Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

57.கார்த்திகா கார்த்திகேயன்-தேவனுக்கேற்ற தேவியோ

அத்தியாயம் 7.2_தேவனுக்கேற்ற தேவியோ_கார்த்திகா கார்த்திகேயன்

 

எப்போதும் வந்ததும் அன்னையின் கழுத்தைக் கட்டிக் கொண்டு வம்பிழுப்பவன் இன்று எதுவும் பேசாமல் அறைக்குள் சென்று விட சகுந்தலாவின் புருவம் உயர்ந்தது.

 

அதே நேரம் ரதியிடம் திவ்யா “எங்க போனீங்க? அமர் மச்சான் என்ன கிப்ட் கொடுத்தாங்க?”, என்று பல கேள்விகள் கேட்டு ரதியை பாடாக படுத்திக் கொண்டிருந்தாள்.



Advertisement

 

ரதி வீட்டுக்கு சென்ற பிறகு அனைவரையும் பார்க்கும் போதும் குற்ற உணர்வாக இருந்தது. அதனால் எப்போதும் போல தலை வலி என்று சொல்லி அறைக்குள் முடங்கிக் கொண்டாள்.

 

Advertisement

அதே நேரம் அமரின் தலையை தன்னுடைய மடியில் வைத்திருந்த சகுந்தலா “என்ன கண்ணா ஆச்சு?”, என்று கேட்டாள்.

Advertisement

 

அவன் என்ன சொல்ல எப்படி சொல்ல என்று தடுமாறினான்? ஒரு பெண்ணை காதல் என்று சொல்லி தனியே அழைத்துச் சென்று அவள் கற்பைக் களவாடி விட்டேன் என்றா சொல்ல முடியும்?

 

Advertisement

அவன் அமைதியாக படுத்திருக்க வீட்டுக்கு வந்ததும் சாணக்கியன் ஸ்னேகாவை அழைத்துக் கொண்டு செக்கப்க்காக மருத்துவமனைக்குச் சென்று விட சின்ன மகனைத் தேடி வந்தார்.

அவன் சகுந்தலாவின் மடியில் படுத்திருக்க அடுத்த நொடி அவர் ஓங்கி மிதித்த மிதியில் தூரப் போய் விழுந்தான். இருவரும் அதிர்ந்து தான் போனார்கள்.

 

அப்படி ஒரு ரவுத்திரம் அவர் முகத்தில். “என்னங்க என்ன பண்ணுறீங்க? உங்களுக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு?”, என்று சகுந்தலா கத்த அமைதியாக இடுப்பை பிடித்த படி எழுந்து நின்ற அமர் தந்தையை நேருக்கு நேர் பார்க்க முடியாமல் தலை குனிந்தான்.

 

“எனக்கு பைத்தியமா? இவன் என்ன செஞ்சிட்டு இருக்கான்னு அவனையே கேளு”, என்று சொன்னவர் அவனை அடிக்கப் போக சகுந்தலா குறுக்கே வந்து விட்டாள்.

 

“என்ன டா பண்ணின?”, என்று கேட்க அவன் அதற்கும் பதில் சொல்ல வில்லை.

 

“உன் மகன் காலேஜ் கட் அடிச்சிட்டு கண்டவ கூட ஊர் மேஞ்சிட்டு இருக்கான்”

 

அதைக் கேட்டு சகுந்தலா அதிர “இந்த வயசுல எவ்வளவு தைரியம் இருந்தா பொண்ணை கூட்டிட்டு ரூம்க்கு போவ? உன் கூட வந்தவளுக்கு எவ்வளவு கொடுத்த?”, என்று அவளை தரக் குறைவாக பேச “என் ரதி அப்படி கிடையாது”, என்றான் அவரை நேருக்கு நேர் பார்த்து. அவன் செய்தது தவறு தான். அவனை என்ன சொன்னாலும் செய்தாலும் தாங்கிக் கொள்வான். ஆனால் அவள் அவனுடைய தேவதையாயிற்றே.

 

“ஓஹோ”, என்றவர் மனைவியை ஒரு பார்வை பார்த்தார். சகுந்தலாவோ அமரா இப்படி என்று அதிர்ந்து பார்த்த படி நின்றாள். அவளுக்கு அமர் எப்போதும் சின்ன குழந்தை போல தான். அவன் இப்படி செய்திருப்பான் என்று நம்ப கூட முடிய வில்லை. காதலித்தது மட்டும் தெரிந்தால் கூட வயது கோளாறு என்று எண்ணி இருப்பாள். ஆனால் ஹோட்டல் அறைக்கு அவளை அழைத்துச் சென்றது எல்லாம் அவளுக்கே ஒரு மாதிரி இருந்தது. அதுவும் மகன் தவறு செய்து விட்டது அவன் முகத்திலே எழுதி இருக்க ஒரு அன்னையாக எந்த முகத்தை வைத்துக் கொண்டு அவனுக்கு பரிந்து பேசவாம்?

 

ரதியை தவறாக பேசியதும் மகன் முகத்தில் வந்த துணிச்சலைப் பார்த்த தருமர் “சகு நீ கொஞ்ச நேரம் வெளிய இரு”, என்றவர் கதவை பூட்டி விட்டு பெல்ட்டால் அவனை விளாசி தள்ளி விட்டார்.

 

அத்தனையும் வாங்கிக் கொண்டவன் அமைதியாக இருக்க “இனி அவ கிட்ட பேச மாட்டேன்னு சொல்லு. காதல் கத்திரிக்காய்ன்னு உளற மாட்டேன்னு சொல்லு டா”, என்று சொல்லி சொல்லி அடித்தார்.

 

ஆனால் அவன் வாயை திறக்கவே இல்லை. “அவளை என்னைக்கும் என்னால மறக்க முடியாது பா. அவ தான் எப்பவும் என்னோட மனைவி. இப்ப கல்யாணம் எல்லாம் பண்ண மாட்டோம். எங்களை இப்படியே விடுங்க. நான் செஞ்சது தப்பு தான். இதை இதோட விட்டுருங்க, இனி அவளை எங்கயும் கூட்டிட்டு போக மாட்டேன்”, என்றான் பொறுமையாக. அவரின் அடியால் தோல் தடித்து வீங்கி ஆங்காங்கே சிவந்திருந்தாலும் அதற்கு அவனுக்கு ஒரு துளி கூட கோபமே வரவில்லை.

 

ஆனால் அவளை விட முடியாது என்று சொன்ன அமரின் வார்த்தை தருமரை அதிகம் தாக்க “இதுக்கு என்ன பண்ணணும்னு எனக்கு தெரியும்”, என்று சொல்லி விட்டு தனது போனை எடுத்தவர் அவனது அடியாளுக்கு அழைத்தார். அவன் எடுத்ததும் “டேய் சரவணா, அந்த பொண்ணை தூக்கிரு டா”, என்றார்.

 

அமர் அதிர்ந்து அவரைப் பார்க்கும் போதே “தூக்குறது மட்டும்  இல்லை. அவளை மொத்தமா முடிக்கணும். அதுவும் சாதாரணமா இல்லை. நம்ம பசங்களை விட்டு சிதைச்சு முடிச்சிறனும். என் பேர் வெளிய வரக் கூடாது. அந்த பொண்ணோட சாவு அவ்வளவு கொடூரமா இருக்கணும். நம்ம பசங்களுக்கு நல்ல விருந்து தான்”, என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவர் காலில்  விழுந்திருந்தான் அமர்.

 

அவனை ஒரு பார்வை பார்த்தவர் சிறு சிரிப்புடன் “ஒரு நிமிஷம் இரு டா. திருப்பி கூப்பிடுறேன். அப்புறம் நான் சொல்ற மாதிரி செஞ்சா போதும்”, என்று சொல்லி போனை வைத்தவர் மகனை எழுப்பி விட்டார்.

 

கண்ணில் நீர் வழிய அவரைப் பார்த்தவன் “ஏன் பா இப்படி எல்லாம் பேசுற? அவ பாவம் பா”, என்றான்.

 

“பாவமா? நல்ல பணக்கார பசங்களா பாத்து மயக்கி அவ கைக்குள்ள போடுறவ உனக்கு பாவமா?”

 

“அவளை அங்க கூட்டிட்டு போனது நான்”

 

“நீ கூப்பிட்டாலும் அவளுக்கு எங்க போச்சு. பின்னாடி நாய் மாதிரி வந்துருக்கா”

 

“நாங்க காதலிக்கிறோம் பா”

 

“இங்க பாரு, இந்த காதல் கீதல் எல்லாம் நம்ம குடும்பத்துக்கு ஆகாது. உன்னையும் உன் அண்ணனையும் வச்சு நான் பெரிய கனவே வச்சிருக்கேன். அதை கெடுக்குற மாதிரி என்ன நடந்தாலும் இந்த தருமர் சும்மா இருக்க மாட்டான். என்ன சும்மா மிரட்டுறேன்னு நினைகிறியா? அரசியல்ல சாதிக்கிறதுக்கு எந்த எல்லைக்கும் போவேன். அன்னைக்கே அக்கா தங்கச்சி ரெண்டு பேரையும் முடிச்சிருக்கணும். தப்பு பண்ணிட்டேன்”, என்று சொல்ல அதிர்ந்து அவரைப் பார்த்தான்.

 

“என்ன பாக்குற? ஊமையா இருக்குற உன் அண்ணனும் காதலிச்சான். இப்ப ஒருத்தி பின்னாடி நீ சுத்திக்கிட்டு இருக்கியே அவ தங்கச்சியை தான். விடுவேனா? உடனே கொல்லச் சொல்லிட்டேன். நீ அன்னைக்கு இடையில வரலைனா அக்கா செத்துருப்பா. தங்கச்சியை தூரத்துன ஆட்கள் அவளையும் முடிச்சிருப்பாங்க”, என்று சொல்ல இப்போது தான் அவனுக்கு அந்த நாள் நினைவே வந்தது.

 

அவனுக்கு அப்படி ஒரு அதிர்ச்சி. அதுவும் சாணக்கியன் திவ்யாவை விரும்பினானா என்று எண்ணியவனுக்கு பேரதிர்ச்சி தான். அது அவன் முகத்திலே தெரிய “அவங்க தெய்வீக காதல் என்ன ஆச்சுன்னு தெரியலை. உடனே உன் அண்ணனுக்கு உன் அண்ணியை பேசினேன். அவன் மட்டும் முடியாதுன்னு சொல்லிருந்தா இந்நேரம் அந்த குடும்பமே இருந்துருக்காது. அவன் கல்யாணத்துக்கு அமைதியா சரின்னு சொன்னதுனால தான் எப்படியோ போகட்டும்ன்னு விட்டேன். இனி சும்மா விட மாட்டேன்”, என்றார்.

 

“அவங்களை விடு பா. பாவப்பட்ட குடும்பம் பா”

 

“அப்படின்னா நீ அவளை விடணும். மொத்தமா விடணும். இனி உனக்கும் அந்த பொண்ணுக்கும் எந்த சம்பந்தமும் இருக்க கூடாது. நீ அவ கூட இல்லைன்னா அவ எங்கயாவது ஒரு இடத்துல சந்தோஷமா வாழ்வா. அப்படி இல்லை எனக்கு காதல் தான் உசுரு ம**ன்னு சொன்னா அப்புறம் நான் என்ன பண்ணினாலும் அந்த பழி பாவம் உனக்கு தான் வரும். ஒரு குடும்பத்தையே உன் பாழா போன காதல் கொல்லணுமான்னு முடிவு பண்ணிக்கோ. நாளைக்கு காலைல அவ வீட்டுக்கு உன்னைக் கூட்டிட்டு போவேன். அங்க வந்து என்ன சொன்னா அவளும் அவ குடும்பமும் உயிரோட இருக்குமோ அதை நீ சொல்லணும்”, என்றவர் அவனுடைய போனையும் எடுத்துக் கொண்டு அங்கிருந்து சென்று விட்டார். அப்படியே துவண்டு போய் அமர்ந்தான் அமர்.

 

சகுந்தலா வந்து பார்க்கும் போது அவன் துவண்டு போய் இருந்தான். முகத்தில் எந்த காயமும் இல்லாமல் போனாலும் அவன் உடலில் இருந்த காயத்துக்கு மருந்தைப் போட்டு விட்டாள். அவளுக்கும் மகன் மீது கோபமும் வருத்தமும் இருந்தாலும் அந்த நேரம் அதை காட்ட முடிய வில்லை.

 

ஆனாலும் ஒரு அன்னையாக மகனின் தவறி சுட்டிக் காட்டவும் மறக்க வில்லை. அமர் எதை எதையோ யோசித்தான். அவளை எங்கேயாவது கூட்டிச் சென்று விட வேண்டும் என்று கூட யோசித்தான். பாரின் செல்வது கூட அவன் மனதில் வந்தது. அதே நேரம் தருமரை மீறி எதுவும் சாத்தியம் இல்லை என்றும் தோன்றியது. சாணக்கியனின் காதலையே பிரித்து வைத்தவர் நிச்சயம் எந்த எல்லைக்கும் போவார் என்ற பயமும் இருந்தது.

 

இன்று நடந்த கூடலும் கூட அவன் மனக் கண்ணில் வந்து அவன் துயரத்தை அதிகப் படுத்தியது. தந்தை சொன்னது போல சொன்னால் நிச்சயம் ரதி அவனை காமுகனாகத்  தான் பார்ப்பாள் என்று அவனுக்கே தெரிந்தது.

 

“உன்னை தவறாக நினைத்தாலும் பரவாயில்லை. ஆனால் உன்னுடைய காதல் அவளையும் அவள் குடும்பத்தையும் உயிரோட விடாது என்னும் போது அந்த காதல் எதற்கு? உன் காதல் அவளை வாழ வைக்க வேண்டுமே தவிர சாகடிக்க கூடாது. எங்க இருந்தாலும் அவளும் அவ குடும்பமும் சந்தோஷமா இருக்கணும். அதுக்கு நீ அவளை விட்டு விலகுறது தான் நல்லது”, என்று அவன் மனசாட்சி அவனை எச்சரிக்க அவன் கண்கள் கலங்கியது. அவன் காதலைப் போலவே கண்ணீரும் வீணாக தான் சென்றது.

 

சாணக்கியன் வேறு இரவு மனைவியுடன் அவனது மாமியார் வீட்டுக்குச் சென்று விட்டதால் இங்கே நடந்தது அவனுக்கு தெரிய வில்லை. அவன் இங்கே இருந்தாலும் தந்தையை தாண்டி தம்பிக்காக ஏதாவது செய்திருப்பானா என்பது சந்தேகமே.

 

மகனை மிரட்டி விட்டு வந்த தருமர் இரவு ஏழு மணிக்கு எல்லாம் ரதியின் வீட்டுக் கதவை தட்டிக் கொண்டிருந்தார்.  இரவு உணவை முடித்து விட்டு தாமோதரன் மற்றும் மஞ்சு இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். திவ்யா எதையோ படித்துக் கொண்டிருக்க ரதியோ அவனது மெசேஜ் வருமா அவனுக்கு கால் பண்ணலாமா என்ற யோசனையில் இருந்தாள். ஏனோ இன்று நடந்த நிகழ்வில் குற்ற உணர்வை மீறி சிறிது உணர்ச்சி பெருக்குடன் அந்த நிகழ்வை எண்ணிப் பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு அவன் நினைவு அதிகம் வந்தது.

 

அவசரத்தில் நடந்திருந்தாலும் அதை இப்போது எண்ணிப் பார்த்தவளுக்கு ஏதோ ஒரு தித்திப்பு. ஒவ்வொரு நிகழ்வையும் வரிசைப் படுத்தி யோசித்துப் பார்த்து சிரித்துக் கொண்டாள்

 

அவன் தொடுகையும் அவன் முகத்தில் வந்து போன உணர்வுகளையும் இப்போது எண்ணிப் பார்த்தவளுக்கு அவன் கைக்குள் அடங்க வேண்டும் என்று பேராசை எழுந்தது.

 

கதவு தட்டப் பட்டதும் தாமோதரன் குழப்பத்துடன் சென்று கதவை திறக்க தருமரை அங்கே எதிர் பார்க்க வில்லை. அடிக்கடி நியூஸில் பார்ப்பதால் குழப்பத்துடன் “நீங்களா? வாங்க உக்காருங்க”, என்று வரவேற்றார்.

 

“யாருங்க?”, என்ற படி வந்த மஞ்சுவுக்கும் திகைப்பு தான். இருவரும் திகைத்து இருக்கும் போதே தருமர் “எங்க உங்க ரெண்டு பொண்ணுங்க? கொஞ்சம் கூப்பிடுங்க பேசுவோம்”, என்று சொல்ல அவர் சொன்ன பாவனையில் மஞ்சு இரண்டு மகள்களையும் அழைத்தாள்.

 

குழப்பத்துடன் வந்தவர்கள் அவரைக் கண்டு திகைத்து நின்றார்கள். ரதிக்கோ ஏதோ தவறாக நடக்கப் போகிறது என்று அப்படி ஒரு பயம்.

 

“அப்பப்பா பொண்ணுங்க ரெண்டும் அப்படி ஒரு அழகு. அதை வச்சு தான் சம்பாதிக்க பாக்குறீங்க போல? பணக்கார பசங்களை மயக்கி இவங்க வலைல விழ வச்சு தான் சொந்த வீடு எல்லாம் வாங்குனீங்களா?”, என்று ஆரம்பித்தவர் அடுத்து பேசிய பேச்சுகள் எல்லாம் காதில் கூட கேட்க முடியாதவை. தருமர் திவ்யா காதல் விஷயம் பற்றி எதுவும் பேச வில்லை. திவ்யா மற்றும் சாணக்கியன் இடையே என்ன நடந்தது என்று தெரியாமல் அதை கிளற விரும்ப வில்லை. அவர் பேச்சு முழுக்க ரதியைப் பற்றி மட்டுமே. அவ்வளவு தரம் தாழ்த்தி அவளைப் பேசினார். இன்று ரூம் எடுத்து அவனுடன் தங்கி இருந்தது வரை சொல்லி விட பெற்றவர்களுக்கு அவ்வளவு அதிர்ச்சி. ரதி அமைதியாக கண்ணீர் விட திவ்யா அவள் கரத்தை ஆறுதலாக பற்றிக் கொண்டாள்.

 

பெற்று பேர் வைத்து அருமை பெருமையாக வளர்த்த மகளை எந்த தாய் தகப்பனும் கேட்க கூடாத வார்த்தைகளால் தருமர் அவளைப் பேச தாமோதரனுக்கோ அவ்வளவு கோபம் வந்தது.

 

ஆனால் தருமரை அடிக்கும் அளவுக்கு உடல் பலமும் ஆள் பலமும் இல்லாதவர் ஆயிற்றே. அதுவும் தலை குனிந்து நிற்கும் பெண் அவர் சொல்வது அனைத்தும் உண்மை தான் என்று சொல்லாமல் சொல்லிக் கொண்டிருந்தாள்.

 

பணம் வாங்கி விட்டு அனைத்து ஆண்களுடன் செல்லும் பெண் தான் ரதி என்பது போல அவர் பேச்சு இருக்க பெற்றவர்கள் கண்ணீர் வடித்தார்கள். மஞ்சுவுக்கோ ரதியின் மேல் அவ்வளவு கோபம் வந்தது.

 

“இங்க பாருங்க, உங்களை மாதிரி லோ கிளாஸ் ஆளுங்க நாங்க இல்லை. எங்களுக்குன்னு ஒரு கௌரவம் இருக்கு. என் பையன் நான் சொன்னா கேட்பான். ஆனா உங்க பொண்ணு.. சந்தேகம் தான். என் மகன் இல்லைன்னா கூட வேற ஆளைத் தேடி போயிருவா. நான் நாளைக்கு என் மகன் கூட வருவேன். அவனே இவளை வேண்டாம்னு சொல்லுவான். உங்க மகளும்  இனி என் மகனைப் பாக்க மாட்டேன் அவன் கிட்ட பேச மாட்டேன்னு சொல்லணும். இப்பவே கூட சொல்ல வச்சிருவேன். ஹோட்டல் பீச்ன்னு அலைஞ்சுட்டு வந்திருக்கா. அதனால ரெஸ்ட் எடுக்கட்டும். நாளைக்கு வரேன். இந்த பிரச்சனை முடியனும். அதெல்லாம் இல்லை, காதல் கத்தரிக்காய்ன்னு சொல்லிட்டு திரிஞ்சா பெத்தவங்க நீங்களே பொண்ணுங்களை விபச்சாரத்துக்கு அனுப்பி வைக்கிறீங்கன்னு பேப்பர்ல நியூஸ் வந்து குடும்பம் சந்தி சிரிச்சிரும். அப்புறம் எல்லாரும் தூக்குல தான் தொங்கணும். நல்லா யோசிங்க”, என்று சொல்லி விட்டுச் சென்றார்.

 

பெற்றவர்கள் தொய்ந்து அமர்ந்தார்கள். அவர்களால் ரதி இப்படி செய்வாள் என்பதை நம்பவே முடியவில்லை. திவ்யா செய்தால் கூட இவ்வளவு அதிர்ச்சி இருக்காதோ என்னவோ?

 

ஒரு ஆணுடன் மகாபலிபுரம் செல்லும் அளவுக்கு ரதிக்கு தைரியமா என்று அவ்வளவு பெரிய மனப் போராட்டம் அவர்களுக்கு. இருவருக்கும் அடுத்து என்ன செய்ய என்று தெரிய வில்லை.

 

அனைவரும் அழுது கொண்டிருக்க திவ்யா தான் “அம்மா அவர் சொல்ற மாதிரி இல்லை மா.  அக்காவும் அமர் மச்சானும் லவ் பண்ணுறாங்க. தப்பா நினைக்காதீங்க”, என்று சொல்ல அடுத்த நொடி எழுந்த மஞ்சு அவளை நான்கு அடி வைக்க “அம்மா அவளை அடிக்காதீங்க. அவ ஒண்ணும் செய்யலை. நான் தான் தப்பு செஞ்சேன்”, என்று இடையில் அழுத படி சொன்னாள் ரதி.

 

கண்ணில் பட்ட விளக்கமாரை எடுத்த மஞ்சு அடுத்து ரதியை விளாசி எடுக்க திவ்யா எவ்வளவு தடுத்தும் அது முடியாமல் போனது. அவளுக்கும் நாலு விழுந்தது. தாமோதரன் கண்களை இறுக மூடி அமர்ந்திருந்தார்.

 

அவர்களை அடித்து முடித்து தளர்ந்து போய் அமர்ந்தாள் மஞ்சு. அவள் கண்கள் கண்ணீரை பொழிந்தது. அனைவரும் அழுது கொண்டே இருந்தார்கள். திவ்யாவை விட ரதிக்கு தான் கை கால்களில் மஞ்சு அடித்து சிராய்ப்பு அதிகமாக இருந்தது.

 

தொடரும்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!