Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

82. பட்டர்ஃப்ளை - மையூறும் விழிதனில் மையல் கொண்டேனடி

மையூறும் விழிதனில் மையல் கொண்டேனடி 6

அன்று காலை விரைவாக பணிக்கு வந்து சேர்ந்தாள் காவ்யா.

சேரனும் எப்போதும் வரும் நேரத்திற்கு சரியாக அலுவலகம் வந்து சேர்ந்ததும்,அவசரமாக அவனின் முன்பு வந்து நின்றாள் காவ்யா.



Advertisement

கைகளை பிசைந்தப்படி நின்றவளை ஏற இறங்க பார்த்தவன் “என்ன வேலைக்கெல்லாம் வந்திருக்கீங்க மிஸ்.காவ்யா?அதுக்குள்ள என் மேலே நம்பிக்கை வந்திடுச்சா?” என நக்கலாக அவன் கேட்க,

‘இந்த ஆளுக்கு இருக்கிற ஏத்தத்தை பார்றேன்’ என‌ மனதிற்குள் புலம்பி வெளியே “சாரி சார்…இதுவரை நீங்க இரண்டு பேரும் எதிர் எதிரா நின்னதே இல்லை…அதனாலே தான் ஒரு பதட்டத்திலே அப்படி பேசிட்டேன்…” என தயக்கத்துடன் இழுத்தாள்.

Advertisement

Advertisement

உடனே அவனின் பார்வை கூர்மை பெறவும் “பட் உங்க மேலே எனக்கு நிறைய நம்பிக்கை இருக்கு சார்…யூ ஆர் தி பெஸ்ட்” என கட்டை விரலை அவனின் முன்பு தூக்கிக்காட்டி அவசரமாக மொழிந்தாள்.

அவளை மீண்டும் மேலிருந்து கீழாக ஒரு பார்வை பார்த்தவன் “கேஸ் ஃபைல் எடுத்திட்டு என் ரூமுக்கு வா” என்றுவிட்டு விறுவிறுவென தனது அறையை நோக்கி நடந்தான்.

Advertisement

அவன் தன்னை மன்னித்துவிட்டான் என்றப்பிறகே ‘ஹப்பாடா ஒரு வழியா மன்னிச்சிட்டாரு மகராசன்’ என ஆசுவாச பெருமூச்சுவிட்டவள் “காவ்யா” என அவன் உள்ளிருந்து குரல் கொடுத்ததும் “இதோ வந்திட்டேன் சார்” என வேகமாக கோப்பை எடுத்துக்கொண்டு அவன் பின்னால் ஓடினாள்.

அன்று மாலை ஐந்து மணி,

சூர்யகுமார் அலுவலகத்தில்

தேவி தனது மேசையில் கோப்புகளை அடுக்கி வைத்துக் கொண்டிருந்தாள்.

மூத்த வழக்கறிஞரான சூர்யகுமாரின் அலுவலகத்தில் தான் தேவி கடந்த நான்கு மாதங்களாக அலுவலக உதவியாளனியாக பணிப்புரிகிறாள்.

சங்கரியின் உறவின பெண்மணி ஒருவர் சூர்யகுமார் அவர்களின் வீட்டில் வேலையாளராக இருக்கிறார்.

அவரின் மூலமாகவே தேவிக்கு இந்த வேலை கிடைத்திருந்தது.

சிறு வயதிலேயே கணவனை இழந்து குழந்தையுடன் சிரமப்படுகிறாள் என்று அறிந்ததும்,அடுத்த கணமே அவளை பணியில் நியமித்துவிட்டார்.

சூர்யகுமார் ஐம்பது அகவையைத் தாண்டியப்போதும் இது நாள் வரை திருமணமே செய்துக்கொள்ளவில்லை.

இளம் வயதில் அவருக்கு திருமணத்தில் பெரிதாக நாட்டமில்லை.

ஆனால் தனக்கொரு துணை வேண்டும் என்று எண்ணும் நேரம் அவருக்கு வயதாகியிருந்தது.

இப்போது ஐம்பது வயதை கடந்த பிறகும் அவருக்கென யாருமின்றி தனித்து வாழ்ந்துக்கொண்டிருக்கிறார் மனிதர்.

தேவியின் சூழ்நிலையைப் பற்றி கேள்வியுற்றதும் அவளின் மேல் ஒரு அனுதாபம் உண்டாக,அவளை தன் மகள் போலவே பாவித்து நடத்தினார் சூர்யகுமார்.

ஆனால் அவளோ அவரிடம் எப்போதும் ஒரு இடைவெளியுடனே பழகுவாள்.

அவரை தனது முதலாளி என்ற எல்லையிலே அவள் தள்ளி நிறுத்தியிருக்க,

அதை அவரும் உணர்ந்தே இருந்தார்.

அவளின் நடத்தையில் அவர் வருந்தினாலும் அவளை எதற்கும் இதுவரை கட்டாயப்படுத்தியதில்லை.

கோப்புகளை அடுக்கி வைத்துவிட்டு அதன் மேல் சில குறிப்புகளை அவள் எழுதி ஒட்டிக்கொண்டிருந்தாள்.

அவ்விடத்தில் அவரின் வேறு சில உதவி வழக்கறிஞர்களும் இருந்தனர்.

அந்நேரம் “தேவி…” என்ற குரல் கேட்டு சட்டென நிமிர்ந்தாள் அவள்.

அவ்விடத்தில் நரைத்த வெண்ணிற தாடி மீசையுடன் சூர்யகுமார் தான் நின்றிருந்தார்.

அவரை கண்டதும் “சொல்லுங்க சார்” என பணிவாக கேட்டுக்கொண்டே அவள் முன் வர,

சூர்யகுமார் கையில் இருந்த கோப்பை அவளிடம் நீட்டி “இந்த டாக்குமெண்ட்ஸை நாளைக்கு சேரன் செங்குட்டுவன் ஆபீஸ்ல கொடுத்திட்டு அப்படியே அவர்கிட்ட ஒரு கையெழுத்து வாங்கணும்…அதையும் வாங்கிட்டு வந்திடும்மா” என்றப்படி மேலும் சில விவரங்களை உரைத்தார்.

ஆனால் அவளோ அவர் நீட்டிய கோப்பை கையில் வாங்காமல் ஒரு கணம் தயங்கி பின்பு அதனை வாங்கிக்கொண்டாள்.

சேரனை பற்றி எண்ணியவுடனே அன்று கோவிலில் நடந்த நிகழ்வுகள் தான் அவளின் கண் முன் வந்து சென்றன.

அதனால் உண்டாகிய தடுமாற்றமே அது!

அவளின் முகத்தில் ஒரு அசௌகரியமான உணர்வு தாண்டவமாடுவதை கண்டுவிட்டு “என்னாச்சும்மா?” என மென்மையாக வினவினார் பெரியவர்.

மெதுவாக அவரை நோக்கி நிமிர்ந்தவள் “ஒண்ணுமில்லைங்க சார்” என்றாள் மெல்லியக்குரலில்.

அவளின் குரல் அவருக்கு எதையோ உணர்த்த,உடனே காரணத்தை யூகித்த சூர்யகுமாரின் முகம் மென்மையுற்றது.

“சேரனை நினைச்சு பயப்படறீயாம்மா?” என இதமான குரலில் வினவ,

அவளோ எவ்வித பதிலும் கூறாமல் மௌனமாக இருக்க “என்னம்மா அது தான் நிஜமா?” என சிரித்தப்படி அவர் வினவ,

அவளோ “அப்படியெல்லாம் இல்லீங்க சார்” என அவசரமாக தலையசைத்து மறுத்தாள்.

அதில் அவரின் புன்னகை மேலும் விரித்தது.

“டோன்ட் வொர்ரிம்மா…மத்தவங்க சொல்லற மாதிரி சேரன் முரடன் எல்லாம் இல்லைம்மா…ரொம்ப நல்லப்பையன்…என்னோட பெஸ்ட் அசிஸ்டென்ட்டுனா அது அவன் மட்டும் தான்…அவன் அப்படியொரு திறமைசாலி…அவனோட பழகி பார்த்த எனக்கு தான் அவனை பத்தி நல்லா தெரியும்” என முகத்தில் பெருமிதத்தோடு அவனை புகழ்ந்து பேசினார் மூத்தவர்.

அவர் பேசியதையெல்லாம் தேவி ஆச்சரியத்தோடு கேட்டுக்கொண்டிருந்தாள்.

அவரோ அத்துடன் நிறுத்தாமல் “அவன் இன்னைக்கு என்னை விட மிகப்பெரிய உயரத்துக்கு போயிருக்கலாம்…ஆனால் இன்னமும் என்னை பார்த்தால் மரியாதையோடு எழுந்து நின்னு பேசுவான்…அப்படியொரு பண்பான பையன்” என சிலாகித்து அவர் கூறிக்கொண்டிருக்க,தேவி தான் ‘என்னடா சொல்லறாரு இவரு’ என அதிசயமாக பார்த்தாள்.

கோவிலில் அவள் பார்த்த மனிதனுக்கும் இப்போது சூர்யகுமார் கூறும் மனிதனுக்கும் இடையே நிறைய வித்தியாசங்கள் இருந்தன.

அவனது அதிகாரத்துவமான பேச்சிற்கும் இவரது வர்ணனைக்கும் சேரன் சற்றும் பொருந்திப்போகவில்லை.

ஆனால் அவரிடம் எதுவும் பேசாமல் அவர் கூறுவதை மௌனமாக கேட்டிருந்தாள் தேவி.

“எனக்கு மகன் இல்லாத குறையை தீர்த்தவனே அவன் தான்மா” என கண்களில் கனிவுடன் அவர் கூறிக்கொண்டிருக்க,

அதுவரை இவையனைத்தையும் மௌனமாய் கேட்டிருந்த அவரது உதவியாளன் பார்கவ் “சார் அவர் உங்க மகன் மாதிரினா…அப்போ இந்த டிவோர்ஸ் கேஸை நீங்க எடுத்து நடத்தப்போறதில்லையா?” என சந்தேகம் கேட்டான்.

உடனே அவனை நோக்கி திரும்பிய சூர்யகுமார் “இங்க பாரு பார்கவ்…என்ன தான் அவன் என் மகன் போலேனு சொன்னாலும்,கோர்ட்டிலே என்னைக்கும் என் எதிரி சேரன் செங்குட்டுவன் தான்…அவனுக்கும் அப்படி தான்…கோர்ட் படிக்கட்டிலே கால் எடுத்து வைச்சிட்டால் வேற மாதிரி மாறிடுவான்…அப்படி தான் அவனுக்கு நான் கத்துக்கொடுத்திருக்கேன்…அதனாலே இரண்டு பேருமே இந்த கேஸை விட்டுத்தரமாட்டோம்…நானும் இந்த கேஸிலே ஜெயிக்கவே விரும்பறேன்…பார்க்கலாம் இந்த குருவா?இல்லை அந்த சிஷ்யனானு..” என அழுத்தம் திருத்தமாக கூறியவரின் முகத்தில் அப்படியொரு தீர்க்கம்!

இதுவரை அவரின் முகத்தில் தெரிந்த மென்மை அடியோடு மறைந்துப்போயிருந்தது.

அவரின் உடல் மொழியிலும் சரி…பேசும் சொற்களிலும் சரி அதிதீவிரம் இருந்தது.

கடமை தவறாத வழக்கறிஞராக அவர் தீர்மானமாக பேசியதைக் கேட்டு அங்கிருந்த அனைவரும் பிரம்மித்தார்கள்,தேவி உட்பட…

அதேநேரம் அன்று தன் பணிகளை முடித்துக்கொண்டு கிளம்பிய சேரனின் மனதில் அந்த குட்டித் தேவதையின் ஞாபகங்கள்!

ஏனோ அவளை சந்திக்க வேண்டும் என அவன் மனம் விரும்பித் தவித்தன.

அவனது விருப்பத்தை நிறைவேற்றி வைப்பதற்காகவே அன்று மாலை வீட்டிற்கு செல்லும் நேரம் சேரன் ஸ்ருதியை ஏதேச்சையாக சந்தித்தான்.

தனது பாட்டியின் கைகளைப் பற்றி ஒற்றை குதிரை வால் அசைந்தாட சாலையில் நடந்து சென்றுக்கொண்டிருந்தாள் அவள்.

ஒரு சிக்னலில் தனது மகிழுந்தில் அமர்ந்தப்படி அவளை கவனித்திருந்த சேரனின் இதயமோ மகிழ்ச்சியில் படபடத்தது.

‘அது என்னோட பேபிகேர்ள் தானா?’ என அவனின் உள்ளம் பரபரத்திட,அவசரமாக அவளின் முகத்தை காண விளைந்தான்.

அவளின் பின்புறம் மட்டுமே தெரிந்தப்போதும் அவனின் மனமோ அது அவள் தான் என்று அடித்துக் கூறியது.

அடுத்த கணமே அவளை காண வேண்டும் போல் அவனது உடலிலுள்ள ஒவ்வொரு அணுவும் தவித்திட,இப்போதே அவளிடம் இறங்கி ஓடிவிட அவன் உள்ளம் தவித்தன.

அந்தோ பரிதாபம்…

அவனது வாகனம் அந்த குறுகலான சாலையின் நெரிசலில் சிக்கிக் கொண்டதால்,சட்டென அங்கிருந்து அவனால் நகரவே முடியவில்லை.

வாகனத்தை அவ்விடத்திலே நிறுத்து விட்டும் அவனால் இறங்கி செல்லமுடியாது.

அதற்குள் அவளும் அவளது பாட்டியும் ஒரு தெருவிற்குள் நுழைந்துச் செல்வதை கண்டவனிற்கு ஆயாசமாக வந்தது.

கண்ணிற்கு எட்டிய தூரத்தில் இருந்தும் குழந்தையைப் பார்க்க முடியாத எரிச்சலில் “ஷிட்” என சக்கரத் திருப்பியில் ஓங்கி ஒரு குத்துவிட்டான் சேரன்.

ஒரு வழியாய் பச்சை சமிக்கை விளக்கு ஒளிர்ந்ததும் வாகனமும் மெல்ல ஊர்ந்துச் சென்றது.

சென்னையில் வாகன நெரிசலை பற்றி சொல்லவே தேவையில்லை.

ஒரு ஒரு அடியாக முன்னால் இருந்த வாகனங்கள் நகர்ந்து செல்வதற்குள் ஸ்ருதி மாயமாகியிருந்தாள்.

அவனின் அகமும் முகமும் ஏமாற்றத்தில் சுருங்கிவிட,அவனிற்கு தன்னை நினைத்தே ஆத்திரமாக வந்தது.

அன்று தன்னுடைய ஆணவத்தை விட்டொழிந்துவிட்டு அவளது வீட்டு எண்ணை கேட்டிருக்கலாம் என கால தாமதமாக வருந்தி,தன்னையே கடுமையாகத் திட்டிக்கொண்டான்.

கூடவே,ஸ்ருதியின் தாயான தேவியையும் அவன் விட்டு வைக்கவில்லை.

அனைத்திற்கும் அவளையே காரணகர்த்தாவாக்கி ‘எல்லாம் அவ அம்மாவாலே வந்தது?நான் என்னவோ அவங்களை கடிச்சு முழுங்கப்போற மாதிரி அங்கிருந்து ஓடறதிலே குறியா இருந்தாங்க…அதனாலே தான் நானும் கோவத்திலே அவங்களை பத்தி கேட்காமலே வந்திட்டேன்…ப்ச்’ என கண்டப்படி அவளை திட்டிக்கொண்டான்.

அன்றைய நாள் மட்டுமல்ல…அடுத்த நாள் காலையிலும் அதே சிடுசிடுப்பு டனே அலுவலகம் வந்து சேர்ந்தான்‌ சேரன்.

சேரனுக்கும் அப்போது தெரியவில்லை.

கோவிலில் சந்தித்த அந்த குட்டி தேவதையின் அம்மா…தன்னுடைய சீனியரின் அலுவலகத்தில் தான் வேலை செய்கிறாள் என்று..

அத்தோடு அவனை காண்பதற்காக அவள் சற்று நேரத்தில் அவனுடைய அலுவலகம் வரப்போகிறாள் என்று தெரியாமல் மனதிற்குள் பொருமியப்படி இருந்தான்.

விதி அவர்களையே அறியாமல் மிக மெதுவாக…இருவரின் பாதையையும் ஒரே நேர்க்கோட்டில் நகர்த்திக்கொண்டிருந்தது.

அன்று காலை அலுவலகத்திற்கு செல்ல தயாராகிக்கொண்டிருந்தாள் தேவி.

அப்போது வீடே அதிர “அம்மாஆஆஆஆ…” என மகள் கத்தியதைக் கேட்டதும் பதறிப்போய் வெளியே ஓடி வந்தாள் தேவி.

ஸ்ருதி தரையில் விழுந்து அழுதுக்கொண்டிருக்க,அவளிற்கு அருகே ஆறு வயது சிறுமி ஒருவள் கையில் பொம்மையுடன் அவளை தெனாவெட்டாக பார்த்தப் படி நின்றிருந்தாள்.

அத்துடன் அந்த சிறுமிக்கு அருகே நின்றிருந்த ஜமுனா தாய் மகள் இருவரையும் ஆவேசமாக முறைத்திருந்தாள்.

அந்த சிறாரின் கையிலிருந்த அந்த மகிழுந்து பொம்மை மகளின் பிறந்தநாளிற்கு அவள் வாங்கிக்கொடுத்தது தான்!

அவற்றினை கண்டவுடன் அங்கு நடந்திருப்பதை யூகித்த தேவிக்கு மனதில் பாரமேறியது.

மகள் தரையில் அமர்ந்து அழுதுக்கொண்டிருப்பதை பார்த்ததும் பதறிப்போய் “அம்மு…” என வேகமாக ஓடி வந்து அவளை தூக்கிவிட்டாள்.

“என்னடி புள்ளைய வளர்த்து வைச்சிருக்கே நீ?சனியன் புடிச்சது…இந்த பொம்மை என்ன தங்கப்புஷ்பமாடி?இல்லை எங்களாலே வாங்கமுடியாத பொக்கிஷமா?கேட்டால் தராமல் என் புள்ளையவே அடிக்க வராள்…நான் மட்டும் இல்லைனா…இந்நேரம் என் பிள்ளையவே அடிச்சு இருப்பாள்” என தனது மகளை இடையோடு அணைத்துக்கொண்டு ஜமுனா அநியாயமாக குற்றப்பத்திரிக்கை வாசித்தாள்.

அதற்கு அவளின் மகளோ “அ..அம்மா இல்லைம்மா…அக்கா பொம்மை கேட்டவுடனே நான் குத்துட்டேன்…மறுபடியும் நான் விளையாத கேட்டா அக்கா எனக்கு ததமாதிக்கிறாள்…நான் கேட்டதுக்கு பெதிம்மா எனக்கு அடிச்சிட்டாங்க…” என அழுகையில் தேம்பிக்கொண்டே நடந்ததை எடுத்து உரைத்தாள்.

உடனே “பொய்யு…பொய்யு இவ தான் என்னை முதல்ல அடிக்க வந்தால் அதனாலே தான் அம்மா அடிச்சாங்க…” என சிறியவள் கீறிச்சிட்டாள்.

தேவி சட்டென மகளை குனிந்து ஏறிட,அவளோ ‘இல்லை’ என மிரட்சியுடன் தலையசைக்க,

தேவி ஒரு பெருமூச்சுடன் நிமிர்ந்து “அக்கா என் பொண்ணு எப்பவும் பொய் பேசமாட்டாள்” என ஜமுனாவிடம் அழுத்தமாக கூற,

“அப்போ என் பிள்ளை பொய் பேசறாள்னு சொல்லறீயாடி?” என ஜமுனா தூக்கி சொருகிக்கொண்டு சண்டைக்கு கிளம்பினாள்.

தேவியோ அவளை ஒரு பொருட்டாக கூட மதியாமல் வேதிகாவிடம் திரும்பினாள்.

“வேதிகா நீ பண்ணது தப்பும்மா…பாப்பாவுக்கு என்னைக்காவது நீ உன் பொம்மைய கொடுத்திருக்கியா?ஆனால் பாப்பா உனக்கு கொடுத்தாயில்லை…நீயும் அம்முவுக்கும் பொம்மைய திருப்பி கொடுக்கணுமில்லை…ஏன்மா கொடுக்கலை” என மிகவும் பொறுமையாக அந்த குழந்தையிடம் அவளின் தவறைச் சுட்டிக்காட்ட முயன்றாள்.

வேதிகா சிந்திக்க தொடங்கும் முன் ஜமுனாவோ “உனக்கு என்ன நெஞ்சழுத்தம் இருக்கும்டி…என் முன்னாடியே என் புள்ளைய கேவலமா பேசறே…எல்லா தப்பும் என் பிள்ளையே பண்ண மாதிரி பேசறே…நீயெல்லாம் நல்லா இருப்பியாடி?நாசமா போயிடுவே…” என வாயிற்கு வந்தது போல் வார்த்தைகளை வரம்பு மீறிக்கொட்டியதோடு “இன்னும் எதுக்குடி வெட்கம் கெட்டுப்போய் அந்த பொம்மையை வைச்சிருக்கே…அதை தூக்கி எறிடி” என மகளிடமிருந்து ஆவேசமாக பொம்மையை வாங்கி தூக்கியெறிந்தாள்.

அவள் தூக்கி எறிந்த வேகத்தில் அந்த பொம்மை ஸ்ருதியின் மீது பட வேண்டியிருந்தது.

இறுதி நேரத்தில் தேவி சுதாரித்ததால் மகளை வேகமாக தன் புறம் அவள் இழுத்துக்கொள்ள மகளின் பிறந்தநாள் பரிசு தரையில் விழுந்து சுக்கல் நூறாக உடைந்து சிதறியிருந்தது.

அதை வன்மத்துடன் பார்த்தவள் “உங்க குணத்துக்கு ஏத்த மாதிரி அதுவும் சில்லு சில்லாய் உடைஞ்சுப்போச்சு…அதுக்கு தான் நல்லது மட்டுமே நினைக்கணும்…மனசு முழுக்க அழுக்கு வைச்சிருந்தால் இது தான் நிலைமை” என உடைந்துக்கிடந்த பொம்மையை சுட்டிக்காட்டி கூறிவிட்டு “வா வேதிகா…அம்மா உனக்கு வேற பொம்மை வாங்கி தர்றேன்” என மகளை தரதரவென இழுத்துச்சென்றாள்.

செல்லும் போது “சின்ன வயசுலே இப்படி பொய்யா பேசுது சனியன்…ஆத்தாக்காரி மாதிரி தானே இருக்கும் பிள்ளையும்…பெரிய ஊரிலே இல்லாத பொம்மை…என் வீட்டுலயே இருந்துக்கிட்டு என்னையே குறைச்சொல்லறாள்…இவளுக்கு நல்லா வேணும்” என முணுமுணுத்தப்படியே தங்கள் அறைக்குள் சென்று கதவை அடித்து சாற்றினாள்.

இப்போது வரவேற்பறையில் தாயும் மகளும் மட்டுமே நின்றிருந்தனர்.

இது அடிக்கடி நடக்கும் நிகழ்வு என்றாலும் இன்று தேவியின் இதயத்தில் பெரும் வலி!

உடைந்துப்போய் கிடந்த அந்த பொம்மையை போலவே அவளின் நெஞ்சமும் உடைந்துப்போனது.

கணவனை இழந்துவிட்டு அடுத்தவரிடம் அடைக்கலம் புகுந்திருக்கும் ஒவ்வொரு பெண்ணின் நிலையும் இது தான்!

அவளை மட்டும் காயப்படுத்தியிருந்தால் அவள் பொறுத்துப்போயிருப்பாள்.

ஆனால் அவளின் மகளும் உடைந்துப்போய் அந்த பொம்மையை வெறித்துப்பார்த்திருப்பதை கண்டவளால் தாங்கவே முடியவில்லை.

ஸ்ருதி மெதுவாக சென்று உடைந்துப்போன பொம்மையை கையில் வைத்து “அம்மாஆ…” என இதழை பிதுக்கி அழ,

அவளிற்கோ அடி வயிறு சுருண்டுப்போனது.

அவளின் ஒரு வார சம்பளம் அந்த பொம்மை…அத்துடன் அவளது மகளின் கண்ணீர் அனைத்தும் அவளை சுட்டது.

தன்னுடைய இயலாமையினால் மகள் வருந்துவதை அவளால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.

அவளிற்கும் அழுகை தொண்டை குழியை அடைத்தது.

ஆயினும்,அதனை அடக்கிக்கொண்டாள்.

விழி மூடி திறந்து தன்னை கட்டுப்படுத்தியவள் “அம்மு இங்க வாடா தங்கம்” என மகளை அணைத்து சமாதானம் செய்தாள்.

அவளோ அழுதுக்கொண்டே இருக்கவும்,அவளின் நெஞ்சம் வெடித்து சிதறியது.

சங்கரி குளிக்கச்சென்ற இடைவெளியில் இவை அனைத்தும் அரங்கேறியிருந்தது.

அவரும் இதனை கேள்வியுற்று மனம் வருந்தினார்.

பெரிய மருமகள் செய்யும் அட்டகாசத்தை அறிந்தும் எதுவும் செய்யமுடியால தனது கையாலாகாததனத்தை அறவே வெறுத்தார்.

“அம்மா உனக்கு வேற பொம்மை வாங்கி தர்றேன்டா…அழக்கூடாது அம்மு” என மகளை ஒரு வழியாய் பேசி தேற்றியவளின் இமையோரம் நீர் துளிர்த்தது.

நெஞ்சில் ஏறிய பாரத்துடன் தேவி அலுவலகம் புறப்பட்டாள்.

மகளை அன்று வீட்டில் விட்டுச் செல்ல மனமின்றி அவளையும் கையோடு அழைத்துச்சென்றாள்.

உணவருந்தாமல் கிளம்பியவளைப் பார்த்து “சாப்பிட்டு போம்மா” என சங்கரி கவலையாக சொல்ல,

“வேண்டாம் அத்தை…போற வழியிலே சாப்பிட்டிக்கிறோம்” என பிடிவாதமாக கூறி சென்றுவிட்டாள்.

அவள் பசியை தாங்கினாலும் மகள் பசி தாங்கமாட்டாள் என்றெண்ணி சாலையோர தள்ளுவண்டி கடையில் மகளிற்கு மட்டுமாய் இரண்டு இட்லி வாங்கி ஊட்டிவிட்டிருந்தாள்.

அவள் தண்ணீரை மட்டுமாக பருகி வயிற்றை நிரப்பிக்கொண்டாள்.

காலை பதினொரு அளவில் காவ்யா அவனறைக்கு வந்தாள்.

அவனோ கோப்பில் கவனமாக இருந்தப் படியே “என்ன?” என்றான் வெடுக்கென்று.

ஸ்ருதியைக் காணமுடியாத எரிச்சல் அவனது முகத்தில்!

காவ்யாவோ ‘ஏன் காலையிலே இம்புட்டு சூடா இருக்காரு மனுஷன்’ என மிரண்டு

“சார் சூர்யகுமார் ஆபிசிலிருந்து ஓ.ஏ வந்திருக்காங்க” என்றாள் அவசரமாக.

“எதுக்கு வந்துங்கன்னு கேட்டு உனக்கு பேசி அனுப்ப தெரியாதா?அப்புறம் எதுக்கு நீ எனக்கு அசிஸ்டென்ட்டா இருக்கே?” என அவளிடமும் சிடுசிடுக்க ஆரம்பித்தான்.

‘ஆத்தி காலையிலே வந்து சிக்கிட்டனா? போச்சு போ’ என மானசீகமாக தலையில் கைவைத்து நின்றுவிட்டாள்.

அவளை திட்டிக்கொண்டே இருந்தவன் சட்டென ஒரு கணம் தாமதித்தான்.

அவனிற்கே தான் செய்வது பிழை என்று புரிந்ததால் “ஊப்” என இதழை குவித்து ஊதி கண் மூடி திறந்தான்.

பின்பு மெதுவாக தலையுயர்த்திய சேரன் “எதுக்கு வந்திருக்காங்க?” என அழுத்தமான குரலில் வினவ,

“நம்ம ரெண்டு பேருக்கும் காமனா இருக்கிற அந்த டாப் ஸ்டார் கேஸுக்கான டாக்குமெண்ட்ஸை கலெக்ட் பண்ணிட்டு அப்படியே உங்ககிட்ட ஒரு சைன் வாங்கணுமாம் சார்” என அவள் மேலும் சில விவரங்களை உரைக்க,

“ஓகே ஃபைன் வர சொல்லுங்க” என கண்ணாடியை கழட்டியப்படியே அவன் சொல்ல,

அவள் அப்போதும் அங்கே தயங்கி நிற்க,

அதனை கண்டு கடுப்பானவன் “இப்போ என்ன?” என புருவம் உயர்த்தி வினவ,

“சார் காலையிலே சூர்யகுமார் சார் கால் பண்ணாரு…வர்றவங்களை கொஞ்சம் சாஃப்டா ஹேண்டில் பண்ண சொல்லி…” அவளால் வார்த்தையை முழுமையாக முடிக்க முடியவில்லை.

சேரனின் புருவங்கள் கோபத்தில் மீண்டும் ஒருமுறை சுருங்கி விரிந்தன.

அதைக்கண்டு அவள் அதற்கு மேல் பேசாமல் தயங்க,

“காவ்யா ஸ்பீக் அப்…எனக்கு என்ன வேலை வெட்டி எதுவுமில்லைனு நினைச்சியா?” என அடிக்குரலில் சீற,அவளிற்கு பயந்து வந்தது.

ஆயினும்,அதனை அடக்கி

 “அவங்க இப்பதான் புதுசா வேலைக்குச் சேர்ந்திருக்காங்களாம் சார். உங்களைப் பத்திக் கேள்விப்பட்டு கொஞ்சம் பயந்த மாதிரி இருக்காங்க..அதனாலே பார்த்து பத்திரமா நடந்துக்க சொல்லி சொன்னாரு” என்றதும் அவனின் இமைகள் இடுங்கின.

“இதை அவரே உங்களுக்கு ஃபோன் பண்ணி சொன்னாரா?” என அவன் நம்பாமல் சந்தேகமாக கேட்க,

“ஆமா சார்” என தடுமாறியப்படி பதில் கூறியதும் ‘அப்படி யாரு அந்த ஸ்பெஷல் பர்சன்…சாரே ஃபோன் பண்ணி சொல்லியிருக்காரு’ என யோசனையில் ஆழ்ந்தான்.

சூர்யகுமார் பொதுவாக இவ்வாறெல்லாம் தனியாக ஒருவரின் மீது அக்கறை எடுத்து நடந்துக் கொள்ளும் ரகம் அல்ல.

அப்படியான மனிதர் யாரோ ஒரு பெண்ணிற்காக பரிந்து பேசியதில் சிறிது ஆச்சரியமுற்றாலும் அதை மறைத்து “என்னை பார்த்தால் அவ்வளவு கொடூரமாவா இருக்கு” என்றான் திடீரென்று.

‘பின்ன இல்லையா?தினமும் உங்க மூஞ்சிய பார்த்திட்டு போய் எனக்கு நைட்டெல்வாம் கெட்ட கெட்ட கனவா வருது’ என மனதிற்குள் அவள் புலம்ப,

“மிஸ் காவ்யா” என அவன் குரலுயர்த்தியதும்,அவளோ பதறிப்போய் “சேச்சே இல்லை சார்…நீங்க ரொம்ப அன்பானவர்…பண்பானவர்…உங்களுக்கு சத்தமா பேசவே வராது…கோபம்னா என்னானே தெரியாது…அப்படியொரு அமைதி…” என அவள் அவனை புகழ்ந்து தள்ளிக்கொண்டே செல்ல,

“ஹே போதும் போதும்…நிறுத்து…நீ பொய் சொல்லறேன்னு அப்பட்டமா தெரியுது” என நெற்றியை நீவியப்படி சலித்தவன்,

“தேவையில்லாமல் சாம்பிராணி போடறதை விட்டுட்டு ஃபைல் எல்லாம் ஒரு முறை வெர்ரிஃபை பண்ணிட்டு அவங்களை உள்ளே அனுப்பி விடுங்க” என கட்டளையிட்டு அவளை வெளிய அனுப்பியிருந்தான்.

அவளோ ‘தப்பித்தால் போதும்டா சாமி’ என ஓட்டமும் நடையுமாக தப்பித்து வெளியே வந்திருந்தாள்.

அவளை சலிப்புடன் தலையசைத்தப்படி பார்த்தவன்,பின்பு கீழே குனிந்து சட்ட புத்தகத்தின் பக்கங்களை புரட்ட ஆரம்பித்தான்.

வெளியில் அவனிற்காக காத்திருந்தாள்,அவனது குட்டித் தேவதையும் அவளது அன்னையும்!

அவள் வெளியே வந்ததும் தேவி எழுந்து நிற்க,

“தேவி இங்கு வாங்க…கொஞ்ச நேரம் உட்காருங்க… ஃபைல் ஒரு முறை செக் பண்ணிட்டு உங்களை உள்ளே அனுப்ப சொல்லி சார் சொன்னாரு…காஃபி ஏதாவது குடிக்கிறீங்களா?” என சிநேகப்பாவத்துடன் காவ்யா வினவ,

தேவியோ “இல்லை வேணாமுங்க…எனக்கு காஃபி குடிக்கிற பழக்கமில்லை” என்று நாசூக்காக மறுத்திருந்தாள்.

“அப்போ ஜூஸ்..” என்று ஆரம்பிக்க,

“இல்லை வேணாம்” என அதையும் மறுத்திருந்தாள்.

“அட என்னங்க முதல் முறையா இங்க வந்திருக்கீங்க…ஜஸ்ட் தண்ணீயாவது குடிங்க” என்றவள்,

கீழே குனிந்து ஸ்ருதியிடம் “பேபி உங்களுக்கு என்ன வேணும்?காஃபி இல்லை ஜுஸ்” என்று பாசமாக வினவ,

அவளோ தனது தாயின் முகத்தை ஒரு முறை ஏறிட்டு பார்த்துவிட்டு “எனக்கு எதுவும் வேணாம் ஆன்ட்டி” என அழகாக குதிரை வால் ஆட தலையசைத்தாள்.

“அச்சோ சோ ஸ்வீட்” என அவளின் கன்னம் கிள்ளி கொஞ்சியவள்,நேரமாவதை உணர்ந்து வேகமாக ஒரு குவளையில் தண்ணீர் எடுத்து வந்து நீட்டினாள்.

அதையும் மறுத்தால் நன்றாக இராது என்றெண்ணி தண்ணீரை வாங்கி பருகினாள் தேவி.

தனது குழந்தைக்கும் பருகக் கொடுத்தாள்.

காவ்யாவோ குழந்தையிடம் சிரித்தப்படி உரையாடிக்கொண்டே கோப்பை சரிப்பார்த்தாள்.

தேவியோ மெதுவாக விழிகளை அவ்விடத்தை நோக்கி சுழற்றினாள்.

நல்ல விசாலமான அலுவலகம் தான் அவர்களுடையது!

அங்கிருந்த கண்ணாடி அலமாரி முழுவதும் சட்ட புத்தகங்கள் நேர்த்தியாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

சட்டப்புத்தகங்களுடன் சமூக நியதிகளை எடுத்துக்கூறும் பல விதமான புத்தகங்களும் அங்கு இருந்தது.

‘நிறைய படிப்பாரு போலே’ என மனதிற்குள் எண்ணிக்கொள்ள,

அதற்குள் காவ்யா “இந்தாங்க வெர்ரி ஃபை பண்ணியாச்சு…சார்கிட்ட நீங்க பேசி சைன் வாங்கிக்கோங்க” என கோப்பை கைகளில் நீட்டினாள்.

“ம்” என்றப்படி அவளிடம் கோப்பை நீட்டியவள், மகளிடம் “அம்மு அம்மா வரவரை இங்கியே இரு…அம்மா ஐந்து நிமிஷத்திலே வந்திடறேன்” என சொல்ல,

அவளும் “சரிம்மா” என வேகமாக தலையசைக்க,தேவி சிறிது தயங்கினாள்.

அவளின் தயக்கம் உணர்ந்து “நீங்க போங்க தேவி…நான் குழந்தைய பத்திரமா பார்த்துக்கிறேன்” என நம்பிக்கைக்கொடுத்து அவளை உள்ளே அனுப்பினாள்.

காவ்யா நல்லப்பெண் என்று அவளின் பார்வையிலும் பேச்சிலும் தெரிந்ததால் குழந்தையை அவளிடம் நம்பி ஒப்படைத்துவிட்டு சென்

றாள்.

அவனறையின் கதவை தட்டிவிட்டு நின்ற தேவிக்கு ஏனோ உள்ளம் படபடத்தது.

அன்று அவன் பேசிய சொற்கள் காதில் ஒலித்து அவளின் மேனியில் ஒரு நடுக்கத்தைக் கொடுத்தன.

இருப்பினும்,ஒரு ஆழ்ந்த பெருமூச்சை வெளியேற்றி அவனது அழைப்பிற்காக காத்திருந்தாள்.

உள்ளிருந்து “கெட் இன்” என ஆளுமை மிக்க கம்பீரமான குரல் கேட்டதும் ஒரு வித பயத்துடனே உள்ளே நுழைந்தாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!