Skip to content
Post Views: 129
அத்தியாயம்: 9
“பெரியவளுக்கே படிப்பு முடிஞ்சதும் தான் கல்யாணத்த வச்சோம். அதுவும் ரெண்டு டிகிரி முடிச்ச பின்னாடி தான் பண்ணோம். சின்னவளுக்கு இன்னும் ரெண்டு வருஷ படிப்பு மிச்சம் இருக்கு. அதுக்குள்ள ஏன் கல்யாணத்துக்குப் பாக்குறீங்க?” என்ற கேட்டது முத்து லெட்சுமி தான்.
Advertisement
அவரைப் பொறுத்தவரை மகள் இன்னும் கல்யாணத்திற்கு தயாராக இல்லை. அது உண்மையும் கூட. சுருக் சுருக் என்று இப்பொழுது பேசும் ரிதன்யா கிடையாது அப்பொழுது. அவளின் சுபாவம் இதுவல்ல. இந்த ரிதன்யா சரிகாவின் அன்னை. ஆதலால் தைரியமும் திடமும் கொண்டு பேசுகிறாள்.
அது, முத்து லெட்சுமியின் மகளான ரிதன்யா. யாரிடம் எப்படி பேசுவது என்று தெரியாத வெகுளி. அப்பாவையும் அண்ணனையும் மீற நடக்காதவள். பிரச்சனைகளுக்கு அஞ்சி ஒதுங்கிச் செல்பவள்.
Advertisement
Advertisement
பரிதாபமாக முகத்தை வைத்துக் கொண்டு தானம் கேட்பவருக்கு, கையில் உள்ள காசைக் கணக்கு பார்க்காது கொடுத்து விட்டு வந்து முத்து லெட்சுமியிடம் அடிகளை வாங்குபவள். தனக்கு எது வேண்டும் என்று தீர்க்கமாக முடிவெடுக்கத் தெரியாதவள். லெட்சுமியும் அண்ணாமலையும் எதைத் தந்தாலும், குறை சொல்லாது சந்தோஷமா ஏற்றுக் கொள்ளும் கிளிப்பிள்ளை.
பெண் பிள்ளைகள் இரண்டு பேர் இருந்தாலே அணியும் உடையில் இருந்து நெற்றியில் வைக்கும் பொட்டு வரை போட்டி, பொறாமை இருக்கும் என்ற பொதுவான கருத்து உண்டு. ஆனால் மைதிலியும் ரிதன்யாவும் எதற்கும் சண்டையிட்டதில்லை. இருவரும் போட்டி போட்டு, விட்டுக் கொடுப்பர். அத்தனை ஒற்றுமை இருந்தது என்பதை விட ஒருவர் மற்றவரை மதித்து, அனுசரணையாக நடந்து கொண்டனர் என்றால் உசிதமாக இருக்கும். தனபாலன் மட்டும் விதி விலக்கு.
Advertisement
பெண் பிள்ளைகளுக்கு எந்தக் குறையும் வைத்தது இல்லை அண்ணாமலை. வைக்கும் அளவுக்கு முத்து லெட்சுமி விட்டது இல்லை. படிப்பு, உடை உள்ளிட்ட கடமைகளைச் செவ்வண்ணமே செய்தனர். அண்ணாமலையாருக்கும் பெண் பிள்ளைகள் மீது பாசம் உண்டு என்றாலும், மனைவி மீதும், மகன் மீதும் அளவுக்கு அதிகமாகவே இருந்தது.
“இதப் படிச்சுப் பாருங்க.” என்று ஒரு காகிதத்தைத் தாயின் கையில் கொடுத்தவன்,
“உங்க மகளுக்கு வந்த காதல் கவிதை. மனோகரி சித்தி கடைக்கு வந்து குடுத்திட்டு போனாங்க. அவ கூட படிக்கிற பையன் ஒருத்தன் வந்து குடுத்ததா சொன்னாங்க. எவ்ளோ தைரியமா கடுதாசி எழுதி குடுத்திருப்பான். எவன்னு கண்டுபிடிக்கிறேன். அப்றம் இருக்கு.” என்று பல்லைக் கடித்தான்.
முத்து லெட்சுமி, “அதுக்கும் மாப்ள பாக்குறதுக்கும் என்னடா சம்மந்தம்?”
“இவ சிக்னல் குடுக்காமலா, தைரியமா லெட்டர நேர்ல வந்து குடுத்திருப்பான்.” என்றவன்,
“அவளுக்குக் கல்யாண ஆச வந்திடுச்சி. காலத்துலயே பயிர் செஞ்சிடணும். இல்லன்னா காதல் கீதல்ன்னு கண்ட அவிசாரி பயல இழுத்திட்டு வந்து நிப்பா! அப்றம் யாருக்கு அசிங்கம்? நமக்குத் தான?”
“ஆமா… ஆமா… தம்பி சரியாத் தான் சொல்றான்.” என்று அவனுக்கு ஜாலரா தட்டிய கணவனிடம்,
“நம்ம பொண்ணு மேல அவ்ளோ தான் நம்பிக்கையா?” என்று முத்து லெட்சுமி சிடுசிடுத்தார்.
“நான் நம்புறேன் லெட்சுமி. ஆனா சின்னப் பாப்பா ஜாதகம் சரி கிடையாதே.” என்று காரணம் கற்பிக்க,
“என்னப்பா சொன்னான் ஜோசியக்காரென்?”
“பாப்பாக்குக் கல்யாண வாழ்க்கை நிலைக்கிறதுல ஏகப்பட்ட சிக்கல் இருக்காம். நாம தலைகுனியுற மாதிரி நிறைய நடக்குமாம். நாமல கேவலப்படுத்தி, வேற ஜாதிக்காரன் தான் புருஷனா வருவான்னு சொன்னான். அந்த அசிங்கமெல்லாம் நடக்குறதுக்குள்ள இவள ஒருத்தன் கைல பிடிச்சிக் குடுத்தாத்தான் எனக்கு நிம்மதி.” என்றவர், என்றோ எவனோ ஒருவன், நடக்கலாம் என்று கணித்துக் கொடுத்த ஒன்றைப் பிடித்துக் கொண்டு ரிதன்யாவிற்கு விக்ரமைத் திருமணம் செய்து வைத்தார்.
ரிதன்யா பெரிதாக எதிர்க்கவில்லை. சொல்லப் போனால் மிகுந்த ஆசையுடன் சம்மதித்தாள். விக்ரமைப் புகைப்படத்தில் பார்த்தது முதல் உள்ளுக்குள் பூப்பூக்க, ரகசியச் சிரிப்புடன் ஆவலுடன் திருமண நாளுக்காகக் காத்திருந்தாள்.
காரணம் மைதிலி தான். என்னதான் பெரியவர்கள் பார்த்து வைத்த திருமணமாக இருந்தாலும், மாரிக்கு மைதிலி மீது ஆசை இருந்தது. மாமன் மகள் என்று சும்மாவே வம்பு செய்து பழகுபவன், அவளுடன் தான் திருமணம் என்றதும் சற்று அதிக உரிமை எடுத்துப் பழகினான். அவர்களின் அரேஞ்ச் மேரேஜ், லவ் மேரேஜ் போல் நடந்தது.
நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் கரம் கோர்த்துக் கொள்வது. யாருமறியாது கண் சிமிட்டி, இதழ் குவித்து முத்தத்தைப் பறக்க விட்டு கலாட்டா செய்வது, கூட்டமாக இருந்தால், தனிமையை நாடி திருட்டுத் தனமாய் மைதிலியை இழுத்துச் சென்று காதல் பாடங்கள் கற்பித்தது என இருவரும் செய்த சேட்டைகளைப் பார்த்து, பருவப் பெண்ணுக்குள், ஆசை வரவில்லை என்றால் தான் ஆச்சரியம்.
எக்கச்சக்க கனவுகள். கல்யாண ஆசைகளுடன் காத்திருந்தாள்.
ரிதன்யாவிற்கு விக்ரமை முடிக்கும் போது, மைதிலி மாரிக்குத் திருமண நடந்து இரண்டு ஆண்டுகள் சென்றிருந்தன.
என்னதான் மாமியாருடன் சண்டை என்று அடிக்கடி வீட்டில் வந்து உக்காந்து கொண்டாலும் இரவு தங்க விட மாட்டான் மாரி. வந்து வந்து… பேசி பேசி மனைவியை இழுத்துச் சென்று விடுவான். பிரசவத்திற்கு கூட அண்ணாமலையார் வீட்டில் மனைவியைத் தனியாக தங்க விட்டது இல்லை. மனைவியுடனேயே சுற்றுவான்.
“ஏன்டா! ஒத்த பிரசவம்னு சொல்லி, பொண்டாட்டிய அப்பெ வீட்டுக்கு அனுப்பிட்டு, திருப்பிக் கூட்டீட்டு வர்றச்ச நாலஞ்சி கொழந்த குட்டிங்களோட தான் வருவ போலருக்கே! அப்படி என்ன வசியம் தான் உனக்கு வச்சாளோ! பொண்டுக பயலாட்டம் பின்னாடியே சுத்திட்டு கிடைக்க.” என்று கலா நொடித்துக் கொள்வார்.
அவர்களின் அன்னியோன்யம் பார்த்து புலம்பாத ஆளே இல்லை என்று சொல்லும் அளவிற்கு மனைவியின் மீது பிரியம் அவனுக்கு. அணைத்துக் கொள்வதில் மட்டுமல்ல அடித்துக் கொள்வதிலும் இருவரும் கைத் தேர்ந்தவர்கள். அவனிடம் அடி வாங்கி கன்னம் வீங்கியெல்லாம் மைதிலி தாய் வீட்டிற்கு வந்திருக்கிறாள். ஆனாலும் மனைவியை நாடி மறு நாளே வந்து விடுவான்.
அப்படிப்பட்ட மாரியைப் பார்த்து பார்த்து பழகியவளுக்கு அவனைப் போலவே மனைவியைத் தாங்கும் கணவன் வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
ஆனால் அண்ணாமலையாரோ! மாரி போல் வேண்டாம் என்று தேடி தேடிப் பார்த்து எடுத்தது தான் கொடுமை.
பக்கத்துப் பக்கத்து தெரு தான் என்றாலும் மைதிலியும் மாரியும் மணிக் கணக்கில் செல்போனில் பேசிக் கொள்வதைப் பார்த்திருக்கிறாள்.
கன்னங்கள் சிவக்க, மாடிப் படிக்கட்டில் அமர்ந்து கொண்டு சத்தமே வராமல் பேசுவது எப்படி என்று மைதிலியிடம் பாடம் கற்றுக் கொள்ளலாம். ம்.. என்பதைக் கூட சிணுங்களாக அவள் சொல்வதைக் கேட்டு ரிதன்யா கேலி செய்து சிரிப்பாள்.
ஆதலால், விக்ரமிடமிருந்து அழைப்பு வரும் என்று எதிர்பார்த்தாள். ஆனால் வரவில்லை. தானே அழைத்தும் பேசினாள்.
“யாரு?” என்று கட்டைக் குரலில் உறுமியவன், ரிதன்யாவின் பெயரைக் கேட்டதும் பட்டென அணைத்து விட்டது அவளுக்கு அவமானமாக இருந்தது. அதன் பின் அவனைத் தொடர்பு கொள்ளவே இல்லை. ரோசம் வந்து சுயமரியாதை முக்கியம் என்றது.
திருமணம் முடியும் வரை ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளாது புரிந்து கொள்ள முயற்சிக்காது இருந்தனர்.
“உன்னை யாரு டி ஃபோன் போடச் சொன்னது. அலையுறன்னு நினைக்க மாட்டாரு. ஆம்பளைங்கள நம்மலத் தேடி வர வைக்கணும். நாமல தேடி அழையக் கூடாது. அது புருஷனா இருந்தாலும் சரி.” என்று மைதிலி சொல்ல, முத்து லெட்சுமி மகளின் விடியா முகம் கண்டு,
“எதாவது டென்சன்ல இருந்திருப்பாரு பாப்பா. வெளில வேலை பாக்குற ஆம்பளைங்களுக்கு ஆயிரம் இருக்கும்ல.” என்றார் சமாதானமாக.
அத்தோடு, “பாப்பா, அதிக எதிர்பார்ப்போட கல்யாண வாழ்க்கைக்குள்ள போகக் கூடாது. அது நிறைவேறலன்னா ரொம்ப வேகமாவே விரக்தி வந்திடும். வாழ்க்கை வெறுமையா மாறிடும். அதுனால மாப்ள எப்படி இருக்காரே அப்படியே ஏத்துக்க பழகு பாப்பா. அது தான் பொண்டாட்டிக்கு அழகு.” என்று மகளின் கல்யாண வாழ்க்கைக்கு உதவும் என்று சில பல அறிவுரைகளை வழங்கினார்.
அவளும் விக்ரம் எப்படி இருக்கிறானோ அப்படியே ஏற்க முயன்றாள்.
மைதிலியின் திருமண புகைப்படங்கள் எடுக்கும் போது ரிதன்யா தான் ஃபோட்டோகிராப்பர். ‘அப்படி கொடுங்கள்… ஒட்டி நின்று எடுங்கள்’ என்று ரசனையுடன் புதுமண ஜோடிகளின் நெருக்கத்தைப் படம் பிடிக்கச் சொன்னாள்.
ஆனால் அவனின் திருமணத்தில் தோளில் கைப் போட்டு ஒற்றைப் புகைப்படம் எடுக்கப் போனவளை, “எல்லார் முன்னாடியும் இப்படித்தான் போஸ் குடுப்பாங்களா? அடக்கம் வேணாம்?” என்று கடிந்து விட்டு நடக்க, செல்லும் அவனைத் தடுக்க முடியாது, வெறித்து பார்த்தபடி தனித்து நின்றாள் ரிதன்யா.
“சில ஆம்பளைங்க அப்படித்தான். விட்டுத்தள்ளு ரிது. நாம எடுப்போம் வா.” என்று மைதிலி தன் மகளைத் தங்கையின் கையில் கொடுத்து, கட்டி அணைத்துக் கொண்டு நிறைய புகைப்படங்கள் எடுத்தாள்.
அன்றைய நாள் முழுவதும் அவனின் முகத்திருப்பலில் திருமண நாளை அனுபவிக்க முடியவில்லை அவளால். செய்யக்கூடாத ஒன்றை செய்து விட்ட குற்ற உணர்வில் தன்னைத் தானே சமாதானம் செய்து கொண்டாள்.
ஆனால், பாவம் கடைசி வரை விக்ரமின் செயல்களுக்குத் தன்னைத் தான் சமாதானம் செய்து கொள்ளும் நிலை வரும் என்று எதிர்பார்க்கவில்லை.
விக்ரமின் தாய் நந்தினி தலை மகனுடன் தங்கிக் கொண்டார்.
‘இத்தனை பவுன் தான் போடுவேன். இது தான் செய்வேன். தனிக் குடித்தனம் தான் வைக்கணும்.’ என்று கறாராகப் பேசிய அண்ணாமலையாரின் மீது கொண்ட கோபத்தை ரிதன்யாவின் மீது காட்டியது விக்ரமின் குடும்பம்.
சொந்தமாக வீடு இருந்த போதும், “அதான் இத்தன கண்டிசன் போட்டாப்லேல. மகள கூட்டீட்டு போய் எங்கயாது தனிக் குடித்தனம் வைக்கட்டும். இல்லன்னா புது வீடு கட்டி அதுல குடி வைக்கட்டும் மகளையும் மருமகனையும். நான் ஏன் எம்புருஷன் கட்டுன வீட்ட இவரு மக கூட பங்கு போடணும். எனக்கா வந்து அவரு மக நல்லது பொல்லது செஞ்சி துணைக்கி நிறுத்தப் போறா!” என்று விட்டார்.
மறுவீடு என்ற பெயரில் கூட அந்த வீட்டிற்குள் ரிதன்யாவை அனுமதிக்கவில்லை.
“பரவாயில்ல மாமா. என்னோட ஃப்ரெண்டு பெரிய சாமி, ரியல் எஸ்டேட் வேலை தான் பாக்குறான். அவன்ட்ட சொன்னா நொடில வீட்ட ரெடி பண்ணிடுவான்.” என்று பெருந்தன்மையாகப் பேசி ஒரே வாரத்தில் ஊமச்சிகுளத்தில் வாடகை குறைவு என்று தனி வீடு பிடித்து சென்றான். அதில் அண்ணாமலையாருக்கு அவனை அதிகம் பிடித்துப் போனது.
“நாங்கூட அவுக அம்மா தான் பெருசுன்னு நம்மல பணிஞ்சி போகச் சொல்லி கேப்பாறோன்னு நினைச்சேன். நல்ல வேளை தனியா வீட்டப் பாத்து, எம்மருமகெ என்னோட பேர காப்பாத்திட்டாப்ள. பணம்னு பேச்சையே எடுக்கல.” என்று மீசையை முறுக்கிக் கொண்டார்.
அவரின் தேர்வு அல்லவா! ஆதலால் அவனிடம் அவருக்கு எந்தக் குறையும் தெரியவில்லை.
ரிதன்யாவிற்கும் பெரிதாக எவ்வித பிரச்சினையும் இல்லை. சிற்சில குறைகளோடு, சீராக சென்று கொண்டிருந்தது அவர்களின் திருமண வாழ்க்கை. மனத்தைப் பகிர்ந்து கொண்டு ஒருவருக்கொருவர் புரிதலுடன் வாழ்ந்தார்களோ இல்லையோ! வாழ்ந்தார்கள் சந்தோஷமாகவே.
அவன் அப்படித்தான் என்று விக்ரம், நிறைவேற்றாத சின்னச் சின்ன தேவைகளோடும் ஏக்கத்தோடும் நாள்கள் சலிப்பில்லாமல் நகர்ந்தன.
நான்காம் மாதமே சரிகா கருவில் தங்கிவிட்டாள்.
மதுரை என்றாலும் ஊருக்கு வெளியே அவள் இருக்கும் பகுதிக்குச் சென்றுவர அரைமணி நேரத்திற்கு மேல் எடுக்கும். தினமும் சென்று பார்த்து வருவது சிரமமாக இருந்தது. அதே நேரம் அவளை வீட்டிற்கு வா என்று சொல்வதற்கு சங்கட்டமாக இருந்தது.
“மாப்ள, அவரு அம்மா அண்ணேன்னு எல்லாத்தையும் விட்டுட்டு வந்திருக்காரு. அவர் கூடவே இருந்து பாத்துக்கிறத விட்டுட்டு, அம்மா அம்மான்னு இங்க வீட்டுக்கு அடிக்கடி வராத பாப்பா. பாவம் அவரு.” என்று தன் மாப்பிள்ளையின் நலனுக்காக யோசித்தார்.
மாதம் உருண்டோட மசக்கையின் பிடியில் சுருண்டு கிடந்தாள் ரிதன்யா. கணவனை அதிகம் நாடியது மனம்.
விக்ரம், அவன் உண்டு அவன் வேலை உண்டு என்று தன் தேவைகளைத் தீர்த்துக் கொண்டான். அனுசரனையாக நடந்து கொள்ளவில்லை என்றாலும் என்ன செய்கிறது என்ற ஒன்றை வார்த்தை கூட அவனிடமிருந்து வரவில்லை.
அவளுக்காகவென்று அவன் எதையும் வாங்கித் தரவும் இல்லை. தலையில் வைக்கும் பூவில் இருந்து அவன் தோள் சாய்ந்து தன் உணர்வுகளைப் பரிமாறுவது கூட ஏக்கங்களாக தொடர்ந்தது.
அவளின் அவஸ்தைகள், தேவைகள், எதிர்பார்ப்புகள் நிராசைகளாக கேட்பாரற்று துடித்தது. தாயிடம் சொல்லிப் புலம்பியபோது,
“ஆம்பள, அவருக்கு மசக்கன்னா என்ன தெரியும்? நான் இந்த வாரம் வந்து ஹாஸ்பிட்டல் கூட்டீட்டு போறேன்.” என்ற முத்து லெட்சுமி, அவளுக்கு என்ன வேண்டும் என்று கேட்டு நிறைவேற்றினார்.
‘உனக்காக நாங்கள் எதை வேண்டுமானாலும் செய்யத் தயாராக உள்ளோம். ஆனால் உன் வாழ்வு மட்டும் விக்ரமுடன் தான்.’ என்றனர் ரிதன்யாவின் குடும்பத்தினர்.
இருபது வயது பாவைக்குக் கர்ப்ப காலத்தைப் பற்றி என்ன தெரியும்? அவளின் எந்த நிலையிலும் எட்டிக் கூடப் பார்க்கவில்லை விக்ரமின் உறவுகள்.
அது ஏதோ ஒரு வகையில் ரிதன்யாவிற்கு ஆறுதலாகத்தான் இருந்தது. ஏனெனில் ரிதன்யா introvert. தனிப்பட்ட சிந்தனையில், சிறிய சுற்றத்தில் மகிழ்ச்சி அடைபவள்.
அதாவது தனக்குப் பிடித்த, பழக வேண்டும் என்று மனம் சொல்லும் நபர்களிடம் மனம் விட்டுப் பேசி மகிழ்ச்சியை, தன்னைச் சுற்றித் தேடுபவள். அந்த மகிழ்ச்சியைத் தர முடியாதவர்களிடம் இருந்து விலகி நிற்கவே விரும்புவாள். ஆதலால், குறை சொல்லி, புறம் பேசும் மாமியார் வீட்டு தொடர்பு அவளுக்குச் சற்று எரிச்சலைத்தான் தந்தது. அவர்களுடன் ஒன்ற அவளும் நினைக்கவில்லை. அவர்களும் நினைக்கவில்லை.
அவள் மனம் விட்டு கலகலக்கும் அவளின் சுற்றத்தில் லெட்சுமி, மைதிலி முன்பு சுருதியும் இருந்தாள் இப்பொழுது இல்லை.
சரிகா பிறந்தாள்.
“க்கும்… பொம்பளப்பிள்ள தான பெத்திருக்கா… அவளப் போய் ஹாஸ்பத்திரில பாத்து நலம் விசாரிக்கணுமாக்கும்.” என்று மாமியார் நொடிக்க, விக்ரம் மருத்துவமனைக்கு வந்து எட்டி பார்த்து விட்டு சென்றான்.
அறுவைச் சிகிச்சை செய்து வயிற்றில் தையலோடு கிடக்கும் மனைவியின் நலத்தைக் கூட விசாரிக்கவில்லை. அது அவளை மேலும் சோர்வுறச் செய்தது.
முகம் கொடுத்துக் கூட பேச விரும்பவில்லை அவன். ஏன் என்று கேட்டதற்கு, பெண் குழந்தை பெற்றது அவளின் தவறு என்று சித்தரிக்கப்பட்டது.
அது கடவுள் தரும் வரம் என்று உணராது ஆண் குழந்தை பெற்றிருந்தால், மாமியாரும் கணவரும் தன்னுடன் நல்லுறவு கொண்டு முகம் கொடுத்து பேசியிருப்பார்களோ! என்று அவளுக்கு அவளே குற்றம் சுமத்தி தன்னைக் குற்ற உணர்ச்சிக்குள்ளேயே வைத்துக் கொண்டாள். இல்லை வைத்தனர்.
அது ஆழ் குழிக்குள் அவளைத் தள்ளியது.
அந்த உணர்ச்சி விக்ரமை எதிர்த்து கேள்வி கேட்க விடவில்லை. எது கேட்டாலும், “பொட்டப் பிள்ளைய பொத்திட்டு இந்தப் பேச்சு பேசக் கூடாது நீ.” என்றான். அவன் மட்டுமல்ல அனைவருமே அப்படித்தான் கூறினர்.
அவளின் பேச்சுக்கள் குறைந்து, தன்னைத் தானே நத்தையாகச் சுருக்கிக் கொண்டாள்.
பொதுவாகவே அவன் பேச காசு கேட்கும் ரகம் என்று அவள் நினைத்திருக்க, அது தவறு, அவன் நன்கு பேசுவான். ஆனால் நல்ல விதமாகத் தான் பேசவே தெரியாது என்பதை சரிகா வளர வளர தெரிந்து கொண்டாள். சடவுச் சொல்லும், குத்தல் பேச்சும் தான் அவன் வாயில் இருந்து வந்தது.
விடயம் அண்ணாமலையார் வரை சென்றால் உடனே மன்னிப்பு என்ற கேடயத்தை பயன்படுத்தி ஒழிந்து கொண்டான். இல்லையேல் அனைத்தும் அவள் தவறு என்று வாதிடுவான்.
காலை எட்டரை மணிக்கு வீட்டைக் காலி செய்தால், இரவு 11 மணிக்குத் தான் வருவான். இடையில் கால் செய்தால், “வருவேன்ல… செத்து சுடுகாட்டுலயா என்னைச் சாத்தி வச்சிருக்கு.” என்பான்.
அழைக்கவில்லை என்றால், “புருஷன் வீட்டுக்கு வரலயேங்கிற அக்கறை கொஞ்சம் கூட இல்லாம, மல்லாந்து படுத்து படம் பாத்திட்டுக் கிடக்க. எல்லாம் உங்கப்பெ குடுத்து விட்டதுல. அனுபவி அனுபவி. இங்க நான் வேகாத வெயில்ல காஞ்சி கருவாடா வேலை பாக்குறேன்.” என்று கழுதையையாய் உதைத்தான்.
சின்னச் சின்ன வார்த்தைகளுக்குப் பஞ்சம் உண்டாகிப் போக, நெஞ்சம் வறண்டு போனது ரிதன்யாவிற்கு.
சாணம் தீட்டிய கத்தி முனையில், ஆமையின் வேகத்தில் அவளின் வாழ்க்கை நகரத் தொடங்கியது.
எதற்கு அழுகிறது என்றே தெரியாது, குழந்தையுடன் சேர்ந்து அவளும் அழுத நாள்கள் ஏராளம்.
மைதிலி, மாரிக்கு மாற்றல் கிடைக்கும் வரை வந்து பார்த்தாள். முத்து லெட்சுமி தினமும் ஃபோனில் மணிக்கணக்கில் பேசினார். ஆனாலும் ரிதன்யாவின் மனம் மீளவே இல்லை.
தாகத்தை நீர் தான் பூர்த்தி செய்ய முடியும். நீரைப் போன்றிருக்கும் நீர்மத்தால் அல்ல, என்பதற்கு இணக்க, கணவனை நாடிய உள்ளம் அவனின் கனிந்த பேச்சால் மட்டும் தான் குளிர்ந்து போகும். மற்றவர்கள் கூறும் சமாதானம் சொற்களுக்கு அல்ல என்ற நிலையில் இருந்தாள்.
ஆனால் அவன் நீரை அல்ல அமிலத்தை உற்றினான்.
கானம் இசைக்கும்…
error: Content is protected !!