Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

88. வித்யா வெங்கடேஷ் - நிழலாடும் நின் நினைவில்

நிழலாடும் நின் நினைவில் – 08

ஓம் ஸ்ரீ சாய்ராம்

சோஃபாவில் சயனித்துக் கொண்டிருந்தவனுக்கு, கனவு உலகத்தில் மிதப்பதுபோல இருந்தது. கண்களைத் திறந்தால் மெய்ம்மை அனைத்தையும் பஸ்பமாக்கிவிடுமே எனக் கண்களை இறுக்க மூடிக்கொண்டான்.

மூடிக்கிடந்த இமைகளுக்கு இடையில் கசிந்த கண்ணீரைக் கண்டுகொண்டவள் அவன் மனப்போராட்டத்தை உணர்ந்தாள். தன் மென்கரங்களால் விழிநீரைத் துடைத்துவிட்டு,

“பிசியோதெரபிஸ்ட் வர நேரம் ஷ்ரவன். எழுந்து ரெடியாகுங்க,” அவன் கவனத்தைத் திசைதிருப்பினாள்.



Advertisement

இயன்முறை நிபுணருக்கு இயந்திரகதியாக உடலை வளைத்து ஒத்துழைப்புத் தந்துகொண்டிருந்தவனின் மனம் மட்டும் தன்னவளையே தழுவி இருந்தது.
அவர் கிளம்பக் காத்திருந்தவன், சலாடுக்குத் தேவையான காய்கறிகளை நறுக்கிக்கொண்டிருந்தவள் அருகில் வந்தமர்ந்தான்.

“எனக்காகத்தானே ரம்யா ஊருக்குப் போகாமல் இருக்குற?” மெல்லமாகத் தன் மனத்தைத் திறந்தான்.

“ம்ம்” என்றவளின் கத்தி வீச்சுகளில் வெள்ளரிக்காய் வட்டத் துண்டுகளாகக் சிதறின.

Advertisement

“எனக்காகத்தானே ரம்யா காலேஜ்ல லாங்க் லீவ் எடுத்திருக்க?” அம்பிலிருந்து கிளம்பிய வில்லாய் அடுத்த கேள்வியை இறக்க,

Advertisement

திடுக்கிட்டவளின் கத்தி வீச்சும் ஆட்டம்கண்டு அவள் இடது கைவிரலை பதம்பார்க்க இருந்தது.

“ஏய்! பார்த்து கட் பண்ணு,” பதறினான் ஷ்ரவன்.

முப்பத்தெட்டு வயதில் கருவுற்றிருந்ததனால், மருத்துவர் அவளை ஓய்வில் இருக்குமாறு பரிந்துரை செய்திருந்தார். அதனால் கல்லூரிப் பணியிலிருந்து ஒன்றரை வருடத்திற்கான நீண்ட விடுப்பு எடுத்திருந்தாள். எல்லாம் தலைகீழாக மாறியதில் அந்த விடுப்பின் பயனே முற்றிலும் மாறியிருக்க,

Advertisement

“இதுல என்ன சந்தேகம் ஷ்ரவன்,” குனிந்த தலை நிமிராமல் மழுப்பினாள்.

“இல்ல ரம்யா! இதெல்லாம் ஒரு மனைவியா செய்யறீயா இல்ல நர்ஸ்ஸா செய்யறீயான்னு புரியல,” அவன் முடிக்கும் முன் வெடுக்கென்று நிமிர்ந்தாள்.

காதல் வழிய விசாரிப்பது எல்லாம் குத்திக்காட்டவா எனக் கோபம் தலைகேறிய பெண், “ நீங்க சம்பளம் கொடுக்குறீங்களா இல்லையான்னு யோசிச்சுப் பாருங்க ஷ்ரவன்,” கேள்வியை அவனிடமே திருப்பிவிட்டு சமையலறைக்குள் விறுவிறுவென நடந்தாள்.

காரிகையின் கோபத்தில் மறைந்திருந்த காதலை எண்ணி நெகிழ்ந்தவனாக அவளைப் பின்தொடர்ந்தான்.

“நான் யாரையும் வேலைக்கு வச்சுக்கல. ஆனால் 8am-8pm சர்வீஸ் டைம்ன்ற மாதிரி வேளாவேளைக்குச் சமைச்சுத்தந்து; மருந்து மாத்திரை எடுத்துக்கொடுத்து; செக்கப்க்கு அழைச்சிட்டுப் போகுறதுன்னு எல்லாத்தையும் செய்யற நீ மாடி பக்கமே தலைகாட்டாததுக்கு என்ன அர்த்தம்னு புரியல ரம்யா,” என்றவனின் விளக்கத்தில் தூக்கிவாரிப்போட்டது.

“அது… அது… அதுமட்டும் என்னால முடியவே முடியாது,” நடுங்கும் குரலில் பேசியவளின் கால்கள் பின்னோக்கி நகர, அலமாரியில் இடித்துக்கொண்டாள்.

“இட்ஸ் ஓகே ரம்யா! டென்ஷன் ஆகாத. நமக்குக் கல்யாணமான புதுசுல மனஸ்தாபம் வந்தப்ப, நானே விலக நெனச்சாலும், நீ என்னை இழுத்துப் பிடிச்சுப் பக்கத்துலேயே வச்சுகிட்ட. எதுவா இருந்தாலும் ஓபனா சொல்லுங்கன்னு என்னோட சண்டை போட்டிருக்க,” அவன் விளக்க,

இத்தனை நாளாகக் கேட்காமல் இன்று கேட்கும் அவன் உள்ளத்தைப் புரிந்துகொண்டாள். என்றாலும் அவன் விருப்பத்திற்கு இணங்கும் அளவிற்கு அவள் தயாராக இல்லை.

“ஏன் எதுக்குன்னு எல்லாம் கேட்காதீங்க ஷ்ரவன். என்னால முடியாது,” தெளிவுபடுத்தி, இரவு உணவு சமைப்பதில் ஆயத்தமானாள்.

இன்னும் ஒரேவொரு இரவு சமாளித்துவிட்டால் போதுமென்று அவள் நினைக்க, இரண்டு நாட்களில் திரும்பிவிடும் எண்ணத்தில் தஞ்சாவூருக்குப் புறப்பட்டவர்கள், இளைய மருமகளின் அன்புக்கட்டளைக்கு இணங்கி பேத்தியின் பெயர் சூட்டு விழாவரை தங்கத் தீர்மானித்தனர்.

சங்கடத்தில் அவனும், பயத்தில் அவளும் தத்தளிக்க, பேச்சும் சிரிப்பும் குறைந்து வீடே வெறிச்சோடிப் போனது. சமைக்கும் நேரம் போக, கல்லூரி பணிகளில் தன்னைத்தானே ஈடுப்படுத்திக்கொண்டாள் ரம்யா.

வெளிஉலகமே வெற்றுத் தாளாக மாறியிருந்த ஷ்ரவனுக்குத்தான் நேரத்தைக் கடத்துவது என்பது முடியாத காரியமாக இருந்தது. மகனின் உள்ளுணர்வை அறிந்தவர் போல அழைத்தார் தாமோதரன்.

மென்பொருள் நிறுவனத்திற்கான கட்டிடம் எழுப்பும் புது திட்டத்தின் வேலைகள் வரிசைகட்டி நிற்க, மகனின் உதவியை நாடியிருந்தார்.

பட்டப் படிப்பும், பயிற்சியும் முடித்த கையோடு தந்தையின் கட்டிடத் தொழிலில் பொறுப்பேற்றிருந்ததனால், இந்தத் தற்காலிக மறதி அவனைப் பாதிக்கவில்லை. எலும்பு முறிவு மட்டும் சரியாகி இருந்தால், வேலை நடக்கும் இடத்திற்கே பறந்திருப்பான். அத்தனை ப்ரியத்துடன் பணியாற்றி வந்தவன் அவன்.

வடிவமைப்பு மாற்றங்கள், விளம்பர சிற்றேடுகள், கட்டிட வேலைக்குத் தேவையான பொருட்களைத் திரட்ட வாடிக்கையாளர்களைத் தொடர்புகொள்ளுதல் என மடிக்கணினியிலும் தொலைப்பேசியிலும் முடிக்கக் கூடிய அனைத்து வேலைகளையும் வீட்டிலிருந்தபடியே செய்துவந்தான் ஷ்ரவன்.

“நம்ம ஊருல இருக்குற தண்ணி கஷ்டத்திற்கு ஸ்விம்மிங்க் பூல் வேண்டாம்ன்றது என் அபிப்பிராயம் ‘ப்பா. அந்த இடத்துல கார்டன் இருந்தால் நல்லா இருக்கும்னு நினைக்கிறேன்,” தந்தையிடம் காணொளி அழைப்பில் கலந்துரையாடிக் கொண்டிருந்தான்.

“உன் டிசைன், காஸ்ட் எல்லாம் பார்த்துட்டு ஈவினிங்க் கூப்பிடுறேன்,” என்றவர் அழைப்பைத் துண்டிக்கும் நேரத்தில் தந்தை பருக காபியுடன் வந்த தருண்,

“அப்படியே என் வேலையையும் கொஞ்சம் பாருடா,” முகத்தை நீட்டினான்.

நிறுவனத்தின் வரவு செலவு கணக்குள் மொத்தம் தருண் பொறுப்பில் இருந்தது. முன்பணமாகச் செலுத்தவேண்டிய காலாண்டு நிறுவன வரித்தொகையைக் செலுத்த இன்னும் ஒருவாரம் மட்டுமே இருப்பதை உணர்ந்தவன்,

“க்வார்டர்லி பேமென்ட் எஸ்டிமேட் பண்ணி கட்டிடுடா,” உதவி கேட்டான்.

“எனக்கு புது டாக்ஸ் ரூல்ஸ் எதுவுமே தெரியாதேடா,” ஷ்ரவன் பின்வாங்கவும்,

“பக்கத்துலேயே ஆடிடர் இருக்கும்போது உனக்கென்ன கவலை. மேடம் கைக்காட்டுற இடத்துல சைன் மட்டும் போட்டால் போதும்,” ரம்யா பக்கம் கண்ணசைத்து நமுட்டாகச் சிரித்தான்.

‘என்னை கோத்துவிடாதே!’ ரம்யா தோழனுக்குக் கண்ணசைப்பதற்குள் அவளைக் கண்டுகொண்ட ஷ்ரவன்,

“சரிடா! நான் பார்த்துக்குறேன்,” என அப்பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தான்.

“டாக்ஸ் கட்ட மட்டும் ஹெல்ப் பண்ணு ரம்யா,” ஷ்ரவன் மெல்லக் கேட்க,

“8.00am-8.00pmகுள்ள எந்த ஹெல்ப் வேணும்னாலும் பண்ணறேன் ஷ்ரவன்,” இடித்துக்காட்டினாள் அவன் தர்மபத்தினி.

“சாரி ரம்யா. எப்பவும்போல சகஜமா பேசிப்பழகேன் ப்ளீஸ்,” கண்களைச் சுருக்கிக் கெஞ்சினான்.

பெண்ணவள் மென்னகையுடன் தலையசைக்க உச்சிகுளிர்ந்தான் ஷ்ரவன்.

தருணின் கீழ் பணியாற்றும் ஊழியரை அழைத்து, வரியைக் கட்ட தேவையான ஆவணங்களை வாங்கச்சொல்லி விளக்கினாள்.

“தருண் சார் ஃபோன் பண்ணி சொல்லிட்டாரு சார். எல்லா பேப்பர்ஸும் நாளைக்கு மார்னிங்க் உங்க கைக்கு வந்துடும்,” அவர் கூற, பிரமித்துப்போனான் ஷ்ரவன்.

“பிஸினஸ் பக்கமே தலைவச்சு படுக்கமாட்டேன்னு சொன்னவன், C.WA.; M.B.Aன்னு ரெண்டு கோர்ஸ் முடிச்சிட்டு, இவ்வளவு டெடிகேட்டட்டா வேலை செய்யறானா, அது உன்னாலதான் ரம்யா,” ஆசானாக இருந்து தம்பியை நல்வழிப்படுத்தி இருக்கிறாள் என மெச்சினான்.

“நீங்க வேற. எத்தனை சொன்னாலும், பயப்புள்ள பாஸ் ஆகும் அளவுக்குத்தான் படிப்பான்,” அந்தநாள் நினைவில் சிரித்துக்கொண்டவள்,

“ஆனால் செம்ம ஸ்மார்ட். தேவையான இடத்துல தேவையான விஷயத்தைத் தெரிஞ்சு வச்சிருப்பான். அதுதான் அவன் தனித்துவமும் கூட,” பெருமை அவள் முகத்தில் தாண்டவமாடியது.

“நீ ஆயிரம் சொல்லு. காலேஜ் பக்கமே போகாதவன், உன்ன சந்திச்சதுக்கு அப்புறம் தான் ரெகுலரா க்ளாஸஸ் அடெண்ட் பண்ண ஆரம்பிச்சிருக்கான்,” அவள் பணியாற்றி வந்த கல்லூரியிலேயே அவனும் MBA படித்தது நினைவுவர சுட்டிக்காட்டினான்.

“அவன் காலேஜ் வந்தது எனக்காகன்னு நினைக்கிறீங்களா,” நமுட்டாகச் சிரித்தவள், “அவன் வந்தது உத்ராவுக்காக,” என்றாள்.

“லவ் மேரஜா?” வாயைப்பிளந்தான் ஷ்ரவன்.

“உத்ரா எங்க காலேஜ்ல ஃப்ர்ஸ்ட் இயர் கம்யூடர் சைன்ஸ் படிச்சிட்டு இருந்தா. என்னை ஒருநாள் டிராப் பண்ணும்போது பார்த்திருக்கான். அப்புறம் கண்ணும் கண்ணும் நோகியான்னு சைட் அடிக்கிறவன் ப்ரப்போஸ் பண்ண, அவளும் ஓகே சொல்ல, அது அப்படியே காதலா மாறிடுத்து. லவ் பண்ண வசதியா இருக்குமேன்னு MBAல சேர்ந்தான்,” அவள் விவரித்துக் கொண்டிருக்க,

“உத்ராவோட ஊரு தஞ்சாவூர் இல்ல?” இடைபுகுந்தான் ஷ்ரவன்.

சென்னையில் வசித்து வந்தவர்கள், பெண்ணைத் திருமணம் செய்து கொடுத்ததும், தங்கள் பூர்விக வீட்டிற்கே திரும்பிவிட்டனர் என அவள் பதிலுரைக்க,

“அப்பாவும் அம்மாவும் தருண் லவ்க்கு உடனே ஓகே சொல்லிட்டாங்களா,” என்றான் ஆர்வமாக.

“அவன் கல்யாணத்துக்குத் தடையா இருந்தது, கல்யாணம் செஞ்சுக்க மறுத்த அண்ணன் நீங்களும், வரன்கள் வந்தும் செட் ஆகலன்னு ரிஜெக்ட் பண்ணிட்டிருந்த ஃப்ரெண்ட் நானும். அவன் நம்ம ரெண்டு பேரையும் சேர்த்து வச்சான். நாம ஜோடியா அவங்க காதலை சேர்த்துவச்சோம்,” எனக் கண்சிமிட்டினாள்.

“அதான் நீயும் உத்ராவும் அவ்வளவு சகஜமா பழகிக்குறீங்களா?” என்றான்.

“அவளுக்கு உங்கமேலத்தான் பாசம் ஜாஸ்தி. அண்ணா அண்ணான்னு எதுவாயிருந்தாலும் உங்ககிட்ட தான் முதல்ல வருவா. இது என்னடி எங்கள அக்கா அண்ணான்னு லாஜிக்கே இல்லாம கூப்பிடுறன்னு கேட்டா, எனக்குக் கூடப்பிறந்தவங்க யாருமே இல்லன்னு பாசமலர் படம் ஓட்டி வாயடைச்சிடுவா.
உங்களுக்கு மெமரி லாஸ்ன்றதுனால பேசத் தயங்குறாளே தவிர நீங்கதான் அவளுக்கு காட் ஃபாதெர்,” பெருமூச்சுவிட்டாள் ரம்யா.

உத்ராவின் பாசத்தில் நெகிழ்ந்தவன், அடுத்தமுறை பேசும்போது அவள் சங்கடத்தைக் களைவதாக் கூறி, “அப்படிப்பார்த்தால், நீயும் தானே மாமியார் மாமனாரை அத்தை மாமான்னு கூப்பிடாம அம்மா அப்பான்னு கூப்பிடுற,” என மடக்கினான்.

அவன் இடித்துக்காட்டுவான் என அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

“ஆக்சுலி ஷ்ரவன், அது உங்கள பார்த்து இம்ப்ரெஸ் ஆகி வந்தது,” ரம்யா தொடங்கியதும் ஷ்ரவனின் விழிகளில் ஆர்வம் மேலோங்கியது.

“ஆண் வாரிசு இல்லன்னு இன்செக்யூரா ஃபீல் பண்ணவங்கள அம்மா அப்பான்னு கூப்பிட்டு அவங்க பயத்தைப் போக்கின பெருமை எல்லாம் உங்களைத்தான் சேரும்,” எனப் பூரித்தாள்.

மறுநாளே, நிறுவன வரியை மதிப்பிட தேவையான எல்லா ஆவணங்களையும் ஊழியர் ஒருவர் வீட்டிற்கு எடுத்துவந்து தந்தார். அரைமணி நேரத்தில் தொகையைக் கணக்கிட்டு, வரியை இணையத்தின் வாயிலாகவே செலுத்தும் மனைவியை ஏற இறக்கப் பார்த்தான்.

“அவ்வளவுதானா!” என்றவன் எடுத்துவைத்திருந்த காசோலை புத்தகத்தின் தாள்களை கட்டை விரலால் விசிறினான்.

கடந்த இரண்டு வருடங்களாகத்தானே இணையத்தின் பயன்பாடு அதிகரித்திருக்கின்றது என நினைவுக்கு வர, “இப்ப எல்லாத்துக்கும் ஆன்லைன் பேமென்ட் பண்ணும் வசதி வந்துடுத்துங்க,” என்றவள் மின்சாரம், அலைபேசி கட்டணம், வீட்டு வரி, வருமான வரி, பயணச்சீட்டு முன்பதிவு செய்தல் என முக்கியமான வலைத்தளங்களைப்பற்றி கற்றுக்கொடுக்க, நாட்கள் மின்னல் வேகத்தில் நகர்ந்தன.


வாசலில் நடைப்பயிற்சி செய்துகொண்டிருந்தவர்களின் விழிகள் மட்டும் வாசலையே தழுவி இருந்தது. கடந்து செல்லும் ஒவ்வொரு டாக்ஸியையும் உற்று நோக்கிக் கொண்டிருந்தனர்; வீட்டின் பெரியவர்களின் வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்தவர்கள்.

ஐந்தரை மணியளவில் மரூன் நிற குவாலிஸ் வந்து வாசலில் நிற்க, ஒருவரை ஒருவர் கேள்வியாகப் பார்த்துக்கொண்டே முன் வாசற்கதவருகே நடந்தனர்.
முன்பக்க பயண இருக்கையிலிருந்து இறங்கிய தாமோதரன், இருவருக்கும் புன்முறுவலிட்டபடி, பின்பக்கக் கதவைத் திறந்து பிடித்துக்கொண்டார்.

கைக்குழந்தையும் கையுமாக இறங்கிய உத்ராவைக் கண்டதும் அவளருகே ஓடினாள் ரம்யா.

“என்னடி இது! பச்சை உடம்புக்காரி, இத்தனை தூரம் ட்ராவல் பண்ணி வந்திருக்க,” குழந்தையையும் அவளையும் மாறி மாறிப் பார்த்தவண்ணம் படபடத்தாள்.

“குழந்தை பிறந்ததும் நான்தான் முதல்ல தூக்குவேன்னு புருஷனும் பொண்டாட்டியும் நான் நீன்னு சண்டை போட்டுட்டு, இருபது நாளாகியும் வரல. அதான் விரூபாப்பா, நாமளே ஊருக்குப் போய் பெரியம்மா பெரியப்பாவைப் பார்க்கலாம் ‘ம்மான்னு ஐடியா கொடுத்தா,” அவர்கள் முன்பு வைத்துக்கொண்டிருந்த பந்தயத்தை வேடிக்கையாக நினைவூட்டினாள்.

கண்ணீரும் சிரிப்புமாய் குழந்தையின் உச்சந்தலையினை முகர்ந்து முத்தமிட்டாள் ரம்யா.

உத்ராவின் குறும்புத்தனத்தை முதல் பார்வையிலேயே கண்டுகொண்ட ஷ்ரவனின் முகமும் புன்னகையில் விரிந்தது.

பின்கதவைத் திறந்து வெளியே வந்த தருண், திலகாவும் உத்ராவின் அம்மா சுபாஷினியும் இறங்க உதவினான்.

“ஆரத்திக் கரைச்சு எடுத்துட்டுவா ரம்யா,” என்றார் திலகா.

உள்ளே ஓடியவள், ஆரத்தித் தட்டு எடுத்துவந்து மாமியாரிடம் கொடுக்க,

“நீயே எடும்மா,” என்றார் வாஞ்சையாக.

குழந்தையை ஏந்தி நிற்கும் மனையாளின் தோளினை அரவணைத்த வண்ணம் தருண் பல்லிளிக்க, மூவரையும் கண்களால் பருகியபடி ஆரத்தி சுற்றி உள்ளே வருமாறு அழைத்தாள் ரம்யா.

“எல்லாரும் கிளம்பி வரீங்கன்னு ஒரு ஃபோன் பண்ணி சொல்லியிருந்தா, டின்னர் சமைச்சு வச்சிருப்பேன்னே ‘ம்மா,” காபி டிகாஷன் இறக்கிக்கொண்டிருந்த திலகாவிடம் உரைத்தாள்.

“எங்களுக்கே தெரியாது ரம்யா. நாங்க கிளம்புறோம்… நானும் வருவேன்னு பிடிவாதமா பெட்டியோட வந்து நிக்குறா. தருண்கிட்ட கூடச் சொல்லல.

என்னடி இதுன்னு அவன் சத்தம் போட்டதுக்கு அப்புறம்தான், உன்னையும் ஷ்ரவனையும் பார்க்கணும்னு ஆசையா இருக்குன்னு வாய்திறந்து சொன்னா. அதுக்குமேல எங்களாலேயும் அவள தடுக்க முடியல.

சம்பந்தி முகமே மாறிடுத்து. அவங்களுக்கும் மகள் பேத்தியோட இருக்கணும்னு ஆசையா இருக்கும்ல. நீங்களும் வரணும்னு வலுக்கட்டாயமா கூப்பிட்டேன். அடுத்த வீக் என்ட் வந்து நாலு நாள் தங்கிட்டு, அப்படியே மனைவியை அழைச்சிட்டுப் போகுறேன்னு, சுபாஷினியை மட்டும் எங்களோட அனுப்பிருக்காரு உத்ரா அப்பா,” திலகா விளக்க, உத்ராவின் அன்பை எண்ணி பூரித்தாள் ரம்யா.

“டின்னரருக்கு அரிசி உப்புமாவும் தக்காளி சட்னியும் செஞ்சுக்கலாம்,” என்றவர், “நீ எல்லாருக்கும் காபி தந்துட்டு வா,” எனத் தட்டை நீட்டினார்.

காபி பரிமாற வந்தவள், குழந்தையை மடியில் விட்டுக்கொண்டு பேச்சுக்கொடுக்கும் கணவனைக் கண்டதும் உறைந்து நின்றாள்.

“விரூபா குட்டி பெரியப்பாவைப் பார்க்க வந்தீங்களா,” என அவன் குழந்தையின் தாடையில் வருடிக் கேட்பதும், அவளும் எல்லாம் புரிந்ததுபோல தன் பூ இதழ்களைக் கூட்டி வளைத்து அவனையே கண்கொட்டாமல் ஏறிடுவதுமென இருவரின் பரிபாஷைகளைக் கண்டவளுக்குத் தன் குழந்தைகளின் நினைவு வர துக்கம் தொண்டையை அடைத்தது.

அவள் உள்ளத்தைப் படித்த தருண், காபி ட்ரே வாங்கும் சாக்கில், “உன் முகமே அவனுக்கு எல்லாத்தையும் காட்டிக் கொடுத்திடும்,” எச்சரித்து, அவளை ஷ்ரவன் அருகில் அமரச்செய்தான்.

குழந்தை, தன் குட்டி உள்ளங்கையின் இடுக்கில் ரம்யாவின் ஆள்காட்டி விரலை கெட்டியாகப் பிடித்துக்கொண்டதும், மடை திறந்த வெள்ளமாய் குழந்தையின் பாதத்தில் முத்தமிட்டு கண்ணீர் வடித்தாள்.

உண்மை உடைந்துவிடும் நேரம் வந்துவிட்டது என இடவலமாகத் தலையாட்டி பெருமூச்சுவிட்டான் தருண்.

“நீங்க சாரி கேட்டது போதும். விரூகுட்டி உங்களை மன்னிச்சிட்டா. அவ தூங்குறதுக்கு முன்னாடி ஃபோட்டோ எடுத்துக்கலாம் வாங்க,” உத்ரா அவளைத் திசைதிருப்ப, மனையாளின் சாமர்த்தியத்தை மெச்சினான் தருண்.

ஷ்ரவன் குழந்தையைத் தன் கைமடிப்பில் பிடித்துக்கொள்ள, ரம்யா அவன் வலதுபுறம் நிற்க, “நான்தான் அண்ணா பக்கத்துல நிற்பேன்,” என இடப்பக்கம் ஒட்டிக்கொண்டாள் உத்ரா.

“உங்க பக்கம் யார் வந்தா!” என மனையாளை முறைத்துவிட்டு தோழியின் தோளினை அரவணைத்து நின்றுகொண்டான் தருண்.

யார் புகைப்படம் எடுக்கப்போகிறார்கள் என ஷ்ரவன் முழிக்க, “சீஸ்!” எனக் கூவி, தன் அலைபேசியில் படம்பிடித்தார் தாமோதரன்.

நவீன வளர்ச்சியில் கற்க வேண்டிய மற்றொரு பாடம் என மனத்தில் குறித்துக்கொண்டு புன்னகைத்தான் ஷ்ரவன்.

டின்னர் வரை கலகலப்பாகச் சிரித்துப் பேசிய தம்பதியர்கள், சுபாஷினி, “குட் நைட்!” என்றதும் ஒருவரை ஒருவர் ஏறிட்டனர்.

கீழ்த்தளத்தில் இரண்டு படுக்கை அறைகள், மாடியில் இரண்டு என வடிமைக்கப்பட்டிருக்கும் தனி வீடு அது. மாடியில் ஆளுக்கொரு அறை என இளைய ஜோடிகள் உபயோகித்து வர, கீழ்த்தள அறைகளில் ஒன்றினை திலாகவும் தாமோதரனும் உபயோகித்து வந்தனர். கீழ்த்தளத்தில் மீதமிருந்த படுக்கை அறை விருந்தினர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்தது. அதைத்தான் ரம்யா உபயோகித்து வருகிறாள்.

தோழியின் தர்மசங்கடத்தை அறிந்திருந்த தருண், “அம்மா! நீங்க உத்ராவோட படுத்துக்கோங்க. குழந்தை ராத்திரியில் அழுதா சட்டுன்னு சமாளிக்குற அளவுக்கு எங்க ரெண்டு பேருக்கும் அனுபவமில்ல,” இடைபுகுந்தான் தருண்.

ஷ்ரவன் நிம்மதி பெருமூச்செறிய, நண்பன் தனக்காத்தான் சாக்குச் சொல்கிறான் என நன்கு அறிந்திருந்த ரம்யா,

“எல்லாம் பழகிக்கோ தருண். அவங்க ராத்திரியில் நல்லா தூங்கினால் தானே பகல் நேரம் முழுக்க குழந்தையைப் பார்த்துக்க முடியும்,” அதட்டினாள்.

“அதுக்கில்ல ரம்யா,” அவன் தயங்க,

“அதான் நாங்க பக்கத்து ரூம்லேயே இருக்கோமே. ஏதாவது ஹெல்ப் வேணும்னா எங்க ரூம் கதவைத் தட்டு,” வாயடைத்தாள்.

ரம்யாவின் கண்டிப்பில் மறைந்திருந்த உட்குறிப்பை உணர்ந்துகொண்டவனின் முகம் மகிழ்ச்சியில் தாண்டவமாடியது.

மௌனமே உருவாய் அறைக்குள் வந்தவளை மடக்கிய ஷ்ரவன், “நீ எதுக்காக தயங்கினன்னு தெரியாது ரம்யா. நான் உன்னை அழைச்சது இதுக்காகத்தான்,” என ஒரு வாரத்தின் நாளிதழ்களை நீட்டினான்.

அனைத்தும் குறுக்கெழுத்து புதிர் கொண்ட பக்கத்தில் மடித்திருப்பதைக் கண்டதும், பேதையின் விழிகள் குளமாகின.

கண்ணியத்திற்குப் பெயர் போனவனின் குணத்தை மறந்து சிந்தித்த தன் மனத்தைக் கடிந்துகொண்டாள். வாய்விட்டு மன்னிப்புக் கேட்க முடியாமல்,

“இன்னைக்கு ரொம்ப அசதியா இருக்கு ஷ்ரவன். நாளைலேந்து சால்வ் பண்ணலாம்,” கூறி அவன் முகம் பார்க்காத வண்ணம் ஒருக்களித்துப் படுத்துக்கொண்டாள்.

எட்டரை வருட காதலின் பரிபாஷைகளும்,
எட்டாக்கனியாக அச்சுறுத்தும் எதிர்காலமும் முட்டிமோத,
எட்டடி தள்ளிநின்று உறவாடு எனத் தவிர்க்கிறேன் – கைக்கு
எட்டும் தூரத்தில் நீ வேண்டும் என்றும் தவிக்கிறேன்;
எதிர்நீச்சல் போட வழித்தெரியாமல் – விடை தேடுகிறேன்
என்னவனே! நிழலாடும் நின் நினைவில்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!