Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

38. அர்ச்சனா நித்தியானந்தம் - காதலும் கடத்தப்படும்Contest Stories 2026

காதலும் கடத்தப்படும் – 20

 

காதலும் கடத்தப்படும் – 20

 



Advertisement

 

“வணக்கம் சார், நான்…”

“அஜூ என்னோட ப்ரெண்டு, சித்தப்பா” என்று குறுக்கிட்டாள், அவன் தன்னைப்பற்றி ஏதும் கூறும் முன். அவன் அமைதியாகிப்போனான்.

Advertisement

“சரி மா, நீ எப்படி இருக்க? எல்லாம் கேள்விப்பட்டேன். கொஞ்சம் ஜாக்கிரதையா இருந்திருக்க கூடாதா அஞ்சலி? ஏதாவது ஒன்னு ஆகியிருந்தா…”

Advertisement

“அது… சித்தப்பா…”

முரட்டுத்தனமாக இருப்பவரிடம் மென்மையான வார்த்தைகள் வருவதைக் கண்டு ஆச்சர்யமானான், அர்ஜுன்.

“அவனுங்கள பிடிச்சாச்சா?”

Advertisement

“தெரியல சித்தப்பா” என்றவள், அர்ஜுனை ஓரக்கண்ணால் காண, அவன் சற்று தயக்கத்தோடு நின்றிருந்தான்.

“உன் அப்பா, உனக்கு கல்யாணம் வச்சிருக்கேன்னு ஒரு வார்த்தை கூட எனக்கு சொல்லல. என் அண்ணி இருந்திருந்தா இப்படி விட்டிருப்பாங்களா? அவங்க இருந்திருந்தா நான் தான் இப்படி கோயில்ல குளத்துல வச்சு என் மகளை பார்க்கற நிலைமை வந்திருக்குமா?”

“விடுங்க சித்தப்பா…”

“முடியலமா, உன்னை வீட்டுக்கு கூட அனுப்பமாட்டேன்னு சொன்னா என்ன அர்த்தம்? நீ பேசாம ஃப்ரெண்டு வீட்டுக்கு போறேன்னு பொய் சொல்லிட்டு நாலு நாள் வந்து தங்கிட்டு போ…”

“வர முயற்சி பண்றேன் சித்தப்பா, சித்தி எப்படி இருக்காங்க? மருது, பாப்பா எப்படி இருக்காங்க?”

“எல்லா நல்லா இருக்காங்க, இந்தா உனக்கு சாப்பிட என்னென்னமோ உன் சித்தி கொடுத்து விட்டா…” என்று பையை நீட்டினார்.

அதனை பெற்றுக்கொண்டவள், “என்னை பத்தி கவலைப்படாதீங்க சித்தப்பா…” என்றாள், ஆதரவாக.

“கவலைப்படாம? என் அண்ணி என்னை அம்மா மாதிரி பார்த்துக்கிட்டாங்க. உன்னை தோளுல போட்டு வளர்த்தேன் அஞ்சலி. ஆனா உன் அப்பன்…”

“எல்லாம் சரியாயிடும் சித்தப்பா” என்று அவள் கூற, 

“சரி, நான் ஒரு வேலையா அவசரமா போகணும், நீ போய் சாமி கும்பிட்டுட்டு பத்திரமா வீட்டுக்கு போ” என்றவர், அஞ்சலியை பார்க்கும் ஆர்வத்திலிருந்து சற்றே தெளிந்தவராய், அர்ஜுனை மேலும் கீழும் ஒரு முறை உன்னிப்பாய் பார்த்தார். அவனது முகத்தில் எவ்வித கல்மிஷமும் இல்லை என்று தோன்றியவுடன், அஞ்சலியிடம் விடைபெற்றுக்கொண்டு சென்றார்.

 

கோவிலில் பூஜை முடித்து, வீட்டிற்கு திரும்புகையில் அஞ்சலி அமைதியாகவே வந்தாள். அர்ஜுன் அவ்வப்போது கண்ணாடி வழியே அவளை பார்க்க, அதை கவனித்தவள்,

“என்ன அர்ஜுன்?” என்றாள்.

“ஒண்ணுமில்ல, ரொம்ப கவலையா இருக்கியே…”

“கொஞ்சம் மனசுக்கு கஷ்டமா தான் இருக்கு அஜூ. சித்தப்பா எங்க கூடத்தான் இருந்தாங்க. அவங்க லவ் மேரேஜ் பண்ணது அப்பாவுக்கு பிடிக்கல. அதுல தனியா போனாங்க. அப்புறம், சித்தப்பா அப்பா இருக்கற கட்சியிலிருந்து மாறி வேற கட்சிக்கு போயிட்டாங்கன்னு ரொம்ப பெரிய பிரச்சனை ஆயிடுச்சு. ‘சொந்த தம்பிய கட்சியில தக்க வைக்க முடியலையா?’னு நிறைய பேரு கேள்வி கேட்டு அப்பாவுக்கு ரொம்ப நெருக்கடி ஆயிடுச்சு. கோவத்துல அப்பா சித்தப்பாவை திட்டி, சண்டையாகி, இனி செத்தாலும் வீட்டுக்குள்ள வரக்கூடாதுன்னு சொல்லிட்டாங்க. சித்தப்பா வரவேயில்லை. அம்மா இறந்தபோது வந்தாங்க. அதுக்கும் அப்பா சண்டை போட்டாங்க. ‘என் அண்ணிய பார்க்க எனக்கு எல்லா உரிமையும் இருக்கு’னு சொல்லி, சித்தப்பா அம்மாவை பார்த்துட்டு மாலை போட்டுட்டு போனாங்க. ஆனா ரொம்ப அழுதுட்டாங்க. என்னை நெஞ்சோடு சேர்த்துக்கிட்டு ரொம்ப துடிச்சுப்போனாங்க. அதுக்கப்புறம் வருவதேயில்லை. நான் வெளியே வச்சு அப்பப்ப சித்தப்பாவ சந்திச்சுப்பேன். சில சமயம், சித்தி, தம்பி, தங்கச்சியும் பார்க்க வருவாங்க. எல்லாரும் ஒத்துமையா, ஒரே வீட்ல இருந்திருந்தா, எவ்வளவு நல்லா இருந்திருக்கும்? பேச்சு துணைக்கு கூட ஆள் இல்லாம தனியா இருக்கவே பிடிக்காது, அஜூ. ஆனா என்ன பண்றது, என் விதி…” என்றவள் கண்மூடி சாய்ந்து அமர்ந்தாள்.

“எல்லா பிரச்சனைக்கும் என்னைக்காவது ஒரு தீர்வு வரும். நீ கவலைப்படாம இரு அஞ்சலி” என்றான்.

 

அவள் அமைதியாக, ரேடியோவில் ஒரு பாடலை ஓட விட்டான். அவனும் உடன் சேர்ந்து மெல்லமாய் பாடினான்.

“அஜூ, அந்த பாட்டை நிறுத்தேன்…”

அவனுக்கு என்னவோ போல் ஆகியது.

“சாரி அஞ்சலி, உனக்கு கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகும்னு தான் போட்டேன்…”

“இது எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு அஜூ. நீ பாடேன்…” என்றாள், பரிவாக. உடனே உற்சாகமானவன், அவளுக்காக பாடத்தொடங்கினான்.

“நெடுங்காலமாய் புழங்காமலே

எனக்குள்ளே நேசம் கிடக்கின்றதே..

உனைப்பார்த்ததும் உயிர் தூண்டவே

உதடுகள் தாண்டி தெறிக்கின்றதே..

 

தரிசான என் நெஞ்சில் விழுந்தாயே விதையாக..

நீ அன்பாய் பார்க்கும்

பார்வையிலே என் ஜீவன் வாழுதடி

நீ ஆதரவாக தோள் சாய்ந்தாளே

என் ஆயுள் நீளுமடி…!“

 

வீட்டை நெருங்கும் போது, அஞ்சலியின் உதட்டில் மலர்ந்திருந்த புன்னகையைக் கண்டு அவன் அமைதி கொண்டான். வண்டியை நிறுத்திவிட்டு இருவரும் மதனை தேடி தோட்டத்து பக்கம் வர, அவன் பட்டாப்பட்டி, முண்டாசு பனியனோடு, கடப்பாரையைக் கொண்டு மண்ணை குத்திக்கொண்டிருந்தான்.

“நான் கொத்திவிட்டாள், இங்க பள்ளம் வந்தால், இந்த தாத்தா வேதனை படமாட்டார்… உயிருள்ளவரை… கடப்பாரை குத்தும் வரை…” என்று மதன் பாடிக்கொண்டிருக்க,

“டேய் லூசு பயலே, வாத்தியார் பாட்டை தப்பா பாடின, கடப்பாரையை தொண்டைக்குள்ள இறக்கிடுவேன்” என்று தாத்தாவின் குரல் கேட்டது.

“எங்கே நிம்மதி, எங்கே நிம்மதி, அங்கே எனக்கோர் இடம் வேண்டும்… அங்கே எனக்கு மட்டும் ஓர் இடம் வேண்டும்” என்று பாடினான்.

“நீ வெட்டுற குழிக்குள்ள போய் படுத்துக்க, நிம்மதி கிடைச்சுடும்” என்றார் தாத்தா, அவன் பாடுவதற்கு விடையாய். கடப்பாரையை விட்டெறிந்துவிட்டு அவன் நிற்க, விறுவிறுவென அவர் எழுந்து வந்தார்.

“கூறு கெட்டவனே என்னடா பள்ளம் தோண்டியிருக்க?” என்றார்.

“செடி வைக்க இது போதாதா?”

“போதாது, இன்னும் வெட்டு”

“டயர்டா இருக்கு தாத்தா”

“அப்ப வேலையை விட்டு நின்னுக்க…”

“நான் நின்னுட்டா யாரு ரோஸ்மில்க் வாங்கிக்கொடுப்பா?”

“போடா போக்கத்தவனே, ஒழுங்கா வெட்டு” என்றவர் தனது பணிய தொடர சென்றார்.

 

“மதனா” என்று அழைத்தபடி அவன் அருகே வந்து நின்றான், அர்ஜுன். அஞ்சலி தனது சிரிப்பினை அடக்கிக்கொண்டிருந்தாள்.

“ஏன் மேடம் வாயை இப்படி வச்சிருக்கீங்க? வாயில வடையா வச்சிருக்கீங்க?” என்றான் மதன், கடுப்பாக.

வாய்விட்டு சிரித்தவள்,

“என்ன ட்ரெஸ் இது மதன்? பார்க்கவே சிரிப்பா இருக்கு”

“ஏன் இருக்காது, இந்த யூனிபார்ம்ல வந்தாத்தான் வேலை கொடுப்பேன்னு சார் சொல்லிட்டாரு…”

“சார்’ஆ?”

“அதோ அவரு தான், நல்லா இருக்கற செடியை பொழுது போகாம வெட்டிக்கிட்டு இருக்காரே, அவரே தான்…”

“நல்லா இருக்கறத வெட்டிச் சாய்க்க நான் என்ன உன்னை மாதிரி லூசு பயலா?” என்று மதனிடம் பொங்கிய தாத்தா, “ஏன்மா உன் அப்பனுக்கு என்ன ஆச்சு? நான் இந்த பயலை வேலைக்கு வேணும்னு கேட்டேனா? வாய் தான் வேலை செய்யுது. கூட்ஸ் வண்டி கணக்கா பேசிக்கிட்டே இருக்கான்” என்றார்.

“உங்களுக்கு துணையா இருக்கும்னு தான்…”

“வேணவே வேணாம்…”

“கொஞ்சம் நாள் தாத்தா. அப்பாகிட்ட வேற ஏதாவது வேலைக்கு மாத்திட சொல்றேன்”

“முடியாது அஞ்சலி, உடல் மண்ணுக்கு, உயிர் இந்த கிழவனாருக்கு. மணந்தால் இந்த மீசைக்காரன், இல்லையேல் மரணதேவன்” 

அவன் கூறியதைக் கேட்டு அர்ஜுனும், அஞ்சலியும் சிரிக்க, தாத்தா தலையில் அடித்துக்கொண்டு அந்த இடம் விட்டுச் சென்றார்.

 

“டேய் பாவம்டா அவரு”

“எல்லாம் ஒரு ஜாலி தான்…”

“சரி, ரெண்டு பேரும் சாப்பிட வாங்க” என்றுவிட்டு அஞ்சலி உள்ளே சென்றாள்.

“தாத்தா சோறு போடறாங்களாம், ஓடியா” என்றான் மதன்.

“போய் கொட்டிக்கோ” என்று பதில் வர, “விடு மதனா” என்றுவிட்டு அவனை இழுத்துச் சென்றான், அர்ஜுன்.

 

தனது மேஜையின் மீது அமர்ந்திருந்த அஞ்சலி, அவர்கள் இருவரும் வராமல் இருக்க, எழுந்து வெளியே சென்றவள், பால்கனியில், இருவரும் மற்ற பணியாளர்களோடு சிரித்து பேசி உணவு உண்பதைக் கண்டாள். அவளுக்கு ஏமாற்றமாகிப்போனது. ஏனோ அவளால் அவர்கள் இருவரையும் பணியாளர்களாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தனது மனதிற்கு நெருக்கமான உறவுகளாகவே பட்டது. அஞ்சலி அர்ஜுனின் வீட்டில் இருந்த அந்த இரண்டு மூன்று நாட்களும், அவன் அவளை பார்த்துக்கொண்டதை நினைவு கூர்ந்தாள். அவனுக்கு எவ்வித கைமாறும் தான் செய்யவில்லை என்று அவளது மனம் உறுத்தியது. 

 

இரவு, அன்று போல் இன்றும் புல்வெளியில் பாடல் நிகழ்ச்சி நடந்தது. இம்முறை தாத்தாவையும் சேர்த்துக்கொண்டனர். அர்ஜுன் பாடும் பாடல்களைக் கேட்டு குதூகலமானவர், கைகளை கால்களை அசைத்து தனக்கு தெரிந்த நடனத்தை ஆடிக்கொண்டிருந்தார். அன்று விட, இன்று மேலும் கலைக்கட்டியது அவர்களின் ஆட்டமும் பாட்டமும்.

 

அனைவரும் கலைந்து செல்ல, வாயில் அருகே வந்து நின்ற அஞ்சலியை, அர்ஜுனும் மதனும் கவனிக்காமல் கடந்து சென்றனர். அவளது முகமும் மனமும் சிறிது வாடியது. தனது அறைக்குத் திரும்பியவள், வானில் மிதக்கும் நிலவினைக் கண்டாள். அர்ஜுனின் எண்ணம் தோன்றியது. 

“தரிசான என் நெஞ்சில் விழுந்தாயே விதையாக…” என்று முணுமுணுத்துக்கொண்டவள், தனது கட்டிலின் மேல் சென்று படுத்துக்கொண்டாள். தூக்கமின்றி வெகு நேரம் தவித்தாள். மாறாக, இல்லம் சென்றடைந்த அர்ஜுன், இனி நிதமும் அஞ்சலியின் தரிசனம் கிட்டும் என்ற ஆனந்தத்தில் வெகு நாட்கள் கழித்து அயர்ந்து உறங்கிப்போனான். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!