Skip to content
Post Views: 173
உயிரில் உருகும் காதல் எனதே….5
வண்ண விளக்களும்,வண்ண மலர்களும் அலங்கரிக்கப்பட்ட மேடையில் அமர்ந்து ஐயர் கூறும் மந்திரங்களை உச்சரித்துக் கொண்டிருந்த சித்தார்த்தின் கண்கள் நொடிக்கு ஒருதரம் மணமகள் அறையை பார்த்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்தது.
“மாப்பிள நான் சொல்லுறத நீங்க செஞ்சாதான் பொண்ணு வருவா….”என்று கூற சித்தார்த்துக்கு வெட்கமாகி போக,
“அட அட என் பையனுக்கு வெட்கம் வந்துட்டே….”என்று சித்தார்த்தின் அன்னை நிர்மலா.
Advertisement
“இப்பயாவது உன் மகன் வெட்கபடுறானேனு சந்தோஷப்படு….”என்றார் அவனின் தந்தை வசந்தன்.இதை அனைத்தையும் மேடையின் ஓரத்தில் இருந்து பார்த்துக் கொண்டு நின்றார் வானாதி.அவருக்கு அத்தனை சந்தோஷம் இளைய மகளின் எதிர்காலம் நல்ல முறையில் இருக்கும் என்று அத்தனை நம்பிக்கை.அதற்கு சித்தார்த்தின் தாய்,தந்தை முக்கிய காரணம் என்று கூறலாம்.
முதன் முதலில் வீட்டிற்கு வந்தபோதே நிர்மலா வானாதியிடம் தெளிவாக கூறிவிட்டார்.
“எனக்கு துர்கா செஞ்சது தப்புனு தோணலை….அவ சரியா தான் பண்ணியிருக்கா….இன்னும் சொல்லப்போனா அவளுக்கு ஒரு நல்லது பண்ணிட்டு தான் வாசினிக்கு கல்யாணம் பேசனும் ஆனா துர்கா எனக்கு நல்லது தானா வரும் அதுவரைக்கும் என் தங்கச்சி கல்யாணம் அதனால தள்ளிபோக வேண்டாம்னு……ரொம்ப பிடிவாதமா சொல்லிட்டா….”என்று பெருமிதமாக கூறிவிட வானாதிக்கு மனது நிறைந்துவிட்டது.அதே போல் பெரிய மகளுக்கு ஏதாவது நல்லது செய்துவிடும் வேகம் இன்னும் அதிகமானது அவரின் மனதில்.
Advertisement
இதோ இன்று பட்டுப் புடவை சரசரக்க கண்முன்னே நடமாடிக் கொண்டிருக்கும் பெரிய மகளை பார்த்து பெற்ற தாயின் உள்ளம் பூரித்து தான் போனது.ஒரு ஆண்மகனை போல் அனைத்து வேலைகளையும் அவள் தான் செய்கிறாள்.அவ்வபோது உறவுகள் வேறு அவளை நலம் விசாரிக்கிறேன் என்று குத்தி தான் கிழிக்கிறது ஆனாலும் அதை எதையும் பொருட்படுத்தாமல் தன் வேலைகளை செய்து கொண்டு இருக்கிறாள்.
Advertisement
“பொண்ணை அழைச்சிட்டு வாங்கோ…..”என்று ஐயரின் குரலுக்கு நிகழ்வுக்கு வந்தார் வானாதி.அடர் பச்சை நிற பட்டுடுத்தி தேவதை போல நடந்து வந்தாள் வாசினி.அவளின் கண்கள் தன் தாயையும்,தமக்கையையும் தான் அதிகம் தேடியது.மேடையில் ஒரு ஓரத்தில் அமர்ந்திருந்த தாயைக் கண்டதும் அவளின் முகம் பூ போல மலர்ந்தது.பின் திருமண சடங்குகள் இனிதே தொடங்க,வாசினியின் பார்வை கூட்டத்தில் யாரையோ தேடுவது புரிய,
“என்னமா யாரை தேடுற….”என்றான் சித்தார்த்.
“க்கா…..இல்ல துர்காவை காணும்….”என்று கண்கள் கலங்கி இருக்க,அவளின் எண்ணப்போக்கை புரிந்து கொண்டவன்.
Advertisement
“அதோ நிக்குறாங்க பாரு….”என்று ஒரு ஓரத்தில் அவளை போலவே மனநிறைந்த புன்னகையுடன் நின்றிருந்தாள்.அவளை பார்த்தவுடன் வாசினிக்கு முகத்தில் வலி நிறைந்த புன்னகை இப்போதும் அதே வாசினி தான் தன் அக்காவின் அடக்கு முறை பிடிக்காத ஒன்று தான் ஆனால் இந்த நிமிடம் தனக்கு பிடித்த ஒன்று நடக்க முழுக்க காரணம் அவள் தான் என்று தெரிந்து பின்பு மனது சற்று இலகி போயிருந்தது.ஆம் நேற்று சித்தார்த் அனைத்தையும் கூறியிருந்தான்.
அனைவராலும் ஆசிர்வதிக்கப்பட்ட மாங்கலயத்தை சித்தார்த் வாசினியின் கழுத்தில் அணிவித்து தன் மனைவியாக்கிக் கொண்டான்.திருமணம் நல்ல முறையில் நடந்து முடிய,வானாதிக்கும்,துர்காவிற்கும் அத்தனை நிம்மதி.வந்திருந்த பல உறவுகள் இருவரிடமும் எப்படி நல்ல வரனை பிடித்தாய் எத்தனை சவரன் நகை போடுறீங்க…உங்க வசதிக்கு இந்த இடம் எப்படி ஒத்து வரும்….இப்படி பல கேள்விகளை கேட்டு மனதளவில் நோக தான் செய்திருந்தனர்.இத்தனைக்கும் நிர்மலா சீதனம் என்று எதையும் எதிர்பார்க்கவில்லை என்று கூறிவிட்டார்.ஆனால் துர்கா தெளிவாக தன் தங்கைக்கு அனைத்தையும் செய்து தான் அனுப்புவேன் என்று கூறிவிட,நிர்மலா எதையும் தடுக்கவில்லை.
ரமணன் இருக்கும் போதே தன் மகள் இருவருக்கும் தனியாக சேமித்து வைத்திருந்ததே போதுதானதாக இருந்தது அதுபோக துர்காவும் தன் பங்கிற்கு செய்திருக்க வந்திருந்தவர்களுக்கு சற்று ஏமாற்றமாக தான் போனது.இரு பெண்கள் தனியாக நின்று திருமணத்தை நடத்திவிட்டனர்.திருமணம் முடிந்து அடுத்தடுத்து சடங்குகள் மேடையில் நடந்து கொண்டிருக்க துர்கா வந்தவர்களை கவனிக்க துவங்கிவிட்டாள்.
“நான் அப்பவே சொன்னேன் லேட் பண்ணாதனு இப்ப பாரு கல்யாணமே முடிஞ்சி போச்சு….”என்று நர்மதாவை திட்டிக் கொண்டே மண்டபத்தின் உள்ளே வந்தான் பிரபஞ்சன்.
“அச்சோ தெரியாம செஞ்சிட்டேன் விடுங்களேன்….பாருங்க இப்ப தான் தாலி கட்டி முடிஞ்சிருக்கு….எல்லாம் இந்த பெரியம்மவால வந்தது…..”
“என்ன….”
“ம்ம்….கல்யாணத்துக்கு வரேன் தான் நேத்து வரை சொல்லிக்கிட்டு இருந்தாங்க….இன்னைக்கு காலையில போன் போட்டா நான் வரல நீ போயிட்டு வந்திடுனு சொல்லிட்டாங்க….அதான்….”என்று நர்மதா தாமதமானதற்கு காரணத்தை கூற,
“உன் பெரிமாக்கு வேற வேலையில்லை….எதாவது நினைச்சிக்கிட்டு நல்லது எதுலையும் கலந்துக்குறது இல்ல….”என்று கூறிக் கொண்டே வர,
“வாங்க….வாங்க….ஏன் லேட்….”என்று கேட்டபடி வந்துவிட்டாள் துர்கா.
“இதோ உன் அக்கா மேக்கப் போட்டு வர லேட் ஆகிடுச்சு அதான்மா….”என்று பிரபஞ்சன் நர்மதாவை மாட்டிவிட்டுவிட,இதை எதிர்பார்க்காத நர்மதா கணவனை முடிந்தமட்டும் முறைத்தாள்.
“எங்க காட்டுங்க உங்க மேக்கப்பை….”என்று துர்கா வேறு அவளை முன்னும் பின்னும் சுற்றி பார்க்க,
“அடியே என்னை பார்த்தா எப்படி தெரியுது….ஏதோ கோலு பொம்மைய சுத்துற மாதிரி சுத்தி பார்க்குற….எல்லாம் உங்களால….”என்று நர்மதா கணவனிடம் பாய,
“அச்சோ என் பொண்டாட்டி சந்தரமுகியா மாறிக்கிட்டு வரா….”என்று பிரபஞ்சன் விடாமல் கிண்டல் செய்ய,
“போதும் போதும் என் அக்காவை கிண்டல் பண்ணது….அப்புறம் உங்களுக்கு தான் சேதாரம் அதிகம் ஆகும் பார்த்துக்கோங்க….”என்ற துர்கா,இருவரையும் வாசினியிடம் அழைத்து சென்றாள்.அப்போது தான் விருந்தினர்கள் ஒவ்வொருவராக பரிசுகள் வழங்கியபடி இருக்க,
“வாசினி இங்க பாரு யாரு வந்திருக்கானு….”என்று துர்காவின் குரலில் திரும்பிய வாசினி,
“ஹாய் நர்மதாக்கா……வாங்க….எங்க குட்டீஸ்…..”
“அவங்க ஸ்கூல் போயிருக்காங்க வாசினி…..”
“ஒரு நாள் லீவ் போட்டா என்னவாம்…..”
“இல்லமா இரண்டு பேருக்கும் டெஸ்ட் அதான் அனுப்பிட்டேன்…..”
“இங்க கொஞ்சம் பாரும்மா….நானும் வந்திருக்கேன்…..”என்று பிரபஞ்சன் கூற,
“அதான் பார்த்துட்டேனே….”என்று வாசினி அவனை வாரிவிட்டாள்.அதற்குள் துர்கா சித்தார்த்திடம்,
“இவங்க எங்க பக்கத்து வீடு…..”என்று கூறி இருவரையும் அறிமுகப்படுத்தினாள்.சித்தார்த் இருவரையும் பார்த்து சினேகமாக புன்னகைக்க,
“வசமா மாட்டிக்கிட்டீங்க….நீங்க….”என்று பிரபஞ்சன் கூற,
“உங்களை போல தெரிஞ்சே தான் மாட்டிக்கிட்டேன்…..”என்று சித்தார்த்தும் கூற,
“பிழைச்சிப்பீங்க தம்பீ….”என்று பிரபஞ்சன் கூற அங்கே ஒரு சிரிப்பலை பரவியது.அதன் பின் அவர்கள் போட்டோ எடுத்துக் கொண்டு பரிசுகள் வழங்கிவிட்டு செல்ல துர்காவும் அவர்களுடன் சென்றாள்.
“க்கா சாப்பிட்டு தான் போகனும்….”
“கண்டிப்பாமா…..அதுக்காக தான வந்தது…..”என்று பிரபஞ்சன் கூற,
“நீங்க வீட்டுக்கு வாங்க உங்களை பேசிக்கிறேன்….”என்று நர்மதா பல்லைக் கடித்தாள்.
“அச்சோ என் கிரைம் ரேட் ஏறிக்கிட்டே போகுதே…..”என்று பிரபஞ்சன் தலையில் கை வைத்தான்.
“எதுக்கும் தலைக்கு ஒரு கவசம் வாங்கிட்டே வீட்டுக்கு போங்க….”என்று துர்கா கூறிக் கொண்டிருக்கும் போதே அவளை வேறு ஒருவர் அழைக்க,
“சரி இதோ வரேன் நீங்க சாப்பிட்டு போங்க…”என்றுவிட்டு துர்கா நகர்ந்துவிட்டாள்.
“நல்ல பொண்ணு….இவளை மாதிரி நம்ம வீராக்கு அமைஞ்சா நல்லா இருக்கும் இல்ல…..”என்று பிரபஞ்சன் வாயை விட,அதுவரை கணவனின் மீது கொலைவெறியில் இருந்த நர்மதாவின் முகம் மாறி யோசனை பரவியது.
“சரி வா சாப்பிட போகலாம்….”என்றவன் மனைவியின் முகம் பார்க்க,அவளோ ஏதோ யோசனையில் இருப்பதைக் கண்டு,
“அடியே நான் சும்மா தான் சொன்னேன்….நீ பாட்டுக்கு என்னை எப்படி அடிக்கலாம்னு யோசனைக்கு போயிட்டியா….”
“ப்ச்….அது இல்ல….நீங்க இப்ப சொன்னீங்கல்ல அதை தான் யோசிக்கிட்டு இருக்கேன்….இது ஏன் எனக்கு முன்னவே தோணலை….”என்று வேறு கூற பிரபஞ்சனுக்கு தான் என்ன கூறினோம் என்பதே மாறந்தே போனது.
“என்னடீ சொன்னேன்…..”
“வீராவுக்கு துர்காவை கேட்கலாம்னு…..”
“ஏய் ஏய்….நான் அப்படி சொல்லலைடீ….துர்கா மாதிரி பொண்ணு இருந்தா நல்லா இருக்கும்னு தான் சொன்னேன்….”
“ஏன் துர்கா மாதிரி அவளையே கேட்டா என்ன…..இன்னைக்கு தான் நல்லதா ஒண்ணு சொல்லியிருக்கீங்க….நான் இப்பவே பெரியம்மாக்கிட்ட பேசனும் வாங்க போகலாம்…..”என்று பிரபஞ்சனை இழுக்காத குறையாக இழுத்துக் கொண்டு செல்ல,
“இருடீ சாப்பிட்டு போகலாம்….”
“நாம வீரா,துர்கா கல்யாணத்துல சாப்பிட்டுக்கலாம்….வாங்க….”என்று இழுத்துக் கொண்டு சென்றுவிட,
“வாயை வச்சிக்கிட்டு சும்மா இருந்திருக்கலாம்….”என்று நினைத்துக் கொண்டே மனைவியின் பின்னே சென்றான் பிரபஞ்சன்.
error: Content is protected !!