Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

38. அர்ச்சனா நித்தியானந்தம் - காதலும் கடத்தப்படும்Contest Stories 2026

காதலும் கடத்தப்படும் – 19

காதலும் கடத்தப்படும் – 19

 

“மதனா இப்ப எதுக்கு இங்க கூட்டிட்டு வந்திருக்க? உன்னை நம்பி வந்தேன் பாரு” என்று அஜூ கோவப்பட,



Advertisement

“அஜூ தயவு செஞ்சு உள்ள வா” என்று வலுக்கட்டாயமாக உள்ளே அவனை அழைத்துச் சென்றான்.

 

இருவரும் வாயிலில் நின்றிருக்க, வீட்டில் இருந்து வெளியே வந்தார், வேதநாயகம். 

Advertisement

“என்னடா, ரெண்டு பேரும் எப்படி இருக்கீங்க?” என்றார் இவர்களை நோக்கி.

Advertisement

அர்ஜுனுக்கு துளியும் விருப்பம் இல்லாமல் நின்றிருக்க, மதன் புன்னகையோடு நின்றிருந்தான்.

“சார், நல்லா இருக்கீங்களா?” என்றான், மதன்.

“நல்லாயிருக்கேன், என்ன விஷயம்?”

Advertisement

“சார், எங்களுக்கு ஏதாவது வேலை போட்டு கொடுக்க முடியுமான்னு கேட்டுட்டு போகலாம்னு வந்தோம். எதுவும் செட் ஆகல சார்” என்றான் மதன், பரிதாபமாக. அர்ஜுனும் வேறு வழியின்றி அப்பாவியாய் நின்றிருந்தான்.

 

தனது மகளை காப்பாற்றியதாலோ என்னவோ, அவர்களுக்கு உதவ வேண்டும் என்று வேதநாயகம் எண்ணினார். இருவரையும் மேலும் கீழும் பார்த்தவர், 

“உங்க பேரு என்ன சொன்னீங்க?” என்றார்.

“என் பேரு கமல், இவன் பேரு ரஜினி” என்றான் மதன்.

“டேய் சும்மா இருடா” என்ற அர்ஜுன், “சார் என் பேரு அர்ஜுன், இவன் பேரு மதன்” என்றான்.

“ஏன் இவன் எப்பவுமே பேரை மாத்தி சொல்றான்?” என்றபடி வேதநாயகத்தின் அருகே வந்து நின்றாள், அஞ்சலி.

அஞ்சலியைக் கண்டதும் முகம் மலர்ந்தவன் சற்று தன்னை மறந்து நிற்க,

“அது எங்க ஏரியா ராபர்ட் அண்ணன் சொல்லிக்கொடுத்தது. ‘நாம உண்மையான பேரை சொல்லிட்டா எவனாவது நம்மல வம்புல இழுத்துவிட்டுட்டா பிரச்சனையாயிடும். அதனால எப்பவும் மாத்தியே சொல்லு’னு சின்ன வயசுல அண்ணன் பழக்கப்படுத்தினது, இப்போ வரைக்கும் மாறல” என்று மதன், ஒருவாறு சமாளித்து வைத்தான். அதற்குள்ளாக சற்று சுதாரித்துக்கொண்டான், அர்ஜுன்.

 

“உனக்கென்ன வேணும்?” என்றார் வேதநாயகம், அஞ்சலியிடம்.

அஞ்சலி வீட்டிற்கு திரும்பியதிலிருந்து அவளிடம் அவ்வப்போது பேசினார். முன்பெல்லாம் அவளோடு பெரிதாக பேசாமல்விட்டதாலேயே தன் மகள் தன்னோடு ஒட்டவில்லை என்று புரிந்துகொண்டவர், உடைபட்ட உறவை சரி செய்ய முயன்றுகொண்டிருந்தார்.

“கோவிலுக்கு போகணும், ட்ரைவர் அண்ணன்?”

“சின்னம்மா, ட்ரைவர் அண்ணனுக்கு சுகர் ரொம்ப அதிகமாகிடுச்சுனு ஹாஸ்பிடல்ல சேர்த்திருக்காங்க” என்றான் செயலாளர்.

“இப்ப எப்படி இருக்கான்?” என்றார், வேதநாயகம்.

“ஒன்னும் சொல்லறதுக்கு இல்லை அய்யா. கால் கட்டைவிரலை எடுக்கணும்னு டாக்டர் சொல்லியிருக்காங்க”

“ப்ச்… அவனுக்கு வேணுங்கறத பார்த்து பண்ணிடு” என்றவர், அர்ஜுனை நோக்கி,

“நீ கார் ஓட்டுவியா?” என்றார்.

“ஓட்டுவேன் சார், லைசென்ஸ் வச்சிருக்கேன்” என்றான், அர்ஜுன்.

“அப்போ நீ ட்ரைவரா சேர்த்துக்க. அஞ்சலிக்கு தேவைப்படும்போது கார் எடுக்கணும். மத்த நேரம் கட்சி வேலை பார்க்கணும்” 

அவனுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. அவளை இனி சந்திக்க போவதே இல்லை என்ற நிலை மாறி, தினமும் ஒரு முறையாவது அவளது முகத்தினைக் காணக்கூடும் என்ற உணர்வு அவனது இத்தனை நாள் வேதனைக்கு மருந்தானது. மதனை இறுகக் கட்டிக்கொள்ள தோன்றிற்று. இருப்பினும் அவனை அமைதியாகவே நின்றிருந்தான்.

“சரிங்க சார்” என்றான் பணிவாக.

“சார், நான் வேணும்னா உங்களுக்கு பாடி காட்டா வந்துடறேன். ஒரே ஒரு ஏ.கே. 47 இருந்தா கொடுங்க” என்றான் மதன், நெஞ்சினை விறைப்பாய் வைத்தபடி. அஞ்சலி களுக்கென்று சிரிக்க, அனைவருமே சிரித்தனர்.

“முதல்ல உன் பாடிய கொஞ்சம் தேத்து, அப்புறம் எனக்கு பாடி காட்டாகலாம். துப்பாக்கி தூக்கவே உனக்கு தெம்பில்லை. இதுல எப்படி தூக்கி சுடுவ?” – வேதநாயகம் வினவ, பற்கள் அனைத்தும் தெரிய சிரித்து வைத்தான்.

“நீ நம்ம தோட்டக்காரருக்கு உதவியா இரு. வயசானவரு. சொல்ற பேச்சு கேட்டு நடக்கணும்” என்க, அதிர்ச்சியானான்.

“தோட்டமா, யூ மீன் ப்ளான்ட், ட்ரீ, ப்ளவர்?” என்றான்.

வேதநாயகம் முறைக்க சற்றே பயம் கொண்டவன், “நான் பார்த்துக்கறேன் சார், எல்லா செடிக்கும் ரெண்டு வேலை தண்ணி ஊத்தி, ஒரு செடி கூட சாகாம நான் பார்த்துக்கறேன்” என்றான் விறைப்பாய் நின்றபடி. 

“பாத்துக்க பாத்துக்க” என்றவர், தனது காரில் ஏறி அமர்ந்தார்.

“அய்யா, வயசு பையனை நம்பி சின்னம்மாவை…” என்றான் செயலாளர், காதுகடித்தான்.

“வயசானவனா இருந்தா மட்டும் நம்பிட முடியுமா? அவனை பத்தி எல்லாம் விசாரிச்சுட்டேன்” என்றவர், வண்டியை கிளப்பச்சொல்லி தனது அலுவலைக் காண சென்றார்.

 

முண்டாசு கட்டி வேட்டியை முடிந்த அளவு வாரி சுருட்டி சொறுகிக் கொண்டு, வெற்றுடம்போடு வந்து நின்ற வயதான ஒருவரை கண்டான், மதன்.

“யாரு இந்த ஜென்டில்மேன்?” என்றான் மதன், அங்கிருந்த பணியாளரிடம்.

“இவரு தான் தோட்டக்காரர்” என்ற பணியாளர், “தாத்தா இனிமேல் இந்த பையன் தான் உங்க கூட தோட்ட வேலை பாக்க போறான்” என்றான்.

ஜீன்ஸ் பேண்ட்டும் டீசர்ட்டுமாய் நிற்கும் மதனை ஏறயிறங்க பார்த்தவர்,

“உன் பேரு என்ன?” என்றார்.

“மதன்… நீங்க மேடினு கூப்பிடலாம்”

“என்னது டேடி’யா?”

அங்கிருந்த அனைவரும் சிரிக்க, தோட்டக்காரரின் அருகே சென்று அவரது முகத்தினை கையில் ஏந்தியவன்,

“ஆமா மை சன்” என்றான்.

அவனை ஒரே தள்ளு தள்ளி எட்டி நிறுத்தியவர்,

“யாருடா நீ வெட்டி பயலே?” என்றார்.

“அப்படியெல்லாம் சொல்லக்கூடாது. இன்னைலேர்ந்து நான் உங்க அசிஸ்டன்ட்”

“எந்த எடுபிடியும் எனக்கு தேவை இல்லை…”

“உங்களுக்கு வேற வழியில்லை… வாங்க நம்ம ஆபிஸ போய் பார்ப்போம்” என்று அவரது தோளை பற்றிக்கொண்டு அழைத்துச் சென்றான்.

அவரும் எரிச்சலோடு உடன் வர,

“ஆபிஸ்ல பேன்’ஆ? ஏ.சி.யா?” என்றான்.

“டேய் லூசு பயலே,தோட்டத்துல உனக்கு ஏ.சி. போடுவாங்களா?” என்று சண்டையிடுவது போல முஷ்டியை மடக்கிக்கொண்டு நின்றார்.

“பார்றா கோவத்தை…” என்றவன், அவரது வாயில் முக்கால்வாசி பற்கள் காணாமல் போயிருந்ததைக் கண்டு, 

“ஏன் தாத்தா, மரத்தை பல்லால கடிச்சு புடுங்கி வீசுனீங்களா? எங்க பல்ல காணோம்?”

“இப்ப உன்னை வீசுறேன் பாரு” என்றவர், அவனது தோளினை பிடித்து கீழே தள்ள முயல, அவன் திணற, 

“மிஸ்டர் மதுரை வீரன், கோவப்படாதீங்க” என்று அவன் கத்த, அங்கிருந்தோர் ஓடி வந்து தடுத்தனர்.

 

“ஏன்டா வயசானவர் கிட்ட?” என்றான் அர்ஜுன்.

“எல்லாம் உனக்காகத்தான்…”

அர்ஜுன் திடுக்கிட்டு நிற்க, அஞ்சலி ஒன்றும் புரியாமல் நெற்றி சுருங்கி நோக்க, சற்றே சுதாரித்துக்கொண்ட மதன்,

“நீ தானடா உழைச்சு சம்பாதிக்கணும்னு சொன்ன, அதான் உன் வார்த்தைக்கு கட்டுப்பட்டு, இந்த போதி தர்மர் கிட்ட ட்ரைனிங் எடுத்துக்கறேன்”

“யாரை பார்த்துடா போதைல இருக்கறேன்னு சொன்ன?” என்று தாத்தா மீண்டும் சண்டைக்கு நிற்க, 

“அய்யய்ய, வந்தன்னைக்கே வா? வாங்க போய் தண்ணி ஊத்துவோம்” என்றான், மதன்.

“ஊத்திட்டேன்”

“சரி பாத்தி கட்டுவோம்”

“கட்டிட்டேன்”

“அப்ப கட்டுனத கலைச்சுவிடுவோம்”

“டேய்”

“சரி பல்லாங்குழி ஆடுவோம்”

“பல்லாங்குழியா? டேய் யார பார்த்துடா பல்லாங்குழி ஆட கூப்பிடற, கம்பு சண்டைக்கு வரியா? குத்து சண்டைக்கு வரியா?”

“ரோஸ் மில்க் குடிச்சுட்டு வந்து முடிவு பண்ணுவோம்” என்றான் மதன். தாத்தா அமைதியாக, மற்றவரும் அமைதியாக வேடிக்கை பார்த்திருந்தனர்.

ஒரு நிமிடம் யோசித்தவர்,

“சரி வா போவோம்” என்றுவிட்டு, அவர் இவன் தோள் மீது கை போட்டுக்கொள்ள, அவர் தோள் மீது இவன் கை போட்டுக்கொள்ள, ஒன்றாக நடந்து சென்றனர்.

 

“அஜூ, நாம கிளம்புவோமா?” என்றாள், அஞ்சலி.

“சரி” என்றவன்,

அங்கிருந்த காரினை தொட்டுக்கும்பிட்டு வண்டியைக் கிளப்பினான். அஞ்சலி பின் இருக்கையில் அமர்ந்திருக்க, அவன் நிதானமாக, மிகுந்த கவனத்துடன் வண்டியை செலுத்தினான். 

“மதன் கூட பயங்கர காமெடி” என்றாள் அஞ்சலி. நடந்தவற்றை எண்ணி அவள் சிரிக்க, அவள் சிரிப்பதைப் பார்த்து அர்ஜுனும் சிரித்தான்.

“எங்க ஏரியாவுல இவரை மாதிரியே ஒரு தாத்தா இருந்தாரு. இவன் எப்பவும் அவரை இப்படித்தான் வம்பிழுத்துட்டே இருப்பான். அவர் ஞாபகம் வந்துடுச்சு போல. பாவம் அந்த தாத்தா”

“அஜூ, அந்த தாத்தாவும் என்ஜாய் பண்றாருன்னு தான் தோணுது…”

கோவில் சென்றடைந்ததும், அஞ்சலி அர்ச்சனை தட்டினை வாங்கிக்கொண்டு உள்ளே செல்ல எத்தனிக்க, அர்ஜுன் காரின் அருகே நின்றிருந்தான். 

“வா அஜூ”

“இல்லை நான் வரல, இங்கயே இருக்கேன்”

“அஜூ, அப்பா உன்னை ட்ரைவரா வேலைக்கு வச்சது எனக்கு சுத்தமா பிடிக்கல”

திடுக்கிட்டவன், “ஏன் அஞ்சலி?” என்றான் பரிதாபமாக.

“ஏன்னா நீ என் ப்ரெண்டு… நீ இந்த மாதிரி வேலை செய்யறது, தயங்கி நிக்கறதெல்லாம் எனக்கு பிடிக்கல…”

“இல்லை அது…”

“நான் நினைச்சிருந்தா அப்பாகிட்ட உனக்கு வேற வேலை தர சொல்லியிருப்பேன். ஆனா நீ என் கூட இருப்பங்கற ஒரே காரணத்தால தான் நான் எதுவும் சொல்லாம விட்டுட்டேன்…”

பங்குனி வெயிலில் அவன் மீது மட்டும் ஐஸ் மழை பொழிந்தது.

 

அவள் சொல்லுக்கு இணங்கி, அவளோடு கோவிலுக்குள் சென்றான். 

“அஞ்சலி…” என்றொரு குரல் கேட்ட வழி அவள் பார்த்திருக்க, அவள் அருகே வந்து நின்றார் சற்றே வயதில் மூத்தவர் ஒருவர். 

“இவர் என்னோட சித்தப்பா…” என்று அர்ஜுனுக்கு அவரை அறிமுகம் செய்து வைத்தாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!