Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

14. விர்சாலி - மீண்டும் கேட்குமா பூபாளம்

மீண்டும் கேட்குமா பூபாளம் 04

அத்தியாயம் 04

பச்சை கலர் சில்க் காட்டன் புடவையை பாந்தமாய் உடுத்தி, நீண்ட கூந்தலை பின்னி, நான்கு அடுக்கில் மல்லிகை வைத்து, நெற்றி வகுட்டில் ஒரு இன்ச் நீளத்திற்கு குங்குமம் வைத்து, மஞ்சள் முகத்தில் வில்லென நீண்ட புருவம் மத்தியில் வட்ட போட்டும், நீள்வழிகளுக்கு அஞ்சனம் தீட்டி மெருகேற்றி, குட்டியாக வளைந்த மூக்கில் சிவப்புக்கல் மூக்குத்தியும்,



Advertisement

கழுத்தில் தங்க நகைகள் இருந்தாலும் ஒரு விரல் மொத்தத்தில் கிடந்த அந்த தாலி சங்கிலி ஒய்யாரமாக அவள் மென்பஞ்சுத்தனங்களின் வீற்றிருக்க, தன் சிற்றிடையை வளைத்து குனிந்து கோயில் வாசலை தொட்டு வணங்கி தன் நெஞ்சிலும் நெற்றியிலும் ஒற்றிக் கொண்டவள், தன் பட்டு பாதங்களை எடுத்து வைத்து அம்மன் சன்னதி நோக்கி வந்தாள்.

வந்தவள் பார்வையில் விழுந்தான் அவன். கம்பீரமாக எப்போதும் குறையாத மிடுக்குடன் பிரபாகரனை பார்த்த அஞ்சனாவின் கால்கள் ஒரு நொடி நின்று, நடையை தொடர்ந்தது.

Advertisement

Advertisement

அம்மன் சன்னதி முன்பு நின்று எங்கோ வெறித்தவன் பார்வையில் அவள் அழகிய பிம்பம் விழ, அவன் கண்களில் ஒரு நொடி ஒளி வந்து மறைந்தது. அது என்ன உணர்வு என்று அவனுக்கும் அந்த அம்மனுக்கு மட்டும்தான் தெரியும்.

உடனே பார்வையை மாற்றி தன் மகளை பார்த்தபடி நின்று கொண்டான். அஞ்சனாவோ சொல்ல முடியாத துயரத்தை தொண்டையில் போட்டு விழுங்கிக் கொண்டவள், அம்மனை பார்த்தாள். வரும் போது ஏதேதோ நினைத்து வந்தவளுக்கு இப்போது எதுவும் வேண்ட தோன்றவில்லை.

Advertisement

“இந்த செல்லம்மா உங்க பொண்டாட்டி தான் நம்புங்க மாமா…” என்று இந்த அம்மனை சாட்சியாக வைத்து தானே கூறினாள். ஆனால் இன்று மாற்றான் மனைவியாக வந்து நிற்கின்றாள்.

செந்தனலில் அவனை தள்ளிவிட்டு ஏமாற்றி சென்றது அவள் தானே. இன்று அவள் நன்றாக இருக்கின்றாள். அவன் ஒற்றையாக தவிக்கின்றான்.

இதயம் கனக்க அம்மனை தரிசித்து விட்டு, அவனை நெருங்கினாள். இன்று அவனை சந்திப்பாள் என்று எதிர்பார்க்கவில்லை. இருந்தும் இந்த எட்டு வருடங்களில் அவனை தற்செயலாக கண்டால் கேட்கும் அதே வார்த்தையை கேட்க நினைத்தவள் “எப்படி இருக்கீங்க?…” என்று கேட்க

அவள் குரலும் வார்த்தையும் காதில் கேட்ட ஒரு மறு நொடி அவன் உடலில் ஒரு சிலிர்ப்பு. ஒரு வருடம் முடிந்துவிட்டது அவளை பார்த்து, அவள் குரலை கேட்டு.

இருந்தும் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டவன் உடல் விரைத்து நிமிர்ந்தது. மகளிடம் பார்வையை பதித்த படி “ம்ம் இருக்கேன்…” என்றான்.

அவளை திரும்பி பார்க்கவும் இல்லை, நீ எப்படி இருக்கின்றாய் என்று கேட்கவும் இல்லை. அஞ்சனாவும் குழந்தைகளுடன் குழந்தையாக விளையாடும் அதுரியை வாஞ்சையாக பார்த்தாள்.

திருமணமான இந்த எட்டு வருடங்களில் அவளுக்கு கிடைக்காத பொக்கிஷம். அவள் முன்னாள் காதலனின் குழந்தை. அள்ளி தூக்கி கொஞ்ச ஆசையாக இருந்தது அவன் அனுமதிக்க மாட்டான் என்று தெரியும். முன்பு ஒரு தடவை முயற்சி செய்து அவன் தடுத்தது நினைவு வந்தது.

“உங்களோட இந்த நிலைமைக்கு நானும் ஒரு வகையில காரணம் இல்ல.. என்ன மன்னிக்கவே மாட்டீங்களா?…” என்று குரல் அடைக்க அஞ்சனா கேட்க,

அவன் எதுவும் சொல்லாமல் விலகப் போகவும் “என் மன்னிப்ப ஏத்துக்கவே மாட்டீங்களா?…” என்று அழுது கொண்டே அவள் கேட்க

முன்னோக்கி வைத்த காலை மீண்டும் அதே இடத்தில் வைத்து, அவளை திரும்பி ஆழ்ந்து பார்த்தவன் “மன்னிப்ப ஏத்துக்க முடியாது.. மன்னிப்பு கேட்கிற ஆள ஏத்துக்கலாம்…” என்று சொல்ல

அவன் வார்த்தையை உள்வாங்கியவளின் அதிர்ச்சியில் உடைபெடுத்து உருகி ஓடிய கண்ணீரும் அவள் இமைகளில் தங்கிவிட, திகைத்துப் போய் அவனை பார்த்தாள்.

என்ன சொல்கின்றான் இன்னொருவன் மனைவி என்று தெரிந்தும் உன்னை ஏற்றுக்கொள்ள இப்போதும் தயாராக இருக்கின்றேன் என்று சொல்கின்றானா!. அவள் பிரபாகரனா இது! இல்லவே இல்லை காதலித்தபோது பெற்றவர் விருப்பம் தான் முக்கியம் என்னை விட்டு விடுங்கள் என்று கூறிய போது, உன் முடிவு தான் முக்கியம் என்று கண்ணியமாக விலகி நின்றவன் எங்கே போனான்.

உறைந்து நின்றவள் முன்பு சொடக்கு போட்டவன் “எனக்கு உன் குற்ற உணர்ச்சி பரிதாபம் இதெல்லாம் வேணாம்.. உன்னோட காதலும் பாசம் தான் வேணும்…” என்று அவன் மீண்டும் சொல்ல

“உங்களுக்கு என்ன ஆச்சு? எதுக்கு இப்படி தப்பு தப்பா பேசுறீங்க?.. எனக்கு கல்யாணமாச்சு அதுவும் உங்க உறவுலேயே எப்படி இப்படி கேட்கலாம்?.. இது.. இது நீங்க தானா மா…” மாமா என்று சொல்ல வந்தவள் தானக்குள்ளயே வைத்துக்கொள்ள.

“நான் தான்.. நானா ஒன்னு உன்ன தேடி வந்து கேட்கல.. என்ன விட்டுட்டு போனதுக்கு நீயா தேடி வந்து தான் மன்னிக்க சொல்லி கேட்ட.. எந்த தப்புக்கு மன்னிப்பு கேட்குறாயோ அந்த தப்ப சரி பண்ணிடு…” என்று பிரபாகரன் சொல்ல

“என்ன கஷ்டப்படுத்த உங்கள நீங்களே தாழ்த்திக்காதீங்க…” என்று கண்ணீர் நிறைந்த கண்களில் வலியை தேக்கி அஞ்சனா சொல்ல

“இதுல தாழ்ந்து போக என்ன இருக்கு.. கூடிய சீக்கிரம் என்ன தேடி வந்து நீயே சம்மதம் சொல்லுவ செல்லம்மா…” என்று எட்டு வருடங்கள் கழித்து அவளுக்கே அவளுக்கான செல்ல பெயரை கூறியவன்,

மகளின் புறம் திரும்பி “செல்லம்மா…!” என்று அழைக்க ஆதூரி அவனை நோக்கி ஓடி வர, மகளின் கையைப் பிடித்தவன் அஞ்சனாவை திரும்பி ஒரு அர்த பார்வை பார்த்து விட்டு முன்னேறி நடக்க.

அவன் தன்னை செல்லம்மா என்றதில் திகைத்து நின்றவள், அவன் மகளையும் செல்லம்மா என்றதில் உறைந்தே போனாள். மனநிறைவுடன் அம்மன் சன்னதி வந்தவள் இப்போது குழம்பிய குட்டையாக நின்று இருந்தாள்.

கோயில் மணி ஓசையில் உணர்வு தெளிந்தவளாக, கோயிலை விட்டு வெளியேறி நடை பயிறவளின் கால்கள் நூறடி தூரத்தில் இருந்த மல்லிகை கடைக்கு வந்து நின்றது.

(அம்மன் அங்காடி) என்ற பெயர் பலகையுடன் ஓரளவு பெரிய கடை தான். சொல்லப்போனால் அந்த ஊரிலேயே எல்லா பொருட்களும் தட்டுப்பாடு இன்றி கிடைக்கும் கடை அது தான்.

அங்கு கடைக்கு வந்திருந்த சிறுமியிடம் “மாமா சொல்லு.. சாக்லேட் தாரேன்…” என்று குறும்பு செய்து கொண்டிருந்தான் பரணி.

வயது 36, ஆறடி உயரம் இருக்கக்கூடும், உயரத்திற்கு ஏற்ப பரந்து விரிந்து இறுகிய திடகாத்திரமான மேனி, தெத்துப்பால் அழகன். ஆனால் அவனின் அடர்ந்த மீசை தாடிக்கு மத்தியில் பெரிதாக தெரிவதில்லை.

இப்போதும் சிரித்து பேசிக் கொண்டிருக்கும் அவனை புன்னகையுடன் பார்த்த அஞ்சனா

“ஒரு கல்யாணத்த பண்ணுனா அப்பானு கூப்பிடவே பிள்ளை வரும்.. அத விட்டுட்டு மாமானு கூப்பிட சொல்லி இவகிட்ட வம்பு பண்ணிட்டு இருக்கீங்களே ண்ணா…” என்று சொல்ல

அஞ்சனாவின் குரல் கேட்டு அவளை பார்த்தவன் “அட அஞ்சு வாடா! தனியாவா வந்த?…” என்று விரிந்த சிரிப்புடன் தங்கையை வரவேற்றவன், அந்த சிறுமியிடம் “சரி நீ மாமானு கூப்பிட வேணாம்.. இந்தா சாக்லேட்…” என்று கொடுக்க

“தேங்க்ஸ் மாமா…!” என்ற அந்த சிறுமியும் அவனுக்கு பறக்கும் முத்தம் ஒன்றை கொடுத்துவிட்டு ஓடிவிட, அந்த சிறுமியை புன்னகையுடன் பார்த்து இருந்தான் பரணி.

“அண்ணா நான் கேட்டதுக்கு இன்னும் பதில் வரல…” என்று அஞ்சனா கேட்க

“இதுக்கு பதில் உனக்கே தெரியும் அப்புறம் என்ன…” என்று அவன் சலித்துக் கொண்டு கூற

“இன்னும் எத்தன நாளைக்கு இதையே சொல்ல போறீங்க?.. மத்தவங்கள விட உங்களுக்கு தான் ஒரு துணை வேணும் அது உங்களுக்கு புரியுதா இல்லையா?…” என்று ஆற்றாமையாக அஞ்சனா கேட்க

“அப்போ என் குறைக்காகவே ஒரு துணை வேணும்னு சொல்றாயா?…” என்று கேட்டவன் கதிரையில் இருந்து எழுந்து கொள்ள தடுமாறவும்,

அவனை நெருங்கி புஜத்தை பிடத்து எழுந்து கொள்ள உதவ, கஷ்டப்பட்டு எழுந்தவன் அருகில் இருந்த அட்ஜஸ்டபிள் ஊன்று கோலை எடுத்து, கையோடு சரியாக வைத்துக் கொண்டவன் தாங்கி, தாங்கி நடக்க ஆரம்பித்தான்.

அவனை பார்த்து பெருமூச்சு விட்டாள் அஞ்சனா. பரணியும் கடையில் வேலைக்கு இருக்கும் பையனிடம் கூறிவிட்டு, தங்கையை அழைத்துக் கொண்டு வீட்டை நோக்கி நடந்தான்.

அதே தெருவின் கடைசியில் தான் அவன் வீடு. தங்கவேல் மீனம்மாள் தம்பதிகளின் ஒற்றை வாரிசு பரணி. அவனது 22 வயதில் குடும்பத்துடன் மீனம்மாளின் தங்கையும் அஞ்சனாவின் தாயுமான பரிமளாவின் வீட்டிற்கு சென்று விட்டு வீடு திரும்பும் போது ஏற்பட்ட வாகன விபத்தில் தாயும் தந்தையும் அதே இடத்தில் உயிரை விட்டு இருக்க,

பரணி பாதி உயிராக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். ஒற்றை காலில் உள்ள எலும்புகள் பல கூறுகளாக உடைந்து விட்டதாகவும் அவன் இனிமேல் நடக்க முடியாது என்று மருத்துவர்கள் கூறி விட,

பெற்றவர்களின் இழப்போடு சேர்த்து தான் போலீசாக வேண்டும் என்ற கனவும் கலைந்து போன வலியும், அதோடு ஒற்றை காலில் தான் தன் மொத்த வாழ்வும் என்று நினைக்க வாழவே பிடிக்கவில்லை பரணிக்கு.

வாழ்வே இருண்டதாக இருந்தவனுக்கு உறுதுணையாக இருந்தது என்னவோ சித்தியின் மகள்களான அஞ்சனாவும் தர்ஷனாவும் தான்.

அவன் சித்தப்பா சிதம்பரம் நல்லவர் என்பதற்கு இல்லை. அதே நேரம் மோசமானவரும் இல்லை என்பதால் பரணியின் சொத்துக்களை விற்றும், கடன் வாங்கியும் அவனை நவீன மருத்துவமனையில் அனுமதித்து முடிந்தவரை துண்டிக்கப்பட வேண்டிய காலை காப்பாற்றி, ஒன்றுக்கு நான்கு ஆப்ரேஷன் செய்து ஓரளவு ஊற்றுகோலின் உதவியுடன் நடக்க வைத்து விட்டார்.

அதன் பின் தான் அவன் வீட்டை தவிர அவனுக்கு என்று வேறு எதுவும் இல்லை என்பதும். அதே சமயம் லட்சக்கணக்கில் கடன் இருப்பதும் தெரிய வர, என்ன செய்வது என்று தெரியவில்லை.

காலேஜ் படிப்பை கூட முழுதாக முடிக்கவில்லை, அதைவிட பலகீனமான காலை வைத்துக் கொண்டு என்ன வேலை செய்வது என்று தடுமாறியவனுக்கு, அவன் நண்பன் கூறிய ஆலோசனை தான் மளிகை கடை ஆரம்பிப்பது.

இருந்த பணத்தில் கடையை ஆரம்பித்து திறன்பட நடத்தி, தனது கடன்களை முடித்தது இரண்டு வருடங்கள் முன்புதான். இதற்கு இடையில் அஞ்சனாவின் திருமணத்திற்கு நகை பணம் என்று சீர் செய்தான்.

இதோ இரண்டு வருடங்களாக சேமித்த சேமிப்பையும் இளைய தங்கை தர்ஷனாவின் திருமணத்திற்கு பத்து நாட்கள் முன்பு நகைகளாக மாற்றிய சீர் செய்துவிட்டான். அவனுக்கு என்று அவன் எதையும் வைத்துக்கொள்ள யோசிக்கவில்லை.

விரக்தியின் உச்சத்தில் இருப்பவனுக்கு அவன் தந்தை காலத்து ஓட்டு வீடு போதும் என்ற எண்ணம் தான்.

அண்ணனுடன் மெதுவாக நடந்தவள் “உங்களுக்கு என்ன குறை.. நீங்களே உங்கள தாழ்வா நினைக்கிறீங்க ண்ணா..நான் சொன்னது உங்க தனிமைக்கு ஒரு துணை.. உங்க உடல்ல ஏற்பட்ட குறைய மனசுல சுமக்கிறீங்க பாருங்க அந்த மனசுக்கு ஒரு துணை வேணும்.. அதுக்காகவே நீங்க ஒரு கல்யாணம் பண்ணிக்கலாம் ண்ணா…” என்று அஞ்சனா சொல்ல

“எனக்கு எந்த துணையும் வேணாம் அஞ்சு ஒரு பொண்ணோட கல்யாண கனவுகள் என்ன கல்யாணம் பண்ணிக்கிட்டு சிதைஞ்சு போக வேணாம்…” என்று பரணி சொல்ல

“நீங்களாகவே ஏதேதோ அதிகப்படியா யோசிக்கிறீங்க.. உங்கள இப்படியே ஏத்துக்கிட்டு, உங்கள புரிஞ்சுக்கிட்டு, உங்களுக்கு துணையாக இருக்கக்கூடிய பொண்ணா நான் பாக்கறேனே…” என்று எப்படியாவது சம்மதம் கூறி விட மாட்டானா என்று அவளும் எப்போதும் போல் எதிர்பார்ப்போடு கேட்க

“என்ன யாரும் ஏத்துக்க வேணாம்.. புரிஞ்சுக்கோ அஞ்சு நீயும் ஒரு பொண்ணு தானே.. ஒரு பொண்ணு என்ன கல்யாணம் பண்ணிக்கிட்டா சாதாரண ஒரு வாழ்க்கை வாழ முடியுமா?.. எனக்கு பிறக்கிற குழந்தைய ஒரு வயசுக்கு மேல தூக்கி கொஞ்ச முடியாது.. வெயிட் தூக்கக்கூடாதுனு டாக்டர் சொல்லி இருக்காங்க.. பெத்த பிள்ளையை தூக்க முடியாம ஓடி பிடிச்சு விளையாட முடியாம நான் தவிக்கணுமா?..

…இது எல்லாத்துக்கும் மேல என்ன கட்டிக்கிறவளுக்கு ஒரு ஆபத்துன்னா தூக்கிட்டு ஹாஸ்பிடல் போக முடியுமா?.. முடியாதே அதுக்கும் நான் ஒரு துணைய தேடணும்.. என்ன நம்பி வந்தவளுக்கு நான் மட்டுமே துணையா இருக்க முடியாத ஒரு வாழ்க்கை எனக்கு வேணாம்.. ப்ளீஸ் அஞ்சு சித்தி சித்தப்பாவே என்ன புரிஞ்சுகிட்டு விட்டுட்டாங்க.. நீ ஏன் விடாம என் கல்யாணத்த புடிச்சு தொங்குற…?” என்று கேட்க

அஞ்சனாவிடம் பதில் இல்லை. சிறிது நேரம் அமைதிக்கு பிறகு, அவளிடம் பெருமூச்சு மட்டுமே வெளியானது.

தங்கையின் அமைதியை கலைக்கும் விதமாக “தனியாவா வந்த மாப்பிள்ளை எங்க?…” என்று அஞ்சனாவின் கணவன் அகிலனை கேட்க

“அவர் இல்லாம இந்த ஊருக்கு எப்படி வாரது.. அவரோட தான் வந்தேன்.. என்ன கோயில்ல விட சொன்னேன் இறக்கி விட்டுட்டு அவரோட அத்தையோட அவங்க வீட்டுக்கு போயிருக்கார்…” என்று அஞ்சனா சொல்ல

இருவரும் பரணியின் சிறிய வீட்டை அடைந்திருந்தனர். கதவை திறந்து கொண்டு உள்ளே வந்த பரணி, அஞ்சனாவை ஆழ்ந்து பார்த்து “பிரபாவோட சம்சாரம் இறந்தப்போ அந்த வீட்டுக்கு போன.. அதை தவிர்த்து நீ அந்த வீட்டுக்கு போகவே இல்லல…” என்று கேட்க

“எதுக்கு போகணும்…?” என்று வெறுமையான குரலில் கேட்டவள் அண்ணனின் முகம் பாராமல் திரும்பி நின்று விட்டாள்.

“நீ பிரபாவ தவிர்க்க நினைக்கிற.. ஆனா உன் புருஷனுக்கு அவங்க உறவு.. அதை நீ மறுக்க முடியாது…” என்று சொல்ல

தமையனின் முகத்தை திரும்பிப் பார்த்தவள் “என்னோட இடத்துல இருந்து யோசிச்சு பாருங்க ண்ணா.. என்னால அந்த வீட்டுக்கு எந்த உறுத்தலும் இல்லாம போயிட்டு வர முடியுமா?…” என்று கேட்க

இல்லை என்று தலையை ஆட்டியவன் “சரி விடு.. சோர்வா இருக்க போய் முகத்த கழுவிட்டு வா.. நான் காஃபி போட்டு வைக்கிறேன்…” என்றவன் சமையலறை நோக்கி நடக்க,

அஞ்சனா மன சோர்வை மறைத்துக் கொண்டு, உடல் சோர்வை விரட்ட குளிர்ந்த நீரில் முகம், கை கால்கள் கழுவி விட்டு வர,

மூக்கை துளைக்கும் கமகம என்ற வாசனையுடன் காஃபியை ஆவி பறக்க ஆற்றி பரணி போட்டு குடுக்க, அதை வாங்கி பருகியவள் அடுத்த தெருவில் பத்து நாட்கள் முன்பு கட்டிக் கொடுத்த தங்கை தர்ஷனாவை காண சென்றாள்.

கூடவே சென்ற பரனியும் சிறிது நேரம் அங்கு இருந்து விட்டு பெரிய தங்கையை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்தான்.

தூங்குவதற்கு முன்னரே நாளை கோயிலில் முக்கிய பரிகார பூஜை இருப்பதாக நினைவு படுத்தி விட்டு கண்டிப்பாக தன்னுடன் வருமாறு கூறிவிட்டு உறங்கச் சென்றாள் அஞ்சனா.

2 thoughts on “மீண்டும் கேட்குமா பூபாளம் 04

  • Gayathri Sgh

    என்ன நினைக்குறேன் பிரபா 🤔.. எதுக்கு அஞ்சனா கிட்ட அப்டி கேட்டான் 🤔.. Avathan அவ புருஷன் கூட இடுக்களே.. புருஷன் இல்லாம இருந்தாலும் ok அவன் கேட்டது கரெட் ன்னு சொல்லலாம்…
    இப்போ என்னனு எடுத்துகிறது 🤔..
    அஞ்சனாவுக்கு குழந்தை இல்லையா 🤔..
    பழனிக்கு துர்கா தான் ஜோடியா வருவாளோ 🤔.
    இன்னும் பிரபா மனசுல அஞ்சனா தான் இருக்க போல. அதான் அவன் குழந்தையா செல்லமான்னு கூப்புடுறன் போல.
    செம்ம ஸ்டோரி 👌👌..
    Next போடுங்க dear 😍

    Reply
  • Gayathri Sgh

    என்ன நினைக்குறான் பிரபா 🤔.. எதுக்கு அஞ்சனா கிட்ட அப்டி கேட்டான் 🤔.. Avathan அவ புருஷன் கூட இருக்களே.. புருஷன் இல்லாம இருந்தாலும் ok அவன் கேட்டது கரெட் ன்னு சொல்லலாம்…
    இப்போ என்னனு எடுத்துகிறது 🤔..
    அஞ்சனாவுக்கு குழந்தை இல்லையா 🤔..
    பழனிக்கு துர்கா தான் ஜோடியா வருவாளோ 🤔.
    இன்னும் பிரபா மனசுல அஞ்சனா தான் இருக்க போல. அதான் அவன் குழந்தையா செல்லமான்னு கூப்புடுறன் போல.
    செம்ம ஸ்டோரி 👌👌..
    Next போடுங்க dear 😍

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!