Skip to content
Post Views: 351
அத்தியாயம் 10
கிருபாகரன் கோபமாக கண்கள் சிவக்க, ஃபோனை உடைத்ததில், நித்தியா அதிர்ந்து பயந்து எல்லாம் நிற்கவில்லை. சாவகாசமாக இவ்வளவுதானா என்பது போல் நின்றாள்.
Advertisement
“அடிப்பாவி! எப்பவுமே அவளால உன் சந்தோஷம் போச்சுன்னு சொல்லுவ ஆனா அவள ஒழிச்சு கட்ட தான் திட்டம் போட்டு அந்த நொண்டிய தாலி கட்ட வெச்சியா?…”என்று கோபத்தில் கர்ஜிக்க
“எது ஒழிச்சு கட்டவா!.. உங்க தங்கச்சிய நல்லபடியா வாழ வைக்கத்தான் பரணி அண்ணாவோட கால தட்டி விட்டு, தாலிய அவ கழுத்துல விழ வெச்சேன்.. அத புரிஞ்சுகிட்டு அவளுக்கு வாழவும் தெரியல, உங்களுக்கு தங்கச்சிய வாழ வைக்கவும் தெரியல…”
Advertisement
Advertisement
“ஓஹோ! நல்லா வாழ வைக்கத்தான் முடவனா இருந்தா என்ன குருடனா இருந்தா என்னன்னு அந்த ஒன்னுத்துக்கும் உதவாத நொண்டிக்கு ஜோடி சேர்த்து விட்டாயா?…” என்று ஆக்ரோஷமாக கேட்க
“போதும் நிறுத்துறீங்களா! ஒரு பேச்சுக்கு சொன்னேன் நீங்க அதையே புடிச்சிகிட்டு அண்ணன நொண்டி நொண்டினு சொல்லாதீங்க.. சரி அப்படியே இருந்தாலும் என்ன பொம்பள பொறுக்கிக்கோ, குடிகாரனுக்கோ இல்ல உங்கள போல பொண்டாட்டிய புரிஞ்சுக்க தெரியாதவனுக்கோ கட்டி வைக்கலையே.. பரணி அண்ணா குணத்துல தங்கம்.. மனசளவுல உசந்தவர் தான்.. உங்க கௌரவம் என்ற கண்ணாடிய கழட்டிட்டு பாருங்க.. அவர் உங்க தங்கச்சிக்கு கிடைச்ச வரம்னு புரியும்…” என்று நித்தியா சொல்ல
Advertisement
“எப்படியாவது போய் தொலையட்டும்னு அவள அந்த பரதேசிக்கு கட்டி வச்சிட்டு நியாயப்படுத்தறியோ!.. அவளுக்கு எந்த வகையிலடி அவன் பொருத்தம்…” என்று ஆதங்கமாக கேட்க
“இங்க பாருங்க அண்ணன் உங்கள விட பெரியவர் மரியாதையா பேசுங்க.. எப்படியும் அவர்தான் உங்க தங்கச்சி புருஷன்.. அப்புறம் என்ன பொருத்தமா அவ்வளவு அக்கறை இருக்குறவர் உங்க தங்கச்சிக்கு பொருத்தமான மாப்பிளைய தேடி அவளுக்கு கல்யாணம் பண்ணி வெச்சிருக்கணும்.. அத விட்டுட்டு என் தங்கச்சிக்காக தியாகம் பண்றேன்னு அடுத்தவங்க தியாகி பேட்ஜ்ச திருடி நெஞ்சில குத்திக்கிட்டு திரிய வேண்டியது…” என்று திட்ட
“என்னது!…” என்று அவன் புரியாமல் கேட்க
“என்னதா.. நீங்க நெஞ்சுல குத்திட்டு திரிகிற தியாகி பேட்ஜ் என்னோடது.. என் சந்தோஷத்த பிடுங்கி எடுத்துட்டு, என்னவோ நீங்க சந்தோஷமா இல்லாத மாதிரி போலியான தியாகி பேட்ஜ்ச குத்திக்கிட்டு சுத்துறீங்க.. அவ்வளவு உத்தமர்னா முதல்ல கல்யாணமே கட்டி இருக்க கூடாது.. தங்கச்சிக்கு துணையா சம்போ சிவ சம்போன்னு போயிருக்கணும்.. கட்டில் சுகத்த தேடி இருக்க கூடாது…” என்று சொல்ல
சற்று திணறித்தான் போனான் கிருபாகரன். “ஏய்! அது நம்ம விஷயம் அதுல ஏன் துர்காவ இழுக்குற…”
“இதுவும் நம்ம விஷயம் தான் அதுக்கு காரணமே உங்க தொங்கச்சி கல்யாணம் பண்ணாம இருக்குறது தானே…”
“அதான் நானும் சொல்றேன்.. அவ கல்யாணம் பண்ண விரும்பல.. அவள் சம்மதம் சொல்லி இருந்தா ராஜா மாதிரி மாப்பிள்ள பாத்து கல்யாணம் பண்ணி வச்சிருப்பேன்…”
“ஆஹா.. அதேதான் நானும் சொல்றேன், அவள் விருப்பம் வேற, நம்ம வாழ்க்கை வேறன்னு.. புரிஞ்சுக்காம அவள் விருப்பத்த மட்டும் பாத்தீங்க.. என்னோட விருப்பம் என்ன.. என்னோட மனசுல என்ன ஆசை இருக்கு.. அது எதுவும் உங்களுக்கு முக்கியமா படல…” என்றவள் குரல் இப்போது பிசிரு தட்டியது. அவளின் வலி அவளுக்கு தானே தெரியும்.
“சரிடி உன் சந்தோஷத்துக்காக விருப்பம் இல்லாதவள இப்படியா கல்யாண வாழ்க்கைல தள்ளிவிடுவ…” என்று கிருபாகரன் கேட்க
“புருஷன்னு பாக்கிறேன் வாயில எனக்கு வேற ஏதாவது வந்துரும்.. அவ உங்க கிட்ட சொல்றதெல்லாம் உண்மைனு நினைக்கிறீங்களா? ஆடிக்கொருக்க, அமாவாசைக்கு ஒருக்கா தான் உங்ககிட்டயே வந்து பேசுறா.. இதுல அவ மனசுல இருக்குறது என்னன்னு உங்களுக்கு புரிஞ்சிட போகுதா?.. அவ என்னதான் என்கிட்ட இதுவரைக்கும் வாய திறந்து மனசு விட்டு பேசலனாலும்.. ஒரு பொண்ணோட தவிப்பு, விருப்பம் என்ன என்றது தெரியாத அளவுக்கு நான் ஒன்னும் கோட்டு சிறுக்கி இல்ல..
…உங்க தங்கச்சிக்கு பயம்.. அந்த பயத்தை போக வச்சு அவளுக்கு ஒரு வாழ்க்கைய அமைச்சு கொடுக்கணும்னு இந்த வீட்டுல இருக்கிற யாருக்குமே தோணல.. அவள் வாழக்கூடாதுனு கெட்ட எண்ணம் எனக்கு கிடையாது..
…சத்தியமா சொல்றேன் இப்படி ஒரு வாழ்க்கை இந்த வீட்டுல வாழ்றதுக்கு நானா இருந்திருந்தா அடுத்த நிமிஷம் புருஷன் கைய புடிச்சிட்டு போயிருப்பேன்.. உங்களுக்கும் வாழ தெரியல உங்க தங்கச்சிக்கும் வாழ தெரியல.. கடைசி வரைக்கும் அடுத்தவ வாழ்க்கைக்கு மூட்டு கட்டையா இருந்துட்டு மானங்கெட்ட சோறு தின்னணும்னு உங்க தங்கச்சி விரும்புனா அத யாரால மாத்த முடியும்…” என்று நித்த்யா ஆதங்கமாக பேச
கிருபாகரனுக்கு ஏதோ புரிவது போல் இருந்தது. இருந்தாலும் மனைவி செய்த செயலை ஏற்றுக் கொள்ள முடியாமல் “அது சரி நித்தி.. இருந்தாலும் பரணியோட எப்படி?…” என்று கேட்க
ஆயாசமாக பெருமூச்சு இழுத்து விட்டவள் “என்னங்க உங்களுக்கு பிரச்சனை.. எதுக்கு இப்படி இந்த கௌரவம், பணம், வசதி இதெல்லாம் தூக்கி பாக்குறிங்க எனக்கு புரியல.. நீங்க தேடுன அந்த வசதியான மாப்பிள்ளைங்க துர்க்காவ புரிஞ்சுகிட்டு ஏத்துக்க தயாரா இருந்தாங்களா?…” என்று அவள் கேட்க
“பரணி கூட தயாரா இல்லையே.. துர்க்காவ ஏத்துக்க விருப்பம் இருந்திருந்தா ஒத்தடியா நின்னு அவள கூட்டிட்டு போகணும்னு பேசி இருப்பான்ல.. அவனும் தானே வேணான்னு விலகிப் போயிட்டான்…” என்று கிருபாகரன் சொல்ல
“அவர் எத்தன தடவை துர்க்கா முகத்த பாத்தார்னு எனக்கு தான் தெரியும்.. ஒரு வார்த்த உங்க தங்கச்சி சம்மதம்னு சொல்லி இருந்தா கையோட கூட்டிட்டு போயிருப்பார்…” என்று நித்தியா சொல்ல
கிருபாகரன் முகத்தில் இன்னுமே தெளிவில்லை. “அடுத்து என்ன? இதுவரைக்கும் நீங்க தையா தக்கானு குதிச்ச அண்ணனோட குறையா!.. என் கண்ணுக்கு எதுவுமே தெரியல.. சத்தியமா துர்க்காவ துச்சமா நினைச்சு அவளுக்கு இப்படிபட்டவர் தான் சரின்னு பரணி அண்ணாவ இதுல நான் இழுத்து விடல..
…அவரோட மனச மட்டும் தான் பாத்தேன்.. ஒரு பொண்ண புரிஞ்சுகிட்டு சந்தோஷமா வாழ வைக்க கூடியவரா இருக்கானும்னு மட்டும் தான் பாத்தேன்.. அவரோட குறை உங்க கண்ணுக்கு தெரியுதுன்னா உங்க மனசு சுத்தமில்லன்னு தான் அர்த்தம்..
…எனக்கு என்னமோ நீங்க நினைக்கிற மாதிரி துர்க்காவும் நினைச்சதால தான் அவ்வளவு ஈஸியா அந்த தாலிய கழட்ட சம்மதம் சொல்லிட்டா போல.. உங்க ரத்தம் தானே அதான் கௌரவம், வசதி, வாய்ப்பு பொருத்தம் எல்லாமே மேடம் பாக்குறாங்க போல.. அதான் எல்லா பொண்ணுங்களும் கௌரவமா நினைக்குற தாலி அவ கண்ணுக்கு தெரியல…” என்று சொன்ன நித்தியா அடி கண்ணால் கதவின் கீழ் பார்த்துவிட்டு, சென்று கட்டிலில் படுத்துக்கொண்டாள்.
அண்ணனும் தங்கையும் உள்ளேயும் வெளியையும் பேய் அறைந்தால் போல் நின்றிருந்தனர். அதிலும் துர்க்காவை சொல்லவே வேண்டாம். அவளா கௌரவம், பொருத்தம், வசதி இது எல்லாம் பார்க்க போகின்றாள்.
கணவன் கையைப் பிடித்துக் கொண்டு செல்ல அவளுக்கும் ஆசையாக தான் இருந்தது. ஆனால் அந்த தாலி அவன் விருப்பத்துடன் அவள் கழுத்தில் ஏறவில்லையே, இரண்டாவது அந்த வாழ்க்கைக்கு அவள் தகுதி இல்லை என்பதே அவள் ஆழ் மனதின் எண்ணம்.
காலையில் தனக்கு நடந்த அந்த அழகிய நிகழ்வை மனதில் ஒட்டியபடியே அறைக்குள் வந்து படுத்துக் கொண்டாள்.
கிருபாகரனுக்கு எந்த தெளிவான முடிவுக்கும் வர முடியவில்லை. யோசனைகளோடு கட்டிலில் வந்து படுத்திருந்தவன் எப்போது தூங்கினான் என்று அவனுக்கே தெரியவில்லை.
துர்க்காவுக்கோ பரணியின் நினைப்புதான். அவன் மட்டும் ஒரு பார்வை என்னோடு வந்துவிடு என்று பார்த்திருந்தால் அவன் கூடவே சென்றிருப்பாள்.
அதற்கு வேறு காரணங்கள் நிறைய இருந்தாலும் அதி முக்கிய காரணம் அவளுக்கு அவனைத் தெரியும்… நன்கு தெரியும்.
அப்படித்தான் நினைத்திருக்கின்றாள், ஆனால் அவன் கண்களில் ஏக்கத்தை தேக்கி அவளைப் பார்த்ததை இவள்தான் பார்க்கவில்லையே.
இவள் எந்த அளவுக்கு அவனை தெரியும் என்று நினைத்திருக்கின்றாளோ அதைவிட பல மடங்கு அவன் மனதில் அவள் எந்த இடத்தில் இருக்கின்றாள் என்பது அவளுக்கு தெரிய வாய்ப்பில்லை.
ஏனென்றால் அதை வாய் திறந்து அவன் இதுவரைக்கும் சொன்னதில்லை.
பரணியும் தன் வீட்டில் விட்டத்தை பார்த்தபடி படுத்திருந்தான். அவனுக்கும் துர்க்காவை பற்றிய நினைவுகள் தான்.
சிறுவயதில் பள்ளி படிக்கும் பருவத்தில் அவளை பார்த்தது. நண்பனின் தங்கையாக நன்றாகவே தெரியும். அதன் பின் அவன் மனதில் ஏற்பட்ட சில பல மாற்றங்கள், அவன் வாழ்வில் ஏற்பட்ட பெரிய மாற்றங்கள் என்று அனைத்தும் அவனை எங்கெங்கோ அலைக் கழித்து இன்று அவனே எதிர்பார்க்காத வண்ணம் அவனின் மனைவி அவள் இப்போது.
அஞ்சனாவும் நித்தியாவின் ஃபோன் திடீரென கட்டாகவும் மீண்டும் அழைத்து பார்த்தவள், அழைப்பு செல்லவில்லை என்றதும் சரி நாளை என்னவென்று பார்த்துக் கொள்ளலாம் என்று படுத்திருந்தாள். அவளுக்குமே துர்க்காவின் நினைவு தான்.
அதே போன்று தனது அறையில் படுத்து இருந்த பிரபாகரனுக்கும் அஞ்சனா துர்க்காவை பற்றிய சிந்தனை தான். அஞ்சனாவிற்கு துர்க்கா எந்த அளவுக்கு முக்கியமானவள் என்பது தெரியும்.
அதனாலேயே இன்று நடந்த எதிர்பாராத திருமணத்திற்கும் அவளுக்கும் சம்பந்தம் இருக்கும் என்று நன்கு புரிந்தது. ஆனால் பரணியை ஏன் இதில் இழுத்து விட்டாள் என்பது புரியவில்லை.
அவனது நினைவுகளும் 14 வருடங்கள் பின்னோக்கி சென்றது. அப்போது துர்க்காவிற்கு 14 வயது. அஞ்சனா பரணியின் வீட்டில் தங்கி தான் அந்த ஊரில் படித்துக் கொண்டிருந்தாள்.
எங்கே எப்படி ஆரம்பித்தது என்று தெரியாமல் துர்க்காவும் அஞ்சனாவும் மிகவும் நெருங்கிய தோழிகளாக பழகிக் கொண்டிருந்தனர்.
எப்பவும் துர்க்காவை பாடசாலையில் கொண்டு விடுவது பிரபாகரன் தான். அதை போன்று அஞ்சனாவை பாடசாலையில் கொண்டு விடுவதும் பரணி தான். இவர்கள் எப்படி தோழிகளோ அதேபோன்று பரணியும் பிரபாகரனும் பாடசாலையிலிருந்து இப்போது காலேஜ் படிக்கும் வரை மிக மிக நெருக்கமான நண்பர்கள்.
இருவரும் ஒரே காலேஜில் இறுதி ஆண்டில் இருந்தனர்.
தன் தங்கையின் பாதுகாப்பிற்காக வரும் பரணிக்கு 14 வயதில் கொஞ்சமாக கொழு கொழு என்று இருக்கும் துர்காவை மிகவும் பிடிக்கும்.
அதிலும் அவனின் ஒரு கை மொத்தத்திற்கு இருக்கும் அவள் பின்னல் ஜடையைப் பார்த்து பிரமிப்பு தான்.
ஒரே ஒரு முறை விரித்துவிட்டு பார்த்து இருக்கின்றான், முழங்காலை தாண்டி இருந்தது அவள் கார் கூந்தல் நதி. அப்போது அவளுக்கு அவன் வைத்த பெயர் தான் சாரை பாம்பு.
அது அவளின் சடைக்காக வைக்க, அவளுக்கோ அந்தப் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டாலே பொசு பொசு வென ஆத்திரம் தான் வரும்.
“இங்க பாருங்க!.. இன்னொரு வாட்டி சார பாம்புனு சொன்னீங்க அண்ணன் பிரண்டுன்னு பார்க்க மாட்டேன்.. கல்ல கொண்டு மண்டைய உடைச்சிடுவேன்…” என்று துர்க்கா கண்களை உருட்டி மிரட்ட
பிரபாகரனோ “ஏன்டா அவள சீன்ற.. அடுத்தவங்க கிட்ட இருந்து பாதுகாக்க நான் கூட வந்தா நீயே என் தங்கச்சி கிட்ட வம்பு பண்ற…” என்று தோளில் அடிக்க
“மத்தவங்க வம்பு பண்ணக்கூடாது..ஆனா நான் பண்ணலாம்.. நீ வேணும்னா பதிலுக்கு என் தங்கச்சிய கிண்டல் பண்ணு…” என்று சொல்ல
துர்க்காவின் அருகில் குட்டி கண்களை உருட்டி, குறுகுறுவென இவனை பார்க்கும் அஞ்சனாவை பார்த்தான்.
அவளைப் பார்த்தால் ஏனோ வம்பு பண்ண என்ன, ஏக வசனம் பேசக்கூட அவனுக்கு வராது, எனவே “நல்ல அண்ணன் டா நீ…” என்று நண்பனை செல்லமாக முறைத்தவன்
“துர்க்காம்மா நீ போடா.. அவன் இனிமேல் அப்படி கூப்பிட மாட்டான்…” என்று சொல்ல, பரணியை முறைத்துக் கொண்டே அஞ்சனாவுடன் பாடசாலை உள்ளே போக
பரணியோ “ஓய் சாரை பாம்பு!…” என்று சத்தமாக கூப்பிட, பிரபாகரன் அவன் வாயை பொத்தி அழைத்துக் கொண்டு சென்றான்.
error: Content is protected !!
அப்போ பரணிக்கும் துர்க்கா மேல விருப்பம் இருக்கு 👌😍. நித்தியா பேசுறது கோவம் வந்தாலும் அவ பேசுறதுல ஒரு நாயமும் இருக்கு.. என்ன சுயநலமாய் பேசுற.. அதான் பிடிக்கல.
ஒரு அண்ணனா துர்க்கா கிட்ட பொய் பேசணும் தோணல லா 2 பேருக்கும்..
அவளும் ஒரு கோழை 😡😡😡😡