ஊனாகி உயிராகினாய் பெண்ணே – 47
அத்தியாயம் – 47
மிருதுளாவின் மகனுக்கு ஒரு மாதம் முடிவடைந்திருந்தது, பிரசவத்திற்குப் பிறகு மிருதுளாவின் உடலும் ஓரளவிற்குத் தேறி வந்திருந்தது. ஆனால், குழந்தைக்கு தான் இன்னும் பெயர் சூட்டப்படவில்லை.
வீட்டில் இருப்பவர்கள் யாராவது, “குழந்தைக்கு ஏதாவது பெயர் யோசிச்சு வச்சிருக்கியா மிருதுளா?” என்று கேட்டால், “குழந்தையோட அப்பாவே வந்து பெயர் வைக்கட்டும்” என்று ஒற்றை வரியில் முடித்துக் கொள்வாள், குழந்தை பிறந்து ஒரு மாதமாகியும் ரன்வீர் வராதது காயத்ரிக்கு வருத்தத்தைத் தாண்டி கோபத்தை ஏற்படுத்தியது. லண்டனுக்கே நேராகச் சென்று அவனை இழுத்து வர வேண்டும் என்று அவருக்கு ஆவேசம் வந்தாலும், அவனது பிடிவாதமான குணம் தெரிந்ததால் அமைதியாகவே இருந்தார்…
Advertisement
குழந்தைக்கு முறையான பெயர் இல்லாததால் வீட்டில் உள்ள அனைவரும் லட்டு குட்டி, புஜ்ஜி குட்டி, தங்கம், ரத்னம் என்று ஆளாளுக்கு ஒரு செல்லப் பெயரைச் சொல்லி கொஞ்சி வந்தனர், அன்றும் அப்படித்தான் காயத்ரி தன் பேரனை மடியில் போட்டு ஆசையாகக் கொஞ்சி விளையாடிக்கொண்டிருந்தார். அவர் கொஞ்சுவதை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்த மிருதுளா, மெல்ல “அத்த…” என்று அழைக்க,..
”சொல்லுமா…” என்று அவர் குழந்தையைத் தாலாட்டியபடியே கேட்க, “அத்த, நான் லண்டன் போகலாம்னு இருக்கேன்” என்றாள்
சட்டென்று தன் கொஞ்சலை நிறுத்திவிட்டு அவளை அதிர்ச்சியாகப் பார்த்த காயத்ரி, “இந்த பச்சை பிள்ளையைத் தூக்கிக்கிட்டா?” என்று திகைப்புடன் கேட்டிட,.. ”ஆமா அத்த… இவனுக்கு பாஸ்போர்ட், விசா எடுக்க எப்படியும் பதினைந்து நாளுக்கு மேல ஆகிடும், அதுக்குள்ள குழந்தை இன்னும் கொஞ்சம் வளர்ந்துடுவான், இப்போ எல்லாம் பிறந்த மூணு நாள் குழந்தையைக்கூட பிளைட்ல கூட்டிட்டுப் போகத்தான் செய்றாங்க, ஆனா நான் ஒரு மாசம் முடியட்டும்னுதான் காத்துட்டு இருந்தேன், போதும் அத்த… இதுக்கு மேல என்னால காத்திருக்க முடியாது, அவரா என்னைத் தேடி வரமாட்டாரு, நான்தான் அவரைத் தேடிப் போகணும்” என்று உறுதியாகக் கூறினாள்…
மிருதுளாவின் பேச்சிலிருந்த வைராக்கியத்தையும், அவளது ஏக்கத்தையும் புரிந்து கொண்ட காயத்ரி, சிறிது நேரம் யோசித்துவிட்டு, “சரிம்மா… நீ நினைக்கிறபடியே போயிட்டு வா” என்று மனப்பூர்வமாக அனுமதி தர,
அதன் பிறகு, குழந்தைக்குப் பாஸ்போர்ட் மற்றும் விசா எடுப்பதற்கான வேலைகள் மும்முரமாக நடந்தன, நிதின் தான் முன்னின்று அனைத்து ஏற்பாடுகளையும் செய்தான், ரன்வீருக்குத் தெரியாமல் இந்தத் திட்டத்தை ரகசியமாக வைத்திருந்தனர்…
Advertisement
நாட்கள் மின்னல் வேகத்தில் கழிந்தன, மிருதுளா தனது பயணத்திற்கான உடமைகளை அடுக்கி முடித்தவள், குழந்தைக்குத் தேவையான கம்பளி ஆடைகள், மருந்துகள் என ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து எடுத்து வைத்தாள், அந்த இரு மாத
குட்டி உயிர், எதைப் பற்றியும் கவலையில்லாமல் தன் பாட்டியின் மடியில் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தான்…
Advertisement
கிளம்பும் நாளும் வந்தது, விமான நிலையம் வரை குடும்பத்தினர் அனைவரும் வந்து அவளை வழியனுப்பினர். சமுத்திரவேல், “பத்திரமா போயிட்டு வாம்மா… அவனை எப்படியாவது கூட்டிட்டு வந்துடு,” என்று உணர்ச்சிவசப்பட்டு தலையை வருடிட,… காயத்ரியோ அவளுக்கு நிறைய நிறைய தைரியம் கூறி அனுப்பினார்,..
மிருதுளா கையில் சிறு குழந்தையை வைத்திருந்ததால், விமான நிலையத்தில் அவளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது, லக்கேஜ் போடுவது, எமிக்ரேஷன் வரிசையில் நிற்பது என்று எதற்காகவும் அவள் காத்துக் கிடக்கவில்லை.
அதுமட்டுமில்லாமல், ரன்வீரின் கம்பெனி பெயரிலேயே விஐபி டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டிருந்ததால், ஏர்போர்ட் ஊழியர்களே அவளுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் முன்னின்று செய்தனர்…
Advertisement
விமானத்திற்குள் நுழைந்ததும், அவளது இருக்கை வசதியாக இருந்ததால் குழந்தையை உறங்க வைப்பதில் பெரிய சிரமம் இருக்கவில்லை, இரு மாதக் கைக்குழந்தை என்பதால், பால் கொடுத்ததும் அமைதியாக உறங்கிவிட்டான், விஐபி டிக்கெட் என்பதால், பணிப்பெண்களும் அவளுக்குத் தேவையான உதவிகளை உடனுக்குடன் செய்து கொடுத்தனர். இதனால் நீண்ட தூர பயணம் என்ற களைப்பே தெரியாமல் லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் வந்திறங்கினாள் மிருதுளா.
லண்டனில் அப்போது வெயில் காலம் என்பதால், மாலை நேரத்திலும் சூரியன் மறையாமல் வெளிச்சமாக இருந்தது, இந்தியாவின் சுட்டெரிக்கும் வெயில் போலன்றி, அங்குள்ள வெயில் இதமான தென்றலுடன் கலந்திருந்தது, இதனால் குழந்தையைப் போர்த்தி அழைத்துச் செல்வதில் பெரிய சிரமம் இருக்கவில்லை…
அது மட்டுமின்றி விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த மிருதுளாவிற்கு அந்நிய தேசம் என்ற பயம் துளியும் ஏற்படவில்லை. அதற்குக் காரணம், அங்கு அவளை வரவேற்க நிதினிற்குத் தெரிந்த நம்பிக்கையான டிரைவர் ஒருவன் ஏற்கனவே தயாராகக் காத்திருந்தது தான், நிதின் ரகசியமாக திட்டமிட்டு அந்த டிரைவரை அனுப்பி வைத்திருந்தான்.
”மேடம், நான் நிதின் சார் அனுப்பின டிரைவர். வாங்க…” என்று ஆங்கிலத்தில் மரியாதையுடன் அழைத்தவன், அவளது லக்கேஜ்களை வாங்கிக்கொண்டு காரைத் திறந்தான்…
லண்டனின் இதமான வெயில் காலத்து மாலைப் பொழுது அது. கார் நகரின் நெரிசலான பகுதிகளைக் கடந்து, அமைதியான அதே சமயம் பிரம்மாண்டமான ஒரு பகுதிக்குள் நுழைந்தது. அது ரன்வீரின் தனிப்பட்ட பேலஸ் போன்ற பங்களா. நகரின் இரைச்சலில் இருந்து விலகி, மிக நேர்த்தியான வேலைப்பாடுகளுடன் கூடிய அந்த வீடு, ரன்வீரின் தனிமையைக் கொண்டாடுவது போல் பிரம்மாண்டமாக நின்றது.
ரன்வீரின் அந்தத் தனிப்பட்ட வீட்டிற்கு மிருதுளா வந்து சேர்ந்தபோது, அங்கே ரன்வீர் இல்லை, அவன் வழக்கம்போல அலுவலகத்திற்குச் சென்றிருந்தான்.
நிதின் கொடுத்திருந்த ரகசியத் தகவலின்படி, அங்கிருந்த பாதுகாவலர் எவ்விதக் கேள்வியும் கேட்காமல் மரியாதையுடன் அவளை வரவேற்றார், ரன்வீருக்குத் தெரியாமலேயே நிதின் அந்தச் செக்யூரிட்டியிடம் பேசி வைத்திருந்தது தான் அதற்கு காரணம்..
அந்த வீடு மிகவும் பிரம்மாண்டமாக இருந்தது. ஆனால், ரன்வீரின் மனநிலையைப் பிரதிபலிப்பது போல அங்கிருந்த அலங்காரங்கள் எல்லாம் ஒருவித அமைதியையும் தனிமையையும் சுமந்திருந்தன. சுவர்களில் மாட்டியிருந்த ஓவியங்கள் கூட ஏதோ ஒரு தேடலைச் சொல்வது போலத் தோன்றியது, வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் ரன்வீரின் வாசனை நிறைந்திருந்தது.
’இவ்வளவு பெரிய வீட்ல அவர் தனியாவா இத்தனை மாசமா இருக்கார்?” என்று நினைக்கும் போதே மிருதுளாவின் கண்கள் கலங்கின…
கையில் இருந்த குழந்தை மெல்லச் சிணுங்கத் தொடங்கவே, அவனுக்குப் பால் கொடுத்து அங்கிருந்த ஒரு அறையில் உறங்க வைத்தவள், மெல்ல அந்த வீட்டை அலச ஆரம்பித்தாள்.
களைப்பாக இருந்தாலும் ஓய்வெடுக்கும் மனநிலை அவளுக்குக் கொஞ்சமும் இல்லை, மாடியில் இருந்த ஒரு அறைதான் ரன்வீர் பிரத்யேகமாகப் பயன்படுத்தும் அறை என்பதைப் புரிந்து கொண்டவள், கீழே உறங்கிக் கொண்டிருந்த குழந்தையை மெதுவாகத் தூக்கி வந்து அந்த அறையின் மெத்தையில் படுக்க வைத்தவள், தன் உடமைகளையும் அதே அறைக்கு எடுத்து வந்து அங்கேயே வைத்து விட்டாள்,..
குளித்தால் களைப்பு நீங்கி மனது கொஞ்சம் புத்துணர்ச்சி பெறும் என்ற எண்ணத்தில் அவள் குளியலறைக்குள் நுழைந்து கொள்ள, சரியாக அடுத்த சில நிமிடங்களில் தான் ரன்வீரின் கார் அந்த வீட்டின் போர்டிகோவில் வந்து நின்றது. செக்யூரிட்டி மிருதுளா வந்ததைப் பற்றி ரன்வீரிடம் மூச்சுக்கூட விடவில்லை, நிதினின் அன்பான மிரட்டல் அப்படி!
களைப்புடன் வீட்டினுள் நுழைந்த ரன்வீருக்கு, அன்று ஏனோ வீடு வித்தியாசமாகத் தோன்றியது. காற்றில் ஒரு மெல்லிய மாற்றத்தை அவனால் உணர முடிந்தது. பல மாதங்களாகத் தனிமையில் உறைந்து கிடந்த அந்த வீட்டில், ஏதோ ஒரு உயிர் துடிப்பு புதிதாக சேர்ந்திருப்பது போல் அவனுக்கு ஒரு பிரம்மை தட்டிட, வீட்டைச் சுற்றி முற்றிப் பார்த்தான், ஆனால் எதுவும் அவன் கண்களுக்குத் தெரியவில்லை.
’எல்லாம் என் மனப்பிராந்தி’ என்று தனக்குள் முணுமுணுத்தபடி, தனது அறை நோக்கி மாடிப்படிகளில் ஏறினான், அலுவலகக் கோப்புகளை மேஜையில் வைத்துவிட்டு, சட்டையைக் கழற்ற முற்பட்டவன் தற்செயலாகத் தனது படுக்கையைப் பார்த்த கணம்
இதயம் ஒரு நிமிடம் துடிப்பதை நிறுத்தியதை போல் இருந்தது..
வெள்ளை நிற மெத்தையின் நடுவே, மிகச்சிறிய உருவமாய், தன் பிஞ்சு கரங்களை மார்போடு அணைத்தபடி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தது ஒரு கைக்குழந்தை, ரன்வீர் அப்படியே சிலையாக உறைந்து நின்றான், மூச்சைக் கூட பலமாக விடத் துணியவில்லை.
அந்த குழந்தையின் முகத்தை கூர்ந்து கவனித்தான், அவன் போனில் பார்த்த அதே முகம்… அதே ஜாடை… இப்போதோ நேரில்! தன் கண்களையே அவனால் நம்ப முடியவில்லை. ‘இது கனவா? நான் பைத்தியம் ஆகிட்டேனா?’ என்று அவன் மனம் பிதற்றிட, நடுக்கத்துடன் மெல்ல மெத்தை அருகே சென்றவன், குனிந்து அந்த குழந்தையின் முகத்தைப் பார்த்தான்.
குழந்தையின் பாலில் நனைந்த இதழ்களும், அந்த மென்மையான சுவாசமும் அது நிஜம் என்பதை அவனுக்கு உணர்த்தியது.
ரன்வீரின் கண்கள் கலங்கத் தொடங்கின, இது தன் மகன் தான் என்பது ஆழமாக புரிந்தது, தன் மகனைத் தொடத் துடித்த கைகளை அடக்கிக் கொண்டு அவன் திகைத்து நிற்க, அப்போது குளியலறையின் கதவு திறக்கப்படும் சத்தம் கேட்டது
ஈரக் கூந்தலைத் துடைத்தபடி வெளியே வந்த மிருதுளா, அங்கே சிலையாகத் தன்னை பார்த்துக் கொண்டு நின்ற ரன்வீரைக் கண்டதும் அப்படியே நின்றாள், இருவரின் விழிகளும் சந்தித்துக் கொண்ட அந்த நொடி, காலம் அப்படியே உறைந்து போனது.
அடுத்த கணமே அவன் விழிகள் கோபத்தில் சிவக்க, “யாரை கேட்டு என் வீட்டுக்குள்ள நுழைஞ்ச?” என்று ஆவேசமாகக் கேட்டான். அவனது கனத்த குரல் அந்த அறையையே அதிரச் செய்ய, ஆழ்ந்த உறக்கத்திலிருந்த பிஞ்சு உயிர் திடுக்கிட்டு விழித்து, வீறிட்டு அழத் தொடங்கியது.
குழந்தையின் அழுகுரல் கேட்டதும் ரன்வீர் தான் முதலில் பதறிப் போனான், ஆத்திரத்தில் கத்தியவன், இப்போது என்ன செய்வதென்று தெரியாமல் தவிப்புடன் குழந்தையைப் பார்த்தான். அவளோ அசையாமல் அவனை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவளது மௌனம் அவனது தவிப்பை இன்னும் ஏற்றியது. “ஏன்டி… மரம் மாதிரி நின்னு என்னையே பார்த்துட்டு இருக்க? வந்து குழந்தையை சமாதானப்படுத்து!” என்று அதிகாரமாகச் சொல்ல,.. ”அழ வச்சது நீங்க தானே? நீங்களே சமாதானப்படுத்துங்க,” என்று மிக சாதாரணமாகக் கூறிவிட்டு, அவள் தன் கூந்தலை உலர்த்தத் தொடங்கிவிட, ரன்வீருக்கு ஆத்திரம் உச்சிக்கு ஏறியது. வாயில் நல்ல நல்ல வார்த்தைகள் எல்லாம் வந்தாலும், குழந்தையின் முன்னால் எதையும் பேச முடியாமல் விழுங்கிக் கொண்டான்.
குழந்தை விடாமல் அழ, வேறு வழியின்றி மெல்லக் குழந்தையின் அருகில் அமர்ந்தான். ஜிம்மில் எண்பது கிலோ எடையைத் தூக்கி விளையாடுபவன், அந்த ஐந்து கிலோ உயிரைத் தூக்கப் பயந்து நடுங்கினான். எப்படித் தூக்க வேண்டும், எங்கே பிடிப்பது என்று எதுவுமே அவனுக்கு தெரியவில்லை. சிறு வயதில் தம்பி வினோத்தைத் தூக்கியது தான் ஞாபகம், அதன் பிறகு அவன் எந்தக் குழந்தையையும் தொட்டது கூட இல்லை.
நடுக்கத்துடனும் மிகுந்த ஜாக்கிரதையுடனும் அந்தக் குட்டி உருவத்தை மெல்லத் தூக்கித் தன் அகன்ற மார்போடு அணைத்துக் கொண்டான். முதல் முறை தன் உயிர் நீரில் ஜனித்த குழந்தையைத் தூக்குகிறான்!
அந்தக் கணம்… அவனது மனதில் இத்தனை காலமாய் மூட்டி வைத்திருந்த கோபம், வஞ்சம், வைராக்கியம் என அனைத்தும் பனிக்கட்டியாய் உருகத் தொடங்கின. அவனது இதயத் துடிப்புக்கும் குழந்தையின் அழுகைக்கும் இடையே ஒரு புதிய ராகம் பிறந்தது, தன் மார்பின் சூட்டில் அந்தப் பிஞ்சு முகம் ஒட்டிக்கொண்டதும், ரன்வீரின் விழிகளில் இருந்து தடையின்றி நீர் வழிந்தது.
”சாரிடா கண்ணா… அப்பா தெரியாம கத்திட்டேன்… அழாதடா…” என்று அவன் ரகசியமாய் முணுமுணுக்க, ரன்வீரின் வாசனையும் அந்த அணைப்பும் ஏனோ குழந்தைக்குப் பிடித்துப் போக, விக்கி விக்கி அழுத குழந்தை, மெல்ல சிணுங்கிக் கொண்டே அவன் சட்டையைப் பிடித்துக் கொண்டு அமைதியானது.
மிருதுளா கண்ணாடியின் வழியாக இதைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தாள். ரன்வீர் தன் மகனைத் தூக்கிக் கொண்டு மெல்ல அறையினுள் நடக்க ஆரம்பித்தான். அவன் முகம் இப்போது ஒரு சிங்கத்தைப் போல இல்லை, தன் குட்டியைக் காக்கும் ஒரு பாசக்காரத் தந்தையாய் மாறியிருந்தது.
அமைதியான குழந்தையை மெத்தை மீது மீண்டும் கிடத்தியவன், நிமிர்ந்து அவளைப் பார்த்தான். அவன் கண்களில் இருந்த அந்த ஈரப்பதம் அவளுக்கு ஒரு நம்பிக்கையைத் தர, ஏதோ பேச முற்பட்டவள், அடுத்த நொடி அவன் இதழ்களிலிருந்து வெளிவந்த வார்த்தைகளால் மனம் வெதும்பி நின்றாள்…
