Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

38. அர்ச்சனா நித்தியானந்தம் - காதலும் கடத்தப்படும்Contest Stories 2026

காதலும் கடத்தப்படும் – 22

 

காதலும் கடத்தப்படும் – 22

 



Advertisement

சற்று இருட்டியிருந்த வேளையில், அஞ்சலியும், அர்ஜுனும், மதனும் வீடு திரும்பினர். புல்வெளியில் அமர்ந்தபடி வேதநாயகம் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தார். மூவரும் அவர் எதிரே சென்று நிற்க, 

“அப்பா, என்னோட ப்ரெண்ட்ஸ வீட்ல விட்டுட்டு வர நேரம் ஆயிடுச்சு…” என்றாள். 

“பரவால்ல… நீ போய் சாப்பிடு” என்றார் வேதநாயகம், பரிவாக.

Advertisement

“எங்கடா தொலைஞ்ச?” என்று கெடுபிடியாக மதனின் எதிரே வந்து நின்றார், தாத்தா.

Advertisement

“நான் எங்க தொலைஞ்சேன்? அதான் திரும்பி வந்துட்டேனே…” என்றான் மதன்.

“சொல்லாம கொள்ளாம எங்க போன?”

“ஒரு சர்ப்ரைஸுக்கு…”

Advertisement

“என்ன சப்பராய்ஸ்?”

“சப்புற ஐஸ் இல்லை, குடிக்கற ஜுஸு” என்றவன், தனது பாக்கெட்டிலிருந்து இரண்டு ரோஸ் மில்க் பாட்டில்களை எடுத்து அவரிடம் நீட்டினான். அதை வாங்கிக்கொண்டவர், 

“இதெல்லாம் நல்லாத்தான் செய்யற, ஆனா வாய் தான் மைல் கணக்குல நீளுது. உன் கூடப்பிறந்தவன் தான இவன்! வாயைத் திறக்கறானா?” என்றார், கண்டிப்போடு.

“கூடப்பிறந்தவன்’லாம் கிடையாது. நான் சின்ன பிள்ளையா இருக்கும்போது யாருமில்லாம தெருவுல அனாதையா கிடந்தேன். என்னை தூக்கிட்டு போய் இவனோட அப்பா அம்மா தான் சொந்த பிள்ளையா நினைச்சு வளர்த்தாங்க” என்றான் பாவம் போல் முகத்தினை வைத்துக்கொண்டு.

சற்றே மனம் வருந்திய தாத்தா, 

“இந்த உலகத்துல சக மனுஷன் வாழற வரை, எவனும் அனாதை கிடையாது. சொல்லிக்கறதுக்காவது உறவிருக்கேன்னு சந்தோசப்பட்டுக்கணும். ரத்த உறவு வேணும்னா, ஒரு பொண்ணை கல்யாணம் கட்டி ரெண்டு புள்ளைய பெத்துக்க. அவ்வளவுதான்” என்றார்.

“ஒரு வார்த்தைனாலும் திருவார்த்தையா சொன்னீங்க தாத்தா. அப்படியே உங்க பேத்தி போன் நம்பர் குடுத்தீங்கன்னா கரெக்ட் பண்ணி கல்யாணம் பண்ணிடுவேன்” என்று கூச்சம் சிறிதுமின்றி மதன் கூற, கடுப்பான தாத்தா, அவனை அடிக்க கையோங்க, அவன் ஓட, அவர் வசைபாட, அஞ்சலி அவன் இறுதியாக கூறியதை நினைத்து விழுந்து விழுந்து சிரித்தாள். அவர்கள் இருவரும் ஓடி முடித்து திரும்பி வந்து நிற்க, “மதன் உன்கூட எப்பவுமே காமெடி தான்” என்றுவிட்டு உள்ளே சென்றாள். செல்லும் முன் அவள் அர்ஜுனை ஒரு முறை பார்த்துக்கொள்ள தவறவில்லை. 

 

அன்றிரவு ஆட்டம் பாட்டம் முடிந்து மதன் கிளம்ப, அவனது பையில் பணத்தினை வைத்தார் வேதநாயகம்.

“சார் எதுக்கு?” என்றான்.

“ரொம்ப சந்தோஷமா இருக்கேன்” என்றவர், சிறிது நேரத்திற்கு முன் அஞ்சலி சிரித்ததை எண்ணிக்கொண்டார்.

“தேங்க்ஸ் சார்” என்றான்.

அவர் அர்ஜுனின் பாக்கெட்டில் பணத்தினை வைக்க, அவனும் நன்றி கூறிவிட்டு கிளம்பினான். 

 

இரவு மிகவும் உற்சாகமாக பாடிக்கொண்டு, தனது பாயில் படுத்திருந்தான் அர்ஜுன்.

“என்ன விசேஷம் அஜூ?”

“இன்னைக்கு அஞ்சலி விழுந்து விழுந்து சிரிச்சா தெரியுமா?”

“தெரியுமே, அதுக்குத்தான் வேது நமக்கு காசு கொடுத்தாரு…”

“டேய் , பேர் சொல்லாத… அஞ்சலி சிரிச்சபோது எவ்வளவு சந்தோஷமா இருந்தது தெரியுமா?”

“அடுத்த முறை அந்த பிள்ளையை தனியா எங்கயாவது கூட்டிட்டு போகும்போது உன் மனசுல உள்ளதை சொல்லிடு”

“டேய் சும்மா இரு. ஏதோ அவளை பார்க்கற சந்தோஷம் கிடைச்சுது எனக்கு அதுவே போதும்…”

“அஜூ…”

“சொல்லு…”

பதில் வராமல் போக, சில நொடிகள் கழித்து, “சொல்லு மதனா” என்றான். அவன் அமைதியாகவே இருக்க, இவன் எழுந்து பார்க்க, மதன் ஏற்கனவே உறங்கிவிட்டிருந்தான். சிரித்துக்கொண்டு படுத்துக்கொண்ட அர்ஜுன், அவளது நினைவில் மூழ்கியபடி தொலைந்து போனான். 

 

அர்ஜுனை எண்ணியே அவளது பகலும் இரவும் நகர்ந்தது. தன்னையும் அறியாமல் அவள் அவனது நினைவில் தன்னை மெல்ல தொலைத்துக்கொண்டிருந்தாள். அவ்வப்போது அவனது தாய் தந்தையின் கதையும் நினைவுக்கு வர, ரகசியமாய் சிரித்துக்கொண்டாள். அடிக்கடி தற்காலத்து பாடல்களையும், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி பாடல்களையும் ஒலிக்க விடுபவளின் அறையிலிருந்து, பழைய தமிழ் கருப்பு வெள்ளை பாடல்கள் ஒலித்தன. வேதநாயகம் இந்த மாற்றத்தை உணராமல் இல்லை. இருப்பினும் அவள் போக்கிலேயே விட்டுவிட்டார். 

 

தனது கைபேசியில் பாடல்களை பார்த்துக்கொண்டிருந்தவளுக்கு ஒரு யோசனை தோன்றியது. தனது நண்பர்களிடம் பேசினாள். சிலரை நேரில் சந்தித்தாள். எங்கு செல்கிறாள், யாரை சந்திக்கறாள் என்பது புரியாமல் அர்ஜுன் இனம் புரியா கவலை கொண்டான். இவள் வேறு ஏதும் ரகசிய திட்டம் வகுக்கிறாளோ என்றொரு சந்தேகம் கூட அவனுக்கு வந்தது.

 

“அஜூ, எப்ப சொல்ல போற?” என்றான் மதன், அர்ஜுனிடம்.

ஒரு மாலை அர்ஜுன் தோட்டத்தில் ஒரு ரோஜா செடியின் முன் அமர்ந்தபடி, ஒரு ரோஜாவினை ரசித்துக்கொண்டிருந்தேன். 

“என்ன சொல்லணும்?”

“அஞ்சலி கிட்ட…”

“எப்பவுமே சொல்ல போறதில்லை…”

“எனக்கென்னமோ அந்த புள்ளைக்கு உன்னை ரொம்பப் பிடிச்சிருக்குன்னு தோணுது…”

“நம்ம நிலையறிஞ்சு பேசு…”

“நம்ம நிலை இப்படியே இருந்திடாதுங்கற நம்பிக்கையில பேசறேன்…”

“போடா…” என்றவன் அவளோடு காணும் கனவுகள் மட்டுமே அவனுக்கு போதும் என்று தன்னை தேற்றிக்கொண்டான்.

 

அவர்களின் முன்னே அவசரமாக வந்து நின்றாள், அஞ்சலி.

“அஜூ, நான் ஒன்னு சொல்லுவேன் நீ மறுக்கமாட்டியே?” என்றாள். 

“நீ முடியாதுன்னு சொல்ல மாட்டேன்னு எனக்கு தெரியும்” என்று தொடர்ந்தவள், அவனிடம் ஒரு பையை நீட்டி, “இந்த சட்டையை மாத்திக்க” என்றாள்.

அவன் புரியாது நிற்க, அவனது மனமோ ஏதேதோ கற்பனை செய்தது.

“என்னன்னு சொல்லு அஞ்சலி?” என்ற மதன், “நான் வேணும்னா அந்த பக்கம் போயிடுறேன், நீ இவன்கிட்ட சொல்லு “ என்றான்.

“போ, போயி இந்த சட்டையை மாத்திட்டு வா” என்று அவனிடம் ஒரு பையை நீட்டினாள்.

“எனக்கு எதுக்கு?” 

“அஜுக்கு எடுக்கும்போது உனக்கு எடுக்கமாட்டேனா?” 

அஜூவும், மதனும் ஒருவரை ஒருவர் கண்டு சிரித்துக்கொண்டனர்.

“சீக்கிரம் கிளம்பி வாங்க, முக்கியமான ஒருத்தரை சந்திக்கணும்” என்றுவிட்டு அவள் காரின் அருகே சென்று நின்றாள்.

 

“யாரு அது அஜூ?”

“தெரியல மதனா”

“நீ தான அவளை எல்லா இடத்துக்கும் கூட்டிட்டுப்போற?”

“போறேன். ஆனா அவ யாரை சாதிக்கறா என்ன பண்றான்னு எனக்கு எப்படி தெரியும்?”

“சொல்லிடு சொல்லிடுனு எத்தனை தடவை சொன்னேன்?!”

“எதுக்கு? நான் சொல்லப்போக, அவ விருப்பம் இல்லைனு சொல்லிட்டா நான் நொந்து சாகவா?”

“இப்ப மட்டும் என்ன நடக்கப்போகுதாம்…”

ஆழ்ந்த பெருமூச்செடுத்த அர்ஜுன்,

“எதுவா இருந்தாலும் பார்த்துக்கலாம்” என்க, இருவரும் கிளம்பிச் சென்றனர்.

 

அவள் ஓரிரு முறை வந்து சென்ற ஒரு இல்லத்திற்கு இன்று மீண்டும் விஜயம் செய்தாள்.

“ரெண்டு பேரும் உள்ள வாங்க” என்றவள், காம்பவுண்ட் சுவற்றின் பக்கவாட்டில் இருந்த படிக்கட்டின் வழியே மேலே சென்றாள். இருவரும் அவள் செல்வதை பார்த்து, தயங்கியபடி நிற்க, வெளியே உயரமாக ஒருவன் வந்து அஞ்சலியை வரவேற்றான். இவர்களைக் காணாமல் தேடியவள், இருவரும் கீழே நிற்பதைக் கண்டு, மேலே வரும்படி கையசைத்தாள். 

 

“யாரு அந்த ஒட்டகச்சிவிங்கி?!” என்று அர்ஜுனிடம் மதன் காதுகடித்தபடி, இருவரும் மேலே சென்றனர்.

“சாம், நான் சொல்லியிருந்தேன்ல அஜூ, மதன்” என்று அவர்கள் இருவரையும் அறிமுகம் செய்து வைத்தாள். 

இருவரும் அவனோடு கை குலுக்க, “உள்ள வாங்க எல்லாம் தயாரா இருக்கு” என்றபடி அவர்களை உள்ளே அழைத்துச் சென்றான், சாம். இருவரும் குழப்பமாய் உள்ளே சென்றனர்.

 

கிட்டார், பியானோ, ட்ரம்ஸ் என்று பல இசைக்கருவிகள் இருக்க, இவர்களைக் கண்டதும் அங்கிருந்த மற்றும் சிலர் கையசைத்து வரவேற்று ஆளுக்கொரு கருவியை எடுத்துக்கொண்டு தயாராகினர். நடுநாயகமாக இருந்த இருக்கையில் அர்ஜுனை அமரச் சொன்னாள், அஞ்சலி. 

 

“காங்கோ ட்ரம் தெரியுமா ப்ரோ?” என்றபடி அதனைக் காட்டினான் சாம், மதனிடம்.

“வாசிச்சிருக்கேன்” என்றபடி அதனருகே சென்று, அதனை தொட்டு, வாசித்ததும் பார்த்தான்.

“அஞ்சலி என்ன நடக்குது?” என்றான் அர்ஜுன், தயக்கமாய்.

“அஜூ, நான் ஒரு யூடியூப் சேனல் ஆரம்பிச்சிருக்கேன். ‘ரெட்ரோ மெட்ரோ’ – பேரு எப்படி இருக்கு?” என்றாள்.

“ரொம்ப நல்லா இருக்கு, ஆனா நான் இங்க?”

“இவங்க எல்லாரும் என்னோட ப்ரெண்ட்ஸ். சாம் என்னோட காலேஜ் சீனியர். மத்தவங்க சாம் மூலமா பழக்கம். நம்ம யூடியூப் சானெல்ல பழைய பாட்டெல்லாம் ரீமிக்ஸ் பண்ணி வீடியோ போடப்போறோம். அதான் ரெட்ரோ மெட்ரோ’னு பேரு. இது ஒன்னும் புது ஐடியா இல்லை. நியூ படத்துல தொட்டால் பூ மலரும் பாட்டுக்கு புது பீல் கொடுத்த மாதிரி, ஒரு சின்ன முயற்சி”

“நல்ல யோசனை அஞ்சலி, கண்டிப்பா நல்லா வரும்… இதுல நான் என்ன பண்ணனும்?”

“ப்ரோ நீங்க தான் லீட் சிங்கர்” என்றான் சாம்.

“நானா?”

“ஆமா… நீங்க அஞ்சலி வீட்ல ராத்திரியில பண்ண கச்சேரியெல்லாம் ரெகார்ட் பண்ணிட்டு வந்து காட்டியிருக்கா. உங்க வாய்ஸ் வேற லெவல். உடனே இந்த ஐடியாவுக்கு ஓகே சொல்லிட்டேன். நான் கிட்டாரிஸ்ட்” என்றவன், மற்றவர்களையும் அறிமுகம் செய்து வைத்தான்.

 

“இன்னைக்கு முதல் வீடியோ எடுக்கப்போறோம்” என்ற அஞ்சலி, படப்பிடிப்பிற்காக வந்திருந்த இருவரையும் அறிமுகம் செய்து வைத்தாள். 

“ப்ரோ முதல்ல என்ன பாட்டு பாடலாம்னு நினைக்கறீங்க?”

சற்று யோசித்தவன், “உங்க எல்லாருக்கும் தெரிஞ்ச பாட்டை முதல்ல ரெகார்ட் பண்ணுவோம்” என்றான். அனைவரும் கலந்தாலோசித்து, ‘பாட்டு பாடவா, பார்த்து பேசவா’ என்ற பாடலை பதிவு செய்தனர்.

 

“என்ன அஞ்சலி திடீர்னு யூடியூப் சேனல் ஆரம்பிச்சிருக்க? நீயும் இசைப்பிரியையா?” 

வீட்டிற்கு திரும்புகையில் மதன் வினவினான்.

“பாட்டு கேட்க பிடிக்கும். மத்தபடி சங்கீத ஞானமெல்லாம் கிடையாது. அஜுவோட திறமை உலகத்துக்கே தெரியணும்னு நினைச்சேன். திறமையோடு சேர்ந்து அஜுவோட முகமும் தெரியணும். அதான் இந்த சேனல்…”

அமைதியாய் காரினை ஓட்டிக்கொண்டு வந்த அர்ஜுன், கண்கள் ஈரம் கொண்டான். அவளது இந்த அன்பு அவனுக்கு மிகையாக இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!