Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

88. வித்யா வெங்கடேஷ் - நிழலாடும் நின் நினைவில்

நிழலாடும் நின் நினவில் – 07.01

ஓம் ஸ்ரீ சாய்ராம்

ரோலர் கோஸ்டர் பயணமாக அரங்கேறிய தங்கள் முதல் சந்திப்பைப் பற்றி ரம்யா சொல்ல அறிந்துகொண்டதில் பெரும் புத்துணர்ச்சி பெற்றிருந்தான் ஷ்ரவன். அதில் அவர்களுக்குள் நிலவிய பனிப்போரும் இலகுவாய் கரைந்திருந்தது. கடமைக்கென்று உறவாடியவர்கள் சகஜாமாய் பேசிப்பழகினர்.

அனுதினமும் காலையில் தெய்வ வழிபாடுகள், மதியத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் கண்டுகளித்தல், மாலையில் நடைப்பயிற்சி, எனத் தன்னுடன் சிரித்த முகமாகச் செலவழித்த மனையாளின் அன்பில் மகிழவே செய்தான் ஷ்ரவன்.

கணவன் என்ற உரிமை எடுத்துக்கொள்ளாமல் கண்ணியமாய் நடந்துகொண்ட ஷ்ரவனின் குணத்தில் பெண்ணவளும் இயல்பாய்ப் பழகிவந்தாள்.



Advertisement

அன்றுமாலை வழக்கம்போல நடைப்பயிற்சி முடித்துக்கொண்டு வீடு திரும்பிய ஜோடிகளை, வாசலிலேயே மடக்கிய திலகா, “உங்களுக்காகத் தான் காத்துட்டு இருந்தேன். உத்ராக்கு பெண் குழந்தை பிறந்திருக்கா. தருண் உன்னை வீடியோ காலில் கூப்பிடச்சொன்னான் ரம்யா,” முகமெல்லாம் புன்னகையாக அறிவித்தார்.

மின்னல் வேகத்தில் உள்ளே விரைந்தோடிய ரம்யா மடிக்கணியை உயிர்ப்பித்தாள். திலகா, தாமோதரன், ஷ்ர்வன் மூவரும் அவளைச் சூழ்ந்துகொண்டனர்.

தொட்டிலில் உடம்பை வளைத்து முறித்து சோம்பலிட்டு, சொப்பு வாயைக் குவித்து கொட்டாவி விடும் குழந்தையின் தரிசனத்தில் அங்கமெல்லாம் பூரித்தது அவளுக்கு.

Advertisement

“அச்சு அசல் உன் சாயல்டா,” என்றவளின் கண்கள் பனித்தன.

Advertisement

அனைவரும் குழந்தையின் பளிங்கு முகத்தை ஆசை தீர கண்டுகளித்துக் கொண்டிருக்க, ரம்யாவின் விழிகள் உத்ராவைத் தேடியது.

பிரசவமான சோர்வில் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிடுக்கிறாள் என கேமேராவை அவள் பக்கம் திருப்பி, மனையாளின் வாடிய முகத்தினை வருடியபடி அவளை எழுப்ப முயன்றான் தருண்.

“தொந்தரவு செய்யாதேடா. அப்புறம் பேசுறேன்,” தடுத்தாள் ரம்யா.

Advertisement

“எல்லாரும் எப்ப கிளம்பி வரீங்கன்னு சொல்லுங்க,” ஆவலுடன் வினவினான்.

“இன்னைக்குத் தான் ரெவ்யூ போயிட்டு வந்தோம் தருண். இவருக்கு கழுத்து எலும்பு முறிவு முழுசா சரியாகலடா. ரெண்டு நாளைக்கு ஒருமுறை பிசியோதெரபி பண்ணனுமாம்,” ரம்யா விளக்க,

“நான் பாத்துக்கிறேன் ரம்யா. நீயும் திலகாவும் போயிட்டு வாங்க,” என்றார் தாமோதரன்.

“இல்லப்பா. அவருக்கு வீட்டுச் சாப்பாடு மட்டும்தான் தரணும். நானே பாத்துக்கிறேன். நீங்களும் அம்மாவும் போயிட்டு வாங்க,” மறுத்தாள் ரம்யா.

தெரிந்தவர் ஒருவர் மூலமாக உணவு வரவைத்துக்கொள்கிறேன் அல்லது தானே எளிமையான சமையல் செய்து சமாளித்துக்கொள்கிறேன் என தாமோதரன் மறுவழிகளை அடுக்கியபோதும் தீர்க்கமாக மறுத்தாள் ரம்யா.

“அவ என்னைக்கு ஷ்ரவன விட்டு வெளியூருக்குப் போயிருக்காங்க. அவங்கள ஃப்ரீயா விடுங்க. நாம முதல்ல போயிட்டு வருவோம்,” இடைபுகுந்த திலகா, மாமனார் மருமகள் வாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

மனையாள் பொழியும் நேசத்தின் மற்றொரு பாகத்தைக் கண்டுகொண்டதில் பெருமிதம் கொண்டான் ஷ்ரவன்.

திலகாவும் தாமோதரனும் அங்கிருந்து நகர, “எவ்வளவுக்கு எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, நாங்களும் குழந்தையைப் பார்க்க வரோம்டா,” ஷ்ரவன் தன் பங்குக்கு தம்பியிடம் பொறுப்பாகப் பேச,

“வழக்கமா நீதான் எல்லாரையும் கழட்டிவிடுவ. இந்தமுறை உன் பொண்டாட்டியா???” அண்ணனை வம்பிழுத்தவன்,

ரம்யாவிடம், “உங்க ஹனிமூன் ரீக்ரியேட் பண்ண ரெடியாகிட்ட போல. நடத்துங்க! நடத்துங்க!” எனக் கிளுகிளுக்க, தூக்கிவாரிப்போட்டது அவளுக்கு.

“ஷூ! போதும் நிறுத்துடா!” வெட்கத்தில் கன்னங்கள் சிவக்க, நண்பனை செல்லமாக விரட்டினாள் ரம்யா.


திலாகவும் தாமோதரனும் மறுநாளே திருச்சிக்குப் புறப்பட, தன் மண்டையை வண்டாய் குடைந்த கேள்வியை இறக்கிவைத்தான் ஷ்ரவன்.

“என் நிலைமை தெரிஞ்சுமா ரம்யா நாம ஹனிமூன் போயிட்டு வர ஏற்பாடு செஞ்சேன்?”

தடைகள் நீங்கி பேரதிசயம் நடந்தது எனச் சொல்லத் துடிதுடித்த உதடுகளைக் கடித்துக்கொண்டவள், “ஹனிமூன் கூட்டிட்டுப் போகுறேன்னு ஏமாத்திட்டீங்க,” துக்கத்தை மறைத்துக் கண்சிமிட்டினாள்.

விவகாரமாக ஏதோ செய்திருப்பது புரிய “என்ன செஞ்சேன்னு தெரிஞ்சுக்க ஆசையா இருக்கு ரம்யா. உனக்கு விருப்பமிருந்தா சொல்லு. சங்கடமா இருந்தால் வேண்டாம்,” முடிவை அவளிடமே விட்டான்.

“இந்த கண்ணியம் தான் ஷ்ரவன் உங்ககிட்ட எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு,” தலைகோதியவள், “இன்னைக்கு நூன் ஷோக்கு நம்ம படத்தை ஓட்டிடலாம்,” எனப் புன்னகைத்தாள்.

நற்பகல் சூரியனை உள்ளே வரவிடாமல் வசிப்பறையின் திரைசீலைகளை அடைத்து குளிரூட்டியை உயிர்ப்பித்த ரம்யா,

“கதை கேட்க ரெடியா?” கண்சிமிட்டி, தன்னவன் அருகில் அமர்ந்துகொண்டாள்.

“ம்ஹூம்! கதையைக் கண்மூடி உள்வாங்க ரெடி,” என அவன் சோஃபாவில் சௌகரியமாகச் சயனிக்க,

“பாதியிலேயே தூங்கினீங்கனா அவ்வளவுதான் சொல்லிட்டேன்,” அவன் பழக்கத்தை இடித்துக்காட்டி, பொய்கோபத்தில் முகத்தைச் சுருக்கினாள்.

“அதெல்லாம் தூங்கமாட்டேன். நீ வேணும்னா நடுநடுவுல கேள்வி கேளு,” கண்களை இறுக்க மூடிக்கொண்டான்.

அவன் பாவனைகளை அகம் மகிழ்ந்து ரசித்து சோஃபாவில் கண்மூடிச் சாய்ந்துகொண்டவளின் நினைவுகளும் அந்த நாளிற்குச் சென்றது.

Click here for Episode 07.02 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!