Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

81. Zeeraf - ஊனாகி உயிராகினாய் பெண்ணே

ஊனாகி உயிராகினாய் பெண்ணே – 48

அத்தியாயம் – 48

 

“இந்த கொலைகாரன் இருக்கிற வீட்டுக்கு எப்படி குழந்தையைத் தூக்கிட்டு வரத் தோணுச்சு மிசஸ் மிருதுளா? இந்த குழந்தை மேல என் மூச்சுக்காத்து பட்டா கூட அது அசுத்தமாகிடும்னு நினைக்கிறவ தானே நீ, எப்படி இங்கே வர தோணுச்சு? என்ன? உன் மாமா மகன் விஷ்வா கூட சேர்ந்து ஏதோ பிளான் பண்ணி இப்போ என்னை பார்க்க வந்திருக்கியா?” என்று அவன் கேட்ட ஒவ்வொரு வார்த்தையும் விஷம் தடவிய அம்பாக அவள் இதயத்தைத் துளைத்திட,.. ​”ஏன் இப்படிப் பேசுறீங்க ரன்வீர்… நான்…” என்று அவள் நா தழுதழுக்க ஏதோ கூற வர.. ​”நிறுத்து!” என்று ஆவேசமாகக் கத்தினான். அவனது குரல் கேட்டு மெத்தையில் இருந்த குழந்தை மீண்டும் சிணுங்கத் தொடங்கவே, சட்டென்று மூச்சை இழுத்துப் பிடித்துத் தன் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டவன்,.. ​கண்களில் அனல் தெறிக்க.. “மரியாதையா இங்கிருந்து போயிடு… நான் உன் முகத்தை கூட பார்க்க விரும்பல,” என்றான் மெல்லிய கரகரப்பான குரலில்.

​”நான் போறதுக்காக ஒன்னும் இங்க வரல, நான் இங்கேயே தான் இருப்பேன். போறதுன்னா நாம மூணு பேரும் சேர்ந்து தான் ஊருக்குப் போகணும், அதுவரை நான் உங்களை விட்டு நகர மாட்டேன்,” அவள் உறுதியாகச் சொல்ல,.. அவளை பார்த்து ஏளனமாகச் சிரித்தவன்.. “சேர்ந்து போறதா? அது கனவுல கூட நடக்காது! இந்த
கொலைகாரனோட நீயும் வாழத் தேவை இல்ல” என்று அழுத்தமாக உரைத்தவன்,.. “பத்து நிமிஷம் டைம் தரேன், அதுக்குள்ள இந்த இடத்தை காலி பண்ணுற வேலையைப் பாரு, இல்லைனா நடக்குறதே வேற!” என்று எச்சரித்துவிட்டு ஆவேசமாக அறையை விட்டு வெளியேறிட,
​அவன் சென்றதும் மிருதுளா சோர்ந்து போய் அமர்ந்தாள்.



Advertisement

கண்கள் கலங்கினாலும், இது அழுவதற்கான நேரம் இல்லை என்பதை உணர்ந்தவள் அமைதியாக குழந்தையின் அருகில் படுத்துக் கொண்டாள், நீண்ட தூரப் பயணம், மன அழுத்தம் என அனைத்தும் அவளை வாட்ட, களைப்பின் மிகுதியால் தன்னையும் அறியாமல் ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்றாள்.

​அறையை விட்டு வெளியேறிய ரன்வீரோ, எரிமலையாய் வெடித்துக் கொண்டிருந்தான். நேராகக் கீழே சென்றவன், அங்கிருந்த செக்யூரிட்டியைத் பிடித்துக் கிழி கிழியென்று கிழித்துவிட்டான். அவனது அனுமதி இல்லாமலேயே அவளை வீட்டினுள் விட்டது மட்டுமன்றி, அவன் வீட்டிற்கு வந்தபோதும் கூட அவனிடம் அதைப் பற்றிச் சொல்லாமல் மறைத்தது அவனது கோபத்தை உச்சிக்கு கொண்டு சென்றது,..

​அந்த பெரியவரோ பயந்து போய், “நிதின் சார் தான் எதுவும் சொல்ல வேண்டாம்னு சொன்னாருங்க சார்…” என்று மெல்லிய குரலில் உண்மையைச் சொல்லிவிட,
​செக்யூரிட்டியிடம் எகிறிக் கொண்டிருந்த ரன்வீரின் கோபம், இப்போது அப்படியே நண்பனின் பக்கம் திரும்பியது. உடனே போனை எடுத்து நிதினிற்கு அழைத்தவன் மறுமுனையில் அவனுக்கு ‘ஹலோ’ என்று சொல்லக்கூட வாய்ப்பு கொடுக்கவில்லை, எடுத்த எடுப்பிலேயே தரம் தாழ்ந்த கெட்ட வார்த்தைகளால் நார்நாராய் கிழிக்க தொடங்கிவிட்டான்.

Advertisement

​நிதினால் காது கொடுத்துக்கூட அவனது வசவுகளைக் கேட்க முடியவில்லை. “டேய்… டேய்… கொஞ்சம் நிறுத்துடா! காது கருகிப் போச்சு…” என்று பாவமாக சொல்ல, ரன்வீரின் ஆத்திரம் குறையவில்லை.

Advertisement

​ஆங்கிலக் கெட்ட வார்த்தைகளால் அவனது காதை மேலும் கருக வைத்தவன், “மவனே என் கையில நீ கிடைச்ச செத்தடா!” என்று ஆவேசமாக உறும, மறுமுனையிலிருந்தவன் திருதிருவென விழித்தான்.

“நீ அனுப்பி வச்சா அவளை நான் மன்னிச்சு ஏத்துப்பேன்னு நினைச்சியோ, இப்போவே அவ கழுத்தை பிடிச்சி வெளியே தள்ளுறேன்” என்று ஆவேசமாக கூற,.. ​”டேய் ரன்வீர், அந்தப் பொண்ணு கையில் குழந்தையை வச்சிருக்காடா, நீ வெளியே அனுப்பினா கைக்குழந்தையோட எங்கே போவா? நீ இவ்வளவு கல்நெஞ்சக்காரனா மாறுவேன்னு நான் நினைக்கல,” என்று நிதின் மெல்ல நியாயம் பேச முயல… “அதை நீ அவளை இங்க அனுப்பி வைக்கிறதுக்கு முன்னாடி யோசிச்சி இருக்கணும், எனக்கு தெரியாம அவளை இங்கே அனுப்பி வச்ச நீயும் என் பார்வையில் ஒரு துரோகிதான், வைடா போனை” என்று கத்திக் கொண்டே போனைத் துண்டித்தவனுக்கு கோபத்தில் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது,..

“சார் தண்ணி எடுத்துட்டு வரட்டுமா” காவலாளி அவனின் நிலை கண்டு வினவ,.. “உங்க வேலையை மட்டும் பாருங்க” என்று அவரிடம் எகிறிவிட்டு வீட்டிற்குள் நுழைந்தான்.

Advertisement

​பத்து நிமிடம் கெடு கொடுத்திருந்தான் அல்லவா அவளுக்கு, ஆனால் அவளோ அந்த நேரம் முடிந்தும் மேலிருந்து இறங்கி வரவில்லை என்று கோபமாக மாடிப் படி ஏறித் தன் அறைக்குள் நுழைந்தவன்,..​”என்னடி உன்கிட்ட சொல்லிட்டு போனேன்  இப்போ…” என்று கத்த வந்தவன், அங்கே தெரிந்த காட்சியைக் கண்டு சட்டென்று வார்த்தைகளை விழுங்கிக் கொண்டான்…

​மிருதுளா தன் மகனின் அருகில் சோர்வில் அப்படியே சுருண்டு படுத்து உறங்கிக் கொண்டிருந்தாள், ஈரம் காயாத அவளது கூந்தல் தலையணையில் சிதறிக்கிடக்க, ஒரு கையில் தன் மகனின் பிஞ்சு விரல்களைப் பற்றியபடியே உறங்கிக் கொண்டிருந்தாள்.

​அவள் அருகில் இருந்த அந்தப் பிஞ்சும், தன் பிஞ்சு உதடுகளைக் குவித்து, பால் மணம் மாறாமல் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தான்.

​அவளை எழுப்பப் போன ரன்வீர் அப்படியே நின்றுவிட்டான், அவள் முகத்தில் தெரிந்த அந்த தீராத களைப்பும், கவலையும் அவனது ஆத்திரத்தைச் சற்றே தணித்தன.
அத்தனை கோபத்திலும் அவளது அந்தச் சோர்வான முகம் அவனுக்குள் ஏதோ ஒரு வலியை ஏற்படுத்திட, அவளை ஆழமாகப் பார்த்தவன், என்ன நினைத்தானோ தெரியவில்லை, அவளை எழுப்பாமல் அந்த அறையை விட்டே வெளியேறிவிட்டான்.

​நேரம் வேகமாகக் கடந்தது. சுமார் மூன்று மணி நேரத்திற்குப் பிறகு தான் குழந்தையின் மெல்லிய அழுகுரல் கேட்டு மிருதுளாவின் தூக்கம் கலைந்தது. திடுக்கிட்டு எழுந்தவள், “ஐயோ… தூங்கிட்டேனா?” என்று தனக்குத்தானே பதற்றமானாள். பதினைந்து நிமிடம் கெடு கொடுத்தவன், தான் உறங்குவதைப் பார்த்திருந்தால் இன்னும் எவ்வளவு ஆத்திரப்பட்டிருப்பான் என்று நினைக்கும்போதே அவளுக்குப் பயமாக தான் இருந்தது.

​அறையைச் சுற்றிப் பார்த்தாள், ரன்வீர் அங்கு இல்லை. ஜன்னல் வழியாகப் பார்த்தபோது லண்டனின் இரவு வெளிச்சம் மங்கலாகத் தெரிந்தது.

​குழந்தை பசியால் அழுததால், முதலில் அவனைத் தூக்கி அணைத்து பசியாற்றினாள், வயிறு நிறைந்ததும் அந்தக் குட்டி  அமைதியாகி, தன் பிஞ்சு விழிகளால் அவளைப் பார்த்தது.

​”வாடா கண்ணா… உங்க அப்பா எங்க போனாருன்னு தேடுவோம்” என்று அவனைத் தூக்கிக் கொண்டே அறையை விட்டு வெளியே வந்தாள்.

​அந்தப் பிரம்மாண்டமான வீடு நிசப்தமாக இருந்தது, ரன்வீரின் வாசனை அங்கெல்லாம் நிறைந்திருந்ததே தவிர, அவனைக் காணவில்லை. கீழ்த்தளம் வரை வந்து தேடியும் அவன் தென்படவில்லை. குழந்தைக்குப் பால் கொடுத்ததால், அவளுக்கும் பசி வயிற்றைக் கிள்ளியது. வந்ததிலிருந்தே எதுவும் சாப்பிடாததால் கொள்ளை பசி எடுக்க ​மெதுவாகக் கிச்சனிற்குச் சென்றாள். ஆனால், அங்கே சமைத்த உணவுகள் எதுவும் இல்லை. பிரிட்ஜைத் திறந்து பார்த்தாள் அதில் வெறும் பிரட், சில பழங்கள் மற்றும் தண்ணீர் பாட்டில்கள் மட்டுமே இருந்தன.

அவள் இப்போது அதை தான் சாப்பிட்டாகனும் வேறு வழியில்லை, பிரட்டை எடுத்து ஓவனில் வைத்து சூடு படுத்தியவள், அடைக்க அடைக்க அதை தான் சாப்பிட்டாள்,..

அடுத்த துண்டு பிரட்டை எடுத்துச் சாப்பிட்டபடி அவள் திரும்பிய கணம், அங்கே இடியென நின்றிருந்த ரன்வீரைக் கண்டு திடுக்கிட்டுப் போனாள்.

​ரன்வீரின் கண்கள் கோபத்தில் சிவந்திருந்தன. “உன்னைக் கிளம்பச் சொன்னா, இங்கே நின்னு தின்னுட்டு இருக்கியா?” என்று ஆவேசமாகக் கேட்டுவிட்டு, மேலும் ஏதோ கடுமையாகச் சொல்ல வந்தவன், அவள் கையில் சாய்ந்து கொண்டு தன் குண்டு கண்களை உருட்டி உருட்டித் தன்னையே பார்த்துக் கொண்டிருந்த மகனின் பார்வையில் அப்படியே உறைந்து போனான்.

​அவன் மகனோ, தந்தையின் கோபத்தைப் பொருட்படுத்தாமல், அவனைப் பார்த்து அழகாக ஒரு புன்னகையைச் சிந்திட, அந்தப் பிஞ்சின் பொக்கை வாய் சிரிப்பில் மொத்தமாக மயங்கிப் போன ரன்வீர், அவளது பதிலுக்காகக் கூடக் காத்திருக்காமல், அவள் கையிலிருந்த குழந்தையைத் தன் கைகளில் அள்ளித் தூக்கிக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தான்…

​அவன் குழந்தையைத் தூக்கிச் சென்றது மிருதுளாவிற்கு ஒருவிதத்தில் வசதியாகப் போய்விட, மீதமிருந்த பசியைத் தீர்க்க ஒரு ஆப்பிளை எடுத்து நிதானமாக நறுக்க ஆரம்பித்தாள்.

​சில அடிகள் எடுத்து வைத்த ரன்வீர், என்ன நினைத்தானோ சட்டென்று திரும்பி அவளை பார்க்க, அங்கே அவள் எவ்விதக் கவலையுமின்றி ஆப்பிளை ஆர்வமாகச் சாப்பிட்டுக் கொண்டிருப்பதைக் கண்டவனுக்கு எரிச்சலாக இருந்தாலும், ஒரு பெருமூச்சோடு தன் தலையைச் சிலுப்பிக் கொண்டு வேகமாகத் தனது அறை நோக்கி விரைந்தான்…

வயிற்றை நிரப்பிக் கொண்ட மிருதுளாவும் மெல்ல அறைக்குத் திரும்பினாள், அங்கே அவள் கண்ட காட்சி அவளது அத்தனை வலிகளையும் ஒரு நொடி மறக்கச் செய்தது. அவளது மகன், தன் தந்தையின் அரவணைப்பில் மிகப்பத்திரமாக இருக்க, அவர்கள் இருவரையும் பார்க்கவே அவ்வளவு அழகாக இருந்தது.

ரன்வீரின் அந்தப் பிரம்மாண்டமான உருவத்திற்கு முன்னால், அவன் மகன் மிகச்சிறியதாகத் தெரிந்தாலும், அவனது அணைப்பில் ஒரு முழுமை இருந்தது.

​கதவின் அருகில் நின்று அந்த அழகிய காட்சியை அவள் ரசித்துப்பார்ப்பதைச் சட்டென்று கவனித்துவிட்ட ரன்வீர், அவளைக் கொலைவெறியோடு முறைத்து.. “கெட் அவுட் ஆப் மை ரூம்!” என்று மெல்லிய குரலில் சீறினான். கத்தினால் குழந்தை பயந்துவிடுவானோ என்ற எண்ணம் அவனுக்குள் இருந்தது.

​அவளோ அவனது மிரட்டலைத் துளியும் மதிக்காமல், ஒருவித உரிமையோடு அறைக்குள் அடியெடுத்து வைத்து நுழைந்தாள். அவளது அந்தத் துணிச்சல் அவனது ஆத்திரத்தைக் மேலும் கிளப்ப, “ஏய்… வெளியே போடி!” என்று தன்னை மீறிக் கத்திவிட்டான்.

​”ப்ச்… எதுக்கு இப்போ டென்ஷன் ஆகுறீங்க? பையன் அழப்போறான் பாருங்க” என்று அவள் சொன்ன அடுத்த நொடி தான் ரன்வீர் தன் தவறை உணர்ந்தான். அவன் குனிந்து பார்த்தபோது, அவனது அதட்டல் சத்தத்தில் அதிர்ந்துபோயிருந்த குழந்தையின் உதடுகள் மெல்லப் பிதுங்கி இருக்க, அடுத்த கணம், அந்தப் பிஞ்சு வீறிட்டு அழத் தொடங்கியது.

​”அச்சோ… ஸாரிடா கண்ணா, அப்பா தெரியாமக் கத்திட்டேன்!” என்று பதறிய ரன்வீர், குழந்தையைத் தூக்கிக்கொண்டு அங்குமிங்குமாக நடந்தான், தோளில் போட்டுத் தட்டினான், விதவிதமாகச் சத்தம் எழுப்பினான், எவ்வளவோ போராடியும் அவனால் அந்த அழுகையை நிறுத்த முடியவில்லை.

​குழந்தை அழுது முகமெல்லாம் சிவப்பாவதைப் பார்த்த மிருதுளாவிற்கும் தவிப்பு ஏற்பட்டது, இருப்பினும் ரன்வீர் குழந்தையைச் சமாதானப்படுத்தத் திணறுவதை ஒரு நிமிடம் ஓரமாக நின்று கவனித்துக் கொண்டிருந்தாள், அவன் முகம் முழுக்க வியர்த்துக் கொட்ட, ஒரு பெரிய பிஸ்னஸ் டீலையே கோட்டை விட்டவனைப் போல அவனது முகம் தவிப்பில் வாடியது.

அதற்கு மேலும் அமைதியாக இருக்க முடியாமல் அவள் ​”என்கிட்ட கொடுங்க…” என்று கையை நீட்ட, அவனோ அவளை முறைத்தபடியே இன்னும் இறுக்கமாகக் குழந்தையை அணைத்துக்கொண்டு,..​”வேண்டாம்… நானே பார்த்துப்பேன். நீ தள்ளிப் போ!” என்று பிடிவாதமாக சொன்னான்.

ஆனால், குழந்தையின் அழுகையோ ஓயாமல் அந்த அறை முழுவதும் எதிரொலித்தது. ரன்வீரின் அத்தனை அதிகாரமும் அந்த இரு மாதக் குழந்தையின் அழுகைக்கு முன்னால் மண்டியிட்டது.

​அவன் கைகள் நடுங்குவதைக் கண்ட மிருதுளா, மெல்ல அவன் அருகில் சென்று, அவன் கையில் இருந்த குழந்தையை மென்மையாகத் தன்பக்கம் இழுத்தபடி.. “வீம்பு பார்க்க இது நேரமில்லை ரன்வீர், அவன் ரொம்ப அழறான்” என்று அவள் சொன்னபோது, வேறு வழியின்றி ரன்வீர் குழந்தையை அவளிடமே விட்டுக் கொடுத்தான்.

​அவள் கைகளுக்குச் சென்ற அடுத்த நிமிடம், அவளது வாசனையிலும் அணைப்பிலும் குழந்தை மெல்ல விக்கி விக்கி அழுதபடி அடங்கியது. இதைப் பார்த்த ரன்வீருக்கு ஒரு பக்கம் நிம்மதியாக இருந்தாலும், இன்னொரு பக்கம் தான் தோற்றுவிட்டோமோ என்ற எரிச்சல் தலைதூக்கியது.

​”சமாதானம் பண்ணிட்டல்ல… இப்போ அவனை இங்கேயே படுக்க வச்சுட்டு நீ வெளியே போ!” என்று அவன் மீண்டும் தனது பழைய பல்லவியைத் தொடங்கிட, அவனைத் திரும்பிப் பார்த்து ஒரு கேலியான புன்னகையைச் சிந்திய மிருதுளா.. “நானெல்லாம் போக மாட்டேன், சும்மா கத்தி கத்தி அவனை அழவும் வைக்காதீங்க, நான் இங்கதான் படுப்பேன்” என்று கூறிவிட்டு, அவனது மெத்தையிலேயே ஒரு ஓரத்தில் அமர்ந்தாள்.

அவளைத் தூக்கி வெளியே வீசத் துடித்த ரன்வீர் குழந்தையின் அமைதியைக் கெடுக்க விரும்பாமல்,.. “இன்னைக்கு நைட் வரைக்கும் தான் உனக்கு டைம், காலையில வீட்டை விட்டு போகல, நான் மனுஷனாவே இருக்க மாட்டேன்” என்று எச்சரித்து விட்டு வெளியேற, மிருதுளாவிடமிருந்தோ நீண்ட நெடிய பெருமூச்சு மட்டுமே வெளிவந்தது…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!