Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

14. விர்சாலி - மீண்டும் கேட்குமா பூபாளம்

மீண்டும் கேட்குமா பூபாளம் 03

அத்தியாயம் 03

“கிச்சு கிச்சு தாம்பலம்.. கியா கியா தாம்பலம்.. நண்டு ஓடுது நரி ஊருது…” என்று துர்க்கா விகர்ணனுக்கு கிச்சு கிச்சு முட்டி விட, அவனும் மெத்தையில் உருண்டு புரண்டு சிரித்துக் கொண்டிருந்தான்.



Advertisement

அந்நேரம் கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தாள் நித்தியா. அவள் வரவும் வேகமாக கட்டிலில் இருந்து எழுந்து நின்றாள் துர்க்கா.

“எதுக்கு எழுந்து நிக்கிறீங்க? நான்தான் உட்காருங்க…” என்ற நித்தியா மகன் அருகில் அமர்ந்து கொள்ள, “அம்மா…!” என்று விகர்ணன் தாயின் கழுத்தை கட்டிக் கொண்டான்.

Advertisement

Advertisement

மகனுக்கு கன்னம் இரண்டிலும் முத்தம் வைத்தவள் “கண்ணா உன் டோயிஸ் எங்க?…” என்று கேட்க, விகர்ணன் அறையின் ஒரு மூலையில் இரைந்து கிடந்த விளையாட்டுப் பொருட்களை காட்ட,

அதன் அருகில் மகனை விட்டவள் “இதோட விளையாடுங்க…” என்று சொல்லிவிட்டு மீண்டும் கட்டிலில் வந்து அமர்ந்து கொண்டாள். இன்னமும் துர்க்கா நின்று கொண்டு தான் இருந்தாள்.

Advertisement

“அட உட்காருங்க.. நான் ஒன்னும் உங்க அத்தையோ அம்மாவோ இல்ல.. எதுவும் சொல்ல மாட்டேன்…” என்று சொல்ல,

தனது கட்டில் மெத்தையிலேயே தயக்கமாக அமர்ந்து கொண்டாள் துர்க்கா. அதற்கு காரணம் அவளின் அன்னையும் அத்தையும். சீர்திருத்த பள்ளியில் இருந்து வீட்டுக்கு வந்த புதிதில் ஒரு சில தினங்கள் எந்த வித்தியாசமும் இருக்கவில்லை.

அதன் பின் பிரேமாவதியின் பேச்சுக்கள் அமிலமாக அவள் மீது கொட்ட துவங்கியது. அதற்கு உறுதுணை துர்க்காவின் அத்தை முருகானந்தத்தின் ஒரே தங்கை சகுந்தலா.

திருமணமான மூன்று வருடங்களில் மின்னல் தாக்கி, சகுந்தலாவின் கணவன் இறந்து விட, குழந்தை இன்றி தனி மரமாக நிற்க வேண்டிய அவல நிலை அவருக்கு.

அந்த நாட்களில் மறுமணம் என்பது கனவில் நினைக்க கூட கசந்து வழிந்த காலம் என்பதால் அவரை முருகானந்தம் அப்படியே விட்டுவிட்டார்.

சகுந்தலாவும் மாமியார் வீட்டிலேயே தங்கிவிட்டார். அவரின் கருத்து பெண்கள் தங்கள் உணர்வுகளை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். அதற்கு சிறந்த வழி தவக்கோல வாழ்க்கை.

அவரின் போதனைகளா, இல்லை பிரேமாவதியின் மனதில் மகள் மீது ஏற்பட்ட அதிர்ப்தியா, தெரியவில்லை. தன் உணர்வுகளை கட்டுப்படுத்த தெரியாமல், முடியாமல் தான் அந்த இரண்டாம் கெட்டான் வயதில் துர்க்கா ஆண்துணை தேடிக் கொண்டதாக நம்பினார்.

அப்போதிலிருந்து மெத்தையில் படுக்கக் கூடாது, படுத்தால் ஆணுடன் கட்டி உருள தோற்றுமாம் என்று கொச்சையாக பேசினார். திரைப்படம் பார்த்தாலோ பாடல்களை ரசித்து கேட்டாலோ “உன்னோட உணர்வுகள கட்டுப்படுத்த முடியலல.. திரும்பவும் ஆம்பிள சுகம் கேட்குதா?…” என்று கொதி திராவகத்தை ஊற்றினார்.

இவ்வளவு ஏன் பிடித்த உணவை கூட ருசித்து சாப்பிட முடியாது. உப்பு, காரம், வெங்காயம், மாமிச உணவுகள் உணர்வுகளை தூண்டிவிடுமாம் என்று உப்பு சப்பு இல்லாத உணவை தான் உண்ண கொடுத்தார்.

இவற்றை வீட்டு ஆண்கள் கேட்கும் முன்னரே துர்க்கா கடவுளை தொழுது சேவை செய்ய விரும்பி, அவளாக துற வாழ்க்கை வாழ்வதாக கூறிவிட்டார்.

ஆண்களும் சிறிய வயதில் அதிகமாகவே வாழ்க்கையின் கோரத்தை பார்த்தவள் மனதளவில் எல்லாவற்றையும் வெறுத்து விட்டாள் என்று நம்பினர்.

அதற்கு ஏற்றார் போல் காவி நிறத்தில் புடவை, சகுந்தலாவுடன் கோயில் செல்வது, அறையில் கூட பக்தி புத்தகங்கள் என்று இருந்தன. அவைகள் துர்க்கா மீது திணிக்கப்பட்டது என்று யாருக்கும் புரியவில்லை.

“உங்க பெரிய அண்ணனுக்கு கல்யாணம் பண்ண போறாங்க தெரியுமா?…” என்று நித்தியா கேட்க

“இல்ல அண்ணி…” என்றாள் தாழ்ந்த குரலில் துர்க்கா.

“கொஞ்ச நேரம் முன்னாடி தான் தரகர் பொண்ணுங்க ஃபோட்டோ கொண்டு வந்தாங்க…” என்று நித்தியா சொல்ல

“ஓ.. முடிவு பண்ணிட்டாங்களா? அண்ணாக்கு பிடிச்சிருக்கா?…” என்று மலர்ந்த முகமாக துர்க்கா கேட்க,

“முடிவு பண்ணியாச்சு.. ஆனா உங்க அண்ணனுக்கு தான் பயமா இருக்கு போல…” என்று ஏற்ற தொனியில் நித்தியா சொல்ல,

யோசனையாக நெற்றியை சுருக்கிய துர்க்கா “என்ன பயம்?…” என்று கேட்க

“ஹா, நீங்க இந்த வீட்டுல இருக்கிற வரைக்கும் வேற ஒரு பொண்ணு வாக்கப்பட்டு வந்து சந்தோஷமா வாழ்ந்துட முடியுமா என்ன?…” என்று வாழை மரத்தில் கத்தியை சொருகுவதை போன்று நறுக்கென்று கேட்டு விட

பிஞ்சு மனது வேதனை தாங்காமல் வெதும்ப நித்தியாவை அடிபட்ட பார்வை பார்த்தாள் துர்க்கா. “அண்ணி என்னால தான் நீங்களும் பெரிய அண்ணியும் சந்தோஷமா வாழலனு சொல்றீங்களா?…” என்று குரல் அடைக்க கேட்க

“அததான் இந்த வீட்டுக்கு வந்ததுல இருந்து சொல்லிட்டு இருக்கேன்.. நீங்களும் வாழாம, வீட்டுக்கு வாழ வந்த பொண்ணுங்களையும் சந்தோஷமாக வாழ விடாம இருக்க இப்படி ஒரு ஜென்மம் எதுக்கு…” என்று தீக்கங்குளாக வார்த்தையை நித்தியா கொட்ட.

துடிதடித்துப் போனாள் துர்க்கா “அண்ணி!…” என்று வலியோடு அழைத்தவள் கண்கள் வெந்நீரை கொட்டும் வேலையை செவ்வனே செய்ய,

துர்க்காவை பார்த்த நித்தியா எரிச்சலாக “ப்ச்.. எதுக்கு இப்படி சீன் போடுறீங்க துர்க்கா?…” எனவும் அடிபட்ட பார்வை பார்த்தாள் தன் இரண்டாவது அண்ணியை.

அவளை விட இளையவள்தான். ஆனால் அண்ணி ஆயிற்றே அந்த மரியாதையை என்றும் குடுக்காமல் இருந்ததில்லை.

அதை உணர்ந்தவள் போல் நித்தியா “நான் உங்கள விட சின்னவள் தான்.. நீங்க என்ன அண்ணினு கூப்பிடும்போது நானும் அண்ணினு தான் உங்கள கூப்பிடனும்.. ஆனா துர்க்கானு பேர் சொல்லி கூப்பிட காரணம் நீங்கதான்…” எனவும்

இதற்கும் காரணம் நானா என்பது போல் நித்தியாவை பார்த்தாள் துர்க்கா.

“பின்ன உங்க அண்ணன கட்டிக்கிட்டதனால என்ன அண்ணினு கூப்பிடுறீங்க.. நீங்க தான் குடும்ப வாழ்க்கை வாழ பிடிக்காம தவ வாழ்க்கை வாழ்றீங்களே.. அப்புறம் எந்த அண்ணன முன்னிறுத்தி அண்ணினு கூப்பிடுறது..

…நாத்தனார் என்ற உறவுக்கு தண்டமா வீட்டுல இருந்து எங்க தாலிய இல்ல அறுக்குறீங்க.. உங்க அண்ணங்க வேற தங்கச்சிய வாழ வைக்க தெரியாம தாலி கட்டுனவள சந்தோஷமா வச்சிக்கவும் தெரியாம மண்ணு மாதிரி ஒரு வாழ்க்கை வாழ்ந்து எங்க வாழ்க்கைய குழி தோண்டி புதைச்சிட்டாங்க..

…தங்கச்சி வாழாம இருந்தா அவளுக்கு ஒரு வாழ்க்கைய அமைச்சு கொடுக்க துப்பில்ல.. இதுல தங்களோட வாழ்க்கைய தியாகம் பண்றாங்களாம் மடையனுங்க…” என்று வாய்க்கு வந்தது எல்லாம் சொல்லி அந்த வீட்டின் ஆண் வாரிசுகளை திட்டி தீர்த்தாள் நித்தியா.

அவளின் வார்த்தைகள் அதிகப்படியாக இருக்கலாம். ஆனால் அவள் வலிகளும் அதிகப்படியே.

ஆம் அவள் திருமணமான முதல் நாள் இரவில் கிருபாகரன் கூறிய முதல் வார்த்தை (எதுவாய் இருந்தாலும் நம் அறையில் மட்டுமே இருக்க வேண்டும் அறை கதவை தாண்டி விட்டால் ஒரு நாகரிக இடைவெளி இருக்க வேண்டும்) என்றுதான்.

நித்தியா அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் நாட்கள் நகர நகரத்தான் கிருபாகரனின் வார்த்தைகளின் பொருள் முழுதாக புரிந்தது.

அறைக்கு வெளியே நித்தியாவின் முகம் பார்த்து கூட பேசமாட்டான் கிருபாகரன். புதிதாக திருமணமான தம்பதிகளுக்கேயான விழித் தீண்டல்கள், செல்ல தூண்டல்கள், ஆசை பேச்சுக்கள் எதுவும் இருக்கவில்லை.

இவ்வளவு ஏன் திருமணமான இத்தனை நாட்களில் கோயிலுக்கு கூட இருவர் மட்டும் சேர்ந்து சென்றதில்லை. தங்கை ஒருத்தி தாளாத துயரிலும் தனிமையிலும் வாட, தாங்கள் வாழ்வதா என்ற குற்ற உணர்ச்சி.

தந்தையை எதிர்த்து அவளுக்கு ஒரு வாழ்க்கை அமைத்துக் கொடுக்க முடியவில்லையோ, தெரியவில்லையோ. தன்னை நம்பி வந்தவள் மனதை வதைத்துக் கொண்டிருந்தனர்.

பிரபாகரன், கிருபாகரன் தந்தை சொல்லை தட்டாமல் திருமணம் செய்து கொண்டவர்கள். முதலில் துணையை நெருங்க தயங்கினாலும் பின் தாம்பத்தியத்தில் கட்டிலில் இணைந்து, புடவை, நகை என்று தேவையான அனைத்தையும் நிறைத்தவர்கள் அன்பு, பாசம், அன்னியோன்யம் இவற்றை வழங்க தவறிவிட்டனர்.

கட்டிலின் நெருக்கம் மட்டும் காதலை தருமா…

இல்லை குழந்தை பெற்றுக் கொண்டால் கணவன் மனைவி உறவு பலப்படுமா…

அன்பாக நாலு வார்த்தை பேசியது கிடையாது, அறையை தவிர்த்து மனைவி வேறு இடத்தில் தவறி விழ நேர்ந்தால் கூட தாங்கிப் பிடிக்க தயங்கினர்.

வெளியிடங்களுக்கு தனியாக அழைத்துச் சென்றது கிடையாது, மனைவியுடன் சிரித்து பேசவே யோசித்தனர். தங்கையின் காதில் விழுந்து விட்டால் அவள் மனது கஷ்டப்படுமாம்.

இது எல்லாமும் துர்க்காவிற்கும் தெரியும். அதனால் தானே தன் வீட்டிலேயே அவள் சிறைவாசம் அனுபவிக்கின்றாள். தான் வெளியே வந்தால் தானே இது போன்ற சங்கடங்கள் என்று அவள் அறையிலேயே அடைந்து கொள்ள,

அவளை முன்னிறுத்தியே அறைகளுக்குள் மட்டும் அன்பை வெளிப்படுத்தினர் அவள் தமையன்மார்கள்.

இதில் நித்தியா அளவிற்கு இல்லை பூர்ணா. திருமணமாகி வந்த இரண்டாவது நாளிலிருந்து, தான் வாழவில்லை என்ற ஆதங்கத்தை துர்காவின் மீது வெறுப்பாகவும், தகாத வார்த்தைகளாகவும் கொட்டி தீர்த்தாள்.

சொல்ல போனால் நித்தியா திருமணமாகி வந்த பின்னர் பூர்ணாவிடம் சிக்கி வசவு சொற்களைக் கேட்டு வதைபடும் துர்க்காவை காப்பாற்றி இருக்கின்றாள்.

ஆனால் அது ஒரு வருடங்கள் மட்டுமே தொடர்ந்தது. அதன் பின் பூர்ணாவிடமிருந்து காப்பாற்றி விட்டாலும், வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதை போல் நித்தியாவும் வார்த்தை அம்புகளை வீசத் துவங்கி இருந்தாள்.

என்னவென்று பூர்ணாவின் வார்த்தைகளில் ஏன்தான் வாழ்கின்றோமோ என்று தோன்றும். நித்தியாவின் பேச்சில் எதை செய்து இதை சரி செய்யலாம் என்று தோன்றும். இப்போதும் அதைத்தான் யோசித்தாள்.

பதிலை நித்தியா கூறிவிட்டாள். ஆனால் அது இவள் கையில் இல்லையே. தான் வாழாமல் இருந்து தன் அண்ணன்களை நம்பி வந்தவர்களின் வாழ்க்கையையும் கெடுக்கின்றோம் புரிகின்றது.

ஆனால் தான் எப்படி வாழ்வது. இனி ஒரு வாழ்க்கை அவளுக்கு உண்டா என்ன. “நான் அண்ணங்க கிட்ட பேசுறேன்…” என்றாள்.

“என்ன பேச போறீங்க? இத்தன வருஷம் பேசாததையா பேச போறீங்க? உங்க அண்ணங்க மாறிட்டாங்களா என்ன..? இந்த பிரச்சனைக்கு ஒரே தீர்வு தான் இருக்கு.. நீங்க இன்னொரு வீட்டுக்கு மருமகளா போகணும்.. அப்பதான் இந்த வீட்டு மருமகளா இருக்கிற நானும் நாளைக்கு வரப்போற பொண்ணு சந்தோஷமா வாழ முடியும்.. பூர்ணா அக்காவோட என்னோட வயித்தெரிச்சல கொட்டிக்கிட்ட வரைக்கும் போதும் இன்னொரு பொண்ணு வயித்தெரிச்சலையும் வாங்கி கட்டிக்காதீங்க.. சீக்கிரமா இந்த வீட்ட விட்டு போற வழிய பாருங்க…” என்று இரு கைகளை அடித்து கும்பிட்டபடி கூறிய நித்தியா அறையை விட்டு வெளியேற,

ஓய்ந்து போய் கீழே நிலத்தில் அமர்ந்து விட்டாள் துர்க்கா. இன்னொரு வீட்டிற்கு மருமகளாக போவதா! அதற்கான தகுதியை எப்போதோ அவள் இழந்து விட்டாலே. அப்படித்தானே அவளின் பெற்றோரும் அத்தையும் கூறிவிட்டனர்.

‘ இந்த லட்சணத்தில் என்னை மட்டும் திருமணம் செய்து கொள்ளச் சொல்லி நச்சரித்தால் எப்படி? நானாக முடிவு எடுக்கும் அதிகாரத்தை இழந்துவிட்டனே…’ என்று மனதில் குமைந்தவாறு கண்களை வெற்று சுவற்றில் நிலைக்க விட்டு உறைந்து இருந்தாள்.

*****

அதே சமயம் அந்த ஊரின் மிகப்பெரிய கோயிலும், அவர்களின் தாத்தாவின் தாத்தா கட்டி கொடுத்த கோயிலுமான மாரியம்மன் கோயில் சன்னதியில் நின்று இருந்தான் பிரபாகரன்.

நல்ல விசாலமான கோயில். கோபுரத்தின் உயரம் மட்டும் 50 அடி உயரம் இருந்தது. வம்மி மரத்தின் நிழலில் ஆற்று மணல் பரவபட்டு இருக்க, சில சிறுவர்களுடன் தன் மகளை விளையாட விட்டவன், மகளையும் சன்னதியில் புன்னகையுடன் அமர்ந்திருந்த மாரியம்மனையும் பார்த்தான்.

விழிகளில் விரத்தியும், ஏளனம் கலந்த புன்னகையும் அவன் முகத்தில். காலையில் ஒரு ரோஷத்தில் தன்மகளை தானே பார்த்துக் கொள்வதாக சொல்லிவிட்டு, மகளுக்கு உணவை ஊட்டி விட்டவன் கையோடு மகளை அழைத்துக்கொண்டு, ஆர்ப்பரிக்கும் மனதை அடக்க, அனைத்துமாகிய அன்னையைத் தேடி வந்திருந்தான்.

வந்தவன் கைகள் கூப்பி வணங்கவில்லை. கைகளை பின்கட்டியபடி, தன் கோபத்தை விழிகளில் தேக்கி முறைத்து பார்த்துக் கொண்டிருந்தான்.

தன் தங்கையின் வாழ்க்கை எப்படி சீர் செய்வது புரியவில்லை. இதில் அவன் வாழ்க்கை வேறு ஏன் எதற்கு என்று யோசிக்கும் முன் எல்லாம் முடிந்து விட்டது.

இதோ தன் மகளுடன் ஒற்றையாக நிற்கின்றான். ஆறு வருட மணவாழ்க்கை கண்டிப்பாக அவனுக்கு இனிக்கவில்லை. இருந்தும் முழுதாக வெறுமையான மனநிலைக்கு அவன் வரவில்லையே.

ஆனால் தன் தங்கை அவள் வாழ்வில் சுழற்றிச் சென்ற கொடூர சூறாவளியின் பின் துறவறம் பூண்டது போல் தவ வாழ்க்கை வாழ்வது உறுத்துகின்றது.

அவளுக்கு திருமணம் செய்து வைக்கலாமென்றால் தந்தையும் தாயும் கூறும் கதை குடும்ப வாழ்க்கையவே துர்க்கா வெறுத்துவிட்டாள் என்றுதான். அதை மீறி மாப்பிள்ளை தேடினால் அவளைப் பற்றி தெரிந்து வேண்டாம் என்கின்றனர்.

முருகானந்தம் தன் கௌரவத்தை விட்டு கீழ் இறங்கி தன் மகளுக்காக வாழ்க்கை பிச்சை கேட்க மாட்டார் நன்கு தெரியும்.

தந்தை தாயினரின் பேச்சை முழுதாக நம்பாமல் துர்க்காவிடம் மாப்பிள்ளை பார்க்கட்டுமா என்று கேட்டால் அவளும் அதையே தான் கூறுகின்றாள்.

உலக வாழ்க்கையை வெறுத்து விட்டதை போல் பேசுகின்ற தங்கைக்காக சில விடயங்கள் யோசிக்கபோய், அது பூர்ணா நித்தியாவை துயரில் வீழ்த்தியது என்று நன்கு தெரியும்.

தான்தான் இப்படி என்றால் தன் தம்பி ராமானுக்கு ஏத்த லட்சுமணன் போல் அண்ணனை பின்தொடர்ந்தால் என்ன தான் செய்வது. கிருபாகரனிடம் எவ்வளவு எடுத்து கூறியாயிற்று அவன் கேட்கவில்லை.

தன் தம்பி தங்கையை பற்றி யோசித்தவாறு, தன் வாழ்க்கை அதற்கு மேல் வேதனை மூழ்கி இருப்பதை நினைக்க நெஞ்சில் மெல்லிய வலி.

அந்த வலிக்கு காரணமானவள் அவள் ஒருத்தி தான். பூர்ணா மொத்தமாக இவனை ஆட்டி படைக்க காரணம் அவனின் தோற்றுப்போன காதலை கதையை சொன்னதால்தான்.

One thought on “மீண்டும் கேட்குமா பூபாளம் 03

  • Gayathri Sgh

    Ohh ivalo natathuruka… Dhurgava avalaye kalyanam pannunu sonna avalum enna than pannuva.. Avanukku mapulai partha thane avalum ok soluva athu vittu avalaye poi thittuna 😡. Athuku nee un purusha kita solla vendiyathu thane nithiya…
    Dhurgavum pavam. Avalukunu oruthan varamala povan. Kandipa varuvan…

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!