Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

38. அர்ச்சனா நித்தியானந்தம் - காதலும் கடத்தப்படும்Contest Stories 2026

காதலும் கடத்தப்படும் – 21

காதலும் கடத்தப்படும் – 21

 

அடுத்த சில நாட்கள் ஏதோ கட்சி அலுவலாக, அர்ஜுன் வேதநாயகத்தோடு சென்று விட, வீட்டில் தனித்து இருந்த அஞ்சலிக்கு அலுப்பாக இருந்தது. மதன் அவ்வப்போது தோட்டத்தில் பணிபுரியும் தாத்தாவோட வம்பிழுப்பதே அவளுக்கு பொழுது போக்காக இருந்தது. 



Advertisement

 

சாளரத்தின் அருகே அமர்ந்தபடி தோட்டத்தில் உள்ள வண்ண வண்ண பூக்களை ரசித்தபடி இருந்தாள், அஞ்சலி. 

“கண்ணாக கருத்தாக, உன்னை காப்பேன் உயிராக… உன்னை கண்டேன் கரைந்தேன் களைந்தேனே அட உன்னுள் உறைந்தேனே…” என்று மெய் மறந்து அவள் மெல்லமாய் பாடிக்கொண்டிருக்க, வெடுக்கென சாளரத்தின் அருகே எம்பி குதித்து வந்து நின்ற மதனைக் கண்டு, திடுக்கிட்டு அலறினாள்.

Advertisement

“மதனா, இப்படியா பயமுறுத்துவ?”

Advertisement

“உன் பாடலைக் கேட்டுத்தான் ஓடோடி வந்தேன். பாடு அஞ்சலி பாடு… பாடு அஞ்சலி பாடு… உனது இசை எனும் இன்ப வெள்ளத்தில் நீந்திக்கொண்டிருக்கும் என்னை, பாட்டை நிறுத்தி, தத்தளிக்க விடாதே பாடு…”

“கிண்டல் பண்றியா?”

“பாடினால் பரிசு”

Advertisement

“என்ன பரிசு?”

“இதோ” என்று தனது கையில் இருக்கும் காய்கறிகளை காண்பித்தான்.

“என் வீட்டு தோட்டத்துல பரிச்சத எனக்கே பரிசா தருவியா?”

“டேய்” – அவர்கள் உரையாடிக்கொண்டிருக்க, தாத்தாவின் குரல் கேட்டது.

“உன் வீட்டு தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டுப்பார், அதுக்கு பக்கத்துல இருக்கற செடி கொடிய கேட்டுப்பார், உன் வீட்டு தென்னை மரம் ஒவ்வொன்னையும் கேட்டுப்பார், பெரிசோடா இம்சையை சொல்லுமே…”

அவன் பாட, அவள் சிரிக்க, அவன் எதிரே வந்து நின்றார் தாத்தா.

 

“இந்த புள்ளைகூட என்னடா பேச்சு?”

“நான் கஷ்டப்பட்ட விளைவிச்ச காய்கறியை காண்பிச்சேன்”

“யாரு நீயா?” என்றவர், “எங்கேந்து மா இந்த பயல புடிச்சுட்டு வந்தீங்க?” என்றார் அஞ்சலியிடம்.

“ஏன் தாத்தா?”

“இம்சை பண்றான். வெண்டைக்காய் செடிக்கும் தக்காளி செடிக்கும் வித்தியாசம் தெரியல. கீரை பேரு தெரில. ‘பொடலங்கா பறிச்சுட்டு வா’னு சொன்னா, அந்த மரம் தோட்டத்துல எங்க இருக்குனு கேட்கறேன். தென்னை மரம் வைக்கச் சொன்னா, மரத்தோட விதை எங்கன்னு கேட்கறான்…”

“தாத்தா கோவிச்சுக்காதீங்க. மதனுக்கு இதெல்லாம் தெரியாது. கூடிய சீக்கிரம் வேற வேலைக்கு போயிடுவான்…”

“இவனா? எவன் இவனுக்கு வேலை கொடுப்பான்?”

“தாத்தா…” குறுக்கிட்ட மதன், “ஜில்லா கலெக்டர் ரிட்டயரு ஆகப்போறாராம், என்னை வந்து வேலைல சேர்ந்துக்க சொல்லியிருக்காங்க. நீங்க மனுவை எடுத்துக்கிட்டு என்கிட்டே தான் வரணும்” என்றான்.

“யாரு நீயா? லூசு பயலே” என்றவர், அவன் கையிலிருந்த காய்கறிகளை பிடுங்கிக்கொண்டு சென்று, காத்துக்கொண்டு நின்றிருந்த சமையல் கார பெண்ணிடம் கொடுத்தார்.

 

முன் மாலையில், அஞ்சலியைக் காண இரு தோழிகள் வந்திருக்க, அவர்களுடன் கதைபேசிக்கொண்டிருந்தாள். இருப்பினும் அன்று காலை முதலே அர்ஜுனை காணவில்லை என்ற எண்ணம் அவளது மனதில் ஒரு ஓரத்தில் உறுத்திக்கொண்டே இருந்தது. 

 

“பூக்களே சற்று ஓய்வெடுங்கள், வந்துவிட்டேன் தண்ணியடிக்க வந்துவிட்டேன்” என்றபடி, வாயிலின் எதிரே இருந்த செடிகளுக்கு மதன் நீர் பாய்ச்சிக்கொண்டிருக்க, 

“மினிஸ்டர் வீட்லயே தண்ணியடிப்பியா?” என்றபடி அவனெதிரே வந்து நின்றான், கஜேந்திரன்.

“சார், எப்ப வந்தீங்க?” என்றான்.

“வண்டியில வந்து இறங்குனது உனக்கு தெரியாது?”

“இல்லை சார், சங்கீதத்துல தொலைஞ்சு போயிட்டேன், கவனிக்கல…”

“உண்மையாவே நீ தொலைஞ்சு போகப்போற….” என்றவன், வீட்டினுள் பார்த்தபடி,

“தல இல்லை?” என்றான்.

“தலை, கை, காலு எல்லாமே இருக்கு சார்”

“டேய், தலைவரு இல்லையான்னு கேட்டேன்”

“இல்ல சார், நீங்க வர்றீங்கன்னு தெரிஞ்சதும் எங்கயோ கிளம்பி போயிட்டாரு…”

“நானே செம டென்ஷன்ல இருக்கேன், அடி வாங்கிடாத…”

“என்ன சார் டென்ஷன்? க்ரிமினல்ஸ் எவனாவது தொந்தரவு பண்றானா?”

“க்ரிமினல்ஸ் இல்லை, என் காதலி…”

சற்றே பாதிரினான், மதன்.

“அவங்களுக்கு என்ன?”

“முன்ன மாதிரி மெசேஜ் போடமாட்டேங்குறா? இந்த பொண்ணுங்களே இம்ச…”

“காலைல பூ பறிக்கறது, மதியம் காய் பறிக்கறது, சாயங்காலம் செடிக்கு தண்ணி ஊத்தறதுன்னு அவங்க ஏதாவது வேலையா இருந்திருப்பாங்க…”

“என்னது?” என்றான் கஜேந்திரன், எரிச்சலாக.

“சும்மா பொதுவா சொன்னேன்”

“பொதுவா சொல்றது இருக்கட்டும். உண்மைய சொல்லு?”

மதனின் இதயம் தொண்டைக்குழிக்குள் வந்து நின்றது.

“என்னது?”

“உனக்கும் உங்க ஏரியா கவுன்சிலர் பையனுக்கும் என்னடா சம்மந்தம்?”

மதன் வாய் திறக்கும் முன், வேதநாயகத்தின் கார் வந்து நின்றது.

 

அதிலிருந்து இறங்கிய வேதநாயகத்தையும், அர்ஜுனையும் கண்ட பின் தான் மதனுக்கு உயிர் திரும்பியது.

“தல வணக்கம் தல!”  என்றபடி வேதநாயகத்தின் எதிரே சென்று நின்றான், கஜேந்திரன்.

“என்ன இந்த பக்கம்?”

“தல, கவுன்சிலர் பையன் தான் நம்ம அஞ்சலி அம்மாவை தூக்க பிளான் பண்ணியிருக்கான். நிச்சயமா இவனுங்க தான் அந்த வேலையை பார்த்து விட்டிருக்காங்க…”

“நான் தான் சொன்னேனே சார் இவங்க ரெண்டு பேரும் இல்லனு” என்று குறுக்கிட்டபடி அங்கு வந்து நின்றாள், அஞ்சலி. கஜேந்திரன் வந்திருந்ததை கவனித்தவள், இவனால் ஏதாவது பிரச்சனை வரக்கூடும் என்று உணர்ந்தவளாய், தனது தோழியரை ஐஸ் க்ரீம் சாப்பிட அழைத்துக்கொண்டு கிளம்பி வாயிலுக்கு வந்தாள். உடன் அர்ஜுனையும், மதனையும் அழைத்துச் செல்ல தீர்மானமாய் வந்து நின்றாள்.

“இல்லமா, என்னோட விசாரணையில…”

“இவங்க தப்பு பண்ணல சார், என்னை காப்பாத்தினாங்க”

“கஜா நீ கிளம்பு” என்றார் வேதநாயகம்.

“இதை விட்டுடுன்னு சொன்னேனே” என்றார் அவர் மீண்டும்.

“எப்படி அப்படியே விட முடியும்?”

“நான் அப்புறம் பேசறேன்” என்றார் வேதநாயகம்.

“அதுக்கில்ல தல”

“அப்பா…” கஜேந்திரன் விடுவாகத் தெரியவில்லை என்று உணர்ந்த அஞ்சலி, உடனே அவ்விடம் விட்டு கிளம்ப நினைத்தாள். 

“அப்பா நாங்க மூணு பேரும் ஐஸ்க்ரீம் சாப்பிட போறோம்” என்றாள். அப்பொழுதே மகளின் தோழியரைக் கண்டார், வேதநாயகம். அப்பெண்களை கண்ட மதன், தான் பட்டாபட்டியோடு நின்றிருப்பதை உணர்ந்து, காரின் பின் மறைந்து நின்றான்.

 

“ஹலோ அங்கிள்” என்றனர் அவளது தோழியர்.

“வணக்கம் மா, நீங்க?”

“நாங்க அஞ்சலி கூட காலேஜுல படிச்சோம். எங்களை ஞாபகம் இல்லையா?”

“இல்ல மா, மறந்துட்டேன்…”

“நாங்க அஞ்சலியோட ஐஸ் க்ரீம் சாப்பிட போலாமா?”

“போயிட்டு வாங்கம்மா” என்ற வேதநாயகம், “தம்பி கூட்டிட்டு போ” என்றார் அர்ஜுனிடம். அவன் கஜேந்திரனையம், மதனையும் கவலையாய் பார்த்தபடி வண்டியில் ஏற, அவனது கவலையை உணர்ந்த அஞ்சலி,

“அப்பா, நாங்க மதனையும் கூட்டிட்டு போறோம்” என்றாள்.

“அவனா?”

“ஒரு பாதுகாப்புக்கு, ப்ளீஸ் பா…” என்றாள்.

மகள் கூறுவது ஏற்கமுடியாத காரணமாக இருந்தாலும், அவர் சரி என்றார். விருட்டென ஓடிச் சென்றவன், உடையை மாற்றிக்கொண்டு தீவிரமாக பேசிக்கொண்டிருந்த வேதநாயகம், கஜேந்திரன் முன் வந்து நின்றான்.

“அய்யா கொடுங்க” என்றபடி கையை நீட்டினான்.

“என்னது?”

“துப்பாக்கி”

“துப்பாக்கியா?”

“பாடி காட்’னா துப்பாக்கி வச்சிருக்க மாட்டாங்களா?” என்றான்.

“டேய்… இப்படியே பேசின என்கவுன்டர்ல போட்டு தள்ளிடுவேன்” என்றபடி கஜேந்திரன் தனது இடுப்பில் இருந்த துப்பாக்கியின் மீது கை வைக்க,

“இருக்கட்டும் பரவால்ல” என்றவன் ஓடிச்சென்று காரில் ஏறிக்கொண்டான். 

 

“அஞ்சலி, இவ்வளவு ஸ்மார்ட்’ஆ இருக்கற பையன் உங்க வீட்டு ட்ரைவர்’ஆ?” என்று தோழி ஒருத்தி அஞ்சலியின் காது கடித்தாள். வெகு நேரம் கழித்து அர்ஜுனைக் காணும் வாய்ப்பு கிடைத்ததை எண்ணி சந்தோஷப்பட்டபடி, அவனை அவ்வப்போது ஓரக்கண்ணால் ரசித்துக்கொண்டிருந்தவளுக்கு, தோழியின் கேள்வி எரிச்சல்கள் ஊட்டியது. 

“சும்மா கொஞ்ச நாளைக்கு…”

“அதான பார்த்தேன்…”

“உனக்கு எதுக்குடி பாடி காட்” என்றாள் ஒருத்தி, அனைவருக்கும் கேட்கும்படி.

“உன் பாடி காட்டுக்கு நாலு பாடி காட் தேவைப்படும் போல. காத்தடிச்சு பறந்துட்டா ஓடி போய் பிடிக்கணும்ல” என்று இன்னொருத்தி கூற, மதனை தவிர அனைவரும் சிரித்தனர்.

“தேவையில்லாம என்ன கிண்டல் பண்ணாதீங்க. என்ன பத்தி தெரியாது?”

“ஆமாடி, மதனை எதுவும் சொல்லாதீங்க. கராத்தேல லெதர் பெல்ட்டு”

என்றாள் அஞ்சலி.

“என்னது லெதர் பெல்ட்டா?”

“ஆமா புதுசா கண்டுபிடிச்சிருக்காங்களாம்” 

தோழியர் மூவரும் சிரிக்க, 

“சிங்கம் சிம்பிளா இருக்குன்னு தப்பு கணக்கு போடறீங்க” என்றான், விறைப்பாக. அதற்கும் அனைவரும் சிரித்தனர்.  

 

வீட்டில்…

“அய்யா, இந்த கஜா சொல்றத…”

கஜேந்திரன் சென்ற பின், வீட்டில் இளைப்பாறிய வேதநாயகத்தின் அருகில் கவலையோடு நின்றிருந்தான், செயலாளர்.

“அவன் சொல்றதெல்லாம் உண்மை தான்… வேற நம்பகமான இடத்துலேர்ந்து தகவல் வந்தது…”

“அப்புறம் இந்த பசங்கள…”

“அவனுங்களுக்கு நேரடியா சம்மந்தம் இல்லை, அவனுங்களுக்கு இது தொழிலும் இல்லை. அந்த கவுன்சிலர் பையன் கிடைச்சா, உண்மை வெளிய வரும்…”

“அவனுங்கள ரெண்டு தட்டு தட்டினா அந்த பையன் எங்க இருக்கான்னு சொல்ல போறான்…”

“அவனுங்க, அந்த கவுன்சிலர் பையன பார்த்தது கூட இல்லை. நடுவுல ஒருத்தன் ப்ரோக்கர் வேலை பார்த்திருக்கான். அவனும் ஆல் எஸ்கேப்பு…”

“இருந்தாலும் வீட்ல வேலை போட்டு கொடுத்தது…”

“எனக்கு புரியுது நீ சொல்றது… என்னை என் பொண்ணு ‘அப்பா’னு கூப்பிட்டு எத்தனை காலம் ஆச்சு தெரியுமா? இந்த பசங்கள சப்போர்ட் பண்ணி என்கிட்ட பேசினா. ஆயிரந்தான் தப்பு பண்ணியிருந்தாலும், என் பொண்ண பத்திரமா பார்த்துக்கிட்டானுங்க… பத்திரமா கொண்டுவந்து ஒப்படைச்சுட்டானுங்க. நல்ல பசங்க”

“அய்யா…”

“நேத்து அந்த அர்ஜுன் பையன் அஞ்சலியை கடத்தினதை என்கிட்ட சொல்லிட்டான். நல்ல வளர்ப்பு!”

“அவனே சொல்லிட்டானா?” அதிர்ந்து போனான் செயலாளர்.

“ஆமா, எந்த தண்டனை கொடுத்தாலும் ஏத்துக்கறேன்னு சொல்றான். என்னமோ எதுவும் செய்ய தோணல. என் பெண்ணுக்காக. அவனே உண்மைய ஒத்துக்கிட்டான். ஆனா என் பொண்ணு அவனுங்கதான் காப்பாத்தினாங்கன்னு சொல்றா. நாம கோவப்பட்டு ஏதாவது பண்ணப் போக, என் பொண்ணுக்கு இவன் ஹீரோவா தெரிய ஆரம்பிச்சுட்டா… எதுக்கு தலைவலி?! ஏதோ என் பொண்ணு என்கிட்ட இவனுங்களுக்காக ஒன்னு ரெண்டு வார்த்தை பேசறா. அதை கெடுத்துக்க விரும்பல. அவளை விட்டா எனக்கு யாரு இருக்கா? அவளும் பாசத்தத்துக்கு தான ஏங்குறா. எனக்கு தெரியாம என் தம்பிய பார்த்து பேசிட்டு வரா. நிறைய தப்பு பண்ணிட்டேன். என் தம்பிய திட்டியிருக்க கூடாது. உறவை விட கட்சி முக்கியம்னு நினைச்சேன். ஆனா இப்போ அதே கட்சி என்னை கண்டுக்கல. ஆனா என் தம்பி என் மேல கோவம் இருந்தாலும், என் பொண்ணு மேல பாசம் குறையாம இருக்கான். அன்னைக்கு என் பொண்ண கல்யாண கோலத்துல பார்த்தபோது தான் தோணுச்சு, எவ்வளவு இழந்துட்டேன்னு. அரவணைப்பா ரெண்டு வார்த்தை கூட பேசியதில்லை. இருந்தாலும் பொண்ணு இருக்காளேன்னு இவ்வளவு நாளும் வாழ்ந்துட்டேன். கல்யாணம் முடிச்சு போனா நாம தனிமரம் ஆயுடுவோம்லனு தோணுச்சு. பொண்ண கடத்திட்டானுங்கனு தெரிஞ்சபோது, இருக்கற ஒரு உறவையும் தொலைச்சுட்டேனேன்னு துடிச்சுட்டேன். காலம் போன காலத்துல அறிவு வந்திருக்கு. என் பொண்ணை மிஞ்சி எதுவும் வேண்டாம். அவளை ரொம்ப நோகடிச்சுட்டேன். இனியும் அவ விருப்பத்துக்கு மாறா எதுவும் செய்ய மாட்டேன். சாவுற காலத்துல என் பொண்ணோட நிழல்ல வாழ்ந்துட்டு போயிடணும்…”

கண்கள் கலங்கியபடி எழுந்தவர், எதிரே இருந்த தனது மனைவியின் புகைப்படத்தைக் கண்டு மனம் நொந்தவராய் தனது அறைக்குச் சென்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!