Skip to content
Post Views: 612
வசீகரன் கைகளை கட்டிக் கொண்டு அலமேலுவையே தீர்க்கமாக பார்த்துக் கொண்டிருந்தான்.
“அம்மா, சின்னபொண்ணு நம்ம சொந்தம்னு ஏன் யார்க்கிட்டயும் சொல்லலனு கேட்டேன்”
Advertisement
அலமேலு தலையை குனிந்து கொள்ள, “பதில் சொல்லும்மா”
“எனக்கே போட்டோவ பாத்தப்பறம், இப்பதான்டா தெரியும்”
Advertisement
Advertisement
“எனக்கு அப்படி தோணல. நீ எதையோ மறைக்கற மாதிரி தெரியுது. உண்மைய சொல்லப் போறீயா? இல்லயா?”
“எல்லாத்தையும் உன்கிட்ட விளக்கணும்னு எனக்கு அவசியமில்ல”
Advertisement
கைகளை கட்டிக் கொண்டு நிமிர்வாய் நின்று “அப்போ நானும் இதே பதில தான் சொல்லுவேன். எல்லாத்தையும் உங்ககிட்ட விளக்கணும்னு எனக்கும் எந்த அவசியமுமில்ல”
“வசி நான் உன் அம்மாடா”
“அதனால தாம்மா, நீயே சொல்லுவேனு பொறுமையா இருக்கேன்”
“என்ன சொல்லணும்னு எதிர்பாக்கறே? நான் சொல்றதுக்கு எதுவுமில்ல” பதட்டத்தை மறைக்க முயன்றார்.
“எதுவுமே இல்லயா?”
வசீகரன் அலமேலுவை ஒருமாதிரி பார்த்துவிட்டு அறையை விட்டு வெளியேற முயல
“வசி, எனக்கு நீ வாக்கு கொடுத்திருக்கே மறந்துடாத. நான் சொல்ற பொண்ணை தான் நீ கல்யாணம் பண்ணிக்கனும்”
“வாக்கு கொடுத்தா நிறைவேத்தி தான் ஆகணும்னு சட்டம் இருக்கா என்ன? தாலிக்கட்ற நேரத்துல கூட பொண்ணு மாறி போறக்கதைய நீ கேள்விப்பட்டதில்லயா?” என்றான் நக்கலாக
வசீகரனின் இந்த கேள்வியில் அலமேலுவின் சர்வமும் ஒடுங்கி விட்டது. அவர் வார்த்தைகளே அவருக்கு திருப்பி கொடுக்கப்படுகிறதா?
“வசீ” அன்னையின் அழைப்பு காதில் கேட்காத மாதிரி ஆத்திரத்துடன் கதவை அடித்து சாத்திவிட்டு விறுவிறுவென்று வெளியே சென்றுவிட்டான்.
அலமேலு அழுதுக்கொண்டே அவன் பின்னால் ஓட முடியாமல் ஹாலில் இருந்த நீள்இருக்கையில் தொய்ந்து அமர்ந்து கண்ணீருடன், “சரவணா, வசிய கூப்பிடுடா கோவிச்சுக்கிட்டு போறான் பாரு” என்றார் மூச்சிரைக்க
சரவணன் வசீகரனின் பின்னால் ஓட, “லதா பாத்தியா? இவளால என் குடும்பமே சின்னபின்னமாகிடும் போலருக்கு? நேத்துவரைக்கும் நான் சொல்ற பொண்ணை தான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு சொல்லிட்டு இருந்தவன் இப்போ எப்படி பேசிட்டு போறான்னு கேட்டியா? என்ன சொக்குபொடி போட்டு எம்மகன மயக்கினாளோ தெரியல, என் புள்ளைய எனக்கு எதிரியா மாத்திப்புட்டாளே” என்று ஒப்பாரி வைக்க,
உள்ளே இருந்த சின்னபொண்ணுவின் காதுகளில் அது தப்பாமல் விழுந்து ரணமாகி போயிருந்த இதயத்தை மீண்டும் கீறி விட்டது போல வலித்தது.
வீட்டில் இருந்தால் அன்னையென்றும் பாராமல் எடுத்தெறிந்து பேசிவிடுவோமோ என்று தன் ஆத்திரத்தை அடக்கும் வழிதெரியாமல் வசீகரன் தன் காரில் ஏறி அதை படுவேகமாக திருப்ப சரவணன் ஓடிச்சென்று காருக்கு எதிரே வந்து நின்றான்.
திடீரென்று தன் முன்னால் வந்து நின்ற அண்ணனை கண்டதும் சடாரென்று பிரேக் போட்டு நிறுத்தியிருந்தான். சரவணன் கார்க் கதவை திறந்து உள்ளே அமர்ந்து வசியின் தோளை அழுத்தினான்.
“வசி, நீ ரொம்ப டென்ஷனா இருக்கே. இந்த நேரத்துல டிரைவ் பண்றது சரியில்ல. பொறுமையா இரு. இப்போ பிரச்சனை பண்ணி என்ன சாதிக்க போறே? வேண்டா சின்னபொண்ணு, படிச்சிட்டு வேற இருக்கா, நீயும் உன்னோட கேரியர இப்போ தான் ஸ்டார்ட் பண்ணிட்டு இருக்கே. இன்னும் நாளிருக்கு, அதுவரைக்கும் கொஞ்சம் பொறுமையா இருடா”
“அதனால தான்டா அமைதியா இருக்கேன், இல்லனா இங்கே நடந்திருக்க வேண்டிய சீனே வேற” என்றான் வசீகரன் ஒருமாதிரி குரலில்
“வேண்டா காலேஜ் ஹாஸ்டல்ல தங்கிக்கட்டும், இப்போதைக்கு பிரச்சனைய ஆறப்போடு. அப்புறம் பாத்துக்கலாம். அம்மாக்கு பிபி சுகர்னு இருக்கு, தேவையில்லாம அவங்களுக்கு டென்ஷன் கொடுக்காதே. கார்லயே கொஞ்ச நேரம் சாங் கேட்டுட்டு இரு, அப்புறமா உள்ள வா” என்று காரை விட்டு இறங்க முயற்சித்தான்.
“சரவணா” என்ற வசியின் அழைப்பில் திரும்பினான்.
“என்னடா?”
“சின்னு ரொம்ப உடைஞ்சு போயிருப்பா, அவகிட்ட கொஞ்சம் ஆறுதலா பேசுடா”
“ஓ, அந்த ஆறுதல நீயே போய் சொல்லாமே?” என்றான் சரவணன் குறும்புடன் புன்னகைத்து
“சொல்லலாம் தான். என்மேல கொலைவெறியில இருப்பா. கிட்ட போனா கடிச்சு வச்சிடுவா” என்றான் மெல்லிய புன்னகையுடன்
“நீ இந்தியா வந்தே கொஞ்ச நாள் தானே ஆச்சு? எப்போ இருந்துடா இவ்வளவு சீரியசா அவளை லவ் பண்ண ஆரம்பிச்சே?” என்றான் சரவணன் ஆச்சரியத்துடன்
“அதை அவகிட்ட தான் மொதல்ல சொல்லுவேன்”
“அதுவரைக்கும் சஸ்பென்ஸா”
“ஆமா”
தம்பியின் தலைமுடியை கலைத்துவிட்டு சரவணன் மீண்டும் வீட்டிற்குள் சென்றான்.
“சரவணா, வசி எங்கடா?” அலமேலு ஈனஸ்வரத்தில் கேட்டார்.
“வெளியில தான் இருக்கான், நான் சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதம்மா. வசி தான் அந்த பொண்ணு பின்னாடி சுத்தறான். அவ இல்ல. உங்களுக்கு எதாச்சும் கேக்கணும்னா வசிய தான் கூப்பிட்டு கேட்டு இருக்கணும். அவன கேள்வி கேக்கறதுக்கு தான் உங்களுக்கு முழு உரிமை இருக்கு. அதவிட்டுட்டு அந்த பொண்ணை கூப்பிட்டு மிரட்றது எல்லாம் கொஞ்சம் கூட சரியில்லம்மா. இத நான் உங்ககிட்ட கொஞ்சம் கூட எதிர்பார்க்கல.
அதுவும் அவ அப்பா அம்மா இல்லாத பொண்ணு. நம்ம வீட்லயும் ரஞ்சனி இருக்கா, அவளையும் யாராவது உங்கள மாதிரி மிரட்னா நீங்க சும்மா இருப்பீங்களா? கேக்க ஆளில்லாதவங்கிறதுக்காக தனியா கூப்பிட்டு வச்சு மிரட்டுவீங்களா? என்ன தான் நம்ம வீட்ல அவ தங்கியிருந்தாலும், அவ இல்லாத நேரத்துல அவளோட பொருளை எடுத்து பாக்கறது எல்லாம் அநாகரீகம்னு உங்களுக்கு தெரியாதா?” என்று சரவணன் சரமாரியாக கேள்வி கேட்க,
அலமேலு தலையை கவிழ்ந்துக் கொண்டார்.
“நான் தான் வேண்டாவை வீட்டுக்கு அழைச்சிட்டு வந்தேன். நானே அவள வெளிய அனுப்பிடறேன். இனிமே யாரும் அவள டிஸ்டர்ப் பண்ணக்கூடாது. உங்களோட கட்டுப்பாடு எல்லாம் வசிக்கிட்ட மட்டும் தான் இருக்கணும், லதா, அம்மாவ ரூமுக்கு அழைச்சிட்டு போ” என்றான்.
லதா அலமேலுவை அழைத்துக் கொண்டு அறைக்குள் சென்றதும் சரவணன் சின்னபொண்ணு இருந்த அறைக்கதவை தட்டினான்.
அழுது வீங்கியிருந்த முகத்துடன் வெளியே வந்து நின்றவளை பார்த்ததும் பாவமாக தோன்ற, “வேண்டா, அம்மா பேசினத நினைச்சு வருத்தப்படாத. நாளைக்கு காலேஜ்க்கு போ, படிக்கறத பத்தி மட்டும் இப்போதைக்கு யோசி”
பதில் பேசாமல் மெளனமாக இருந்தாள்.
“எனக்கு தெரியும், வசியால தான் உனக்கு பிரச்சனை. உனக்கு அவனோட சேட்டை பிடிக்கலனா தைரியமா என்கிட்ட சொல்லு, தம்பினு எல்லாம் பாக்கமாட்டேன், தட்டிக்கேப்பேன், அப்படி கேக்கலனா அவன வெளிநாட்டுக்கு பேக் பண்ணி அனுப்பி வச்சிடறேன். உனக்கும் எந்த பிரச்சனையும் இருக்காது. சொல்லுமா, அவன வெளிநாட்டுக்கு போயிட சொல்லவா?”
சின்னபொண்ணுவுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. வசீகரன் இந்தியாவில் தொழில் தொடங்க ஆர்வத்துடன் இருக்கிறான் என்பது அவளுக்கும் தெரிந்திருந்தது.
“இனிமேலாச்சும் என்கிட்ட வராம ஒதுங்கியிருக்க சொல்லுங்க, அது போதும். வெளிநாட்டுக்கு அனுப்ப வேணாம். பிசினஸ் தொடங்கறதா உங்ககிட்ட சொல்லிட்டு இருந்தாரே, என்னால அவரோட பிசினஸ் கெட வேண்டாம்” என்றாள் மெல்லிய குரலில்
“சரிம்மா, இனி அவன் உன்கிட்ட வம்பிழுக்காம நான் பாத்துக்கறேன். நீ எதப்பத்தியும் கவலப்படாம தூங்கு, நாளைக்கு நீ காலேஜ்க்கு போனதும் உன்னோட பிரச்சனைக்கு நிச்சயமா தீர்வு கிடைக்கும்” என்றான்.
அது என்ன என்று கேட்கும் நிலையில் அவள் இல்லாததால் அமைதியாக அறைக்குள் சென்றுவிட்டாள்.
நடராஜன் ரஞ்சனியோடு வீட்டிற்கு வந்தபோது வீடே அமைதியாக இருப்பதை கண்டு அலமேலுவை தேடி அவர்கள் அறைக்கு சென்றார். மாமனார் வந்ததும் லதா சென்றுவிட அலமேலு நடராஜனின் கரத்தை பற்றிக் கொண்டு அழுதார்.
“என்னாச்சு அலமு, நீ போன் பண்ணதும் கிளம்பிட்டேன், ரஞ்சனி பிக்கப் பண்ண சொல்லி கூப்பிட்டா, அதான் லேட் ஆயிடுச்சு”
“உங்களுக்கே தெரியும், நான் வசி மேல உயிரே வச்சிருக்கேன்னு, சரவணனன விட அவன் தான் எப்பவும் என் புடவை முந்தாணைய பிடிச்சிட்டு சுத்துவான். நமக்குள்ள சண்டை வந்தாலும் சரவணனுக்கும் எனக்கும் பிரச்சனைனாலும் அவன் தான் பெரிய மனுஷன் மாதிரி நம்மள சமாதானம் படுத்துவான்”
“ஆமா அதுக்கென்ன?”
“அப்படி என்மேல உசுரா இருந்த வசி, இன்னைக்கு என்னை எடுத்தெறிஞ்சு பேசிட்டான்ங்க. அவனுக்கு ஏதோ தெரிஞ்சிருக்குனு நினைக்கிறேன். அவன் மனசுல ஏதோ வச்சுக்கிட்டு பேசற மாதிரியே தெரியுது”
“என்னனு கேக்க வேண்டியது தானே?”
“நான் சொல்லுவனானு எதிர்பாக்கறான்ங்க”
“என்ன விஷயம்னே எனக்கு புரியல அலமு, தெளிவா சொல்லு” என்றார் நடராஜன் அலுப்புடன்
வசி சின்னபொண்ணுவிற்கு ஆடை எடுத்து கொடுத்ததாக லதா கூறியதிலிருந்து இன்று நடந்தவை அனைத்தையும் கணவரிடம் கூறினார். “இதுக்கு தான் நான் அந்த பொண்ணை வீட்ல விடறதுக்கு பயந்தேன், நான் பயந்த மாதிரியே ஆயிடுச்சுங்க” என்று கதறி அழுதார்.
மனைவியின் தோளை அழுத்தி, “நான் அன்னைக்கு சொன்னது தான் இன்னைக்கும் சொல்றேன் அலமு. நாம சொல்றது செய்யறது எல்லாமே கர்மா. அதுக்கு பதில் சொல்லி தான் ஆகணும். அந்த பொண்ணை வீட்ல சேர்த்துக்கிட்டதால தான் இந்த பிரச்சனைனு நினைக்காத. வசிக்கு தான் அந்த பொண்ணனு விதியிருந்தா அத யாராலயும் மாத்த முடியாது”
“என்னங்க நீங்க? பெத்து வளர்த்த ரெண்டு பசங்களும் எனக்கெதிரா நிக்கறதாங்க. தாலிகட்டின நீங்களாச்சும் எனக்கு ஆதரவா பேசுவீங்கனு பாத்தா, நீங்களும் இப்படி பேசறீங்க? இவ்வளவு பிரச்சனை நடந்தப்பின்னாடி அவள இந்த வீட்டு மருமகளா கொண்டு வந்தா எனக்கென்ன மரியாதை இருக்கு?” என்று அலமேலு ஓவென கதறி அழவும் கணவராக மனைவியை தேற்ற வேண்டிய கட்டாயத்தில் இருந்தார் அவர்.
“வசி, அந்த பொண்ணை இப்பவே கல்யாணம் பண்ணிக்க போறதா சொன்னானா?”
“இல்ல”
“அப்புறம் ஏன் இப்பவே அதையெல்லாம் யோசிச்சு உடம்பை கெடுத்துக்கறே? லவ் பண்ற பசங்கள கண்டிக்கறத விட கண்டுக்காம இருக்கறது நல்லது, கண்டிச்சா ஆமா அப்படித்தான்னு எகிறிட்டு நிப்பாங்க. கண்டுக்காத மாதிரி இருந்தா, செட்டாகலனு அவங்களே கூட பிரியறதுக்கு வாய்ப்பிருக்கு”
அலமேலு கண்களை துடைத்துக் கொண்டு, “அப்போ பிரிஞ்சுடுவாங்களா?”
“வாய்ப்பிருக்குனு தான் சொன்னேன்”
“வசிக்கு ஏதோ விசயம் தெரிஞ்சிருக்குனு எனக்கு சந்தேகமா இருக்குங்க. அவனுக்கு எதுவரைக்கும் தெரியும்னு தெரியல. இந்த பொண்ணு சொல்லியிருக்கமாட்டானு தான் தோணுது. நானே கேட்டா அவன்கிட்ட மாட்டிக்குவேன். நீங்க அவன்கிட்ட மெதுவா விசாரிச்சு பாருங்க”
“சரி, நான் அவன்கிட்ட பேசிக்கறேன், நீ பிபி மாத்திரை போட்டு கொஞ்ச நேரம் தூங்கு” என்று மனைவியை படுக்க வைத்தார்.
வீட்டின் அசாதாரண அமைதியை உணர்ந்து கொண்ட காளியப்பா அவரவர் அறைக்கே சாப்பாடு கொண்டு போய் கொடுத்து விட்டு கிளம்பிவிட்டார். வசியை தவிர அனைவரும் அவரவர் அறைக்குள் அடைப்பட்டிருந்தனர்
சரவணன் லதாவிடம் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தான். “என்ன விஷயம்னாலும் நீ எனக்கு தானே முதல்ல சொல்லுவே, இந்த விஷயத்தை ஏன் அம்மாகிட்ட சொன்னே? உன்னால தான் எல்லா பிரச்சனைங்கிற மாதிரி வசி பேசறான். என்னால எதுவும் அவன்கிட்ட பேச முடியல”
“எனக்கு இவ்வளவு பிரச்சனையாகும் தெரியுமா? எதேச்சையா சொன்னேன்ங்க” என்றாள் லதா
“இனிமே உன் மேல எந்த கம்ளெய்ண்டும் வரக்கூடாது லதா” என்று பேசிக் கொண்டிருக்கும் போது தூங்கி கொண்டிருந்த குழந்தை வீறிட்டு அழுதது. அதில் இருவரும் பேச்சை நிறுத்தி குழந்தையை சமாதானம் செய்தனர்.
குழந்தையின் அழுகுரலை கேட்டு தன்னையும் மறந்து சமையலறைக்கு சென்று வழக்கம் போல பாலை எடுத்துக் கொண்டு அவசரமாக சரவணனின் அறைவாசலுக்கு எதிரே நின்ற சின்னபொண்ணு குழந்தையின் அழுகுரல் நின்று விடவும் தயங்கி அங்கேயே நின்று விட்டாள்.
வெகுநேரம் காரிலேயே அமர்ந்திருந்த வசீகரன் அப்போது தான் உள்ளே நுழைந்திருந்தான். அவனே எதிர்பாராதவிதமாக சின்னபொண்ணு கையில் பால் டம்ளருடன் நின்றிருப்பதை பார்த்ததும் கண்கள் மின்ன, “கோவத்துல சாப்பாடு வேணாம்னுட்டேன், பசி வயித்த கிள்ளுச்சு, தண்ணியாவது குடிச்சுட்டு படுக்கலாம்னு வந்தா, பால கைல வச்சிட்டு நிக்கறே. எனக்காகவே காத்திட்டு இருந்தியா சின்னு” என்றபடி கை நீட்டினான். (நினப்பு தான்)
அவள் தராமல் அவனை நன்றாக முறைக்க, தோள்களை குலுக்கிக் கொண்டு, “சரி விடு பர்ஸ்ட் நைட்ல குடுக்கும் போது குடிச்சுக்கறேன்” என்றான் கண்களை சிமிட்டி
“உங்களால தான் எல்லா பிரச்சனையும், அதப்பத்தி காெஞ்சம் கூட கவலை இல்லல்ல உங்களுக்கு?” என்றாள் மெல்லிய குரலில், ஆனாலும் வார்த்தைகளில் கோபம் தெரிந்தது.
“இவ்ளோ நேரம் காருக்குள்ள உட்கார்ந்துட்டு கவல பட்டுட்டு தான் இருந்தேன். அது போற மாதிரி தெரியல. சரிதான்னு நான் இறங்கி வந்துட்டேன். சந்தோசமோ கவலையோ அது நம்மகிட்ட தான் இருக்கு சின்னு. நீயும் நடந்தத மறந்துட்டு சந்தோசமா இரு. எல்லாத்தையும் நான் பாத்துக்கறேன், இப்போ போய் தூங்கு, காலைல எல்லாம் சரியாயிடும்” என்றான்.
“நீங்க பண்ணவரைக்கும் போதும். இத்தோட நிறுத்திக்கோங்க” என்றாள் வெடுக்கென்று
“நான் என்ன பண்ணேன்?”
“என்ன பண்ணீங்களா? நான் தங்கியிருக்கற ரூமுக்குள்ள வந்து உங்க போட்டோவ வச்சிட்டு போயிருக்கீங்க, அதுவும் ஹார்ட் போட்டு வித் லவ்னு எழுதி வச்சிருக்கீங்க. எனக்கு தெரியாம ரூமுக்குள்ள வந்ததே தப்பு. இதுல என் பெட்டிய தொறந்து போட்டோவ வச்சிட்டு போயிருக்கீங்க. என்கிட்ட நேரா சொல்லியிருந்தா அப்பவே பதில சொல்லியிருப்பேனே?”
“என்னனு?”
“இதெல்லாம் சரிவராதுனு”
“அதனால தான் இதுவரைக்கும் நேரா சொல்லல”
“அதுக்கு ரூமுக்குள்ள வந்துடுவீங்களா?”
“சும்மா ரூமுக்குள்ள நான் வந்தேன்னு சொல்லிட்டு இருக்காத சின்னு. நான் வந்திருந்தா, என்னாகும்னு தெரியாம பேசிட்டு இருக்கே. உனக்கு தெரியாம வந்து போட்டோ வச்சுட்டு போற அளவுக்கு கோழைனா என்னை நினைச்சே. உன்ன தட்டி தூக்கிட்டு போற தைரியம் எனக்கிருக்கு. சின்னபொண்ணாச்சே படிக்கட்டும்னு விட்டு வச்சிருக்கேன்” என்றான் அழுத்தமான குரலில்
“நீங்க தானே போட்டோவ பெட்டியில வச்சதா சொன்னீங்க?”
“அந்த நேரத்துல அம்மாகிட்ட இருந்து உன்னை காப்பத்தறதுக்காக சொன்னேன். ஆனா போட்டோவ நான் உன் பெட்டியில வைக்கல”
“அதுல பின்னாடி எழுதினது கூட நீங்க இல்லையா?”
“அது நான் தான்”
“என்ன குழப்பறீங்க?”
“நமக்குள்ள எல்லாம் சரிவரும்னு சொல்லு, உனக்கு விளக்கமா சொல்றேன்” என்று கண் சிமிட்டினான்
“எப்பவும் நமக்குள்ள சரிவராது, அதனால எனக்கு எந்த விளக்கமும் வேணாம்”
“அதையும் பாத்துடலாம்” என்று தோள்களை குலுக்கி கொண்டு மாடியேறினான்
மறுநாள் காலை சின்னபொண்ணு தயாராகி தன் பெட்டி மற்றும் புத்தகப்பையுடன் வெளியே வந்தாள்.
வசீகரனை தவிர அனைவரும் ஹாலில் அமர்ந்திருந்தனர்.
“நான் இந்த வீட்டுக்கு வேலைக்காரியா வந்தேன். வேலைக்காரியாவே போயிடுறேன். என்னால எந்த பிரச்சனையும் இனி வராது. இதுவரைக்கும் உங்க வீட்ல எனக்கு அடைக்கலம் கொடுத்ததுக்கு ரொம்ப நன்றி” என்று அனைவருக்கும் பொதுவாக கைகூப்பி வணங்கினாள். அலமேலு முகத்தை திருப்பிக் கொள்ளவும், யாருடைய பதிலுக்கும் காத்திருக்காமல் வெளியே சென்றுவிட்டாள்.
“நானே உன்னை காலேஜ்ல டிராப் பண்ணிடறேன்” என்றபடி சரவணன் வந்தான்.
“இல்ல சார், நானே பஸ்ல போய்க்கறேன்”
“பெட்டிய தூக்கிட்டு எப்படி போவே? இரு ஆட்டோவ வரச்சொல்றேன்” என்றவன் போன் செய்து ஆட்டோவை வரவழைத்தான்.
ஆட்டோவில் ஏறியவளுக்கு இதுவரை மனதை அழுத்திய விஷயங்கள் எல்லாம் பின்னுக்கு சென்றது. அடுத்து எங்கே தங்க போகிறோம்? பணத்திற்கு என்ன செய்ய போகிறோம் என்ற கேள்வி பூதாகரமாக எழுந்தது. அவளின் இன்றைய நிலைமைக்கு காரணம் வசீகரன். எல்லாம் அவனால் வந்தது, இனியாவது அவன் அவள் வழியில் குறுக்கிடாமல் இருந்தால் அதுவே போதும் என்று நினைத்துக் கொண்டாள்.
சின்னபொண்ணு கல்லூரிக்குள் நுழைந்தபோதே அவளின் தோழி செல்வி முதற்கொண்டு அனைத்து கல்லூரி நண்பர்களும் ஒவ்வொருவராக அவளுக்கு வாழ்த்து சொல்ல, அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை. செல்வியிடம் காரணம் கேட்டாள்.
“வேண்டா, காலேஜ்ல இந்த வருஷம் ஸ்பெஷல் ஸ்காலர்ஷிப் அறிவிச்சிருக்காங்க. நல்லா படிக்கிற ஏழை ஸ்டுடென்ட்க்கு காலேஜ் ஹாஸ்டல், சாப்பாடு எல்லாம் ப்ரீயா கொடுப்பாங்களாம். அதுக்கு உன்னை செலக்ட் பண்ணியிருக்காங்க. நீ இன்னையிலிருந்து காலேஜ் ஹாஸ்டல்லயே தங்கிக்கலாம்னு நோட்டீஸ் போர்ட்ல போட்டு இருக்காங்க”
சந்தோசத்தோடு ஓடிச்சென்று நோட்டீஸ் போர்டை பார்த்தாள். செல்வி சொன்னது நிஜம் தான். அந்தபக்கம் வந்த கல்லூரி முதல்வரின் காலில் விழுந்து விட்டாள்
“என்னம்மா பண்றே” அவர் பதட்டத்துடன் அவளை எழுப்ப
“சார், எந்த மாதிரி சூழ்நிலையில நீங்க எனக்கு உதவி பண்ணியிருக்கீங்கனு தெரியுமா? இன்னைக்கு இந்த அறிவிப்பு மட்டும் இல்லனா நான் தெருவுல தான் சார் நின்னு இருக்கணும். உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுனே தெரியல சார். ரொம்ப நன்றி சார். நான் இந்த காலேஜ்க்கு பெருமை தர மாதிரி நல்லா படிச்சு முன்னேறுவேன் சார்” என்றவளின் கண்களில் ஆனந்த கண்ணீர் பெருக்கெடுத்தது.
கல்லூரி முதல்வர் அவளின் நன்றியை முழுதாக ஏற்றுக் கொள்ள முடியாமல் அவளுக்கு பின்னால் தூரத்தில் நின்றிருந்த வசீகரனை பார்த்துக் கொண்டிருந்தார்
(தொடரும்)
error: Content is protected !!
Pavam chinna ponnu