Skip to content
Post Views: 84
ஆகாயமே என் ஆதாரமே 4
1980 முதல் ஐந்தாண்டுகளுக்கு முன்பு வரை நமது கண்ணோட்டத்தில் பெரிய மாற்றமில்லை. பொறியியல் படித்துவிட்டு வேலைக்கு சென்றால் பெரியதாக மரியாதை கிடைக்கும். எங்க பிள்ளை இன்ஜினீயர் என்று சொல்லிக் கொள்வதை பெற்றவர்கள் பெருமையாக நினைத்துக் கொண்டிருந்தார்கள். இன்றும் கூட ஆயிரக்கணக்கான தாய்மார்கள் தங்களது நகைகளை விற்றுக்கூட பிள்ளைகளை பொறியியல் படிக்க வைப்பதை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
இதில் மென்பொருள் நிறுவனங்கள் இந்தியாவில் காலடி வைத்துவிட்ட பிறகு ,பொறியியலில் மற்ற துறைகளை விட மென்பொருள் பற்றிய கற்றலுக்கு அதிகமாகவே முக்கியத்துவம் கொடுத்துவிட்டோம்.
மென்பொருள் பற்றிய கல்வியை கற்றே ஆகவேண்டும் என்ற நிலையில் மக்கள் . பொறியியலில் வேறு ஏதாவது பிரிவை தெரிவு செய்து படித்தவர்களும் கூட மென்பொருள் நிறுவனங்களில் வேலைக்கு சேர்வதற்கு பிரியப்பட்டார்கள்.
Advertisement
விஷயம் ஒன்றும் பெரியதில்லை. அளவுக்கு அதிகமான ,தாராள சம்பளம். இப்போதும் அந்த மோகம் ஒன்றும் குறைந்தபாடில்லை. நான் சொல்வது உங்களுக்குப் புரியும் என்று உணர்கிறேன்.
இங்கே ராதாவும் கூட அடிப்படை கல்வி அறிவு முக்கியம் என்று உணர்ந்து கொண்டு இன்னமும் அதிகமான கணினி கற்றலில் தன்னை உட்படுத்திக் கொண்டாள் .காலத்துக்கு தகுந்த மாதிரி ஒவ்வொருவரும் தம்மை மேம்படுத்திக் கொள்வதை தான் காலத்தோடு ஒட்டி பிரயாணிப்பது என்று சொல்கிறோம்.
கிருஷ்ணனும் கூட அடிப்படை கணினி அறிவு போதாது என்று கணக்குப் பதிவிடுவது குறித்தான மென்பொருளை கற்க முற்பட்டார். பவர் பாயிண்ட் ,எக்ஸல் எல்லாம் சுலபமாக கற்றவருக்கு டாலி தண்ணீர் காட்டியது. அவர்கள் அலுவலகத்தில் கற்க சொல்லி மூன்று மாதங்கள் ஆகிவிட்டது.
Advertisement
ஜானகி ஹோம் ஸயன்ஸில் விருப்பம் இல்லை என்றுவிட்டு நியூட்ரிஷன் படித்தாள் . ராதாவுக்கு இதில் கொஞ்சமும் இஷ்டமில்லை. தனது அண்ணாவின் பிள்ளைகள் இருவரும் நன்றாக படிக்கிறார்கள். இதோ அண்ணாவின் மூத்த பிள்ளை இப்போது பொறியியல் முதலாமாண்டு படிக்கிறான். தமது மூத்த மகளையும் மென்பொருள் பொறியாளர் ஆக்கிவிட வேண்டும் என்ற ராதையின் கனவில் மூட்டை மண்ணை எடுத்து கொட்டிவிட்டாள் ஜானகி.
Advertisement
ஏற்கனவே வீட்டு வேலைகள் செய்வதில் அவளுக்கு என்றுமே ஆர்வம் இருந்தது கிடையாது.எப்போதும் தனியே அமர்ந்திருப்பதும்,யாரோடும் பேசாமலே தானுந்து தனது வேலைகள் உண்டு என்று இருப்பதும் ஒரு விதத்தில் நன்றாகவே இருந்தாலும் ராதிக்கு ஏனோ சமீப காலங்களில் ஜானகி மீது ஒரு கடுப்பு பரவி விட்டது.
அண்ணனும் அண்ணியும் வேலைக்கு சென்றதில் நன்றாகவே சம்பாதிக்கிறார்கள்.இப்போது அவர்களது குழந்தைகளும் நன்றாக சம்பாதிப்பார்கள்.மூத்த நந்தனார் டில்லியில் பெரிய நிலையில் இருக்கும் பொழுது ,இப்போது அடுத்த நாத்தனாரும் வாழ்க்கையின் அடுத்த நிலைக்கு சென்று விடுவாள். அப்படியென்றால்? ‘சி ஏ படிக்கிறான் என்னோட பிள்ளை’ என்று வெட்டி பந்தா காண்பித்து திருமணம் செய்து வைத்தவர்கள் மீது அவ்வளவு கடுப்பும் கோவமும்.கணவர் கிருஷ்ணன் இன்னமும் அதிகமாக ஒன்றும் சம்பாதிக்கவில்லை. ராதா தான் படித்ததை வைத்து கொஞ்சம் சம்பாதித்தாள் தான்.அதெல்லாம் வளரும் குழந்தைகளை வைத்துக் கொண்டு யானை பசிக்கு சோள பொரிதான் ,
பிள்ளைகள் பெரியவர்களாகி விட்டார்கள் என்று அண்ணன் இப்போது இருக்கும் வீட்டை இடித்துவிட்டு இன்னமும் பெரியதாக கட்டிக் கொள்ளப் போவதாக அன்று அம்மா சொல்லிக்கொண்டு இருந்தாள் .ராதாவுக்கு கேட்கலாமா…வேண்டாமா என்று இருந்தது.ஆனாலும் அமைதியாக இருக்க முடியாது. இவளுக்கும் இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்களே!
Advertisement
“ம்மா…எனக்கும் இந்த வீட்டுல உரிமை இருக்கு. பேசாம அண்ணாவை இந்த வீட்டை வித்துட்டு என்னோட பங்கு பணத்தை கொடுக்க சொல்லு.இல்லையா.இன்னிக்கு நிலத்தோட மதிப்பு என்னன்னு பார்த்திட்டு அவனே எனக்கு அந்த பணத்தை கொடுத்தாலும் சரிதான். எனக்கும் குழந்தைகள் இருக்கு.அவங்களோட வாழ்க்கையை பார்க்கணும். அண்ணாவோட லைப் நல்லாவே செட்டில் ஆகிடுச்சு.நீங்க பார்த்து கல்யாணம் செஞ்சு வச்சவரை தானே கல்யாணம் பண்ணிக்கிட்டேன்,என்னோட வாழ்க்கை நிலைமை சரியா சுழல நீங்கதானே பார்க்கணும்? “என்று சாதாரணமாக பேசிக்கொண்டு இருந்தவள் பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்து விட்டாள் .
சப்தம் பெரியதாக கேட்கவே தங்களது அறையில் துணிகளை மடித்துக் கொண்டிருந்த சுதா வெளியே வேகமாக வந்துவிட்டாள் . அண்ணி அழுவதையும் மாமியார் அவளை கண்டனப் பார்வை பார்த்துக்கொண்டு அமர்ந்திருப்பதையும் கண்டவளுக்கு ஒன்றும் புரியவில்லை.கண்ணாலேயே மாமியாரிடம் என்னவென்று கேட்க அவர் பிறகு சொல்வதாக தலை அசைத்தார்.
அப்போதைக்கு ராதாவை சமாதானம் செய்து அனுப்பிவைத்தாள் சுதா. அன்று அதற்க்கு பிறகு பேசவே முடியவில்லை. அடுத்து வந்த நாட்களில் ராதா தனது பெற்றவர்களை பார்க்கவே செல்லவில்லை.செல்ல பிடிக்கவில்லை.எல்லோருமாக சேர்ந்து தனது வாழ்க்கையை ஒரு வழி செய்துவிட்டதாக வெளிப்படையாகவே கோவத்தை காண்பிக்கத் தொடங்கினாள்.கிருஷ்ணன் எதையும் கண்டுகொள்ளவில்லை.
எப்போதுமே அனாவசியமாக தங்கை வீட்டுக்கு செல்ல மாட்டார். முன்பு அத்தை வீடாக இருந்தாலும் அது உண்மையில் அத்தை வீடாக இருந்தது இல்லை.அவரை பொறுத்தவரை அது அத்தையின் புகுந்த வீடு. மாமா வீடு. அதற்குப் பிறகு தனது மாமியார் -மாமனார் வீடு.தங்கையின் புகுந்த வீடு. அந்த அளவோடுதான் இருப்பார் . சுதாவுக்கும் அவருக்கும் நல்ல புரிதலும்,அண்ணன் -தங்கை பாசமும் உண்டு. அது சுதாவின் கணவருக்கு தெரியும்.அதை அங்கே யாரும் பெரியதாக வெளியில் காட்டிக் கொண்டது இல்லை.
ராதையின் அண்ணனுக்கும் தங்கையின் மீது பாசம் உண்டு.ஆனால்,அவள் அதிகமாக படிக்கவில்லை என்ற அலட்சியமும் உண்டு. இதெல்லாம் குடும்பங்களில் சகஜமான ஒன்றுதான்.
அன்று காலையிலேயே சுதாவும் அவள் கணவருமாக கிருஷ்னன் வீட்டுக்கு வந்துவிட்டார்கள்.கையில் இனிப்பு பெட்டியுடன். அதில் ராதா முதலில் விழித்தாள்.பிறகு அவளுக்கு ஏதோ புரிந்தது. என்னதான் நடக்கிறது என்று
கைகளைக் கட்டிக்கொண்டு பார்த்துக் கொண்டிருந்தாள்.
வீட்டுக்கு வந்த தனகையையும் தங்கை கணவரையும் மரியாதையுடன் வரவேற்று பேசி கொண்டிருந்தார் கிருஷ்ணன். கடந்த சில நாட்களாக மனைவி அமைதியாகவும் கோவமாகவும் இருப்பதை அவரும் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறார். சுதா ஏற்கனவே அரைகுறையாக காதில் கேட்டதை அண்ணனிடம் சொல்லி விட்டாள் .கணவரிடமும் தான்.
“ராதா அண்ணி அத்தைகிட்ட ரொம்பவே கோவமா அழுதுகிட்டே பேசினாங்க. அத்தைக்கு இந்த வீட்டுல அன்னிக்கு பங்கு கொடுக்க இஷ்டமில்லை. சொத்து பையனுக்கு தான் கொடுக்கணும்ங்கற எண்ணம். அதோட ராதா அண்ணி நம்ம அப்பா அம்மாவையும் வயசான காலத்துல தனியா ஊருல விட்டிருக்கிறது அதுவும் பிடிக்கல. என்னோட சொல்யூஷன் என்னன்னா வீட்டை நாம இடிச்சிட்டு நாலு போர்ஷனா அபார்ட்மெண்ட் மாதிரி கட்டலாம். மேலேயும் கீழேயும் உங்களுக்கும்,எங்களுக்கும் மூணு படுக்கை அறைகளோட வீடு, வயசானவங்களுக்கு டபுள் பெட் ரூம்.
அவங்க காலத்துக்கு பிறகு என்னோட அப்பா அம்மா வீடு அண்ணனுக்கும் ,அத்தை மாமா வீடு எங்களுக்கும் வரும். பணம் நீதான் உங்க போர்ஷனுக்கு ரெடி பண்ணணும் அண்ணா என்று கிருஷ்னனிடம் சொல்லியிருக்க அந்த யோசனை ஏற்கப்பட்டு அதை சொல்லத் தான் இப்போது அவர்கள் வந்திருப்பது.
ராதையிடம் சொன்னதற்கு அவள் கொஞ்சம் சமாதானம் ஆனாள் .ஆனாலும் அவளால் தனது பெற்றவர்களை மன்னிக்கவே முடியவில்லை . சொந்த மகள் தானே நான்.இவ்ரகள் சொன்னதை மீறி என்றாவது ஏதாவது செய்து இருக்கிறேனா? இவர்கள் அமைத்து கொடுத்த இந்த வாழ்க்கையில் இன்று வரை ஓயாத போராட்டம் தான் . நான் ஒன்றும் உரிமை இல்லாத எதையும் கேட்கவில்லையே? என்ற எண்ணம்.
கிருஷ்னன் தனது பெற்றவர்களிடம் சொன்னதற்கு அவர்களுக்கு இதில் உடன்பாடு இல்லை என்றாலும் மகனும் மகளும் சொன்னதை ஒப்புக் கொண்டார்கள்.
“ப்பா ,உங்க ரெண்டு பேருக்கும் வயசு ஆகுது.இங்கே பக்கத்துல மெடிக்கல் பெசில்ட்டி சரியானபடிக்கு இல்ல.ஒரு எமெர்ஜென்ஸீ வந்தாக்கூட பார்த்து அட்மிட் பண்ண ஆள் இல்ல. உண்மையா சொல்லனும்னா,நா,சுதா,அத்தை எங்க மூணு பேருக்கும் உங்க ரெண்டு பேரோட கவலைல ராத்திரி தூங்க முடியல.இங்கே வந்து இனிமே நா உட்கார போறதும் இல்ல.பேசாம எல்லாத்தையும் வித்துட்டு சுதா புருஷன்கிட்ட குடுங்க.அவரு சீக்கிரம் வேலைய ஆரம்பிக்கட்டும்.” மகனது கூற்றுக்கு ஆமோதிப்பாக தலை அசைத்தார் அந்த முதியவர்.
ஒரு வயதுக்கு மேல் பெற்றவர்கள் தங்களால் முடிந்தாலும் சரி,முடியாவிட்டாலும் சரி பிள்ளைகள் சொல்லும் வார்த்தைகளுக்கு சம்மதம் சொல்லித்தான் ஆகவேண்டும்.
அவர்கள் இருவரும் வீட்டை விற்றுவிட்டாலும்,சென்னையில் புதிய கட்டிடம் தயாராகும் வரை அந்த வீட்டிலேயே இருக்க சொல்லிவிட்டார் புதியதாக வாங்கியவர்.
“அதெல்லாம் ஒண்ணும் இல்லீங்க.இத்தன வருசமா தாயா புள்ளையா பழகிட்டு,உங்கள கிளம்புன்னு சொல்ல மனசு அடைக்குதய்யா.நீங்க குடிக்கூலி ஒண்ணும் தரவேணா . இங்கேயே இருந்திட்டு,வீடு கட்டி முடிச்ச பிறகு போவீங்களாம்”என்று விட்டிருந்தார். பழகிய ஊர், இயல்பான மக்கள்.இவற்றை விட்டு வயதான பிறகு சென்னை சென்று ஆகவேண்டியது என்ன? வேலைக்கு செல்பவர்களுக்கு வேண்டுமானால் அது சொர்க்கமாக இருக்கலாம்.வயதானவர்களுக்கு?
கட்டிடம் நிமிர்ந்து நிற்க பத்து மாதங்கள் ஆனது. அதுவரை பெரியவர்கள் நிம்மதியாக சொந்த ஊரில் இருந்தார்கள். முதலில் ராதாவும், அவளது அம்மாவும் தங்கள் போர்ஷனுக்கு கிரக பிரவேசம் செய்துவிட்டார்கள். புதிய வீட்டில் ஜானகியும்,,சீதாவும் தங்களுக்கென்று தனித்தனியாக அறை எடுத்துக் கொண்டார்கள்.மாஸ்டர் பெடரூம் ராதா கிருஷ்ணனுக்கு.
“புதுசா வீடுதான் கட்டியாச்சே.கொஞ்சநாள் அம்மாவும் அப்பாவும் இங்கே வரட்டுமே. இங்கே வந்தா அவங்க போர்ஷனுக்கு சீக்கிரம் கிரக பிரவேசம் செஞ்சிடலாம்”என்றார் கிருஷ்ணன் .
“அது எப்படிங்க முடியும்? பொண்ணுங்க ரெண்டு பேரும் தனி ரூம் கேட்டு வாங்கியாச்சு.மீதம் இருக்கும் ஒரே பெட் ரூமுல நாம இருக்கோம். அவங்கள கூப்பிட்டு எங்கே தங்க வைக்க முடியும்?” இப்படித்தான் கழிந்தது கிரக பிரவேச இரவு.
மாடியில் ராதையின் அம்மாவும் அப்பாவும் மகன் மருமகளுடன் தங்குவதாக முதலிலேயே சொல்லி விட்டார்கள். அதனால் அடுத்த இரண்டு நாட்களில் சுதா போர்ஷனுக்கு கிரகப்பிரவேசம். அவர்கள் போர்ஷனை வாடகைக்கு விடுவதாக ஏற்பாடு.
இன்னமும் கிருஷ்ணனின் பெற்றவர்கள் சென்னை வரவில்லை.கிருஷ்ணனும் கூப்பிட்டுக் கொண்டே இருக்கிறார். தானே கிரக பிரவேசம் செய்து விடுவதாக அவர் சொல்லவும் பெரியவர்கள் ‘சரி’ என்று விட்டார்கள்.
எல்லாம் சரி செய்துவிட்டு உரியவர்கள் வரவுக்காக அந்த ஒரு போர்ஷன் காத்திருக்க வந்தது என்னவோ அவர்களது மறைவு செய்திதான். கிளம்புவதற்கு சரியாக இரண்டு நாட்களுக்கு முன்பாக இருவரும் சேர்ந்து உயிரை விட்டிருந்தார்கள். கிருஷ்னன்,சுதா இருவராலும் இதை ஜீரணம் செய்து கொள்ளவே முடியவில்லை. ராதா பெரியவர்களின் வாழ்நாளில் தன்னுடன் வைத்துக் கொள்ளவே இல்லை.ஏதோ ஒரு சாக்கு.
சுதாவின் நல்வாழ்க்கைக்காக தன்னை கிருஷணனுக்கு திருமணம் செய்துவிட்டார்கள் என்ற எண்ணமாக கூட இருக்கலாம். ஜானகி வழக்கம்போல் அமைதிதான். சீதாதான் அழுது தீர்த்தாள்.அவள் இப்போதுதான் ஒன்பதாம் வகுப்பு.இன்னமும் பக்குவம் வரவில்லை.
ஜானகி மனநிலையை அங்கே அவதானிப்பவர்கள் இல்லை. அவள் மனம் பெற்றவளை நினைத்து வெறுப்பும்,பயமும் கொண்டது. ஒருவித ஒதுக்கம் வந்துவிட்டிருந்தது. அது வளரவும் தொடங்கி இருந்தது. நடக்கும் விஷயங்கள்,நடந்தவை என்று அவளுக்கு ஒன்றும் தெரியாது.ஆனாலும் , அம்மா செய்வது தவறு என்று மட்டும் உணர்ந்திருந்தான் .அதை வெளிப்படையாக சொல்லவும், வெளிக்காட்டவும் அவளது சுபாவம் இடம் கொடுக்கவில்லை.
பிறகு காலங்கள் தம்பாட்டில் நகர்ந்தது. கிருஷ்ணன் தமது பெற்றவர்கள் வருவதாக இருந்த வீட்டை வாடகைக்கு விட்டார்.நல்ல பிரைம் லொகேஷன் என்று சொல்லியே வாடகையை நிறைய வாங்கினாள் ராதா. வரும் பணத்தில் ஒரு பகுதியை வீட்டு பராமரிப்பு,வீட்டு வரி, தண்ணீர் வரி என்று ஒதுக்கி வைத்தவள் இன்னொரு பகுதியை தனது இரு பெண்களுக்கும் நகைக்கு என்று ஒதுக்க ஆரம்பித்தாள். இதோ இன்னமும் மூன்று வருஷத்தில் பெரியவள் ஜானகிக்கு வரன் தேட வேண்டும் என்று அவளுக்குள் யோசனை ஓடியது.நடுவில் மூத்த நாத்தனார் ரமணி சொத்து சண்டைக்கு வரவே ஏற்கனவே பெரியவர்கள் எழுதி வைத்திருந்த உயிலின்படிக்கு சொத்து கிருஷ்ணனுக்கு சேர்ந்து விட்டது.அதில் ரமணி பெரியதாக சண்டை போட்டிருந்தாள்.அதற்குப் பிறகு அவளோடான தொடர்பு விட்டுப் போனது.பன்னிரண்டாம் வகுப்பு முடித்த ஜானகி ,”நா சென்னை காலேஜ் எதுலயும் சேர மாட்டேன்.கொஞ்சுவருஷம் ஹாஸ்டல் வாசம் வேணும். நா மதுரை,இல்ல திருச்சி, அப்படி எங்கயாச்சும் படிக்க போறேன்”என்று நின்றுவிட ராதா கிருஷ்னன் இருவரும் வேறு வழி தெரியாமல் கொடைக்கானலில் இருக்கும் ஒரு கல்லூரியில் சேர்த்துவிட்டார்கள். அவளுக்கு அந்த இடமும் வாசமும் பிடித்துப்போனது.பொங்கல்,தீபாவளி,ஆயுத பூஜை சமயங்களில் ஹஸ்டெல் மூடியிருக்கும் என்பதால் மட்டுமே சென்னைக்கு பெத்தவர்களை பார்க்க வருவாள்.மற்றபடிக்கு மனதளவில் அவள் தள்ளி நின்று கொண்டாள் .
error: Content is protected !!