Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

14. விர்சாலி - மீண்டும் கேட்குமா பூபாளம்

மீண்டும் கேட்குமா பூபாளம் 01

அத்தியாயம் 01
அந்த ஊரின் பெரிய வீடான மூன்று மாடி வீட்டின், வாயில் கேட்டை திறந்து கொண்டு உள்ளே வந்தார் கல்யாண தரகர் பொன்னம்பலம்.


Advertisement

உள்ளே வந்தவரை “வாங்க.. வாங்க.. உங்களத்தான் எதிர்பாத்துட்டு இருந்தோம்…” என்று வரவேற்று ஹாலில் அமர வைத்தார் பிரேமாவதி. அந்த வீட்டின் எஜமானி.
“அவங்க குளிச்சிட்டு இருக்காங்க.. சொற்ப நேரம் பொறுங்க வந்துடுவாங்க…” என்றவர் சமையல் அறை பக்கம் திரும்பி “நித்யா!…” என்று குரல் கொடுக்க,

Advertisement

Advertisement

அவரின் இளைய மருமகள் “இதோ.. வந்துட்டேன் அத்த…” என்று பதில் கூறியவாறு பலகாரம், குடிபானம் அடங்கிய ரேயுடன் வந்து, கல்யாண தரகர் முன் வைக்க,
“எடுத்துகோங்க…” என்று சொன்னார் பிரேமாவதி. தரகர் பொன்னம்பலமும் தொண்டைக்கும் வயிற்றுக்கும் இதமாக அவற்றை உண்டு முடிக்க,

Advertisement

மாடிப்படிகளில் வேஷ்டி சட்டையில் கம்பீரமாக இறங்கி வந்தார், அந்த ஊரின் பஞ்சாயத்து தலைவரான முருகானந்தம்.
அவரை கண்டதும் எழுந்து நின்று “வணக்கமுங்க ஐயா!” என்று பவ்வியமாக சொன்னார் பொன்னம்பலம்.
அவருக்கு சிறு தலையசைப்பை கொடுத்தவர், கையை அசைத்து அமரும்படி சைகை செய்தவாறு, அவரும் ஒரு இருக்கையில் அமர்ந்து கொண்டார்.
“ஐயா! நீங்க சொன்ன மாதிரியே ரெண்டு, மூணு வரன் வந்திருக்கு.. ஃபோட்டோ, யாதகம் கொண்டு வந்து இருக்கேன்.. பாத்து பிடிச்சிருக்கான்னு சொல்லுங்க…” என்று சொன்னவாறு தனது பையில் இருந்து மூன்று புகைப்படங்கள் மற்றும் ஜாதகத்தை எடுத்து மேஜையில் வைக்க,
அதை கையில் கூட தொடாது “என் குடும்ப கௌரவத்துக்கும் அந்தஸ்துக்கும் ஏத்த இடம் தானே…” என்று கரார் குரலில் கேட்டார் முருகானந்தம்.
“எல்லாம் தெளிவா விசாரிச்சிட்டேன் ஐயா.. மூணுமே உங்களுக்கு பொருத்தமான குடும்பம் தான்…” என்று சொன்ன பின்னர் தான், தன் மனைவிக்கு கண்ணை காட்டினார் முருகானந்தம்.
பிரேமாவதியும் ஆர்வமாக புகைப்படங்களை எடுத்துப் பார்த்தவர், அதில் ஒரு புகைப்படம் பிடித்து போக,
“ஏங்க இது என்ன மாதிரி…” என்று கணவரிடம் காட்ட, முருகானந்தம் அந்த புகைப்படத்தை ஒரு பார்வை பார்த்தவர், “நல்லாத்தான் இருக்கு.. நமக்கு பிடிக்கிறதை விட கட்டிக்க போறவங்களுக்கு தானே பிடிக்கணும்.. கூப்பிட்டு காமி…” என்று சொல்ல
பிரேமாவதி அருகில் நின்ற நித்தியாவைப் பார்க்க, அவளும் சரி என்னும் வகையில் தலையசைத்து விட்டு, மாடிப்படிகளில் ஏறி,
மூன்றாவது தளம் வந்தவள், இடது பக்கம் மூன்றாவதாகவும், இறுதியாகவும் இருக்கும் அறையைப் பார்த்து, ஒரு பெருமூச்சு விட்டவள், வலது பக்கம் உள்ள முதலாவது அறைக் கதவை தட்டினாள்.
உள்ளிருந்து “வாரேன்…” என்று கம்பீரமான ஒரு ஆணின் குரல்.
சில நொடிகளில் அந்த தேக்கு மர கதவை தன் முறுக்கேறிய தந்த கைகளால் திறந்தான் பிரபாகரன்.
கோதுமை நிற தேகத்தோடு, வெள்ளை வேஷ்டியில் கருநிற கோடு போட்டு இருக்க, அதற்கு பொருத்தமாக கருநீல நிற சட்டை, கையில் தங்க காப்பு, கழுத்தில் சங்கிலி தொடர் டிசைன் போட்ட செயினும், நெற்றியில் சந்தனம் குங்குமம் கலந்த கீற்றுக்கோடும், அலை அலையான கேஷத்தை அழகாக வாரி படிய வைத்து, ஆறு அடிக்கு கம்பீரமாக நிமிர்ந்து நின்றான்.
தீட்சண்யமான கருவிழிகளை நித்யா மீது நிலைக்க விட்டு, “என்னம்மா…?” என்று கனிவாக கேட்க
“மாமா பெரிய மாமாவும், அத்தையும் உங்கள கீழ வரச் சொன்னாங்க…” என்று நித்தியா சொல்ல,
ஒரு நிமிடம் தனது அறையை திரும்பிப் பார்த்தான். அவன் மகள் ஆதூரியா கட்டிலில் தூங்கிக் கொண்டிருக்க,
நித்தியாவோ “நீங்க போங்க மாமா.. நான் ஆதூவ பாத்துக்கறேன்…” என்று சொல்லி பிரபாகரனை அனுப்பி வைத்தாள்.
அவன் படியிறங்கும் போது, இரண்டாம் தளத்தில் பிரபாகரனுக்கு சற்றும் குறையாத உடல் தோற்றத்துடனும், கம்பீரத்துடனும் வந்தான் பிரபாகரனின் தம்பி கருணாகரன். நித்தியாவின் கணவன்.
“என்னடா ரெடி ஆகிட்டியா?…” என்று தம்பியின் தோளில் தட்டி விட்டு, சேர்ந்து படியிறங்க
“ஆமா அண்ணா.. சாப்பிட்டு கிளம்பத்தான்…” என்று தமையனுக்கு பதில் கூறியவாறு கீழ் தளம் வந்தனர்.
ஜல்லிக்கட்டு காளைகளாக துள்ளி குதித்து வரும் மகன்களை பெற்றவர்கள் பெருமை பொங்க, வாஞ்சையாக பார்த்தனர்.
“அப்பா கூப்பிடீங்களாமே…” என்று பிரபாகரன் கேட்க, தனது கையில் இருந்த பெண்ணின் புகைப்படத்தை பிரபாகரனிடம் நீட்டி, “பிடிச்சிருக்கானு பார்த்து சொல்லுப்பா…” என்று சொல்ல
தாயை முளைத்தவன், தரகர் முன் எதுவும் கூற பிடிக்காமல், அதை வாங்கி வேண்டா வெறுப்பாக பார்த்தான்.
அழகிய பெண், புடவையில் புன்னகையுடன் நின்று இருந்தாள்.
பிரபாகரன் கைக்கு புகைப்படம் மாறியதும், தரகர் பொன்னம்பலம் “பொண்ணு பேரு தாரணி.. படிச்ச பொண்ணு.. பக்கத்து ஊர் தேவரோட ஒரே பொண்ணு.. குலம், கோத்திரம், அந்தஸ்து, வசதிக்கு ஒரு குறையும் இல்ல…” என்று அந்தப் பெண்ணின் விவரங்களை சொல்லவும்
அவரை எரிச்சலாக பார்த்தவன், “ரெண்டாம் தாரமா, 36 வயசுக்கு கிழவனுக்கு.. ஆறு வயசு பொண்ணுக்கு அம்மாவா வர சம்பந்தமானு கேட்டீங்களா?…” என்று கேட்க
“அதெல்லாம் பேசிடலாம் தம்பி…”
“என்ன பேசிடலாமா.. அந்த பொண்ணுக்கு இதுதானே முதல் கல்யாணம்…” என்று கேட்க
“அ..ஆமாங்க…” என்றார் அவர் சற்று தயங்கி
“உங்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா?.. பாத்தாலே சின்ன பொண்ணுனு தெரியுது.. அவளுக்குன்னு கனவுகள், ஆசைகள் இருக்கும்.. அது எல்லாத்தையும் பெரியவங்க விருப்பத்துக்காக குழி தோண்டி புதச்சிட்டு.. என்ன மாதிரி ஒருத்தன கல்யாணம் பண்ணிக்கணுமா..
…இப்போ நீங்க போய் பஞ்சாயத்து தலைவர் முருகானந்தம் வீட்டு சம்பந்தமுன்னு சொன்னா போதும்.. உடனே அந்த பொண்ணு வீட்டுல கட்டாயப்படுத்தி கட்டி வச்சிருவாங்க.. கட்டாய கல்யாணம் கடைசி வரைக்கும் காயத்த மட்டும் தான் தரும்.. காதல தராது.. முடிஞ்சா ஏற்கனவே கல்யாணமாகி விவாகரத்தான இல்ல விதவை, அந்த மாதிரி பொண்ணா பாருங்க..
…பொண்டாட்டி செத்த மறு வருஷம் ஆம்பள புது மாப்பிள்ள என்கிற மாதிரி, முதல் கல்யாணத்துக்கு பொண்ணு தேடுற மாதிரி தேடாதீங்க.. என்ன மாதிரி இருக்கிற ஒரு பொண்ண பாருங்க…” என்று சொல்ல
“தம்பி இந்த பொண்ணுக்கும் ஒரு சிக்கல் இருக்கு.. அந்த பொண்ணோட அக்கா வேற சாதிக்கார பையனோட ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்கிட்டா.. அதனாலயே நல்லவிதமா எந்த வரணும் அமையல.. மனசு விட்டு போன தேவரும் எப்படிப்பட்ட சம்பந்தமானாலும் பரவால்ல பாருங்க.. குடும்பம் நல்லதா இருந்தா போதும்னு தான் சொன்னாங்க.. அதுதான் இந்த வரன இங்க கொண்டுவந்தேன்…” என்று அவர் தரப்பு நியாயத்தை கூற
“இங்க பாருங்க தரகரே.. அந்த பெண்ணோட அக்கா ஓடிப்போய் கல்யாணம் பண்ணுனதுக்கு அந்த பொண்ண தாண்டிக்க முடியாது.. இது சாதாரண விஷயம்.. அதை புரிஞ்சுக்கிட்டு, அந்த பொண்ண நேசிக்க கண்டிப்பா ஒருத்தன் வருவான்.. அதுவரைக்கும் காத்திருக்க சொல்லுங்க.. எனக்கு நான் சொன்ன மாதிரி பொண்ணு இருந்தா மட்டும் பாருங்க.. இல்லையா விட்டுடுங்க…” என்று வெட்டு ஒன்று துண்டு இரண்டாக கூறிவிட்டு, சாப்பாடு மேஜையில் சென்று அமரவும், கருணாகரனும் அண்ணனுடன் சென்று அமர்ந்தான்.
எழுந்து சென்ற மகன்களை கவனித்த முருகானந்தம் “தரகரே இப்போ யாரு உன்கிட்ட பொண்ணு விவரம் எல்லாம் சொல்ல சொன்னா.. நாங்களே பேசி ஏதாவது சொல்லி அவன சம்மதிக்க வச்சிருப்போம்…” என்று தரகரை கடிந்து கொள்ள
“மன்னிச்சிடுங்க ஐயா..தம்பி இந்த மாதிரி பேசுவாருன்னு எதிர்பார்க்கலைங்க…”
“சரி ,சரி.. நான் அவன சம்மதிக்க வைக்கிறேன்.. நீ பொண்ணு வீட்டுல பேசி சம்மதம் வாங்கு.. அவன் சொல்ற மாதிரி பொண்ண எல்லாம் இந்த வீட்டு மருமகளா ஏத்துக்க முடியாது…” என்று சொன்னவர்,
தனது சட்டை பையில் இருந்து பணத்தை எடுத்துக் கொடுக்க, அதை வாங்கிக் கொண்ட தரகர் பொன்னம்பலம் “சரிங்க அடுத்த முறை வரும்போது நல்ல செய்தியோட வாரேன்ங்க…” என்று விடை பெற்று சென்றார்.
முருகானந்தம் மூத்த மகனை எப்படி வழிக்கு கொண்டு வருவது என்று யோசித்தவாறு, சாப்பாட்டு மேஜையில் சென்று அமர்ந்தார்.
முருகானந்தத்தின் வீட்டிலிருந்து வெளியே வரும் பொன்னம்பலத்தை அங்கு வேலைக்கு புதிதாக சேர்ந்திருக்கும் வாணி கண்டவள்
“என்ன அண்ணே இந்த பக்கம்…?” என்று கேட்க
“அட வாணி..! நீ எங்க இங்க..?”
“அத ஏன் கேக்குறீங்க.. அந்த குடிகாரனோட மாரடிக்க முடியலண்ணே.. அதான் ஐயா வீட்ல வேலைக்கு சேர்ந்துட்டேன்…” என்று சொல்ல
“ஓ.. சரி சரி.. நான் கல்யாண விஷயமா தான் ஐயாவ பாத்துட்டு வாரேன்…” என்று பொன்னம்பலம் சொல்ல
“கல்யாணமா..! யாருக்கு துர்க்கா அம்மாவுக்கா…?” என்று ஆவலாக வாணி கேட்க, சட்டென ஒரு நொடி வீட்டை எட்டிப் பார்த்த பொன்னம்பலம்
“அட நீ வேற ஏம்மா.. அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்ல… இது பெரிய தம்பிக்கு இரண்டாவது கல்யாணம்… 10 நாளைக்கு முன்னாடி என்னைய கூப்பிட்டு விடவும்.. நானும் சந்தோஷமா துர்க்கா பாப்பாவுக்கு பாக்கணுமானு கேட்டுப்புட்டேன்.. அவ்வளவுதான் நெற்றிக்கண் திறந்து என்னைய எரிக்காத குறையா முறச்சி பார்த்தார் ஐயா… அதோட வாய திறக்கலயே நான்
…ஐயாவோட குணம் அறிஞ்சாலும், பயமா இருந்தாலும்.. ரெண்டு தடவை நல்ல வரன் இருக்கு.. துர்க்கா பாப்பாவ பத்தி எல்லாமும் தெரிஞ்சவங்கதான் பேசி முடிச்சிடலாமான்னு கேட்டேன்…
… அதுக்கு அவளுக்கு இனி கல்யாணமும் இல்ல புருஷனும் இல்ல அவ வாழ்க்கை எப்பவோ முடிஞ்சு போச்சுன்னு கராரா சொல்லிட்டாங்க…” என்று கவலையாக சொல்ல ,
“என்னணே இப்டி இருக்காங்க.. ஆம்பள பிள்ளைக்கு ஒரு நியாயம் பொம்பள பிள்ளைக்கு ஒரு நியாயமா… பாவம்ணே அந்த பொண்ணு… அறியா வயசுல தெரியாம பண்ணின தப்புக்கு இத்தன வருஷம் சிறைவாசம்…” என்று வாணி பெருமூச்சு விட
“நீயும் நானும் பாவம் பார்த்து என்ன பண்ண முடியும்.. இந்த வீட்டில இருக்கிறவங்களுக்கு அந்த பொண்ணோட உணர்வுகளும் மனசும் புரியலையே…” என்று சொன்னவர்
“சரிமா நான் வாரேன்.. நீயும் விவரம் தெரியாம வார்த்தையை விடாத.. துர்க்கா பாப்பாவுக்கு விடிவுகாலம்னு ஒன்னு வராமல போகும்…” என்று சொல்லிவிட்டு செல்ல ,
ஹூம்..என்று பெருமூச்சு விட்ட வாணி “அதுவும் வயசு புள்ள.. வாழணுமேனு ஏன் யோசிக்க மாட்டேங்கிறாங்க…” என்று புலம்பியவாறு வீட்டினுள் நுழைந்தாள்.
யார் வருந்தியும் ,யார் வேதனை பட்டும் என்ன பயன் அவள் விதியினால் ஒடுக்கப்பட்டவள்…காதலினால் சபிக்கப்பட்டவள்…
முருகானந்தம், பிரேமாவதி தம்பதியினருக்கு மூன்று பிள்ளைகள்.
மூத்தவன் பிரபாகரன். இப்போது வயது 36, அவன் மனைவி பூர்ணா, பிரபாகரனுடன் சண்டை போட்டுவிட்டு தாய் வீடு சென்றவள், போகும் வழியில் விபத்தில் சிக்கி இறந்து, ஒரு வருடங்கள் முடிந்து விட்டது.
பிரபாகரன், பூர்ணாவுக்கு ஒரு மகள் ஆதுரியா. வயது ஆறு வயது.
இரண்டாவது ஆண் வாரிசு கருணாகரன். வயது 32, அவன் மனைவி நித்தியா, வயது 26.
இவர்களுக்கு மூன்று வயதில் ஒரு மகன்.
பிரபாகரன், கருணாகரன் இருவரின் திருமணம் பெற்றவர்கள் பார்த்து முடிவு செய்து, ஊர் அறிய கோலாகலமாக நடந்தது.
அந்த வீட்டின் மகாலட்சுமி, மூன்றாவது பெண் வாரிசு, 14 வயது வரை சீதேவியாக கொண்டாடப்பட்டவள் துர்க்கா.
வயது 29, ஐந்தரை அடி தங்கச்சிலை, பார்ப்பவர்கள் கண்களை கூசச் செய்யும் பொழிவும் வனப்பும் கொண்டவள்.
அப்சரஸ் என்னும் சொல்லுக்கு அர்த்தமே அவள் தான்.
செல்வ செழிப்பான குடும்பத்தில், அன்புக்கு பஞ்சம் இன்றி, அதிக அழகோடு கடவுள் படைத்துவிட்டார்.
ஆனால் அந்த அதீத அழகும், அதீத செல்வமும் அவள் வாழ்க்கையை அலங்கோலமாக மாற்றி விட்டது.
14 வயதில் பாடசாலை படிக்கும்போது தனது தோழி சரண்யாவின் அண்ணனான 19 வயதான சிவா என்பவன், துர்க்காவின் அழகில் ஈர்க்கப்பட்டு, அவளிடம் காதலிப்பதாக சொல்ல
பருவ வயதில் இருந்த துர்க்காவிற்கு காதல் என்ற வார்த்தைக்கு ஆழ்ந்த அர்த்தம் புரியவில்லை.
ஆனால் தன்னிடம் ஒரு பையன் முதன் முதலாக அழகாக இருக்கின்றாய், காதலிக்கின்றேன் என்று சொல்ல, அந்த வயதுக்கே உரிய ஹார்மோன் மாற்றங்கள் உள்ளுக்குள்ள நிகழ, வயிற்றில் பட்டாம்பூச்சி பறக்க ஆரம்பித்தது.
சுற்றி இருந்த தோழிகளும் துர்க்கா, சிவா பேர் பொருத்தம், ஜோடி பொருத்தம் எல்லாம் சூப்பர் என்று ஏத்தி விட,
தனக்குள் ஏற்பட்ட இன கவர்ச்சியை காதல் தானா என்று யோசிக்கும் முன்னமே, அடுத்த கட்டமாக தினமும் பார்த்துக் கொள்வது, பேசிக் கொள்வது என்று நாளுக்கு நாள் அவர்கள் பழக்கம் அதிகரித்து
இந்த தகவல் துர்க்காவின் வீட்டிற்கு தெரிந்து, முருகானந்தம் எந்தவித கேள்விகளும் கேட்காமல், அவளை அடித்து கண்டித்து, வெளியூரில் வேறு பாடசாலை ஹாஸ்டலில் தங்க வைத்து படிக்க முடிவு எடுக்க,
பிரபாகரனும், கிருபாகரனும் சிவாவை தேடி சென்று அடித்து, மிரட்டி விட்டு வர, நண்பர்கள் முன் அவமானப்பட்ட சிவா என்ன நடந்தாலும் துர்க்காவை விடக்கூடாது,
அதைவிட அவளின் செல்வ செழிப்பு, வசதியான வாழ்க்கை என, அனைத்தையும் யோசித்தவன் தன் தங்கை மூலம் துர்க்காவிற்கு சேதி அனுப்ப,
துர்காவும் அன்பான பெற்றவர்கள் அண்ணன்களின் கண்டிப்பின் காரணம் புரியாமல், சிவாவின் திட்டப்படி அவளின் நகைகள், உடையுடன் வீட்டை விட்டு வெளியேறிவிட்டாள்.

One thought on “மீண்டும் கேட்குமா பூபாளம் 01

  • Gayathri Sgh

    ஆரம்பமே அமர்க்கலாமா இருக்கு 👌…
    பிரபாகரன் கிராமத்து காளை செம்ம 👌😍😍😍..
    துர்கா இப்படி ஒருத்தன நம்பி வாழ்க்கையை துலாச்சிச்சுடு நிக்கிறோயே 🤦‍♀️.. உனக்குன்னு ஒருத்தன் வருவான்…..
    Very nice story 👌😍❤️❤️❤️

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!