர்க்கம் செய்யவில்லை. செய்தால் இன்னும் இன்னும் தன்னை இகழ்வாகப் பேசுவான் என்பதால் அமைதியாக இருந்தாள்.
ஆனால் ஃபோனில் துக்கம் விசாரிப்பது போல், ‘உங்க தங்கச்சிக்கு ரெண்டாந்தாரத்துக்கு ஆள் தேடுறீகளாமே?’ என்று எல்லா பக்கம் இருந்து அழைப்புகள் வந்த வண்ணமே இருக்க, தினமும் அவன் கத்தி டென்சன் ஆவதைக் குறுஞ்சிரிப்புடன் ரசித்தாள்.
விக்ரமை அழைத்து ரிதன்யா எடுத்திருக்கும் முடிவைக் கூறினான்.
அவனோ, கண்ணீருடன் காலில் விழுந்தான்.
கண்ணீர் வடித்தது அவன் மட்டுமல்ல அவளின் தந்தை அண்ணாமலையும் தான்.
“பாப்பா! மேட்ரிமேனில பதிவு பண்ணத கேண்சல் பண்ணு பாப்பா. வேண்டாம் பாப்பா. அசிங்கம் பாப்பா அது.” என்றார்.
“கடைசி வரை இங்கயே தங்க கூடாது. உன் வீடு இது கிடையாதுன்னு நீங்க தானப்பா சொன்னீங்க! ஒரு பொண்ணுக்கு அழகு, அவ புருஷங்கூட இருக்குறது தானும் சொன்னீங்க. எனக்கு இப்ப புருஷன் இல்ல. அதுனால மறுமணம் செஞ்சுக்கலாம்னு முடிவெடுத்தேன்.” என்றவளுக்குத் திருமணமா!! என்று உடலும் உள்ளமும் அனலில் இட்ட புழுவாய் துடித்தாலும், அந்த வார்த்தையில், அவர்களின் கௌரவம் பாதிக்கும் என்பதில் அற்ப சந்தோஷம் உண்டானது. அவர் கூறும் பிரத்தேக வார்த்தைகளால் அவரைக் குத்தினாள்.
“உங்களுக்குப் பாராம இருக்க மாட்டேன் ப்பா. இதை மட்டும் செஞ்சு வச்சீங்கன்னா, நீங்க நிம்மதியா உம்பொண்டாட்டி கூட கடைசி காலத்தை வாழலாம். நானும் எம்பிள்ளையும் எம்புருஷன் கூட சந்தோஷமா இருப்போம்.” என்க,
“பாப்பா!! நீ பேசுறதும் நடந்துக்கிறதும் ரொம்ப கேவலமா இருக்கு. உன்னை நான் இப்படித்தான் வளத்தேனா! பொம்பளப்பிள்ளைக்கு அகங்காரமும் ஆணவமும் இருக்க கூடாது பாப்பா. புருஷங்கிறவ ஒரு பொண்ணுக்குப் பாதுகாப்பு வேலி மாதிரி. அவன் இல்லன்னா ஊரு உலகமும் உன்னைக் கேவலமா மேயும். அசிங்கப்பட்டு நிக்கப் போற.” என்று கோபத்துடன் சாபமிட்டார் அண்ணாமலை.
இதழ்கள் ஏளனத்தில் வளைந்தன ரிதன்யாவிற்கு. புகுந்த வீட்டில் பிரச்சனை என்று வந்து நிற்கும் பெண்களுக்கு, பிறந்த வீட்டில் இடமில்லை என்று விரட்டுகின்றனர். அப்படியெனில் எது தான் பெண்ணுக்கு நிலையான வீடு? என்று கேள்வி கேட்டு வெதும்பியது மனம்.
‘எலி வலையானாலும் தனி வலை வேண்டும். அந்த வலையிலாவது தனக்கு நிம்மதியைத் தரும் ஆள்கள் மட்டும் தான் உடன் இருக்க வேண்டும்.’ என்ற முடிவிற்கே வந்திருந்தாள்.
“எதுக்கு இந்த வீண் பொல்லாப்பு ரிது. நடந்ததெல்லாத்தையும் மறந்திட்டு விக்ரம் கூட சேந்து வாழு. உங்க பொண்ணுக்காகவாது அவன் கூட கொஞ்சம் அனுசரிச்சுப் போயேன். ஏன் பிடிவாதம் பிடிக்கிற? விவாகரத்தான என்ன? நான் விக்ரம் கிட்ட பேசுறேன். இல்லன்னா மச்சான விட்டு பேசச் சொல்றேன்.” என்ற மைதிலிக்கும் அசைந்து கொடுக்கவில்லை.
“உங்கூட பிறந்த நாங்கல்லாம் அப்பா அம்மா பண்ணி வச்ச கல்யாணம், நெட்டையா இருந்தாலும், குட்டையா இருந்தாலும் அனுசரிச்சி வாழலயா? நீ மட்டும் ஏன் டி இப்படி இருக்க? நாணல் மாதிரி வளைஞ்சி குடுத்தாத்தான் வாழ்க்க சிறக்கும். நீயா நானான்னு நின்னா உடைஞ்சி தான் போகும். உங்கள நம்பி ஒரு குழந்தை இருக்கு டி.” என்று இலவச ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் தூக்கிக் கொண்டு மைதிலி வந்தாள் தினமும்.
ஆனால் ரிதன்யா விக்ரம் உடன் வாழ மாட்டேன் என்று கல்லென நின்றாள்.
அவளின் நிலை புரிந்தாலும், திருமணம் முடிந்து பத்து ஆண்டுகளுக்கு மேல் இதெல்லாம் தேவையா என்றிருந்தது மைதிலிக்கு.
அவளின் பிடிவாதம் ஒருபக்கமென்றால், விக்ரம், கடை வாசலில் செய்த தகராறும், மனைவியிடம் மன்னிப்பு கேட்டு வெளியிட்ட வீடியோவும் அண்ணாமலையின் குடும்பத்து மானத்தைக் கப்பல் ஏற்றிக் கொண்டிருந்தது.
தினமும் திட்டு, ஒரு கட்டத்தில் அடி, அதற்கும் மசியவில்லை என்றதும் ஏச்சுப் பேச்சு என இறுக்கத்துடன் நாள்கள் நகர்ந்தன.
நேரடியாக அல்லாது மறைமுகமாக தனக்கு ஆதரவாக இருக்கிறார் என்று நினைத்த முத்து லெட்சுமியின், ஏடாகுடமான பேச்சும், செயலும் தான் அவளை உடனே வெளியேற வைத்தது.
அவளுக்கு மட்டும் கணவனுடன் வாழ ஆசை கிடையாதா என்ன? அநேக ஆசைகள் உண்டு. கல்யாண ஆசைகள் பல. அனுமார் வால் போல நீண்டு கொண்டே போகும் பேராசைகளும் உண்டு. அதில் கடுகளவாவது நிறைவேறியிருந்தாலும், உண்டான ஏக்கங்களையும் நிராசைகளையும் புதைத்துக் கொண்டு விக்ரமுடன் கடைசி வரை வாழ்ந்திருப்பாள். ஆனால் எதுவுமே நடக்கவில்லையே. மாறாக அவன் அவளுக்கு நரகத்தை அல்லவா காட்டிக் கொண்டிருந்தான்.
இந்தக் காலத்தில் கணவனை முழுக்க முழுக்க காதல் செய்து கொண்டே தான் மனைவிமார்கள் வாழ்கின்றனர். கடமைக்கே என்ற வாழ்க்கை அது. அந்தக் கடமையைக் கூட விக்ரம் விடயத்தில் தொடர்ந்து செய்ய முடியவில்லை அவளால்.
அதிலிருந்து போராடி விடுபட்டு, இனியாவது மகளுடன் சந்தோஷமாக வாழலாம் என்றால், அவளின் குடும்பமே ‘விக்ரமை முதுகில் சுமந்து கொண்டு தான், நீ நீந்த வேண்டும்.’ என்று நித்தமும் நிர்பந்திக்கும் போது, போர்களமாகும் வீட்டில் எப்படி இருக்க முடியும்?
மதுரை நெல்லுப் பேட்டையில் தவிட்டு அண்ணாமலை என்று கேட்டால் அனைவரும் கைக் காட்டும் ஒரே நபர் ரிதன்யாவின் தந்தை அண்ணாமலையாரைத் தான்.
தவிட்டை விற்று, வியாபாரம் செய்பவர். ஊரில் நான்கு பேர் தன்னை நல்ல விதமாக பார்க்க வேண்டும். தன்னையும் தன் குடும்பத்தையும் முன் உதாரணமாகக் கொண்டுத் தான் பேச வேண்டும் என்ற ஊர் பெருமைக்காக உயிர் வாழ்பவர்.
ஆதலாலேயே பிள்ளைகள் மூவருக்கும் அவர்களின் ஆசையைக் கேளாது, தன் விருப்பப்படியே திருமணம் செய்து வைத்தார். மைதிலிக்குத் தமக்கை மகன் மாரிச் செல்வத்தைப் பேசி முடித்துவைத்தார்.
அவளுக்கும் மாரிச் செல்வத்தின் அன்னை கலாவிற்கும் சதாசர்வமும் சண்டை. இது வேண்டும் அது வேண்டும் என்று சட்டமாகப் பேசினார். மகளும் கண்ணீருடன் வந்து நிற்க, சில பஞ்சாயத்துகள் நடந்தன. எது நடந்தாலும் கடைசியில் மாரி வந்து அழைக்கும் போது ஆட்டுக் குட்டி போல் பின்னாலேயே சென்று விடுவாள். இல்லை செல்ல வேண்டும்.
இப்பொழுது, ஓர் ஆண் இரு பெண் பிள்ளைகளுடன் தனிக் குடித்தனம் செய்கிறாள். அவளின் திருமண வாழ்க்கை சண்டை சச்சரவுகளைக் கடந்து சீராக ஓடிக் கொண்டிருக்கிறது.
மூத்த மகளின் வாழ்க்கையில் இருந்து பாடம் கற்றுக் கொண்டதாக நினைத்த அண்ணாமலையார், “சின்னவளுக்குப் பாத்திருக்குற இடம் நல்ல இடம். மாரி மாதிரி மாசச் சம்பளக்காரன் கிடையாது. வியாபாரம் பாக்குறாப்ல. சிம்மக்கல்ல எலக்ட்ரிக்கல் கடை வச்சிருக்காரு. நாலு பயலுக அவர்ட்ட வேலை பாக்குறனுங்க.
மாரி மாதிரி புகையில இழுக்குற பழக்கம் இல்லை. லேசா தண்ணி சாப்பிடுவாரு போல. ஆனா இந்தக்காலத்துல அது இல்லாத பயளுகல பாக்க முடியுமா! சம்பாத்தியம் சாமர்த்தியம் இதுல எதையும் குறை சொல்லிட முடியாது.
குடும்பம்னு பாத்தா, அம்மா மட்டும் தான். மாப்ளக்குக் கூடப் பிறந்தவங்கன்னு ஒரே ஒரு அண்ணன் மட்டும் தான். கல்யாணமாகிடுச்சி. சொந்தமா, வீடு ரெண்டு ஆரப்பாளையம் பக்கத்துல இருக்கு. பெரிய பையன் கூடத் தான் கடைசி காலம் வரைக்கும் இருக்குற மாதிரி பேசுனாங்க சம்மந்தியம்மா.
மூத்தவ கூடவே, மாமியாலும் மாமனாரும் இருக்குறதுனால தான பிரச்சனையே. மாசா மாசம் என்னத்தையாவது சொல்லி வீட்டுக்கு வந்து ஒப்பாரி வைச்சா.”
“இந்தப் பொட்டப் பிள்ளைங்கள கட்டிக் குடுத்திட்டா பிரச்சனை ஓஞ்சதுன்னு நினைக்கவே கூடாது அண்ணாச்சி. எப்ப பாத்தாலும் அப்பெ வீட்டுக்கு வந்து வந்து… அழுது அழுது நம்ம வீட்டுலல்ல தரித்திரத்தை இழுத்திட்டு வர்றாளுக.” என்றார் அண்ணாமலையாரின் நண்பன்.
“அதுனால தான், சின்னவளுக்குப் பேசும் போதே தனி குடித்தனத்துக்குச் சரிங்கிற ஆளத்தான் தேடினேன். சசி நல்ல பையனா கூட்டீட்டு வந்திட்டா!”
“ரொம்ப சரியா செஞ்சிருக்கீங்க அண்ணாச்சி.”
“மைதிலி வீட்டுல, கல்யாணமாகி மூணு வர்ஷமானாலும் இன்னும் தீபாவளி பொங்கலுன்னு சீர் செஞ்சிட்டு இருக்கேன். இதுவே வர்ஷக் கணக்கா! செஞ்சிட்டே இருக்க முடியுமா? எனக்கப்பறம் எம்மகன் ரெண்டு பொம்பளப்பிள்ளைங்களுக்கும், அதுங்க போடுற பொட்டக் குட்டிங்களுக்கும் சீர் செஞ்சிட்டே இருந்தா! அவன் எப்படி சந்தோஷமா வாழ முடியும்? அதுனால மூத்தவ குடும்பத்துல சொல்லிட்டேன், இது தான் கடைசின்னு. சின்னவளக் கட்டிக்கப் போற வீட்டாளுங்க கிட்ட, ஒரு வர்ஷம் தான் எல்லாச் சீரும் செய்வேன்னு கண்டிசனா பேசிருக்கேன்.”
“சரிதாண்ணாச்சி! அள்ளி இறைக்க இங்க பணக்கிணறா இருக்கு.”
“இதெல்லாம் ஏன் சொல்றேன்னா மூத்தவ அனுபவிச்ச எந்த கஷ்டமும் சின்னவளுக்கு வராது. எப்படி நம்ம புத்திசாலித்தனம்.” என்று தன்னைத் தானே பாராட்டிப் பெருமை பேசினார்.
இவரின் புத்திசாலித்தனத்தைப் புகழ்ந்து தள்ள ஒரு கூட்டம் வேறு இருந்தது.
ஆனால் ஒன்றை மறந்து விட்டார். ஒருத்தி வாழ்க்கையில் நடந்தது தான் அடுத்தவள் வாழ்க்கையிலும் நடக்குமா என்ன? அத்தனை பிரச்சனைகளுக்கும் தீர்வு கண்டுபிடித்து விட்டேன் என்று இறுமாப்புடன் கூறும் அவருக்கு எப்படித் தெரியும் எல்லாக் கணக்கிற்கும் ஒரே தீர்வு இருப்பதில்லை என்பது.
கானம் இசைக்கும்…
error: Content is protected !!